Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   02  ஜனவரி 2019  
                                         கிறிஸ்து பிறப்புக் காலம் - புதன்கிழமை  
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
 தொடக்கத்திலிருந்து நீங்கள் கேட்டறிந்தது உங்களுள் நிலைத்திருக்கட்டும்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 22-28

அன்பிற்குரியவர்களே, இயேசு 'மெசியா' அல்ல என்று மறுப்போரைத் தவிர வேறு யார் பொய்யர்? தந்தையையும் மகனையும் மறுப்போர்தாம் எதிர்க் கிறிஸ்துகள். மகனை மறுதலிப்போர் தந்தையை ஏற்றுக்கொள்வதில்லை; மகனை ஏற்று அறிக்கையிடுவோர் தந்தையையும் ஏற்றுக்கொள்கின்றனர்.

தொடக்கத்திலிருந்து நீங்கள் கேட்டறிந்தது உங்களுள் நிலைத்திருக்கட்டும்; தொடக்கத்திலிருந்து நீங்கள் கேட்டறிந்தது உங்களுள் நிலைத்திருந்தால் நீங்கள் மகனுடனும் தந்தையுடனும் இணைந்திருப்பீர்கள்.

அவரே நமக்கு வாக்குறுதி அளித்துள்ளார். அவ்வாக்குறுதி நிலைவாழ்வு பற்றியதாகும். உங்களை ஏமாற்றுகிறவர்களை மனத்தில் கொண்டு இவற்றை உங்களுக்கு எழுதியுள்ளேன்.

நீங்கள் அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட அருள்பொழிவு உங்களுள் நிலைத்திருக்கிறது. அதனால் உங்களுக்கு எவரும் கற்பிக்க வேண்டிய தேவையில்லை. மாறாக, நீங்கள் அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட அருள்பொழிவால் அனைத்தையும் கற்றுக் கொள்கிறீர்கள். அவ்வருள்பொழிவு உண்மையானது; பொய்யானது அல்ல.

நீங்கள் கற்றுக்கொண்டதற்கேற்ப அவரோடு இணைந்து வாழுங்கள். ஆகவே, பிள்ளைகளே, அவர் தோன்றும்போது நாம் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கவும் அவருடைய வருகையின்போது வெட்கி விலகாதிருக்கவும் அவரோடு இணைந்து வாழுங்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:98: 1. 2-3a. 3b-4 (பல்லவி: 3b)
=================================================================================
 பல்லவி: உலகெங்குமுள்ள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி

2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். 3a இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். பல்லவி

3b உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். 4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
எபி 1: 1-2

அல்லேலூயா, அல்லேலூயா! பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்.

+ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 19-28

அக்காலத்தில் எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, "நீர் யார்?" என்று கேட்டபோது அவர், "நான் மெசியா அல்ல"என்று அறிவித்தார். இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார்.

அப்போது, "அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா?"என்று அவர்கள் கேட்க, அவர், "நானல்ல" என்றார். "நீர்தாம் வரவேண்டிய இறைவாக்கினரா?" என்று கேட்டபோதும், அவர், "இல்லை" என்று மறுமொழி கூறினார்.

அவர்கள் அவரிடம், "நீர் யார்? எங்களை அனுப்பியவர்களிடம் நாங்கள் மறுமொழி சொல்லியாக வேண்டும்; எனவே உம்மைப்பற்றி என்ன சொல்கிறீர்?"என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், "ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் எனப் பாலை நிலத்தில் குரல் ஒன்று கேட்கிறது' என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது என்னைப் பற்றியே" என்றார்.

பரிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள் அவரிடம், "நீர் மெசியாவோ எலியாவோ வரவேண்டிய இறைவாக்கினரோ அல்லவென்றால், ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்?"என்று கேட்டார்கள்.

யோவான் அவர்களிடம், "நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்; அவர் எனக்குப்பின் வருபவர்; அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை"என்றார்.

இவை யாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



சிந்தனை

நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

ஆண்டு / முதல் மாதத்தின் வெள்ளிக்கிழமை இன்று இயேசுவின் திருஇதயத்தை நினைத்து நன்றி கூறும் நல்நாள்.

நம்மை முன்னிலைப்படுத்தாமல் வாழும் போது, நம்முடைய தாழ்ச்சியினால் நாம் உயர்வோம் என்பதுவே உண்மை.

