Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   14  ஜனவரி 2020  
    பொதுக்காலம் முதல் வாரம்
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
  ஆண்டவர் அன்னாவை நினைவுகூர்ந்தார்; அவரும் சாமுவேலை ஈன்றெடுத்தார்.

சாமுவேலின் முதல் நூலிலிருந்து வாசகம் 1: 9-20

அந்நாள்களில் சீலோவில் உண்டு குடித்தபின், அன்னா எழுந்தார். குரு ஏலி, ஆண்டவரின் கோவில் முற்றத்தில் ஓர் இருக்கையில் அமர்ந்திருந்தார். அன்னா மனம் கசந்து அழுது புலம்பி, ஆண்டவரிடம் மன்றாடினார். அவர் பொருத்தனை செய்து வேண்டிக்கொண்டது: "படைகளின் ஆண்டவரே! நீர் உம் அடியாளாகிய என் துயரத்தைக் கண்ணோக்கி, என்னை மறவாமல் நினைவுகூர்ந்து எனக்கு ஓர் ஆண் குழந்தையைத் தருவீரானால், அவனை அவன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவராகிய உமக்கு ஒப்புக்கொடுப்பேன். அவனது தலைமேல் சவரக் கத்தியே படாது." அவர் இவ்வாறு ஆண்டவர் திருமுன் தொடர்ந்து மன்றாடிக் கொண்டிருந்தபோது, ஏலி அவருடைய வாயைக் கவனித்தார். அன்னா தம் உள்ளத்தினுள் பேசிக் கொண்டிருந்தார்: அவருடைய உதடுகள் மட்டும் அசைந்தன; குரல் கேட்கவில்லை. ஆகவே ஏலி அவரை ஒரு குடிகாரி என்று கருதினார். ஏலி அவரை நோக்கி, "எவ்வளவு காலம் நீ குடிகாரியாய் இருப்பாய்? மது அருந்துவதை நிறுத்து" என்றார். அதற்கு அன்னா மறுமொழியாக, "இல்லை என் தலைவரே! நான் உள்ளம் நொந்த ஒரு பெண். திராட்சை இரசத்தையோ வேறு எந்த மதுவையோ நான் அருந்தவில்லை. மாறாக, ஆண்டவர் திருமுன் என் உள்ளத்தைக் கொட்டிக் கொண்டிருக்கிறேன். உம் அடியாளை ஒரு கீழ்த்தரப் பெண்ணாகக் கருத வேண்டாம். ஏனெனில், என் துன்ப துயரங்களின் மிகுதியால் நான் இதுவரை பேசிக் கொண்டிருந்தேன்" என்று கூறினார். பிறகு ஏலி, "மனநிறைவோடு செல். இஸ்ரயேலின் கடவுள் நீ அவரிடம் விண்ணப்பித்த உனது வேண்டுகோளைக் கேட்டருள்வார்" என்று பதிலளித்தார். அதற்கு அன்னா, "உம் அடியாள் உம் கண்முன்னே அருள் பெறுவாளாக!"என்று கூறித் தம் வழியே சென்று உணவு அருந்தினார். இதன்பின் அவர் முகம் வாடியிருக்கவில்லை. அவர்கள் காலையில் எழுந்து ஆண்டவர் திருமுன் வழிபட்டுவிட்டுத் திரும்பிச்சென்று இராமாவில் இருந்த தங்கள் இல்லம் அடைந்தனர். எல்கானா தம் மனைவி அன்னாவோடு கூடி வாழ்ந்தார். ஆண்டவரும் அவரை நினைவுகூர்ந்தார். உரிய காலத்தில் அன்னா கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுத்தார். "நான் அவனை ஆண்டவரிடமிருந்து கேட்டேன்" என்று சொல்லி, அவர் அவனுக்குச் "சாமுவேல்"என்று பெயரிட்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - 1 சாமு 2: 1. 4-5. 6-7. 8 (பல்லவி: 1a)
=================================================================================
பல்லவி: ஆண்டவரை முன்னிட்டு என் இதயம் மகிழ்கின்றது!
1
ஆண்டவரை முன்னிட்டு என் இதயம் மகிழ்கின்றது! ஆண்டவரில் என் ஆற்றல் உயர்கின்றது! என் வாய் என் எதிரிகளைப் பழிக்கின்றது! ஏனெனில் நான் நீர் அளிக்கும் மீட்பில் களிப்படைகிறேன். - பல்லவி

