Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   12  ஜனவரி 2019  
                                        திருக்காட்சி விழாவுக்குப்பின் சனி
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
 நாம் எதைக் கேட்டாலும் கடவுள் நமக்குச் செவிசாய்க்கிறார்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 14-21

அன்பார்ந்தவர்களே, நாம் கேட்பது கடவுளுடைய திருவுளத்திற்கு ஏற்ப அமைந்திருப்பின், அவர் நமக்குச் செவிசாய்க்கிறார்; இதுவே நாம் அவர்மீது கொண்டுள்ள உறுதியான நம்பிக்கை.

நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்குச் செவிசாய்க்கிறார் என்று நமக்குத் தெரியும். எனவே, நாம் அவரிடம் கேட்டவற்றைப் பெறுவோம் என்னும் உறுதி நமக்கு உண்டு.

பாவம் செய்வோர் சாவுக்குரிய பாவம் செய்யவில்லை என்று கண்டால், அவர்களுக்காகக் கடவுளிடம் வேண்டுதல் செய்யவேண்டும். கடவுளும் அவர்களுக்கு வாழ்வு அருள்வார். சாவுக்குரிய பாவமும் உண்டு. அப்பாவத்தைச் செய்வோருக்காக வேண்டுதல் செய்யவேண்டும் என நான் சொல்லவில்லை.

தீச்செயல் அனைத்துமே பாவம். ஆனால் எல்லாப் பாவமுமே சாவுக்குரியவை அல்ல. கடவுளிடமிருந்து பிறந்தோர் பாவம் செய்வதில்லை என்பது நமக்குத் தெரியும். ஏனெனில் கடவுளிடமிருந்து பிறந்தவர்களை அவர் பாதுகாக்கிறார். தீயோன் அவர்களைத் தீண்டுவதில்லை.

நாம் கடவுளைச் சார்ந்தவர்கள்; ஆனால், உலகனைத்தும் தீயோனின் பிடியில் இருக்கிறது. இது நமக்குத் தெரியும். இறைமகன் வந்து உண்மையான இறைவனை அறிந்துகொள்ளும் ஆற்றலை நமக்குத் தந்துள்ளார். இது நமக்குத் தெரியும். நாம் உண்மையான இறைவனோடும் அவர் மகன் இயேசு கிறிஸ்துவோடும் இணைந்து வாழ்கிறோம். இவரே உண்மைக் கடவுள். இவரே நிலைவாழ்வு. பிள்ளைகளே, சிலைவழிபாட்டைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.



இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:149: 1-2. 3-4. 5-6a,9b (பல்லவி: 4a)
=================================================================================
 பல்லவி: ஆண்டவர் தம் மக்கள்மீது விருப்பம் கொள்கின்றார். அல்லது: அல்லேலூயா.

1 அல்லேலூயா, ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்; அவருடைய அன்பர் சபையில் அவரது புகழைப் பாடுங்கள். 2 இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து மகிழ்ச்சி கொள்வதாக! சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக. பல்லவி

3 நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக; மத்தளம் கொட்டி, யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக! 4 ஆண்டவர் தம் மக்கள்மீது விருப்பம் கொள்கின்றார்; தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு வெற்றி அளித்து மேன்மைப் படுத்துவார். பல்லவி

5 அவருடைய அன்பர் மேன்மை அடைந்து களிகூர்வராக! மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவராக! 6a அவர்களின் வாய் இறைவனை ஏத்திப் புகழட்டும். 9b இத்தகைய மேன்மை ஆண்டவர்தம் அன்பர் அனைவருக்கும் உரித்தானது. அல்லேலூயா! பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 4: 16

அல்லேலூயா, அல்லேலூயா! காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடரொளி உதித்துள்ளது. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 மணமகனின் தோழர் அவர் சொல்வதைக் கேட்டு பெருமகிழ்வடைகிறார்.

+ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 22-30

அக்காலத்தில் இயேசுவும் அவர்தம் சீடரும் யூதேயப் பகுதிக்குச் சென்றனர். அங்கே அவர் அவர்களோடு தங்கித் திருமுழுக்குக் கொடுத்து வந்தார். யோவானும் சலீம் என்னும் இடத்துக்கு அருகில் உள்ள அயினோனில் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஏனெனில் அங்குத் தண்ணீர் நிறைய இருந்தது. மக்கள் அங்கு சென்று திருமுழுக்குப் பெற்று வந்தார்கள். யோவான் சிறையில் அடைக்கப்படுமுன் இவ்வாறு நிகழ்ந்தது.

ஒரு நாள் யோவானின் சீடர் சிலருக்கும் யூதர் ஒருவருக்கும் இடையே தூய்மைச் சடங்குபற்றி விவாதம் எழுந்தது. அவர்கள் யோவானிடம் போய், "ரபி, யோர்தான் ஆற்றின் அக்கரைப் பகுதியில் உம்மோடு ஒருவர் இருந்தாரே! நீரும் அவரைக் குறித்துச் சான்று பகர்ந்தீரே! இப்போது அவரும் திருமுழுக்குக் கொடுக்கிறார். எல்லாரும் அவரிடம் செல்கின்றனர்" என்றார்கள்.

யோவான் அவர்களைப் பார்த்து, "விண்ணிலிருந்து அருளப்படா விட்டால் எவரும் எதையும் பெற்றுக்கொள்ள முடியாது. 'நான் மெசியா அல்ல; மாறாக அவருக்கு முன்னோடியாக அனுப்பப்பட்டவன்' என்று நான் கூறியதற்கு நீங்களே சாட்சிகள்.

மணமகள் மணமகனுக்கே உரியவர். மணமகனின் தோழரோ அருகில் நின்று அவர் சொல்வதைக் கேட்கிறார்; அதில் அவர் பெருமகிழ்ச்சி அடைகிறார். என் மகிழ்ச்சியும் இது போன்றது. இம்மகிழ்ச்சி என்னுள் நிறைந்துள்ளது. அவரது செல்வாக்குப் பெருக வேண்டும்; எனது செல்வாக்குக் குறைய வேண்டும்" என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 நற்செய்தி (யோவா 3:22-30)*

பெருமகிழ்ச்சி அடைகிறார்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவானின் தாராள உள்ளம் என்ற ஆளுமைத் திறத்தைப் பார்க்கின்றோம்.

இயேசுவும் யோவானும் எதிர்கொள்கின்றனர் இந்நிகழ்வில். இந்நிகழ்வைப் பதிவு செய்வதற்கு முன்னோட்டமாக, இயேசுவும் யோவானும் வேறு வேறு இடங்களில் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருப்பதாகப் பதிவு செய்கின்றார் நற்செய்தியாளர். இயேசு திருமுழுக்கு பெறுவதை மத்தேயு, மாற்கு, லூக்கா பதிவு செய்ய, இயேசு திருமுழுக்கு கொடுப்பதை யோவான் மட்டுமே பதிவு செய்கின்றார். வேறு வேறு இடங்கள் திருமுழுக்கு கொடுப்பதற்கு தேர்ந்தெடுக்கப்படக் காரணம் இயேசுவின் சீடர்களுக்கும், திருமுழுக்கு யோவனின் சீடர்களுக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடுகள்தாம்.

இப்படி இருவரின் சீடர்களும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டிருக்க, இயேசுவும் யோவானும் ஒருவரை ஒருவர் மதிப்பவர்களாக இருப்பதைப் பார்க்கின்றோம். 'கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே, சங்கு சுட்டாலும் வெண்மை தரும்' என்ற வரிகள்தாம் நினைவிற்கு வருகிறது.

திருமுழுக்கு யோவான் ஒரு மேன்மகனார் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துச் சொல்கிறது?

எப்படி?

திருமுழுக்கு யோவானிடம் வருகின்ற சிலர் இயேசுவைப் பற்றி கோள் மூட்டுகின்றனர். 'நீர் ஒருவருக்குத் திருமுழுக்கு கொடுத்தீரே - அதாவது, உம்மை விட ஜூனியர் ஒருவர் இருக்கிறாரே - அவரும் திருமுழுக்கு கொடுக்கிறார். எல்லாரும் அவரிடம் போகிறார்கள்.'

