Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   19  ஜனவரி 2019  
                                                  முதல் வாரம் - சனி - 1 ம் ஆண்டு
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
 அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 4: 12-16

சகோதரர் சகோதரிகளே, கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இரு பக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது; எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. படைப்பு எதுவும் கடவுளுடைய பார்வைக்கு மறைவாய் இல்லை.

அவருடைய கண்களுக்கு முன் அனைத்தும் மறைவின்றி வெளிப்படையாய் இருக்கின்றன. நாம் அவருக்கே கணக்குக் கொடுக்க வேண்டும். எனவே, வானங்களைக் கடந்து சென்ற இறைமகனாகிய இயேசுவை நாம் தனிப்பெரும் தலைமைக் குருவாகக் கொண்டுள்ளதால், நாம் அறிக்கையிடுவதை விடாது பற்றிக்கொள்வோமாக!

ஏனெனில், நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல; மாறாக, எல்லா வகையிலும் நம்மைப் போலச் சோதிக்கப்பட்டவர்; எனினும் பாவம் செய்யாதவர். எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக்கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:19: 7. 8. 9. 14 (பல்லவி: யோவா 6: 63b)
=================================================================================
 பல்லவி: ஆண்டவரே உம் வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன.

7 ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. பல்லவி

8 ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. பல்லவி

9 ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. பல்லவி

14 என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே! என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்; என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
லூக் 4: 18-19

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-17

இயேசு மீண்டும் கடலோரம் சென்றார். மக்கள் கூட்டத்தினர் எல்லாரும் அவரிடம் வரவே, அவர் அவர்களுக்குக் கற்பித்தார். பின்பு அங்கிருந்து அவர் சென்றபோது அல்பேயுவின் மகன் லேவி சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார்; அவரிடம், "என்னைப் பின்பற்றி வா" என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.

பின்பு அவருடைய வீட்டில் பந்தி அமர்ந்திருந்தபோது வரிதண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர். ஏனெனில் இவர்களுள் பலர் இயேசுவைப் பின்பற்றியவர்கள்.

அவர் பாவிகளோடும் வரிதண்டுபவர்களோடும் உண்பதைப் பரிசேயரைச் சார்ந்த மறைநூல் அறிஞர் கண்டு, அவருடைய சீடரிடம், "இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்?" என்று கேட்டனர்.

இயேசு, இதைக் கேட்டவுடன் அவர்களை நோக்கி, "நோயற்றவருக்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

தேவைப்படுவோருக்கு உதவுவதே இறைவனின் எண்ணமாகும்.

இன்றைக்கு பணி செய்வது, சுருங்கிப் போகின்றது. அப்படியே பணியாற்றினாலும், தேவையில் இருப்போரை அணுகிச் சென்று பணியாற்றுவது என்பது குறைந்து, வசதிபடைத்தோருக்கே எல்லாம் கிடைக்கப் பெற்றவர்களுக்கே இன்று பணியாற்றி அடிமைகளாகத் தான் மாறி வருகின்றோம் என்பதுவே உண்மை.

உதாரணமாக கல்வியின்று ஆங்கிலமயமாவதோடு, பணம் பறிக்கும் நிலையமாகவும் மாறி வருவது, எங்கு போகின்றோம் என தெரியாமலேயே போவது போல அமைந்திருக்கின்றது. இத்தகைய பணிகள் இல்லாதோருக்கு என மாறி எங்கு எல்லாம் நிறைவாய் கிடைக்கப் பெறுவோருக்கு அடிமைகளாய் நின்று சேவகம் செய்யும் நிலை வளர்ந்து இருப்பது, இறைவனின் பணி தானா?

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 மாற்கு 2:13-17

"இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்?"

நிகழ்வு

அது ஒரு தனியார் பள்ளிக்கூடம். அந்தப் பள்ளிக்கூடத்தில் பன்னிரெண்டாம் வகுப்புப் படித்து வந்த மாணவர்களுக்கு அவர்களுடைய வகுப்பு ஆசிரியர் ஒருநாள் ஒரு தேர்வு வைத்தார். அந்தத் தேர்வில் முதலாவதாகக் கேட்கப்பட்ட கேள்வி இதுதான்: "நம்முடைய பள்ளிக்கூடத்தை ஒவ்வொருவரும் சுத்தம் செய்யும் துப்புரவுப் பணியாளரின் பெரியரென்ன?"

