|
|
27
ஏப்ரல் 2020 |
|
பாஸ்கா காலம் 3 ம் வாரம் திங்கட்கிழமை
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஸ்தேவானின் ஞானத்தையும் தூய ஆவி வாயிலாக அவர் பேசிய வார்த்தைகளையும்
எதிர்த்து நிற்க அவர்களால் இயலவில்லை.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 6: 8-15
அந்நாள்களில்
ஸ்தேவான் அருளும் வல்லமையும் நிறைந்தவராய் மக்களிடையே பெரும்
அருஞ்செயல்களையும் அரும் அடையாளங்களையும் செய்து வந்தார். அப்பொழுது
உரிமையடைந்தோர் எனப்படுவோரின் தொழுகைக் கூடத்தைச் சேர்ந்த சிலரும்
சிரேன், அலக்சாந்திரியா நகரினரும் சிலிசியா, ஆசியா மாநிலத்தவரும்
ஸ்தேவானோடு வாதாடத் தொடங்கினர். ஆனால் அவரது ஞானத்தையும் தூய
ஆவி வாயிலாக அவர் பேசிய வார்த்தை களையும் எதிர்த்து நிற்க அவர்களால்
இயலவில்லை.
பின்பு அவர்கள், "இவன் மோசேக்கும் கடவுளுக்கும் எதிராகப் பழிச்சொற்கள்
சொன்னதை நாங்கள் கேட்டிருக்கிறோம்" என்று கூறச் சிலரைத்
தூண்டிவிட்டனர். அவ்வாறே அவர்கள் மக்களையும் மூப்பர்களையும் மறைநூல்
அறிஞர்களையும் அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழச் செய்தார்கள்.
உடனே அவர்கள் எழுந்துவந்து அவரைப் பிடித்துத் தலைமைச் சங்கத்துக்கு
இழுத்துச் சென்றார்கள்; மேலும் பொய்ச் சாட்சிகளைக் கொண்டுவந்து
நிறுத்தினார்கள். அவர்கள், "இந்த மனிதன் இத்தூய இடத்தையும்
திருச்சட்டத்தையும் எதிர்த்து ஓயாமல் பேசிவருகிறான்" என்று
கூறினார்கள். மேலும் அவர்கள், "நசரேயராகிய இயேசு இந்த இடத்தை
அழித்துவிடுவார் என்றும், மோசே நமக்குக் கொடுத்திருக்கிற
முறைமைகளை மாற்றிவிடுவார் என்றும் இவன் கூறக் கேட்டோம்" என்றார்கள்.
தலைமைச் சங்கத்தில் அமர்ந்திருந்த அனைவரும் அவரை உற்றுப்பார்த்தபோது
அவரது முகம் வானதூதரின் முகம்போல் இருக்கக் கண்டனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
=================================================================================
திபா 119: 23-24. 26-27. 29-30 (பல்லவி: 1b)
பல்லவி: ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர். அல்லது:
அல்லேலூயா.
23
தலைவர்கள் ஒன்றுகூடி எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தாலும், உம்
ஊழியன் உம்முடைய விதிமுறைகளைக் குறித்தே சிந்திக்கின்றேன்.
24
ஏனெனில், உம் ஒழுங்குமுறைகள் எனக்கு இன்பம் தருகின்றன; அவையே
எனக்கு அறிவுரையாளர். - பல்லவி
26
என் வழிமுறைகளை உமக்கு எடுத்துச் சொன்னேன்; நீர் என் மன்றாட்டைக்
கேட்டருளினீர்; உம் விதிமுறைகளை எனக்குக் கற்றுத்தாரும்.
27
உம் நியமங்கள் காட்டும் வழியை என்றும் உணர்த்தியருளும்; உம் வியத்தகு
செயல்கள்பற்றி நான் சிந்தனை செய்வேன். - பல்லவி
29
பொய் வழியை என்னைவிட்டு விலக்கியருளும்; உமது திருச்சட்டத்தை
எனக்குக் கற்றுத்தாரும்.
30
உண்மையின் பாதையை நான் தேர்ந்துகொண்டேன்; உம் நீதிநெறிகளை என்
கண்முன் நிறுத்தியுள்ளேன். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
(மத் 4: 4b)
அல்லேலூயா, அல்லேலூயா! மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக,
கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
அழிந்து போகும் உணவுக்காக அல்ல; நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே
உழையுங்கள்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 22-29
இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவு அளித்த பின், சீடர்கள் புறப்பட்ட
கரையிலேயே மறுநாளும் மக்கள் கூட்டமாய் நின்றுகொண்டிருந்தார்கள்.
