Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   28  ஏப்ரல்  2020  

பாஸ்கா காலம் 3ம் வாரம் செவ்வாய்க்கிழமை

=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 ஆண்டவராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 7: 51- 8: 1a


அந்நாள்களில்

ஸ்தேவான் மக்களையும் மூப்பரையும் மறைநூல் அறிஞரையும் நோக்கிக் கூறியது: "திமிர் பிடித்தவர்களே, இறைவார்த்தையைக் கேட்க மறுக்கும் செவியும் ஏற்க மறுக்கும் உள்ளமும் கொண்டவர்களே, உங்களுடைய மூதாதையரைப் போல நீங்களும் தூய ஆவியாரை எப்போதும் எதிர்க்கிறீர்கள். எந்த இறைவாக்கினரைத்தான் உங்கள் மூதாதையர் துன்புறுத்தாமல் இருந்தார்கள்? நேர்மையாளருடைய வருகையை முன்னறிவித்தோரையும் அவர்கள் கொலை செய்தார்கள். இப்போது நீங்கள் இயேசுவைக் காட்டிக் கொடுத்துக் கொன்றுவிட்டீர்கள். கடவுளின் தூதர்கள் வழியாய்த் தரப்பட்ட திருச்சட்டத்தை நீங்கள் பெற்றிருந்தும் அதனைக் கடைப்பிடிக்கவில்லை."

இவற்றைக் கேட்டவர்கள் உள்ளம் கொதித்தெழுந்து, அவரைப் பார்த்துப் பற்களை நறநறவெனக் கடித்தார்கள். அவரோ தூய ஆவியின் வல்லமையை நிறைவாய்ப் பெற்று, வானத்தை உற்றுநோக்கினார். அப்போது கடவுளின் மாட்சியையும் அவர் வலப்பக்கத்தில் இயேசு நிற்பதையும் கண்டு, "இதோ, வானம் திறந்திருப்பதையும், மானிட மகன் கடவுளது வலப்பக்கத்தில் நிற்பதையும் காண்கிறேன்" என்று கூறினார். ஆனால் அவர்கள் தங்கள் செவிகளை அடைத்துக்கொண்டு, பெருங் கூச்சலிட்டு, ஒருமிக்க அவர் மேல் பாய்ந்தார்கள். நகரத்திற்கு வெளியே இழுத்துக் கொண்டுபோய் அவர்மேல் கல்லெறிந்தார்கள். சாட்சிகள் தங்கள் மேலுடைகளைச் சவுல் எனும் இளைஞரிடம் ஒப்படைத்தார்கள். அவர்கள் ஸ்தேவான்மீது கல்லெறிந்தபோது அவர், "ஆண்டவராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்" என்று வேண்டிக்கொண்டார். பின்பு முழந்தாள்படியிட்டு, உரத்த குரலில், "ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள்மேல் சுமத்தாதேயும்" என்று சொல்லி உயிர்விட்டார்.

ஸ்தேவானைக் கொலை செய்வதற்குச் சவுலும் உடன்பட்டிருந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 31: 2cd-3. 5,6-7a. 16,20b (பல்லவி: 5a) Mp3
=================================================================================
பல்லவி: உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன். அல்லது: அல்லேலூயா.
2cd
எனக்கு அடைக்கலம் தரும் கற்பாறையாய் இரும்; என்னைப் பாதுகாக்கும் வலிமைமிகு கோட்டையாய் இரும்.
3
ஆம், என் கற்பாறையும் கோட்டையும் நீரே; உமது பெயரின் பொருட்டு எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும். - பல்லவி

5
உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்; வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளினீர்.
6
நானோ, பயனற்ற சிலைகளில் பற்றுடையோரை வெறுத்து, ஆண்டவர் மீது நம்பிக்கை வைக்கின்றேன்.
7ய
உமது பேரன்பில் நான் களிகூர்வேன்; அக்களிப்பேன். - பல்லவி

