Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   03  சனவரி  2019  
                                    கிறிஸ்து பிறப்புக் காலம் வியாழக்கிழமை 
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
 கடவுளோடு இணைந்திருக்கும் எவரும் பாவம் செய்வதில்லை.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 02: 29-03: 06

அன்பிற்குரியவர்களே, இறைவன் நேர்மையாளர் என நீங்கள் அறிந்துகொண்டால், நேர்மையாகச் செயல்படுவோர் அனைவரும் அவரிடமிருந்து பிறந்தவர்கள் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.

நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால்தான் நம்மையும் அறிந்துகொள்ளவில்லை.

என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை.

ஆனால் அவர் தோன்றும்போது நாமும் அவரைப்போல் இருப்போம்; ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம். அவரை எதிர்நோக்கி இருக்கிற அனைவரும் அவர் தூயவராய் இருப்பதுபோல் தம்மையே தூயவராக்க வேண்டும்.

பாவம் செய்யும் அனைவரும் சட்டத்தை மீறுகின்றனர். சட்டத்தை மீறுவதே பாவம். பாவங்களை நீக்கவே அவர் தோன்றினார் என்பது உங்களுக்குத் தெரியும். அவரிடம் பாவம் இல்லை. அவரோடு இணைந்திருக்கும் எவரும் பாவம் செய்வதில்லை. பாவம் செய்பவர் எவரும் அவரைக் கண்டதுமில்லை, அறிந்ததுமில்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா: 98: 1. 3b-4. 5-6 (பல்லவி: 3b)
=================================================================================
பல்லவி: மாந்தர் அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி

3b உலகெங்குமுள்ள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். 4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி

5 யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள். 6 ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 1: 14,12b

அல்லேலூயா, அல்லேலூயா! வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக் கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகளாகும் உரிமையை அளித்தார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 இதோ! கடவுளின் செம்மறி.

+ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 29-34

அக்காலத்தில் இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், "இதோ! கடவுளின் செம்மறி! செம்மறியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன். இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது.

ஆனால் இஸ்ரயேல் மக்களுக்கு இவரை வெளிப்படுத்தும் பொருட்டே நான் வந்துள்ளேன்; தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தும் வருகிறேன்" என்றார்.

தொடர்ந்து யோவான் சான்றாகக் கூறியது: "தூய ஆவி புறாவைப் போல வானிலிருந்து இறங்கி இவர்மீது இருந்ததைக் கண்டேன். இவர் யாரென்று என்குத் தெரியாதிருந்தது.

ஆனால் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் `தூய ஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர்' என்று என்னிடம் சொல்லியிருந்தார். நானும் கண்டேன்; இவரே இறைமகன் எனச் சான்றும் கூறி வருகிறேன்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


சிந்தனை

இறைமகனோடு இருப்பவர்களுக்கு இருள் இல்லை.

பாவம் அவர்களை தீண்டாது.

அவர் தூயவராக இருப்பதனால், அவரோடு இருப்பவர்களும் தூயவராகவே இருப்பார்கள் என்பதுவே உண்மை.

சிமியோன், அன்னா, திருமுழுக்கு யோவான் என பலரை இங்கு கூறிப்பிடலாம்.

அவரோடு இருப்பவர்கள் யாரும் சட்டத்தை மீறுவதில்லை.

சட்டத்தை மீறுபவர்களோடு அவரும் இருப்பதில்லை. அவர்களுக்கு அவர் தன்னை வெளிப்படுத்துவதும் இல்லை.

அவரை விட்டுச் சென்ற பின்னரே யூதாஸ் பாவம் செய்ய முன்வந்தான். ஆதனால் தன்னையும் அழித்துக் கொண்டான்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 கடவுளின் ஆட்டுக்குட்டி

நிகழ்வு

அது ஒரு பழமையான ஆலயம். அந்த ஆலயத்தின் கோபுர உச்சியில் வழக்கத்திற்கு மாறாக ஒரு பெரிய செம்மறியாட்டின் சிரூபம் பொறிக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்துவிட்டு அந்த ஆலயத்திற்கு வந்துபோன திருப்பயணிகள், "இது என்ன? இந்த ஆலயத்தின் கோபுரம் மிகவும் வித்தியாசமாக இருக்கின்றது... வழக்கமாக கோபுர உச்சியில் திருச்சிலுவைத்தானே வைப்பார்கள், இங்கு என்னவென்றால் செம்மறியாட்டின் சிரூபத்தை வடித்து வைத்திருகிரார்களே!" என்று கேள்வி எழுப்பினார்கள்

