Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   08  ஜனவரி 2019  
                                           திருக்காட்சி விழாவுக்குப் பின் செவ்வாய்
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
 கடவுள் அன்பாய் இருக்கிறார்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 7-10

அன்பார்ந்தவர்களே, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள்.

அன்பில்லாதோர் கடவுளை அறிந்துகொள்ளவில்லை; ஏனெனில், கடவுள் அன்பாய் இருக்கிறார். நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார்.

இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் கடவுள் மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்புகொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது.



இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:  72: 1-2. 3-4ab. 7-8 (பல்லவி: 11)
=================================================================================
 பல்லவி: ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.

1 கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். 2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! பல்லவி

3 மலைகள் மக்களுக்குச் சமாதானத்தைக் கொடுக்கட்டும்; குன்றுகள் நீதியை விளைவிக்கட்டும். 4யb எளியோரின் மக்களுக்கு அவர் நீதி வழங்குவாராக! ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாராக. பல்லவி

7 அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக. 8 ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
லூக் 4: 18-19

அல்லேலூயா, அல்லேலூயா! "ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டோர் விடுதலை அடைவர் என முழக்கமிட்டு அறிவிக்கவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார்."அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 இயேசு அப்பம் பெருகச் செய்து, தாம் இறைவாக்கினர் எனக் காட்டுகிறார்.

+ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 34-44

அக்காலத்தில் இயேசு படகிலிருந்து கலிலேயா கடற்கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்.

இதற்குள் நெடு நேரமாகிவிடவே, சீடர் அவரிடம் வந்து, "இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, ஏற்கெனவே நெடுநேரம் ஆகிவிட்டது. சுற்றிலுமுள்ள பட்டிகளுக்கும் ஊர்களுக்கும் சென்று உண்பதற்கு ஏதாவது அவர்களே வாங்கிக் கொள்ளுமாறு நீர் மக்களை அனுப்பிவிடும்" என்றனர். அவர் அவர்களிடம், "நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" என்று பதிலளித்தார்.

அவர்கள், "நாங்கள் போய் இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கி இவர்களுக்கு உண்ணக் கொடுக்க வேண்டும் என்கிறீரா?" என்று கேட்டார்கள்.

அப்பொழுது அவர், "உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன? போய்ப் பாருங்கள்" என்று கூற, அவர்களும் பார்த்துவிட்டு, "ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன" என்றார்கள்.

அவர் எல்லாரையும் பசும்புல் தரையில் அமரச் செய்யும்படி சீடர்களைப் பணித்தார். மக்கள் நூறு பேராகவும், ஐம்பது பேராகவும் வரிசை வரிசையாய் அமர்ந்தனர். அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாறுவதற்காகத் தம் சீடரிடம் கொடுத்தார். அவ்வாறே அந்த இரு மீன்களையும் எல்லாருக்கும் பகிர்ந்தளித்தார். அனைவரும் வயிறார உண்டனர். பின் எஞ்சிய அப்பத் துண்டுகளையும் மீன் துண்டுகளையும் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர். அப்பம் உண்ட ஆண்களின் தொகை ஐயாயிரம்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 01 யோவான் 4: 7-10

ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக

நிகழ்வு

ஓர் அரசு பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்புப் படித்து வந்த ரஞ்சித் என்ற மாணவனை அந்த வகுப்பில் இருந்த எல்லாரும் வெறுத்து வந்தனர். காரணம் அவன் எல்லார்மீதும் கோபப்பட்டு, அடிக்கடி சண்டைபோட்டு வந்தான். இன்னொரு பக்கம் அவன் உடுத்திவந்த பழைய, சில சமயங்களில் கிழிந்த ஆடைகள்கூட அவனுடைய வகுப்பு மாணவர்களை அவனருகே அண்டவிடாமல் செய்தன. ஏற்கனவே படிப்பில் மிகவும் பின்தங்கியிருந்த ரஞ்சித்தை இவையெல்லம் சேர்த்து, அவனை மிகவும் தனிமைப்படுத்தின.