முந்தின நாள் ஒரு படகைத் தவிர வேறு படகு எதுவும் அங்கு இல்லை
என்பதையும் அதில் இயேசுவின் சீடர்கள் மட்டும் போனார்களே அன்றி
இயேசு அவர்களோடு அப்படகில் ஏறவில்லை என்பதையும் அவர்கள் கண்கூடாகப்
பார்த்திருந்தார்கள். அப்போது, ஆண்டவர் கடவுளுக்கு நன்றி
செலுத்திக் கொடுத்த உணவை மக்கள் உண்ட இடத்திற்கு அருகில்,
திபேரியாவிலிருந்து படகுகள் வந்து சேர்ந்தன. இயேசுவும் அவருடைய
சீடரும் அங்கு இல்லை என்பதைக் கண்ட மக்கள் கூட்டமாய் அப்படகுகளில்
ஏறி இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச் சென்றனர். அங்கு கடற்கரையில்
அவர்கள் அவரைக் கண்டு, "ரபி, எப்போது இங்கு வந்தீர்?" என்று
கேட்டார்கள்.
இயேசு மறுமொழியாக, "நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல,
மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள்
என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். அழிந்து போகும் உணவுக்காக
உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்.
அவ்வுணவை மானிட மகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தையாகிய
கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார்" என்றார். அவர்கள்
அவரை நோக்கி, "எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு
நாங்கள் என்ன செய்யவேண்டும்?" என்று கேட்டார்கள்.
இயேசு அவர்களைப் பார்த்து, "கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கு
ஏற்ற செயல்" என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
திருத்தூதர் பணிகள் 6: 8-15
ஸ்தேவானுக்கு எதிராகப் பொய்ச்சான்று சொன்னவர்கள்
நிகழ்வு
துறவி ஒருவர் இருந்தார். இவரிடம் ஏராளமான சீடர்கள் இறந்தார்.
இவர் தன்னுடைய சீடர்களிடம் அடிக்கடி வித்தியாசமான கேள்விகளைக்
கேட்டு, அவர்களைச் சிந்திக்கவும் செயல்படவும் வைப்பார்.
ஒருநாள் இவர் தன்னுடைய சீடர்களிடம், "இந்த உலகத்தில் யார் மிகப்பெரிய
ஏழை?" என்றார். உடனே சீடர் ஒருவர், "கையில் பணமில்லாமல்
சாப்பாட்டுக்கே பெரிதும் திண்டாடுகின்றவர்தான் மிகப்பெரிய ஏழை"
என்றார். இன்னொரு சீடர், "நண்பர்கள் என்று யாருமே இல்லாதவர் மிகப்பெரிய
ஏழை" என்றார். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைச் சொன்னார்கள்.
எல்லாரும் சொன்னதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த துறவி, அவர்களிடம்,
"நீங்கள் சொன்ன பதிலெல்லாம் ஒருவிதத்தில் சரி. ஆனால், இந்த
உலகத்தில் இருக்கின்ற மிகப்பெரிய ஏழை, ஒருவரைப் பற்றி
பொய்ச்சான்று சொல்கின்றவரும் அடுத்தவரைப் பற்றி அவதூறு பரப்புகிறவரும்தான்"
என்றார்.
உடனே சீடர்கள் துறவியிடம், "அடுத்தவரைப் பற்றிப் பொய்ச்சான்று
சொல்கின்றவரும் அடுத்தவரைப் பற்றி அவதூறைப் பரப்புகிறவரும் எப்படி
மிகப்பெரிய ஏழையாக இருக்க முடியும்" என்று கேட்டதற்குத் துறவி
மிகவும் பொறுமையாகச் சொன்னார்: "அடுத்தவரைப் பற்றிப்
பொய்ச்சான்று சொல்கின்றவரும் அடுத்தவரைப் பற்றி அவதூறைப் பரப்புகின்றவரும்
அதுவரைக்கும் செய்த நற்செயல் என்ற செல்வம் அவர்களை விட்டுப்
போய்விடும்.. இருக்கின்ற செல்வமெல்லாம் ஒருவரை விட்டுப்
போய்விட்டால் அவர் ஏழைதானே...! அடுத்தவரைப் பற்றிப்
பொய்ச்சான்று சொல்கின்றவரும் அடுத்தவரைப் பற்றி அவதூறு பரப்புகிறவரும்
தங்களுடைய பொய்ச்சான்றுகளால், அவதூறுகளால், தங்களிடம் இருக்கின்ற
நற்செயல் என்ற செல்வத்தை இழந்துவிட்டால், அதன்பிறகு ஏழைதானே!
