Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   13  ஜனவரி 2020  
                                              பொதுக்காலம் முதல் வாரம்  
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 
அன்னா மலடியாக இருந்ததால், அவருடைய சக்களத்தி அவரை எள்ளி நகைத்து வந்தார்.

சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 1: 1-8

எப்ராயிம் மலைநாட்டைச் சார்ந்த இராமாத்தயிம் சோப்பிமில் எல்கானா என்ற ஒருவர் இருந்தார். இவர் எப்ராயிமைச் சார்ந்த சூப்பின் மகனான தோகூவின் மைந்தனான எலிகூபின் புதல்வனான எரொகாமின் மகன். அவருக்கு அன்னா, பெனின்னா என்ற இரு மனைவியர் இருந்தனர்; பெனின்னாவுக்குக் குழந்தைகள் இருந்தனர்.

அன்னாவுக்கோ குழந்தைகள் இல்லை. எல்கானா ஆண்டுதோறும் சீலோவில் படைகளின் ஆண்டவரை வழிபடவும் அவருக்குப் பலி செலுத்தவும் தம் நகரிலிருந்து சென்று வருவார். அங்கே ஆண்டவரின் குருவான ஏலியின் இரு புதல்வர்கள் ஓப்னியும் பினகாசும் இருந்தனர். எல்கானா, தாம் பலி செலுத்திய நாளில், தம் மனைவி பெனின்னாவுக்கும் அவளுடைய புதல்வர் புதல்வியர் அனைவருக்கும் பங்கு கொடுப்பதுண்டு. அன்னாவின்மீது அவர் அன்புகொண்டிருந்தும் அவருக்கு ஒரே பங்கைத்தான் அளித்தார்.

ஏனெனில் ஆண்டவர் அவரை மலடியாக்கியிருந்தார். ஆண்டவர் அவரை மலடியாக்கியிருந்ததால், அவருடைய சக்களத்தி அவரைத் துன்புறுத்தி வதைத்தாள். இவ்வாறு ஆண்டுதோறும் நடந்தது; அவர் ஆண்டவரின் இல்லம் வந்தபோதெல்லாம் அவள் அவரைத் துன்புறுத்துவாள். அன்னா உண்ணாமல் அழுவார்.

அப்போது அவர் கணவர் எல்கானா அவரை நோக்கி, "அன்னா, நீ ஏன் அழுகிறாய்? நீ ஏன் உண்ணவில்லை? நீ ஏன் மனவருத்தம் அடைகிறாய்? நான் உனக்குப் பத்துப் புதல்வரைவிட மேலானவன் அன்றோ?"என்பார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 116: 12-13. 14,17. 18-19 (பல்லவி: 17a) Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரே! நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன். அல்லது: அல்லேலூயா.

12 ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்? 13 மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன். பல்லவி

14 இதோ! ஆண்டவருடைய மக்கள் அனைவரின் முன்னிலையில் அவருக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். 17 நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன். பல்லவி

18 இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். 19 உமது இல்லத்தின் முற்றங்களில், எருசலேமின் நடுவில், ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மாற் 1: 15

அல்லேலூயா, அல்லேலூயா! காலம் நிறைவேறிவிட்டது, இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
  மனம் மாறி, நற்செய்தியை நம்புங்கள்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 14-20

அக்காலத்தில் யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக்கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். "காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்"என்று அவர் கூறினார்.

அவர் கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது, சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்து, "என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்"என்றார்.

உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். பின்னர், சற்று அப்பால் சென்றபோது, செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் இயேசு கண்டார். அவர்கள் படகில் வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தார்கள். உடனே இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின்சென்றார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

நற்செய்தியின் மையக் கருத்தாகிய மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள். காலம் நிறைவேறி விட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது என்ற இறைவாக்கு இன்று நமக்கு அருளப்பட்டுள்ளது.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 1 சாமுவேல் 1: 1-8

அன்னாவின் துயரம்

நிகழ்வு

ஒரு நகரில் ஓவியர் ஒருவர் இருந்தார். ஒருநாள் அவர் அதே நகரில் இருந்த தன்னுடைய நெருங்கிய நண்பரிடம், புதிதாக ஓவியம் ஒன்று தான் வரைந்திருப்பதாகவும் அதைப் பார்த்துவிட்டுச் செல்லுமாறும் கேட்டுக்கொண்டார். அவருடைய நண்பரும் ஓவியருடைய அழைப்பினை ஏற்று, அவருடைய வீட்டிற்குச் சென்றார். தன்னுடைய அழைப்பினை ஏற்று வீட்டிற்கு வந்திருந்த நண்பரை ஓவியர் ஓர் அறைக்கு அழைத்துச் சென்றார். அந்த அறை முழுவதும் ஒரே இருட்டாக இருந்தது.

"என்ன நண்பா! ஓவியத்தைக் காட்டப்போவதாகச் சொல்லிவிட்டு, இப்படி என்னை ஓர் இருட்டறையில் விட்டிருக்கின்றாயே...! உனக்கு என்ன ஆயிற்று...?" என்று கேட்டார் வந்திருந்த நண்பர். ஓவியரோ எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

கால்மணிநேர இடைவெளிக்குப் பின் ஓவியர், தன்னுடைய நண்பரை இன்னோர் அறைக்குக் கூட்டிக்கொண்டு போனார். அந்த அறையும் இருட்டாகத்தான் இருந்தது. ஆனால், முதல் அறையை விட இருட்டு குறைவாக இருந்தது. வந்திருந்த நண்பரோ ஒன்றும் புரியாமல் அமைதியாக இருந்தார். அப்பொழுது ஓவியர் தான் வரைந்திருந்த ஓவியத்தை மூடியிருந்த திரையை விளக்கினார். அங்கு ஓர் அருமையான ஓவியம் வெளிப்பட்டது. அதைப் பார்த்துவிட்டு வந்திருந்த நண்பர் மெய்ம்மறந்து போய், "நண்பா! என்னுடைய வாழ்நாளில் இப்படியோர் அருமையான ஓவியத்தைக் கண்டதேயில்லை. ஓவியம் மிகவும் தத்ரூபமாக இருக்கின்றது" என்று பாராட்டினார்.

அவர் இவ்வாறு பேசி முடித்ததும், ஓவியர் பேசத் தொடங்கினார். "நண்பா! நீ முதல் அறைக்குள் வந்ததும், "எதற்காக என்னை இந்த இருட்டறைக்குள் கூட்டிக்கொண்டு வந்தாய்?" என்று கேட்டாய் அல்லவா... நான் அந்த அறைக்குள் உன்னைக் கூட்டிக்கொண்டு போனதற்குக் காரணம், வெயிலில் வந்த நீ, நேராக நான் வரைந்த ஓவியத்தைப் பார்த்தால் அதன் அருமை உனக்குப் புரியாது என்பதால்தான் உன்னை மிகவும் இருட்டாக இருந்த அறைக்குள் கூட்டிக்கொண்டு போனான். நீ அந்த அறைக்குள் இருந்த இருட்டை முற்றிலுமாக உள்வாங்கிக்கொண்டதால், நான் வரைந்திருக்கும் இந்த ஓவியத்தின் மகத்துவம் உனக்குப் புரிகிறது" என்றார்.

இந்த நிகழ்வில் வருகின்ற ஓவியரைப் போன்றுதான் கடவுளும் சில நேரங்களில் நம்முடைய வாழ்வில் துன்பங்களை அனுமதிக்கின்றார். அவர் நம்முடைய வாழ்வில் துன்பங்களை அனுமதிப்பதற்குக் காரணம், வார்த்தைகளால் விவரித்துச் சொல்ல முடியாத பேரின்பத்தை நாம் அடைந்திடத்தான். சாமுவேல் முதல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், அன்னாவின் வேதனையை, அவர் அடைந்த துன்பங்களை எடுத்துச் சொல்கின்றது. ஆகவே, நாம் அன்னா அடைந்த துன்பத்தைப் பற்றியும் அவருடைய துன்பம் எப்படி இன்பமாக மாறியது என்பதைப் பற்றியும் சிந்தித்துப் பார்ப்போம்.