இப்படியொரு கேள்வியை சிறிதும் எதிர்பாராத மாணவர்கள், "இதெல்லாம் ஒரு கேள்வியென்று கேட்டிருக்கிறாரே!" என்று ஆசிரியருக்கு எதிராக முணுமுணுத்தனர். இன்னும் ஒருசில மாணவர்கள் எழுந்து, "சார்! இந்தக் கேள்வியைத் தவிர்த்துவிட்டு, அடுத்த கேள்விகளுக்கான விடை எழுதலாமா? என்று கேட்டார்கள். அதற்கு வகுப்பு ஆசிரியர் அவர்களிடம், "இந்தக் கேள்வியைத் தவிர்த்துவிட்டு, அடுத்த கேள்விகளுக்கான விடை எழுதினாலும் நீங்கள் தேர்வில் தோற்றுத்தான் போவீர்கள். ஏனெனில் இந்தக் கேள்விக்கான விடைக்கு நூற்றுக்கு தொண்ணூறு மதிப்பெண்கள்" என்றார். இதைக் கேட்டுவிட்டு அனைத்து மாணவர்களும் பேயறைந்தவர்கள்போல் இருந்தார்கள்.

அப்போது வகுப்பு ஆசிரியர் மாணவர்களைப் பார்த்துச் சொன்னார், "சாதாரண ஒரு துப்புரவுப் பணியாளர்தானே, அவரைப் பற்றி அல்லது அவருடைய பெயரைத் தெரிந்து நமக்கு என்ன ஆகப்போகிறது என்று நினைக்காதீர்கள். இதுபோன்ற சாதாரண மக்களால்தான் இந்த சமூகம், ஏன் நாம்கூட நன்றாக இருக்கமுடிகிறது. அவர்கள் மட்டும் தங்களுடைய பணிகளை ஒருநாள் நிறுத்திவிட்டால், நம் பாடு பெரும்பாடுதான்".

நாம் வாழும் இந்த சமூகம் பணம் படைத்தவர்களையும் பகட்டாக இருப்பவர்களையும்தான் பெருமையோடு நினைத்துப் பார்க்கின்றது. சாதாரண மக்களையும் வறியவர்களையும் கண்டுகொள்வதே இல்லை. இதற்கு முற்றிலும் மாறாக ஏழைகளோடு ஏழையாக, வறியவர்களோடு வறியவராக இருந்து, அவர்களுக்கு மத்தியில் அன்புப் பணிசெய்த ஆண்டவர் இயேசுவைக் குறித்து இன்றைய வாசகத்தின் வழியாக சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

பாவிகளையே அழைக்க வந்த இயேசு

நற்செய்தி வாசகத்தில் இயேசு, பாவிகளோடும் வரிதண்டுபவர்களோடும் விருந்துபதைப் பார்த்த மறைநூல் அறிஞர்கள் அவருடைய சீடர்களிடம், "இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்?" என்கின்றார்கள். இதைக் கேட்ட இயேசு அவர்களிடம், "நோயற்றவருக்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்கின்றார்.

அனைவரும் மீட்புப்பெறவேண்டும் என்பதற்காக (1 திமொ 2:4) வந்த இயேசு இங்கு "பாவிகளையே அழைக்க வந்தேன்" என்று சொல்லக் காரணம் என்ன என்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது. இயேசு அனைவருக்கும் மீட்புக் கொடுக்க வந்தபோதும், தங்களை நேர்மையாளர் என்று அழைத்துக்கொண்டவர்கள் இயேசுவை யாரென்றே தெரியாமல் இருந்தார்கள், அல்லது இயேசுவைப் பற்றித் தெரிந்திருந்தபோதும் அவர்மீது அவர்கள் நம்பிக்கை கொள்ளாமலும் அவருடைய தேவையை உணராமலும் இருந்தார்கள். அதனால் அவர்கள் இயேசு அளிக்க வந்த மீட்பைப் பெற்றுக்கொள்ளத் தகுதியற்றுப் போனார்கள். ஆனால், பாவிகள் அப்படியில்லை, அவர்கள் இயேசுவை யாரென்று அறிந்திருந்தார்கள், அறிந்ததோடு மட்டுமல்லாமல், அவர்மீது நம்பிக்கை வைத்து அவரைப் பின்தொடரவும் செய்தார்கள். இது மட்டுமல்லாமல், பாவிகளுக்கு கடவுளின் அன்பு மற்றவர்களைவிட அதிகமாகத் தேவைப்பட்டது. எனவேதான் இயேசு பாவிகளையே அழைக்க வந்தேன் என்று சொல்கின்றார்.

