|
|
25
ஏப்ரல் 2020 |
|
பாஸ்கா காலம் 2 ம் வாரம் சனிக்கிழமை
|
=================================================================================
முதல் வாசகம் புனித மாற்கு நற்செய்தியாளர்
விழா.
=================================================================================
என் மகன் மாற்குவும் உங்களுக்கு
வாழ்த்துக் கூறுகின்றார்.
திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து
வாசகம் 5: 5b-14
அன்பிற்குரியவர்களே,
ஒருவர் மற்றவரோடு பழகும்போது எல்லாரும் மனத்தாழ்மையை ஆடையாய்
அணிந்திருங்கள். ஏனெனில், "செருக்குற்றோரைக் கடவுள் இகழ்ச்சியுடன்
நோக்குவார்; தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்."
ஆகையால், கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின்கீழ் உங்களைத்
தாழ்த்துங்கள்; அப்பொழுது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார்.
உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால்,
அவர் உங்கள்மேல் கவலை கொண்டுள்ளார்.
அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை
யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம் போலத் தேடித்
திரிகிறது. அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அதனை எதிர்த்து
நில்லுங்கள். உலகெங்கிலுமுள்ள உங்கள் சகோதரர் சகோதரிகள் உங்களைப்
போலவே துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்
அல்லவா? எல்லா அருளும் நிறைந்த கடவுள், இயேசு கிறிஸ்துவுக்குள்
என்றும் நிலைக்கும் தம் மாட்சியில் பங்குகொள்ள உங்களை அழைத்திருக்கிறார்.
சிறிது காலத் துன்பங்களுக்குப் பின் அவர் உங்களைச் சீர்ப்படுத்தி,
உறுதிப்படுத்தி, வலுப்படுத்தி நிலைநிறுத்துவார். அவரது வல்லமை
என்றென்றைக்கும் உள்ளது. ஆமென்.
நம்பிக்கைக்குரிய சகோதரன் என நான் கருதும் சில்வான் வழியாகச்
சுருக்கமாக உங்களுக்கு எழுதியுள்ளேன். உங்களை ஊக்குவிக்கவும்
கடவுளுடைய மெய்யான அருளைப் பற்றிச் சான்று பகரவுமே எழுதினேன்.
இந்த அருளில் நிலைத்திருங்கள். உங்களைப் போலவே தேர்ந்துகொள்ளப்பட்ட
பாபிலோன் சபையாரும், என் மகன் மாற்கும் உங்களுக்கு வாழ்த்துக்
கூறுகின்றனர். அன்பு முத்தம் கொடுத்து நீங்கள் ஒருவர் மற்றவரை
வாழ்த்துங்கள்.
இயேசு கிறிஸ்துவோடு இணைந்து வாழும் உங்கள் அனைவருக்கும் அமைதி
உரித்தாகுக!
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 89: 1-2. 5-6. 15-16 (பல்லவி: 1a)
Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்.
1
ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர்
எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன்.
2
உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்;
உமது உண்மை வானைப் போல் உறுதியானது. - பல்லவி
5
ஆண்டவரே, வானங்கள் உம் வியத்தகு செயல்களைப் புகழ்கின்றன; தூயவர்
குழுவினில் உமது உண்மை விளங்கும்.
6
வான்வெளியில் ஆண்டவருக்கு நிகரானவர் யார்? தெய்வ மைந்தர்
குழுவில் ஆண்டவருக்கு இணையானவர் யார்? - பல்லவி
15
விழாவின் பேரொலியை அறிந்த மக்கள் பேறுபெற்றோர்; ஆண்டவரே! உம்
முகத்தின் ஒளியில் அவர்கள் நடப்பார்கள்.
16
அவர்கள் நாள் முழுவதும் உம் பெயரில் களிகூர்வார்கள்; உமது
நீதியால் அவர்கள் மேன்மை அடைவார்கள். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
(1 கொரி
1: 23a, 24b)
அல்லேலூயா, அல்லேலூயா! நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட
கிறிஸ்துவைப் பற்றிப் பறைசாற்றுகிறோம். அவர் கடவுளின் வல்லமையும்
ஞானமுமாய் இருக்கிறார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
16: 15-20
அக்காலத்தில்
இயேசு பதினொருவருக்கும் தோன்றி, "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம்
நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப்
பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத்
தீர்ப்புப் பெறுவர்.
நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்:
அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்;
பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக்
குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல்
நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்" என்று
கூறினார்.
இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு, ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து
கடவுளின் வலப்புறம் அமர்ந்தார்.
அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர்.
ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால்
அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
திருத்தூதர்கள் பணிகள் 6: 1-7
கைம்பெண்கள் கவனிக்கப்படல்
நிகழ்வு
முன்பொரு காலத்தில் சீனாவில் மன்னன் ஒருவன் இருந்தான். அவன்
தனக்குப் பின் நாட்டை ஆளப்போகும் மகன் நல்லவிதமாய்ப் பயற்சி பெறவேண்டும்;
நிறையக் கற்றுத் தெரியவேண்டும் என்பதற்காக, அவனைக் காட்டில் இருந்த
ஒரு துறவியிடம் அனுப்பி வைத்தான்.
துறவி, இளவரசனிடம், "நீ ஓராண்டு காலம் இந்தக் காட்டுக்குள் இரு;
இங்கு கேட்கக்கூடிய சத்தங்களைக் கவனமாய்க் கேள். ஓராண்டுக்குப்
பிறகு, நீ என்னென்ன சத்தங்களைக் கேட்டாயோ, அதை என்னிடத்தில் வந்து
சொல் என்றார். இளவரசனும் அதற்குச் சரியென்று சொல்லிவிட்டு,
காட்டிற்குள் வெகுதூரம் சென்று, ஒரு குடிசை அமைத்து தியானத்தில்
அமர்ந்து, தன்னைச் சுற்றி என்னென்ன சத்தங்கள் கேட்கின்றன என்று
மிகக் கவனமாகக் கேட்டான்.
ஓராண்டு முடிந்த பின்பு இளவரசன் துறவியை வந்து சந்தித்தது,
சிங்கம் கர்சித்ததும் புலி உறுமியதையும் யானை பிளிறியதையும் மயில்
அகவியதையும்... சொல்லிவிட்டு, துறவி தன்னைப் பாராட்டுவர் என்று
எதிர்பார்ப்போடு இருந்தான். துறவியோ அவனைப் பாராட்டாமல்,
"இன்னும் ஓராண்டு காலம் உன்னைச் சுற்றி என்னென்ன சத்தங்கள்
கேட்கின்றன என்பதைக் கவனமாய்க் கேள் என்று சொல்லி, அனுப்பி
வைத்தார்.
துறவி இவ்வாறு சொன்னது, இளவரசனுக்குப் பெருத்த ஏமாற்றமாக இருந்தாலும்,
துறவி சொன்னது போன்று செய்வோம் என்று மனத்திற்குள் நினைத்தவனாய்,
அவன் தான் தங்கியிருந்த குடிசைக்குச் சென்று, இன்னும் மனம் ஒன்றித்
தியானம் மேற்கொள்ளத் தொடங்கினான். ஓராண்டுக்குப் பிறகு துறவியை
வந்து சந்தித்த இளவரசன், தனக்குப் பூக்கள் பூக்கின்ற சத்தமும்
பனித்துளி புல்லில் அமர்கின்ற சத்தமும் கதிரவன் உதயமாகிற சத்தமும்
கேட்டதாகச் சொன்னான். உடனே துறவி அவனிடம், "உன்னுடைய பயற்சிக்காலம்
முடிந்துவிட்டது; நீ வீட்டுக்குப் போகலாம் என்றார்.
இளவரசனோ ஒன்றும் புரியாமல் நின்றான். அப்பொழுது துறவி அவனிடம்,
"முதன்முறை வந்தபொழுது, சிங்கம், புலி, யானை ஆகியவற்றின் சத்தம்
கேட்பதாய்ச் சொன்னான். இவற்றின் சத்தங்களை மிக எளிதாய்க் கேட்கலாம்.
ஆனால்; பூக்கள் பூக்கின்ற சத்தமும் பனித்துளி புல்லில் அமர்கின்ற
சத்தமும் யாருக்கும் அவ்வளவு எளிதாய்க் கேட்காது. அது மிகக்
கவனமாய் இருக்கின்றவர்களுக்கே கேட்கும். நீ ஆட்சிக்கு வந்த பிறகு
வலியவர்களின் குரலை மட்டுமல்ல, வறியவர்களின் குரலையும் கேட்கவேண்டும்.
