Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   05  ஜனவரி 2019  
                                                        கிறிஸ்து பிறப்புக்காலம்
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
 நாம் சகோதர அன்பு கொண்டுள்ளதால், சாவிலிருந்து வாழ்வுக்குக் கடந்து வந்துள்ளோம்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 11-21

அன்பிற்குரியவர்களே, நீங்கள் தொடக்கத்திலிருந்து கேட்டறிந்த செய்தி இதுவே; நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்த வேண்டும். காயினைப்போல் நீங்கள் இராதீர்கள்; அவன் தீயோனைச் சார்ந்தவன்; ஏனெனில் தன் சகோதரரைக் கொலை செய்தான். எதற்காக அவரைக் கொலை செய்தான்? ஏனெனில் அவன் செயல்கள் தீயனவாக இருந்தன. அவன் சகோதரருடைய செயல்கள் நேர்மையானவையாக இருந்தன.

சகோதரர் சகோதரிகளே, உலகம் உங்களை வெறுக்கிறதென்றால் நீங்கள் வியப்படைய வேண்டாம். நாம் சகோதர அன்பு கொண்டுள்ளதால், சாவிலிருந்து வாழ்வுக்குக் கடந்து வந்துள்ளோமென அறிந்துள்ளோம்; அன்பு கொண்டிராதோர் சாவிலேயே நிலைத்திருக்கின்றனர்.

தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் அனைவரும் கொலையாளிகள். எந்தக் கொலையாளியிடமும் நிலைவாழ்வு இராது என்பது உங்களுக்குத் தெரியுமே. கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இதனால் அன்பு இன்னதென்று அறிந்துகொண்டோம். ஆகவே நாமும் நம் சகோதரர் சகோதரிகளுக்காக உயிரைக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். உலகச் செல்வத்தைப் பெற்றிருப்போர் தம் சகோதரர் சகோதரிகள் தேவையில் உழல்வதைக் கண்டும் பரிவு காட்டவில்லை என்றால் அவர்களிடம் கடவுளின் அன்பு எப்படி நிலைத்திருக்கும்?

பிள்ளைகளே, நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம். இதனால் நாம் உண்மையைச் சார்ந்தவர்கள் என அறிந்துகொள்வோம்; நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தாலும், கடவுள் திருமுன் நம் உள்ளத்தை அமைதிப்படுத்த முடியும். ஏனெனில் கடவுள் நம் மனச்சான்றைவிட மேலானவர்; அனைத்தையும் அறிபவர். அன்பார்ந்தவர்களே, நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதிருந்தால் நாம் கடவுள் திருமுன் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்க முடியும்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா: 100:1-5)
=================================================================================
 அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்


1 அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
2 ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சிநிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்!
பல்லவி: அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!

3 ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்!
4 நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப்பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்!
பல்லவி: அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!

5 ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர்.
பல்லவி: அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! புலர்ந்தது நமக்குப் புனித நாள்; பிற இனத்தாரே வருவீர், இறைவன் மலரடி தொழுவீர்; ஏனெனில் உலகின்மீது எழுந்தது பேரொளி இன்றே. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்.

+ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 43-51

அக்காலத்தில் இயேசு கலிலேயாவுக்குச் செல்ல விரும்பினார். அப்போது அவர் பிலிப்பைக் கண்டு, "என்னைப் பின்தொடர்ந்து வா" எனக் கூறினார்.

பிலிப்பு பெத்சாய்தா என்னும் ஊரைச் சேர்ந்தவர். அந்திரேயா, பேதுரு ஆகியோரும் இவ்வூரையே சேர்ந்தவர்கள்.

பிலிப்பு நத்தனியேலைப் போய்ப் பார்த்து, "இறைவாக்கினர்களும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டுகொண்டோம். நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்" என்றார்.

அதற்கு நத்தனியேல், "நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?" என்று கேட்டார். பிலிப்பு அவரிடம், "வந்து பாரும்!" என்று கூறினார்.

நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, "இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்" என்று அவரைக் குறித்து கூறினார்.

நத்தனியேல், "என்னை உமக்கு எப்படித் தெரியும்?" என்று அவரிடம் கேட்டார்.

இயேசு, "பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின்கீழ் இருந்த போதே நான் உம்மைக் கண்டேன்" என்று பதிலளித்தார்.

நத்தனியேல் அவரைப் பார்த்து, "ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்" என்றார்.

அதற்கு இயேசு, "உம்மை அத்திமரத்தின்கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதைவிடப் பெரியவற்றைக் காண்பீர்" என்றார்.