16
உமது முகத்தின் ஒளி அடியேன் மீது வீசும்படி செய்யும்; உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும்.
20b
மனிதரின் சூழ்ச்சியினின்று அவர்களைக் காப்பாற்றி, உமது முன்னிலையின் மறைப்பினுள் வைத்துள்ளீர்! நாவுகள் கிளப்பும் பூசலினின்று அவர்களைப் பாதுகாத்து உமது கூடாரத்தினுள் வைத்துக் காக்கின்றீர்! - பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
(யோவா 6: 35)

அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; என் தந்தையே.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 30-35

அக்காலத்தில்

மக்கள் இயேசுவிடம், "நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில் நீர் என்ன அரும் அடையாளம் காட்டுகிறீர்? அதற்காக என்ன அரும் செயல் செய்கிறீர்? எங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டனரே! "அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார்" என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா!" என்றனர்.

இயேசு அவர்களிடம், "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே. கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது" என்றார்.

அவர்கள், "ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும்" என்று கேட்டுக்கொண்டார்கள். இயேசு அவர்களிடம், "வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது" என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 திருத்தூதர் பணிகள் 7: 51-81a

"ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதேயும்"


நிகழ்வு

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், மாலப்பகுதியில் ஒரு கிறிஸ்தவத் திருக்கோயில் உண்டு. இத்திருகோயிலில் பங்குத்தந்தையாக இருப்பவர் அருள்பணியாளர் நவீன். இவர் ஜனவரி, 27 (2020) அன்று, இவருடைய பங்கைச் சார்ந்த ஒருவரால் தாக்கப்பட்டார். செய்தியறிந்த கோயில் நிர்வாகக் குழு, அருள்பணியாளர் நவீனைத் தாக்கிய நபர்மீது காவல்துறையினரிடம் வழக்குப் பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அருள்பணியாளர் நவீனைத் தாக்கியவர், வழிபாட்டின்போது எல்லாருக்கும் முன்பாக மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து வந்த ஞாயிற்றுக்கிழமையின்போது, அருள்பணியாளர் நவீனைத் தாக்கியவர், எல்லாருக்கும் முன்பாக அவரிடம் மன்னிப்புக் கேட்பதற்காக கோயிலுக்கு வந்தார். அவரைக் கண்டதும், அருள்பணியாளர் நவீன் திருப்பீடத்திலிருந்து கீழே இறங்கி, "நீங்கள் என்னிடம் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை" என்று சொல்லி, அவருடைய காலடிகளைக் கழுவினார். இது கோயிலில் இருந்த எல்லாருக்கும் வியப்பாக இருந்தது.

பின்னர் அருள்பணியாளர் நவீன் திருப்பீடத்திற்குத் திரும்பி வந்து, மக்களைப் பார்த்து, "என்னைத் தாக்கிய நபரை நான் மனதார மன்னித்துவிட்டேன்; அதனால், அவர் என்னிடம் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன். இதை நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள் என்றால், எழுந்து நின்று கைகளைத் தட்டுங்கள்" என்றார். அருள்பணியாளர் நவீன் இவ்வாறு சொன்னதும், எல்லாரும் எழுந்து நின்று அவர் சொன்னதை ஏற்றுக்கொள்ளும் விதமாக, கைகளைத் தட்டினார்கள். இதனால் அந்த இடமே ஆண்டவரின் அருள் நிரம்பி வழியும் இடமாகப் மாறிப்போனது.

தன்னைத் தாக்கியவரையும் மன்னித்து, அவருடைய காலடிகளைக் கழுவிய அருள்பணியாளர் நவீன், மன்னிப்பிற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றார். இன்றைய முதல் வாசகத்தில் மன்னிப்பிற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும் ஸ்தேவானைக் குறித்து வாசிக்கின்றோம். இவர் தன்னைத் துன்புறுத்தியவர்களை மன்னித்து, இயேசுவுக்கு எப்படிச் சான்றுபகர்ந்தார் என்பதைக் குறித்து இப்பொழுது சிந்திப்போம்.

