Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   10  ஜனவரி 2019  
                                            - திருக்காட்சி விழாவுக்குப் பின் வியாழன்  
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
 கடவுளிடம் அன்பு செலுத்துவோர் தம் சகோதரர் சகோதரிகளிடமும் அன்பு செலுத்த வேண்டும்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 04: 19-05: 04

அன்பார்ந்தவர்களே, கடவுளே முதலில் நம்மிடம் அன்பு செலுத்தியதால் நாமும் அன்பு செலுத்துகிறோம். கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் பொய்யர். தம் கண் முன்னேயுள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது. கடவுளிடம் அன்பு செலுத்துவோர் தம் சகோதரர் சகோதரிகளிடமும் அன்பு செலுத்த வேண்டும்.

இதுவே அவரிடமிருந்து நாம் பெற்ற கட்டளை. இயேசுதான் மெசியா என்று நம்புவோர் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். பெற்றவரிடம் அன்பு செலுத்துவோர் பிள்ளைகளிடமும் அன்பு செலுத்துவர். நாம் கடவுள்மீது அன்புகொண்டு அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது, கடவுளின் பிள்ளைகள்மீதும் அன்பு கொள்கிறோம் என்பது நமக்குத் தெரியவரும். ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில்தான் கடவுள் அன்பு அடங்கியுள்ளது. அவர் கட்டளைகள் நமக்குச் சுமையாய் இருப்பதில்லை. ஏனெனில் கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும்; உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா: 72: 1-2. 14-15bc. 17 (பல்லவி: 11)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.

1 கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். 2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! பல்லவி

14 அவர்கள் உயிரைக் கொடுமையினின்றும் வன்முறையினின்றும் விடுவிப்பார்; அவர்கள் இரத்தம் அவர் பார்வையில் விலைமதிப்பற்றது. 15bஉ அவருக்காக இடையறாது வேண்டுதல் செய்யப்படுவதாக! அவர்மீது ஆசிகள் வழங்கப்பெறுமாறு நாள் முழுதும் மன்றாடப்படுவதாக! பல்லவி

17 அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக! கதிரவன் உள்ள வரையில் அவர் பெயர் நிலைப்பதாக! அவர் மூலம் மனிதர் ஆசி பெற விழைவராக! எல்லா நாட்டினரும் அவரை நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக! பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
லூக் 04: 18-19

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர் என முழக்கமிட்டு அறிவிக்கவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று.

+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 04: 14-22

அக்காலத்தில் இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய்க் கலிலேயாவுக்குத் திரும்பிப்போனார். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது. அவர் அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்து வந்தார். எல்லாரும் அவரைப்பற்றிப் பெருமையாகப் பேசினர்.

இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார்.

இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது: "ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்.

ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்."

பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன.

அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, "நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று" என்றார்.

அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, "இவர் யோசேப்பின் மகன் அல்லவா?" எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 01யோவான் 04:19-05:04

*தனக்குக் அடுத்திருப்பவரை அன்பு செய்யாதவன்,
ஆண்டவரையும் அன்பு செய்வதில்லை*


நிகழ்வு

முன்பொரு காலத்தில் ஆபிரகாம் என்றொரு யூத ராபி இருந்தார். அவரிடத்தில் ஒவ்வொருநாளும் ஏராளமான மனிதர்கள் வந்துபோனார்கள். அதற்குக் காரணம், அவர் மனிதர்களுடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சிக்கல்களுக்கு மிக நுட்பமான முறையில் தீர்வுசொல்லி வந்ததுதான்.

ஒருநாள் அவரிடத்தில் படித்த இளைஞர் ஒருவர் வந்தார். அவர் ராபியிடம், "ஐயா! வணக்கம். உங்களைக் குறித்து நான் நிறையக் கேள்விப்பட்டிருக்கின்றேன். நீங்கள் உங்களிடத்தில் வருகின்ற யாவருக்கும் மிகத் தெளிவான முறையில் பதில்தந்து, அவர்களை மனநிம்மதியோடு அனுப்பி வைத்திருக்கிறீர்கள் என்று... இப்போது என்னுடைய வாழ்வில் ஒரு சிக்கல் ஏற்பட்டிருக்கின்றது. என்னிடத்தில் இறையச்சம் பெருக, நான் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துவிட்டேன். ஆனால், என்னிடத்தில் இறையச்சம் துளிகூட இருப்பதாகத் தெரியவில்லை. இதற்கு நீங்கள்தான் ஒரு தீர்வு சொல்லவேண்டும்" என்றார்.