பாவநோய் போக்க வந்த இயேசு

நற்செய்தி வாசகத்தில் 'பாவிகளையே அழைக்க வந்தேன்' எனச் சொல்லும் இயேசு, 'நோயற்றவருக்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை' என்றும் சொல்கின்றார். இதை எப்படிப் புரிந்துகொள்வது என்று சிந்தித்துப் பார்ப்போம்.

யூதர்கள் மத்தியில் நோயானது பாவத்தினால் வருகின்றது என்ற கருத்தானது ஆழமாகப் பதிந்திருந்தது (யோவா 9: 1-3). இன்னும் சொல்லப்போனால் பாவும் நோயும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்று நம்பப்பட்டது. இதனை நன்குணர்ந்த இயேசு, "(பாவ)நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை, நோயற்றவருக்கு அல்ல" என்கின்றார். அதாவது தன்னை யாராரெல்லாம் பாவி என்று உணர்கின்றார்களோ அப்படிப்பட்டவர்களுக்கு நான் பாவ நோய் போக்கும் மருத்துவராக இருக்கிறேன் என்கின்றார் இயேசு.

நாம் எப்போது நம்முடைய தவற்றை உணர்ந்து, இறைவனின் அருட்பெருக்கை எதிர்நோக்கிக் காத்திருக்கப் போகிறோம் என்பது சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

சிந்தனை

இயேசு, தான் வாழ்ந்த காலத்தில் இருந்த ஏழைகள், பாவிகள் இவர்களோடு தன்னை ஐக்கியபடுத்துக்கொண்டு, அவர்களுடைய மீட்புக்காக தன்னையே அர்ப்பணித்தார். நாமும் நம்மோடு வாழக்கூடிய ஏழைகள், அனாதைகள் இவர்கள்மீது தனிப்பட்ட அன்புகாட்டி, அவர்கள் வாழ்வு ஏற்றம்பெற உழைப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 எபிரேயர் 4:12-16

"கடவுளுடைய வார்த்தை இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது"

நிகழ்வு

1970 ஆம் ஆண்டு, பங்களாதேஷில் பாகிஸ்தானியர்கள் நடத்திய தொடர் தாக்குதலைத் தொடர்ந்து, பங்களாதேஷ் நாட்டைச் சார்ந்த பலர் மேற்கு வங்கத்தில் தஞ்சமடைந்தனர். இப்படி சொந்த மண்ணை விட்டுவிட்டு மேற்கு வங்கத்தில் தஞ்சமடைந்த மக்களுக்கு பலர் உதவிக்கரம் நீட்டினார்கள். நிறைய அருட்சகோதரிகளும் வந்து அவர்களுக்கு மத்தியில் பணிசெய்யத் தொடங்கினார்கள்.

அந்த மக்களுக்கு மத்தியில் பணிசெய்து வந்து ஓர் அருட்சகோதரி, ஒவ்வொருநாளும் அந்த மக்களுக்கு உதவிகள் செய்வதும், கதைகள் சொல்வதும், தன்னிடம் இருக்கும் இசைக்கருவியை மீட்டி, அவர்களை மகிழ்விப்பதுமாக இருந்தார். இதைப் பார்த்துவிட்டு அந்த முகாமில் இருந்த ஒரு பெரியவர், 'எப்படி உங்களால் என்னைப் போன்றவர்களுக்கு உதவிகள் செய்யமுடிகின்றது?; கவலைகளோடு இருக்கின்ற எங்களுக்கு சந்தோசத்தைத் தரமுடிகின்றது?. இத்தனைக்கும் என்போன்றவர்கள் உங்களைப் பார்த்து சிரிப்பது கிடையாது, நன்றி என்று ஒருவார்த்தை சொல்வது கிடையாது. அப்படியிருந்தபோடும் எப்படி உங்களால் இதுபோன்ற பணிகளைச் செய்ய முடிகின்றது" என்று கேட்டார்.