அதற்குத்தான் இந்தப் பயிற்சி என்றார்.
ஆம், ஒரு தலைவர் அல்லது மன்னர் தனது ஆளுகைக்கு உட்பட்ட வலியவரின்
குரலை மட்டுமல்ல, வறியவர்களின் குரலையும் கேட்கவேண்டும். அதுதான்
ஒரு தலைவர் அல்லது மன்னருக்கு அழகு. முதல் வாசகம், திருஅவைத்
தலைவர்கள் வறியவர்களின் குரலைக் கேட்டு, அவர்களுடைய தேவையைப்
பூர்த்தி செய்வதைக் குறித்து வாசிக்கின்றோம். அது குறித்து
சிந்தித்துப் பார்ப்போம்.
தொடக்கத் திருஅவையில் ஏற்பட்ட புனித சிக்கல்
திருஅவை வேகமாக வளர்ந்துவந்தபொழுது, புதிய புதிய சிக்கல்களும்
வந்தன. அப்படி வந்த ஒரு சிக்கல்தான், கிரேக்க மொழி பேசும்
கைம்பெண்கள் பந்தியில் கவனிக்கப்படாமை. பெந்தக்கோஸ்துப்
பெருவிழாவிற்குப் பிறகு பிற இனத்தைச் பலரும் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதால்,
ஏற்கெனவே இருந்த யூதக் கிறிஸ்தவர்கள், அதாவது எபிரேயம் பேசிய
யூதக் கிறிஸ்தவர்கள், கிரேக்க மொழி பேசியவர்களைத் தங்களைவிடக்
கீழானவர்களாகப் பார்த்தார்கள். இதனால் கிரேக்க மொழி பேசியவர்களின்
தேவைகளை அவர்கள் பின்னுக்குத் தள்ளினார்கள். இதனால்தான்
கிரேக்க மொழி பேசுவோர், தங்களுடைய கைம்பெண்கள் பந்தியில் சரியாகக்
கவனிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை திருத்தூதர்களிடம்
வைக்கின்றார்கள்.
திருத்தொண்டர்கள் நியமிக்கப்படல்
பந்தியில் கிரேக்க மொழி பேசுகின்ற கைம்பெண் சரியாகக் கவனிக்கப்படவில்லை
என்ற சிக்கல் எழுந்ததும், திருத்தூதர்கள் அதற்கு மாற்றுவழியைக்
கண்டுபிடிக்கின்றார். அதுதான் திருத்தொண்டர்களை நியமித்தது.
திருத்தொண்டர்கள், நம்பிக்கையாளர்களாக, ஆண்களான, நன்மதிப்புப்
பெற்றவர்களான, தூய ஆவியரால் நிரப்பட்டவர்களாக, ஞானம் நிறைந்தவர்களாக
இருக்க வேண்டும் என்ற ஐந்து பண்புகளின் அடிப்படையில் ஏழு
திருத்தொண்டர்கள் நியமிக்கப்பட்டு, சிக்கல் தீர்த்து வைக்கப்படுகின்றது.
இதனால் திருத்தூதர்கள் வழக்கம்போல் இறைவேண்டலிலும் இறைவார்த்தைப்
பணியிலும் முழுமையாக ஈடுபடுகின்றார்கள். இன்னொரு பக்கம்
திருத்தொண்டர்கள் பந்தியை மேற்பார்வை செய்வதைப்
பார்த்துக்கொள்கின்றார்கள்.
திருத்தூதர் பணிகள் நூலில் வரும் இந்த நிகழ்வு நமக்கு இரண்டு
செய்திகளைச் சொல்கின்றது. ஒன்று, வறியவர்களின் குரலுக்குச்
செவிகொடுக்கவேண்டும். இன்னொன்று பணிகளைப் பகிர்ந்து தரவேண்டும்.
இந்த இரண்டு பணிகளையும் திருத்தூதர்கள் மிகச் சிறப்பாகச்
செய்தார்கள். நாமும் அவ்வாறு செய்து, இயேசுவின் உயிர்ப்புக்குச்
சாட்சிகளாகத் திகழவேண்டும்.