மகப்பேறின்றி இருந்த அன்னா

எப்ராயிம் மலை நாட்டைச் சார்ந்த எரொகாமின் மகன் எல்கானா. லேவியர் குலத்தைச் சார்ந்த (1 குறி 6: 22-28, 34-35) இவர் ஆண்டுதோறும் சீலோவில் ஆண்டவரை வழிபட்டும் பலிசெலுத்தியும் வந்தார். இவருக்கு அன்னா, பெனின்னா என்ற இரண்டு மனைவியர் இருந்தனர். இதில் மூத்த மனைவியான அன்னாவிற்குக் குழந்தை கிடையாது. இரண்டாவது மனைவியான பெனின்னாவிற்குத்தான் குழந்தைகள் இருந்தனர். இதனால் பெனின்னா அன்னாவைத் துன்புறுத்தியும் வதைத்தும் வந்தார். எனவே அன்னா உணவு உண்ணாமல் அழுதார்.

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் (இன்றிக்கும்தான்) குழந்தை பேறு என்பது கடவுள் ஒருவருக்குக் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய பேறாகக் கருதப்பட்டது. இத்தகைய பேறு தனக்கு இல்லையே என்று அன்னா மிகவும் வருந்தியிருக்கக்கூடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அன்னாவின் சக்களத்தியான பெனின்னா அவரிடத்தில் கரிசனையோடு நடந்திருக்கலாம்; ஆனால் அவர் அவ்வாறு நடந்துகொள்ளாமல், அவரைத் துன்புறுத்தியும் வதைத்தும் வந்தது மிகப்பெரிய அதிர்ச்சியளிப்பதாக இருக்கின்றது.

பலநேரங்களில் நாம்கூட ஒருவரிடம் இருக்கும் உடல் குறைபாட்டை வைத்துக்கொண்டு அவரைக் கேலியும் கிண்டலும் செய்கின்றோம். இத்தகைய போக்கினை நம்மிடமிருந்து அகற்றுவது நல்லது.

ஆண்டவரிடம் நம்பிக்கையோடு இருந்த அன்னா

தனக்குக் குழந்தை இல்லை என்பதற்காகவோ அல்லது தனது சக்களத்தியான பெனின்னா தன்னைத் துன்புறுத்தி வதைக்கின்றார் என்பதற்காகவோ அன்னா ஆண்டவரின் இல்லத்திற்குச் செல்லாமல் இல்லை அல்லது அவர் ஆண்டவரைப் பழித்துரைத்துக் கொண்டிருக்கவில்லை. மாறாக அவர் ஆண்டவர்மீது ஆழமான நம்பிக்கை கொண்டு ஆண்டவரின் இல்லத்திற்கு ஒவ்வோர் ஆண்டும் வருகின்றார். அதனால் ஆண்டவர் அவருக்குக் குழந்தைப் பேற்றிணைத் தருகின்றார்.

இங்கு அன்னா ஆண்டவர்மீது கொண்டிருந்த நம்பிக்கை மிகவும் உறுதியானது என்றுதான் சொல்லவேண்டும். காரணம், இன்றைக்கு ஒருசிலர் இருப்பது போல், இறைவனிடம் ஓரிரு முறை வேண்டிவிட்டு, வேண்டுதல் நிறைவேறவில்லை என்றதும், "இறைவன் எங்களுடைய வேண்டுதலைக் கேட்கவில்லை" என்று சொல்லி இறைவனின் இல்லத்திற்கு வராமல் அன்னா இருக்கவில்லை. அவர் தொடர்ந்து ஆண்டவரின் இல்லத்திற்கு வந்தார். அதனால் இறைவனுடைய ஆசியை ஒரு குழந்தையின் வடிவில் பெற்றுக்கொண்டார். நாமும் ஆண்டவரிடம் அசைக்க முடியாத நம்பிக்கையோடு இருந்தால், அவர் நமக்குத் தன்னுடைய அருளைத் தருவார் என்பது உறுதி.