இளைஞர் சொன்னதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த ராபி, "உங்களிடத்தில் இறையச்சம் பெருகச் செய்வதற்கு என்னிடத்தில் எந்தவொரு தீர்வும் இல்லை. ஆனால் இறையச்சத்தை விட மேலான ஒரு காரியம் இருக்கின்றது. அது உங்களிடத்தில் பெருகச் செய்ய என்னிடத்தில் அற்புதமான ஒரு வழிமுறை இருக்கின்றது" என்றார். இறையச்சத்தைவிட மேலான ஒரு காரியம் ஒன்று இருக்கின்றதா? அப்படியானால் அது என்னவென்று எனக்குச் சொல்லுங்கள். அது என்னிடத்தில் பெருகுவதற்கான வழிமுறையையும் சொல்லுங்கள்" என்று கெஞ்சி நின்றார் அந்த இளைஞர்.

உடனே ராபி அவரிடம், "இறையச்சத்தைவிட மேலான காரியம். இறையன்பு ஆகும். அந்த இறையன்பு உன்னிடத்தில் பெருகவேண்டும் என்றால், நீ உன்னோடு வாழக்கூடிய உன் சகோதர சகோதரியை அன்பு செய்" என்றார். ராபி சொன்ன வார்த்தைகளில் மன நிறைவு அடைந்த இளைஞர் அவருக்கு நன்றிசொல்லிவிட்டு அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்.

இறையன்பும் பிறரன்பும் வேறு வேறு அல்ல, அவை ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். நம்மிடத்தில் இறையன்பு பெருக, பிறரன்போடு இருக்கவேண்டும். பிறரன்பு பெருக இறையன்போடு இருக்கவேண்டும்.

சகோதரனை வெறுக்கின்றவன், சர்வேசுரனையும் வெறுக்கின்றான்

அன்பின் திருத்தூதர் என அழைக்கப்படும் யோவான், அன்பினை பல கோணங்களில் விவரித்து எழுதுகின்றார். இன்றைய முதல் வாசகத்தில் அவர், "கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்லுக்கொண்டு தம் சகோதர சகோதரிகளை வெறுப்போர் பொய்யர். தம் கண் முன்னேயுள்ள சகோதர சகோதரிகளிடத்தில் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது" என ஆணித்தரமாகச் சொல்கின்றார்.

ஆலய வழிபாடுகளில் கலந்துகொண்டுவிட்டு, ஒருசில பக்தி முயற்சிகளைச் செய்தாலே போதும், அது இறைவனை அன்பு செய்வதாகிவிடும். அப்புறம் உடன் வாழும் மனிதர்களை எப்படிவேண்டுமானாலும் நடந்திக்கொள்ளலாம் என்று பலர் இருந்தனர். இன்றைக்கும் அப்படிப்பட்ட மனநிலையோடு இருக்கின்றனர். இப்படிப்பட்டவர்களைப் பார்த்துதான் யோவான் பொய்யர் என்று சொல்கின்றார். இதைத் தொடர்ந்து அவர் முன் வைக்கின்ற ஒரு வாதம்தான், கண் முன்னேயுள்ள சகோதர சகோதரிகளிடத்தில் அன்பு செலுத்ததோர், கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது" என்பதாகும்.

இதற்கு இயேசு சொல்லக்கூடிய வரிதண்டுபவர், பரிசேயர் உவமையைக்கூட ஒரு மிகச் சிறந்த உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். பரிசேயரோ கடவுளை விழுந்து விழுந்து வணங்கினார். வாரத்திற்கு இருமுறை நோன்பிருப்பதாகும், பத்திலொரு பங்கைக் காணிக்கை தருவதாகவும் பிதற்றனார். ஆனால் ஆலயத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்த வரிதண்டுபவரை மதிக்கவில்லை, அவரை அவதூறாகப் பேசினார். அதனாலேயே அவர் கடவுளை அன்புசெய்யாதவர் ஆனார், அவருடைய ஜெபம் இறைவனால் கேட்கப்படாமலே போனது. ஒருவேளை அந்த பரிசேயர், வரிதண்டுபவரோடு இணக்கமாக இருந்து, அவரைப் பற்றி நல்லவிதமான எண்ணத்தைக் கொண்டு இறைவனிடம் ஜெபித்திருந்தால்கூட, இறைவன் அவருடைய ஜெபத்தைக் கேட்டிருப்பார். ஆனால், அது நடக்கவில்லை. ஆகவே, கடவுளை அன்பு செய்வதாகச் சொல்வோர், தன்னோடு வாழக்கூடிய சகோதர, சகோதரிகளையும் அன்புசெய்யவேண்டும்.

