Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   09  ஜனவரி 2019  
                                                    திருக்காட்சி விழாவுக்குப்பின் புதன் 
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
 நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு நிலைத்திருக்கிறார்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 11-18

அன்பார்ந்தவர்களே, கடவுள் நம்மீது அன்பு கொண்டார் என்றால், நாமும் ஒருவர் மற்றவர்மீது அன்பு கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். கடவுளை எவரும் என்றுமே கண்டதில்லை. நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்; அவரது அன்பு நம்மிடம் நிறைவு பெறும். அவர் தமது ஆவியை நமக்கு அருளியதால் நாம் அவரோடு இணைந்திருக்கிறோம் எனவும் அவர் நம்மிடம் இணைந்திருக்கிறார் எனவும் அறிந்துகொள்கிறோம்.

தந்தை தம் மகனை உலகிற்கு மீட்பராக அனுப்பினார் என்பதை நாங்களே கண்டறிந்தோம்; சான்றும் பகர்கிறோம். இயேசுவே இறைமகன் என ஏற்று அறிக்கையிடுபவரோடு கடவுள் இணைந்திருக்கிறார்; அவரும் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுள் நம்மிடம் கொண்டுள்ள அன்பை அறிந்துள்ளோம்; அதை நம்புகிறோம். கடவுள் அன்பாய் இருக்கிறார்.

அன்பில் நிலைத்திருக்கிறவர் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார். கடவுள் இருப்பதுபோல் நாமும் இவ்வுலகில் இருக்கிறோம். எனவே தீர்ப்பு நாளில் உறுதியான நம்பிக்கை கொண்டிருப்போம். இவ்வாறு நம்மிடையே உள்ள அன்பு நிறைவடைகிறது. அன்பில் அச்சத்திற்கு இடமில்லை; மாறாக நிறை அன்பு அச்சத்தை அகற்றிவிடும். ஏனெனில் அச்சத்தில் தண்டனை உணர்வு அடங்கியுள்ளது; அச்சம் கொண்டுள்ளவரிடம் அன்பு முழு நிறைவு அடையாது.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா: 72: 1-2. 10-11. 12-13 (பல்லவி: 11)
=================================================================================
 பல்லவி: ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.

1 கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். 2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக. பல்லவி

10 தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்; சேபாவிலும் செபாவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டு வருவார்கள். 11 எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்; எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள். பல்லவி

12 தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார். 13 வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
01 திமொ 03: 16 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! பிற இனத்தாருக்குப் பறை சாற்றப்பட்ட கிறிஸ்துவே, உமக்கு மகிமை; விசுவாசத்தோடு உலகில் ஏற்கப்பட்ட கிறிஸ்துவே, உமக்கு மகிமை. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இயேசு கடல்மீது நடப்பதைக் கண்டனர்.

+ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 06: 45-52

ஐயாயிரம் பேர் உணவு உண்ட பின் இயேசு கூட்டத்தினரை அனுப்பிக் கொண்டிருந்தார்.

அப்பொழுது தம் சீடரையும் உடனே படகேறித் தமக்கு முன் அக்கரையிலுள்ள பெத்சாய்தாவுக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப்படுத்தினார். அவர் அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு, இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைக்குச் சென்றார்.

பொழுது சாய்ந்த பிறகும் படகு நடுக்கடலில் இருந்தது. ஆனால் அவர் தனியே கரையில் இருந்தார். அப்போது எதிர்க்காற்று அடித்தது. சீடர்கள் தண்டு வலிக்கப் பெரிதும் வருந்துவதைக் கண்ட அவர் கடல்மீது நடந்து அவர்களை நோக்கி வந்தார்; அவர்களைக் கடந்து செல்ல விரும்பினார்.

அப்போது ஏறக்குறைய நான்காம் காவல்வேளை. அவர் கடல்மீது நடப்பதைக் கண்டு, 'அது பேய்' என்று எண்ணி அவர்கள் அலறினார்கள். ஏனெனில் எல்லாருமே அவரைக் கண்டு அஞ்சிக் கலங்கினர்.