மேலும் "வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்று அவரிடம் கூறினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 1 யோவான் 3: 11-21

அன்பென்பது சொல்லல்ல, செயல்

நிகழ்வு

கணவன், மனைவி, அவர்களுடைய ஒரே ஒரு மகள் என்றிருந்த ஒரு வீட்டிற்கு ஒருநாள் விருந்தினர் ஒருவர் வந்திருந்தார். அவரைப் பார்த்ததும் வீட்டிலிருந்த சிறுமி உற்சாகமானாள்.

அவள் அந்த விருந்தினரிடம் சென்று, "அங்கிள்! என்னிடத்தில் ஏராளமான பொம்மைகள் இருக்கின்றன. அவற்றை நீங்கள் பார்க்க விரும்புகிறீர்களா?" என்று கேட்டாள். விருந்தினரும், "ம்ம்ம்... கொண்டு வா பார்க்கிறேன்" என்றார். உடனே சிறுமி தன்னுடைய அறையிலிருந்த எல்லாப் பொம்மைகளையும் எடுத்து வந்து, அவருக்குக் காட்டினாள். அதில் அழகழகாக ஏராளமான பொம்மைகள் இருந்தன. கூடவே ஒரு பெரிய பர்பி பொம்மையும் இருந்தது. அது பார்ப்பதற்கு மற்ற எல்லாப் பொம்மைகளை விடவும் மிக அழகாக இருந்தது.

சிறுமி கொண்டுவந்து காட்டிய எல்லாப் பொம்மைகளையும் மிகப் பொறுமையாகப் பார்த்த அந்த விருந்தினர், "பாப்பா! இந்த பொம்மைகளில் எந்தப் பொம்மையை நீ மிகவும் அன்பு செய்கிறாய், எது உனக்கு மிகவும் பிடிக்கும்?" என்று கேட்டார். அவர் இவ்வாறு கேட்கும்போது, சிறுமி எப்படியும் தனக்கு பர்பிப் பொம்மைதான் மிகவும் பிடிக்கும் என்று சொல்லுவாள் என்ற நினைப்போடுதான் கேட்டார். ஆனால், அவர் நினைத்ததற்கு மாறாக சிறுமி, "அங்கிள்! இந்த பொம்மைகளிலே எனக்கு மிகவும் பிடித்தது, இதோ அழுக்காக கன்னம் சிதைந்து போய், ஒரு கை இல்லாமல் இருக்கின்றதே, இந்தப் பொம்மைதான்" என்றாள்.

விருந்தினருக்கு சிறுமி பேசியது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவர் தன்னுடைய ஆச்சரியத்தை அடக்க முடியாமல், "பாப்பா! அழுக்காகவும் கன்னம் சேதமடைந்தும், ஒரு கையில்லாமலும் இருக்கின்ற இந்த பொம்மையை உனக்கு ஏன் பிடித்திருக்கின்றது?" என்று கேட்டார். அதற்கு அந்தச் சிறுமி மிகவும் பொறுமையாக, "என்னைத் தவிர யாருக்கும் இந்த பொம்மையைப் பிடிக்கவில்லை, அதனாலேயே எனக்கு இந்த பொம்மையை மிகவும் பிடித்திருக்கிறது. அதனாலேயே இந்த பொம்மையை நான் மிகவும் அன்பு செய்கிறேன்" என்றார்.

ஆண்டவர் இயேசுவும் அப்படித்தான். அவர் இந்த உலகின்மீது மிகவும் அன்புகொண்டிருந்தார். அந்த அன்பினை தனக்குள் வைத்துக்கொள்ளாமல் எல்லாருக்கும், அதிலும் குறிப்பாக யாருமே கண்டுகொள்ளாமல் இருந்த ஏழைகள், அனாதைகள், கைவிடப்பட்டோரிடத்தில் அதை வெளிப்படுத்தினார். ஆம், உண்மையான அன்பு என்பது வெறும் சொல்லோ, பேச்சோ அல்ல, அது செயல்.

செயலில் வெளிப்படாத அன்பு, தன்னிலே உயிரற்றது

இன்றைய முதல் வாசகத்தில் யோவான், "பிள்ளைகளே, நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்" என்று கூறுகின்றார். யோவான் இவ்வாறு கூறுவதற்குக் காரணமில்லாமல் இல்லை. ஏனென்றால், யோவான் வாழ்ந்து வந்த காலத்தில், அவருடைய சபையில் வசதி படைத்தோர் வறியவர்களைக் கண்டும் காணாமல் வாழ்ந்துவந்த ஒரு போக்குதான் நிலவிக் கொண்டிருந்தது. இத்தனைக்கும் அவர்கள் இறைவார்த்தையைக் கேட்டு, தியானித்து வந்தவர்கள். அப்படி இருந்தபோதும் அவர்கள் தங்களுடைய அன்பை சொல்லளவிலும் பேச்சிலும் மட்டும் வெளிப்படுத்தினார்களே ஒழிய, செயலில் வெளிப்படுத்தவில்லை.