சிந்தனை

படமாடும் கோயில் பகவர்க்கு ஒன்று ஈயில், நடமாடும் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா. நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில், படமாடும் கோயில் பகவர்க்கு அது ஆமே" என்பார் ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்த திருமூலர். சக மனிதனுக்கு ஒன்று செய்யும்போது அது சர்வேசுரனுக்கே சென்று சேர்கின்றது என்பதுதான் இதன் பொருள்.

நாம் நம்மோடு வாழக்கூடிய சகோதர சகோதரிகளை எந்தவொரு வேற்றுமை பாராட்டாமல் அன்பு செய்வோம். அதன்வழியாக இறைவனை அன்பு செய்பவர்கள் ஆவோம். இறையருள் நிறைவாய் பெறுவோம்.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 லூக்கா 04:14-22

ஏழைகளுக்கு நற்செய்தி

நிகழ்வு

பாகிஸ்தானில் உள்ள லாகூரில் இருந்த ஒரு செல்வச் செழிப்பான இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர் குஷால் பாத்திமா. சிறுவயது முதலே பெற்றோரின் அரவணைப்பில் வளர்ந்து வளர்ந்து வந்த இவருக்கு 9 வயது நடக்கும்போது கொடிய நோய் வந்தது. இவருடைய பெற்றோர் இவரை பெரிய பெரிய மருத்துவமனைக்கெல்லாம் கொண்டு சென்று பார்த்தபோதும்கூட, அங்கிருந்த மருத்துவர்கள், "தங்களால் ஒன்றும் செய்ய முடியாது" என்று கைவிரித்து விரித்துவிட்டனர். இதனால் இவருடைய பெற்றோர் இவரை வீட்டுக்குக் கொண்டுவந்து கவனித்து வந்தனர்.

இந்நிலையில் குஷால் பாத்திமாவினுடைய தந்தை, "தன்னுடைய ஒரே மகளுக்கு இப்படி ஆகிவிட்டதே" என்ற வருத்தத்திலே இறந்துபோனார். இதனால் இவர் தாயின் ஆதரவில் நாட்களைக் கழித்துவந்தார். அப்போதெல்லாம் இவர் அழாத நாளில்லை. ஒருநாள் இரவு இவர் கண்ணீர்விட்டு அழுதுகொண்டிருந்தபோது, குர்ஆனில் வரும் இயேசு நபியையும், அவர் தன்னுடைய பன்னிரெண்டு திருத்தூதர்களோடு சேர்ந்து நோயாளிகளைக் குணமாக்கியதையும், சென்ற இடங்களிலெல்லாம் நன்மைகள் பல செய்துவந்ததையும் நினைவுகூர்ந்தார். இப்படி அவர் நினைத்துக் கொண்டிருக்கும்போது, இயேசு தன்னுடைய பன்னிரெண்டு திருத்தூதர்களோடு அவர்முன் தோன்றி, "மகளே! உன்னை நான் எனக்கு சாட்சியாக ஏற்படுத்துகிறேன்" என்று சொல்லிவிட்டு மறைந்துபோனார்.

இந்நிகழ்விற்குப் பிறகு குஷால் பாத்திமா, தான் முற்றிலுமாகக் குணமானதை உணர்ந்தார். மறுநாள் அவரை வந்து பார்த்த அவருடைய தாயார் மற்றும் அவருடைய அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள், "மருத்துவர்களால் கைவிடப்பட்ட இவர் இப்படி அதிர்ஷ்டவசமாகக் குணமடைந்திருக்கின்றாரே" என்று மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். அன்றுமுதல் குஷால் பாத்திமா தனக்கு வாழ்வு கொடுத்த இயேசுவுக்கு சான்று பகரவும், அவருடைய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் எடுத்துரைக்கவும் தொடங்கினார். இதனால் பலர் அவரை நாடி வந்தார்கள்.