உடனே இயேசு அவர்களிடம் பேசினார். "துணிவோடு இருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்" என்றார்; பிறகு அவர்களோடு படகில் ஏறினார். காற்று அடங்கியது. அவர்கள் மிகமிக மலைத்துப் போனார்கள். ஏனெனில் அப்பங்கள் பற்றிய நிகழ்ச்சியை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் உள்ளம் மழுங்கிப் போயிருந்தது.



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 மாற்கு 6: 45-52

காக்கும் இறைவன்!

நிகழ்வு

மக்கள் போக்குவரத்து அதிகமாக இருக்கும் ஒரு சாலையை ஒட்டியிருந்த ஒரு நான்குமாடி கட்டிடத்தில் குடியிருந்து வந்தான் ராஜன். ஒருநாள் அவன் தூங்கி எழுந்தபோது, ஜன்னலிலிருந்து கிரிச், கிரிச் என சத்தம் வந்துகொண்டிருந்தது. என்ன சத்தம் என்று அவன் எழுந்து சென்று பார்த்தபோது, ஜன்னல் கதவில் வெளிப்பக்கமாக அடிக்கப்பட்டிருந்த ஆணி ஒன்று கழண்டிருப்பது தெரியவந்தது. முந்தின இரவில் அடித்த பேய்க்காற்றில்தான் ஆணி கழண்டிருக்கின்றது போலும் என யூகித்தவனாய், இதனை உடனடியாக சரிசெய்தால்தான் நல்லது, இல்லையென்றால் இந்தச் சத்ததில் மனுஷன் நிம்மதியாக இருக்க முடியாது என நினைத்துக்கொண்டு, வீட்டில் இருந்த சுத்தியலைத் தேடி எடுத்துக்கொண்டு வந்து, கழண்டிருந்த ஆணியை மாட்டத் தொடங்கினான்.

அவ்வாறு அவன் ஆணியை ஜன்னல் கதவின் வெளிப்பக்கமாக அடித்துக்கொண்டிருந்தபோது, அவனுடைய கையில் இருந்த சுத்தியல் நழுவிக் கீழே விழுந்தது. உடனே அவன் அலறியடித்துக் கொண்டு, "ஐயையோ! ஜன்னல் இருக்கும் இடத்திக்கும் கீழே வயதான பெரியவர் ஒருவர் தள்ளுவண்டியில் பழங்களை விட்டுக்கொண்டிருப்பாரே, அவருடைய தலையில் சுத்தியல் விழுந்தால், அவருடைய கதி என்னாகுமோ" என்று கீழே ஓடிவந்தான்.

அவன் கீழே இறங்கி ஓடிவருவதற்கு சிறிதுநேரத்திற்கு முன்பாக, அங்கு வந்த ஒரு காவல்துறை அதிகாரி நடைபாதையில் யாரும் வியாபாரம் செய்யக்கூடாது என்று அவன் இருந்த அடுக்குமாடி கட்டிடத்திற்குக் கீழே இருந்த பெரியவர் உட்பட எல்லாரையும் விரட்டிக்கொண்டிருந்தார். இதனால் அந்த இடத்தைக் காலிசெய்துவிட்டு பெரியவர் வேறொரு இடத்திற்குப் போய்க்கொண்டிருந்தனர். ராஜன் கீழே இறங்கிப் பார்த்தபோது, பெரியவர் உட்பட யாருமே இல்லாதது கண்டும், எந்தவொரு ஆபத்தும் நடக்காதது கண்டும் நிம்மதிப் பெருமூச்சுவிட்டான்.

கடவுள்தான் இந்தக் காவல்துறை அதிகாரி மூலம் வீட்டிற்குக் கீழ் காய்கறி வியாபாரம் செய்து வந்த பெரியவரை எந்தவொரு ஆபத்தில்லாமல் வேறொரு இடத்திற்கு விரட்டியிருக்கிறார் என்று கடவுளுக்கு நன்றி சொல்லத் தொடங்கினான் ராஜன்.