திருப்பயணிகள் எழுப்பிய இந்தக் கேள்விக்கு அங்கிருந்த பூர்வகுடிகள் சொன்ன பதில் இதுதான்: "இந்த ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கோபுரத்தின் உச்சியில் நின்றுகொண்டு பணியாளர் ஒருவர் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது திடிரென்று அவருடைய கை பிசகியதால், அந்தப் பணியாளர் மேலிருந்து கீழே பெருங்கூச்சலோடு விழுந்தார். ஆலயத்தில் அவரோடு வேலை பார்த்துக்கொண்டிருந்த எல்லாரும், "இவ்வளவு உயிரத்திலிருந்து விழுகின்ற இவர், அவ்வளவுதான்" என்றே நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், அவர் விழுந்த இடத்தில் செம்மறியாடு ஒன்று படுத்துக்கிடந்தது. அவர் அந்த செம்மறியாட்டின்மேல் விழுந்ததால், அந்த செம்மறியாட்டின் உயிர்போய் அவர் பிழைத்துக் கொண்டார். அதன் நினைவாகத்தான் இந்த கோபுரத்தின் உச்சியில் சிலுவைக்குப் பதிலாக செம்மறியாட்டின் சிரூவம் பொறிக்கப்பட்டிருக்கின்றது".

தன்னுடைய உயிரை இழந்து, கட்டுமானப் பணியாளரிடம் உயிரைக் காப்பாற்றிய அந்த செம்மறியாட்டைப் போன்று, இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களை எல்லாம் போக்கி, நமக்கு மீட்பினை வழங்கினார் என்பது எத்துணை சிறப்பான ஒரு காரியம்.

திருமுழுக்கு யோவான் என்னும் சுட்டுவிரல்

நற்செய்தி வாசகத்தில் இயேசு கிறிஸ்து தன்னிடத்தில் வருவதைக் கண்ட யோவான், "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகத்தின் பாவத்தைப் போக்குபவர்" என்கின்றார். கடவுளின் ஆட்டுக்குட்டிகான அர்த்தம் என்ன என்று சிந்தித்துப் பார்ப்பது முன்பாக, திருமுழுக்கு யோவான் செய்துவந்த பணியைக் குறித்து சிறிது சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

புதிய ஏற்பாட்டில் மட்டும் திருமுழுக்கு யோவானைக் குறித்து 89 முறை சொல்லப்படுகின்றது. அப்படியானால் திருமுழுக்கு யோவான் மீட்பின் வரலாற்றில் எந்தளவுக்கு முக்கியமானவர் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். திருமுழுக்கு யோவான் மெசியாவாகிய இயேசுவுக்காக மக்களைத் தயார் செய்து, வந்தபின் அவர்களுக்கு அவரைச் சுட்டிக்காட்டுகின்ற சுட்டுவிரலாக இருந்து செயல்பட்டார். இயேசுவின் வழியில் நடக்கின்ற ஒவ்வொருவரும் திருமுழுக்கு யோவானைப் போன்று சுட்டுவிரலாக இருப்பது சிறப்பானது.

கடவுளின் ஆட்டுக்குட்டி இயேசு

தன்னிடத்தில் வந்த இயேசுவை திருமுழுக்கு யோவான், "கடவுளின் ஆட்டுக்குட்டி" என்று அழைக்கின்றார். திருமுழுக்கு யோவான் இயேசுவை ஏன் அவ்வாறு அழைக்கவேண்டும் என்று கேள்வி எழலாம். அதற்கான பதிலை இப்போது பார்ப்போம்.