என்றார்.
ஆம், இந்தக் கதையில் வருகின்ற துறவி சொன்னதுபோன்று, அடுத்தவருக்கு
எதிராகப் பொய்ச்சான்று சொல்கின்றவரும் அடுத்தவரைப் பற்றி அவதூறு
பரப்புகிறவரும் ஏழைதான். இதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும்
கிடையாது. முதல் வாசகத்தில் ஸ்தேவானுக்கு எதிராகச் சிலர்
பொய்ச்சான்று சொல்கின்றார். அவர்கள் ஏன் ஸ்தேவானுக்கு எதிராகப்
பொய்ச்சான்று சொன்னார்கள் என்பதையும் பொய்ச்சான்று சொல்வது எவ்வளவு
பெரிய குற்றம் என்பதையும் இப்பொழுது நாம் சிந்தித்துப்
பார்ப்போம்.
ஸ்தேவான் தூய இடத்தையும் திருச்சட்டதையும் எதிர்த்துப்
பேசினாரா?
இன்றைய முதல் வாசகத்தில் சிலர், ஸ்தேவான் தூய இடத்தையும்
திருச்சட்டத்தையும் எதிர்ப்புப் பேசினார் என்று ஸ்தேவானுக்கு
எதிராகப் பொய்ச்சான்று சொல்கின்றார்கள். அவர்கள் ஏன்
ஸ்தேவானுக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லலவேண்டும் என்பதைக்
குறித்துத் தெரிந்துகொள்வது நல்லது.
ஞானமும் அருளும் வல்லமையும் நிறைந்த ஸ்தேவான், மக்களிடையே அருஞ்செயல்களையும்
அரும் அடையாளங்களையும் செய்து வந்தார். இப்படிப்பட்ட சமயத்தில்
உரிமையடைந்தோர் எனப்படுவோரின் தொழுகைக்கூடத்தைச் சார்ந்தோர்
ஸ்தேவானோடு வாதாடத் தொடங்குகின்றார்கள். ஸ்தேவான் சாதாரண மனிதர்
கிடையாது; இறை (ஞானமும்) (இறை)அருளும் (இறை)வல்லமையும் நிறைந்தவர்.
அப்படிப்பட்ட ஒருவரோடு வாதாடத் தொடங்கி ஒருவரால், அவரை வெற்றி
கொள்ள முடியுமா என்ன...? நிச்சயமாக முடியாதுதானே! அதுதான் உரிமையடைந்தோரின்
தொழுகைக்கூடத்தைச் சார்ந்தவர்களுக்கும் நடந்தது. ஸ்தேவானோடு
அவர்களால் வாதாட முடியாமல் தோற்றுப்போகிறார்கள்.
ஒருவரை வெற்றிகொள்ள முடியாமல் அவதூறு பரப்பும் மக்கள்
ஸ்தேவானோடு வாதாட முடியாதவர்கள் தங்களுடைய தோல்வியை ஒத்துக்கொண்டு,
தங்களுடைய வழியில் போயிருக்கலாம்; அவர்களோ அப்படிச் செய்யாமல்,
"இவர் மோசேக்கும் கடவுளுக்கும் எதிராகப் பழிச்சொற்களை சொன்னதை
நாங்கள் கேட்டிருக்கின்றோம்" என்று மக்களை ஸ்தேவானுக்கு எதிராகத்
தூண்டிவிடுகின்றார்கள். மட்டுமல்லாமல், அவருக்கு எதிராகப்
பொய்ச்சான்று சொல்கின்றார்கள்.
ஸ்தேவன் மோசேக்கு எதிராகப் பழிச்சொற்கள் சொன்னார் என்று
தொழுகைகூடத்தைச் சார்ந்தவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும்
அவர்மீது பொய்க்குற்றம் சுமத்துவது, இயேசுவுக்கு எதிராக யூதர்கள்
பொய்க்குற்றம் சுமத்தியதை (மத் 26: 59-61) நமக்கு நினைவுபடுத்துகின்றது.