ரஞ்சித் படித்து வந்த அதே வகுப்பில் ரூபன் என்ற ஒரு மாணவன் படித்துவந்தான். அவன் பிடிப்பில் கெட்டிக்காரன். அதே நேரத்தில் கரிசனையோடு இருக்கக்கூடியவன். அப்படிப்பட்டவன் ஒவ்வொருநாளும் ரஞ்சித்தைக் கூர்ந்து கவனித்து வந்தான். அவன் ரஞ்சித்திடம் பேச நினைப்பான். ஆனாலும் ரஞ்சித்தைப் பற்றி அவனுடைய உள்ளத்தில் இருந்த ஒருவிதமான பய உணர்வு, அவனை அவனோடு பேசவிடாமல் தடுத்துக்கொண்டிருந்தது.

ஒருநாள் காலையில் ரூபன் வகுப்பிற்குள் நுழைந்தபோது, ரஞ்சித் வகுப்பில் ஓர் ஓரமாக அமர்ந்துகொண்டு அழுதுகொண்டிருந்தான். அவனருகே சென்ற ரூபன், "ஏனப்பா அழுகிறாய், உனக்கு என்னாயிற்று, சொல். நான் அதை நிவர்த்திசெய்து தருகிறேன்" என்றான். ரஞ்சித் தேம்பித் தேம்பி அழுதுகொண்டே, "என்னை யாருக்குமே பிடிக்கவில்லை. யாரும் என்னை அன்பு செய்யத்தயாராக இல்லை" என்றான். "அழாதே ரஞ்சித். உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும். உன்னை நான் அன்பு செய்கிறேன். இனிமேல் நாம் இருவரும் நண்பர்கள் சரியா" என்று ரூபன் அவனைத் தேற்றினான்.

பின்னர் ரூபன் அவனிடம், "அப்புறம் ரஞ்சித், உன்னுடைய பெற்றோர் என்ன செய்கிறார்கள்?, உன்னுடைய குடும்பத்தில் யாராரெல்லாம் இருக்கிறார்கள் என்று சொல்?" என்றான். ரஞ்சித் மிகவும் தயங்கியவாறு, "என்னுடைய வீட்டில் நான், என் அப்பா, அம்மா அவ்வளவுதான். அம்மா ஒரு கான்சர் பேசியன்ட். அப்பா பயங்கரக் குடிகாரர். அதனால் ஒவ்வொருநாளும் சாப்பிடுவதற்கே மிகவும் கஷ்டப்படுவோம்" என்றான். இதைக் கேட்டு ரூபன் கண்கலங்கினான்.

"கவலைப்படாதே ரஞ்சித். இனிமேல் உனக்குத் தேவையான எல்லாவற்றையும் நான் கவனித்து கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டு, அன்றுமுதல் ரூபன் ரஞ்சித்தோடு அதிகமான நேரம் செலவழித்து அவனுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்தான். மேலும் தன்னுடைய பெற்றோருடைய அனுமதியுடன், ரூபன் தனக்காக வாங்கப்பட்ட புது ஆடைகளை எடுத்துவந்து ரஞ்சித்துக்குக் கொடுத்தான். இதனால் ரஞ்சித் படிப்பிலும் சரி, நடவடிக்கைகளிலும் சரி நன்றாகத் தேறி, அந்த வகுப்பில் உள்ள அனைவருக்கும் பிடித்த ஒரு மாணவனாக மாறினான்.

ரூபன் ரஞ்சித்தின் மீது காட்டிய அன்பு, நாம் ஒவ்வொருவரும் நம்மோடு வாழக்கூடிய சக மனிதர்கள்மீது காட்டவேண்டிய அன்பிற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றது.

அன்பு செலுத்தும் ஒவ்வொருவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்

இன்றைய முதல் வாசகத்தில் யோவான் இவ்வாறு கூறுகிறார், "ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக. ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகின்றது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள்" என்று. இதையே நாம் இன்றைய சிந்தனைக்கு எடுத்துக் கொள்வோம்.

