Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   16  ஜனவரி 2019  
                                                  முதல் வாரம் புதன்
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
 இயேசு மக்கள் பாவங்களுக்குக் கழுவாய் ஆகும்படி எல்லாவற்றிலும் எல்லாரைப் போல் ஆகவேண்டியதாயிற்று.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 2: 14-18


ஊனும் இரத்தமும் கொண்ட பிள்ளைகளைப்போல் கிறிஸ்துவும் அதே இயல்பில் பங்கு கொண்டார். இவ்வாறு சாவின்மேல் ஆற்றல் கொண்டிருந்த அலகையைச் சாவின் வழியாகவே அழித்துவிட்டார்.

வாழ்நாள் முழுவதும் சாவு பற்றிய அச்சத்தினால் அடிமைப்பட்டிருந்தவர்களை விடுவித்தார். ஏனெனில் அவர் வானதூதருக்குத் துணை நிற்கவில்லை.

மாறாக, ஆபிரகாமின் வழிமரபினருக்கே துணை நின்றார் என்பது கண்கூடு. ஆதலின், கடவுள் பணியில் அவர் இரக்கமும் நம்பிக்கையும் உள்ள தலைமைக் குருவாயிருந்து, மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாகுமாறு எல்லாவற்றிலும் தம் சகோதரர் சகோதரிகளைப் போல் ஆகவேண்டிய தாயிற்று.

இவ்வாறு தாமே சோதனைக்கு உள்ளாகித் துன்பப்பட்டதனால் சோதிக்கப்படுவோருக்கு உதவி செய்ய அவர் வல்லவர்.



இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா: 105: 1-2. 3-4. 6-7. 8-9 (பல்லவி: 8a)
=================================================================================
பல்லவி: ஆண்டவர் தம் உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்.

அல்லது: அல்லேலூயா.

1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்! அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள். 2 அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! பல்லவி

3 அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக! 4 ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! பல்லவி

6 அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே! 7 அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித் தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. பல்லவி

8 அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்; ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார். 9 ஆபிரகாமுடன் தாம் செய்துகொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 10: 27

அல்லேலூயா, அல்லேலூயா! "என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன,'' என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 
இயேசு பல்வேறு பிணிகளால் வருந்தியவரைக் குணப்படுத்தினார்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 29-39

இயேசுவும் சீடர்களும் தொழுகைக்கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள். சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள். இயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.

மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டு வந்தார்கள். நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது.

பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார்; அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால் அவற்றை அவர் பேசவிடவில்லை.

இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்.

சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள். அவரைக் கண்டதும், "எல்லாரும் உம்மைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்'' என்றார்கள்.

அதற்கு அவர், "நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்; ஏனெனில் இதற்காகவே நான் வந்திருக்கிறேன்'' என்று சொன்னார்.

பின்பு அவர் கலிலேய நாடு முழுவதும் சென்று அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றிப் பேய்களை ஓட்டி வந்தார்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 எபிரேயர் 02:14-18

இயேசு, சோதிக்கப்படுவோருக்கு உதவிசெய்வதில் வல்லவர்!

நிகழ்வு

கிரேக்கப் புராணங்களில் சிரேன்ஸ் (Sirens) என்ற ஒருவிதமான பறவையைக் குறித்து ஒரு குறிப்பு உண்டு. அந்தப் பறவையின் தலை ஒரு பெண்ணின் தலையைப் போன்றும், அதனுடைய உடல் பறவையின் உடல் போன்றும், ஒரு பெரிய இராட்சசப் பறவை போன்று இருக்கும். இந்தப் பறவை மத்திய தரைக்கடல் பகுதிகளில் இருக்கும் பெரும் பாறைகளில் அமர்ந்துகொண்டு கானம் பாடும். இதனுடைய குரல் அவ்வளவு இனிமையாக இருக்கும். இதனால், கடலில் பயணம் செய்பவர்கள், 'இந்தக் குரல் எங்கிருந்து வருகின்றது' என்று அந்தக் குரலுக்கு மயங்கி, குரல் வந்த திசையை நோக்கி வருவார்கள். அப்படி வருபவர்களை எல்லாம் பாறையில் அமர்ந்திருக்கும் சிரேன்ஸ் பறவைகள் கொத்திக் கொத்தி தங்களுக்கு இரையாக்கிக் கொள்ளும்.

