Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   14  ஜனவரி 2019  
                                                            முதல் வாரம்
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
 கடவுள் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-6

பல முறை, பல வகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்; இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்; இவர் வழியாக உலகங்களைப் படைத்தார்.

கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இவர், தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார். மக்களைப் பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்தியபின், விண்ணகத்தில் இவர் பெருமைமிக்க கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். இவ்வாறு இறைமகன் வானதூதரைவிடச் சிறந்ததொரு பெயரை உரிமைப்பேறாகப் பெற்றார்.

அந்நிலைக்கு ஏற்ப அவர்களைவிட இவர் மேன்மை அடைந்தார். ஏனெனில், கடவுள் வானதூதர் எவரிடமாவது "நீ என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்" என்றும், "நான் அவருக்குத் தந்தையாயிருப்பேன், அவர் எனக்கு மகனாயிருப்பார்" என்றும் எப்போதாவது கூறியதுண்டா?

மேலும் அவர் தம் முதற்பேறான இவரை உலகிற்கு அனுப்பியபோது, "கடவுளின் தூதர் அனைவரும் அவரை வழிபடுவார்களாக" என்றார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:97: 1,2b. 6,7c. 9 (பல்லவி: 7c)
=================================================================================
 பல்லவி: அனைத்துத் தெய்வங்களே! ஆண்டவரைத் தாழ்ந்து பணியுங்கள்.

1 ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவு நாடுகள் களிகூர்வனவாக! 2b நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம். பல்லவி

6 வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன; அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன. 7c அனைத்துத் தெய்வங்களே! அவரைத் தாழ்ந்து பணியுங்கள். பல்லவி

9 ஏனெனில், ஆண்டவரே! உலகனைத்தையும் ஆளும் உன்னதர் நீர்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலானவர் நீரே! பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மாற் 1: 15

அல்லேலூயா, அல்லேலூயா! காலம் நிறைவேறிவிட்டது, இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
  மனம் மாறி, நற்செய்தியை நம்புங்கள்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 14-20

அக்காலத்தில் யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக்கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். "காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்று அவர் கூறினார்.

அவர் கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது, சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்து, "என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்" என்றார்.

உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். பின்னர், சற்று அப்பால் சென்றபோது, செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் இயேசு கண்டார். அவர்கள் படகில் வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தார்கள். உடனே இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின்சென்றார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



சிந்தனை

நற்செய்தியின் மையக் கருத்தாகிய மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள். காலம் நிறைவேறி விட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது என்ற இறைவாக்கு இன்று நமக்கு அருளப்பட்டுள்ளது.



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 மாற்கு 1:14-20

மனம் மாறுங்கள்; நற்செய்தியை நம்புங்கள்

நிகழ்வு

ஓர் ஊரில் சகோதரர்கள் இருவர் இருந்தனர். அவர்கள் இருவரும் பயங்கரமான "ஆடு திருடர்கள்".

ஒருநாள் அவர்கள் இருவரும் ஓர் ஆட்டுப் பட்டியிலிருந்து ஆட்டைத் திருட முற்பட, அவர்கள் இருவரும் அங்கிருந்த காவல்காரனின் கண்ணில் விழ, அவன் சத்தம்போட்டு அக்கம் பக்கத்திலுள்ளவர்களை எழுப்பிவிட, அவர்கள் அனைவரும் ஓடிவந்து, சகோதர்கள் இருவரையும் நையப்புடைத்தனர். பின்னர் அவர்கள் சகோதரர்கள் இருவருடைய நெற்றியிலும் ஆடு திருடன் (Sheep Thief) என்பதைக் குறிக்கும் வண்ணமாக ST என்று முத்திரை குத்தி, அங்கிருந்து விரட்டியடித்தார்கள்.

மக்களால் இப்படி அவமானப்படுத்தப்பட்டு, விரட்டியடிக்கப்பட்ட அந்த சகோதரர்களில் ஒருவன் நடந்ததை நினைத்து மிகவும் வருந்தினான். அது மட்டுமல்லாமல் தன்னுடைய நெத்தியில் குத்தப்பட்ட ST என்பதற்கான அர்த்தம் என்ன என்று அவனைச் சந்தித்தவர்கள் கேட்டபோது, அவன் அவமானத்தால் கூனிக்குறுகிப் போனான். எனவே, அவன் சொந்த ஊரில் இருந்தால், எல்லாரும் இதையேதான் கேட்டுக்கொண்டிருப்பார்கள், அதனால் கண்காணாத இடத்திற்குச் சென்று, அங்கு மகிழ்ச்சியாக வாழலாம் என முடிவுசெய்து, ஓர் ஊருக்குப் போனான். அங்கேயும் மக்கள் அதற்கான அர்த்தத்தைக் கேட்டபோது, அவன் வாழப் பிடிக்காமல் தற்கொலை செய்து இறந்து போனான்.