பசியாய் இருக்கின்ற ஒருவரைப் பார்த்து, உணவேதும் கொடுக்காமல், "பசியாறிக் கொள்ளுங்கள்" என்று சொல்வது எவ்வளவு போலித்தனமோ, குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கின்ற ஒருவரிடம், போர்த்திக்கொள்ள எதுவும் கொடுக்காமல், "குளிர்காய்ந்து காய்ந்துகொள்ளுங்கள்" என்று சொல்வது எவ்வளவு போலித்தனமோ, அதைப் போன்றதுதான் நம்மிடத்தில் வசதி வாய்ப்பு இருந்தபோதும், வறியநிலையில் இருக்கின்ற ஒருவருக்கு எதுவும் செய்யாமல், பேச்சுக்காக அவர்களை அன்பு செய்கிறேன் என்று சொல்வது. இது தூய யாக்கோபு தன்னுடைய திருமுகத்தில் சொல்வதுபோன்று, "செயலற்ற நம்பிக்கை/ அன்பு தன்னிலே உயிரற்றது". நாம் உயிருள்ள அன்பினைக் கொண்டிருக்கின்றோமா? அல்லது உயிரற்ற அதாவது செயலில் வெளிப்படாத அன்பினைக் கொண்டிருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

சிந்தனை

கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் ஏராளமான செல்வத்தை, வசதி வாய்ப்பினைக் கொடுத்திருக்கின்றார். இதைக் கொண்டு நாம் நம்மோடு வாழக்கூடிய, அதுவும் வறிய நிலையில் இருக்கக்கூடிய சகோதர சகோதரிகளுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யவேண்டும். அப்போதுதான் நம்முடைய அன்பு உண்மையான அன்பாக, செயலில் வெளிப்படுகின்ற அன்பாக இருக்கும். இல்லையென்றால் போலியான, வெறுமனே பேச்சளவில் நின்றுவிடுகின்ற ஒரு அன்பாக இருந்துவிடும்.

ஆகவே, நம்முடைய அன்பிற்கு செயல் வடிவம் கொடுப்போம், நம்மோடு இருப்பவர்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்வோம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 யோவான் 1: 43-51

"இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்"

நிகழ்வு

அது ஒரு மழைக்காலம். இரவுநேரம் வேறு. அந்நேரத்தில் ஊருக்கு வெளியே, தனியாக இருந்த ஒரு குடிசை வீட்டின் கதவு தட்டப்பட்டது. அந்தக் குடிசை வீட்டில் கணவன், மனைவி என இருவர் இருந்தனர். அதற்கு மேலும் அந்த வீட்டில் யாரும் இருக்கமுடியாது. அந்தளவுக்கு அந்தக் குடிசை வீடு மிகவும் சிறியதாக இருந்தது.

"இந்த இராத்திரி நேரத்தில் யார் நம்முடைய வீட்டின் கதவைத் தட்டுவது?, திருடன் கிருடன் எவனாவது வந்து கதவைத் தட்டிக்கொண்டிருக்கின்றானா?" என்று மனைவி பதைபதைத்தாள். "அப்படியெல்லாம் இருக்காது... யாராவது இக்கட்டான சூழலில் மாட்டிக்கொண்டிருப்பார்கள். அதனால்தான் இந்நேரத்தில் நம்முடைய கதவைத் தட்டிக் கொண்டிருக்கின்றார்கள்... யாராக இருக்கும் என்று கதவைத் திறந்து பார்ப்போம்" என்று சொல்லிவிட்டு கணவன் கதவைத் திறந்து பார்த்தான். அங்கே பெரியவர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார்.

