Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   23  ஜனவரி 2019  
             பொதுக்காலம் இரண்டாம் வாரம் - புதன்கிழமை - 1 ம் ஆண்டு
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
 மெல்கிசதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 7: 1-3, 15-17

சகோதரர் சகோதரிகளே, மெல்கிசதேக்கு சாலேம் நகரின் அரசர்; உன்னத கடவுளின் குரு. ஆபிரகாம் அரசர்களை முறியடித்துத் திரும்பியபொழுது, அவரை எதிர்கொண்டு போய் அவருக்கு ஆசி அளித்தார். ஆபிரகாம் தம்மிடமிருந்த எல்லாவற்றில் இருந்தும் பத்தில் ஒரு பங்கை இவருக்குக் கொடுத்தார். நீதியின் அரசர் என்பது இவர் பெயரின் முதற்பொருள்.

மேலும், இவர் சாலேமின் அரசர். அமைதியின் அரசர் என்பது இதற்குப் பொருள். இவருக்குத் தந்தை இல்லை, தாய் இல்லை; தலைமுறை வரலாறு இல்லை; இவரது வாழ்நாளுக்குத் தொடக்கமும் இல்லை; முடிவும் இல்லை. இவர் கடவுளின் மகனுக்கு ஒப்பானவர்; குருவாக என்றும் நிலைத்திருப்பவர்.

மெல்கிசதேக்குக்கு ஒப்பான வேறொரு குரு தோன்றியிருப்பதால் நாம் மேற்கூறியது இன்னும் அதிகத் தெளிவாகிறது. இவர் திருச்சட்டத்தின் கட்டளைப்படி மனித இயல்புக்கு ஏற்ப அல்ல, அழியாத வாழ்வின் வல்லமையால் குருவாகத் தோன்றினார். இவரைப்பற்றி, "மெல்கிசதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே"என்னும் சான்று உரைக்கப் பட்டுள்ளது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா: 110: 1-2. 3. 4 (பல்லவி: 4a)
=================================================================================
பல்லவி: மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே.

1 ஆண்டவர் என் தலைவரிடம், 'நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்' என்று உரைத்தார். 2 வலிமைமிகு உமது செங்கோலை ஆண்டவர் சீயோனிலிருந்து ஓங்கச் செய்வார்; உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்! பல்லவி

3 நீர் உமது படைக்குத் தலைமை தாங்கும் நாளில் தூய கோலத்துடன் உம் மக்கள் தம்மை உவந்தளிப்பர்; வைகறை கருவுயிர்த்த பனியைப்போல உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர். பல்லவி

4 'மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே' என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார்; அவர் தம் மனத்தை மாற்றிக்கொள்ளார். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 4: 23b

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
ஓய்வு நாளில் எது செய்வது முறை? உயிரைக் காப்பதா, அழிப்பதா?

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 1-6

இயேசு மீண்டும் தொழுகைக்கூடத்திற்குள் சென்றார். அங்கே கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். சிலர் இயேசுமீது குற்றம் சுமத்தும் நோக்குடன், ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தனர்.

இயேசு கை சூம்பியவரை நோக்கி, "எழுந்து, நடுவே நில்லும்" என்றார்.

பின்பு அவர்களிடம், "ஓய்வு நாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?"என்று அவர் கேட்டார்.

அவர்களோ பேசாதிருந்தார்கள்.

அவர் சினத்துடன் அவர்களைச் சுற்றிலும் திரும்பிப் பார்த்து, அவர்களது பிடிவாத உள்ளத்தைக் கண்டு வருந்தி, கை சூம்பியவரை நோக்கி, "கையை நீட்டும்"என்றார். அவர் நீட்டினார். அவருடைய கை மீண்டும் நலமடைந்தது.

உடனே பரிசேயர் வெளியேறி ஏரோதியரோடு சேர்ந்து இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர்.



இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 எபிரேயர் 7: 1-3; 15-17

அமைதியின் அரசரான மெல்கிசதேக்கு என்னும் இயேசு

நிகழ்வு

சிலிக்கும் அர்ஜென்டினாவுக்கும் இடையில் உள்ளது ஆண்டஸ் மலை. இம்மலையில் ஓங்கி உயர்ந்த இயேசுவின் சிலை ஒன்று, கையில் சிலுவையை ஏந்திய நிலையில் உள்ளது. இந்த இயேசுவின் சிலை எப்படி இங்கே வந்தது என்று நாம் அறிய முற்படுவோமேயானால் நமக்கு வியப்பாக இருக்கும்.

கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் சிலிக்கும் அர்ஜெண்டினாவிற்கும் இடையே நிலப்பிரச்சனை ஒன்று வந்தது. இரு நாட்டவருமே தனக்குத்தான் அந்த நிலம் சொந்தம் என்று பிரச்சனையில் ஈடுபட்டார்கள். ஒருகட்டத்தில் அவர்களுக்கு இடையே இருந்த பிரச்சனை முற்றி, போர்மூளும் அபாயம் ஏற்பட்டது.

இதைக் கவனித்த இருநாட்டு ஆயர் பெருமக்களும் பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்தார்கள். இந்நிலையில்தான் இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா வந்தது. எனவே இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவை அர்த்தமுள்ளவிதமாகக் கொண்டாடும் பொருட்டு, இருநாட்டு ஆயர் பெருமக்களும் இருநாட்டுத் தலைவர்களை அமைதிப் பேச்சு வார்த்தைக்கு அழைத்தார்கள். பேச்சு வார்த்தை நல்லவொரு நிலையை எட்டி, சுமூகமான முடிவு ஏற்பட்டது.

இப்படி இருநாட்டவரும் பகைமையை மறந்து நல்லுறவு கொண்டதன் நினைவாக, போருக்காக தயார்செய்து வைக்கப்பட்ட படைக்கருவிகள் அனைத்தும் உருக்கப்பட்டு, கையில் சிலுவையை ஏந்திய நிலையில் இயேசுவின் சிலையானது வடிக்கப்பட்டது. அந்த சிலைதான் சிலிக்கும் அர்ஜென்டினாவின் எல்லைக்கும் இடையில் உள்ள ஆண்டஸ் மலையில் உள்ள இரும்பினாலான இயேசுவின் சிலையாகும்.

நம்மிடத்தில் உள்ள பகைமை, வெறுப்பு போன்றவற்றைக் களைந்து, எப்போதும் அமைதியில் திளைத்திட இயேசு அமைதியின் அரசராக இருந்து செயல்படுகின்றார் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.

யார் இந்த மெல்கிசதேக்கு?

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், அதன் ஆசிரியர் மெல்கிசதேக்குவைப் பற்றிப் பேசுகின்றார். யார் இந்த மெல்கிசதேக்கு? இவருக்கும் இயேசுவுக்கும் என்ன தொடர்பிருக்கின்றது என்று சிந்தித்துப் பார்ப்பது மிகவும் தேவையான ஒன்றாக இருக்கின்றது.

முன்னதாக மெல்கிசதேக்குவைக் குறித்து தொடக்கநூல் 14:17-20 ல் ஒரு குறிப்பு வருகின்றது. அதில் அவர் சாலேம் நகரின் அரசர் எனவும், உன்னதக் கடவுளின் குரு எனவும் அரசர்களை வெற்றிகொண்டுவிட்டு திரும்பும் ஆபிரகாமை அவர் வாழ்த்துவதாகவும், ஆபிரகாம் அவருக்கு தன்னிடம் உள்ளத்தில் பத்தில் ஒரு பங்கைக் காணிக்கையாகத் தருவதாகவும் வருகின்றது. ஆனால் எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியரோ இன்னும் ஒருபடி மேலே சென்று, அவரைக் குறித்து ஒருசில குறிப்புகளைத் தருகின்றார். அவைதான் அவர் நீதியின், அமைதியின் அரசர் என்பதும், வாழ்நாளுக்குத் தொடக்கமும் முடிவும் இல்லாதவர் என்பதும், கடவுளின் மகனுக்கு ஒப்பானவர் என்பதும் ஆகும்.

எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர், மெல்கிசதேக்குவைக் குறித்துச் சொல்கின்ற வார்த்தைகள் மெல்கிசதேக்கும் இயேசுவும் வேறு வேறு என்பதை நமக்குத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றன. இஸ்ரயேல் வரலாற்றில் யாரும் குருவாகவும் அரசராகவும் இருந்ததில்லை. ஆரோன் குருவாக இருந்தாலும் அவர் அரசராக இருக்கவில்லை. அதே போன்று தாவீது அரசராக இருந்தாலும் குருவாக இருக்கவில்லை. இயேசு ஒருவர் மட்டும்தான் குருவாகவும் அதுவும் ஏனைய குருக்களைப் போன்று அன்றி தன்னையே பலியாக ஒப்புக்கொடுக்கின்ற குருவாகவும், சாதாரண அரசராக இல்லாமல் நீதியின், அமைதியின் அரசராகத் திகழ்கின்றார்.