மேலும், ஸ்தேவான், மோசேக்கு எதிராகப் பழிச்சொற்கள் சொன்னார் என்று
உரிமையடைந்தோர் சொல்லும்போது, அவருடைய முகம் வானதூதரின் முகம்
போல் இருக்கக்கண்டார்கள் என்று வாசிக்கின்றோம். இது மோசே
சீனாய் மலையிலிருந்தபோது, இறங்கி வந்தபோது அவருடைய முகம் எப்படி
இருந்தது என்பதை நினைவுபடுத்துவதாகவும் இருக்கின்றது (விப 34:
29, 35). ஸ்தேவானின் முகம், சீனாய் மலையிலிருந்து இறங்கி வந்தபோது,
மோசேயின் முகத்தைப் போன்றே இருந்தது என்பதைக் கொண்டே, ஸ்தேவான்
மோசேயைப் பழித்துப் பேசவில்லை என்பது உண்மையாகின்றது.
பல நேரங்களில் நாமும்கூட ஸ்தேவானுக்கு எதிராகப் பொய்ச்சான்று
சொன்ன மக்களைப் போன்று அடுத்தவர்களுக்கு எதிராகப் பொய்ச்சான்று
சொல்லிக்கொண்டு இருக்கின்றோம். இந்நிலையை நம்முடைய
வாழ்விலிருந்து தவிர்க்க வேண்டும்.
சிந்தனை
"பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே" (விப 20: 16) என்பது
பத்துக்கட்டளைகளில் ஒரு கட்டளை. நாம் பிறருக்கு எதிராகப்
பொய்ச்சான்று சொல்லிக்கொண்டிருக்காமல், நல்லதைச் செய்வோம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
யோவான் 6: 22-29
நீங்கள் எதற்காக உழைக்கின்றீர்கள்?
நிகழ்வு
ஒரு நகரில் பெரிய தொழிலதிபர் ஒருவர் இருந்தார். அவரிடத்தில் ஏராளமான
பணியாளர்கள் வேலைபார்த்து வந்தார்கள். ஏறுமுகத்திலேயே
சென்றுகொண்டிருந்த இவருடைய தொழில், திடீரென்று இறங்கு முகத்தில்
வரத் தொடங்கியது. இவருடைய பணியாளர்கள் எல்லாரும் காரணம் புரியாமல்
திகைத்தார்கள். இவரும்கூட குழம்பிப் போனார். இவருடைய நண்பர்கள்
எல்லாரும் தொழில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கான காரணத்தை ஆராய்ந்து
பார்த்துச் சரி செய்தால், தொழில் முன்புபோல் நன்றாக இருக்கும்
என்று இவரிடம் ஆலோசனைகளை அள்ளி வீசியபொழுது, இவர் அவற்றையெல்லாம்
கண்டுகொள்ளவில்லை. மாறாக, இறைவனைத் தேடத் தொடங்கினார்.
ஆம், தொழில் நன்றாகச் சென்றுகொண்டிருந்தபொழுது, இறைவனைத் தேடாத
இவர், தொழிலில் வீழ்ச்சி ஏற்பட்டதும், இறைவனைத் தேடத் தொடங்கினார்;
இறைவனுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வாழத் தொடங்கினார்.
அப்பொழுதுதான் இவருக்கு, "தொழிலில் ஏற்பட்ட வீழ்ச்சிக்குக் காரணம்
தான் கடவுளைத் தேடாமல் வாழ்ந்து வந்ததுதான்" என்ற உண்மை புரிந்தது.
மேலும் பணத்தைவிடவும் கடவுள் மிகப்பெரியவர் என்ற உண்மை இவருக்குப்
புரிந்தது. இதன் பிறகு இவர் கடவுளுக்கு மிகுந்த முக்கியத்துவம்
கொடுத்து, தொழிலிலும் கவனம் செலுத்தி வந்தார். இப்பொழுது இவருடைய
தொழில் முன்பை விட மிகச் சிறப்பாக இருந்தது.
இந்த நிகழ்வில் வருகின்ற தொழிலதிபரைப் போன்றுதான் பலரும் பணம்,
பொருள்... என்று அழிந்துபோகின்றவற்றிற்காக உழைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.
உண்மையில் அழியா உணவை, அழியா வாழ்வை ஆண்டவர் இயேசுவால் மட்டுமே
தரமுடியும். அத்தகைய செய்தியை எடுத்துச் சொல்லும் இன்றைய நற்செய்தி
வாசகத்தைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்போம்.
உணவுக்காக இயேசுவைத் தேடிவந்த மக்கள்
நற்செய்தியில், மக்கள் இயேசுவைத் தேடி அவர் இருந்த கப்பர்நாகுமிற்கு
வருகின்றார்கள். "மக்கள் இயேசுவைத் தேடி வந்தது நல்லதொரு செயல்தானே...?"
