Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   18  ஜனவரி 2019  
                                                    முதல் வாரம் - வெள்ளி
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
 கடவுள் தரும் ஓய்வைப் பெறுகிறவர்கள், நம்பிக்கையுடன் இருக்கும் நாமே.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-5,11

சகோதரர் சகோதரிகளே, கடவுள் தரும் ஓய்வைப் பெறுவது பற்றி அவர் அளித்த வாக்குறுதி இன்னும் நிலைத்திருப்பதால், உங்களுள் எவரேனும் அதை அடையத் தவறிவிடக் கூடாது என எண்ணுகிறேன். இது குறித்து நாம் கவனமாய் இருப்போமாக. ஏனெனில் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது போலவே, நமக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட்டது.

ஆயினும் அவர்கள் கேட்ட செய்தி அவர்களுக்குப் பயன் அளிக்கவில்லை; ஏனெனில் கேட்டவர்கள் அச்செய்தியை நம்பிக்கையோடு கேட்கவில்லை. இந்த ஓய்வைப் பெறுகிறவர்கள் நம்பிக்கையுடன் இருக்கும் நாமே.

இதைக் குறித்தே, "நான் சினமுற்று, "நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள்' என்று ஆணையிட்டுக் கூறினேன்" என எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

எனினும் உலகம் தோன்றிய காலத்திலேயே கடவுளுடைய வேலைகள் முடிந்துவிட்டன.

ஏனெனில் மறைநூலில் ஓரிடத்தில் ஏழாம் நாள் பற்றி, "கடவுள் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச்செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்" என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், மேற்சொன்ன சொற்றொடரில், "அவர்கள் நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள்" என்றிருக்கிறது. ஆதலால், கீழ்ப்படியாதவர்களின் மாதிரியைப் பின்பற்றி, எவரும் வீழ்ச்சியுறாதவாறு அந்த ஓய்வைப் பெற முழு முயற்சி செய்வோமாக.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:78: 3,4bc. 6c-7. 8 (பல்லவி: 7b)
=================================================================================
 பல்லவி: இறைவனின் செயல்களை மறவாதீர்கள்.

3 நாங்கள் கேட்டவை, நாங்கள் அறிந்தவை, எம் மூதாதையர் எமக்கு விரித்துரைத்தவை - இவற்றை உரைப்போம். 4bஉ வரவிருக்கும் தலைமுறைக்கு ஆண்டவரின் புகழ்மிகு, வலிமைமிகு செயல்களையும் அவர் ஆற்றிய வியத்தகு செயல்களையும் எடுத்துரைப்போம். பல்லவி

6c இவர்கள் தம் புதல்வர்களுக்கு ஆர்வத்துடன் கற்றுக்கொடுக்கவும், 7 அதனால், அவர்கள் கடவுள்மீது நம்பிக்கை வைக்கவும், இறைவனின் செயல்களை மறவாதிருக்கவும், அவர்தம் கட்டளைகளைக் கடைப்பிடிக்கவுமே. பல்லவி

8 தங்கள் மூதாதையரைப் போல், எதிர்ப்பு மனமும், அடங்காக் குணமும் கொண்ட தலைமுறையாகவும், நேரிய உள்ளமற்றவர்களாகவும், இறைவன்மீது உண்மைப் பற்று அற்றவர்களாகவும் இராதபடி அவர் கட்டளையிட்டார். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
லூக் 07: 16

அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க, மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 02: 01-12

இயேசு மீண்டும் கப்பர்நாகுமுக்குச் சென்றார். அவர் வீட்டில் இருக்கிறார் என்னும் செய்தி பரவிற்று. பலர் வந்து கூடவே, வீட்டு வாயிலருகிலும் இடமில்லாமல் போயிற்று. அவர் அவர்களுக்கு இறைவார்த்தையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்.

அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து அவரிடம் கொண்டுவந்தனர். மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை இயேசுவுக்கு முன் கொண்டுவர இயலவில்லை. எனவே அவர் இருந்த இடத்திற்கு மேலே வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு கீழே இறக்கினர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம், "மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்.

அங்கே அமர்ந்திருந்த மறைநூல் அறிஞர் சிலர், "இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்? இவன் கடவுளைப் பழிக்கிறான். கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?" என உள்ளத்தில் எண்ணிக்கொண்டிருந்தனர்.