கடவுள் தன் மக்களுக்கு எந்தவொரு ஆபத்தும் வராமல் காத்திடுவார் என்பதற்கு இந்த நிகழ்வு ஓர் எடுத்துக்காட்டு.

சீடர்களை அக்கரைக்கு அனுப்பிய இயேசு

நற்செய்தி வாசகத்தில், இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீனைகளையும் எடுத்து ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்தளித்த பின்னர், மக்களை அவர்களுடைய ஊர்களுக்கு அனுப்பிவைத்துவிட்டு, தன் சீடர்களை அக்கரைக்கு அக்கரையில் உள்ள பெத்சாய்தாவிற்கு அனுப்பி வைத்துவிட்டு, இறைவனிடம் வேண்டுவதற்காக மலைச் செல்கின்றார்.

இயேசு, மக்களையும் சீடர்களையும் ஏன் முன்கூட்டியே அனுப்பிவைக்கவேண்டும் என்று கேள்வி எழலாம். இதற்கான பதிலை நாம் யோவான் நற்செய்தி 6:14-15 ல் வரக்கூடிய இறைவார்த்தையோடு இணைத்துச் சிந்தித்துப் பார்த்தால் விளங்கும். இயேசு அப்பங்களைப் பலுகச் செய்த பின்னர், இவர்தான் வரவிருந்த மெசியா என்று மக்கள் அவரை அரசராக்க முயன்றார்கள் என்று யோவான் நற்செய்தியில் வாசிக்கின்றோம். இத்தகைய ஒரு நிலை வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இயேசு மக்களையும், அதே மனநிலையில் இருந்த சீடர்களையும் அக்கரைக்கு அனுப்பி வைக்கின்றார். அதன்பின்னர் இறைவனிடம் வேண்டுவதற்காக அவர் மலைக்குச் செல்கின்றார்.

சீடர்களுக்கு ஆபத்துக்கு என்றதும் அவர்களைக் காப்பாற்ற விரைந்து வந்த இயேசு

இயேசு இறைவனிடம் மலையில் வேண்டுதற்காகச் சென்றாலும் அவருடைய நினைப்பு எல்லாம் தன் சீடர்கள் பற்றியதாகவே இருக்கின்றது, அதனால்தான் அவர் தன் சீடர்கள் தண்டு வலிக்கப் பெரிதும் வருந்துவதைக் கண்ட இயேசு அவர்களுக்கு உதவி செய்வதற்காக விரைந்து வருகின்றார்.

பலநேரங்களில், இறைவன் நாம் நன்றாகக் கஷ்டப்படவேண்டும், ஆபத்தில் மாட்டிக்கொண்டு அலைகழிக்கப்படவேண்டும் என்று விரும்புகிறார் போலும் என்று நினைக்காலம். உண்மை இதுவல்ல. நம் இறைவன் ஆபத்தில் அபயம் தருபவராகவும் உடனிருப்பவராவும் இருக்கின்றார் என்பதே உண்மை. அதற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம்தான் இன்றைய நற்செய்தி வாசகம். இதில் இன்னொரு விசயமும் இருக்கின்றது. அது என்னவென்றால், இயேசு தன் சீடர்களுக்கு ஆபத்து ஒன்று உதவ வருகின்றார். ஆனால், சீடர்களோ இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளாமல், அவரைப் பேயென நினைத்து அலறுகின்றார். அப்போதுதான் இயேசு அவர்களிடம், "துணிவோடிருங்கள். நான்தான், அஞ்சாதீர்கள்" என்று அவர்களுக்குத் திடமளிக்கின்றார்.

ஆகையால், நம்முடைய ஆபத்தான, இக்காட்டான வேளையில் இறைவன் நமக்கு உதவ வருகின்றார் எனில், அவரிடத்தில் நம்பிக்கை கொள்வதே சிறப்பு.

