Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   30  ஏப்ரல்  2020  

பாஸ்கா காலம் 3ம் வாரம் வியாழக்கிழமை

=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 நீர் முழுஉள்ளத்தோடு நம்பினால் தடையில்லை.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 8: 26-40

அந்நாள்களில்

ஆண்டவரின் தூதர் பிலிப்பிடம், "நீ எழுந்து எருசலேமிலிருந்து காசாவுக்குச் செல்லும் வழியாகத் தெற்கு நோக்கிப் போ" என்றார். அது ஒரு பாலைநிலப் பாதை. பிலிப்பு அவ்வாறே புறப்பட்டுப் போனார். அப்போது எத்தியோப்பிய அரச அலுவலர் ஒருவர் எருசலேம் சென்று, கடவுளை வணங்கிவிட்டுத் திரும்பிச் சென்றுகொண்டிருந்தார். அவர் ஓர் அலி; எத்தியோப்பிய அரசியான கந்தகியின் நிதியமைச்சர். அவர் தமது தேரில் அமர்ந்து எசாயாவின் இறைவாக்கு நூலைப் படித்துக் கொண்டிருந்தார்.

தூய ஆவியார் பிலிப்பிடம், "நீ அந்தத் தேரை நெருங்கிச் சென்று அதனோடு கூடவே போ" என்றார். பிலிப்பு ஓடிச் சென்று, அவர் எசாயாவின் இறைவாக்கு நூலை வாசிப்பதைக் கேட்டு, "நீர் வாசிப்பதின் பொருள் உமக்குத் தெரிகின்றதா?" என்று கேட்டார். அதற்கு அவர், "யாராவது விளக்கிக்காட்டாவிட்டால் எவ்வாறு என்னால் தெரிந்துகொள்ள முடியும்?" என்று கூறித் தேரில் ஏறித் தன்னோடு அமருமாறு பிலிப்பை அழைத்தார்.

அவர் வாசித்துக்கொண்டிருந்த மறைநூல் பகுதி பின்வருமாறு: "அடிப்பதற்கு இழுத்துச்செல்லப்பட்ட ஆட்டுக் குட்டிபோலும், உரோமம் கத்தரிப்போன் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார். தாழ்வுற்ற நிலையில் அவருக்கு நீதி வழங்கப்படவில்லை. அவருடைய தலைமுறையைப்பற்றி எடுத்துரைப்பவன் யார்? ஏனெனில் அவருடைய உயிர்தான் எடுக்கப்பட்டுவிட்டதே!"

அவர் பிலிப்பிடம், "இறைவாக்கினர் யாரைக் குறித்து இதைக் கூறுகிறார்? தம்மைக் குறித்தா, அல்லது மற்றொருவரைக் குறித்தா? தயவு செய்து கூறுவீரா?" என்று கேட்டார். அப்போது பிலிப்பு, இந்த மறைநூல் பகுதியிலிருந்து தொடங்கி, இயேசுவைப்பற்றிய நற்செய்தியை அவருக்கு அறிவித்தார்.

அவர்கள் போய்க்கொண்டிருந்தபோது வழியில் தண்ணீர் இருந்த ஓர் இடத்துக்கு வந்தார்கள். அப்போது அவர், "இதோ, தண்ணீர் உள்ளதே, நான் திருமுழுக்குப் பெற ஏதாவது தடை உண்டா?" என்று கேட்டார். அதற்குப் பிலிப்பு, "நீர் முழு உள்ளத்தோடு நம்பினால் தடையில்லை" என்றார். உடனே அவர், "இயேசு கிறிஸ்து இறைமகன் என்று நம்புகிறேன்" என்றார். உடனே அமைச்சர் தேரை நிறுத்தக் கூறினார். பிலிப்பு, அமைச்சர் ஆகிய இருவரும் தண்ணீருக்குள் இறங்கினர். பிலிப்பு அவருக்குத் திருமுழுக்கு கொடுத்தார்.