இயேசு கிறிஸ்து தன் சீடர்களுக்கு, ஏன் இந்த மானுட சமூகத்திற்குக் கொடுத்த மேலான கட்டளை, "ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்தவேண்டும்" என்பதாகும். இயேசு சொன்னதுபோன்று நாம் ஒருவர் மற்றவரை, அவர் நம்மை அன்பு செய்ததுபோன்று அன்பு செய்யவேண்டும். இப்படி நாம் ஒருவர் மற்றவரை அன்புசெய்தோம் என்றால், நாம் யாவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்களாகின்றோம். ஏனெனில் கடவுள் அன்பாக இருக்கின்றார்.

இன்றைக்கு நாம் வாழ்ந்துகொண்டிருந்த இவ்வுலகில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கலவரம், வன்முறை என்று தீமையான செயல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் பார்க்கும்போது எங்கே நாம் சாத்தானின் வழிவந்தவர்களோ என்று எண்ணத் தொன்றுகின்றது. சாத்தான் இருக்கின்ற இடத்தில்தான் பிரிவினையும் பிரச்சனைகளும் பிளவுகளும் இருக்கும். ஆகவே, இப்படிப்பட்ட சூழலில், நாம் இயேசு கொடுத்த அன்புக் கட்டளையின் நடந்து, இவ்வுலகை அன்பில் மேலோங்கி இருக்கின்ற ஓர் இடமாக மாற்றுவதுதான் நமக்கு முன்பாக இருக்கின்ற சவாலாக இருக்கின்றது.

சிந்தனை

ஒருவர் சக மனிதரிடம் காட்டுகின்ற அன்பை வைத்துதான் அவர் கடவுளிடமிருந்து வந்தவரா? அல்லது சாத்தானிடமிருந்து வந்தவரா? என்பதை அறிந்துகொள்ளமுடியும். நாம் ஒருவர் மற்றவரை இயேசு நம்மை அன்பு செய்தது போன்று அன்பு செய்வோம். அதன்வழியாக நாம் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள் ஆவோம். அவருடைய அருளை நிறைவாய் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மாற்கு 6:45-52

உணவளிக்கும் இறைவன்

நிகழ்வு

அது ஒரு மலைப்பாங்கான பகுதி. அப்பகுதியில் ஒருசில ஆண்டுகளாகவே மழை பெய்யாததால், அங்கு வசித்து வந்த காட்டு விலங்குகள் உணவுக்காக கீழே இறங்கிவரத் தொடங்கின.

ஒருநாள் உணவுகிடைக்காமல் தவித்த ஒரு குரங்குக்கூட்டம் மக்கள் வந்துபோன ஒருசாலையோரத்தில் மிகவும் பாவமாய் நின்றுகொண்டிருந்தன. அந்நேரத்தில் பழங்களைப் பெட்டி பெட்டியாய் அடுக்கிக்கொண்டு சென்ற ஒரு பெரிய லாரி அந்தப் பக்கமாய் வந்தது. அது அங்கிருந்த பள்ளத்தில் ஏறி இறங்கியபோது, அதிலிருந்து ஒரு பெட்டி சரிந்து கீழே விழுந்தது. லாரியை ஒட்டிக்கொண்டு சென்ற வண்டி ஓட்டுநர், வண்டியிலிருந்து ஒரு பெட்டி கீழே விழுந்ததுகூடத் தெரியாமல் வண்டியை வேகமாக ஓட்டிக்கொண்டு சென்றார்..

லாரியிலிருந்து பெட்டி விழுந்ததைக் கவனித்த குரங்குக்கூட்டம் அதனருகே சென்று, கையில் ஆளுக்கொரு பழத்தை எடுத்துக்கொண்டு பசிதீரச் சாப்பிட்டது.