இவ்வார்த்தைகளைக் கவனித்தீர்களா?

எனக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை என வைத்துக்கொள்வோம். அந்தப் பிடிக்காத நபரைப் பற்றி என்னிடம் கோள் மூட்டுகின்ற ஒருவர் ரொம்பவும் மிகைப்படுத்திப் பேசி, என் நல்லெண்ணத்தைப் பெறவும், என் கோபத்தைத் தூண்டி அவரிடமிருந்து இன்னும் என்னைப் பிரிக்கவும் முயல்வார். இது அப்படியே இங்கு நடக்கிறது? 'அவர் திருமுழுக்கு கொடுக்கிறார்' என்று மட்டும் சொல்லியிருந்தால் பரவாயில்லை. ஆனால், 'எல்லாரும் அவரிடம் போகிறார்கள்' என்று மிகைப்படுத்துகின்றார். மேலும், 'எல்லாரும் அவரிடம் போகிறார்கள்' அப்படின்னா என்ன அர்த்தம்? 'உம்மிடம் யாரும் வருவதில்லை. உம் புகழ் குறைந்துவிட்டது' என்று உள்ளீடாகக் சொல்கிறார்.

வழக்கமாக இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கேட்கும்போது கேட்பவருக்கு இயல்பாக கோபமும், சொல்லப்பட்ட நபரின் மேல் பொறாமையும் வரும். இந்தப் பொறாமை அல்லது கோபத்தில் அவர், 'அவன் என்னிடம் படித்தவன்தான்! அல்லது நான்தான் அவனுக்குச் சொல்லிக் கொடுத்தேன்' என்று சொல்லிச் சமாளிப்பார். இல்லையா?

ஆனால், திருமுழுக்கு யோவான் இப்படி எதிர்வினை ஆற்றவில்லை.
'அப்படியா? எல்லாரும் போறாங்களா? மகிழ்ச்சி தானே!' என்று சொல்லியதோடல்லாமல், 'இயேசுவின் ஆற்றல் விண்ணிலிருந்து வந்தது' என்று இயேசுவின் ஆற்றலுக்குச் சான்றுபகர்கின்றார். மேலும், 'நான் மெசியாவுக்கு முன்னோடிதானே தவிர மெசியா அல்ல' என்ற தன் தான்மையை ஏற்றுக்கொள்கின்றார். மேலும், இயேசுவை மணமகனாகவும் தன்னை மணமகன் தோழனாகவும் உருவகிக்கின்றார்.

'தோழனாக மணமகனின் அருகில் இருத்தலே மகிழ்ச்சி' என்று தன்னில் மகிழ்ச்சி காண்கிறார் யோவான்.

இறுதியாக, 'அவரது செல்வாக்கு பெருக வேண்டும். எது செல்வாக்கு குறைய வேண்டும்' என்று தாராள உள்ளத்தின் உச்சக்கட்டத்தை அடைகின்றார் யோவான்.

ஒரு பள்ளியில் பணியாற்றும் போது, அல்லது அருள்பணியாளராகப் பணியாற்றும்போது இம்மாதிரியான ஒப்பீடுகளை அதிகமாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 'நேற்று வந்த டீச்சர் உங்கள விட நல்லா பாடம் எடுக்குறாங்க!' அல்லது 'புதுசா வந்திருக்கிற ஃபாதர் அல்லது ஃப்ரதர் நல்லா மறையுரை வைக்கிறார்!' என்று மற்றவர்கள் சொல்லும்போது, அங்கே, ஒப்பீடும் பொறாமையும் வரக்கூடாது. மாறாக, 'என் இருப்பில் என் இயல்பில் நான் செய்ய இயன்றதைச் சிறப்பாகச் செய்தேன்' என்ற பக்கவமும், 'அடுத்தவராலும் நன்றாகச் செயல்பட முடியும்' என்ற பரந்த மனமும் இருந்தால் நம் மகிழ்ச்சி பறி போகாது.