அவர்கள் தண்ணீரிலிருந்து வெளியேறினவுடனேயே ஆண்டவரின் ஆவியார் பிலிப்புவை எடுத்துச் சென்றுவிட்டார். அமைச்சர் அதன்பின் அவரைக் காணவில்லை; அவர் மகிழ்ச்சியோடு தம் வழியே சென்றார். பின்பு பிலிப்பு ஆசோத்து என்னும் இடத்தில் காணப்பட்டார். செசரியா போய்ச் சேரும்வரை அவர் சென்ற நகரங்களிலெல்லாம் நற்செய்தியை அறிவித்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 66: 8-9. 16-17. 20 (பல்லவி: 1) Mp3
=================================================================================
பல்லவி: அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! அல்லது: அல்லேலூயா.
8
மக்களினங்களே! நம் கடவுளைப் போற்றுங்கள்; அவரைப் புகழ்ந்துபாடும் ஒலி கேட்கச் செய்யுங்கள்.
9
நம்மை உயிர்வாழச் செய்தவர் அவரே; அவர் நம் கால்களை இடற விடவில்லை. - பல்லவி

16
கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன்.
17
அவரிடம் மன்றாட என் வாய் திறந்தது; அவரை ஏத்திப் புகழ என் நா எழுந்தது. - பல்லவி

20
என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள் போற்றி! தம் பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவன் போற்றி! - பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
(யோவா 6: 51)

அல்லேலூயா, அல்லேலூயா! "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்," என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 44-51


அக்காலத்தில்

இயேசு யூதர்களைப் பார்த்துக் கூறியது: "என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னிடம் வருபவரை நானும் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். "கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத்தருவார் என இறைவாக்கு நூல்களில் எழுதியுள்ளது.

தந்தைக்குச் செவிசாய்த்து அவரிடமிருந்து கற்றுக்கொண்ட அனைவரும் என்னிடம் வருவர். கடவுள்தாமே கற்றுத்தருவார் என்பதிலிருந்து தந்தையை எவராவது கண்டுள்ளார் என்று பொருள் கொள்ளக்கூடாது. கடவுளிடமிருந்து வந்துள்ளவர் மட்டுமே கடவுளைக் கண்டுள்ளார். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்.

வாழ்வு தரும் உணவு நானே. உங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர். உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவே. விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்."

ஆண்டவரின் அருள்வாக்கு.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 திருத்தூதர் பணிகள் 8: 26-40

"பிலிப்பு அவருக்குத் திருமுழுக்குக் கொடுத்தார்"

நிகழ்வு

பிரான்ஸ் நாட்டு மன்னராக இருந்தவர் லூயிஸ் (1234-1270). இவர் தான் பெற்ற திருமுழுக்கை எப்பொழுதும் தன்னுடைய வாழ்வில் நடந்த ஒரு முக்கியமான நிகழ்வாகக் கருதி வந்தார்.

ஒருநாள் இவருடைய மனைவி மார்கரெட் இவரிடம், "உங்களுக்கு எந்தக் கோயில் மிகவும் பிடிக்கும்" என்றார். இதற்குத் தன்னுடைய கணவர், தான் அரசராகப் பதவி ஏற்றுக்கொண்ட, ரீம்ஸ் முதன்மைக் கோயிலைத்தான் பதிலாகத்தான் சொல்வார் என்று நினைத்திருந்தார்; ஆனால், இவர் நினைத்ததற்கும் மாறாக, இவருடைய கணவர் லூயிஸ், "நான் பிரான்ஸ் நாட்டின் மன்னராக நியமிக்கப்பட்ட நிகழ்வு நடந்த ரீம்ஸ் முதன்மைக் கோயிலை விடவும், நான் திருமுழுக்குப் பெற்ற இங்குள்ள ஒரு சிறுகோயில்தான் எனக்கு மிகவும் பிடிக்கும்" என்றார். இதைக் கேட்டு மன்னரின் மனைவி மார்கரெட் மிகவும் வியந்தார்.

இன்னொரு முறை, இவருடைய மகனுக்குத் திருமுழுக்குக் கொடுக்கப்பட்டது. இந்தப் புனித நிகழ்விற்குப் பிறகு, இவர் தன்னுடைய மகனிடம், "என் அன்பு மகனே! உன்னிடத்தில் நான் ஓர் உண்மையைச் சொல்லவேண்டும்." என்றார். "என்ன உண்மை? சொல்லுங்கள்" என்று கேட்ட தன் மகனிடம் இவர், "மகனே! இத்தனை நாள்களும் நீ என்னுடைய மகனாய் இருந்தாய்! இன்றுமுதல் நீ கடவுளின் பிள்ளையாகிவிட்டாய். அதனால் நீ கடவுளின் பிள்ளையைப் போன்று வாழவேண்டும்" என்று அறிவுரை கூறினார்.

ஆம், திருமுழுக்கின் வழியாக ஒருவர் கடவுளின் பிள்ளையாகின்றார். கடவுளின் பிள்ளையான ஒருவர், அவரைப் போன்று வாழவேண்டும் என்ற செய்தியை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. முதல் வாசகத்தில், எத்தியோப்பிய நிதியமைச்சர் பிலிப்பிடமிருந்து திருமுழுக்குப் பெறுவதைக் குறித்து வாசிக்கின்றோம். திருமுழுக்குக்குப் பின்பு அந்த நீதியமைச்சரின் வாழ்வில் எத்தகைய மாற்றம் நிகழ்ந்தது என்பதைக் குறித்து நாம் சிந்திப்போம்.