இது தெரியாமல், அந்த வழியாகப் போகிறவர்கள் எல்லாரும் சிரேன்ஸ் பறவையின் குரலுக்கு மயங்கி, அதைத் தேடிச் சென்று, அதனாலேயே கொத்தப்பட்டு இறந்துபோனார்கள். இதற்கடையில் மத்திய தரைக்கடல் வழியாகச் சென்ற ஒருசிலர் சிரேன்ஸ் பறவையைக் குறித்துக் கேள்விப்பட்டு, அதன் குரலுக்கு மயங்கிவிடாமல் இருக்க, தன்னுடைய காதுகளை அறுத்துக்கொண்டார்கள். இதனால் மற்ற கப்பல்களில் வரக்கூடியவர்கள் தங்களோடு என்ன செய்தியினை பரிமாறிக்கொள்கிறார்கள் என்று தெரியாமலே மிகவும் கஷ்டப்பட்டார்கள்.

இப்படியே ஆண்டுகள் உருண்டோடிக் கொண்டிருந்தன. இதைக் குறித்து கேள்விப்பட்ட தார்சியுஸ் என்ற மன்னர் சிரேன்ஸ் பறவைகளுக்கு முடிவுகட்ட நினைத்தான். எனவே அவன் மிகச் சிறந்த பாடகரும் கவிஞருமாகிய ஓர்பேயுசை கூட்டிக்கொண்டு மத்தியத் தரைக்கடல் வழியாகச் சென்றான். கடலில் செல்லும்போது தார்சியுஸ் மன்னர், ஓர்பேயுசை கையில் இருக்கும் யாழினை மீட்டி, பாடச் சொன்னான். ஓர்பேயுசும் மன்னனின் வார்த்தைகளுக்கு இணங்கி, கையிலில் இருந்த யாழினை எடுத்து, அற்புதமாகப் பாடத் தொடங்கினான். அவனுடைய குரல் வானமண்டலத்தில் வேகமாகப் பரவி, தொலைவில் இருந்த சிரேன்ஸ் பறவையின் செவிகளை எட்டியது. அவை 'எங்கிருந்து இந்த அற்புதமான குரல் வருகின்றது?', என்று குரல் வந்த திசையை நோக்கிப் பறந்துவந்தன. இப்படிப் பறந்துவந்த பறவைகளை எல்லாம் தார்சியுஸ் மன்னர் தன்னுடைய கையில் இருந்த வாளால் வெட்டிக் கொன்றுபோட்டான்.

பலர் சிரேன்ஸின் குரலுக்கு மயங்கி, அதனால் கொல்லப்பட்டிருக்கையில், தார்சியுஸ் மன்னர் மிகவும் முன்மதியோடு நடந்து, ஓர்பேவின் உதவியுடன் அவற்றை வீழ்த்தினான்.

தார்சியுஸ் ஓர்பேயுசின் உதவியால் சிரேன்ஸ் பறவையை வென்றதுபோன்று, நாமும்கூடிய இயேசுவின் துணையால் நம்முடைய வாழ்க்கையில் வரும் சோதனைகளை எளிதாக வெற்றி கொள்ளலாம்.

சோதிக்கப்படுவோருக்கு உதவும் இயேசு

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் அதன் ஆசிரியர், "தாமே சோதனைக்கு உள்ளாகித் துன்பப்பட்டதனால், சோதிக்கப்படுவோருக்கு உதவி செய்ய அவர் வல்லவர்" என்று எழுதுகின்றார். இதையே நாம் நம்முடைய இன்றைய சிந்தனைக்காக எடுத்துக்கொள்வோம்.

இயேசு இந்த மண்ணுலகில் வாழ்ந்த காலத்தில் பாவம் தவிர மற்ற அனைத்திலும் சாதாரண ஒரு மனிதரைப் போன்று வாழ்ந்தார். அவர் நம்மைப் போன்றே துன்பங்களை அனுபவித்தார்; நம்மைப் போன்றே புறக்கணிக்கப்பட்டார்; நம்மைப் போன்றே சோதிக்கப்பட்டார். நம்மைப் போன்றே பசி தாகமுற்றார் (யோவா 4:6-8). அப்படிப்பட்ட இயேசு நாம் சோதிக்கப்படும்போது, நமக்கு உதவி செய்பவராக இருக்கின்றார். அதைத்தான் எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் எடுத்துச் சொல்கின்றார்.