சிந்தனை

"அஞ்சாதீர்; நம்பிக்கையோடு மட்டும் இரும்" (லூக் 8: 50) என்று ஆண்டவர் இயேசு யாயிரிடம் கூறுவார். ஆகையால், நாம் அன்னாவைப் போன்று ஆண்டவரிடம் ஆழமான நம்பிக்கையோடு இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மாற்கு 1: 14-20

"...விட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள்"


நிகழ்வு

பிரான்ஸ் நாட்டில் உள்ள லயோன்ஸ் என்ற நகரில் பீட்டர் வால்டோ என்ற வணிகர் ஒருவர் இருந்தார். இவர் ஒரு மிகப்பெரிய செல்வந்தர். இவருக்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் ஒரு விருந்தில் கலந்துகொண்டு, மகிழ்ச்சியில் திளைத்திருந்தபோது, திடீரென இறந்துபோனார். தன்னுடைய நண்பரின் இறப்பு, பீட்டர் வால்டோவைப் பெரிதும் பாதித்தது. அப்பொழுதுதான் இவர் உலக வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்தார்.

இதற்குப் பின்பு இவர் தன்னுடைய உடைமைகளை எல்லாம் விற்றுவிட்டு, திருவிவிலியத்தை அறிஞர் பெருமக்களிடமிருந்து நன்றாகக் கற்றுக்கொண்டு, ஆண்டவர் இயேசுவைப் பற்றி மக்களுக்குப் போதிக்கத் தொடங்கினார். இவருடைய போதனையைக் கேட்டு, பலரும் இயேசுவைப் பின்பற்றத் தொடங்கினார்கள். இவர் மக்களிடம் அடிக்கடி சொல்லக்கூடிய வார்த்தைகள்: "இயேசுவை உற்றுநோக்குங்கள்; இயேசு சொல்வதைக் கேளுங்கள்; இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்."

மிகப்பெரிய செல்வந்தராக இருந்து, பின்பு இயேசுவின் பால் ஈர்க்கப்பட்டு, எல்லாவற்றையும் துறந்து, இயேசுவைப் பற்றி மக்களுக்கு அறிவிக்கத் தொடங்கிய பீட்டர் வால்டோ சீடத்துவ வாழ்விற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. நற்செய்தியில் இயேசு முதல் சீடர்களை அழைப்பதைக் குறித்து வாசிக்கின்றோம். அவர்களுடைய அழைப்பு நமக்கு என்ன செய்தியைச் சொல்கின்றது என்பதைக் குறித்து இப்போழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

யோவான் கைதுசெய்யப்படுதல்

இன்றைய நற்செய்தி வாசகத்தின் முதல் பகுதியில், யோவான் கைதுசெய்யப்பட்டபின் கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக்கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார் என்று வாசிக்கின்றோம். இங்கு யோவான் கைதுசெய்யப்படத்தை ஒரு முக்கிய நிகழ்வாகத்தான் பார்க்கவேண்டும். காரணம், மெசியாவின் வருகைக்காக மக்களைத் தயாரித்து, வந்த பின் அவரை மக்களுக்குச் சுட்டிக்காட்டிய திருமுழுக்கு யோவான், தன் சகோதரனின் மனைவியோடு கூடிவாழ்ந்து வந்த ஏரோதின் தவற்றைச் சுட்டிக்காட்டுக்கின்றார். இதனால் ஏரோது திருமுழுக்கு யோவானைக் கைதுசெய்கின்றான். ஏற்கனவே இயேசுவை மக்களுக்குச் சுட்டிக்காட்டியிருந்த திருமுழுக்கு யோவான், ஏரோதுவால் கைதுசெய்யப்பட்டது என்பது, அவர் தன்னுடைய பணியை நிறைவுசெய்துவிட்டு, அதனை ஆண்டவர் இயேசுவிடம் ஒப்படைக்கின்றார் என்பதன் அர்த்தமாக இருக்கின்றது. ஆம், திருமுழுக்கு யோவான் ஏரோதுவால் கைதுசெய்யப்பட்டதை, இறைப்பணியை இயேசுவிடம் ஒப்படைக்கின்றார் என்பதாகக் கொள்ளலாம்.