என்று நாம் நினைக்கலாம். அவர்களுடைய செயல் நல்லதாக இருந்தாலும்,
அவருடைய எண்ணம் தவறாக இருந்தது. அதனாலேயே இயேசு அவர்களைக் கண்டிக்கின்றார்.
இந்த நிகழ்விற்கு முன்பாக இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு
மீண்டுகளையும் கொண்டு, ஐயாயிரம் பேருக்கு உணவளித்திருந்தார்
(யோவா 6: 1-15). இதனால் மக்களிடத்தில், "இயேசுவிடம் சென்றால்,
வயிறார உணவு கிடைக்கும்" என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆகவேதான் அவர்கள்
இயேசுவைத் தேடி வந்தார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான் இயேசு
அவர்களைப் பார்த்து, "அழிந்து போகும் உணவுக்காக உழைக்க
வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியா உணவுக்காகவே உழையுங்கள்" என்று
கூறுகின்றார்.
இங்கு, மக்களுடைய செயல் நமக்கு ஒரு முக்கியமான செய்தியை எடுத்துச்
சொல்கின்றது. அது என்னவெனில், இயேசுவைத் தேடவேண்டும். அது முதன்மையானது;
இன்றியமையாததும்கூட; ஆனால், அவரை நல்ல எண்ணத்தோடு தேடவேண்டும்.
வயிற்றை நிரம்பிக் கொள்ளவேண்டும் என்பதற்காகவோ, ஆதாயம் தேடவேண்டும்
என்பதற்காகவோ இயேசுவைத் தேடக்கூடாது. அப்படித் தேடினால், எந்தவொரு
பயனும் இல்லை.
அழியா உணவுக்காக உழையுங்கள்
தன்னிடம் வந்த மக்களிடம், அழிந்துபோகும் உணவை அல்ல, அழியாத
உணவைத் தேடவேண்டும் என்று சொன்ன இயேசு, "அவ்வுணவை மானிடமகன்
உங்களுக்குக் கொடுப்பார்" என்று கூறுகின்றார். ஆம், இயேசு
ஒருவரால் மட்டுமே அழியா உணவை அல்லது அழியா வாழ்வைத்
தரமுடியும். அத்தகைய உணவை அல்லது வாழ்வைப் பெற்றுக்கொள்ள
ஒவ்வொருவரும், கடவுள் அனுப்பியவரை நம்பவேண்டும். இதுதான்
ஒவ்வொருவரும் செய்யவேண்டிய தலையாய செயலாக இருக்கின்றது.
இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மக்கள் இயேசுவைத் தேடிச்
சென்றார்கள். ஆனால், அவர்கள் இயேசுவின் மீது நம்பிக்கையோடும்
நல்ல எண்ணத்தோடும் தேடிச் சென்றார்களா என்பது மிகப்பெரிய
கேள்விக்குறியாக இருக்கின்றது. இன்றைக்கும் பலர் இயேசுவைத்
தேடிச் செல்கின்றார்கள். ஆனால், நம்பிக்கையோடு தேடிச் சென்று,
அந்த நம்பிக்கைக்குக் ஏற்ப வாழ்கின்றார்களா என்பது மிகப்பெரிய
கேள்விக்குறிதான். அப்படியானால், நாம் இயேசு அளிக்கக்கூடிய
அழியா வாழ்வினைப் பெற்றுக்கொள்வதற்கு அவர்மீது ஆழமான நம்பிக்கை
கொள்ளவேண்டும். அந்த நம்பிக்கைக்கு ஏற்ப நம்முடைய வாழ்வு
இருக்கவேண்டும். அதுதான் நாம் அழியாத வாழ்வினைப்
பெற்றுக்கொள்வதற்கு வழி வகுக்கும்.
நாம், இயேசுவின்மீது நம்பிக்கை கொள்கின்றோமா? அந்த
நம்பிக்கைக்கு ஏற்ப நம்முடைய வாழ்வை அமைத்துக் கொள்கின்றோமா?
சிந்தித்துப் பார்ப்போம்.
சிந்தனை
"நேர்மையைக் கடைப்பிடித்தலையும் இரக்கம் கொள்வதில்
நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாகத் தாழ்ச்சியோடு நடந்து
கொள்வதையும் தவிர, வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கிறார்?"
(மீக் 6:8) என்பார் மீக்கா இறைவாக்கினர். ஆகையால், நாம்
ஆண்டவர் இயேசு அளிக்கின்ற அழியா வாழ்வினைப் பெற்றுக்கொள்ள,
அவர் மீது நம்பிக்கை கொண்டு நேர்மையோடும் இரக்கத்தோடும்
தாழ்சியோடும் வாழக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|