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ஏலி என்ற தலைமைக் குரு இருந்தார் (1 சாமு 2:27-34). அவர் கடவுளுடைய வார்த்தையில் நம்பிக்கையில்லாமல், சகமனிதர்கள் மீது இரக்கமில்லாமல் இருந்தார். ஆனால் ஆண்டவர் இயேசு அப்படியில்லை. அவர் இரக்கமும் நம்பிக்கையும் கொண்ட தலைமைக்குருவாகவும், மக்களின் நிலைகண்டு இரங்குகின்ற ஒருவராகவும் இருக்கின்றார். அதனால்தான் நம்முடைய சோதனை வேளையிலும் நமக்கு உதவி செய்ய வருகின்றவராக இருக்கின்றார். இப்படிப்பட்ட ஒரு தலைமைக் குருவை நாம் பெற்றது நமது பாக்கியம் என்றாலும், அவரைப் போன்று சோதனையில் விழுந்துவிடாது, சோதனைகளை வென்று வருவதுதான் சிறப்பானது.

சிந்தனை

இயேசு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரங்கி, நம்முடைய வாழ்வில் நாம் சந்திக்கக்கூடிய சோதனைகளை வெற்றிகொள்வதற்கு துணையாக இருக்கின்றார். நாமும் வலுவற்றவர்களின்மீது இரங்கி, அவர்கள் தன்னுடைய சோதனைகளை வெற்றிகொள்வதற்கு நாம் நம்மாலான உதவிகளைச் செய்வது சிறப்பானது.

ஆகவே, இயேசுவைப் போன்று வலுவற்றவர்கள்மீது இரங்கும் உள்ளத்தினராய் வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மாற்கு 01:29-39

இயேசுவை நம் இல்லத்திற்கு வரவேற்போம்!

நிகழ்வு

பரம ஏழை ஒருவன் இருந்தான். அவனுக்கு தன் நாட்டு அரசரை தனது இல்லத்திற்கு அழைத்து வந்து, விருந்து கொடுக்கவேண்டும் என்று நீண்டநாள் ஆசை. ஆனால், அவனிடத்தில் போதுமான வசதியில்லாததால் அவன் தயங்கியவாறே நின்றான். அப்படியிருக்கிற வேளையில் ஒருநாள் அவன் தன்னுடைய உள்ளத்தில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, அரசரைச் சென்று சந்தித்து, தன்னுடைய விருப்பத்தை அவரிடத்தில் எடுத்துச் சொன்னான். அரசரும் மிகவும் மகிழ்ச்சியோடு ஒரு குறிப்பிட்ட நாளில் அவனுடைய வீட்டிற்கு வருவதாகச் சொன்னார்.

இதைக் கேட்டு அந்த ஏழைக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடினாலும், இன்னொரு பக்கம், 'அரசர் வீட்டிற்கு வருகின்றபோது அவரைத் தரையிலா உட்கார வைப்பது? நல்லதொரு இருக்கையும் கட்டிலும் வேண்டுமல்லவா!... அறுசுவை உணவு கொடுக்க போதிய பணம்வேண்டும் அல்லவா!... அவரை வரவேற்க பூச்செண்டுகளும் மேளதாளங்கள் வேண்டும்தானே!... இவற்றுக்கெல்லாம் நான் எங்கே போவேன்' என்று தீவிரமாக யோசிக்கத் தொடங்கினான். இப்படி அவன் யோசித்துக்கொண்டிருக்கும்போதே, முன்பின் அறிமுகமில்லாத ஒருவர் அழகு வேலைப்பாடுகள் நிறைந்த இருக்கையும் கட்டிலும் தரை விரிப்புகளும் பூச்செண்டுகளும் போதுமான பணமும் அவனிடம் கொண்டு வந்து கொடுத்தார்.

அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. "நான் என்னென்ன வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேனோ, அவற்றையெல்லாம் கொண்டுவந்து தருகிறீர்கள், உண்மையில் நீங்கள் யார்?" என்று கேட்டான் அவன். அதற்கு அந்த புதிய ஆள், "அதுவெல்லாம் இருக்கட்டும், நேரம் வரும்போது உங்களுக்குத் தானாகவே விளங்கும்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பிப் போனார்.