இறைவாக்கினர்களைத் துன்புறுத்திய யூதர்கள்

உரிமையடைந்தோர் எனப்படும் தொழுகைக்கூடத்தைச் சார்ந்தவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் ஸ்தேவானுக்கு எதிராக வாதாட முடியாமல் போனதால், இவருக்கு எதிராகத் தலைமைச் சங்கத்திடம் பொய்ச்சான்று சொல்கின்றார்கள். இது குறித்து நேற்றைய முதல் வாசகத்தில் வாசித்தோம். இன்றைய முதல் வாசகம் நேற்றைய முதல் வாசகத்தின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இன்றைய முதல் வாசகத்தில், ஸ்தேவான் தனக்கெதிராகப் பொய்ச்சான்று சொன்ன மக்களையும் மூப்பரையும் மறைநூல் அறிஞரையும் பார்த்துக் கடுமையாகச் சாடுகின்றார். மட்டுமல்லாமல், இறைவாக்கினை ஏற்காமலும் அதனைக் கேட்காமலும் இருந்து, அந்த இறைவார்த்தையைப் போதித்த இறைவாக்கினர்களைத் துன்புறுத்தியவர்கள் நீங்கள் என்று சாடுகின்றார்.

யூதர்கள் பல இறைவாக்கினர்களைக் கொன்றுபோட்டிருக்கின்றார்கள் என்பதற்குத் திருவிவிலியம் ஒரு மிகப்பெரிய சான்று. அவர்கள் உரியா (எரே 26: 20-22) தொடங்கி, எரேமியா, எசாயா, ஆமோஸ், செக்கரியா, எலிசா வரை பலரைக் கொன்றுபோட்டார்கள். இதையெல்லாம் விட, இயேசுவைக் கொன்று போட்டார்கள். இவற்றையெல்லாம் எடுத்துரைக்கும் ஸ்தேவான் எந்தளவுக்கு அவர்கள் திமிர்பிடித்தவகளாய் நடந்துகொண்டார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றார்.

துன்புறுத்துவோருக்காக மன்றாடிய ஸ்தேவான்

ஸ்தேவான் இவ்வாறு பேசியதைத் தொடர்ந்து, யூதர்கள் இவரை நகருக்கு வெளியே இழுத்துச் சென்று, கல்லெறிந்தார்கள். அப்பொழுது ஸ்தேவான் இரண்டு முக்கியமான சொற்றொடர்களை உதிர்க்கின்றார். ஒன்று, "ஆண்டவராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்", இரண்டு "ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள்மேல் சுமத்தாதேயும்" என்பனவாகும்.

ஸ்தேவான், ஆண்டவர் இயேசுவைத் தன் வார்த்தையால் மட்டும் போதிக்கவில்லை. வாழ்வாலும் போதித்தார். அதனால்தான் இவர் இயேசுவைப் போன்று பகைவர்களை, தன்னைத் துன்புறுத்தியவர்களை மன்னித்தார். நாமும் இயேசுவின் வழியில் நடக்கின்றோம் என்றால், இயேசு எப்படிப் பகைவர்களை மன்னித்து வாழ்ந்தாரோ, அதுபோன்று நாமும் நமக்கு எதிராகத் தீமை செய்தவர்களை மன்னிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். அப்பொழுதுதான் நாம் இயேசுவின் உண்மையான சீடர்களாக இருக்கமுடியும். இதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது.

சிந்தனை

"கடவுள் உங்களைக் கிறிஸ்து வழியாக மன்னித்தது போல நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள்" (எபே 4: 32) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் நம் ஆண்டவர் இயேசுவைப் போன்று, புனித ஸ்தேவானைப் போன்று நமக்குத் தீமை செய்பவர்களை மன்னிக்கக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 யோவான் 6: 30-35

"நீர் என்ன அரும் அடையாளம் காட்டுகிறீர்...?"