சிந்தனை

"அஞ்சாதே, நான் உனக்குக் கேடயமாக இருப்பேன்" (தொநூ 15:1) என்று ஆண்டராகிய கடவுள் ஆபிரகாமைப் பார்த்துச் சொல்வர். அதே வார்த்தையைத்தான் இறைவன் இன்றைக்கு நம்மையும் பார்த்துச் சொல்கின்றார். ஆகவே, நாம் அஞ்சாமல், ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 01 யோவான் 04: 11-18

அன்புசெலுத்துவோரோடு கடவுள் இணைந்திருக்கின்றார்

நிகழ்வு

ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் பன்னிரெண்டாம் வகுப்புப் படித்துவந்த மாணவிகளிடம், வகுப்பு ஆசிரியை ஒரு பொது அறிவுக் கேள்வியைக் கொடுத்து, இந்தக் கேள்விக்கான விடையை ஒரு நிமிடத்தில் எழுதித் தருவோருக்கு பரிசு உண்டு என்று சொன்னார். ஆசிரியை மாணவிகளிடம் கொடுத்த இதுதான்: "உங்களுக்குத் தெரிந்த ஏழு அதிசயங்களை எழுதுங்கள்".

ஆசிரியை கொடுத்த இந்த கேள்விக்கான விடையை மாணவிகள், "கிசாவின் பெரிய பிரமிடு, பாபிலோனின் தொங்கு தோட்டம், ஒலிம்பியாவின் ஸேயுஸ் சிலை, மீட்பரான கிறிஸ்துவின் சிலை, கொலோசியம், சீனப் பெருஞ்சுவர், தாஜ்மகால்" என்று வேகமாக எழுதி, விடைத்தாளை ஆசிரியையிடம் கொடுத்தார்கள். ஒருசில மாணவிகள் ஏழு அதியசங்களில் ஒன்றிரண்டை விட்டிருந்தாலும்கூட, பெரும்பாலான மாணவிகள் ஏழு அதிசயங்களையும் எழுதி வைத்திருந்தார்கள்.

ஆனால், வகுப்பில் இருந்த ஒரே ஒரு மாணவி மட்டும் விடைத்தாளை ஆசிரியையிடம் கொடுக்காமல், தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள். அந்த மாணவியோ அமைதியானவள், வகுப்பில் இருக்கும் மற்ற மாணவிகளிடம் அவ்வளவாகப் பேசாதவள். அந்த மாணவியைக் கவனித்த ஆசிரியை அவளருகே சென்று கரிசனையோடு, "என்னம்மா, கேள்விக்கான விடை தெரியவில்லையா?, தெரியவில்லை என்றால் பரவாயில்லை, விட்டுவிடு" என்றார். "அப்படியெல்லாம் இல்லை மிஸ், அதிசயங்கள் என்று எவ்வளவோ இருக்கின்றன... அவற்றில் எவற்றையெல்லாம் எழுதுவது என்றுதான் யோசித்துக்கொண்டிருக்கின்றேன்" என்றாள்.

உடனே ஆசிரியை, "அப்படியாமா... சரி நீ அதிசயங்கள் என்று நினைத்து எழுதியவற்றை இப்போது வாசித்துக்காட்டு" என்றார். அந்த மாணவியும் சற்றுத் தயக்கத்துடனே, "தொடுதல், பார்த்தல், கேட்டல், ருசித்தல், உணர்தல், சிரித்தல், கடைசியாக அன்பு செலுத்துதல்" என்று வாசித்து முடிந்தாள். அமைதியாக இருக்கும் இந்த மாணவி இப்படியெல்லாம் யோசிப்பாளா என்று அவளைப் பார்த்து வியந்துபோனா ஆசிரியை, அவளைக் கட்டி அணைத்துக்கொண்டு, எல்லா மாணவிகளையும் பார்த்து, "உண்மையில் அன்புதான் மேலான அதிசயம். இதை எழுதிய இந்த மாணவிக்குதான் நான் பரிசு தரப்போகிறேன்" என்றார். இதைக் கேட்ட வகுப்பில் இருந்த அத்தனை மாணவிகளும் எழுந்துநின்று அவளைப் பாராட்டினார்கள்.

