Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   04  ஜனவரி 2019  
                                                      கிறிஸ்து பிறப்புக் காலம்
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
 கடவுளிடமிருந்து பிறந்தவர் எவரும் பாவம் செய்வதில்லை.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 03: 07-10

பிள்ளைகளே, எவரும் உங்களை நெறிதவறச்செய்ய விடாதீர்கள். கிறிஸ்து நேர்மையாளராய் இருப்பதுபோல், நேர்மையாய்ச் செயல்படுபவர் நேர்மையாளராய் இருக்கின்றார். பாவம் செய்து வருகிறவர் அலகையைச் சார்ந்தவர்; ஏனெனில் தொடக்கத்திலிருந்தே அலகை பாவம் செய்து வருகிறது.

ஆகவே அலகையின் செயல்களைத் தொலைக்கவே இறைமகன் தோன்றினார். கடவுளிடமிருந்து பிறந்தவர் எவரும் பாவம் செய்வதில்லை; ஏனெனில் கடவுளின் இயல்பு அவரிடம் இருக்கிறது.

கடவுளிடமிருந்து பிறந்தவராயிருப்பதால் அவரால் பாவம் செய்ய இயலாது. நேர்மையாய்ச் செயல்படாதவரும், தம் சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதவரும் கடவுளிடமிருந்து வந்தவர்களல்ல. இதனால் கடவுளின் பிள்ளைகள் யாரென்றும் அலகையின் பிள்ளைகள் யாரென்றும் புலப்படும்.



இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா: 98: 1. 7-8. 9 (பல்லவி: 3b)
=================================================================================
  பல்லவி: மாந்தர் அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி

7 கடலும் அதில் நிறைந்தவையும் உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக! 8 ஆறுகளே! கைகொட்டுங்கள்; மலைகளே! ஒன்றுகூடுங்கள். பல்லவி

9 ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்; பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்; மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
எபி 01: 01-02

அல்லேலூயா, அல்லேலூயா! பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 மெசியாவைக் கண்டோம்.

+ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 01: 35-42

அக்காலத்தில் யோவான் தம் சீடர் இருவருடன் மீண்டும் பெத்தானியாவில் நின்றுகொண்டிருந்தார். இயேசு அப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார்.

யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து, "இதோ! கடவுளின் செம்மறி!" என்றார். அந்தச் சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தனர்.

இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின் தொடர்வதைக் கண்டு, "என்ன தேடுகிறீர்கள்?" என்று அவர்களிடம் கேட்டார்.

அவர்கள், "ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?" என்று கேட்டார்கள். 'ரபி' என்னும் எபிரேயச் சொல்லுக்குப் 'போதகர்' என்பது பொருள். அவர் அவர்களிடம், "வந்து பாருங்கள்" என்றார்.

அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள். யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர். அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, "மெசியாவைக் கண்டோம்" என்றார்.

'மெசியா' என்றால் 'அருள்பொழிவு பெற்றவர்' என்பது பொருள். பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார்.

இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, "நீ யோவானின் மகன் சீமோன். இனி `கேபா' எனப்படுவாய்" என்றார். 'கேபா' என்றால் 'பாறை' என்பது பொருள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 01 யோவான் 03: 07 -10

கடவுளின் பிள்ளைகள் யார்?

நிகழ்வு

ஒரு சமயம் மக்கள் அதிகமாகக் கூடியிருந்த சந்தைவெளியில், இளைஞன் ஒருவன் உரத்த குரலில், "பெரியோரே! தாய்மாரே! எல்லாரும் இங்கே வாருங்கள். வந்து என்னுடைய இதயம் எத்துணை அழகாக இருக்கின்றது என்று பாருங்கள்" என்று கத்தினான். அவனுடைய குரலைக் கேட்டு, அக்கம் பக்கத்தில் இருந்தோர் அவனருகே வந்து, அவனது இதயத்தைப் பார்த்தனர். (இதயத்தை எப்படிப் பார்க்க முடியும் என்று யோசித்துக் கொண்டிருக்கவேண்டாம், இது கற்பனைக் கதைதான்). பார்த்த அனைவரும் வியந்து நின்றனர். ஏனெனில், அவன் சொன்னது போன்றே, அவனது இதயம் மிகவும் அழகாக இருந்தது. அப்படிப்பட்ட இதயம் அப்பகுதியில் இருந்த மக்கள் யாரிடத்திலும் இல்லை.