இறைவாக்கினர் எசாயாவின் நூலைப் படித்துக்கொண்டிருந்த நிதியமைச்சர்

முதல் வாசகத்தில், ஆண்டவரிடம் தூதர், திருத்தொண்டரான பிலிப்பிடம், நீ தெற்கு நோக்கிப் போ என்று சொன்னதும், இவரும் அவ்வாறே போகின்றார். இவர் செல்லும் வழியில் எத்தியோப்பிய நிதியமைச்சரைக் காண்கின்றார். அவர் இறைவாக்கினர் எசாயாவின் நூலை வாசித்துக்கொண்டிருக்கின்றார். உடனே பிலிப்பு அவரிடம், நீர் வாசிப்பதன் பொருள் உமக்குத் தெரிகின்றதா? என்று கேட்க, எத்தியோப்பிய நிதியமைச்சர் இவரிடம், யாராவது விளக்காவிட்டால் எவ்வாறு என்னால் தெரிந்து கொள்ளமுடியும் என்று சொல்ல, பிலிப்பு அவர் வாசித்துக்கொண்டிருந்த பகுதியில் இடம்பெற்றிருந்த இறைவார்த்தைக்கு விளக்கம் அளிக்கத் தொடங்குகின்றார்.

எத்தியோப்பிய நிதியமைச்சர் வாசித்துக்கொண்டிருந்த இறைவாக்குப் பகுதியோ இறைவாக்கினர் எசாயா நூலில் வருகின்ற 53 வது அதிகாரம். துன்புறும் ஊழியரைக் குறித்துச் சொல்லும் இந்தப் பகுதி, இயேசுவைப் பற்றித்தான் எடுத்துச் சொல்கின்றது என்று பிலிப்பு எத்தியோப்பிய நிதியமைச்சரிடம் விளக்கிச் சொன்னபொழுது, அவர் தெளிவு பெறுகின்றார். திருத்தொண்டரான பிலிப்பு, எத்தியோப்பிய நிதியமைச்சருக்கு இறைவார்த்தைக்கு விளக்கம் அளித்து, அவரை இயேசுவிடம் கொண்டு வந்தது, நாமும் கிறிஸ்துவைப் பற்றி நற்செய்தியை, அவரை அறியாத மக்களுக்கு, எடுத்துரைத்து, அவரைக் கிறிஸ்துவிடம் கொண்டு வந்து சேர்ப்பது நம்முடைய தலையாய கடமை என்பதை நமக்கு எடுத்துரைக்கின்றது.

திருமுழுக்குப் பெறத் தயாராய் இருந்த நிதியமைச்சர்

பிலிப்பு, ஆண்டவர் இயேசுவைப் பற்றி எத்தியோப்பிய நிதியமைச்சருக்கு எடுத்துச் சொன்னதும், அவர் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்கினர். "நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்" (மாற் 16: 16) என்பார் இயேசு. அதன்படி எத்தியோப்பிய நிதியமைச்சர், ஆண்டவர் இயேசுவின்மீது, நம்பிக்கைகொண்ட உடனேயே திருமுழுக்குப் பெறுகின்றார். இதற்குப் பின்பு அவர் மகிழ்ச்சியோடு தன வழியே சென்றார் என்று வாசிக்கின்றோம்.

ஆம், இயேசுவை நம்பிக்கையோடு ஏற்றுக்கொண்டு, அவர் வழியில் நடக்கின்றபோது, நம்முடைய வாழ்வில் எப்பொழுதும் மகிழ்ச்சித்தான் என்பதுதான் எத்தியோப்பிய நிதியமைச்சரின் இச்செயலானது நமக்கு எடுத்துரைக்கின்றது. ஆகையால், நாம் இறைவார்த்தையை எல்லாருக்கும் அறிவிக்கவேண்டும் என்ற தலைமையாய கடமையை உணர்ந்து, அறிவிக்கப்பட்ட இறைவார்த்தையை நம்பிக்கையோடு ஏற்றுக்கொண்டு அதன்படி வாழ்வது நம்முடைய அடுத்த கடமை என்று வாழவேண்டும்.