உடனே அவர்கள் தமக்குள் இவ்வாறு எண்ணுவதை இயேசு தம்முள் உணர்ந்து, அவர்களை நோக்கி, "உங்கள் உள்ளங்களில் இவ்வாறு எண்ணுவது ஏன்? முடக்குவாதமுற்ற இவனிடம் "உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' என்பதா? "எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட' என்பதா? எது எளிது? மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்" என்றார்.

எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, "நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ" என்றார்.

அவரும் எழுந்து உடனே தம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாரும் காண வெளியே சென்றார்.

இதனால் அனைவரும் மலைத்துப்போய், "இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே" என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

செயல்கள் மலைப்படையச் செய்தன.

நம்முடைய செயல்கள் வியப்படையச் செய்கின்றனவா?

இன்றைக்கு ஆற்றல் இல்லாமல் இல்லை, அறிவு இல்லாமல் இல்லை, வாய்ப்புகள், வசதிகள் இல்லாமல் இல்லை. மாறாக மனித மனம் இன்று விரிவடைந்து செயல்கள் வியப்படைச் செய்யும் அளவுக்கு இல்லாது போகின்றது என்பதாலேயே இன்று வாழ்வு வளர்ச்சியின்றி, காயங்களும், கறைகளும் நிறைந்து போகின்றது.

செயல்களை நேரியதாக, உண்மையானதாக, வாழ்வுக்குரியதாக்குவோம். பார்ப்போருக்கு இது மலைப்பாகும்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 எபிரேயர் 4: 1-5

இறைவன் அளிக்கும் ஓய்வு

நிகழ்வு

மலையடிவாரக் கிராமமொன்றில் பணிசெய்து வந்த துறவி ஒருவர், இங்கு தனிவொரு ஆளாக இருந்து பணிசெய்வது மிகவும் கடினமாக இருக்கின்றது, தன்னோடு பணிசெய்வதற்கு துணைக்கு ஓர் ஆளை அனுப்பி வைத்தால் இன்னும் வசதியாக இருக்கும்" என்று கடிதம் ஒன்றை எழுதி, அதை சபைத் தலைவருக்கு அனுப்பி வைத்தார்.

சபைத் தலைவரும் அதைப் படித்துப் பார்த்துவிட்டு, மறுநாள் தன்னுடைய சபையில் இருந்த இளந்துறவிகளை அழைத்து, கடிதத்தை வாசித்துக் காட்டி, "மலையடிவாரத்தில் பணிசெய்து வரும் துறவியோடு பணிசெய்வதற்காக உங்களில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து அனுப்புகிறேன்" என்றார். இதைக் கேட்டுவிட்டு எல்லா இளந்துறவிகளும், "என்ன இவர், அவர் ஒரு துறவியைத்தானே கேட்டிருக்கிறார். இவர் எதற்கு ஐந்து துறவிகளை அனுப்புவதாகச் சொல்கிறார். இவருக்கு ஏதாவது ஆயிற்றா?" என்று முணுமுணுக்கத் தொடங்கினார்கள். அவர்கள் பேசியது சபைத் தலைவருடைய காதில் விழுந்ததும், "நான் ஏன் ஐந்து துறவிகளை அனுப்பி வைக்கிறேன் என்று இப்போது உங்களுக்குப் புரியாது, பின்னர் புரியும்" என்றார்.

மறுநாள் சபைத் தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து துறவிகளும் மலையடிவாரத்தில் பணிசெய்து வந்த துறவியின் இருப்பிடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். அது நீண்டதூரமாக இருந்தது. எனவே அந்த இடத்தை நோக்கி அவர்கள் மெல்ல நடந்து சென்றார்கள். அவர்கள் போகிற வழியில் ஓர் ஊர் வந்தது. அந்த ஊரில் இருந்த பெரியவர் ஒருவர், அந்த துறவிகளிடம் வந்து, "தம்பிகளா! எங்களுடைய ஊரில் இருந்த துறவி இன்று அதிகாலையில் இறந்துவிட்டார், அதனால் உங்களில் ஒருவர் எங்களோடு இருந்து எங்களுக்குப் பணிசெய்தால் நன்றாக இருக்கும். நல்ல சம்பளமும் தருகிறோம்" என்றார். உடனே அந்த ஐந்து இளந்துறவிகளில் ஒரு துறவி, "எதற்கு தூர தேசத்திற்குச் சென்று பணிசெய்யவேண்டும், இங்கேயே இருந்து மிக சவுரியமாகப் பணிசெய்வோம்" என்று அந்த ஊரிலேயே இருந்துவீட்டார்.