திருமுழுக்கு யோவானின் கூற்று, அவரை பெண்களுள் பிறந்தவர்களில் இவரைப் போல யாரும் இருக்க முடியாது, இனி இருக்கப் போவதும் இல்லை என்ற கூற்றே சான்று.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 யோவான் 1: 19-28

யார் நீ?
நிகழ்வு

ஒருசமயம் இளைஞன் ஒருவன் ஊருக்கு வெளியே இருந்த ஒரு ஜென் துறவியிடம் வந்தான். அவர் அவனைப் பார்த்ததும், "யார் நீ? எதற்காக நீ இங்கு வந்திருக்கின்றாய்?" என்று கேட்டார். இளைஞனோ, "என் பெயர் அமுதன். நான் பக்கத்து ஊரில் இருக்கின்ற பண்ணையாரின் மகன்... புத்தகராக (கடவுளாக) மாறவேண்டும் என்பது என் ஆசை. அதற்காகத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன்" என்றான்.

அந்த இளைஞன் இவ்வாறு சொன்னதைக் கேட்டு கடுப்பான ஜென் துறவி, "புத்தனாகவெல்லாம் ஆகமுடியாது. அப்படிப்பட்ட எண்ணத்தோடு நீ இங்கு வந்திருந்தால், தயவுசெய்து இப்போதே இங்கிருந்து ஓடிவிடு. ஏனெனில், ஏற்கனவே இங்கு 'ஆயிரத்தெட்டு' புத்தர்கள் இருக்கிறார்கள். இதில் நீ வேறு புத்தனாகப் போகிறாயா" பொருமித் தள்ளினார். துறவி சொன்னதற்கு எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்த அந்த இளைஞனிடத்தில் ஜென்துறவி, "நீ நீயாக இருக்க ஆசைப்பட்டால், இங்கு வரலாம். இல்லையென்றால் இங்கிருந்து போய்விடலாம்" என்றார்.

உடனே அந்த இளைஞன், "நான் நானாகவே இருக்க விரும்புகின்றேன்" என்றான். அதன்பிறகு ஜென் துறவி, அந்த இளைஞனை தன்னுடைய சீடனாக ஏற்றுக்கொண்டு, அவனுக்கு உரிய பயிற்சிகள் அளித்துவந்தார்.

இன்றைக்குப் பலருக்கு அவர்களாக இருக்க விருப்பமில்லை. தங்களுடைய சொந்த அடையாளங்களைத் மறைத்து பிரபலமான ஒருவரைப் போன்று இருக்க விரும்புகின்றார்கள். இத்தகைய சூழலில் நாம் நாமாக இருப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லும் இன்றைய நற்செய்தி வாசகத்தைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

நீர் மெசியாவா? எலியாவா? வரவேண்டிய இறைவாக்கினர்களுள் ஒருவரா?

நற்செய்தி வாசகத்தில், எருசலேமில் இருந்த யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோர்தான் ஆற்றில் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்த திருமுழுக்கு யோவானிடம் அனுப்பி வைத்து, "யார் நீ?" என்று கேட்டுவரச் சொல்கின்றார்கள். அதன்படி "சமயக் காவலர்கள்" என்று அறியப்பட்ட குருக்களும் லேவியர்களும் யோவானின் வந்து, "நீர் யார்?" என்றொரு கேள்வியைக் கேட்கிறார்கள்.

குருக்களும் லேவியர்களும் கேட்ட கேள்விகளுக்கு யோவான் தன்னை மெசியா என்றோ, எலியா என்றோ, முற்காலத்து இறைவாக்கினர் என்றோ என்று சொல்லி, அதனால் ஆதாயம் அடைந்திருக்கலாம். ஏனென்றால் யோவான் என்ன சொன்னாலும் அதை நம்புகின்ற அளவுக்கு மக்கள் இருந்தார்கள். ஆனால் யோவான் தன்னை மெசியா என்றோ, எலியா என்றோ, முற்காலத்து இறைவாக்கினர் என்றோ சொல்லி ஆதாயம் அடையவில்லை, வீண் பேரும் புகழும் தேடிக்கொள்ளவில்லை. மாறாக அவர் தன்னை, "ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் எனப் பாலைநிலத்தில் குரல் ஒன்று கேட்கிறது" என்று சொல்லி ஆண்டவருக்காக வழியைச் செம்மைப்படுத்துகின்ற ஒரு சாதாரண ஆள் என்று சொல்கின்றார்.

ஏன் திருமுழுக்குக் கொடுக்கின்றீர்?