ஆம், உலகத்தில் எத்தனையோ அதிசயங்கள் இருந்தாலும், அன்பு ஒன்றுதான் மேலான அதிசயம்.

மேலான அதிசயமான அன்பைக் கொண்டிருப்போர் ஆண்டவரோடு இணைந்திருப்பர்

யோவான் தன்னுடைய முதல் திருமுகத்தில், அன்பின் பல பரிமாணங்களை எடுத்துச் சொல்லிக்கொண்டே வருகின்றார். இன்றைய முதல் வாசகத்தில், "ஒருவர் மற்றவரிடத்தில் அன்பு செலுத்துவோர், கடவுளோடு இணைந்திருக்கின்றார். அப்படிப்பட்டவரிடத்தில் கடவுளுடைய அன்பு நிறைவாகத் தங்கும்" என்று சொல்கின்றார்.

அன்பு என்பது ஒரு சாதாரண வார்த்தை கிடையாது. அது செயல். அத்தகைய அன்பினை நம்முடைய உள்ளத்தில் கொண்டு, அதனை வாழ்வாக்குகின்றபோது, அன்பின் வடிவமாக, அன்பாக இருக்கின்ற இறைவன் நம்மோடு இணைந்திருக்கின்றார். அதே நேரத்தில், நம்மிடத்தில் உண்மையான அன்பு இல்லாதபோது, பகைமையையும் வெறுப்பினையும் மட்டும் கொண்டிருந்தால் நாம் ஒருபோதும் இறைவன் இணைத்திருக்கமாட்டோம் என்பது நிதர்சனமான உண்மை.

பழைய ஏற்பாட்டில் வருகின்ற ஆபேல் அன்பின் உருவமாக இருந்தார். அவர் இறைவன்மீது கொண்டிருந்த அன்பின் வெளிப்பாடாக, தன்னுடைய நிலத்தில் விளைந்ததைக் கொண்டுவந்து மனமுவந்து ஆண்டவருக்குக் காணிக்கை செலுத்தினார். அதனால் இறைவன் அவரோடு இருந்தார். ஆனால், காயின் அப்படியில்லை. அவன் இறைவனுக்கு மனமுவந்து காணிக்கை செலுத்தவில்லை, அவன் இறைவனிடத்தில் கொண்டிருந்த அன்பில்கூட உண்மை இல்லை. அதனாலேயே இறைவன் இறைவன் அவரோடு இணைந்திருக்கவில்லை. நாம் ஒருவரிடத்தில் கொண்டிருக்கின்ற அன்பினைப் பொறுத்தே இறைவன் நம்மோடு இணைந்திருப்பதும் இணைந்திருக்காததும் உள்ளது.

சிந்தனை

"என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்" (யோவா 14:23) என்று இயேசு கிறிஸ்து யோவான் நற்செய்தியில் மிக அழுத்தம் திருத்தமாகக் கூறுவார்.

இயேசுவின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதன் வழியாகவே நாம், அவர்மீதும் அடுத்தவர்மீதும் உள்ள நம்முடைய அன்பினை வெளிப்படுத்த முடியும். அப்படியில்லாதபோது நாம் இறைவனையோ, அடுத்தவரையோ உண்மையாக அன்பு செய்ய முடியாது. இயேசு நம்மீது அன்பினால் தன்னுடைய உயிரையே தந்தார், நாமும் பிறர்மீது உள்ள அன்பினை வெளிப்படுத்த உயிரைத் தருகின்ற அளவுக்கு முன்வரவேண்டும். அப்போதுதான் நம்முடைய அன்பு முழுமை பெறும். அப்போதுதான் இறைவனும் நம்மோடு இணைந்திருப்பார்.