அந்த ஏழையோ புதிய ஆள் கொண்டுவந்த எல்லாப் பொருட்களையும் ஆங்காங்கே எடுத்துவைத்து வீட்டை அழகுபடுத்தி, அறுசுவை உணவு தயாரித்துவைத்து, மேளதாளங்களோடு அரசரை வரவேற்கத் தயாரானான். மாலை வேளையில் அரசர் அவனுடைய வீட்டிற்கு வந்தார். அவரை இன்முகத்தோடு வரவேற்ற அவன், அவருக்கு அறுசுவை உணவு கொடுத்து அவரை உபசரித்தான். பின்னர் அவன் அரசரிடம், "அரசே! இந்த ஏழை என்னுடைய அழைப்பை ஏற்று, நீங்கள் என்னுடைய வீட்டிற்கு வருகிறீர்கள் என்று சொன்னதும், உங்களைக் கவனிப்பதற்கான எல்லாவிதமான ஏற்பாடுகளையும் செய்ய பணத்திற்கு என்ன செய்வது என்று நான் குழம்பிக்கொண்டிருந்தேன். அப்போது முன்பின் அறிமுகமில்லாத ஒருவர் எனக்குத் தேவையான பொருட்களும் போதுமான பணமும் தந்துவிட்டுப் போனார். அவருடைய தயவில்தான் என்னால் இவற்றையெல்லாம் செய்ய முடிந்தது" என்றார்.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த அரசர், "நீ என்னை உன்னுடைய வீட்டிற்கு வரவேற்பதில் காட்டுக்கின்ற ஆர்வத்தையும் உன்னுடைய வறிய நிலையையும் அறிந்தேன். அதனால் நான் ஒரு ஆளை அனுப்பி, உனக்குத் தேவையான பொருட்களைத் தனது உதவினேன். மேலும் உன்னுடைய நல்ல மனசுக்காக இந்தப் பொற்காசுகளை வைத்துக்கொள்" என்று சொல்லிவிட்டு அவனிடம் பொற்காசுகளைக் கொடுத்துவிட்டு விடைபெற்றுச் சென்றார் அரசர்.

நல்மனதோடு அரசனை தன் இல்லத்திற்கு வரவழைத்து உபசரித்ததால், அரசன் எப்படி அந்த ஏழைகளுக்கு பொற்காசுகள் தந்து, அவனுடைய வாழ்வினை வளம்பெறச் செய்தாரே, அதுபோன்று நாம் இறைவனை நம் உள்ளத்திற்கு/ இல்லத்திற்கு அழைத்து குடியமர்த்தினால், அவரிடமிருந்து ஏராளமான ஆசிர்வாதங்கள் பெறுவது உறுதி.

இயேசுவை வீட்டிற்கு அழைத்த பேதுரு, அந்திரேயா

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவரிடமிருந்து அத்தீய ஆவியை ஒட்டியபின்பு, யோவான் மற்றும் யாக்கோபுவுடன் பேதுரு, அந்திரேயாவின் விட்டிற்குள் செல்கின்றார் அல்லது அவர்களுடைய வீட்டில் வரவேற்கப்படுகின்றார். அங்கு சீமோன் பேதுருவினுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடப்பது குறித்து சொல்லப்படுகின்றார். உடனே இயேசு அவருடைய கையைப் பிடித்துத் தூக்க, காய்ச்சல் அவரை விட்டு நீங்குகின்றது. உடனே அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்யத் தொடங்குகின்றார்.

சீமோன் மற்றும் அந்திரேயாவின் வீட்டிற்குள் இயேசுவின் வருகை நிகழ்ந்தது, காய்ச்சலாய்க் கிடந்த சீமோன் மாமியாருக்கு குணம் கிடைக்கக் காரணமாக இருக்கின்றது. இங்கே இன்னொரு செய்தியை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். காய்ச்சாலாய்க் கிடந்து குணம்பெறுகின்ற ஒருவர், அதிலிருந்து விரைவிலே மீண்டுவர முடியாது. எப்படியும் ஓரிரு நாட்களாவது பிடிக்கும். ஆனால், நற்செய்தியில் இயேசு சீமோன் பேதுருவின் மாமியாரைக் காய்ச்சலிலிருந்து குணமாக்கியவுடன், உடனே அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்யத் தொடங்கிவிடுகின்றார். இதிலிருந்து இயேசு அளிக்கின்ற குணம் முழுமையானது, வல்லமை நிறைந்தது என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

ஆகையால், இயேசுவை நம்முடைய உள்ளத்திலும் இல்லத்திலும் அழைக்கின்றபோது, இதுபோன்ற நன்மைகளை நாம் அதிகமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்று உறுதியாகச் சொல்லலாம்.

சிந்தனை

"இதோ, நான் கதவருகில் நின்றுகொண்டு, தட்டிக்கொண்டிருக்கின்றேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்" என்பார் இயேசு (திவெ 3:20). ஆம், நம் ஆண்டவர் இயேசு நம்மோடு விருந்துண்ண, நமக்கு ஆசிர் வழங்க ஆவலாகக் காத்திருக்கின்றார். ஆகவே, அவரை நமது உள்ளத்தில், இல்லத்தில் வரவேற்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!