ஆனால், ஊரில் இருந்த அந்த இருவரில் இன்னொருவன், தன்னுடைய தவற்றை நினைத்து மிகவும் வருந்தி, திருந்தி நடக்கத் தொடங்கினான். இதனால் மக்கள் மத்தியில் அவனுக்கு நல்ல பெயர் உண்டானது.

இப்படியே ஆண்டுகள் பல உருண்டோடின. ஒருநாள் படித்த இளைஞன் ஒருவன் அந்த மனிதனிடம், "ஐயா! உங்களுடைய நெற்றில் ST என்று பொறிக்கப்பட்டிருக்கின்றதே, இது எப்படி உங்களுடைய நெற்றியில் வந்தது, அதனுடைய அர்த்தம் என்ன?" என்று கேட்டான். அதற்கு அந்த மனிதன், "இந்த ST என்ற வார்த்தை எப்படி என் நெற்றியில் வந்தது என்று தெரியவில்லை. ஆனால், (புனிதர்) Saint என்பதைத்தான் அப்படிப் பொறித்திருக்கிறார்கள் போலும்"என்றான்.

இதைக் கேட்ட அந்த இளைஞன், "உங்களைப் பார்த்தால் ஒரு புனிதரைப் போன்றுதான் இருக்கின்றது"என்று சொல்லி, அவனைக் கைகூப்பி வணங்கிவிட்டுப் போனான்.

உண்மையான மனமாற்றம் ஒருவருடைய வாழ்வில் வெளிப்படவேண்டும். அந்த வகையில் ஆடு திருடனாக இருந்து, புனிதராக மாறிய இந்த மனிதர் மனமாற்றத்திற்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றார்.

இறையாட்சி பற்றி நற்செய்தி அறிவிக்கத் தொடங்கிய இயேசு

நற்செய்தி வாசகத்தில் இயேசு கிறிஸ்து, திருமுழுக்கு யோவான் கைது செய்யப்பட்ட பின்பு, கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே கலிலேயாவிற்கு வந்ததாக வாசிக்கின்றோம். திருமுழுக்கு யோவான் கைது செய்யப்பட்ட பின்பு, அங்கு ஒரு வெற்றிடம் ஏற்படுகின்றது. அதனை நிரப்புவதற்காக இயேசு கலிலேயாவுக்கு வருகின்றார்.

மேலும் இயேசு கடவுளின் நற்செய்தியை மக்களுக்குப் பறைசாற்றிக் கொண்டே வந்தார் எனில், அவர் இந்த உலகில் மற்ற அரசர்களைப் போன்று உலகப் போக்கிலான ஆட்சியை அல்ல, கடவுளின் ஆட்சியை அதாவது இறையாட்சியை நிறுவ வந்தார் என்று சொல்லலாம். அத்தகைய இறையாட்சிக்காக அவர் மக்கள் மனம்மாறி, இறைவனிடத்தில் நம்பிக்கை கொள்ள அழைப்புத் தருகின்றார்.

மனமாற்றம் என்பது யாதெனில்..

இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் இறையாட்சி நிறுவதற்காக மக்கள் மனம் மாற வேண்டுமென்று அழைப்புத் தருகின்றார். இது எத்தகைய மனமாற்றம் என்று நாம் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

மனமாற்றம் என்பது வெறுமனே, பாவங்களுக்காக மனம் வருந்துதலோடு நின்றுவிடக் கூடாது. அது நம்மை அடுத்தக் கட்டத்திற்கு இட்டுச் செல்லவேண்டும். ஆண்டவர் இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் தன்னுடைய குற்றத்திற்காக மனம்வருந்தினான்தான். ஆனால், அவன் கடவுளின் பேரன்பை உணர்ந்து, அவரிடம் திரும்பிவரவில்லை, அவரிடத்தில் நம்பிக்கை கொள்ளவும் இல்லை. ஆனால், பேதுருவோ இயேசுவை மறுதலித்தாலும்கூட, தன்னுடைய தவற்றை நினைத்து மனம் வருந்தினார், அதற்குப் பின்பு அவர்மீது நம்பிக்கை கொண்டு அவர் வழியில் நடக்கத் தொடங்கினார் (மத் 27: 3-5)

ஆகையால், ஆண்டவர் இயேசு விடுக்கின்ற மனமாற்ற அழைப்பு என்பது பாவங்களுக்காக மனம் வருந்துவதோடு நின்றுவிடாமல், அவர்மீது நம்பிக்கை கொள்ள நம்மை இட்டுச் செல்லவேண்டும். அத்தகைய மனமாற்றமே உண்மையான மனமாற்றம்.