இந்த உலகம் பல நேரங்களில் முதல் இடங்களையே கொண்டாடுகிறது. ஆனால், இரண்டாம் இடமும் கொண்டாடப்பட வேண்டியது என்கிறார் யோவான். திருமண வீட்டில் கேமரா மணமகனைச் சுற்றியே வரும். ஆனால், அதற்காக அவர் அருகில் இருக்கிற தோழன் அதைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. தோழனாக இருப்பதும் நிறைவுதானே. மணமகனோடு ஏன் ஒப்பீடு செய்ய வேண்டும்?

இரண்டு கேள்விகள்:

1. மற்றவர்கள் மற்றவர்களைப் பற்றிச் சொல்லும்போது என் மனப்பாங்கு எப்படி இருக்கிறது? அவர்களுது ஒப்பீடுகளால் நான் என் இயல்பை மாற்றிக்கொள்கிறேனா? என் மகிழ்ச்சியை இழக்கிறேனா?

2. நான் என் அடையாளத்தை ஏற்றுக்கொண்டு, என் இருப்பில் நிறைவு கண்டு, அடுத்தவர் வளர வேண்டும் என்ற பரந்த மனம் கொள்கிறேனா?

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 யோவான் 3:22-30

விண்ணிலிருந்து அருளப்படாவிட்டால் எவரும் எதையும் பெற்றுக்கொள்ள முடியாது

நிகழ்வு

தன்னுடைய வீட்டுக்குப் பிச்சை கேட்கவந்த ஒரு பிச்சைக்காரனைப் பார்த்து செல்வந்தர் ஒருவர் கேட்டார்: "உழைத்து சாப்பிடாமல், ஏன் பிச்சை எடுக்கிறாய்?". அதற்கு அந்த பிச்சைகாரன், "ஐயா! எனக்கு திடீரென்று வேலை போய்விட்டது. கடந்த ஒரு வருடமாக நான் வேறு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், எதுவும் கிடைக்கவில்லை... உங்களைப் பார்த்தால் பெரிய மனிதர் போல இருக்கிறீர்கள். எனக்கு நீங்கள் ஒரு வேலை வாங்கிக்கொடுத்தால் பிச்சையெடுப்பதை விட்டுவிடுகிறேன்" என்றான்.

"உனக்கு நிச்சயம் உதவவேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், வேலை வாங்கி தரும் எண்ணம் எனக்கில்லை. வேறு ஒன்றை மனதில் வைத்திருக்கிறேன்" என்றார் செல்வந்தர். "வேறு ஒண்ணா... எதுவா இருந்தாலும் சரி, என் பிரச்சினை தீர்ந்தா போதும்" என்றான் பிச்சைக்காரன். அதற்கு செல்வந்தர், "உன்னை என்னுடைய பிசினஸ் பார்ட்னர் ஆக்கப்போகிறேன்" என்றார். "என்னது பிசினஸ் பார்ட்னரா...?" என்று ஆச்சரியத்தோடு கேட்டான் பிச்சைக்காரன்.

"ஆமாம்... எனக்கு சொந்தமாக பலநூறு ஏக்கரில் விவசாய நிலம் இருக்கிறது. அதில் விளையும் தானியங்களை நீ சந்தையில் விற்கலாம். உனக்குக் கடை வைக்க இடம், தானியம் உட்பட அனைத்தையும் தருகிறேன். நீ செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். தானியங்களை விற்று, லாபத்தில் எனக்கு பங்கு தரவேண்டும். அவ்வளவு தான்!" என்றார் செல்வந்தர். "முதலீடே செய்யாமல் இப்படி ஒரு வாய்ப்பா?" என்று பிச்சைக்காரன் மனம் குதூகலத்தில் மூழ்கியது.