"வியாபார விசயமாக பக்கத்துக்கு ஊர்வரை சென்றிருந்தேன். வேலை முடித்துவிட்டு, திரும்பி வருவதற்குள் இருட்டிவிட்டது. இனிமேலும் வீட்டுக்குப் போவதற்கு வழியில்லை. காட்டுப்பகுதி வேறு. அதனால் இந்த இரவுமட்டும் உங்களுடைய வீட்டில் தங்கிக்கொண்டு, அதிகாலையில் கிளம்பிப் போய்விடுகிறேன்" என்றார் அந்தப் பெரியவர். ஒருகணம் யோசித்த கணவர், "ஐயா! எங்களுடைய வீட்டில் இரண்டுபேர் மட்டுதான் கால்நீட்டிப் படுத்துறங்க முடியும். மூன்றாவது நபர் படுத்துக்கொள்கிற அளவுக்கு வீட்டில் இடமில்லை... நீங்கள் விரும்பினால் நாம் மூவரும் உட்கார்ந்து பேசிக்கொண்டே இந்த இரவைக் கழிக்கலாம்" என்றார். அந்தப் பெரியவரும் அதற்குச் சரியென்று சொல்ல, மூவரும் அந்தக் குடிசை வீட்டுக்குள் உட்கார்ந்துகொண்டே நேரத்தைக் கழிக்கத் தொடங்கினார்.

சிறிதுநேரத்திற்குப் பிறகு கதவு மீண்டுமாகத் தட்டப்படும் சத்தம் கேட்டது. யாரென்று கணவர் கதவைத் திறந்து பார்த்தபோது, அங்கே நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒருவர் தொப்பலாக நனைந்துகொண்டு வெளியே நின்றுகொண்டிருந்தார். "தெரிந்தவர் ஒருவருடைய வீட்டுக்குத் திருமணத்திற்குப் போய்விட்டு திரும்புவதற்குள் கடுமையாக மழை பெய்யத் தொடங்கிவிட்டது. இப்போதைக்குப் மழை ஓய்வதாகவும் இல்லை. அதனால் இந்த இரவு மட்டும் நான் ஒதுங்குவதற்கு உங்கள் வீட்டில் இடம் தாருங்கள்" என்றார் அவர். கணவர் அவரிடம், "வீடு மிகவும் சிறியது. வீட்டில் இருக்கும் நாங்களே உட்கார்ந்துகொண்டுதான் நேரத்தைக் கழித்துக்கொண்டிருக்கின்றோம். இப்போது நீங்கள் வரும் பட்சத்தில் எண்ணிக்கை நான்காகிவிடும். நான்குபேர் உட்கார முடியாது. நிற்கத்தான் முடியும். இருந்தாலும் நீங்கள் நிற்பதற்குச் சம்மத்தித்தால் வீட்டிற்குள் வரலாம்" என்றார். அவரும் சரியென்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் வந்தார்.

இப்போது எண்ணிக்கை நான்கானது. நான்குபேரும் நின்று பேசிக்கொண்டே நேரத்தைப் போக்கிக் கொண்டிருந்தனர். அப்போது மீண்டுமாக கதவு தட்டப்பட்டும் சத்தம் கேட்டது. அந்த சத்தத்தைக் கேட்டு திடுக்கிட்டுப் போன மனைவி, "ஏற்கனவே நான்கு பேர், இன்னும் ஓர் ஆளைச் சேர்த்துக்கொள்ளப் போகிறீர்களா? என்பதுபோல் கணவரைப் பார்த்தாள். கணவர் அதை எல்லாம் சட்டை செய்யாமல், கதவைத் திறந்து வெளியே பார்த்தார். அங்கே கழுதை ஒன்று குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தது. அதைப் பார்த்த கணவர், வேறெதுவும் யோசிக்காமல், அந்தக் கழுதையைத் தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் வந்தார். ஏற்கனவே வீட்டில் நான்குபேர் இருக்க, இப்போது கழுதையும் வந்து சேர்ந்ததால் மிகவும் நெருக்கடியானது. எல்லாரும் ஒருவரை ஒருவர் நெருக்கிக்கொண்டுதான் இரவைப் போக்கினார்கள்.

ஒருவழியாக இரவு முடிந்து பொழுது புலர்ந்தது. மழைகூட ஓய்ந்திருந்தது. வீட்டுக்குள் ஒதுங்கியிருந்த பெரியவரும் நடுத்தர வயது மதிக்கத்தக்க மனிதரும் வீட்டாருக்கு நன்றிகூறி அவர்களிடமிருந்து விடைபெற்றனர். அப்படி அவர்கள் விடைபெறும்போது, பெரியவர் கணவரைப் பார்த்து, "இரவில் எங்களுக்கு மட்டுமல்ல, குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த ஒரு கழுதைக்கும்கூட உங்களுடைய வீட்டில் தங்க இடம்கொடுத்தீர்களே, உங்களைப் போன்று கள்ளம் கபறற்ற ஒரு வெள்ளந்தி மனிதனை இதுவரைக்கும் என்வாழ்வில் பார்த்ததே இல்லை, நீங்கள் நல்லா இருக்கணும்" என்று வாழ்த்திவிட்டுப் போனார்.