சிந்தனை

"நீங்கள் மனம்மாறுங்கள்; இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள்; அப்பொழுது தூய ஆவியைக் கொடையாகப் பெறுவர்கள்" (திப 2: 38) என்பார் புனித பேதுரு. ஆகையால், இயேசுவின் பெயரால் திருமுழுக்குப் பெற்றிருக்கின்ற நாம், திருமுழுக்கின்போது பெற்றுக்கொண்ட அழைப்பிற்கு ஏற்ப வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 
யோவான் 6: 44-51

கற்றுத்தரும் கடவுள்

நிகழ்வு

வங்கக் கவி, இரவிந்தரநாத் தாகூர் எழுதிய கிளிக்கதை உங்களுக்குத் தெரியுமா...? சொல்கின்றேன் கேளுங்கள்.

மன்னர் ஒருவர் இருந்தார். அவருக்கு ஒருவர் ஒரு கிளியைப் பரிசாக அளித்தார். அது பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது. அதற்கு நாகரிகத்தைக் கற்றுக்கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று மன்னருக்குத் தோன்றியது. எனவே, அவர் தன்னுடைய அமைச்சரை அழைத்து, தன் விருப்பத்தைத் தெரிவித்தார். அமைச்சரோ, "மன்னா! இது தொடர்பான எல்லாப் பணிகளையும் நானே பார்த்துக்கொள்கின்றேன்" என்று சொல்லிவிட்டு அவரிடமிருந்து விடைபெற்றார்.

பின்னர் அமைச்சர் ஒரு பொற்கொல்லரை அழைத்து, "கிளி நாகரிகமாக இருக்க என்ன செய்யவேண்டும்?" என்று ஆலோசனை கேட்டார். அவரோ, "கிளியைப் பொற்கூண்டில் வைத்தால், நன்றாக இருக்கும்" என்றார். "அவ்வாறே செய்யும்" என்று அமைச்சர் அந்தப் பொற்கொல்லரிடம் சொல்ல, அவர் பொன்னாலான ஒரு கிளிக்கூண்டைச் செய்துகொடுத்துவிட்டு, அமைச்சரிடமிருந்து ஒரு பெருந்தொகையைப் பரிசாக வாங்கிச் சென்றார்.

இதற்குப் பின்பு அமைச்சருக்கு, "அரண்மனைக்கு வருவோரிடம் கிளி நான்கு வார்த்தை நல்ல வார்த்தை பேசினால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றியது. ஆகையால், அவர் நாட்டில் இருந்த பண்டிதர்களை அழைத்து, கிளிக்குப் பாடம் கற்றுத்தருமாறு சொன்னார். அவர்களும் அமைச்சர் இட்ட உத்தரவு, மன்னரிடமிருந்துதான் வந்திருக்கும் என்று கிளிக்குப் பாடம் கற்றுத்தரத் தொடங்கினார்கள்.

இப்படியிருக்கையில் ஒருநாள் மன்னருக்கு, "இவர்கள் கிளிக்கு எப்படி நாகரிகத்தைக் கற்றுத்தருகின்றார்கள் என்பதை பார்க்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஆகவே, அவர் கிளிக்கு நாகரிகம் சொல்லிக் கொடுக்கப்படும் இடத்திற்கு வந்து பார்த்தார். அங்கே ஐந்தாறு பண்டிதர்கள் கிளிக்கு முன்பாக அமர்ந்துகொண்டு, அதற்குப் நாகரிகப் பாடம் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அக்காட்சியைக் கண்ட மன்னருக்கு மட்டில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது. அதனால் பண்டிதர்களையும் அமைச்சரையும் வாழ்த்திவிட்டு அவர் திரும்பிச் சென்றார். .

இதற்குப் பின் ஓரிரு நாள்கள் கழித்து, பண்டிதர்கள் அமைச்சரிடம் வந்து, கிளிக்கு வேண்டிய மட்டும் கற்றுக்கொடுத்துவிட்டோம் என்று சொல்லி, பெருந்தொகையைப் பரிசாக வாங்கிச் சென்றார்கள். கிளிக்குப் நாகரிகப் பாடம் கற்றுக்கொடுக்கப்பட்ட பிறகு, அமைச்சர் அந்தக் கிளியைப் பொன்னால் செய்யப்பட்ட கிளிக்கூண்டில் வைத்தார். கிளியோ ஓரிடத்தில் நிற்காமல் அங்கு இங்கும் தாவிக்கொண்டிருந்தது. உடனே அமைச்சர் ஒரு கொல்லரை அழைத்து, கிளி அங்கும் இங்கும் பறக்காத வண்ணம் இருக்க, அதன் கால்களைச் கம்பிகளால் கட்டச் சொன்னார். அவரும் அவ்வாறே செய்து, பெருந்தொகையைப் பரிசாக வாங்கிச் சென்றார்.