இங்கே மெல்கிசதேக்கு இயேசு எப்படி நீதியின், அமைதியின் அரசராகத் திகழ்கின்றார் என்ற ஒரு கேள்வி எழலாம். விவிலியத்தில் நீதியும் அமைதியும் இணைந்தே வருவதற்கான பல குறிப்புகள் இருக்கின்றன (எசா 32:17, திபா 72:7, 85:10). ஒன்றை நம்முடைய கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அமைதியைக் கொடுக்காத எந்தவொரு ஆட்சியும் நீதியான ஆட்சியாக இருக்க முடியாது. அதே நேரத்தில் நீதியில்லாமல் நடக்கும் எந்தவொரு ஆட்சியையும் அமைதியான ஆட்சியாக இருக்காது. இந்த உலகத்தில் நடக்கின்ற ஆட்சிகளைக் கவனித்துப் பார்த்தோமெனில் இங்கே எப்படிப்பட்ட ஆட்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன என்பது நமக்கு விளங்கிவிடும். இவற்றைப் போலில்லாமல், இவற்றுக்கு மாற்றாக இருக்கின்றது இயேசுவின் நீதியின் ஆட்சி, அமைதியின் ஆட்சி. அந்த வகையில் இதனை வழங்கக்கூடிய இயேசு நீதியின், அமைதியின் அரசர். இதில் எந்தவொரு மாற்றுக்கருத்து கிடையாது.

சிந்தனை

இயேசு இந்த மண்ணுலகத்தில் வாழ்ந்தபோது, சென்ற இடத்திலெல்லாம் அமைதியை ஏற்படுத்துபவராக இருந்தார். அது மட்டுமல்லாமல், சிலுவையில் யூதர்களுக்கும் புறவினத்தாருக்கும் இடையே இருந்த சுவற்றினை உடைந்து எல்லாரையும் ஒன்றாக்கி, அமைதிக்கு வித்திட்டார். இத்தகைய அரசரின் வழியில் நடக்கின்ற நாமும் அமைதிக்கான வழிகளை மேற்கொள்வதுதான் சாலச் சிறந்தது ஆகும்.

ஆகவே, இயேசுவைப் போன்று மெல்கிசதேக்குவைப் போன்று நாம் வாழும் இடங்களில் அமைதியை ஏற்படுத்துவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மாற்கு 3:1-6

எப்படியும் நன்மை செய்யலாம்

நிகழ்வு

சில ஆண்டுகளுக்கு முன்பாக மும்பையிலிருந்த 'இராணுவத்திற்கு ஆட்களைத் தேர்வுசெய்யும் அலுவலகத்திலிருந்து (The Army Recruting Office) ஓர் அறிவிப்பு வந்திருந்தது. அந்த அறிவிப்பு இதுதான்: ".இராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்காக ஆர்வமுடன் உழைக்கும் ஆட்கள் தேவை. விருப்பமுள்ளவர் விண்ணப்பிக்கலாம்".

இப்படிப்பட்ட அறிவிப்பைப் பார்த்துவிட்டு பலரும் விண்ணப்பித்திருந்தனர். பத்து வயது நிரம்பிய ஒரு சிறுவனும் அதற்கு விண்ணப்பித்திருந்தான். அந்த விண்ணப்பத்தைப் பார்த்துவிட்டு இராணுவ அதிகாரிகள், இந்தச் சின்ன வயதிலும் நாட்டிற்காக உழைக்கும் ஆர்வம் இவனுக்கு இருக்கின்றதே என்று மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். அதே நேரத்தில் பத்து வயதில் இராணுவத்தில் சேர்ந்து பணிசெய்ய முடியாது என்பதால், அந்தச் சிறுவனுக்கு அவர்கள் இவ்வாறு பதில் கடிதம் எழுதினார்கள்.

"தம்பி! நாட்டிற்காக உழைக்கவேண்டும் என்ற உன்னுடைய உயர்ந்த என்னத்தைப் பாராட்டுகின்றோம். இருந்தாலும் உனக்குப் பத்து வயதுதான் ஆகிறது என்பதால், இராணுவத்தில் சேர்ந்து பணிசெய்ய முடியாது என்பதை மிக வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம். இப்போது நீ இராணுவத்தில் சேர்ந்து பணிசெய்ய முடியவில்லையே என்று வருந்தாதே. உனக்கு வயது வருகின்ற வரைக்கும் நீ இருக்கக்கூடிய இடத்தில் குறிப்பாக உன்னுடைய குடும்பத்தில் இருக்கின்ற உன்னுடைய பெற்றோருக்கு, உன்னுடன் படிக்கும் சக மாணவர்களுக்கு, நீ இருக்கக்கூடிய பகுதில் உள்ள ஏழை எளியவர்களுக்கு உதவி செய். அதுவே இந்த நாட்டிற்குச் செய்யக்கூடிய மிகப்பெரிய சேவை"