இதற்கிடையில் அங்கு வந்த பெரியவர் அந்த இளைஞன் அருகே சென்று, "தம்பி உன்னுடைய இதயம்தான் அழகானது என்று நீ கர்வப்பட்டுக் கொள்ளவேண்டாம். உன்னுடைய இதயத்தைவிடவும் என்னுடைய இதயம் அழகானது, எல்லார்மீதும் இரங்கக்கூடியது" என்றார். இதைக் கேட்டு அந்த இளைஞன் உட்பட அங்கு கூடியிருந்த எல்லாரும் பெரியவரை வித்தியாசமாகப் பார்த்தார்கள். ஏனெனில் அவருடைய இதயம் பார்ப்பதற்கு அவலட்சணமாகவும், இரத்தம் வழிந்துகொண்டும் இருந்தது.

அப்போது பெரியவர் அந்த இளைஞனைப் பார்த்து, "என் இதயம் பார்ப்பதற்கு வேண்டுமானால் அழகில்லாமல் இருக்கலாம். ஆனால், அன்பு செய்ய யாருமே இல்லாது இருக்கும் மனிதர்களிடத்தில் என்னுடைய இதயத்திலிருந்து ஒரு சிறு பகுதியை எடுத்துக் கொடுத்து, அவர்களை அன்பு செய்திருக்கிறேன். பதிலுக்கு அவர்களுடைய இதயத்திலிருந்து ஒரு சிறு பகுதியை எடுத்து எனக்குக் கொடுத்திருக்கிறார்கள். இன்னும் ஒருசிலர் அன்பின் ஊற்றாக இருக்கும் என்னுடைய இதயத்திலிருந்து ஒரு பகுதியை பெற்றுக்கொண்டபோதும், அதை அவர்கள் திருப்பித் தராமலே போயிருக்கிறார்கள். இதனால்தான் என்னுடைய இதயம் இப்படி இருக்கின்றது" என்றார்.

இதைக் கேட்ட அந்த இளைஞனுக்கு, "இதயத்தை அழகாக வைத்திருப்பதற்கு ஒருவன் தவறு செய்யாமல் இருப்பது மட்டும் பத்தாது, எல்லாரையும் அன்புசெய்யக் கூடியவராகவும், எளியவர்மட்டில் இரங்கக்கூடியவராகவும் இருக்கவேண்டும். அப்படிப்பட்ட மனிதரால்தான் அழகான இதயத்தைக் கொண்டிருக்க முடியும்" என்ற உண்மை விளங்கியது. உடனே அவன் தன்னுடைய இதயத்திலிருந்து ஒரு பகுதியை எடுத்து, அவருடைய இடத்திலிருந்து ஒரு பகுதியை எடுத்து பொருத்திக்கொண்டான். இப்போது அவனுடைய இதயம் பார்ப்பதற்கு முன்புபோல் அழகில்லாமல் இருந்தாலும்கூட, அந்த பெரியவரைப் போன்று எல்லாரையும் அன்பு செய்யவும், எளியவர்மீது இரக்கம்கொள்ளவும் துடித்தது.

கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் ஓர் இதயத்தைக் கொடுத்தது, பத்திரமாக வைத்திருப்பதற்கு அல்ல, அதை அன்பாலும் இரக்கத்தாலும் நிரப்பி, நம்மோடு வாழும் சகோதர, சகோதரரிகளை அன்புசெய்வதற்கே என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த கதை நமது சிந்தனைக்குரியது.

நீங்கள் கடவுளைச் சார்ந்தவர்களா? சாத்தானைச் சார்ந்தவர்களா?

இன்றைய முதல் வாசகத்தில், யோவான் கடவுளின் மக்கள் அல்லது கடவுளைச் சார்ந்தவர் யார்?, சாத்தானைச் சார்ந்தவர் யார்? என்பதற்கான மிகத் தெளிவான விளக்கத்தைத் தருகின்றார்.

கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, பாவ வழியில் நடவாது, நேர்மையாக நடந்து, தம்மோடு வாழக்கூடிய சகோதர சகோதரிகளை யாராரெல்லாம் அன்பு செய்கின்றார்களோ, அவர்களெல்லாம் கடவுளின் மக்கள் அல்லது கடவுளைச் சார்ந்தவர்கள். இதற்கு எதிராக யாராரெல்லாம் பாவச் சேற்றில் விழுந்து, நேர்மையில்லாமல் நடந்துகொண்டு, தம்மோடு வாழக்கூடிய சகோதர சகோதரிகளை அன்பு செய்யாமல், அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றார்களோ அவர்களே சாத்தானைச் சார்ந்தவர்கள். இதனைத்தான் யோவான் தன்னுடைய திருமுகத்தின் வழியாக நமக்குத் தெளிவுபடுத்துகின்றார்.