அதற்கு அந்த அருட்சகோதரி சிரித்துக்கொண்டே பதிலளித்தார். "நானும் என்னைப் போன்றவர்களும் இதுபோன்ற பணிகளைச் செய்வதற்குக் காரணம், நான் வணங்குகின்ற இயேசு, 'நான் உங்களை அன்பு செய்தது போன்று, நீங்கள் ஒருவர் மற்றவரை அன்புசெய்யவேண்டும் என்று சொல்லியிருக்கின்றார். அதனால்தான் நான் இதுபோன்ற பணிகளைச் செய்துகொண்டிருக்கின்றேன்".

இதைக் கேட்டுவிட்டு அந்தப் பெரியவர், "உங்களோடு பேசியதிலிருந்து இயேசுவைக் குறித்து இன்னும் அதிசமாகத் தெரிந்துகொள்ளவேண்டும் என்று ஆர்வமாக இருக்கின்றது... எனக்காக ஒரு விவிலியத்தைக் கொண்டுவந்து தரமுடியுமா?" என்று கேட்டார். "விவிலியத்தை இங்கே கொண்டுவருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது அல்லவா... இருந்தாலும் உங்களுக்காக நான் ஒரு விவிலியத்தைக் கொண்டுவந்து தருகிறேன்" என்று சொல்லிவிட்டு, மறுநாள் ஒரு விவிலியத்தை மறைவாக எடுத்துக்கொண்டு வந்து, அந்த பெரியவரிடம் கொடுத்தார்.

அருட்சகோதரியிடமிருந்து விவிலியத்தைப் பெற்றுக்கொண்ட அந்தப் பெரியவர் பொறுமையாக வாசிக்கத் தொடங்கினார். அவர் ஒவ்வொரு பகுதியாக வாசிக்க வாசிக்க அவருடைய கண்களில் நீர் தாரைதாரையாக வழியத் தொடங்கியது. அது மட்டுமல்லாமல் அவருடையை உள்ளத்தில் பேரமைதி உண்டானது. ஒருமாத காலத்திற்குப் பிறகு விவிலியம் முழுவதையும் வாசித்துவிட்டு, அருட்சகோதரியைச் சந்தித்த அந்த பெரியவர், "அம்மா! நீங்கள் கொடுத்த விவிலியம், என்னுடைய மனைவியையும் மகனையும் கண்ணெதிரே இழந்து, வேதனையில் இருந்த எனக்கு ஆறுதலையும் மனநிம்மதியையும் தந்திருக்கிறது" என்றார்.

இறைவனுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது. அது உள்ளத்தை ஊடுருவக்கூடியது என்பதற்கு இந்த நிகழ்வு போதும்

உயிருள்ள இறைவனின் வார்த்தைகள்

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், அதன் ஆசிரியர், கடவுளின் வார்த்தைக்கு இருக்கின்ற வல்லமையையும், அதனுடைய மகத்துவத்தையும் எடுத்துச் சொல்கின்றார்.

இறைவன் 'உண்டாகுக' என்று ஒரு வார்த்தை சொன்னார். உடனே வானும் மண்ணும் கடலும் அதில் உள்ள யாவும், நிலத்தில் உள்ள ஊர்வன, பறப்பன எல்லாம் தோன்றன. அந்தளவுக்கு கடவுளின் வார்த்தை உயிருள்ளதாகவும் ஆற்றலுள்ளதாகும் இருக்கின்றது. இத்தகைய இறைவார்த்தை முதலில் இஸ்ரயேல் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. ஆனால் அவர்களோ அதற்கு செவிகொடுக்காமலும், அதனை எடுத்துச் சொன்ன இறைவாக்கினர்களையும் துன்புறுத்தினார்கள். கடைசியில் இறைவார்த்தை வாக்கு என்னும் இயேசு இந்த உலகத்திற்கு வந்தார். அவரையும்கூட இந்த மக்கள் புறக்கணித்தார்கள். அதனால் அவர் கொண்டு வாழ்வென்னும் கொடையை அவர்கள் இழந்துபோனார்கள்.