கபடற்ற நத்தனியேல்

இயேசுவின் சீடராக மாறி, அவரிடமிருந்து அனுபவம் பெற்ற பிலிப்பு, நத்தனியேலைச் சந்தித்து, அவரிடம் இயேசுவைப் பற்றிச் சொல்லி, அவரை இயேசுவிடம் கூட்டிக்கொண்டு வருகின்றார். நத்தனியேல் தன்னிடம் வருவதைக் கண்ட இயேசு, "இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்" என்கின்றார். தம்மைக் குறித்து இயேசு இப்படிச் சொல்வதைக் கேட்டு வியப்படைகின்ற நத்தனியேல், "என்னை உமக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்கின்றார். இயேசுவோ அவரிடம், "நீர் அத்திமரத்தின்கீழ் இருந்தபோதே நான் உம்மைக் கண்டேன்" என்கின்றார்.

"அத்திமரத்தின் கீழ் கண்டேன்" என்று இயேசு சொன்னதற்கு ஓர் அர்த்தம் இருக்கின்றது. அது என்னவென்றால், ஆண்டவருடைய வார்த்தையை தியானிப்பதாகும். நத்தனியேல் இறைவார்த்தையை தியானித்து வந்தார். அந்த வார்த்தையின்படியே தன்னுடைய வாழ்வை மாற்றிக்கொண்டார். அதனால் இயேசு அவரை உண்மையான இஸ்ரயேலர், கபறற்றவர்" என்கின்றார். திருப்பாடல் 1 ஆம் அதிகாரம் நற்பெயர் பெற்றவர் யார் என்பதற்கான விளக்கத்தைத் தரும். அவ்வாறு தரப்படுகின்ற விளக்கத்தில் வருகின்ற ஒரு சொற்றொடர்தான், நற்பெயர் பெற்றவர் யார், "அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர்" என்பதாகும். நத்தனியேலும் மேற்சொன்ன வழிகளில் நடந்திருப்பார். அதனால்தான் அவரை இயேசு உண்மையான இஸ்ரயேலர், கபற்றவர்" என்கின்றார்.



சிந்தனை

நமது வழிபாட்டுக் கொண்டாட்டங்கள், நம்முடைய விவிலிய வாசிப்பு அனைத்தும் நம்மை நத்தனியேலைப் போன்று உண்மையுள்ளவர்களாக, கபற்றவர்களாக, எளியவர் மட்டில் இரங்குபவர்களாக மாற்றவேண்டும். அப்படியில்லாத பட்சத்தில் அவை எல்லாம் வீண்.

ஆகவே, நாம் இறைவார்த்தையை வாசித்து, உண்மையுள்ளவர்களாக, கபற்றவர்களாக, இரக்கமுள்ளவர்களாக வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
என்னைவிட முன்னிடம் பெற்றவர் !

"பிறர் உங்களைவிட மதிப்புக்குரியவர் என எண்ணுங்கள்" (உரோ 12: 10). திருமுழுக்கு யோவானிடமிருந்து இன்று நாம் கற்றுக்கொள்ளும் உளவியல் மற்றும் ஆன்மீகப் பாடம் இதுதான். பிறரை நம்மைவிட மேலானவராகவும், மதிப்புக்குரியவராகவும் உண்மையிலேயே எண்ணுதல், சொல்லுதல், செயல்படுதல். இந்தக் கடினமாக மதிப்பீட்டை திருமுழுக்கு யோவான் எளிதில் செயல்படுத்திக் காட்டினார். "இதோ, கடவுளின் செம்மறி. இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். எனக்குப் பின்வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்" எனச் சான்று பகர்ந்தார்.

நாம் எப்படி? நம்மோடு பணியாற்றபவர்கள், அல்லது நமக்குப் பின் நமது பணியைத் தொடர்பவர்கள் (successors) - இவர்கள் பற்றி நமது மனநிலை என்ன? நமது சொற்கள் என்ன? நமது சான்று என்ன? யோவானைப் போல நம்மாலும் பிறரைப் பாராட்டீ. சான்று பகர முடியுமா?

இன்று இந்தப் பயிற்சியைச் செய்வோமா? இன்று நமது கண்ணில் காணும் அனைவரையும் "இவர் என்னைவிட மதிப்புக்குரியவர்" என மனதிற்குள் சொல்வோம். வாய்ப்பு கிடைத்தால், வாயாலும் அறிக்கையிடுவோம்.

மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். பிறரை எங்களைவிட மதிப்புக்குரியவர் என எண்ணும் நல்ல, நேர்மையான உள்ளத்தை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி,
ஆமென்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!