ஆகவே, இறைவன்மீதும் அடுத்தவர்மீதும் நாம் கொண்டிருக்கும் அன்பு வெறுமனே பேச்சளவிலே நின்றுவிடாமல், அது செயல்வடிவம் பெற முயற்சிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
நற்செய்தி (மாற்கு 6:45-52)

மழுங்கிப் போயிருந்தது

'இரவில் அல்லது தனிமையான ஓர் அறையில் திடீரென ஓர் உருவத்தை நாம் கண்டால், 'பேய்' என்று அலறுகிறோமே தவிர, 'கடவுளே' என்று கும்பிடுவதில்லை' என்பது நான் அண்மையில் இரசித்த டுவிட்டர் கீச்சொலி. என்னதான் நாம் கடவுளை முழுக்க முழுக்க நம்பினாலும், அவர் நம் முன் தோன்றமாட்டார் என்பதே அதைவிடப் பெரிய நம்பிக்கையாக நிற்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இப்படி ஒரு உருவத்தைக் கடலில் பார்த்த இயேசுவின் சீடர்கள், 'அது பேய்' என்று அலறுகிறார்கள்.

இன்றைய நற்செய்தி வாசகம் நேற்றைய நற்செய்தி வாசகப் பகுதியின் தொடர்ச்சியாக இருக்கிறது. ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் பலுகிப் பெருகி, பசும்புல் தரையில் அமர வைத்து மக்களைப் பசியாற்றும் இயேசு, மக்கள் கூட்டத்தையும், தொடர்ந்து சீடர்களையும் அனுப்பவிட்டு - 'கட்டாயப்படுத்தி அனுப்பிவிட்டு' எனப் பதிவு செய்கின்றார் மாற்கு - இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைக்குச் சென்றார். இறைவேண்டல் முடித்துவிட்டு திரும்புகிறார். படகு நடுக்கடலில் இருக்கின்றது. அவர்கள் அங்கே தண்டு வலிக்கப் பெரிதும் வருந்த, இவர் தனியே ஒய்யாரமாகக் கடலில் நடந்து அவர்களைக் கடக்க விரும்புகிறார்.

அவர்களைக் கடந்து செல்ல அவர் ஏன் விரும்பினார்? என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால், அவர் கடந்து செல்வதைக் கண்டு சீடர்கள், 'அலறுகிறார்கள்,' 'அஞ்சிக் கலங்குகிறார்கள்.' தங்கள் வயிற்றுக்கு உணவு கொடுத்தவர் பேயாகத் தெரிகின்றது அவர்களுக்கு. ரொம்ப சிம்பிள் லாஜிக். இயேசுவை அவர்கள் அங்கே எதிர்பார்க்கவில்லை. அவ்வளவுதான்.

எதிர்பார்ப்பை உடைப்பதுதானே அற்புதம். 'ஐயாயிரம் பேர் பசியாறுவார்கள்' என சீடர்கள் எதிர்பார்க்கவில்லை. அப்போது அற்புதம் நடந்தேறுகிறது. 'துணிவோடு இருங்கள்' என்று சொன்ன இயேசு அவர்களோடு படகில் ஏறிக்கொள்கின்றார்.

சீடர்களின் உணர்வுகளை ஐந்து வார்த்தைகளில் சொல்கின்றார் மாற்கு: (அ) 'அலறினார்கள்,'

(ஆ) 'அஞ்சிக் கலங்கினார்கள்,'

(இ) 'மலைத்துப் போனார்கள்,'

(ஈ) 'புரிந்து கொள்ளவில்லை',

(உ) 'உள்ளம் மழுங்கிப் போயிருந்தது.'

மாற்கு நற்செய்தியாளர் சீடர்களை கொஞ்சம் க்ரே ஸ்கேலில்தான் வரைகின்றார். சீடர்களின் முதல் புரிந்துகொள்ளாத்தன்மையை இங்கே பார்க்கின்றோம்.