கடவுள் தன் பார்வையில் உள்ள யாரையும் பசியாய் இருக்க விடமாட்டார் என்பதற்கு இந்த நிகழுவு ஒரு சான்று

ஆயனில்லா ஆடுகள் போன்று இருந்த மக்கள்

நற்செய்தி வாசகத்தில், இயேசு கடற்கரையில் இறங்கியபோது, அங்கு பெருந்திரளான மக்கள் இருப்பதையும், அவர்கள் ஆயினில்லா ஆடுகள் போன்று இருப்பதையும் கண்டு, அவர்கள்மீது பரிவு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பிக்கின்றார். திருப்பாடல் 23 ல் வாசிப்பதுபோல், ஓர் ஆயன் என்பவன் மக்களை நன்முறையில் வழிநடத்தி, அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி, அவர்களுக்கு அரணாக இருக்கவேண்டும். ஆனால், இயேசுவின் காலத்திற்கு முன்பாக இருந்த தலைவர்கள் எல்லாம் ஓர் ஆயனுக்குரிய கடமையை ஆற்றாமல், தங்களை வளப்படுத்திக்கொள்வதிலே குறியாக இருந்ததால், மக்கள் ஆயனில்லாத ஆடுகளைப் போன்று இருந்தார்கள். இதைக் கண்டு இயேசு அவர்கள்மீது பரிவுகொண்டு, அவர்களுக்கு பலவற்றைக் கற்பிக்கின்றார்.

பிரச்சினையைப் பிரச்சினையாகவே மட்டும் பார்த்த சீடர்கள்

இயேசு மக்கள் கூட்டத்திற்கு தொடர்ந்து போதித்துக்கொண்டிருக்கும்போது நேரமாகிவிடவே, சீடர் இயேசுவிடம் வந்து, "மக்களை பக்கத்து ஊர்களுக்குச் சென்று உணவு வாங்கிக்கொள்ளுமாறு அனுப்பிவிடும்" என்கின்றார். இயேசுவோ அவர்களிடம், "அவர்கள் செல்லத் தேவையில்லை, நீங்களே அவர்களுக்கு உணவுகொடுங்கள்" என்கின்றார். இங்கேதான் சீடர்கள் ஒரு பிரச்சினையைக் கையாண்ட விதத்திற்கும், இயேசு ஒரு பிரச்சினையைக் கையாண்ட வித்தியாசத்தையும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். சீடர்கள் இது பாலை நிலமாயிற்றே, இவ்வளவு பெரிய மக்கள்தொகைக்கு இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறுதுண்டுகூடக் கிடைக்காதே என்று பிரச்னையை அதாவது இல்லாததையே நினைத்தையே கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால், இயேசு அப்படியெல்லாம் நினைக்கவில்லை. அவருடைய அணுகுமுறை வித்தியாசமாக இருந்தது.

பிரச்சினையை வாய்ப்பாகப் பார்த்த இயேசு

சீடர்கள், இது பாலைநிலம், இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும், ஆளுக்கு ஒரு சிறுதுண்டுகூடக் கிடைக்காதே என நினைத்துக்கொண்டிருக்கும்போது, இயேசு அவர்களிடம், "உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன? போய் பாருங்கள்" என்கின்றார். அவர்களும் போய் பார்த்துவிட்டு, "ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்கள் உள்ளன" என்கின்றனர். இயேசு அவற்றை ஆசிர்வதித்துவிட்டு மக்களுக்குக் கொடுக்க, பெண்கள், குழந்தைகள் நீங்கலாக ஐயாயிரம் ஆண்கள் உணவு உண்கின்றார்கள்.

சீடர்கள் ஒன்றும் செய்ய முடியாதவாறு கையறு நிலையில் நின்றுகொண்டிருந்தபோது, இயேசுவால் மக்களுக்கு அப்பங்களைப் பகிர்ந்தளிக்க முடிந்தது என்றால், அவர் தனக்கு முன்னால் இருந்த பிரச்சினையை பிரச்சினையாகப் பார்க்காமல், கடவுளின் பேரன்பை, அவர் எல்லா உயிர்களுக்கும் உணவிடுகின்ற அருட்பெருக்கை மக்களுக்குக் காட்டும் ஒரு வாய்ப்பாகப் பார்த்தார். அதனால்தான் அவரால் அத்தனை மக்களுக்கும் உணவிட முடிந்தது. இதை இன்னும் வேறு கோணத்தில் பார்த்தால், சீடர்கள் தங்களுக்கு முன்பாக இருந்த பிரச்சினையை அவநம்பிக்கையோடு அணுகினார்கள். ஆனால், இயேசுவோ கடவுள்மீது கொண்ட நம்பிக்கையால் அணுகினார். அதனால் அதிசயம் நடந்தது.