4
வலியோரின் வில்கள் உடைபடுகின்றன! தடுமாறினோர் வலிமை பெறுகின்றனர்!
5
நிறைவுடன் வாழ்ந்தோர் கூலிக்கு உணவு பெறுகின்றனர்; பசியுடன் இருந்தோர் பசி தீர்ந்தார் ஆகியுள்ளனர்! மலடி எழுவரைப் பெற்றெடுத்துள்ளாள், பல புதல்வரைப் பெற்றவளோ தனியள் ஆகின்றாள்! - பல்லவி

6
ஆண்டவர் கொல்கிறார்; உயிரும் தருகின்றார்; பாதாளத்தில் தள்ளுகிறார்; உயர்த்துகின்றார்;
7
ஆண்டவர் ஏழையாக்குகிறார்; செல்வராக்குகின்றார்; தாழ்த்துகின்றார்; மேன்மைப்படுத்துகின்றார்! - பல்லவி

8
புழுதியினின்று அவர் ஏழைகளை உயர்த்துகின்றார்! குப்பையினின்று வறியவரைத் தூக்கிவிடுகின்றார்! உயர்குடியினரோடு அவர்களை அமர்த்துகின்றார்! - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
(1 தெச 2: 13)

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளின் வார்த்தையை நீங்கள் எங்களிடமிருந்து கேட்டபோது அதை மனித வார்த்தையாக அல்ல, கடவுளின் வார்த்தையாகவே ஏற்றுக் கொண்டீர்கள். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இயேசு அதிகாரத்தோடு மக்களுக்குப் போதித்து வந்தார்.

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 21-28

இயேசுவும் சீடர்களும் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள். ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார். அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார். அப்போது அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார். அவரைப் பிடித்திருந்த ஆவி, "நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்" என்று கத்தியது. "வாயை மூடு; இவரை விட்டு வெளியே போ" என்று இயேசு அதனை அதட்டினார். அப்பொழுது அத்தீய ஆவி அம்மனிதருக்கு வலிப்பு உண்டாக்கிப் பெருங்கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று. அவர்கள் அனைவரும் திகைப்புற்று, "இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!" என்று தங்களிடையே பேசிக்கொண்டனர். அவரைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது.

ஆண்டவரின் அருள்வாக்கு.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 1 சாமுவேல் 1: 9-20

"இஸ்ரயேலின் கடவுள் நீ அவரிடம் விண்ணப்பித்த உனது வேண்டுகோளைக் கேட்டருள்வார்"

நிகழ்வு

நூறு ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஆண்டவரின் நற்செய்தியை மிகத் துணிவுடன் அறிவித்து வந்தவர் திருமதி மாகி வான்காட் என்பவர். ஒருநாள் இவர் கோயிலில் நடைபெற்ற நற்செய்திக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும்பொழுது, "இன்னும் ஒரு வாரத்தில் இந்நகரில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மனம் திருப்புவார்கள்" என்றார். அவர் இவ்வாறு சொன்னதைக் கேட்டு பலர் அவரைக் கேலிசெய்தார்கள். "ஒருவாரத்தில் நூறுபேர் மனம்திரும்புவார்களா...? சாத்தியமில்லாத ஒன்று" என்று ஒருசிலர் அவரை எள்ளி நகையாடினார்கள்.

இதையெல்லாம் கருத்தில்கொள்ளாமல், நேராக வீட்டுக்கு வந்த மாகி வான்காட், வீட்டில் உள்ளவர்களிடம் "நூற்றுக்கும் மேற்பட்ட பாவிகள் மனம்திரும்புவதற்காக நான் இறைவனிடம் தனித்திருந்து மன்றாடப் போகிறேன். அதனால் யாரும் என்னைத் தொந்தரவு செய்யவேண்டாம். நான் எப்பொழுது வெளியே வரவேண்டும் என்று எனக்குத் தோன்றுகின்றதோ, அப்பொழுது நான் வருகிறேன்" என்று சொல்லிவிட்டு, தன்னுடைய அறைக் கதவை அடைத்துக்கொண்டு, உள்ளே சென்று முழந்தாள் படியிட்டு இறைவனிடம் வேண்டத் தொடங்கினார்.

"கேளுங்கள் தரப்படும் என்று சொன்னவரே...! என் பெயரால் எதைக் கேட்டாலும் செய்வேன் என்று சொன்னவரே...! இந்நகரில் உள்ள பாவிகளை மனந்திரும்பச் செய்யும்" என்று அவர் இறைவனிடம் உருக்கமாக மன்றாடினார். ஒருநாள், இரண்டு நாள் என்று நாள்கள் கடந்து சென்றுகொண்டிருந்தனவே ஒழிய, எந்தவொரு மனமாற்றமும் நிகழவில்லை. இதற்கிடையில் மாகி வான்காட்டின் குடும்பத்தார், அவருடைய அறைக்கு வெளியே நின்றுகொண்டு, "நீ நினைப்பது போல் யாரும் மனம்மாறப் போவதில்லை. அதனால் உன்னுடைய உடம்பைக் கெடுத்துக்கொள்ளாமல் வெளியே வந்து சாப்பிடு" என்றார்கள். சாத்தானும் அதே வார்த்தைகளைச் சொல்லி, அவரை வெளியே வருமாறு அழைத்தது.