"ஐயா! லாபத்தை நாம எப்படி பிரிச்சிக்கப்போறோம்?... உங்களுக்கு 90% எனக்கு 10% என்றா? இல்லை உங்களுக்கு 90% எனக்கு 10% என்றா எப்படி??" என்று ஆர்வத்தோடு கேட்டான். "இல்லை, நீ 90% எடுத்துகிட்டு எனக்கு 10% கொடுத்தா போதும்" என்றார் செல்வந்தர். அதைக்கேட்ட பிச்சைகாரனுக்கு ஒரு கணம் பேச்சே வரவில்லை. பின்னர் அவன் "எனக்கு வாழ்க்கையையே பிச்சை போட்ட தெய்வமே, நான் உனக்கு என்றென்றைக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கேன்" என்று அவன் அந்த செல்வந்தரின் கால்களில் விழுந்தான்.

இருவரும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி அனைத்தும் நடைபெறத் துவங்கியன. பிச்சைக்காரனிடம் செல்வம் குவிய ஆரம்பித்தது. முதலில் பணம் ஆயிரங்களில் புரளத் துவங்கி அடுத்த சில வாரங்களில் அது லட்சங்களை எட்டியது. ஆனால் ஒரு கட்டத்தில் பிச்சைக்காரன் தனக்கு இந்த வாழ்க்கையை அளித்த அந்த வள்ளலை மறந்தே விட்டான். ஒரு சில மாதங்கள் சென்றன. அதுவரை தனது பிஸ்னஸ் பார்ட்னரான அந்த செல்வந்தனின் பங்காக தினசரி 10% ஒதுக்கி வந்தவன், ஒரு கட்டத்தில் தனக்கு தானே கேட்டுக்கொண்டான், "என்னோட பார்ட்னருக்கு நான் ஏன் 10% கொடுக்கணும்? அவர் கடைக்கே வர்றதில்லையே. உழைப்பு எல்லாம் என்னோடது. இரவு பகலா நான் தான் வேலை செய்யுறேன் இனி எனக்கே 100% லாபம்" என்று முடிவு செய்தான்.

அடுத்த சில நிமிடங்களில் செல்வந்தர் புதுப்பணக்காரனாகிவிட்ட பழைய பிச்சைக்காரனிடம் தனது லாபத்தின் பங்கைப் பெற கடைக்கு வந்தார். அப்போது அவன், "உழைப்பு எல்லாம் என்னோடது. அப்படியிருக்க உங்களுக்கு எதுக்கு நான் 10% தரனும்? எனக்கு தான் எல்லா லாபமும் சொந்தம்!" என்று ஓவராகப் பேசத் தொடங்கினான். இதனால் கடுஞ்சினமுற்ற செல்வந்தர், "இந்த வாழ்க்கையே நான் உனக்குப் பிச்சை. அப்படியிருக்க எனக்குச் சேர வேண்டிய 10% லாபத்தைக் கொடுக்க யோசிக்கிறாயா?" என்று அவனைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினார்.

இந்த வாழ்வும் இதில் நாம் அனுபவிக்கும் அத்தனை வசதிகளும் கடவுள் நமக்கு அருளிய/கொடுத்த கொடை/பிச்சை. அப்படியிருக்கும்போது அதையெல்லாம் வசதியாக மறந்துவிட்டு என்னால்தான் எல்லாம் என்று தப்பட்டம் அடிப்பது எந்தவிதத்தில் நியாயம்?.

எல்லாம் இறைவனின் கொடை

நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவானிடத்தில், அவருடைய சீடர்களும் இன்னும் ஒருசிலரும் வந்து, யோர்தான் ஆற்றின் அக்கரைப் பகுதியில் இயேசு திருமுழுக்குக் கொடுப்பதையும், மக்கள் அனைவரும் அவரிடம் செல்வதையும் எடுத்துச் சொல்கின்றனர். அப்போதுதான் திருமுழுக்கு யோவான் அவர்களிடம், "விண்ணிலிருந்து அருளப்படாவிட்டால், எவரும் எதையும் பெற்றுக் கொள்ள முடியாது" என்கின்றார். இதை நாம் வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், நாம் அனுப்பவிக்கும் வாய்ப்பு, வசதிகள் அனைத்தும் இறைவன் கொடுத்தது. அவருடைய கருணை இல்லாமல், நம்மால் ஒன்றும் பெற்றுக்கொள்ள முடியாது என்பதாகும். பவுலடியாரும் இதே கருத்தைத்தான் 1 கொரி 3:1-9 ல் வலியுறுத்திக் கூறுவார்.