'மழுங்கிய உள்ளம்' - 'மழுங்குதல்' என்ற வார்த்தையை பெரும்பாலும் நாம் கூர்மையானவற்றின் எதிர்ப்பதமாகப் பார்க்கின்றோம். மழுங்கிய கோடரி மரத்தை வெட்டுவதில்லை. மழுங்கிய கத்தி காய்கறிகள் வெட்டுவதில்லை. அப்படியே வெட்ட முயன்றாலும் அது நிறைய கைவலியைக் கொடுப்பதோடு, நாம் வெட்டுகின்ற பொருளையும் பாழாக்கிவிடுகிறது - தக்காளியைக் கூர்மையான கத்தியால் வெட்டினால் அழகாக இருக்கிறது, மழுங்கிய கத்தியால் வெட்டினால் நம் முகத்தில் பீய்ச்சி அடித்துவிடுகிறது - இல்லையா?

எப்போது கத்தி மழுங்குகிறது? அதிகப்படியாக பயன்பாட்டிற்கு உட்படும்போது, அல்லது தவறாகப் பயன்படுத்தப்படும்போது. பயன்பட்டு மழுங்கினால் பரவாயில்லை. தவறாகப் பயன்படுத்தப்பட்டு மழுங்கக்கூடாது.

'உள்ளம் மழுங்குதல்' என்பது 'புரிந்துகொள்ளும் தன்மை இழத்தல்' என்பதன் உருவகமே. இயேசுவை மிக எளிதாக, ஒரு சாதாரண நபராக எடுத்துக்கொள்கிறார்கள் சீடர்கள். அவர்கள் சில மணிநேரங்களுக்கு முன் கண்ட அற்புதம் அவர்களின் புரிதலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. அவர்கள் கண்ட அற்புதம் அவர்களின் புரிதலைக் கூர்மைப்படுத்தவில்லை. 'இது என்ன விந்தை!' என அவர்கள் ஆச்சர்யப்படவில்லை. 'ஆகா, இவரல்லவா ஆண்டவர்!' என்று இயேசுவை உச்சி முகரவில்லை. 'பேய்' என அஞ்சுகிறார்கள்.

இன்று நான் என் ஆன்மீக வாழ்வில் எப்படி இருக்கிறேன்? இறைவனையும், அவரின் அருஞ்செயல்களையும் நான் அன்றாடம் அனுபவித்தாலும், அவரைக் கண்டுகொள்ளாமல் என் மனம் சில நேரங்களில் மழுங்கியிருப்பது ஏன்?

இதை நம் மனித உறவுகளில் பொருத்திப் பார்த்தால், 'மழுங்கிய உள்ளத்தால்'தான் சந்தேகம், ஒப்பீடு, பொறாமை வருகிறது. வாழ்வின் நிறைவான பொழுதுகளைத் திரும்பிப் பார்த்தால், கடல் போன்ற அலையடிக்கும் பொழுதுகளில் என் உள்ளம் கூர்மையாகும்.

இறுதியாக, இயேசுவின் பதிலுணர்வு இன்னும் ஆச்சர்யமாக இருக்கிறது. அவர்களின் மழுங்கிய உள்ளத்தை, புரிந்துகொள்ளாத்தன்மையை, அலறலை, அச்சத்தைக் கடிந்துகொள்ளவில்லை. ஒரு புன்னகையோடு படகில் ஏறிக்கொள்கிறார்.

எல்.கே.ஜி குழந்தைகளுக்கு 'நான்கு மாடுகளும் ஒரு சிங்கமும்' என்ற கதைதான் நடத்த முடியுமே தவிர, 'ஆஸ்கர் வைல்டின் பாடல்களை' நடத்த முடியாது என்பது அவருக்குத் தெரியும்.

புன்னகை - நம் வாழ்வில் நாம் சந்திக்கும் மழுங்கிய உள்ளங்களைக் கடக்க உதவும் படகு.


Rev. Fr. Yesu Karunanidhi
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!