Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   15  ஜனவரி 2019  
                                                  பொதுக்காலம் முதல் வாரம்
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
 மீட்பைத் தொடங்கி வழிநடத்துபவரைத் துன்பங்கள் மூலம் நிறைவுள்ளவராக்கியது தகுதியே.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் (2: 5-12)

சகோதரர் சகோதரிகளே, வரவிருக்கும் உலகு பற்றிப் பேசுகிறோம். கடவுள் அதனை வானதூதரின் அதிகாரத்திற்குப் பணியச் செய்யவில்லை. இதற்குச் சான்றாக மறைநூலில் ஓரிடத்தில் சொல்லப்பட்டுள்ளது இதுவே:"மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒரு பொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? ஆயினும் நீர் அவர்களை வானதூதரைவிடச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்; மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர். உமது கை படைத்தவற்றுக்கு மேலாக அவர்களை நியமித்தீர். எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர்." அனைத்தையும் மனிதருக்கு அடிபணியச் செய்தார் என்பதால், எதையும் பணியாதிருக்க விட்டுவிடவில்லை எனலாம். எனினும், அனைத்தும் மனிதருக்கு இன்னும் அடிபணியக் காணோம். நாம் காண்பதோ சிறிது காலம் வானதூதரை விடச் சற்றுத் தாழ்ந்தவராக்கப்பட்ட இயேசுவையே. இவர் துன்புற்று இறந்ததால், மாட்சியும் மாண்பும் இவருக்கு முடியாகச் சூட்டப்பட்டதைக் காண்கிறோம். இவ்வாறு கடவுளின் அருளால் அனைவருடைய நலனுக்காகவும் இவர் சாவுக்கு உட்படவேண்டியிருந்தது. கடவுள் எல்லாவற்றையும் தமக்கென்று தாமே உண்டாக்கினார். அவர், மக்கள் பலரை மாட்சியில் பங்குகொள்ள அழைத்துச் செல்ல விரும்பிய போது, அவர்களது மீட்பைத் தொடங்கி வழிநடத்துபவரைத் துன்பங்கள் மூலம் நிறைவுள்ளவராக்கினார். இது ஏற்ற செயலே. தூய்மையாக்குகிறவர், தூய்மையாக்கப்படுவோர் அனைவருக்கும் உயிர்முதல் ஒன்றே. இதனால் இயேசு இவர்களைச் சகோதரர் சகோதரிகள் என்று அழைக்க வெட்கப்படவில்லை."உமது பெயரை என் சகோதரர் சகோதரிகளுக்கு அறிவிப்பேன்; சபை நடுவே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்" என்று கூறியுள்ளார் அன்றோ!


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் -திபா: (8: 1,4. 5-6. 6-8)
=================================================================================
உமது கை படைத்தவற்றை மனிதர் ஆளும்படி செய்துள்ளீர்.

ஆண்டவரே! எங்கள் தலைவரே! உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது!
4 மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒரு பொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்?
-பல்லவி

5 அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்; மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர்.
6ய உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்.
-பல்லவி

6b எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர்.
7 ஆடுமாடுகள், எல்லா வகையான காட்டு விலங்குகள்,
8 வானத்துப் பறவைகள், கடல் மீன்கள், ஆழ்கடலில் நீந்திச் செல்லும் உயிரினங்கள் அனைத்தையும் அவர்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர்.
-பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
கடவுளின் வார்த்தையை நீங்கள் எங்களிடமிருந்து கேட்டபோது அதை மனித வார்த்தையாக அல்ல, கடவுளின் வார்த்தையாகவே ஏற்றுக்கொண்டீர்கள்

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
புனித மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (1: 21-28)