"...மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்று அறிவிக்கத் தொடங்கிய இயேசு

திருமுழுக்கு யோவான் தன்னுடைய பணியை நிறைவு செய்ததும், இயேசு இறையாட்சியைப் பற்றிய நற்செய்தியை அறிவித்து, மக்களை மனமாற்றத்திற்கு அழைக்கின்றார்.

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இருந்த இறைவாக்கினர்கள், மெசியாவின் ஆட்சி வரப்போகிறது... அப்பொழுது எல்லா மக்களும் எல்லா நலன்களையும் பெற்று, மகிழ்வாக இருப்பார்கள் (எசா 11) என்று அறிவித்து வந்தார்கள். திருமுழுக்கு யோவானோ ஒருபடி மேலே சென்று மெசியாவைச் சுட்டிக்காட்டினார். ஆண்டவர் இயேசு, "இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது (ஆதலால்). மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்று அறிவிக்கத் தொடங்கினார். ஆண்டவராகிய கடவுள் வரலாற்றில் செயல்படத் தொடங்கியபொழுதே இறையாட்சி வந்துவிட்டதுதான். அத்தகைய இறையாட்சிக்கு உட்படுவதற்கு ஒவ்வொருவரும் மனமாறவேண்டும் என்று ஆண்டவர் இயேசு அறிவிக்கின்றார். இயேசு அறிவித்த இந்த நற்செய்தி அல்லது மனமாற்றச் செய்தி எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவால் ஈர்க்கப்பட்டு, அவருடைய பணியைச் செய்ய வந்த சீடர்கள்

இயேசு அறிவித்த நற்செய்தி அல்லது மனமாற்றச் செய்தி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில், இயேசு அறிவித்த செய்தியால் முதலில் அந்திரேயாவும் அவருடைய சகோதர் பேதுருவும், யோவானும் அவருடைய சகோதர் யாக்கோபும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்கின்றார். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், மனிதர்களைப் பிடிப்பவர்கள் ஆகின்றார்கள்.

இதை இன்னும் விளக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், இயேசுவோடு தங்கி இறையனுபவம் பெற்ற அந்திரேயா தன் சகோதர் பேதுருவிடம் மெசியாவைக் கண்டோம் என்று சொல்கின்றார் (யோவா 1:41). அந்திரேயாவோடு சென்று, இயேசுவோடு தங்கி இறையனுபவம் பெற்ற இன்னொரு சீடரான யோவானும் தன் சகோதரர் யாக்கோபிடம் இயேசுவைக் குறித்து நிச்சயம் சொல்லியிருக்கக்கூடும். அதனால்தான் இயேசு அவர்களை அழைத்தபொழுது, எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவர்கள் இயேசுவைப் பின்தொடர்கின்றார்கள்.

அன்று இயேசு சீடர்களைத் தன்னுடைய பணியைச் செய்ய அழைத்ததுபோன்று, இன்று நம் ஒவ்வொருவரையும் அழைக்கின்றார். நாம் அவருடைய பணியைச் செய்யத் தயாரா?

சிந்தனை

"இதோ நானிருகின்றேன். அடியேனை அனுப்பும்" (எசாயா 6:8) என்று சொல்லி இறைப்பணிக்குத் தன்னை கையளித்த எசாயா இறைவாக்கினரைப் போன்று, இறைப்பணி செய்ய நாம் முன் வருவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!