எல்லா வேலைகளும் முடிந்தபிறகு அமைச்சர் மன்னரிடம் சென்று, "கிளிக்கு நாகரிகத்தைக் கற்றுக்கொடுத்துவிட்டோம்; வந்து பாருங்கள்" என்றார். மன்னர் ஆசையோடு வந்து பார்த்தார். அங்கோ கிளியானது கூண்டில் செத்துக் கிடந்தது. "கிளிக்கு என்ன ஆயிற்று?" என்று மந்திரியிடம் கேட்டபொழுது, அவர் பதில் சொல்ல முடியாமல் வாயடைத்து நின்றார். அப்பொழுது மன்னர் கிளியின் வாயில் விரலை விட்டுப் பார்த்தார். அதன் வாயிலிருந்து காகிதங்கள் மொத்தமாக வந்து விழுந்தன, அதைப் பார்த்துவிட்டு மன்னர் அமைச்சரிடம், "கிளிக்குப் பாடம் கற்றுத் தரும் இலட்சணமா இது?" என்று அவர்மீது பாய்ந்தார்.

இன்றைய கல்விமுறை அல்லது இன்றைக்குப் பாடம் கற்பிக்கின்றவர்கள் எப்படிப் பாடம் கற்பிக்கவேண்டும் என்பது தெரியாமல் கற்பிப்பதை வேதனையோடு இந்தக் கதை பதிவுசெய்கின்றார். மக்களுக்கு கற்பிக்கத் தெரியாமல் இருக்கலாம்; ஆனால், கடவுள் நமக்குக் நல்ல முறையில் கற்றுத்தரும் ஆசானாக இருக்கின்றார். அதைப் பற்றித்தான் இன்றைய நற்செய்தி எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைப் பற்றிச் சிந்தித்துப் பார்ப்போம்.

அனைவருக்கும் கற்றுத் தரும் கடவுள்

இயேசு தம்மிடம் வந்த மக்களிடம், "கடவுள்தாமே கற்றுத் தருவார்" என்ற இறைவாக்கை மேற்கோள் காட்டிப் பேசுகின்றார். இயேசு மேற்கோள் காட்டிப் பேசும் இறைவாக்கு எசா 54: 13; எரே 31: 31-34 ஆகிய இரண்டு இடங்களில் வருகின்றன.

இயேசு மேற்கோள் காட்டிப் பேசும் இறைவாக்கில் இரண்டு உண்மை அடங்கியுள்ளன. ஒன்று, கடவுள் கற்றுத் தருபவராக இருப்பதால், அவருக்குச் செவிசாய்க்கவேண்டும் என்பதாகும். இரண்டு, கடவுளிடமிருந்து கற்றுக்கொண்ட ஒருவர் அல்லது இறைவார்த்தையை வாசிக்கின்ற ஒருவர் இயேசுவிடம் வரவேண்டும். அப்படி கடவுள் கற்றுக்கொடுத்ததற்குச் செவிசாய்த்து, வாழ்வின் ஊற்றாக இருக்கும் இயேசுவிடம் வருகின்றவர், அவர்மீது நம்பிக்கை கொள்கின்றவர், நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வார்.

இதை இன்னொரு விதத்தில் சொல்லவேண்டும் என்றால், தந்தைக் கடவுளும் இயேசுவும் ஒன்றாய் இருப்பதால் (யோவா 14: 9) இயேசு சொல்வதற்குச் செவி சாய்த்து, அவர்மீது நம்பிக்கை கொண்டால், நிலைவாழ்வைப் பெறுவோம். இல்லையென்றால் வாழ்வினை அல்ல, தண்டனையைத்தான் பெற்றுக்கொள்வோம்.

நாம் இயேசு கற்றுக்கொடுப்பதற்குச் செவிசாய்த்து, அவர்மீது நம்பிக்கை கொண்டு, அதன்வழியாக வாழ்வினைப் பெற்றுக்கொள்கின்றோமா? இல்லை, அவர் கற்றுத் தருவதற்குச் செவிசாய்க்காமலும் அவர்மீது நம்பிக்கை கொள்ளாமலும் இருந்து வாழ்வினை இழக்கப் போகிறோமா? சிந்திப்போம்.

சிந்தனை

"கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக' (குறள் 391) என்பார் ஐயன் திருவள்ளுவர். நாம் இறைவார்த்தையைப் பிழையறக் கற்று, அதன்படி வாழ முற்படுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!