இயேசுவும் சீடர்களும் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள். ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார். அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார். அப்போது அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார். அவரைப் பிடித்திருந்த ஆவி, "நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்" என்று கத்தியது."வாயை மூடு; இவரை விட்டு வெளியே போ" என்று இயேசு அதனை அதட்டினார். அப்பொழுது அத்தீய ஆவி அம்மனிதருக்கு வலிப்பு உண்டாக்கிப் பெருங்கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று. அவர்கள் அனைவரும் திகைப்புற்று,"இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!" என்று தங்களிடையே பேசிக்கொண்டனர். அவரைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 எபிரேயர் 2: 5-12

துன்பங்களைத் தூங்குவோருக்கே மணிமகுடம் உண்டு

நிகழ்வு

ஒருகாலத்தில் கிரேக்க நாட்டில் உள்ள மாசிடோனியாவின் அரசராக இருந்தவர் பிலிப் என்ற அரசர். அவருக்கு ஒரு மகன் இருந்தார். அவர்தான் பின்னாளில் மாவீரர் அலெக்ஸாண்டர் என்று உயர்ந்தவர். கிரேக்க நாட்டு வழக்கப்படி, அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் குருகுலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு போர்கலை, தற்காப்புக் கலை இன்னபிற கலைகளில் பயிற்றுவிக்கப் படுவார்கள். அதன்படி அலெக்ஸ்சாண்டரும் குருகுலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு கற்றுக்கொடுக்கப்பட்ட எல்லாக் கலைகளிலும் அவர் முதல் மாணவனாய் தேறிவந்தார்.

இந்நிலையில் பயிற்சியின் முடிவில் அக்னிப் பரீட்சை என்றொரு போட்டி இருக்கும். இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற ஒருவர்தான் அரசராவதற்கான முழு தகுதியுடைவர் என சொல்லப்பட்டு வந்தது. இதில் மாணவர்கள் கையில் தீச்சட்டியை ஏந்தி, ஒரு குறிப்பிட்ட நேரம் வரைக்கும் இருக்கவேண்டும். போட்டிக்கு அலெக்ஸ்சாண்டரின் பெற்றோருக்கு சிறப்பு அழைப்புக் கொடுக்கப்பட்டது. குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் அக்னிப் பரீட்சைப் போட்டியானது தொடங்கியது. போட்டியில் பங்குபெற்ற எல்லா மாணவர்களுடைய கையிலும் தீச்சிட்டியானது கொடுக்கப்பட்டது. அதை அவர்கள் பொறுமையோடு தாங்கிக் கொண்டிருந்தார்கள்.

நேரம் ஆக ஆக, தீச்சட்டியின் சூடுதாங்காமல் பலர் தோற்றுப்போய் போட்டியிலிருந்து வெளியேறினார்கள். ஆனால், அலெக்ஸ்சாண்டரோ கடுமையான சூட்டையும் தாங்கிக்கொண்டு மிகப் பொறுமையாக இருந்தார். இதற்கிடையில் அவருடைய கையில் ஏந்தியிருந்த தீச்சட்டியிலிருந்து, திடிரென்று ஒரு நெருப்புத் துண்டு பறந்து அவர்மேல் விழுந்து, பற்றி எரியத் தொடங்கியது. இதைத் தொலையில் இருந்து பார்த்துக்கொண்திருந்த அலெக்ஸ்சாண்டரின் தாயார், துடித்துப்போய் அதை அணைப்பதற்காக எழுந்து சென்றார்.

அப்போது பக்கத்தில் அமர்ந்திருந்த அலெக்ஸாண்டரின் தந்தையும் அரசருமான பிலிப், அவரைத் தடுத்து நிறுத்தி, "நீ ஒன்றும் செய்யவேண்டாம். நம் மகன் தனக்கு வந்த இந்த இக்கட்டான சூழநிலையை எப்படி எதிர்கொண்டு வெற்றிகொள்கிறான் என்று பார்ப்போம். ஒருவேளை இப்போது நீ அவனுக்கு உதவச் சென்றால், 'எனக்குப் பிரச்சனை வருகிறபோதெல்லாம் என்னுடைய பெற்றோர் எனக்கு உதவிசெய்ய வருவார்கள்' என்று அவன் தவறான எண்ணத்தோடு வளரக்கூடும். மாறாக, இப்போது நீ இப்படியே இருந்துவிட்டால் அவன் 'எனக்கு வந்த பிரச்னையை நான்தான் சமாளித்து வெற்றிகொள்ளவேண்டும்' என்று பிரச்னையை எதிர்கொண்டு வெற்றிகொள்வான்" என்றார். இதனால் தன் மகன்மீது விழுந்த நெருப்பினை அணைக்கச் சென்ற, அலெக்ஸ்சாண்டரின் தாயார் அப்படியே இருந்தவிட்டார்.