இப்போது ஐவரில் ஒருவர் போக, நான்கு பேர் ஆனார்கள். அவர்கள் நான்கு பேரும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும்போது, குதிரையில் வந்த அந்நாட்டு அரசர், அவர்களுக்கு முன்பாகக் குதிரையை நிறுத்தி, அந்தத் துறவிகளில் மிகவும் அழகாக இருந்த துறவியிடம், "என்னுடைய மகளுக்கு நல்லதொரு மாப்பிளை அமையவேண்டும் என்று நீண்ட நாட்களாக அலைந்துகொண்டிருக்கிறேன். உன்னிடத்தில் நான் எதிர்பார்க்கின்ற எல்லாப் பொருத்தமும் இருக்கிறது. என் மகளை நீ மணந்துகொள்வாயா?" என்று கேட்டார். அந்தத் துறவியும், "நல்ல வாய்ப்பைத் தவறவிடுவானேன்" என்று அரசரோடு சென்று இளவரசியை மணந்துகொண்டான்.

இப்போது மூன்று பேர் ஆனார்கள். தொடர்ந்து அவர்கள் நடந்து போய்க்கொண்டிருக்கும்போது ஒரு தாயும் அவளுடைய இளவயது மகளும் இறந்துபோய் கிடந்த ஒருவருக்கு முன்பாக அழுதுகொண்டிருந்தார்கள். விசாரித்துப் பார்க்கையில் இறந்த அந்த மனிதர் பாம்பு கடித்து இறந்ததாகவும், அவருடைய இறப்புக்குப் பின்னால், அந்தக் குடும்பம் அனாதையாக நிற்பதும் தெரிய வந்தது. உடனே அந்த மூன்று துறவிகளில் ஒருவர் அவர்கள்மீது இரக்கம்கொண்டு, இந்தக் குடும்பத்தை இனிமேல் நான் பார்த்துக்கொள்கிறேன்" அவர்களோடு இருந்துவிட்டார். இப்போது ஐந்து பேராக இருந்த துறவிகள், இரண்டு பேராக ஆனார்கள். சபைத் தலைவர் சொன்னது பலித்துவிடுமோ என்று அவர்கள் கதைத்துக் கொண்டே தொடர்ந்து நடந்து சென்றார்கள்.

ஓர் ஊரின் நுழைவாயிலை அவர்கள் அடைந்தார்கள். அங்கே கடவுள் இல்லவே இல்லை என்று அந்த ஊர்க்கார்கள் வாதாடிக்கொண்டிருந்தார்த்கள். அதைப் பார்த்த துறவிகளில் ஒருவர், "இவர்களுக்கு கடவுள் இருக்கிறார் என்று நான் நிரூபிக்கிறேன், அது மட்டுமல்லாமல், கடவுள் நம்பிக்கையாளர்களாக இந்த ஊர்க்காரர்களை நான் மாற்றுக் காட்டுகிறேன். நீ வேண்டுமானால் போ" என்று அவர்களோடு இருந்துவிட்டார். இப்போது ஐந்து துறவிகளில் ஒரே ஒரு துறவி மட்டும்தான் இருந்தார். அவர் தொடர்ந்து நடந்துசென்று, மலையடிவாரத்தை அடைந்து, அங்கிருந்த துறவியோடு தன் வாழ்நாள் முழுக்க பணிசெய்து வந்தார்.

வாழ்க்கைப் பயணத்தில், இலக்கை நோக்கி நடந்துபோய்க் கொண்டிருக்கின்ற நாம், ஒருசில காரியங்களில் மயங்கி அதிலே வாழ்வை முடித்துக்கொள்கிறோம். ஆனால், யார் ஒருவர் எத்தகைய சாவல் வந்தாலும், தன்னுடைய இலக்கை நோக்கி நடந்துசெல்கின்றாரோ, அவர் தன்னுடைய வாழ்வில் பெருமகிழ்ச்சியை அடைவார் என்பது உறுதி. அத்தகைய உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது.