நிகழ்வு

எரிகோவிற்கு அருகில் இருந்த ஒரு மலைக்குகையில் துறவி வாழ்ந்து வந்தார். இவர் பெரும்பாலான நேரங்களில் இறைவேண்டல் செய்துகொண்டே இருந்தார். ஒருநாள் இவர் இருந்த குகைக்கு வழிப்போக்கர் ஒருவர் வந்தார். அவர் துறவியிடம், "எனக்கு மிகவும் பசிக்கின்றது; ஏதாவது உணவிருந்தால் கொடுங்கள்" என்று கெஞ்சிக் கேட்டார். உடனே துறவி, உள்ளே சென்று, ஒரு தட்டில் பெரிய ரொட்டியைக் கொண்டுவந்து, அவர் முன் வைத்தார். பின்னர் இவர் அவரிடம், "இருங்கள்! பருப்புச் சாறும் கொண்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டு, உள்ளே சென்று, பருப்புச் சாறைக் கொண்டுவந்தார். இவர் திரும்பி வந்து பொழுது, தட்டில் இருந்த பெரிய ரொட்டியைக் காணவில்லை. அதற்குள் அவர் சாப்பிட்டிருந்தார். துறவிக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை.

பின்னர் துறவி பருப்புச் சாறு இருந்த கிண்ணத்தை அவர் பக்கத்தில் வைத்துவிட்டு, இன்னொரு ரொட்டியும் கொஞ்சம் பருப்புச் சாறும் கொண்டு வந்து அவர்முன் வைத்தார். இந்த முறையும் துறவி திரும்பி வந்தபொழுது, கிண்ணத்தில் இருந்த பருப்பு சாறு காலியாயிருந்தது. இப்படியே ஓரிருமுறை நடந்துகொண்டிருந்தது. வியப்பு மேலிட்டவராய், துறவி தனக்கென்று வைத்திருந்த ரொட்டியையும் பருப்பு சாறையும் எடுத்து வந்து அவர் முன் வைத்தார். அவரோ அவற்றை ஒருவினாடியில் காலிசெய்தார். துறவியோ எதுவும் பேசமுடியாதவராய் வாயடைத்து நின்றார்.

சிறிதுநேரத்திற்குப் பின்பு துறவி அவரிடம், "என்னிடமிருந்த எல்லா ரொட்டிகளையும்; ஏன், எனக்கென வைத்திருந்த ரொட்டியையும் உங்களுக்குக் கொடுத்துவிட்டேன். இனிமேல் உங்களுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் ஒன்றுமில்லை" என்றார். அதற்கு அந்த வழிபோக்கர், "அவ்வளவுதானா...?" என்று வருத்தத்தோடு சொன்னார். பின்னர் துறவி அவரிடம், "அது சரி, இப்பொழுது நீங்கள் எங்கு சென்றுகொண்டிருக்கின்றீர்கள்?" என்று கேட்டார். "எனக்குச் சரியாகப் பசி எடுப்பதில்லை. அதனால்தான் நான் எனக்கு நன்றாகப் பசி எடுப்பதற்காகத் தமஸ்கு நகரில் உள்ள ஒரு பிரபல மருத்துவரைப் பார்க்க போகிறேன். திரும்பி வருகின்றபொழுது, உங்களைப் பார்த்துவிட்டுப் போகிறேன்" என்றார்.

இதைக் கேட்ட துறவிக்கு மயக்கம் வராத குறையாகப் போய்விட்டது. உடனே துறவி "இந்த மனிதருக்குப் பசிக்காதபோதே, இப்படிச் சாப்பிடுகின்றாரே...! நன்றாகப் இவருக்கு நன்றாகப் பசியெடுத்தால் என்னாவது?" என்று மனத்திற்குள் நினைத்தவராய், "நாளைக்கு நான் புனித பயணம் மேற்கொள்ள இருக்கின்றேன். அதனால் நான் இங்கு இருக்கமாட்டேன்" என்று ஒரு பொய்யான காரணத்தைச் சொல்லி அவரிடமிருந்து தப்பித்தார்.