மக்களுக்குச் சேவை செய்ய நாம் பணக்காரராக, படித்தவராக, பெரியவராக இருக்கவேண்டும் என்பதில்லை. நாம் எந்த நிலையில் இருந்தாலும், எப்படிப்பட்ட நேரத்தில் இருந்தாலும் உதவி செய்யலாம் என்பதற்கு இந்த நிகழ்வில் வரக்கூடிய சிறுவன் நமக்கு முன்னுதாரணமாக இருக்கின்றான்.

ஓய்வுநாளில் கைசூம்பியர் குணம்பெறல்

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் செல்கின்றார். அங்கே கை சூம்பிய ஒருவர் இருக்கக் காண்கின்றார். இவர் பிறவியிலே அப்படி இருக்கவில்லை. கட்டட வேளையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது கை அப்படியானதாக விவிலிய அறிஞர்கள் சொல்வார்கள். எனவே, பல ஆண்டுகள் வேலை பார்த்து, குடும்பத்திற்கு ஒத்தாசையாக இருந்த இந்த மனிதர், இப்போது கை சூம்பிப்போனதால் குடும்பத்திற்கு உதவ முடியாமல் இருந்ததை அறிந்த இயேசு, அவரை, அது ஓய்வுநாள் என்றெல்லாம் பாராது குணப்படுத்துகின்றார்.

இயேசு கைசூம்பியவரைக் குணப்படுத்திய காட்சியில், அவர்மீது குற்றம் காணும் நோக்குடன் இருந்த பரிசேயர்களைக் குறித்தும் சிறிது தெரிந்துகொள்வது நல்லது. இந்தப் பரிசேயர்கள் கைசூம்பியவர் அதே நிலையில் பல ஆண்டுகள் இருந்ததை நினைத்து எதுவும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால், இயேசு அந்த மனிதரைக் குணப்படுத்தப் போகிறார் என்று தெரிந்ததும் இயேசுவின்மீது குற்றம்காணத் துடியாய் துடிக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இயேசு, இது ஓய்வு நாளாயிற்றே! ஓய்வுநாளில் குணப்படுத்தினால் பரிசேயர்கள் தனக்கெதிராகக் கிளர்ந்தெழுவார்களே என்பதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல், கை சூம்பிய அந்த மனிதரைக் குணப்படுத்துகின்றார்.

இயேசுவின் வழியில்நடக்கின்ற நாமும்கூட, நம்முன்னே இருக்கக்கூடிய சவால்களைக் கண்டு பயப்படாமல், எல்லாச் சூழ்நிலையிலும் எல்லா மனிதர்களுக்கும் நன்மை செய்யத் தயாராக இருக்கவேண்டும்.

இறைவனின் அருளைப் பெற நாம் இறைவனின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும்.

நற்செய்தி வாசகத்தில் நாம் காணக்கூடிய இன்னொரு உண்மை, கைசூம்பிய அந்த மனிதர் இயேசுவின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்ததாகும். இயேசு அந்த மனிதரைப் பார்த்து, "எழுந்து, நடுவே நில்லும், கையை நீட்டும்" என்று சொல்கின்றபோது, அவர் இயேசுவின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு, எழுகிறார்; நடுவே நிற்கிறார்; கையை நீட்டுகிறார். அதனால் இயேசுவிடமிருந்து குணம் பெறுகின்றார். நாம் இயேசுவிடமிருந்து குணமும் ஆசிரும் பெறவேண்டும் என்றால், இறைவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும். இறைவனின் வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் இறைவனிடமிருந்து ஆசிரைப் பெற முடியாது.

இன்றைக்கு இறைவனிடமிருந்து ஆசிரையும் நலமும் பெற விரும்புகின்ற பலர், இறைவனின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடக்காமல் இருப்பது மிகவும் வேடிக்கையாக இருக்கின்றது. இதை எப்படிப் புரிந்துகொள்வது என்று தெரியவில்லை!.

சிந்தனை

இயேசு சென்ற இடங்களிலெல்லாம் நன்மை செய்தார்" என்று இறைவார்த்தை (திப 10:38) நமக்கு எடுத்துரைக்கின்றது. நாம் நன்மை செய்வதற்கு நேரம், காலம் பார்த்துக் கொண்டிருக்காமல், எல்லாச் சூழ்நிலையிலும் எல்லா மனிதருக்கும் நன்மை செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!