குருக்களும் லேவியர்களும் "யார் நீர்' என்று யோவானிடத்தில் மாற்றி மாற்றிக் கேள்வி கேட்டபோது, அவர்கள் எதிர்பார்த்த பதில் அவரிடமிருந்து கிடைக்காத நிலையில், "நீர் மெசியா அல்ல என்றால், ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்?" என்று அடுத்த கேள்வியைக் கேட்கத் தொடங்குகின்றார். அதாவது அதுவரைக்கும் யார் நீர்? என்று கேட்டுவந்தவர்கள், "ஏன் இதைக் செய்கிறாய்?" என்று அடுத்த கேள்வியைக் கேட்கத் தொடங்கிவிடுகிறார்கள். அவர்கள் கேட்ட இந்தக் கேள்விக்கு யோவான், "நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்; அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை" என்கின்றார்.

யோவான் கொடுத்த திருமுழுக்கு, மக்கள் தங்களுடைய பாவங்களிலிருந்து மனம்மாறவும், மெசியாவின் வருகைக்காக தங்களைத் தயார்செய்வதுமாக இருந்தது. அத்தகைய பணியினைத்தான் திருமுழுக்கு யோவான் தொடர்ந்து செய்து வந்தார். ஆனால், அவர் எந்தநேரத்திலும் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளாமல், தனக்கு வீண் பேரையும் புகழையும் சம்பாதித்துக் கொள்ளாமல் செய்துவந்தார். இயேசுவின் சீடர்களாகிய ஒவ்வொருவரும் அல்லது ஒவ்வொரு இறையடியாரும் திருமுழுக்கு யோவானிடம் இருந்த அதே மனநிலையோடு இறைப்பணியைச் செய்தால், அது நலம் பயக்கும்.

சிந்தனை

"Be Yourself" என்று ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் சொல்வார்கள். இதனை நீ நீயாக இரு என்று தமிழில் மொழிபெயர்த்துக் கொள்ளலாம். நாம் நாமாக இருப்பதில் உள்ள சிறப்பு வேறெதிலும் இல்லை. திருமுழுக்கு யோவான் அப்படித்தான் அவர் அவராக இருந்து ஆண்டவருடைய பணியைச் செய்தார். ஆகவே, நாமும் தம்முடைய தனித்தன்மையை இழக்காமல், எந்தவித சாயமும் பூசிக்கொள்ளாமல், நாமாகவே இருந்து பணிசெய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 01 யோவான் 2: 22-28

இயேசுவே மெசியா!

நிகழ்வு

383 ஆம் ஆண்டு, ஜனவரி திங்கள் 9 ஆம் நாள், உரோமையை ஆண்டு வந்த தியோடோசியுஸ் என்ற மன்னன், தன் மகன் அர்காடியுசை (Arcadius) இணை அரசராக அறிவித்தான். இவன் "இயேசுவின் இறைத்தன்மையை" மறுத்துவந்த ஆரிய பதத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தவன். இதனை ஆயர் அம்பிலோசுஸ் கடுமையாக எதிர்த்து, "இயேசு இறைமகன்", "அவர் இந்த உலகினை மீட்க வந்த மெசியா" என எடுத்துரைத்து வந்தார். இதனால் இவர் தியோடோசியுசிடமிருந்து எதிர்ப்பினையும் சம்பாதித்து வந்தார்.

இந்நிலையில் தியோடோசியுஸ் மன்னன், தன் மகன் அர்காடியுசை இணை அரசராக முறைப்படி நியமிக்கும் விழாவினை ஏற்பாடு செய்தான். இதற்கு ஆயர் அம்பிலோசுஸ் உட்பட பலரையும் அழைத்திருந்தான். விழா தொடங்குவதற்கு முன்பாக தியோடோசியுஸ் மன்னனும் அவனுடைய மகன் அர்காடியுசும் நுழைவாயிலில் நின்றுகொண்டு, விழாவிற்கு வந்துகொண்டிருந்த விருந்திருனரை வரவேற்றுக் கொண்டிருந்தனர். வந்த விருந்தாளிகள் அனைவரும் மன்னனுக்கும் அவனுடைய மகனுக்கும் மரியாதை செலுத்திவிட்டு உள்ளே போய்க்கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்தில் ஆயர் அம்பிலோசுஸ் அங்கு வந்தார். அவர் மன்னருக்கு மட்டும் மரியாதை செலுத்துவிட்டு, அவனுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த அவனுடைய மகனைக் கண்டு கொள்ளாமல் உள்ளே போனார். இது மன்னனுக்கு அதிர்ச்சியைத் தந்தது. இருந்தாலும் "அம்பிலோசுஸ் தன் மகனைப் பார்க்கவில்லை போலும், அதனால் அவர் என் மகனுக்கு மரியாதை செலுத்தாமல் போகிறார்" என்று மனதில் நினைத்துக் கொண்டான்.