யூதர்களுக்கு ஆட்டுக்குட்டி ஒன்றும் புதில்லை. ஆண்டுதோறும் பாவப் பரிகார நாளில் ஆடானது பலியாக ஒப்புக்கொடுப்பட்டது. அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு நாளும் இரண்டு ஆடானது எருசலேம் திருக்கோவிலில் பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. இதுபோக தனிப்பட்ட முறையில் நேர்ச்சைக்காக பலி ஒப்புக்கொடுத்தார்கள். இப்படி இப்புக்கொடுக்கப்பட்ட பலிகள் மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாக ஒப்புக்கொடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் திருமுழுக்கு யோவான் "இயேசுவை கடவுளின் ஆட்டுக்குட்டி" என்று சொன்னதை மேற்குறிப்பிட்ட முறையில் ஏற்றுக்கொள்ளமுடியாது. சாதாரண ஆட்டுக்குட்டிக்கும் இயேசு என்னும் கடவுளின் ஆட்டுக்குட்டிக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. முதலாவதாக, எருசலேம் திருக்கோவிலில் பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்ட ஆட்டுக்குட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாக இருந்தன. இதுவே, விலங்குகளைக் கொண்டு ஒப்புக் கொடுக்கப்படும் பலிகள் ஒருபோதும் முழுமையாக இருக்காது என்பதற்குச் சான்றாக இருக்கின்றது. ஆனால், ஆண்டவர் இயேசு தன்னுடைய உடலை ஒரே ஒருமுறை பலியாக ஒப்புக்கொடுத்தார். அதையே என்றென்றைக்குமான பலியாக மாற்றினார்.

இரண்டாவதாக, எருசலேம் திருக்கோவில் ஒப்புக்கொடுக்கப்பட்ட பலிகள் யூதர்களுக்கு மட்டுமானதாக இருந்தது. ஆனால், இயேசு கல்வாரி மலையில் செலுத்திய பலி எல்லா மக்களுக்குமானதாக இருந்தது. ஆதலால்தான் திருமுழுக்கு யோவான் இயேசுவைக் குறித்து, "உலகத்தின் பாவம் போக்கும் கடவுளின் ஆட்டுக்குட்டி" என்கின்றார்.

சிந்தனை

"கிறிஸ்து இரத்தம் சிந்தி தம் அருள்வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார். இம்மீட்பால் குற்றங்களிலிருந்து நாம் மன்னிப்புப் பெறுகிறோம்" என்று தூய பவுல் எபேசியருக்கு எழுதிய மடலில் கூறுவார். ஆம், இயேசு என்னும் கடவுளின் ஆட்டுக்குட்டியினுடைய இரத்தம் நமக்கு மீட்பு அளித்துள்ளது. இந்த மீட்புக்கு நாம் நன்றியுள்ளவர்களாகவும், அவருக்கு ஏற்ற மக்களாகவும் வாழ்வதுமே நாம் செய்யவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

ஆகவே, இறைவன் தன் ஒரே மகன் இயேசுவின் வழியாக நமக்கு அளித்த மீட்பினை எண்ணிப் பெருமை கொள்வோம்; அவருக்கு உகந்த மக்களாக மாற, அவர் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 கடவுளின் ஒப்புயர்வற்ற அன்பு!

நிகழ்வு

சிக்காகோவில் உள்ள லயோலா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தவர் ஜான் போவெல் (John Powell). பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அவருடைய வகுப்பு வரவேண்டும் என்பதற்காகத் தவம் கிடப்பார்கள். அந்தளவுக்கு அவருடைய வகுப்புகள் மிகவும் அற்புதமாக இருக்கும்.

ஜான் போவெலிடம், டோம் என்றொரு மாணவன் படித்துவந்தான். அவனுக்கு கடவுள் நம்பிக்கை என்பதே கிடையாது. ஒவ்வொருமுறையும் வகுப்பறையில் ஜான் போவெல் கடவுளைப் பற்றியும், அவருடைய பேரன்பைப் பற்றியும் எடுத்துச் சொல்லும்போது டோமிற்கு, எல்லாம் புரியாத புதிராகவே இருக்கும். ஒருநாள் ஜான் போவெல் வகுப்பெடுத்து முடித்துவிட்டு, வெளியே வந்துகொண்டிருந்தபோது, அவரை சந்தித்த டோம், "ஐயா! உங்களிடமிருந்து நான் ஒருசில தெளிவுகளைப் பெறவேண்டும்... எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. அப்படியிருக்கும்போது நீங்கள் கடவுள் இருக்கின்றார் என்றும், அவர் பேரன்பு கொண்டவர் என்றும் சொல்கின்றபோது எனக்கு புரியாத புதிராக இருக்கின்றது. ஒருவேளை நீங்கள் சொல்கின்ற அந்த பேரன்பு கொண்ட கடவுளை என்றைக்காவது ஒருநாள் நான் என் வாழ்வில் கண்டுகொள்வேனா?" என்று கேட்டான்.

