Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   17  ஜனவரி 2019  
                                                  முதல் வாரம் - வியாழன்
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
 ஒவ்வொரு நாளும் ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுங்கள்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 3: 7-14

சகோதரர் சகோதரிகளே, தூய ஆவியார் கூறுவது: "இன்று நீங்கள் அவரது குரலைக் கேட்பீர்களென்றால், பாலை நிலத்தில் சோதனை நாளன்று கிளர்ச்சியின் போது இருந்ததுபோல, உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். அங்கே உங்கள் மூதாதையர் நாற்பது ஆண்டுகள் என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர்.

எனவே, அத்தலைமுறையினர் மீது வெறுப்புக்கொண்டு, "எப்போதும் இவர்களது உள்ளம் தவறுகிறது; என் வழிகளை இவர்கள் அறியாதவர்கள்; எனவே நான் சினமுற்று, "நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள்" என்று ஆணையிட்டுக் கூறினேன்' என்றார் கடவுள்."

அன்பர்களே, நம்பிக்கை கொள்ளாத தீய உள்ளம், வாழும் கடவுளை விட்டு விலகும். இத்தகைய தீய உள்ளம் உங்களுள் எவருக்கும் இராதபடி பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுள் எவரும் பாவத்தால் ஏமாற்றப்பட்டு, கடின உள்ளத்தினர் ஆகாதவாறு, ஒவ்வொரு நாளும் "இன்றே" என எண்ணி, நாள்தோறும் ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுங்கள்.

தொடக்கத்தில் நாம் கொண்டிருந்த திட நம்பிக்கையை இறுதிவரை உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தால் நாமும் கிறிஸ்துவின் பங்காளிகளாவோம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா: 95: 6-7a. 7b-9. 10-11 (பல்லவி: 7, 8 காண்க)
=================================================================================
பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்கள்; ஆண்டவர் குரலுக்குச் செவிசாயுங்கள்.

6 வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். 7ய அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக் காக்கும் ஆடுகள். பல்லவி

7b இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! 8 அன்று மெரிபாவிலும், பாலைநிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். 9 அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். பல்லவி

10 நாற்பது ஆண்டளவாய் அந்தத் தலைமுறை எனக்கு வெறுப்பூட்டியதால், நான் உரைத்தது: "அவர்கள் உறுதியற்ற உள்ளம் கொண்ட மக்கள்; என் வழிகளை அறியாதவர்கள்'. 11 எனவே, நான் சினமுற்று, "நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள்' என்று ஆணையிட்டுக் கூறினேன். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 04: 23

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 தொழுநோய் அவரை விட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 01: 40-45

ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, "நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" என்று முழந்தாள்படியிட்டு வேண்டினார்.

இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், "நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!" என்றார்.

உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.

பிறகு அவரிடம், "இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்" என்று மிகக் கண்டிப்பாகக் கூறி உடனடியாக அவரை அனுப்பிவிட்டார்.

ஆனால் அவர் புறப்பட்டுச் சென்று இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார். அதனால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை; வெளியே தனிமையான இடங்களில் தங்கி வந்தார். எனினும் மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் அவரிடம் வந்துகொண்டிருந்தார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

பிரபலியமான மனிதர்கள் சூழ்நிலை கைதிகளைப் போலவே வாழ்கின்றார்கள்.

ஆனால் இன்னும் மனிதர்கள் பிரபலியமாகத் தான் உழைக்கிறார்கள்.

இது என்ன முரண்பாடு.

சூழ்நிலை கைதி போன்ற வாழ்வினில் என்ன சுகம்?

மனதினிலே ஏற்படுகின்ற அற்ப சுகம் தான் மனிதனை அடிமைப்படுத்துகின்றது. பணி செய்யும் வாய்ப்பு அற்றுப் போகின்றது. உழைப்பு ஒருவிதத்தில் இல்லாது போகின்றது. சுதந்திரமில்லாத நிலை. தனிச்சு செயல்பட இயலாத நிலை. மனதினிலே ஒரு தனிமையும், வெறுமையும் தான். இதிலே சிலருக்கு ஆனந்தம். இந்த ஆனந்தம் உண்மையானதா? விளையாட்டு வீரர்களையும், அரசியல்வாதிகளையும், சின்னத்திரை, வெள்ளைத் திரை நட்சத்திரங்களையும் கேட்டால் தெரியும் உண்மை.