அவர் மனம்தளரவில்லை. மாறாக, இறைவனிடம் தன்னுடைய வேண்டுதல் நிறைவேறுமாறு இன்னும் உருக்கமாக வேண்டத் தொடங்கினார். ஆறாம் நாள் முடிவில் வலுக்குறைந்த நிலையில் அவர் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருக்கும்பொழுது, நகரில் இருக்கின்ற இருநூறு பாவிகள் மனம்திரும்புவதாக தூய ஆவியார் அவருக்கு வெளிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து அவர் மகிழ்வோடு தன்னுடைய அறையை விட்டு வெளியே வந்தார். அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள், "என்ன! உன்னுடைய வேண்டுதல் நிறைவேறிவிட்டதா...?" என்று கேட்டபொழுது, "ஆம்! என்னுடைய வேண்டுதல் நிறைவேறிவிட்டதாகத் தூய ஆவியார் எனக்கு வெளிப்படுத்தினார்" என்று அவர் உற்சாகச் சொன்னார்.

இதற்கு அடுத்து வந்த ஞாயிற்றுக்கிழமையில் மாகி வான்காட் கோயிலுக்குச் சென்றபொழுது, மனம்மாறிய இருநூறுக்கும் மேற்பட்ட பாவிகள் அங்கு வருகை புரிந்திருந்தார்கள். அவர்களைச் சுட்டிக்காட்டி கோயிலில் இருந்தவர்களிடம் அவர் பேசத் தொடங்கினார். "ஒரு வாரத்திற்குள் இந்த நகரில் இருக்கக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட பாவிகள் மனம்மாறுவார்கள் என்று சொன்னேன். யாரும் நம்பவில்லை. இதோ இந்நகரில் இருக்கும் இருநூறுக்கும் மேற்பட்ட பாவிகள் மனம்திரும்பியிருக்கின்றார்கள்" என்றார். இதைக் கேட்டு அவரைக் கேலி செய்தவர்கள் வாயடைத்து நின்றார்கள்.

ஆம், இறைவனிடம் நாம் விண்ணப்பிக்கின்ற வேண்டுதலை அவர் கேட்டருள்வார். அதற்கு மிகப்பெரிய சான்றாக இருப்பதுதான் மேலே உள்ள நிகழ்வு. இன்றைய முதல் வாசகமும் நமக்கு இதே செய்தியைத்தான் எடுத்துக்கூறுகின்றது. எனவே நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

தனக்குக் குழந்தை வரம் கிடைக்க வேண்டுமென்று மன்றாடிய அன்னா

எல்கானாவின் மனைவியான அன்னா, குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தார். இதன் பொருட்டு, இவருடைய சக்களத்தியான பெனின்னா இவரை மிகவும் துன்புறுத்தி, வதைத்து வந்தார். இந்நிலையில் அன்னா, சீலோவில் இருந்த ஆண்டவரிடம் இல்லத்தில், மனம் கசந்து, இறைவன் தனக்கோர் ஆண் மகனைத் தரவேண்டும் என்றும் அப்படி அவர் தந்தால், அவனை ஆண்டவருக்கே கையளிப்பதாகவும் சொல்லி மன்றாடுகின்றார். இதற்கிடையில் மனம் கசந்து இறைவனிடம் மன்றாடிய அன்னாவைத் தவறாகப் புரிந்துகொண்ட குரு ஏலி அவரைத் தவறாகப் பேசுகின்றபொழுது, அன்னா அவரிடம் எல்லாவற்றையும் எடுத்துச் சொல்ல, முடிவில் அவர், "இஸ்ரயேலின் கடவுள் நீ அவரிடம் விண்ணப்பித்த உனது வேண்டுதலைக் கேட்டருள்வார்" என்று கூறி அவருக்கு ஆசி வழங்குகின்றார்.