இறைவன் தருகின்ற ஓய்வும், அதனைப் பெறுவதற்கான நமது தகுதியும்

இன்றைய முதல் வாசத்தில், எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர், "கடவுள் தருகின்ற ஓய்வினை யாரும் இழந்துவிடக்கூடாது" என்று சொல்கிறார். இங்கே கடவுள் தரும் ஓய்வு என்பதை கானான் தேசத்தோடு ஒப்பிடலாம். இஸ்ரயேல் மக்கள், கடவுளோடு வாக்குவாதம் செய்தும், அவருடைய கட்டளைகளைக் கடைபிடியாமலும், கடவுளுக்குப் பிரமாணிக்கமாக இல்லாமல் இருந்து வாக்களிக்கப்பட்ட கானான் தேசத்தை பெறாமலே போனார்கள். நாமும் அப்படிப் பெறாமல் போகக்கூடாது என்பதற்காக எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் கடவுளின் கட்டளையை கடைப்பிடித்து, அவருக்கு பிரமாணிக்கமாக இருக்கவேண்டும் என்று சொல்கிறார்.

சிந்தனை

வாக்களிக்கப்பட்ட கானான் தேசத்தை/ ஓய்வை கடவுளின் கட்டளைக் கடைபிடிக்காமல் இஸ்ரயேல் மக்கள் இருந்தது போன்று நாம் இல்லாமல், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்வோம். அதன்வழியாக அவர் தருகின்ற ஓய்வை, இளைப்பாற்றியை, அருளை நிறைவாய் பெறுவோம்.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மாற்கு 2: 1-12

பாவங்களை மன்னிக்கும் இயேசு

நிகழ்வு

பெரியவர் ஒருவர் கடைத்தெருவுக்குச் சென்றிருந்தார். அவர் அங்கு சென்றிருந்த நேரம், சாலையோரத்தில் நரிக்குறவர் ஒருவர் குரங்குக் குட்டியை வைத்து வித்தை காட்டிக் கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே நின்றுகொண்டிருந்த மக்களும் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

அப்போது வேகமாக வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் குரங்குக்குட்டியை வைத்து வித்தை காட்டிக்கொண்டிருந்த நரிக்குறவர்மீது ஏற, அவர் அந்த இடத்திலேயே இறந்துபோனார். அவரோடு இருந்த குரங்குக்குட்டி மட்டும் எப்படியோ சிறு காயங்களுடன் உயிர் தப்பியது. செய்தி அறிந்து காவல்துறையினர் விரைவாக அங்கு வந்து, அடிப்பட்டு செத்துக் கிடந்த நரிக்குறவரை ஓர் ஆம்புலன்சில் ஏற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்; போக்குவரத்தையும் சரிசெய்து, சிறிதுநேரத்திலேயே அந்த இடத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவந்தார்கள்.

காரில் அடிபட்ட குரங்குக்குட்டி மட்டும் யாராலும் கவனிக்கப்படாமல் ஓர் ஓரத்தில் முனங்கிக்கொண்டே கிடந்தது. அதைக் கவனித்த பெரியவர் தன்னுடைய வீட்டிற்குத் தூக்கிச் சென்று வைத்தியம் பார்த்தார். ஒருசில நாட்களிலேயே அது பூரணமாகக் குணமடைந்து அவரோடு ஒட்டிக்கொண்டது. இதற்குப் பின்பு பெரியவர் அந்த குரங்குக்குட்டியை தன் குடும்பத்தில் ஓர் உறுப்பினராகவே பாராமரித்து வந்தார். இப்படியே நாட்கள் போய்க்கொண்டிருக்கும்போது, பெரியவர் எப்போதெல்லாம் அந்தக் குரங்குக் குட்டியின் வயிற்றுப் பகுதியைத் தொட்டாரோ, அப்போதெல்லாம் அது வலியால் துடிப்பதைக் கண்டார். "இந்த குரங்குக்குட்டிக்கு என்ன ஆயிற்று!, ஏன் இதனுடைய வயிற்றுப் பகுதியை நாம் தொடுகிற போதெல்லாம் வலியால் துடிக்கின்றது" என்று அதனுடைய வயிற்றுப் பகுதியைத் தடவிப் பார்த்தார்.

அப்போது ஒரு கயிறானது அதனுடைய வயிற்றுப் பகுதியில் இறுகக் கட்டப்பட்டிருப்பதைக் கண்டார். "இந்த குரங்குக் குட்டி இத்தனை நாளும் வலியால் துடித்ததற்கு முன்பு இதனுடைய வயிற்றில் கட்டப்பட்டிருந்த இந்தக் கயிறுதான் காரணமோ" என்று அதனை அறுத்துப் போட்டார். அன்றிலிருந்து அது மிகவும் சந்தோசமாகவும் சுதந்திரமாகவும் அலைந்தது.