நாமும்கூட இறைவார்த்தையை அன்றாடம் கேட்கின்றோம். அதனை நாம் வாழ்வாக்குகின்றோமா? அதன்படி நடக்கின்றோமா? என்பதுதான் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

இன்றைய முதல் வாசகத்தின் இறுதியில் அதன் ஆசிரியர் சொல்கிறார், "வானங்களைக் கடந்து சென்ற இறைமகனாகிய இயேசுவை நாம் தனிப்பெரும் தலைமைக் குருவாகக் கொண்டுள்ளதால், நாம் அறிக்கையிடுவதை விடாது பற்றிக்கொள்வோமா?" (4:14) என்கின்றார். பற்றிக்கொள்தல் என்றால், அதன்படி வாழ்தல் என்றுகூட நாம் பொருள் எடுத்துக் கொள்ளலாம். ஆம், இயேசுவின் உயிருள்ள இறைவார்த்தையினைப் பற்றிக்கொண்டு வாழ்கின்றபோது, நாம் அவரிடமிருந்து நிறைவான ஆசிரைப் பெறுவது உறுதி.

சிந்தனை

"யாரிடம் போவோம். நிலைவாழ்வு அளிக்கின்ற வார்த்தைகள் உம்மிடதானே உள்ளன" என்பார் தூய பேதுரு. ஆம், இயேசுவின் வார்த்தைகள் உயிருள்ள வார்த்தைகள். நாம் அத்தகைய வார்த்தையைக் கேட்டு, அதன்படி வாழ்கின்றபோது இறையருளை நிறைவாய் பெறுவது உறுதி.

ஆகவே, நாம் உயிருள்ள இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
நற்செய்தி (மாற் 2:13-17)
 இயேசுவின் முதன்மைகள்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு மத்தேயுவை அழைக்கும் நிகழ்வும், அந்த நிகழ்வின் இறுதியில் வரும் விருந்து உபசரிப்பும், அந்த விருந்து உபசரிப்பில் பங்கேற்று இயேசுவைப் பற்றிய மக்களின் விமர்சனமும், அதற்கு இயேசுவின் பதிலும் என நான்கு பகுதிகள் உள்ளன.

மக்களின் விமர்சனத்திற்கான இயேசுவின் பதிலை நம்முடைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்:

'நோயற்றவருக்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை.
நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்'

தன்னுடைய வாழ்க்கை யாருக்காக என்ற முதன்மையைத் தெளிவாக அறிந்திருக்கிறார் இயேசு.

மருத்துவர் யாருக்கெல்லாம் தேவை?

அவருடைய குடும்பத்திற்கு, அவருடைய நண்பர்களுக்கு, அவருடன் வேலை பார்ப்பவர்களுக்கு, அவரிடம் வேலை பார்ப்பவர்களுக்கு, மற்றும் அவரிடம் நலம் நாடி வருபவர்களுக்கு. இந்த ஐந்துக் குழுக்களில் இறுதியில் வருகின்ற நலம் நாடி வருபவர்களுக்குத்தான் மருத்துவர் இன்றியமையாதவர் ஆகிறார். அல்லது மற்ற நான்கு குழுக்களில் உள்ளவர்கள் தாங்கள் நோயுறும்போது மருத்துவரை நாடுவர். ஆக, மருத்துவரின் பணி நோயற்றவர்களை அல்ல, நோயுற்றவர்களைத் தேடிச் செல்வதாக இருத்தல் வேண்டும்.

தான் எல்லாருக்கும் என அனுப்பப்பட்டாலும், வந்தாலும் தன் பணி யாருக்கு என்பதை வரையறுக்கின்றார் இயேசு. 'நேர்மையாளர்களை அல்ல. பாவிகளையே அழைக்க வந்தேன். 'முந்தையர்களுக்கு இயேசு தேவையில்லை என்று பொருள் அல்ல. மாறாக, அவர்கள் ஏற்கனவே கரை சேர்ந்தவர்கள். கரை சேர்ந்தவர்களுக்கு மரக்கலம் தேவையில்லை. கடலில் உழல்வோருக்குத்தான் தேவை. கரை சேர்ந்தவர்கள் எனக்குப் பிடித்தமானவர்கள் என்பதற்காக மரக்கலத்தை அவர்களுக்குக் கொடுத்தால், அது அவர்களுக்கு ஒரு பக்கம் சுமையாகவும், மறுபக்கம் கடலில் அமிழ்ந்துகொண்டிருப்போருக்கு ஆபத்தாகவும் முடியும்.