அன்னாவிற்குக் குழந்தைப்பேற்றினை அளித்த ஆண்டவர்

அன்னா ஆண்டவரிடம் வேண்டிக்கொண்ட பிறகு, தன் கணவரோடு கூடி வாழ, ஆண்டவர் அவருக்குக் குழந்தைப் பேற்றினை அளிக்கின்றார். ஆம், ஆண்டவரே ஒருவருக்குக் குழந்தைப் பேற்றினைத் தருகின்றார் (தொநூ 30: 2). பல ஆண்டுகளாகக் குழந்தைப் பேறு இல்லாமல் இருந்த அன்னாவிற்கு ஆண்டவர் ஓர் ஆண் குழந்தையைக் தந்து, அவருக்கு ஆசி வழங்குகின்றார். இதன்மூலம் ஆண்டவர் தன்னிடம் விண்ணப்பிப்பவரின் வேண்டுதலைக் கேட்டருள்பவராக மாறுகின்றார். ஆம், இறைவன் தன்னிடம் விண்ணப்பிப்பவரின் மன்றாட்டை மன்றாட்டை நிச்சயம் கேட்பார். ஆகையால், நாம் நம்பிக்கையோடு நம்முடைய வேண்டுதல்களை இறைவனிடம் எடுத்துரைபோம்.

சிந்தனை

இந்த ஏழைக் கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்" (திபா 34: 6) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நாம் இறைவனிடம் நம்பிக்கையோடு மன்றாடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மாற்கு 1: 21-28

தீய ஆவிகளின்மீது அதிகாரம்கொண்ட இயேசு

நிகழ்வு

ஒருசமயம் மாவீரன் நெப்போலியன் தன்னுடைய படைவீரர்களோடு பேசிக்கொண்டிருந்தான். அப்பொழுது அவன் உலக வரைபடத்தை அவர்களிடம் எடுத்துக்காட்டி, அதில் சிகப்பு நிறத்தால் குறிக்கப்பட்டிருந்த இடத்தைச் சுட்டிக்காட்டி, "சிகப்பு நிறத்தால் குறிக்கப்பட்டிருக்கின்ற இந்த இடத்தை மட்டும் நான் வென்றிருந்தால், இவ்வுலகத்தையே வென்றவன் ஆகியிருப்பேன். அந்தப் பகுதியை வெல்லமுடியாமல் போனதால், உலகத்தை வென்றவன் என்று என்னால் சொல்லக்கொள்ள முடியவில்லை" என்று மிக வருத்தத்தோடு சொன்னான்.

நெப்போலியன் தன் கையில் வைத்திருந்த வரைபடத்தில், சிகப்பு நிறத்தால் குறிக்கப்பட்டிருந்த பகுதி பிரிட்டிஸ் தீவுகளாகும். அந்தத் தீவுகளை அவனால் இறுதிவரைக் கைப்பற்ற முடியவில்லை.

நெப்போலியனைப் போன்று சாத்தானும் உலக வரைபடத்தை எடுத்து, அதை குட்டிச்சாத்தான்களிடம் சுட்டிக்காட்டிப் பேசுமேயானால், "இயேசு மட்டும் கல்வாரி மலையில் தன்னுடைய செந்நிற இரத்தத்தைச் சிந்தியிருக்காவிட்டால், என்னால் இந்த உலகத்தையே வென்றிருக்க முடியும்" என்று பேசியிருக்கக்கூடும்.

ஆம், சாத்தானால் இவ்வுலகை வெல்ல முடியவில்லை... வெல்லவே முடியாது. காரணம் தீய ஆவிகள் உட்பட, எல்லாவற்றின்மீதும் அதிகாரம் கொண்டிருக்கும் இயேசு கிறிஸ்து இவ்வுலகை வென்றுவிட்டார். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, தீய ஆவி பிடித்திருந்த ஒருவரிடமிருந்து அதனை விரட்டியடிக்கின்றார். இந்த நிகழ்வு நமக்கு என்ன செய்தியைச் சொல்கின்றது என்று இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

அதிகாரத்தோடு போதித்துவந்த இயேசு

திருமுழுக்கு யோவான் கைதுசெய்யப்பட்ட பிறகு, கடவுளின் நற்செய்தியை எங்கும் பறைசாற்றிக்கொண்டு வந்த இயேசு, யூதர்களின் தொழுகைக்கூடங்களிலும் பறைசாற்றி வந்தார். தொழுகைக்கூடங்களானது குரு எஸ்ராவின் காலத்திலிருந்தே (கி.மு 450) இருந்து வந்தன. பத்து யூதக் குடும்பங்களுக்கு ஒரு தொழுகைக்கூடம் என்று தொழுகைக்கூடங்கள் உருவாகக் காரணம், எருசலேம் திருக்கோயில் மிகவும் தூரமாக இருந்ததால்தான். இவற்றில் யூத இரபிகளும் மறைநூல் அறிஞர்களும் இன்னும் ஒருசிலரும் போதித்து வந்தார்கள். இயேசு, கடவுளின் நற்செய்தியை எங்கும் பறைசாற்றிக்கொண்டு வந்ததைக் குறித்துத் தொழுகைக்கூடத் தலைவர்கள் கேள்விப்பட்டிருக்க வேண்டும். அதனால் அவர்கள் தங்களுடைய தொழுகைக்கூடங்களில் இயேசுவைப் போதிக்கச் சொல்கின்றார்கள். இயேசுவும் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் போதிக்கின்றார். அவருடைய போதனைக் கேட்கின்ற மக்கள் வியப்பில் ஆழ்கின்றார்கள். காரணம் அவருடைய போதனை, மறைநூல் அறிஞர்களைப் போலன்றி அதிகாரம் கொண்ட போதனையாக இருக்கின்றது.