ஆகையால், இறைவனின் அருளால்தான் நாம் எல்லாக் கொடைகளையும் பெற்று வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்பதை உணர்வது தேவையான ஒன்று.


இறைவன் நமக்குக் கொடுத்திருக்கின்ற கொடைகளை இறைவனின் மகிமைக்காகப் பயன்படுத்துவோம்.அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
1யோவான் 5:14 - 21

இறைவனுக்குத் திருவுளமானால், நம் வேண்டுதல் கேட்கப்படும்

நிகழ்வு

அது ஒரு பண்டிகை நாள். அன்றைய நாளில் பெண்ணொருத்தி கையில் பணமேதும் இல்லாமல், மளிகைக் கடையில் பொருட்கள் வாங்கச் சென்றாள். அவள் கையில் பணமில்லாமல் சென்றதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று அவளுடைய குடும்பத்தில் நிலவிய வறுமை. அவளுடைய கணவரோ பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கிக் கிடந்தார். அவளுக்கு இரண்டு பெண்பிள்ளைகள் இருந்தன. அந்த இரண்டு பிள்ளைகளையும் படிக்க வைப்பதற்கே அவளுடைய வருமானம் போதுமானதாக இருந்தது. இதில் எங்கிருந்து அவள், நல்ல நாளுக்கு வாய்க்கு ருசியாக சமைத்துப் போடுவது?.

அந்தப் பெண்மணி கையில் பணமில்லாமல் சென்றதற்கான இரண்டாவது காரணம். அவள் கடவுள்மீது கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை. எப்படியும் இந்த பண்டிகை நாளில், கடவுள் தனக்கும் தன்னுடைய குடும்பத்தைப் போன்றே வறிய நிலையில் இருக்கின்ற தனது அக்கம் பக்கத்துக்குக் குடும்பங்களுக்கும் நல்ல உணவினை உட்கொள்ள மளிகைப் பொருட்களைத் தந்து உதவுவார் என்று நம்பிக்கையோடு அவள் மளிகைக் கடைக்குச் சென்றாள்.

அவள் கடைக்குச் சென்ற நேரம் கடையில் கடைக்காரர் மட்டுமே இருந்தார். வேறு யாரும் அங்கு இல்லை. கடைக்காரர் அவளிடம், "என்னம்மா வேண்டும், சொல்" என்றார். அவளோ, "நல்லதொரு விருந்து படைக்கத் தேவையான பொருட்கள் எல்லாம் வேண்டும்" என்றாள். "அப்படியா... கையில் எவ்வளவு பணம் வைத்திருக்கின்றாய்" என்று கேட்டார் கடைக்காரர். அதற்கு அந்தப் பெண், "கையில் பணமெல்லாம் இல்லை. நேற்று இரவு மனமுருகி ஒரு தாளில் என் குடும்பத்தின் கஷ்டத்தை நினைத்து ஒரு ஜெபத்தை எழுதி வைத்தேன், அந்தத் தாள் இருக்கின்றது" என்றாள்.

கடைக்காரர் அந்தப் பெண்மணியை ஒருநிமிடம் ஏற இறங்கப் பார்த்தார். காரணம் அவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். இருந்தாலும் இளகிய மனம் படைத்தவர். பின்னர் அவர் அந்த பெண்மணியைப் பார்த்து, "சரிம்மா, என்னுடைய கடையையும் உன்னுடைய ஜெபத்தையும் நம்பி இங்கு வந்துவிட்டாய். இப்போது நீ ஜெபம் எழுதி வைத்திருக்கின்ற அந்த தாளைக் கொடு. அதனை நான் தராசில் ஒரு பகுதியில் வைத்துவிட்டு, அதனுடைய எடைக்கு இணையாக உனக்கு மளிகைப் பொருட்களைத் தருகிறேன்" என்றார். அந்தப் பெண்மணியும் அதற்குச் சரியென்று சொல்ல, கடைக்காரர் ஜெபத்தாளை ஒருபக்கம் வைத்துவிட்டு, இன்னொரு பக்கம் கொஞ்சம் அரிசியை அள்ளி வைத்தார்.