பிரபலியமாவதா மனித வாழ்வின் நோக்கம்?


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 எபிரேயர் 03:07-14

ஆண்டவருக்கு செவிமடுப்போம், அதனால் வாழ்வடைவோம்.


நிகழ்வு

கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் கடலில் சென்றுகொண்டிருந்த ஒரு பாய்மரக் கப்பல், போதிய காற்று இல்லாமல் தென் அமெரிக்காவிற்கு அருகே அப்படியே நின்றது. இதனால் அந்த கப்பலை ஓட்டிச்சென்ற மாலுமியும் பயணிகளும் செய்வதறியாது திகைத்தார்கள். நீண்ட நாட்கள் கடலில் காற்று வீசாமலே இருந்ததால், பயணிகள் தங்களோடு கொண்டுசென்ற உணவும் தண்ணீரும் தீர்ந்துபோக பசியாலும் தாகத்தாலும் வாடத் தொடங்கினார்கள். பயணிகளில் ஒருசிலர் 'பசியைக்கூட அடிக்கிக் கொள்ளலாம், தாகத்திற்கு உப்புக் கரிக்கும் இந்த கடல்தண்ணீரையா குடிப்பது?' என்று முணுமுணுத் தொடங்கினார்கள்.

இந்நிலையில் அந்த பாய்மரக் கப்பல் இருந்த பகுதி வழியாக பெரிய கப்பல் ஒன்று வந்தது. அதைப் பார்த்துவிட்டு, பாய்மரக் கப்பலில் இருந்த மாலுமி, பெரிய கப்பலில் இருந்த தளபதியைப் பார்த்து, "குடிக்க நல்ல தண்ணீர் இருக்கின்றதா? இங்கே நல்ல தண்ணீர் இல்லாமல் நாங்கள் செத்துக் கொண்டிருக்கின்றோம்" என்றார். அதற்கு பெரிய கப்பலில் இருந்த தளபதி, "உங்களிடத்தில் ஏதாவது ஒரு வாளி இருந்தால், அப்படியே அதைக் கீழே இறக்கி, நல்ல தண்ணீரைப் பிடித்துக் கொள்ளுங்கள்" என்றார். பாய்மரக் கப்பலில் இருந்த மாலுமியோ, தான் சொல்வது பெரிய கப்பலில் இருக்கும் தளபதிக்குப் புரியவில்லை போலும் என்று மீண்டுமாக அதையே அவரிடத்தில் திருப்பிக் கேட்டார். அப்போதும் கப்பலில் இருந்த தளபதி அதையேதான் சொன்னார்.

இதைக் கேட்டு கடுப்பான பாய்மரக் கப்பலில் இருந்த மாலுமி, "என்ன இவன், நாம் ஒன்று கேட்க இவன் ஒன்று சொல்கிறானே" என்று மாலுமி கப்பலில் இருந்த தளபதியை திட்டத் தொடங்கினான். இதைப் பாய்மரக் கப்பலிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு பயணி அங்கு இருந்த ஒரு வாளியை எடுத்து, அதைக் கீழே கொண்டுசென்று, தண்ணீரை மொண்டு சுவைத்துப்பார்த்தான். அவனுக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. ஏனெனில் கப்பலில் இருந்த தளபதி சொன்னதுபோன்றே தண்ணீர் நல்ல தண்ணீராக இருந்தது.
கடலுக்கு நடுவில் எப்படி நல்ல தண்ணீர் கிடைத்தது என்று நாம் ஆச்சரியப்படலாம். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஏனெனில் அவர்கள் இருந்த பகுதி, அமேசான் ஆறு கடலில் முந்நூறு கிலோமீட்டருக்கு மேல் கலக்கக்கூடிய பகுதி.