சிந்தனை

"நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்"என்பார் (மத் 3:8) திருமுழுக்கு யோவான். நமது மனமாற்றம் உண்மையானதாக இருக்க, நல்வாழ்வு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 எபிரேயர் 1:1-6

இயேசு வழியாக உலகைப் படைத்த இறைவன்

நிகழ்வு

முன்பொரு காலத்தில் அகிவா என்றொரு யூத ராபி இருந்தார். ஒருசமயம் அவரிடத்தில் வந்த ஓர் இளைஞன், "இந்த உலகினைப் படைத்தவர் யார்?" என்று கேட்டான். அகிவாவோ சிறிதும் தாமதியாமல், "எல்லாம் வல்ல இறைவன்"என்று பதிலுரைத்தார். அதற்கு அந்த இளைஞன், "இறைவன்தான் இந்த உலகினைப் படைத்தார் என்பதற்கு ஏதாவது அத்தாட்சி (சான்று) இருக்கின்றதா?"என்று கேட்டார். உடனே அகிவா, "இதற்கான பதிலை நான் நாளைக்குச் சொல்கிறேன், நீ இன்று போய்விட்டு நாளைக்கு வா" என்று அவனை அனுப்பி வைத்தார்.

அந்த இளைஞனும் அகிவா சொன்னவாறு அன்றைக்கு அவரிடமிருந்து விடைபெற்றுவிட்டு, மறுநாள் அவரிடத்தில் திரும்பி வந்தான். அப்போது அகிவா அந்த இளைஞனிடத்தில், "உன்மேல் என்ன அணிந்திருக்கிறாய்?" என்று கேட்டார். அவனோ பதிலுக்கு, "ம்ம்ம்... பாத்தால் தெரியவில்லையா... பளபளப்பான ஆடை அணிந்திருக்கிறேன்"என்றான். "அப்படியா... இந்த ஆடையை நெய்தவர் யார்?"என்று மீண்டுமாக அவனிடத்தில் ஒரு கேள்வியைக் கேட்டார் அவர். "இதிலென்ன சந்தேகம். இந்த ஆடையை யார் நெய்திருக்க முடியும்? ஒரு நெசவாளிதானே நெய்திருக்க முடியும்!"என்றான் அவன்.

அகிவாவோ விடமால் அவனிடம், "நீ சொல்வதுபோல் நெசவாளிதான் இதை நெய்திருக்கவேண்டும் என்றால், அதற்கான அத்தாட்சி எங்கே?"என்றார். இளைஞனோ பொறுமை இழந்துபோய், "ஆடையை நெசவாளிதான் நெய்திருக்கவேண்டும். இதில் என்ன அத்தாட்சி வேண்டிக் கிடக்கு"என்று கத்தத் தொடங்கினான். அப்போது அகிவா அவனிடம், "தம்பி! இப்போது சொன்னாயே, இதிலே நீ கேட்ட கேள்விக்கான பதில் இருக்கின்றது... எப்படி ஓர் ஆடையை ஒரு நெசவாளிதான் நெய்ய முடியுமோ, ஒரு வீட்டை ஒரு கொத்தனார்தான் கட்டமுடியுமா?, ஒரு கதவை ஓர் ஆசாரிதான் செய்யமுடியுமோ. அதுபோன்றுதான் இந்த உலகத்தை எல்லாம் வல்ல இறைவன்தான் படைத்திருக்க முடியும். இதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை"என்றார்.

இந்த உலகம் எப்படிப் படைக்கப்பட்டது, அதை யார் படைத்தார் என்பதற்கான விடையாக அமைகின்றது இந்த நிகழ்வு.

உலகைப் படைத்த இறைவன், அதை இயேசுவின் வழியாகப் படைத்தார்

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் அதன் ஆசிரியர், "பலமுறை, பலவகைகளில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையர்களிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாட்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்" என்கின்றார். இப்படி எழுதிவிட்டு தொடர்ந்து எழுதுகின்றார், "இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாக்கினார்; இவர் வழியாக உலகங்களைப் படைத்தார்"என்கின்றார். இதையே நாம் நம்முடைய இன்றைய சிந்தனைக்காக எடுத்துக் கொள்வோம்.