நாமும் நமக்கு முன்பாக இருக்கக்கூடிய பிரச்சினையை பிரச்சினையாக மட்டும் பார்க்காமல், அதை, நம்மை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஓர் ஏணியாக, வாய்ப்பாக பார்த்தோம் என்றால், நம்மாலும் அதிசயங்களைச் செய்ய முடியும்.

சிந்தனை

வாழ்க்கையை எதிர்மறையாகப் பார்க்கின்றவன், "ரோஜாவில் முட்கள் இருப்பதாகச்" சொல்வான். ஆனால், வாழ்க்கை நேர்மறையாகப் பார்க்கின்றவன், "முள்ளில் ரோஜா இருக்கின்றதே" என்று மகிழ்ச்சி கொள்வான். நாம் நமக்கு முன்பாகப் பிரச்சினை இருக்கின்றதே என்று வருந்தாமல், அந்தப் பிரச்சினையிலும் ஒரு வாய்ப்பு இருக்கின்றது என்ற நேர்மறையோடு வாழ்க்கையை அணுகுவோம். இயேசுவைப் போன்று பரிவுள்ளம் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
நற்செய்தி (மாற் 6:34-44)

பசும்புல் தரையில்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பகிரும் நிகழ்வை நாம் வாசிக்கின்றோம். எல்லா நற்செய்தியாளர்களும் பதிவு செய்கின்ற சில பகுதிகளில் ஒன்று இது. ஏறக்குறைய எல்லா நற்செய்தியாளர்களும் பதிவு செய்யும் ஒரு விடயத்தை இன்றைய நாள் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

'அவர் எல்லாரையும் பசும்புல் தரையில் அமரச் செய்யும்படி சீடர்களைப் பணித்தார்!' (6:39)

இந்த வார்த்தைகளை கொஞ்சம் ரிவைண்ட் செய்துகொள்வோம்.

'சீடர்கள் படகேறி பாலைநிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள்.' (6:33)

அவர்களோடு இயேசுவும் செல்கின்றார். இவர்கள் செல்வதைக் கேட்ட மக்கள் இவர்களுக்கு முன் ஓடோடிச் செல்கிறார்கள். தாய்மார்கள், குழந்தைகளை வைத்திருப்போர், வயதானவர்கள், செருப்பு அணிந்தவர்கள், பிய்ந்துபோன செருப்புக்கு கயிறு கட்டி அணிந்திருந்தவர்கள், செருப்பே அணியாதவர்கள், சிறு குழந்தைகள், நோய்வாய்ப்பட்டோர், நொண்டிக் கொண்டிருப்போர் என அனைவரும் ஒருமிக்க ஓடுகின்றனர். ஓடியது எதை நோக்கி? பாலைநிலம் நோக்கி.

ஏனெனில், மாற்கு மீண்டும் இதைக் குறிப்பால் உணர்த்துகிறார்: 'இயேசு கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயனில்லா ஆடுகளைப் போல இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்கு பலவற்றைக் கற்பித்தார்' (6:34). பாலைநிலத்தில் இருக்கும் ஆடுகளுக்குத்தான் ஆயன் தேவை. பசும்புல் தரையில் இருக்கும் ஆடுகளுக்கு ஆயன் தேவையில்லை. அந்த ஆடுகளைப் பார்த்து பரிவுகொள்ளத் தேவையில்லை.

ஆனால், கொஞ்ச நேரத்தில் என்ன நடக்கிறது?

இயேசு அவர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும் என நினைக்கிறார். உணவும் கொடுக்க முனைகிறார்.