இதற்குப் பிறகு அலெக்ஸ்சாண்டர் தன்மீது விழுந்த நெருப்புத்துண்டு கொடுத்த வேதனையையும், தான் கையில் தாங்கியிருந்த தீச்சட்டி கொடுத்த சூட்டினையும் குறிப்பிட்ட நேரம்வரை தாங்கிக்கொண்டு போட்டியில் வெற்றிபெற்றார்.

இப்படி சிறுவயதிலே அலெக்ஸ்சாண்டருக்கு துன்பங்களைத் தாங்கிக்கொண்டு, அதிலிருந்து எழுந்துவரக்கூடிய மனதைரியம் இருந்ததால்தான், பின்னாளில் அவர் மாவீரராக உயர என்று சொன்னால் அது மிகையாகாது.

துன்பம் மாட்சிக்கு இட்டுச் செல்லும் ஒரு கருவி

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் அதன் ஆசிரியர், "நாம் காண்பதோ சிறுதுகாலம் வானதூதரைவிட சற்றுத் தாழ்ந்தவராக்கப்பட்ட இயேசுவையே. இவர் துன்புற்று இறந்ததால், மாட்சியும் மாண்பும் இவருக்கு முடியாகச் சூட்டப்பட்டதைக் காண்கிறோம்" என்கின்றார்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, பாவத்தின் பிடியிலும், சாவின் பிடியிலும் சிக்குண்டு கிடந்த மானிட சமூகத்தை மீட்டெடுத்து புதுவாழ்வு கொடுக்க, சாதாரண ஒரு மனிதரானார். அது மட்டுமல்லாமல், சிலுவையில் ஒரு கொலைக்குற்றவாளியைப் போன்று அறைந்து கொல்லப்பட்டார். ஆதலால் கடவுள் அவரை, எல்லாருக்கும் மேலாக உயர்த்தி, மாட்சியையும், மாண்பையும் முடியாகச் சூட்டினார். இதைத்தான் எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியரும், பிலிப்பியருக்கு எழுதிய மடலில் தூய பவுலும் (பிலி 2:6-11) நமக்கு எடுத்துரைக்கின்றார்கள்.

ஆகையால், நம்முடைய வாழ்வில் வருகின்ற துன்பங்கள், சோதனைகள், அவமானங்கள் இவற்றையெல்லாம் பொறுமையோடு தாங்கிக்கொண்டு, நமது இலட்சியத்தை நோக்கிய பயணத்தில் தொடர்ந்து முன்னேறிச் சென்றால், ஒருநாள் வெற்றியை மணிமுடியாக சூட்டிக்கொள்வோம் என்பது உறுதி.

சிந்தனை

"சாதனையாளனோ ஒவ்வொரு சிக்கலிலும் ஒரு பொறுப்பைக் காண்கிறான். சாதாரண மனிதனோ ஒவ்வொரு பொறுப்பிலும் ஒரு சிக்கலைக் காண்கிறான்" என்பார் வில்லியம் ஆர்தர்வார்ட் என்ற அறிஞர். நமது வாழ்வில் வரக்கூடிய சிக்கல்களாக இருக்கட்டும், பிரச்சனைகளாக இருக்கட்டும் அவற்றையெல்லாம் ஒரு வாய்ப்பாக, சவாலாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து முன்னேறினோம் என்றால், ஒருநாள் நாம் உயர்ந்த இடத்தை அடைவோம் என்பது உறுதி. அதைவிடுத்து வாழ்வில் வரும் துன்பங்களைக் கண்டு மனம்வருந்திக் கொண்டிருந்தால், ஒருநாளும் உயர்வடைய முடியாது.