இதற்கிடையில் தன் மகள் இப்படி இயேசுவைப் பற்றி நற்செய்தி அறிவித்துக் கொண்டிருகிறாளே, இவளை என்ன செய்தால் தகும் என்று யோசித்துப் பார்த்த குஷால் பாத்திமாவின் தாயார், அவரை லாகூரில் இருந்த சேரிப்பகுதியில் விட்டுவிட்டு வந்துவிட்டார். தன்னுடைய தாயார் தன்னை இப்படி ஏழைகள் வாழும் சேரிப்பகுதியில் விட்டுவிட்டாரே என்பதை நினைத்து குஷால் பாத்திமா கவலைப்படவில்லை. மாறாக அங்குள்ள மக்களுக்கு அவர் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எடுத்துரைக்கத் தொடங்கினார். இதனால் பலரும் கிறிஸ்தவ மதத்தைத் தழுவினார்கள். அவரும்கூட தன்னுடைய பெயரை எஸ்தர் என மாற்றிக்கொண்டார். எஸ்தராக மாறிய குஷால் பாத்திமா வல்லமையோடு ஆண்டவருடைய வாக்கை எடுத்துரைத்து வந்தார்.

அவரைப் பற்றிய காட்டுத்தீ போல எங்கும் பரவியது. இதைப் பற்றிக் கேள்விப்பட்ட காவல்துறை அதிகாரிகள், எஸ்தாரால் பெரிய பிரச்சினை வரும் என்று, அவரைப் பிடித்துக்கொண்டு போய், சிறையில் அடைத்து வைத்து கடுமையாகச் சித்ரவதை செய்தார்கள். அப்படியும்கூட அவர் அங்கிருந்த சிறைக்கைதிகளுக்கு இயேசுவைப் பற்றி அறிவித்து வந்தார். இதனால் அங்கிருந்த சிறை அதிகாரிகள் அவரை ஓர் இருட்டறையில் அடைத்து வைத்து, கடுமையாகச் சித்ரவதை செய்து கொன்றனர்.

ஓர் இஸ்லாமியப் பெற்றோருக்கு மகளாகப் பிறந்து, இயேசுவால் தொடப்பட்டு, ஏழை எளிய மக்களுக்கு நற்செய்தி அறிவித்து உயிர்நீத்த குஷால் பாத்திமா என்ற எஸ்தர் "நற்செய்தி அறிவிப்புப் பணிக்கு" மிகச் சிறந்த முன்மாதிரி.

ஏழையாகப் பிறந்து, ஏழைகளோடு இருந்து, ஏழைகளுக்கு நற்செய்தி அறிவித்த இயேசு

நற்செய்தி வாசகத்தில், இயேசு "தன்னுடைய வழக்கப்படி" தொழுகைக்கூடத்திற்கு வந்து, வாசிக்க எழுகின்றார். அங்கு அவரிடத்தில் எசாயாவின் சுருளேடு கொடுக்கப்பட, அதில் வருகின்ற "ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கவும்..." என்பதை வாசித்துவிட்டு, "நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிவிட்டது" என்று சொல்லிவிட்டு அமர்கின்றார்.

ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்க இறைவன் தன்னை அனுப்பியதாகக் கூறும் இயேசு, தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஏழையோடு ஏழையாக இருந்து, ஏழைகளுக்கு நற்செய்தி அறிவித்தார் என்பது யாரும் மறுக்கமுடியாத உண்மை. ஏழைகள் யாராலும் கவனம் செலுத்தப்படாதவர்கள், கண்டுகொள்ளப்படாதவர்கள். அதனாலே இயேசு அவர்கள்மீது கரிசனைகொண்டு அவர்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்.

சிந்தனை

ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஏழைகள்மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி, அவர்களுக்கு நற்செய்தி அறிவித்தார். நாமும் இயேசுவைப் போன்று ஏழைகள்மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி, அவர்களுக்கு நற்செய்தி அறிவிப்பது நம்முடைய கடமை.

ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம், அவரைப் போன்று ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!