தொடக்கநூல் முதல் அதிகாரம், முதல் வசனத்தில், "தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும் மண்ணுலகையும் படைத்தார்"என்று வாசிக்கின்றோம். ஆனால், எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் ஒருபடி மேலே சென்று, "உலகைப் படைத்த இறைவன், அதனை இயேசுவின் படைத்தார்"என்று எடுத்துச் சொல்கின்றார்.

இதனை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், யோவான் நற்செய்தி 1:1 ல் வருகின்ற "தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாகவும் இருந்தது" என்ற இறைவார்த்தையை இணைத்துச் சிந்தித்துப் பார்த்தால், இன்னும் பொருள் நிறைந்ததாக இருக்கும். யோவான் நற்செய்தி 1:1 ல் வரக்கூடிய இந்த இறைவார்த்தை நமக்கு மூன்று முக்கியமான செய்திகளை எடுத்துச் சொல்கின்றன. ஒன்று. வாக்கு என்னும் இயேசு உலகம் படைக்கப்பட்டதற்கு முன்பாகவே இருந்தார் என்பதாகும். இரண்டு. வாக்கு என்னும் இயேசு தந்தைக் கடவுளோடு இருந்தார் என்பதாகும். மூன்று. தொடக்கத்திலிருந்தே தந்தைக் கடவுளோடு இருந்த வாக்கு என்னும் இயேசு கடவுளாகவும் இருந்தார் என்பதாகும். ஆகையால், இயேசு கடவுளோடு இருந்து, தன் வழியாக உலகம் படைக்கப்பட காரணமாக இருந்தார் என நாம் உறுதியாகச் சொல்லலாம்.

சிந்தனை

இயேசு வழியாக இறைவன் உலகினைப் படைத்தார் எனில், அவரும் கடவுள்தான். இதைதான் நாம் தந்தை, மகன், தூய ஆவி என்று ஆள் வகையில் கடவுள் வேறு வேறாக இருந்தாலும், இறைத்தன்மையில் ஒருவராக இருக்கின்றார் என்று நம்புகின்றோம்.

இத்தகைய இயேசுவுக்கு நாம் செய்யவேண்டியது என்ன என்று சிந்தித்துப் பார்க்கின்றபோது, இறைவார்த்தை நமக்குச் சொல்லக்கூடியது ஒன்றே ஒன்றுதான். அதுதான் அவர்மீது நம்பிக்கை கொள்வதாகும். யோவான் நற்செய்தி 20:20 ல் வாசிக்கின்றோம், "அவரிடத்தில் கொள்வோர், வாழ்வடைவர்"என்று. ஆகவே, நாம் இயேசு இறைவன், மெசியா என நம்புவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
நற்செய்தி (மாற் 1:14-20)

விட்டுவிட்டுச் சென்றார்கள்

ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழாவிலிருந்து திருவழிபாட்டு ஆண்டின் பொதுக்காலம் தொடங்குகிறது. இந்தப் பொதுக்காலத்தின் வார நாள்களில் நாம் மாற்கு நற்செய்தியாளரோடு பயணம் செய்யவிருக்கிறோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் பணித்தொடக்கத்தையும் அவர் தன் முதற்சீடர்களை அழைத்த நிகழ்வையும் வாசிக்கின்றோம்.

இயேசுவின் முதற்சீடர்கள் அழைக்கப்படும் நிகழ்வு கலிலேயக் கடற்கரை ஓரத்தில் நடந்தேறுகிறது. ஆக, கடவுள் மனிதர்களை அழைக்கும்போது பெரும்பாலும் அவர்கள் தங்கள் வேலைகளைச் செய்து கொண்டிருப்பவர்களாகவே இருக்கிறார்கள். அல்லது இறைவெளிப்பாடு நாம் வேலை பார்க்கும் இடத்தில் நடந்தேறுகிறது.

'சென்றார் - கண்டார் - சொன்னார் - வந்தார்கள்'

இவ்வளவு சீக்கிரம் நடந்திருக்குமா இந்த அழைத்தல்?

இன்று துறவற அல்லது அருள்பணி அழைத்தலுக்கு அழைக்கப்பட்டவர் 'ஆம்' என்று சொல்ல ஏறக்குறைய 10 முதல் 14 ஆண்டுகள் ஆகின்றன. அப்படியே 'ஆம்' என்று சொல்லி வந்தாலும், அன்றாடம் இதை மறுஆய்வு செய்யும் சூழல்களும் உருவாகிவிடுகின்றன.