ஆகவே, நமது வாழ்வில் வரும் துன்பங்களைப் பொறுமையோடு தாங்கிக்கொள்வோம். இலட்சியப் பயணத்தில் தொடர்ந்து முன்னேறிச் செல்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மாற்கு 1:21-28

அதிகாரத்தோடு போதித்த இயேசு

நிகழ்வு

மலைப்பாங்கான பிரதேசத்தில் தோட்டம் அமைத்து, விவசாயம் செய்துவந்தார் அந்த விவசாயி. ஒருநாள் அவருடைய தோட்டத்திற்கு வந்த கஞ்சா மற்றும் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு காவல்துறை அதிகாரி ஒருவர், "ஐயா! உங்களுடைய தோட்டத்தில் நீங்கள் கஞ்சா பயிருடுவதாக எனக்குத் தகவல் வந்திருக்கின்றது. அதனால் இப்போது நான் உங்களுடைய தோட்டத்தை சோதனையிடப் போகிறேன்" என்றார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார் அந்த விவசாயி, "என்னுடைய தோட்டத்தில் கஞ்சாவா!... அப்படிப்பட்ட ஆள் நானில்லை. இருந்தாலும் யாரோ ஒருவர் சொன்னார் என்பதற்காக என்னுடைய தோட்டத்தைச் சோதனையிட வந்திருக்கிறீர்கள்... பராவாயில்லை. உங்களுடைய விரும்பம் போல என்னுடைய தோட்டத்தை சோதனையிட்டுக் கொள்ளுங்கள். ஆனால், நீங்கள் சோதனையிடும்போது கவனமாகச் சோதனையிடுங்கள். ஏனென்றால், நான் வளர்க்கும் மாடுகள் ஆங்காங்கே மேய்ந்துகொண்டிருக்கின்றன. புதிய ஆளைப் பார்த்தால் அவை முட்டக்கூடும்" என்றார்.

அதற்கு அந்த காவல்துறை அதிகாரி, "என்னுடைய சர்வீஸில் நான் எத்தனை பிரச்சனைகளைச் சந்தித்திருப்பேன். இந்த மாடுகள் எல்லாம் எனக்கு எம்மாத்திரம், நீர் போய் உம் வேலையைப் பாரும், எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று அதிகாரத் தொனியில் பேசிவிட்டு, தோட்டத்துக்குள் இறங்கி சோதனையிடத் தொடங்கினார். இதற்கிடையில் விவசாயி, 'அவர் சோதனையிடட்டும். நாம் போய் சாப்பிட்டு வருவோம்' என்று சொல்லிக்கொண்டு தன்னுடைய குடிசைக்குள் நுழைந்தார். அவர் குடிசைக்குள் நுழைந்த மறுகணம், 'ஐயோ! அம்மா!' என்ற அலறல் சத்தம் கேட்டது. 'போலீஸ்காரர்தான் மாட்டிடம் மாட்டிக்கொண்டுவிட்டார் போலும்' என விவசாயி திரும்பிப் பார்த்தபோது, மாடு போலீஸ்காரரை விரட்ட, அவர் 'காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்' என்று தலைதெறிக்க ஓடிவந்துகொண்டிருந்தார். உடனே விவசாயி அருகே கிடந்த ஒரு கம்பை எடுத்து, மாட்டை நோக்கி வீசினார். அடுத்த நொடி, பாய்ந்து வந்த அந்த மாடு அந்த இடத்திலே நின்றது. அப்போதுதான் போலீஸ்காரருக்கு உயிரே வந்தது.