ஆண்டவர் இயேசு அதிகாரத்தோடு போதிக்கவும் மட்டுமில்லை... அதிகாரத்தோடு வல்ல செயல்களையும் செய்தார். இயேசு அதிகாரத்தோடு வல்லசெயலை அல்லது தீய ஆவி விரட்டியடித்ததுதான் இன்றைய நற்செய்தி வாசகமாக இருக்கின்றது. அது குறித்து நாம் தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.

அதிகாரத்தோடு தீயஆவியை விரட்டியடித்த இயேசு

இன்றைய நற்செய்தியில் இயேசு தொழுகைக்கூடத்தில் கற்பித்துக் கொண்டிருக்கையில், தீய ஆவி பிடித்திருந்த ஒருவரைக் காண்கின்றார். அந்த மனிதரைப் பிடித்த தீய ஆவி, "நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை...?" என்று கத்தத் தொடங்குகின்றது. இயேசு அதனைத் தொடர்ந்து கத்தவிடவில்லை. மாறாக, "வாயை மூடு, இவரை விட்டு வெளியே" என்று அதட்டுகின்றார்.

இங்கு நமக்கு முன் ஒரு கேள்வி எழலாம். அது என்ன கேள்வி எனில், சாத்தான் இயேசுவைப் பற்றி சரியாகத்தானே சொல்கின்றது... பிறகு எதற்கு இயேசு அதனை, வாயை மூடு? என்று சொல்கின்றார் என்பதுதான் அந்தக் கேள்வி. இதில் இரண்டு உண்மைகள் அடங்கியிருக்கின்றன. ஒன்று, தீயஆவி சொல்லக்கூடிய வார்த்தைகளில் இயேசு ஓர் அரசியல் மெசியா என்ற தொனி இருக்கின்றது. துன்புறும் ஊழியனாகத் தன்னுடைய பணியைச் செய்துவந்த இயேசு, தீய ஆவியின் வார்த்தைகள் தனது பணிக்கு மிகப்பெரிய தடையாக இருக்கும் என்பதால் அதனைப் பேசவிடாமல் தடுக்கின்றார். இரண்டு, "சாத்தானும் வேதம் ஓதும்" என்ற சொல்வழக்கிற்கு ஏற்ப, தன்னைப் பற்றி சொல்வது சாத்தானாக இருப்பதால், அதனைப் பேசவிடாமல் தடுக்கின்றார். அது மட்டுமல்லாமல், அதனை அந்த மனிதரை விட்டு வெளியே போகச் சொல்கின்றார். இதைப் பார்த்துவிட்டுத்தான் மக்கள், "இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே!" என்று தங்களிடையே பேசிக்கொள்கின்றார்கள்.

ஆம், இயேசுவுக்கு தீய ஆவி உட்பட எல்லாவற்றின் மீதும் அதிகாரம் உண்டு (மத் 20: 18) இத்தகைய அதிகாரம் கொண்ட இயேசுவின் கைகளில் நம்மையே நாம் ஒப்புக்கொடுத்து, அவர் வழியில் நடப்பதே சாலச் சிறந்தது. நாம் நம்மையே எல்லா அதிகாரமும் கொண்டிருக்கின்ற இயேசுவின் கைகளில் ஒப்புக்கொடுத்து, அவருடைய வழியில் நடக்கத் தயாரா? சிந்தித்துப் பார்ப்போம்.

சிந்தனை

"பின்பு, அவர்களை ஏமாற்றி வந்த அலகை கந்தக, நெருப்பு ஏரியில் எறியப்பட்டது" (திவெ 20: 10) என்கிறது இறைவார்த்தை. ஆம், தீமையே உருவான சாத்தான், நன்மையே உருவான இயேசுவால் வெல்லப்படும். ஆகவே, நாம் நன்மையே உருவான இயேசுவின் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!