நல்ல தண்ணீருக்கு மேலே இருந்துகொண்டு, நல்ல தண்ணீருக்கு அலைந்த அந்த பணிகளைப் போல் இறைவார்த்தை நமக்கு மிக அருகில், வாயில், இதயத்தில் இருந்தபோதும் (இச 30:14) அதன்படி நடக்காமலே இருப்பது மிகவும் வேதனையான ஒரு விஷயம். இத்தகைய சூழ்நிலையில் நாம் இறைவனின் வார்த்தையைக் கேட்டு, அதன்படி நடக்க இன்றைய முதல் வாசகமானது நமக்கு அழைப்புத் தருகின்றது. நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.

நம் வாழ்வும் தாழ்வும் நாம் இறைவார்த்தையைக் கடைபிடிப்பதைப் பொறுத்தே!

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தில் எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசத்தில் அதன் ஆசிரியர், "இன்று நீங்கள் அவரது குரலைக் கேட்பீர்களானால்" என்று தொடங்குகின்றார். இவ்வார்த்தையை நாம் திருப்பாடல் 95 வது அதிகாரம், 7 லிருந்து 11 வரை உள்ள இறைவார்த்தைப் பகுதியோடு இணைத்துச் சிந்தித்துப் பார்த்தால் இன்னும் அர்த்தம் விளங்கும். அங்கு நாம் வாசிக்கின்றோம், "இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்" என்று. இஸ்ரேயல் மக்கள் எகிப்து நாட்டில் அடிமைகளாக இருந்து, பலவாறு விதமான வேதனையை அனுபவித்து வந்தார்கள். இதைக் கண்டு இரக்கம்கொண்ட ஆண்டவராகிய கடவுள் அவர்கள்மீது இரக்கம்கொண்டு, அவர்களை பாலும் தேனும் பொழியக்கூடிய கானான்தேசத்திற்கு இட்டுச் சென்றார்.

ஆனால், இஸ்ரயேல் மக்களோ போகிற வழியிலே மெரிபாவிலும் மாசாவிலும் கடவுளுக்கு எதிராக முணுமுணுக்கத் தொடங்கினார்கள். இதனால் கடவுள் அவர்களிடம், "நான் அளிக்கும் இறைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள்" என்கிறார். அதுபோலவே அவர்களுக்கு நடந்தது.

'என்மீது அன்புகொள்பவர் என் கட்டளைகளைக் கடைபிடிப்பர்' (யோவா 14:15) என்று இயேசு கூறுவதாக யோவான் நற்செய்தியாளர் கூறுவார். இஸ்ரயேல் மக்களுக்கு உண்மையான கடவுள்மீது அன்பு இல்லை, அதனாலேயே அவருடைய கட்டளையைக் கடைபிடிக்கவில்லை. அவர்கள் இறைவனுடைய கட்டளையைக் கடைபிடிக்காததால், இறைவனிடமிருந்து அருள் பெறாமலே போனார்கள்.

சிந்தனை

என் வார்த்தையைக் கேட்டு, இதன்படி நடக்கிற எவரும் பாறைமீது தன் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார் என்பார் இயேசு. நாம் இறைவனின் வார்த்தையைக் கேட்டு நடப்போம். அதன்வழியாக மண்ணகத்தில் வாழ்வாங்கு வாழ்வோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மாற்கு 01:40-45

பரிவுள்ள இயேசு

நிகழ்வு

கேரள மாநிலம், புனலூர் மாவட்டத்திலுள்ள ஒரு மலைக்கிராமம் முக்கூடு. இக்கிராமத்தில் பிறந்தவர்தான் 'தொழுநோயாளர்களின் தோழி' என அறியப்படுகின்ற அருட்சகோதரி ஜெயின் மேரி என்பவர்.

தன்னுடைய பெற்றோருக்கு பதினான்கு பிள்ளைகளில் (ஏழு சகோதரர்கள், ஆறு சகோதரிகள் இவருடன் பிறந்தவர்கள்) ஒருவராகப் பிறந்த ஜெயின் மேரிக்கு பத்தொன்பது வயது நடக்கும்போது அருட்சகோதரியாக மாறவேண்டும் என்றொரு எண்ணம் ஏற்பட்டது. அதன்படி இவர் கும்பகோணத்திற்கு வந்து பயிற்சிகள் பெற்று, அருட்சகோதரியாக மாறினார். இதற்குப் பின்பு செவிலியருக்கான படிப்பைப் படித்து, ஏழை எளிய மக்களுக்கு மத்தியில் மருத்துவப்பணி செய்ய விரும்பினார்.