இதற்குப் பின்பு அர்காடியுசை இணை-அரசராக (Coemperor) நியமிக்கும் விழா நடைபெற்றது. இதில் முக்கியஸ்தர்கள் எல்லாம் வந்து இணை அரசரை வாழ்த்திவிட்டுச் சென்றனர். ஆயர் அம்பிசியுஸ்கூட ஓர் அரசன் எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றி மிகச் சிறப்பான ஒரு சொற்பொழிவினை ஆற்றினார். பின்பு விருந்து நடைபெற்றது. விருந்து முடிந்ததும் தியோடோசியுசும், இணை அரசராக நியமிக்கப்பட்டிருந்த அர்காடியுசும் விழாவிற்கு வந்திருந்த விருந்தினை வழியனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது ஆயர் அம்பிலோசுஸ் அங்கு வந்தார். அவர் மன்னன் தியோடோசியுசிற்கு மட்டும் மரியாதை செலுத்திவிட்டு, அர்காடியுசை கண்டு கொள்ளாமல் போனார். இதைக் கண்டு வெகுண்டெழுந்த தியோடோசியுஸ் ஆயர் அம்பிசியுசிடம், "என்ன நீர்! இங்கே இணை அரசர் நின்றுகொண்டிருக்கின்றாரே, அவருக்கு மரியாதை செலுத்தவேண்டும் என்று உமக்குத் தெரியாதா?, என்னைப் போன்றே எல்லா அதிகாரமும் கொண்டிருக்கின்ற இவரை நீர் அவமதிப்பதால், என்னையும் சேர்த்து அவமதிக்கிறீர்" என்றார். அதற்கு ஆயர் அம்பிலோசுஸ், "உம்மைப் போன்று எல்லா அதிகாரமும் கொண்டிருக்கின்ற உம் மகனுக்கு நான் உரிய மரியாதை செலுத்தாததற்காக இவ்வளவு வருத்தப்படுகின்றீரே, தந்தைக் கடவுளைப் போன்றே ஒரே தன்மையும் வல்லமையும் கொண்டிருக்கின்ற இயேசு கிறிஸ்துவை, நீர் மனிதராக மட்டும் பார்ப்பது, தந்தைக் கடவுளுக்கு எவ்வளவு வருத்தத்தைத் தரும்?... யோர்தான் ஆற்றில் இயேசு கிறிஸ்து திருமுழுக்குப் பெறும்போது, "இவரே என் அன்பார்ந்த மகன், இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்று விண்ணகத்திலிருந்து தந்தைக் கடவுள் சொல்வதை நீர் வாசித்ததில்லையா? (மத் 3: 13-17)... இயேசு இறைமகன், இந்த உலகத்தை மீட்க வந்த மெசியா. இதை நம்பி ஏற்றுக்கொள்" என்று சொல்லிவிட்டுக் கடந்து போனார்.

இதற்குப் பின்பு தியோடோசியுஸ் மன்னன், இயேசுவை இறைமகனாக, மெசியாவாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கினான்.

என்னது? இயேசு மெசியா இல்லையா?

நற்செய்தியாளர் யோவான் வாழ்ந்து வந்த காலத்தில் ஞாஸ்டிக் எனப்படுவோர், இயேசு மரியின் வயிற்றில் பிறந்த ஒரு சாதாரண மனிதர்தான், அவர் இறைவனல்ல, மெசியாவும் அல்ல என்று பிதற்றி வந்தனர். அப்போதுதான் யோவான், "இயேசு "மெசியா" அல்ல என்று மறுப்போரைத் தவிர வேறு யார் பொய்யர்? அவர்கள் எதிர்கிறிஸ்துகள்" என்கின்றார்.

கடவுளோடு கடவுளாக இருந்த வார்த்தையான இயேசு கிறிஸ்து மனுவுரு எடுத்து, நமக்கு மீட்பினை வழங்கினார் (யோவா 1:1,14). இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளாமல் சிலர் மறுத்துவந்தார்கள். இப்படிப்பட்டவகளைப் பொய்யர்கள் என்றும், எதிர் கிறிஸ்துகள் என்றும் சொல்லாமல், வேறு என்னவென்று சொல்வது?

சிந்தனை

"இயேசு ஆண்டவர்" என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என உள்ளூர நம்பினால் நீங்கள் மீட்புப் பெறுவீர்கள்" என்பார் தூய பவுல் (உரோ 10:9). நாம் இயேசுவை இறைவன் என்றும், மெசியா என்றும் நம்பி ஏற்றுக்கொண்டு, அதனை மற்றவர்களுக்கு அறிக்கையிடுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!