இயேசுவின் முதற்சீடர்களால் ஒரே முறை அதுவும் உடனடியாக எப்படி 'ஆம்' என்று சொல்ல முடிந்தது?

இன்று நாங்கள் 'ஆம்' என்று சொல்வதற்கு முன் நிறைய படிக்கவும், பணி அனுபவம் பெறவும் வேண்டியுள்ளது. ஆனால், இயேசு முதற் சீடர்களுக்கு எந்தவொரு பாடமும் நடத்தவில்லை, பணி அனுபவமும் தரவில்லை, நீண்ட உரை ஆற்றவில்லை. ஒரே ஒரு வாக்குறுதி மட்டும் கொடுக்கிறார்: 'நீங்கள் மனிதரைப் பிடிப்பவர் ஆவீர்கள்!' இந்த வாக்குறுதியை முதற்சீடர்கள் புரிந்துகொண்டார்களா என்றுகூடத் தெரியவில்லை.

'என் பின்னே வாருங்கள். நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்' என்று இயேசு சொன்னவுடன், சீமோனும் அந்திரேயாவும் தங்கள் 'வலைகளை விட்டுவிட்டு,' 'உடனே' அவரைப் பின்பற்றினார்கள். ஆக, இவர்கள் தங்கள் வாழ்வாதாரமான வலைகளையும், மீன்பிடித் தொழிலையும் 'உடனே' விடுகின்றனர். இரண்டாம் குழுவினரான யாக்கோபும் யோவானும் தந்தை செபுதேயு, கூலியாள்கள், படகு எனத் தங்கள் உறவு, தங்கள் அதிகாரம், தங்கள் உடைமை அனைத்தையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றுகின்றனர்.

இது எப்படி சாத்தியம்?

ஜென் மதத்தில் ஒரு சொலவடை உண்டு: 'நீ தயாராக இருக்கும் போது உன் மாஸ்டர் தோன்றுவார்.' கலிலேயக் கடற்கரையில் அன்று எவ்வளவோ பேர் இருந்திருப்பார்கள். நிறைய சப்தம் இருந்திருக்கும். அந்தச் சப்தங்களின் நடுவில் இவர்கள் இயேசுவின் சப்தத்தைக் கேட்கக் காரணம் அவர்கள் 'தயாராக இருந்தார்கள்.' அவர்கள் தயாராக இருந்ததால் மாஸ்டர் தோன்றினார்.

நேற்று ஜே.கே. என அழைக்கப்படும் ஜித்து கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்க்கை வராலாற்றை வாசிக்கத் தொடங்கினேன். தெயோசோஃபிக்கல் சொஸைட்டி எனப்படும் அமைப்பில் அவர் இருந்தபோது, இவர் அமெரிக்கா சென்று அங்கு நோய்வாய்ப்பட்ட தன் தம்பி நித்யாவுடன் இருக்கும் ஒருநாள் அந்த இரவு அவருக்கு அந்த அனுபவம் கிடைக்கிறது. 'உண்மையைக் கண்டறியும் அவர்', 'உண்மையை ஒவ்வொருவரும்தான் கண்டுகொள்ள வேண்டும். எந்தப் புனித நூலும், எந்த குருவும் அதற்கு உதவ முடியாது' என்ற தான் கண்ட அனுபவத்தை உணர்கின்றார்.

முதல் சீடர்களின் அழைத்தல் அனுபவமும் எந்தவொரு பரிந்துரைக் கடிதமும், அல்லது நடுவில் ஒருவரும் இல்லாமல் நடந்தேறுகிறது.

நான் எப்போது தயாராக இருக்கின்றேனோ, அப்போது அவர் தோன்றுவார். அவரைக் காணும் அந்த நொடியில் நானும் என் வலைகளையும், உறவுகளையும் விட்டுவிட்டுப் பின்செல்ல முடியும்.

ஆம் என்ற பதிலை அவருக்கு ஒவ்வொருவரும் தனித்தனியே கொடுக்க வேண்டும்.

அவர் இன்றும் வருகிறார். அவருக்காகத் தயாராய் இருப்பவர்கள் 'ஆம்' என்று பின்தொடர்கின்றனர். மற்றவர்கள் தொடர்ந்து தங்கள் வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டும், தங்கள் வேலையாள்களை அடக்கி ஆண்டுகொண்டும், படகின்மேல் உரிமை கொண்டாடிக்கொண்டும், தங்கள் உறவுகளைப் பேணிக்காத்துக்கொண்டும் இருக்கின்றனர்.

Rev. Fr. Yesu Karunanidhi
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!