இந்த நிகழ்வில் வருகின்ற வழிபோக்கரைப் போன்றுதான் பலரும் இருக்கின்றார்கள். இவர்களை எதைக்கொண்டும் திருப்திப்படுத்த முடியாது. நற்செய்தி வருகின்ற மக்கள், இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவளித்தபோதும், அதில் திருப்தி அடையாமலும் அவரை நம்பாமலும் இருக்கின்றார்கள். அப்படிப்பட்ட மக்களிடம் இயேசு என்ன மறுமொழி கூறினார் என்பதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

மனநிறைவு அடையாத மக்கள்

இன்றைய நற்செய்தி வாசகம், கப்பர்நாகுமில் இருந்த இயேசுவைத் தேடி வந்த மக்களுக்கும் அவருக்கும் இடையேயான உரையாடலாக இருக்கின்றது. இயேசு மக்களிடம், "கடவுள் அனுப்பியவரை நம்புதே கடவுளுக்கேற்ற செயல்" என்று சொல்கின்றபோது, அவர்கள், "நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில் நீர் என்ன அரும் அடையாளம் காட்டுகின்றீர்?" என்று கேட்கின்றார்கள்.

இயேசு ஓரிரு நாள்களுக்கு முன்புதான் ஐயாயிரம் பேருக்கு உணவளித்திருந்தார் (யோவா 6: 1-15). இதைக் கண்ட பின்பும்கூட அவர்கள் திருப்தி அடையாதவர்களாய், நீர் என்ன அரும் செயல் செய்கிறீர்... எங்கள் முன்னோர் உண்பதற்கு வானிலிருந்து (மோசே) உணவு அருளினார் என்கின்றார்கள். யூதர்களிடம், மோசேதான் நாள்தோறும் பாலைநிலத்தில் உணவு அருளினார் என்ற எண்ணம் இருந்தது (விப 16: 4; திபா 78: 24-25). அதனால் அவர்கள், இயேசு ஒருநாள்தானே உணவு வழங்கினார்; நாள்தோறும் உணவு வழங்கவில்லையே! என்று அவரை நம்ப மறுக்கின்றார்கள்.

மோசே அல்ல, கடவுளே விண்ணகத்திலிருந்து உணவு அருள்பவர்

மோசேதான் பாலைநிலத்தில் உணவு அருளினார் என்று அறியாமையில் மக்கள் பேசியபொழுது, ஆண்டவர் இயேசு அவர்களிடம், மோசே அல்ல, தந்தைக் கடவுளே அவர்களுக்கு உணவு அருளினார் என்று விளக்கமளிக்கின்றார். அப்பொழுது மக்கள் அவரிடம் சமாரியப் பெண்மணியைப் போன்று, "ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்பொழுது தாரும்" என்று கேட்கின்றார்கள். (யோவா 4: 15). உடனே இயேசு அவர்களிடம், "வாழ்வு தரும் உணவு நானே என்னிடம் வருபவருக்குப் பேசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே இராது" என்கின்றார்.

மக்களோ திருப்தி அடியாமல் உடல் உணவைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்பொழுது, இயேசுவோ, தன்மீது நம்பிக்கை கொள்வோருக்கு அழியாத உணவை அளிப்பதாகக் கூறுகின்றார். உடல் உணவு அழிந்துவிடும்; ஆன்ம உணவு அழியாது. அத்தகைய உணவைப் பெற, நாம் இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளவேண்டும். இயேசுவிடம் நம்பிக்கை கொண்டு வாழ்வதற்குத் தயாரா? சிந்திப்போம்.

சிந்தனை

"தன்மீது நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்" (யோவா 3: 15) என்பார் இயேசு. ஆகையால், நாம் இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து வாழ்வோம், அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!