எப்படி அந்த குரங்குக்குட்டியின் வயிற்றில் கட்டப்பட்டிருந்த கயிறு அறுக்கப்பட்டதும், அது மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் அலைந்தோ, அது போன்று நம்முடைய பாவங்களை இறைவன் மன்னிக்கின்றபோது நாம் பாவத்திலிருந்து சுதந்திரம் அல்லது விடுதலை பெற்ற மக்களாக மாறுவோம் என்பது உண்மை.

முடக்குவாதமுற்றவரைச் சுமந்து வந்த நால்வர்

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கப்பர்நாகுமில் உள்ள வீட்டில் போதித்துகொண்டிருக்கிறார். அப்போது அவர் இருந்த வீட்டின் கூரையைப் பிய்த்து, முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலில் வைத்து நால்வர் கீழே இறக்குகிறார்கள். இந்த நான்குபேரும் நமக்கு ஒருசில செய்திகளை விட்டுச் செல்கின்றார்கள்.

முதலாவதாக, நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்" (மாற் 1:17) என்று இயேசு பேதுருவுக்கும் அந்திரேயாவுக்கும் சொன்ன வார்த்தைகளுக்குச் செயல்வடிவம் கொடுப்பது போன்று, நற்செய்தியில் வருகின்ற இந்த நான்கு பேரும் முடக்குக்வாதமுற்ற மனிதரை இயேசுவிடம் கொண்டு வருகின்றார்கள். இரண்டாவதாக, இந்த நால்வரும் "இயேசுவைச் சுற்றி மக்கள்கூட்டம் அதிகமாக இருக்கின்றது, அதனால் அவர் அருகே நாம் செல்வது கடினம்" என்று மனமுடைந்து போகாமல், நம்பிக்கையோடு இயேசுவிடம் முடக்குவாதவற்றரைக் கொண்டு செல்கின்றார்கள். மூன்றாவதாக, அந்த நால்வரும் கூட்டாகச் செயல்படுகின்றார்கள்.

இவற்றையெல்லாம் காணும் இயேசு, முடக்குவாதமுற்ற மனிதருக்கு நலம்தருகிறார்.

பாவங்களை மன்னித்து நலமளிக்கும் இயேசு

முடக்குவாதமுற்ற மனிதரை நால்வரும் கூரையைப் பிய்த்து இறக்குவதைப் பார்த்த இயேசு, அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம், "உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்கின்றார். இதைக் கேட்டு அங்கிருந்த மறைநூல் அறிஞர்கள், "இவன் கடவுளைப் பழிக்கிறான். கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்" என்று தங்களுடைய உள்ளத்தில் எண்ணத் தொடங்குகிறார்கள்.

இங்கே இரண்டு கேள்விகள் நம்முன்னால் எழும். ஒன்று. முடக்குவாதமுற்றரைக் குணப்படுத்திய இயேசு, நேரடியாகக் குணப்படுத்தியிருக்கலாமே? ஏன் பாவங்களை மன்னித்துக் குணப்படுத்தவேண்டும்? என்பது. இரண்டு. பாவங்களை மன்னிக்க இயேசுவுக்கு அதிகாரம் உண்டா? இல்லையா? என்பது.

மனிதர்களுக்கு வரக்கூடிய நோய்கள் பாவத்தின் விளைவாகவே வருகின்றன என்ற நம்பிக்கை யூதர்களிடத்தில் இருந்து வந்தது. (யோவா 9:1-3). இதனால் இயேசு அவர்களுடைய போக்கிலே, புரிதலே போய் முடக்குக்வாதமுற்ற மனிதரின் பாவங்களை மன்னித்து அவருக்கு நலம் தருகின்றார். அடுத்ததாக இயேசு இறைமகன், அவருக்கு எல்லா அதிகாரமும் உண்டு (மத் 28:18). அதனால் அவருக்கு பாவங்களை மன்னிப்பதற்கான அதிகாரரும் உண்டு. இதனைப் புரிந்துகொள்ளலாம் மறைநூல் அறிஞர்கள் இருந்தது வேடிக்கையானது.

சிந்தனை

நாம் செய்யும் பாவம் நம்மைக் கடவுளோடும் அயராலோடும் ஏன் நம்மோடும் நல்லுறவில் இருக்கவிடாமல் செய்துகொண்டே இருக்கும். ஆகவே, நாம் நம்முடைய குற்றங்களை உணர்ந்து, மனமாறி நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!