கடவுளால் படைக்கப்பட்ட ஆதாமும் ஏவாளும் கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படியாமல், சாத்தானின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து, விலக்கப்பட்ட மரத்தின் கனியை உண்டு பாவம் செய்தார்கள். அப்படியிருந்தபோதும், கடவுள் தன்னுடைய பேரன்பினால் தனது ஒரே மகனை அனுப்பி, இந்த உலகத்தினை மீட்டார். இப்படி இயேசுவால் பாவத்திலிருந்து மீட்கப்பட்டிருக்கும் நாம், மீண்டுமாகப் பாவம் செய்து, சாத்தானைச் சார்ந்தவர்களாக மாறுவது எந்த விதத்தில் நியாயம். ஆகவே, நாம் பாவத்திற்கு இறந்தவர்களாய், கடவுளின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து நடக்கின்றவகளாக இருக்கவேண்டும். அப்போதுதான் நாம் கடவுளைச் சார்ந்தவர்களாக இருக்கமுடியும்.

சிந்தனை

இயேசு கூறுவார், "எவரும் இரு தலைவர்களுக்குப் படைவிடை செய்ய முடியாது" என்று. (மத் 6:24). ஆம், நாம் ஒருபோதும் பாவச் சேற்றில் இருந்துகொண்டு கடவுளை அன்பு செய்யவோ, அவரைச் சார்ந்தவராகவே இருக்க முடியாது. ஆகவே, நாம் பாவத்தை விட்டுவிட்டு, நேர்மையோடும், நம்மோடு வாழக் கூடிய சகோதர, சகோதரிகளை அன்பு செய்யும் உள்ளத்தோடும் வாழ்வோம். அதன்வழியாக நாம் கடவுளைச் சார்ந்தவர்களாகி, அவருடைய அருளை நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 யோவான் 01:35-42

என்ன தேடுகிறீர்கள்?

நிகழ்வு

ஒரு காலத்தில் குயோன் (Guyon) என்றொரு இளம்பெண் இருந்தாள். அவளுக்கு கடவுள்மேல் அளவுகடந்த அன்பும் பக்தியும் இருந்தது. நாட்கள் செல்லச் செல்ல குயோனுக்கு தான் மிகவும் அன்புசெய்யும், வணங்கும் கடவுளைப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதனால் கடவுளைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டாள். ஆனால், எங்கெல்லாமோ தேடியும் அவளால் கடவுளைக் கண்டுகொள்ள முடியவில்லை.

இதற்கிடையில் குயோனுக்குத் திருமணம் நடைபெற்றது. அவளை மணந்துகொண்ட ஆடவனோ கடவுள் நம்பிக்கை சிறிதும் இல்லாதவன். அது மட்டுமல்லாமல், கடவுளே கதியெனக் கிடந்த குயோனை அவன் அப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்று கடுமையாகக் கண்டித்து வந்தான். இது குயோனுக்கு கடவுள்மீது இன்னும் அதிகமான ஈடுபாட்டைக் கொடுத்தது. இதனால் அவள் முன்பை விட அதிகமாகக் கடவுளைத் தேடத் தொடங்கினாள்.

ஒருநாள் அவளுடைய ஊருக்கு தூர தேசத்திலிருந்து துறவி ஒருவர் வந்தார். அவரைச் சந்தித்த குயோன் தன்னுடைய விரும்பத்தை அவரிடத்தில் எடுத்துச் சொன்னாள். அதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட அந்தத் துறவி சொன்னார், "இத்தனை நாளும் நீ கடவுளை வெளியேதான் தேடிக்கொண்டிருக்கின்றாயா?.. இனிமுதல் அவரை உன் உள்ளத்தில் தேடு, அவரை நிச்சயம் கண்டுகொள்வாய்" என்றார். துறவி சொன்ன வார்த்தைகள் குயோனுக்கு வித்தியாசமாக இருந்தாலும், அவள் கடவுளைத் தன் உள்ளத்தில் தேடத் தொடங்கி, கடைசியில் கண்டுகொள்ளவும் செய்தார்.

இன்றைக்குப் பலர் கடவுளை எங்கெல்லாமோ தேடி அலைந்துகொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் கடவுளைத் தங்களுடைய உள்ளத்தில் தேடத் தொடங்கினால், நிச்சயம் கண்டுகொள்வார்கள் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைகுரியது.

யோவானின் சீடர்கள் இயேசுவைப் பின்தொடர்ந்து செல்தல்

நற்செய்தி வாசகத்தில், திருமுழுக்கு யோவான் தனது இரண்டு சீடர்களோடு (யோவான், அந்திரேயா) நின்றுகொண்டிருக்கும்போது, இயேசு அப்பக்கமாக வருகின்றார். உடனே யோவான் தன் இரண்டு சீடர்களிடம், "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி" என்று இயேசுவைச் சுட்டிக்காட்டுகின்றார். இதைத் தொடர்ந்து, யோவானின் இரண்டு சீடர்களும் இயேசுவைப் பின்தொடர்ந்து செல்கின்றார்கள்.