சிந்தனை
"நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நீதியை நாடித் தேடுங்கள்;
ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்; திக்கற்றோருக்கு நீதி
வழங்குங்கள்; கைம்பெண்ணுக்காக வழக்காடுங்கள்" (எசா 1: 17) என்பார்
எசாயா இறைவாக்கினர். ஆகையால், நாம் நம்முடைய சமூகத்தில் இருக்கின்ற
எளிய, வறிய, கைம்பெண்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வோம். அவர்கள்
சார்பாக நிற்போம். அதன்வழியாக இறையருளை நிறைவகாப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
யோவான் 6: 16-21
ஆண்டவர் இங்கே? அச்சம் எங்கே?
நிகழ்வு
வாழ்க்கையே வெறுத்துப்போன இளைஞன் ஒருவன், கடலில் விழுந்து தற்கொலை
செய்துகொள்ளப் பார்த்தன். அவன் அவ்வாறு கடலில் விழுந்து தற்கொலை
செய்யும் நேரத்தில் வழிபோக்கர் ஒருவர் அந்த வழியாக வந்தார்.
அவர் இளைஞனைப் பார்த்துவிட்டு, "கடலில் இவன் மகிழ்ச்சியாக
நீந்திக் குளிக்கின்றான் போல" என்று நினைத்துக்கொண்டு அங்கிருந்து
வேகமாகச் சொன்னார்.
அப்பொழுது அந்த இளைஞனிடமிருந்து, "காப்பாற்றுங்கள்,
காப்பாற்றுங்கள் என்ற குரல் கேட்டதும், அவர் திடுக்கிட்டார்.
உடனே அவர் வேறு எதையும் யோசிக்காமல், கடலில் விழுந்து, அந்த இளைஞனைக்
காப்பாற்றி, கரையில் விட்டார். அவனோ அந்த வழிபோக்கரைப்
பார்த்து, "என்னை எதற்கு நீங்கள் காப்பாற்றிக் கரையில்
விட்டீர்கள். நான் தற்கொலை செய்துகொள்வதற்காகக் கடலில்
குதித்தேன் என்று கத்தினான்.
வழிப்போக்கருக்கும் ஒன்றும் புரியவில்லை. "என்ன! நீ கடலில்
விழுந்து தற்கொலை செய்துகொள்ளப் பார்த்தாயா...? பிறகு எதற்கு,
"காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்" என்று கத்தினாய்? என்றார்.
அதற்கு அந்த இளைஞன், "தற்கொலை செய்துகொள்ளும் போது எனக்க்குச்
சாவைக் குறித்த அச்சம் வந்துவிட்டது. அதனால்தான் அப்படிக் கத்தினேன்
என்றான். அந்த இளைஞனைக் காற்றிய வழிபோக்கருக்கு ஏதோபோல் ஆகிவிட்டது.
"இப்படியும் ஒரு பிறவியா?" என்று தலையில் அடித்துக்கொண்டு அங்கிருந்து
நகர்ந்துசென்றார்.
தற்கொலை செய்துகொள்ள முயன்றவனுக்குச் சாவைக் குறித்த அச்சம் வந்தது
வேடிக்கையாக இருந்தாலும், இன்றைக்குப் பலர் எதற்கெடுத்தாலும்
அஞ்சி அஞ்சி வாழ்வது வியப்பாக இருக்கின்றது. நற்செய்தியில் கடலில்
நடந்துவருகின்ற இயேசுவைக் கண்ட சீடர்கள் அஞ்சுகின்றார்கள். அப்பொழுது
அவர்களிடம், "அஞ்சாதீர்கள் என்று சொல்லி அவர்களுக்குத் திடமளிக்கின்றார்.
யோவான் நற்செய்தியில் இடம்பெறும் இந்த நிகழ்வு நமக்கு என்ன
செய்தியைச் சொல்கின்றது என்பதைக் குறித்து நாம் சிந்தித்துப்
பார்ப்போம்.
அஞ்சி வாழ்ந்த சீடர்கள்
இயேசு, ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து ஐயாயிரம்
பேருக்குக் உணவளித்ததைத் தொடர்ந்து, மக்கள், "இவர்தான் உலகிற்கு
வரவிருந்த இறைவாக்கினர்" (இச 18: 15-18) என்று எண்ணிக்கொண்டு,
அவரைப் பிடித்து அரசராக்க முயன்றார்கள். தன்னை "அரசியல்
மெசியா" என்று நினைத்துகொண்டுதான் மக்கள் இவ்வாறு செய்கின்றார்கள்
என்று எண்ணிக்கொண்டு, இயேசு அவர்களிடம் விலகித் தனியாய் மலைக்குச்
செல்கின்றார். மறுபக்கமோ இயேசுவின் சீடர்கள் கரைக்கு வந்து, மறுகரையிலுள்ள
கப்பர்நாகும் நோக்கிப் படகில் செல்கின்றார்கள்.