மூச்சுவாங்க ஓடிவந்த போலீஸ்காரர், விவசாயிடம் வந்து, "நல்லவேளை நீங்கள் என்னைக் காப்பாற்றினீர்கள். இல்லையென்றால் என்கதி, அதோகதிதான்... உங்களிடம் நான் அதிகாரத் திமிரில் அப்படிப் பேசிவிட்டான். என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்... உங்களுடைய தோட்டத்தில் கஞ்சாவும் இல்லை ஒன்றும் இல்லை" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அவர் புறப்பட்டுச் சென்றார்.

தங்களிடம் அதிகாரம் இருக்கின்ற திமிரில் மற்றவரை ஒருபொருட்டாகக்கூட மதிக்காத மனிதர்கள் இங்கு ஏராளம். அதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.

மறைநூல் அறிஞர்கள் போலன்றி, அதிகாரத்தோடு போதித்த இயேசு

நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு கப்பர்நாகும் ஊருக்கு வந்து, ஓய்வுநாளன்று தொழுகைக்கூடத்தில் கற்பிக்கத் தொடங்குகின்றார். மக்களோ அவருடைய போதனையைக் கேட்டு, "இவர் மறைநூல் அறிஞர் போலன்றி, அதிகாரத்தோடு போதிக்கின்றாரே" என்று வியப்பில் ஆழ்கின்றார்கள். மக்கள் வியந்து பார்க்கின்ற அளவுக்கு இயேசுவின் போதனை எப்படி அதிகாரத்தோடு இருந்தது, அது அக்காலத்தில் இருந்த மறைநூல் அறிஞர்களின் போதனையை விட, எப்படி வித்தியாசமாக இருந்தது என்பது பற்றி சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

மறைநூல் அறிஞர்கள் அதிகாரத்தில் இருந்தார்கள். ஆனால் அவர்கள் அதிகாரத்தோடு போதித்தார்களா? என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால், இயேசு அதிகாரத்தில் இல்லை, அப்படியிருந்தபோதும் அதிகாரத்தோடு போதித்தார். அதற்கான காரணமென்ன என்று இப்போது பார்ப்போம்.

வார்த்தையும் வாழ்வும் இணையும்போது ஒருவருடைய போதனை அதிகாரம் கொண்டதாக இருக்கும்

இயேசுவின் போதனை அதிகாரம் கொண்ட போதனையாக இருக்க மிக முக்கியமான காரணம், அவருடைய வாழ்வும் வார்த்தையும் இணைந்தே போனதே ஆகும். இதற்கு விவிலியத்தில் வருகின்ற பல நிகழ்வுகள் சான்றுகளாக உள்ளன. எம்மாவு நோக்கிச் செல்லக்கூடிய சீடர்கள் இயேசுவைப் பற்றிச் சொல்லும்போது, "அவர் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார்" என்பார்கள். அதேபோன்று நிக்கதேம், "கடவுள் தம்மோடு இருந்தாலன்றி, நீர் செய்யும் இவ்வரும் அடையாளங்களை யாரும் செய்ய இயலாது" என்று இயேசுவை நோக்கிக் கூறுவார். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது இயேசுவின் வாழ்வில் சொல்லும் செயலும் இணைந்தே இருந்தன என்று உறுதியாகச் சொல்லலாம். அதனால்தான் அவரால் அதிகாரத்தோடு போதிக்க முடிந்தது.

ஆனால், பரிசேயர்கள் சொன்னார்கள், அதைச் செயலில் காட்டவில்லை. (மத் 23:3) அதனாலேயே அவர்களுடைய போதனை அதிகாரம் இல்லாமல் இருந்தது.