அதன்படி இவர் செவிலியருக்கான படிப்பைப் படித்து முடித்துவிட்டு, ஒருநாள் கும்பகோணத்தில் இருக்கக்கூடிய 'தொழுநோயாளர் மறுவாழ்வு மையத்திற்கு' வந்தபோது, அங்கே ஆயிரத்தும் மேற்பட்ட தொழுநோயாளர்கள் இருக்கக் கண்டார். அந்நேரத்திலே, 'நாம் இந்த மக்களுக்கு மத்தியில்தான் பணிசெய்யவேண்டும்' என்று முடிவு கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக, அங்கே இருக்கின்ற தொழுநோயாளர்களுக்கு மத்தியில் அன்புப் பணி செய்துவருகின்றார் அருட்சகோதரி ஜெயின் மேரி.

உடல் முழுவதும் இருக்கக்கூடிய புண்களிலிருந்து சீழ்வடிந்து கொண்டிருக்கும் தொழுநோயாளர்களுக்கு மத்தியில் பணிசெய்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஆனால் அருட்சகோதரி ஜெயின் மேரி, அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், தொழுநோயாளர்களைத் தன் குடும்பத்தில் உள்ள ஒருவரைப் போன்று பராமரித்து, அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்துதந்து, எங்கே தான் அந்த இடத்தைவிட்டுப் போய்விட்டால், தொழுநோயாளர்களை யாரும் பராமரிக்காமல் போய்விடுவார்களோ என்ற அக்கறையோடு அவர்களுடன் இருக்கும் அருட்சகோதரி ஜெயின் மேரி, இயேசுவைப் போன்று பரிவுள்ளம் கொண்டவர் என்று சொன்னால் அது மிகையாகாது.

தன்னைக் குணப்படுத்துவாரா என்ற தயக்கத்தோடு வரும் தொழுநோயாளர்

நற்செய்தி வாசகத்தில் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, "நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" என்று முழந்தாள் படியிட்டு வேண்டுகின்றார். இந்தத் தொழுநோயாளிக்கு இயேசுவால் தன்னைக் குணமாக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. இருந்தாலும் இயேசுவின் விருப்பம் எப்படி இருக்கின்றதோ என்பதை எண்ணியவராய், "நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" என்கின்றார். இறைவனுடைய விரும்பம், யாரும் அழிந்துபோகக்கூடாது, மாறாக எல்லாரும் வாழ்வும் மீட்பும் பெறவேண்டும் என்பதாகும் (1 திமொ 2:4, 2 பேது 3:9). இதனாலேயே இயேசு அந்தத் தொழுநோயாளரிடம், "நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக" என்று சொல்லி, அவரிடமிருந்த தொழுநோயைப் போக்குகின்றார்.

தொழுநோயாளரிடம் பரிவோடு நடந்துகொண்ட இயேசு

யூத சமூகத்தில் தொழுநோயாளர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது. தீண்டத்தகாதவர்களாவும் பாவிகளாகவும் செத்தவர்களுக்குச் சம்மானவர்களாகவும் கருதப்பட்ட தொழுநோயாளர்கள் மக்களுடைய பார்வையில் படாதவாறு இருக்கவேண்டும். அப்படிப்பட்ட நிலையில் இருந்த ஒரு தொழுநோயாளர் இயேசுவிடம் தன்னைக் குணப்படுத்த வேண்டும் என்று வருகின்றார். இயேசுவும் அவர்மீது பரிவுகொண்டு, அவரைத் தொட்டுக் குணப்படுத்துகின்றார். தொழுநோயாளரைத் தொடுவதால் 'தீட்டவோம்' (?) என்றெல்லாம் இயேசு நினைத்துக் கொண்டிருக்காமல், அந்த மனிதர் அத்தனை காலமும் அனுபவித்துக் கொண்டிருந்த உடல், மன வேதனைகளை உணர்ந்து அவரைக் குணப்படுத்துகின்றார். இவ்வாறு இயேசு தன்னை பரிவுள்ளம் கொண்டவராக நிரூபித்துக்காட்டுகின்றார்.