இயேசு தன்னுடைய பணியின் முதன்மை என்ன என்பதை அறிந்திருந்தார். மேலும், அதை யாருக்காகவும் அவர் வளைத்துக்கொள்ளவில்லை. தன்னைப் பற்றிய விமர்சனம் எழுகிறது என்ற காரணத்திற்காக அதை மாற்றிக்கொள்ளவோ, அல்லது தன் முதன்மையை இழக்கவோ இல்லை.

நம் வாழ்வின் முதன்மைகளை நிர்ணயித்த பிறகு நிறைய மற்றவைகள் வரும். மற்றவைகளைக் கவனித்துக்கொண்டே இருந்தால் முதன்மையானவைகள் துன்புறும் நிலை ஏற்படும்.

முதன்மையை நாம் எப்படி நிர்ணயிப்பது?

'எந்தச் செயலை நான் மட்டுமே செய்ய முடியுமோ அதில்தான் என் முதன்மை கட்டப்பட வேண்டும்'

கடிதம் எழுதுவது என வைத்துக்கொள்வோம்.

கடிதம் எழுதுவதுதான் முதன்மையே தவிர, அதை அனுப்புவதற்கான வழியை ஆராய்வது முதன்மை அல்ல. கடிதத்தை யார் வேண்டுமானாலும் போஸ்ட் அல்லது கூரியர் செய்யலாம். ஆக, எழுதுவதை விட்டுவிட்டு, எப்படி அனுப்புவது? யார் வழியாக அனுப்புவது? என்று குழப்பிக் கொண்டிருப்பது நம் நேரத்தை வீணடிப்பதோடல்லாமல், கடிதம் எழுதுவதற்கான நேரத்தையும் இழக்க வேண்டிய நிலையில் கொண்டுபோய் விடும்.

மேலும், முதன்மையை நிர்ணயிக்கும் போது நம்மால் பயன்பெறுபவர்களை மனத்தில் கொள்ளவேண்டும். நோயுற்றவர்களை நாடிச் செல்லும் மருத்துவர் தன் பாதுகாப்பு வளையத்திற்கு வெளியே செல்கின்றார். அவரை நோய் பற்றிக்கொள்ளும் ஆபத்து அதிகம். ஆனால், தன் பாதுகாப்பு வளையத்தை விட்டுச் சென்றால்தான் நோயுற்றவருக்கு நலம் தர முடியும். பாவிகளோடு தங்குவதும் தன் பாதுகாப்பு வளையத்தைவிட்டு வெளியே செல்வதே.

ஆக, என் முதன்மைகள் என் பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ளதை மட்டும் நாடாமல், வெளியில் இருப்பதை நாட வேண்டும். நான் ஒரு ஆசிரியர் என வைத்துக்கொள்வோம். 90 மார்க் வாங்குகிற நல்ல மாணவர்களுக்குப் பாடம் நடத்துவது என் பாதுகாப்பு வளையம். நான் பெரிதாக ஒன்றும் கஷ்டப்படத் தேவையில்லை. ஆனால் தேர்ச்சி பெற முடியாத மாணவர்களை நான் தேடிச் செல்லும்போது அது எனக்கு வலிக்கும். அந்த வலிதான் என் முதன்மையை நிர்ணயிக்க வேண்டும்.

இதையே இன்றைய முதல் வாசகத்தில் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் இயேசுவின் மேன்மையாக முன்வைக்கின்றார்: 'நம் தலைமைக்குரு (இயேசு) நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல. மாறாக, எல்லா வகையிலும் நம்மைப் போலச் சோதிக்கப்பட்டவர்.'

இயேசுவைப் போன்று முதன்மையை நிர்ணியக்கவும், நிர்ணயித்த முதன்மையில் நிலைத்திருக்கவும், வலுவின்மையில் முதன்மையைப் பதித்துக்கொள்ளவும் நம்மால் முடிந்தால் எத்துணை நலம்!

- Rev. Fr. Yesu Karunanidhi.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!