இதுவரைக்கும் தன்னைப் பின்தொடர்ந்து வந்தவர்கள், இயேசுவைப் பின்தொடர்ந்து செல்கிறார்களே என்று யோவான் வருந்தவில்லை, மாறாக அவர் அதில் மகிழ்ச்சி அடைகின்றார். திருமுழுக்கு யோவான் மெசியாவின் வருகைக்காகத்தான் ஆயத்தம் செய்யவந்தார். இயேசு வந்ததும், அவர் வளரவேண்டும், நான் குறையவேண்டும் (யோவான் 3:30) என்ற மனநிலையோடு தனது சீடர்களை இயேசுவிடத்தில் அனுப்பிவைக்கின்றார்.

சீடர்களின் பார்வையைக் கூர்மைப்படுத்திய இயேசு

யோவான் தன் சீடர்களிடம் இயேசுவைச் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து அவர்கள், இயேசுவைப் பின்தொடர்ந்து செல்கின்றார்கள். யோவானின் சீடர்கள் தன்னைப் பின்தொடர்ந்து வருவதைப் பார்த்த இயேசு அவர்களிடம், "என்ன தேடுகிறீர்கள்?" என்று கேட்கின்றார். யோவான் நற்செய்தியில் இயேசு பேசிய முதல் வாக்கியம் இதுதான். இதன்மூலமாக இயேசு, யோவானின் சீடர்களுடைய இலக்கை இன்னும் கூர்மைப்படுத்துகின்றார். ஏனென்றால் யோவானின் சீடர்களான யோவானும் அந்திரேயாவும், இயேசுவை மக்களுக்கு விடுதலையைப் பெற்றுத்தரும் ஓர் அரசியல் மெசியாவாகவப் பார்த்திருக்கக்கூடும். ஒருவேளை அவர்கள் அப்படிப்பட்ட எண்ணத்தோடு தன்னிடத்தில் வந்திருந்தால், அதற்கான ஆள் நானில்லை, நீங்கள் தீவிரவாதக் கும்பலுடன் (Zealot) போய் சேர்ந்துகொள்ளுங்கள் என்று சொல்லுகின்ற நிலையில் இயேசுவின் கேள்வி இருக்கின்றது.

இன்றைக்கு பலர் இயேசுவை அற்புதம் நிகழ்த்துபவராகவும் இன்னபிற எண்ணத்தோடும் பார்த்து, அதன்பேரில் அவரைத் தேடிவருவதையும் நாம் இதோடு இணைத்துப் பார்த்துக்கொள்ளவேண்டும்.

ஆனால் யோவானின் சீடர்களோ, இயேசு கேட்ட கேள்விக்கான பதிலைச் சொல்லாமல், "ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?" என்று அடுத்த கேள்வியைக் கேட்கின்றார்கள். இயேசுவும் அவர்கள் உண்மையான தேடலோடுதான் தன்னிடத்தில் வந்திருக்கிறார்கள் என்று அறிந்து, "வந்து பாருங்கள்" என்கின்றார். அவர்களும் வந்து இயேசுவோடு தங்குகிறார்கள். இறையனுபவம் பெற்றுக்கொள்கிறார்கள்.

இங்கே ஒரு செய்தியை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். யோவானின் சீடர்களுடைய தேடல் உண்மையானதாக இருந்தது. அதனால் அவர்களுக்கு இறையனுபவம் கிடைத்தது. இதைப்போன்று இறைவனை நோக்கிய நம்முடைய தேடலும் உண்மையுள்ளதாக இருக்கவேண்டும். இதைவிடுத்து, நம்முடைய தேவைகளை மட்டும் பூர்த்தி செய்துகொள்வதாக இருந்தால், எப்படி இஸ்ரேயல் மக்கள் இயேசுவிடத்தில் வந்தால் தங்களுக்கு வயிறார உணவு கிடைக்கும் என்ற மனநிலையோடு வந்தார்களோ, அதுபோன்று இருந்தால் நமக்கு உண்மையான இறையனுபவம் கிடையாது.

சிந்தனை

"உம்மைச் சரணடையும்வரை என் ஆன்மா அமைதிகொள்ளாது" என்பார் தூய அகுஸ்தினார். ஆம், நம்முடைய தேடல், நமது வாழ்வு இறைவனை நோக்கியதாக இருக்கவேண்டும். அதுமட்டுமல்லாமல், அத்தகைய தேடல் உண்மையானதாக இருக்கவேண்டும்.

ஆகவே, உண்மையான மனநிலையோடு இயேசுவைத் தேடிச் செல்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!