இந்த இடத்தில் மட்டுமல்லாது பல இடங்களில் (மாற் 6:34; 8:2; 9:22) இயேசு பரிவுவோடு நடந்துகொண்டார் என்பதை மாற்கு நற்செய்தியாளர் மிக அழகாக எடுத்துரைக்கின்றார். இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம் ஒவ்வொருவரும் அவரைப் போன்று நம்மோடு வாழக்கூடிய நோயாளிகள், ஏழைகள், அனாதைகள், கைவிடப்பட்டவர்கள் போன்றவர்களிடம் பரிவோடு நடந்துகொள்ளவேண்டும் என்பதைத்தான் இயேசு இதன்வழியாக நமக்கு எடுத்துரைக்கின்றார்.

சிந்தனை

"பெரும்பாலான மனிதர்கள் மற்றவர்களை மிகச் சிறியோராக உணர வைப்பார்கள். ஒருசிலர்தான் மற்றவர்களை உயர்ந்தவர்களாக உணர வைப்பார்கள்" என்பார் ஜி.கே. செஸ்டர்டன் என்ற அறிஞர். இவ்வார்த்தைகளை இயேசுவோடு இணைத்துச் சிந்தித்துப் பார்க்கும்போது, அவர் யாரையும் சிறியவரகவோ, இழிவானவராகவோ கருதவில்லை. மாறாக மிக உயர்ந்தவராகவும் விலை மதிப்பிற்குரியவராகவும் கருதினார் என்பது புரியும். அதனால்தான் இயேசு அவர்கள் மீது பரிவுகொண்டு, அவர்களுக்கு வேண்டியதைச் செய்தார். இயேசுவின் வழியில் நடக்கும் நாம் ஒவ்வொருவரும் அவரைப் போன்று பரிவோடு இருப்பது மிகவும் தேவையானது.

ஆகவே, இயேசுவைப் போன்று பரிவோடு நடந்துகொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
(எபி 3:7-14)

இன்றே என எண்ணி

இன்றைய நற்செய்தி வாசகப் பகுதியின் (காண். மாற் 1:40-45) ஒத்த பகுதியான லூக் 5:12-16 (தொழுநோயாளரின் நோய் நீங்குதல்)-ஐ நாம் கடந்த வார நாள்களில்தான் வாசித்து சிந்தித்தோம். எனவே, இன்றைய சிந்தனைக்காக முதல் வாசகத்தை எடுத்துக்கொள்வோம்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலை எழுதியவர் பவுல் அல்லர் என்பது பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. பவுல் இத்திருமடலின் ஆசிரியர் இல்லை என்று சொல்லப்படுவதற்கான சில சான்றுகளில் ஒன்று, 'அறிவுரைப் பகுதி.' பவுலின் திருமடல்கள் பொதுவாக, முன்னுரை-உள்ளடக்கம்-அறிவுரை என்ற அமைப்பில் இருக்கும். ஆனால், எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலில் இந்த அமைப்பு சற்றே மாறியிருக்கிறது. முன்னுரை, வாழ்த்து என எதுவும் இல்லாமல் தொடங்கும் மடல், ஒரு கருத்தியில் மற்றும் அதனைத் தொடர்ந்து அறிவுரைப் பகுதி என்ற அமைப்பைக் கொண்டுள்ளது.

'உள்ளத்தைக் கடினமாக்கிக் கொள்ளுதல்' என்னும் கருத்தியலும், அதைத் தொடர்ந்து வரும் அறிவுரைப் பகுதியும்தான் இன்றைய முதல் வாசகம்.