அப்படி அவர் அரிசியை அள்ளி வைக்கும்போது, எப்படியும் இந்த அரிசியின் எடைக்குக் கூட இந்த ஜெபத்தாளின் எடை இருக்காது என்ற எண்ணத்தோடுதான் அள்ளி வைத்தார். ஆனால், அவர் ஆச்சரியப்படும் வகையில் ஜெபத்தாள் இருந்த பகுதி தாழ்த்தும், அரிசி இருந்த பகுதி உயர்த்தும் இருந்தது. 'கொஞ்சூண்டு அரசியைத்தானே வைத்தோம். இப்போது ஒருகிலோ அரிசியை வைத்துவிட்டு என்ன நடக்கின்றது என்று பார்ப்போம்' என்று ஒருகிலோ அரிசியை அள்ளி வைத்தார் அவர். அப்போதும் ஜெபத்தாள் இருந்த பகுதி தாழ்ந்திருந்தது. பின்னர் அவர் காய்கறிகள், மளிகைச் பொருட்கள் என்று நிறைய எடுத்து வைத்தார். அப்போதும் ஜெபத்தாள் இருந்த பகுதியே தாழ்ந்திருந்தது. இதைப் பார்த்து மிரண்டு போன கடைக்காரர், பத்துப் பேர் சாப்பிடுகின்ற அளவுக்கு மளிகைச் சாமான்களை எடுத்து தராசில் வைத்தார். அப்போதுதான் ஜெபத்தாள் இருந்த பகுதியும் மளிகைச் சாமான்கள் இருந்த சரிசமமானது.

இதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட கடைக்காரர் அந்த பெண்மணியைப் பார்த்து, "அம்மா! உன்னுடைய ஜெபம் உண்மையிலே ஆற்றல் வாய்ந்தது. இறைவன் உனக்கு வேண்டிய மட்டும் பொருட்களைக் கொடுக்கவேண்டும் என்று நினைத்திருக்கின்றார் போலும், அதனால்தான் இப்படியோர் அதிசயம் நடந்திருக்கின்றது" என்று அவரைப் பாராட்டிவிட்டு, ஜெபத்தாளுக்கு இணையாக இருந்த மளிகைச் சாமான்களை அந்தப் பெண்மணியிடம் எடுத்துக் கொடுத்து அனுப்பி வைத்தார்.

தன்னுடைய விருப்பதற்கு ஏற்ப, யாராரெல்லாம் தன்னிடம் நம்பிக்கையோடு வேண்டுகிறார்களோ, அவர்களுக்கு இறைவன் செவி சாய்க்கின்றார் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது.

இறைவனுக்குத் திருவுளமானால், நம் வேண்டுதல் கேட்கப்படும்

இன்றைய முதல் வாசகத்தில் யோவான், "நாம் கேட்பது கடவுளுடைய திருவுளத்திற்கு ஏற்ப அமைந்திருப்பின், அவர் நமக்குச் செவி சாயக்கின்றார்" என்கின்றார். இறைவன் எல்லாவற்றுக்கும் செவி சாய்ப்பதில்லை. ஆனால், அவர் யாராரெல்லாம் தன்னுடைய திருவுளத்திற்கு ஏற்ப ஜெபிக்கின்றார்களோ, அவர்களுக்கு செவிமடுக்கின்றார். மட்டுமல்லாமல், மாசற்ற உள்ளத்தோடு ஜெபிப்போருக்கும் அவர் செவிமடுகின்றார் (திபா 66:18)

சிந்தனை

இறைவனுக்குத் தெரியும் தன்னுடைய பிள்ளைகளுக்கு எப்போது, என்ன கொடுப்பது என்று. இருந்தாலும் நம்பிக்கையோடு அவருடைய திருவுளத்திற்கு ஏற்ப ஜெபிக்கின்றபோது, அவர் நமக்கு செவி சாய்க்கின்றார்.

ஆகவே, நமது ஜெபம் இறைவனுக்கு உகந்ததாக இருக்கச் செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!