ஜான் போவெல் சிறிதுநேரம் அமைதியாக இருந்துவிட்டுச் சொன்னார், "பேரன்பு கொண்ட கடவுளை, உன் வாழ்வில் நீ கண்டுகொள்வாயா? இல்லையா? என்பது எனக்குத் தெரியாது. ஆனால், பேரன்பு கொண்ட கடவுள் ஒருநாள் உன்னைக் கண்டுகொள்வார். இது நிச்சயம். இப்படித்தான் பிரான்சிஸ் தாம்சன் என்ற எழுத்தாளர் (The Hound of Heaven - என்ற அமர காவியத்தைப் படைத்தவர்) இருந்தார். அவர் கடவுளை விட்டு விலகி ஓடிக்கொண்டிருந்தார். ஆனால் பேரன்புகொண்ட கடவுள் அவரைத் தன்வயப்படுத்தினார்"

ஆம், கடவுளின் அன்பு ஒப்புயர்வற்றது. அவருடைய அன்பிலிருந்து யாரும் விலகிநிற்க முடியாது.

அன்பே கடவுள்

அன்பின் அப்போஸ்தலர் - அன்பின் திருத்தூதர் - என அழைக்கப்படும் தூய யோவான், தான் எழுதிய நற்செய்தி நூலாக இருக்கட்டும், மூன்று திருமுகங்களாக இருக்கட்டும் இவை அனைத்திலும் ஆண்டவரின் அன்பை அவ்வளவு அழகாக, ஆழமாக எழுதியிருக்கின்றார் என்று சொன்னால் அது மிகையாகாது.

இன்றைய முதல் வாசகத்தில் யோவான், "நம் தந்தை நம்மிடத்தில் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள்" என்கின்றார். தந்தைக் கடவுள் நம்மிடத்தில் கொண்ட அன்பை வார்த்தையால் விவரித்துச் சொல்ல முடியாது. நாம் பாவிகளாக இருந்தபோதும், அவர் தன் ஒரே மகனை அனுப்பி நம்மை மீட்டுக்கொண்டார். அந்தளவுக்கு கடவுள் நம்மீது பேரன்பு கொண்டிருக்கின்றார். மேலும் யோவான் கூறுவதுபோல, அவர் நம்மைத் தம் பிள்ளைகளாக, மக்களாக பாவிக்கின்றார்.

நாம் கடவுளின் அன்பிற்குப் பாத்திரமாவது எப்படி? எப்போது?

கடவுளின் பேரன்பை எடுத்துச் சொல்லும் யோவான், தொடர்ந்து அவருடைய அன்பிற்குப் பாத்திரமாவது எப்படி என்பதைப் பற்றியும் அவருடைய அன்பிற்குரிய மக்களாவது எப்படி என்பதைப் பற்றியும் எடுத்துச் சொல்கின்றார்.

கடவுளின் அன்பிற்குப் பாத்திரமாவதற்கு அவர் மூன்று காரியங்களைப் பட்டியலிடுகின்றார். நேர்மை, தூய்மை, பாவமில்லா அல்லது பாவம் செய்யாத வாழ்க்கைதான் அந்த மூன்று காரியங்களாகும். கடவுள் தூய்மையானவர். விவிலியத்தை ஆழ்ந்து படித்துப் பார்க்கும்போது, கடவுளின் எல்லாப் பண்புகளை விடவும் அவருடைய தூய்மைதான் அதிகமாக, ஆழமாக வலியுறுத்தப்படுகின்றது. அதனால்தான் கடவுள் தூயவர் என்று வருகின்றபோது, தூயவர் என்ற வார்த்தையானது மூன்று முறை வருகின்றது (எசா 6: 3). ஆகவே, தூயவரான, நேர்மையான, பாவமில்லாத ஆண்டவரின் அன்பிற்குப் பாத்திரமாகி, அவருடைய அன்பு மக்களாக நாம் மாறவேண்டும் என்றால், நாமும் தூயவர்களாக, நேர்மையானவர்களாக, பாவம் செய்யாதவர்களாக இருக்கவேண்டும். ஏனெனில் பாவம் செய்கின்ற ஒருவர் கடவுள் கொடுத்த திருச்சட்டத்தை மீறுகின்றவராக இருக்கின்றார். ஆகவே, நாம் பாவம் செய்யாதவர்களாக இருக்கவேண்டும்.