சீடர்கள் பயணம் செய்த கலிலேயாக் கடலில் அடிக்கடி பெருங்காற்று
வீசும்; புயல் அடிக்கும். இயேசுவின் சீடர்கள் அவரை மலையில்
விட்டுவிட்டு, கர்ப்பர்நாகும் நோக்கி வந்தபொழுதும்
பெருங்காற்று வீசுகின்றது; கடல் பொங்கி எழுகின்றது. இப்படிப்பட்ட
சூழ்நிலையில் இயேசு கடல்மீது நடந்து வருவதைப் பார்த்துவிட்டு,
பேய் என்று சீடர்கள் அஞ்சுகின்றார்கள். இயேசுவின் சீடர்களில்
ஏழு பேர் மீனவர்கள் (யோவா 21: 1-2). அப்படியிருந்தும்
பெருங்காற்று வீசி, கடல் பொங்கி எழுந்த வேளையில், கடல்மீது இயேசு
நடந்து வருவதைக் கண்டு அஞ்சுவது வியப்பாக இருக்கின்றது.
இயேசுவின் சீடர்களைப் போன்றுதான் நாமும் பல நேரங்களில் இறைவனின்
பாதுகாப்பையும் பராமரிப்பையும் உணராமல் அஞ்சுகின்றோம். இயேசுவின்
சீடர்களுக்கு எப்படி தங்களுடைய தலைவர் தங்களுக்குத் துணையாய்
வருவார் என்ற நம்பிக்கை இல்லையோ, அப்படி நாமும் இயேசு நமக்குத்
துணையாய் இருக்கின்றார் என்பதில் நம்பிக்கை வைக்காமல் அஞ்சி
வாழ்கின்றோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஆண்டவர் நமக்கு எப்படித்
திடமளிக்கின்றார் என்பதைக் குறித்து சிந்திப்போம்.
அஞ்சாதீர்கள் என்று சொல்லித் திடமளிக்கும் இயேசு
இயேசுவின் சீடர்கள் அவரைப் பேய் என நினைத்து அஞ்சுகையில், இயேசு
அவர்களிடம், "நான்தான், அஞ்சாதீர்கள் என்று சொல்லி அவர்களுக்குத்
திடமளிக்கின்றார். இயேசு இவ்வாறு சொன்னதும், பேதுரு, "நீர்தாம்
என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும் (மத்
14: 28) என்கின்றார். யோவான் நற்செய்தியில் இந்தக் குறிப்பு இல்லாவிட்டாலும்,
மத்தேயு நற்செய்தியில் இது இருக்கும். இது ஒரு பக்கம்
இருந்தாலும், சீடர்களின் அச்சத்திற்குக் காரணம் என்னவென்று
நாம் தெரிந்துகொள்ளவேண்டும். "அன்பில் அச்சத்திற்கு இடமில்லை"
(1 யோவா 4: 18) என்பார் புனித யோவான். சீடர்களுக்கு இயேசுவின்
மேல் உண்மையான அன்பிருந்தால் அல்லது அவர்மீது நம்பிக்கை
இருந்தாலும், அவர்கள் இப்படியெல்லாம் அஞ்சியிருக்கமாட்டார்கள்.
நாமும்கூட பலநேரங்களில் இயேசுவிடம் உண்மையான அன்பில்லாமலும்
நம்பிக்கையில்லாமலும் அஞ்சி அஞ்சி வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.
ஆகையால், நாம் இயேசுவிடம் ஆழமான அன்பும் நம்பிக்கையும்
கொள்வோம். அதன்மூலம் அச்சத்திலிருந்து வெளிவருவோம்.
சிந்தனை
"அஞ்சாதே, உனக்குத் துணையாய் இருப்பேன்" (எசா 41: 13)
என்கிறார் ஆண்டவர். ஆகையால், நாம் ஆண்டவர் நமக்குத் துணையாக
இருக்கின்றார் என்பதில் நம்பிக்கை வைத்து, அச்சத்திலிருந்து
விலகி, ஆண்டவருக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|