சிந்தனை

அதிகாரம் மக்களுக்கு அன்புப் பணி செய்யத்தானே ஒழிய, அடக்கி ஆள அல்ல. இயேசு தனக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தை மக்களை அன்பு செய்யவும் அவர்கள்மீது பரிவுகொள்ளவும் பயன்படுத்தினார். நாமும் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தை அன்பு செய்யப் பயன்படுத்துவோம், அதற்கு முன்னதாக நம்முடைய சொல்லும் செயலும் இணைந்திருக்குமாறு பார்த்துக்கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================


"ஓய்வு நாள்களில் இயேசு (கப்பர்நாகும்) தொழுகைக் கூடத்திற்குச் சென்று கற்பித்துவந்தார்" (மாற்கு 1:21)

இயேசு தலைசிறந்த ஆசிரியரும் போதகருமாக விளங்கினார். அவர் ஆற்றிய பணியில் முக்கியமான ஒன்று கற்பிக்கும் பணி என்றால் மிகையாகாது. முற்காலத்தில் இஸ்ரயேல் மக்களுக்கு மோசே கற்பித்ததுபோல, எசாயா போன்ற இறைவாக்கினர் போதித்ததுபோல, இயேசுவும் மக்களைத் தேடிச்சென்று அவர்களுக்குக் கடவுள் பற்றியும் கடவுளின் ஆட்சி பற்றியும் எடுத்துரைத்தார். இவ்வாறு போதிப்பதற்கு இயேசு தேர்ந்துகொண்ட இடம் யூதர்களின் "தொழுகைக் கூடம்" ஆகும். இத்தகைய தொழுகைக் கூடம் ஒன்று கப்பர்நாகும் ஊரில் இருந்தது. அவ்வூருக்கு இயேசு அடிக்கடி செல்வது வழக்கம். தற்கால அகழ்வாராய்ச்சியின் பயனாக அவ்வூர்த் தொழுகைக் கூடம் பற்றிய தடயங்கள் கிடைத்துள்ளன. இயேசுவின் போதனையைக் கேட்க மக்கள் குழுமி வந்தனர். இயேசு "மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்துவந்தார்" (மாற் 1:22) என்னும் குறிப்பு கருதத்தக்கது. இயேசுவின் போதனையில் அதிகாரம் இருந்தது என்பதன் பொருள் என்ன? இயேசு கடவுள் பற்றிய உண்மைகளை எடுத்துரைத்த வேளையில் வெறும் சொற்களை மட்டும் பயன்படுத்தவில்லை. விவிலியத்தில் கூறப்பட்டிருப்பதை மட்டுமே எடுத்துக் கூறவும் இல்லை. மாறாக, தம் தந்தையாகிய கடவுளோடு தமக்கிருந்த நெருங்கிய உறவின் ஆழத்தை மக்களோடு பகிர்ந்துகொண்டார்.

கடவுளோடு நமக்கிருக்கும் உறவு தந்தைக்கும் பிள்ளைக்கும் இடையே, தாய்க்கும் சேய்க்கும் இடையே நிலவுகின்ற உறவுக்கு ஒப்பானது. நாம் கடவுளையே முற்றிலும் சார்ந்திருக்கின்றோம். இயேசுவும் மக்களுக்குப் போதித்தபோது கடவுள் யார் என்பதைச் சொல்லாலும் செயலாலும் வெளிப்படுத்தினார். கடவுளைப் பற்றிப் பேசுவதற்கு மாறாக, கடவுள் யார் என்பதை இயேசு தம் வாழ்க்கையில் வெளிப்படுத்தினார். எனவே அவருடைய சொல்லுக்கும் செயலுக்கும் "அதிகாரம்" இருந்தது. இயேசு கடவுளின் உறவை மனிதரோடு பகிர்ந்துகொண்டார். அந்த உறவை அனுபவித்தவர்கள் அவருடைய அதிகாரத்தையும் கண்டுகொண்டார்கள். இயேசு நம் ஆசிரியர் என்றால், அவரது பள்ளியில் பயில்கின்ற மாணவர் நாம் என்றால் அவரிடமிருந்த கற்றவற்றை நாம் கடைப்பிடிக்க வேண்டும். நாம் பெற்ற கல்வி அனுபவத்தைப் பிறரோடு பகிர்ந்திட வேண்டும்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!