அப்போதுதான், அங்கே முதல் அற்புதம் நிகழ்கிறது. 'பசும்புல் தரை' அவர்கள் கண்களுக்குத் தெரிகிறது. தனிமையான பாலைநிலத்தில் எப்படி பசும்புல் தரை வந்தது?

பாலைநிலத்திலும் பசும்புல் தரையைக் கண்டுபிடிக்க இன்றைய நற்செய்தி மூன்று பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறது:

அ. இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா செய்வது. அதாவது, இயேசு நினைத்திருந்தால் கற்பித்துவிட்டு அப்படியே அவர்களை அனுப்பியிருக்கலாம். வெறும் போதனை பசி ஆற்றாது என்பதை அவர் அறிந்திருக்கிறார். 'போங்க! நல்லா சாப்பிடுங்க!' என்று அவர் அவர்களை அனுப்பியிருக்கலாம். அல்லது, 'சாப்பிட்டு வந்துட்டீங்களா?' என்று கேட்டு மௌனம் காத்திருக்கலாம். 'சாப்பிட்டியா?' என்ற கேள்வி ஒருபோதும் பசியாற்றுவதில்லை. மாறாக, சாப்பிடக் கொடுக்கும்போதுதான் பசி ஆறுகிறது. அதுதான் கொஞ்சம் எக்ஸ்ட்ரா செய்வது.
ஆ. எதிர்மறை எனர்ஜியைக் கண்டுகொள்ளக் கூடாது. சீடர்களின் எனர்ஜி எதிர்மறையாக இருக்கிறது. 'இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே. ஏற்கனவே நெடுநேரம் ஆகிவிட்டது ... ஏதாவது உணவு வாங்கிக் கொள்ளுமாறு அவர்களை அனுப்பிவிடும்!' என்று யோசனை சொல்கின்றார்கள். முதலில், கேட்காமல் எந்த யோசனையும் கொடுக்கக் கூடாது என்ற இங்கிதம் தெரியவில்லை இவர்களுக்கும். அடுத்ததாக, யாருக்கு யோசனை கொடுக்க வேண்டும்? என்ற அறிவும் அவர்களுக்கு இல்லை. மேலும், இந்த யோசனையால் யாருக்கும் பயன் இல்லை. இயேசு இந்த யோசனையை அப்படியே கண்டுகொள்ளாமல் விடுகிறார். மற்றவர்களின் கருத்து தன் செயலைப் பாதிக்க இயேசு ஒருபோதும் விடவில்லை. இது நமக்கு ஒரு நல்ல ஆளுமைப் பாடம்.

இ. 'போய்ப் பாருங்கள்!' - 'இல்லை, இல்லை எனச் சொல்லாதீர்கள். போய் இருப்பதைப் பாருங்கள்' என அனுப்புகிறார் இயேசு. போகிறார்கள். பார்க்கிறார்கள். 'ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் காண்கிறார்கள்.' பல நேரங்களில் நாம் பார்க்கிறோம். ஆனால், காண்பதில்லை. நம் மனம் கூர்மையற்று இருப்பதாலும், பல கவனச் சிதறல்கள் இருப்பதாலும் நம்மால் காண இயல்வதில்லை.

இந்த மூன்று படிகளும் நடந்தவுடன்,

அங்கே பசும்புல் தரை தெரிகிறது.

ஆக, நம் வாழ்விலும், 'வாழ்க்கை நம்மிடம் எதிர்பார்ப்பதை விட இன்னும் கொஞ்சம் அதிகம் செய்யும்போது,' 'எதிர்மறையான எனர்ஜியைக் கண்டுகொள்ளாமல் விடும்போது, 'கையில் இருப்பதைக் கூர்ந்து காணும்போது,' பசும்புல் தரை தெரியும்.

இந்த முதல் அறிகுறி நடந்தவுடன், நிறைவு என்ற அடுத்த அற்புதமும் நடந்தேறும்.


Rev. Fr. Yesu Karunanidhi
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!