இம்மடலின் ஆசிரியர் தன் குழுமம் நம்பிக்கை கொண்டு வாழ வேண்டும் என விரும்புகிறார். பழைய ஏற்பாட்டில் தங்களின் பாலைநிலப் பயணத்தின்போது இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கும் அவரின் அடியாரான மோசேக்கும் எதிராகக் கிளர்ச்சி செய்கின்றனர் (காண். எண் 14:1-35). 'அக்கிளர்ச்சியின் போது அவர்கள் கொண்டிருந்த 'கடின இதயத்தை' நீங்கள் கொண்டிருக்காதீர்கள்' எனத் தன் குழுமத்திற்கு அறிவுறுத்துகின்றார் ஆசிரியர். அப்படி கடின உள்ளம் கொண்டிருப்பவர்கள் கடவுள் தரும் ஓய்வைக் கண்டடைய மாட்டார்கள் என்பதும் இவரின் கருத்து. 'ஓய்வு' என்பது 'இறப்பு' அல்லது 'மறுவாழ்வு' அல்லது 'மோட்சம்' ஆகியவற்றைக் குறிப்பது அல்ல. மாறாக, இவ்வுலகிலேயே நாம் அனுபவிக்கும் 'அமைதி,' 'நலம்' ஆகியவற்றைக் குறிப்பது.

இந்த ஓய்வைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?

கடின உள்ளம் கொண்டிராமல் கடவுளை நம்ப வேண்டும்.

இரண்டு நாள்களுக்கு முன் பேருந்தில் ஒருவரைச் சந்தித்தேன். சந்திப்பு விடைபெறும்போது கை குலுக்க கை நீட்டினேன். அவரும் கை நீட்டினார். 'உங்க கை ரொம்ப மிருதுவாக இருக்கிறது' என்றார். 'உங்க கை மேல யார் கை பட்டாலும் மிருதுவாகத்தான் தெரியும்' என்று நான் சிரித்தேன். ஏனெனில், அவருடைய கை அவ்வளவு கடினமாக இருந்தது. அதற்கு அவர் சொன்னார், 'நான் ஒரு ஓட்டுநர். அன்றாடம் கைகள் ஸ்டியரிங் என்னும் இரும்பு வளையத்தைப் பிடிப்பதால் கை மரத்துப் போய்விட்டது' என்றார். ஆக, செடி போல மிருதுவாக இருக்க வேண்டியது நாள்பட்ட பயன்பட்டால் கடினமான மரமாகிவிடுகிறது.

நாள்தோறும் நாம் செய்கின்ற செயல் நம் கைகளையே மரத்துப்போகச் செய்கின்றது. அதே நேரம், நாள்தோறும் என நினைக்கும் நாம் கடின உள்ளம் கொண்டவராகிவிடுகிறோம்.

ஆனால், மற்றொரு வித்தியாசமான அறிவுரையை இங்கு தருகிறார் ஆசிரியர்: 'ஒவ்வொரு நாளும் இன்று என எண்ணி வாழுங்கள்!'

'நாள்தோறும்' என வாழ்வதற்கும், 'இன்று' என வாழ்வதற்கும் என்ன வித்தியாசம்?

'நாள்தோறும்' என வாழும் வாழ்க்கையில் புதுமை இருக்காது. வாழ்க்கை ஒரே மாதிரி இருக்கும். அது போரடிக்கும். ஆனால், 'இன்று' ஒருநாள்தான் என வாழும் வாழ்க்கையில் புதுமை இருக்கும். இனிமை இருக்கும். இளமை இருக்கும்.

பெரியவர்கள் 'நாள்தோறும்' வாழ்கின்றனர். ஆனால், குழந்தைகளே 'இன்று ஒருநாள்' என வாழ்கின்றார்கள். ஆகையால்தான், அவர்களின் உள்ளமும் உடலும் மென்மையாக இருக்கிறது.

கடின உள்ளம் கடவுளை மட்டுமல்ல, மற்றவர்களையும் நமக்குள் அனுமதிக்காது.

ஒவ்வொருவரையும் 'இவர்' எனவும், ஒவ்வொரு பொழுதையும் 'இன்று ஒருநாள்' எனவும் எண்ணி வாழ அழைக்கிறது இன்றைய முதல் வாசகம்.

Rev. Fr. Yesu Karunanidhi
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!