சிந்தன

இன்றைய உலகம் பல்வேறு விதமான பாவங்களுக்கு அடிமைப்பட்டு, சீர்குலைந்து இருக்கின்றது. இத்தகைய சூழலில் நாம் கடவுளின் மேலான அன்பினை உணர்ந்து, அவருடைய அன்பு மக்களாக மாறுவதுதான் நமக்கு முன்பாக இருக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கின்றது.

இந்த உலகம் கடவுளின் அன்பினை உணர்ந்துகொண்டு, அவர் வழியில் நடக்கும் என்றால், இங்கே நடக்கும் வன்முறைகள், கலவரங்கள் அனைத்தும் மறைந்து, இந்த உலகமே ஒரு பூக்காடாக மாறும் என்பதில் எந்தவொரு ஐயமுமில்லை. ஆகவே, கடவுளின் ஒப்புயர்வற்ற அன்பினை உணர்ந்து, அந்த அன்பினை பிறருக்குக் கொடுப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
நற்செய்தி (யோவா 1:29-34)

இவர் யாரென்று தெரியாமலிருந்தது


நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவான் இயேசுவைப் பற்றிச் சான்று பகர்கின்றார்.

'இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது' என தன் அறியாமையை இரண்டு முறை ஏற்றுக்கொள்கின்றார் திருமுழுக்கு யோவான்.

'யாரென்று தெரியாமல் இருந்த இவருக்கு இயேசு யார் என்று எப்படி தெரிந்தது?' - என்ற கேள்வி நம்முள் எழலாம். இந்தக் கேள்விக்கான விடை நற்செய்தி வாசகத்திலேயே இருக்கிறது. முதலில், திருமுழுக்கு யோவானை அனுப்பியவரின் வார்த்தைகள் இவரை யாரென்று இவருக்குச் சொல்கின்றன. இரண்டு, அவர் காண்கின்ற தூய ஆவி இறங்குகின்ற அடையாளம்.

தனக்குள் உள்ள வெளிப்படுத்துதல் பற்றியும், தனக்கு வெளியே நடக்கும் அடையாளம் பற்றியும் தெளிவாக இருக்கின்றார் யோவான். ஆகையால் அவர் மெசியாவை கடவுளின் ஆட்டுக்குட்டியாக அடையாளம் கண்டுகொள்கின்றார்.

எனக்கு ரோமில் இலத்தீன் கற்றுக்கொடுத்த பேராசிரியர் முதல் நாள் புதிய புத்தகத்தை எல்லார் கையிலும் கொடுத்துவிட்டு, 'இன்று எதிரிகள் போல தெரியும் இந்த புத்தகத்தின் பக்கங்கள் கோர்ஸ் முடியும்போது உங்களுக்கு நண்பர்களாக வேண்டும்' என்றார்.

நண்பர்களாக ஆக்கிக்கொண்டுவிட்டால் அவற்றை அடையாளம் கண்டுகொள்வது எளிது.

ஒருவரைத் தெரிந்துகொள்வதற்கு முதலில் அவரைப் பற்றிய அக்கறை தேவை. அது வந்துவிட்டால் தெரிந்துகொள்வதற்கான நேரமும், இடமும், சூழலும் தானே வந்துவிடும்.

இன்று இறைவனை நான் தெரிந்துகொள்ள அவருக்கான அக்கறை என்னிடம் இருக்கிறதா?


- Fr. Yesu Karunanidhi, Madurai.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!