|
|
24
ஏப்ரல் 2020 |
|
|
பாஸ்கா காலம் 2 ம் வாரம் வெள்ளிக்கிழமை |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிப்புக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதால்,
மகிழ்ச்சியோடு வெளியே சென்றார்கள்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 5: 34-42
அந்நாள்களில்
கமாலியேல் என்னும் பெயருடைய பரிசேயர் ஒருவர் தலைமைச் சங்கத்தில்
எழுந்து நின்றார். இவர் மக்கள் அனைவராலும் மதிக்கப்பட்ட திருச்சட்ட
ஆசிரியர். திருத்தூதரைச் சிறிது நேரம் வெளியே போகும்படி ஆணையிட்டு,
அவர் சங்கத்தாரை நோக்கிக் கூறியது: "இஸ்ரயேல் மக்களே, இந்த மனிதர்களுக்கு
நீங்கள் செய்ய எண்ணியுள்ளதைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்.
சிறிது காலத்திற்கு முன்பு தெயுதா என்பவன் தோன்றி, தான் பெரியவன்
என்று கூறிக்கொண்டு, ஏறத்தாழ நானூறு பேரைத் தன்னுடன்
சேர்த்துக்கொண்டான். ஆனால், அவன் கொல்லப்பட்டான். அவனைப் பின்பற்றிய
அனைவரும் சிதறிப் போகவே, அந்த இயக்கம் ஒன்றுமில்லாமல்
போயிற்று. இவற்றுக்குப் பின்பு மக்கள் தொகை கணக்கிடப்பட்ட நாள்களில்
கலிலேயனான யூதா என்பவன் தோன்றித் தன்னோடு சேர்ந்து கிளர்ச்சி
செய்யும்படி மக்களைத் தூண்டினான். அவனும் அழிந்தான்; அவனைப்
பின்பற்றிய மக்கள் அனைவரும் சிதறிப்போயினர்.
ஆகவே இப்போது நீங்கள் இம்மனிதர்களை விட்டுவிடுங்கள் என நான் உங்களுக்குக்
கூறுகிறேன். இவர்கள் காரியத்தில் நீங்கள் தலையிட வேண்டாம். இவர்கள்
திட்டமும் செயலும் மனிதரிடத்திலிருந்து வந்தவை என்றால் அவை ஒழிந்து
போகும். அவை கடவுளைச் சார்ந்தவை என்றால் நீங்கள் அவற்றை ஒழிக்க
முடியாது; நீங்கள் கடவுளோடு போரிடுபவர்களாகவும் ஆவீர்கள்." அவர்
கூறியதைச் சங்கத்தார் ஏற்றுக்கொண்டனர்.
பின்பு அவர்கள் திருத்தூதர்களை அழைத்து அவர்களை நையப்
புடைத்து, இயேசுவைப் பற்றிப் பேசக்கூடாதென்று கட்டளையிட்டு
விடுதலை செய்தனர். இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிப்புக்கு
உரியவர்களாகக் கருதப்பட்டதால் திருத்தூதர்கள் மகிழ்ச்சியோடு தலைமைச்
சங்கத்தை விட்டு வெளியே சென்றார்கள்.
அவர்கள் நாள்தோறும் கோவிலிலும் வீடுகளிலும் தொடர்ந்து கற்பித்து,
இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்து வந்தார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 27: 1,4. 13-14 (பல்லவி: 4b)
Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரின் இல்லத்தில் நான் குடியிருக்க வேண்டும். அல்லது:
அல்லேலூயா.
1
ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்?
ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க
வேண்டும்? - பல்லவி
4
நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித்
தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான்
குடியிருக்க வேண்டும்; ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; அவரது
கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். - பல்லவி
13
வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று
நான் இன்னும் நம்புகின்றேன்.
14
நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை
பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
மத் 4: 4b)
அல்லேலூயா, அல்லேலூயா! மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக,
கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
அப்பங்களைப் பகிர்ந்தளித்தார். மக்களுக்கு வேண்டிய மட்டும்
கிடைத்தது.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-15
அக்காலத்தில்
இயேசு கலிலேயக் கடலைக் கடந்து மறுகரைக்குச் சென்றார். அதற்குத்
திபேரியக் கடல் என்றும் பெயர் உண்டு. உடல் நலம் அற்றோருக்கு
அவர் செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திரளாய்
அவரைப் பின்தொடர்ந்தனர். இயேசு மலைமேல் ஏறித் தம் சீடரோடு அமர்ந்தார்.
யூதருடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது.
இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக்
கண்டு, "இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?"
என்று பிலிப்பிடம் கேட்டார். தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும்
அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார். பிலிப்பு மறுமொழியாக,
"இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு
சிறு துண்டும் கிடைக்காதே" என்றார். அவருடைய சீடருள் ஒருவரும்
சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா, "இங்கே சிறுவன் ஒருவன்
இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு
மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?"
என்றார்.
இயேசு, "மக்களை அமரச் செய்யுங்கள்" என்றார். அப்பகுதி முழுவதும்
புல்தரையாய் இருந்தது. அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக்
குறைய ஐயாயிரம். இயேசு அப்பங்களை எடுத்து, கடவுளுக்கு நன்றி
செலுத்தி, அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும்
பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது. அவர்கள்
வயிறார உண்டபின், "ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச்
சேர்த்து வையுங்கள்" என்று தம் சீடரிடம் கூறினார். மக்கள் உண்டபின்
ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச்
சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள்.
இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், "உலகிற்கு
வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே" என்றார்கள். அவர்கள்
வந்து தம்மைப் பிடித்துக்கொண்டு போய் அரசராக்கப் போகிறார்கள்
என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
திருத்தூதர் பணிகள் 5: 34-42
அவமதிப்பையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்ட திருத்தூதர்கள்
நிகழ்வு
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சீனாவில் கிறிஸ்தவர்களுக்கு
எதிராக மதக் கலவரம் வெடித்தது. அப்பொழுது கலவரக்காரர்கள் கண்ணில்
பட்ட கிறிஸ்தவர்களை எல்லாம் அடித்துத் துன்புறுத்தினார்கள்;
பலரையும் கொலை செய்தார்கள்.
இப்படிப்பட்ட சூழலில், சீனாவில் இருந்த ஒரு சிற்றூரில், இருபதுக்கும்
மேற்பட்ட கிறிஸ்தவர்கள் ஒரு வீட்டினில் ஒன்றாகக் கூடி, இறைவனிடம்
வேண்டிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அங்கு வந்த கலவரக்காரர்கள்,
துப்பாக்கி முனையில் அவர்களை நிறுத்தினார்கள். பின்னர் அவர்களில்
ஒருவன், அங்கு தொங்கிக்கொண்டிருந்த சிலுவையை எடுத்து, அதைக்
கிறிஸ்தவர்களிடம் காட்டி, "இந்தச் சிலுவையின்மீது ஏறி மிதிப்பவர்களை
உயிரோடு விட்டுவிடுவோம். மற்றவர்களைத் துப்பாக்கியால் சுட்டு
வீழ்த்துவோம்" என்றான்.
கலவரக்காரன் இவ்வாறு சொன்னதைக் கேட்டு ஏழுபேர் உயிருக்குப் பயந்து,
ஒருவர்பின் ஒருவராக சிலுவையின்மீது ஏறிமிதித்தார்கள். இதனால்
அவர்கள் கலவரக்காரர்களால் விடுவிக்கப்பட்டார்கள். மற்றவர்களோ,
என்ன நடந்தாலும் பரவாயில்லை; சிலுவையை ஏறி மிதிக்கமாட்டோம் என்று
தங்களுடைய கொள்கையில் மிக உறுதியாக இருந்தார்கள். அப்பொழுது அந்தக்
கலவரக்காரன், "உங்களுக்கு மீண்டுமாக ஒரு வாய்ப்பு தருகின்றோம்;
இப்பொழுதாவது சிலுவையில் ஏறிமிதியுங்கள்; உங்களை
விட்டுவிடுகின்றோம். இல்லையென்றால், நீங்கள் சாவது உறுதி" என்றான்.
அப்பொழுதும் அந்தப் பதின்மூன்று பேரும், "எங்களுடைய உயிர்
போனாலும் பரவாயில்லை. நாங்கள் ஒருபோதும் சிலுவையின்மீது ஏறி
மிதிக்கமாட்டோம்" என்று ஒருமித்த குரலில் சொன்னார்கள்.
இதனால் அங்கிருந்த கலவரக்காரன் ஒருவன் தன்னிடமிருந்த
துப்பாக்கியை எடுத்து, அந்தப் பதின்மூன்று பேரையும் சுட்டி
வீழ்த்தினான். இதனால் அந்தப் பதின்மூன்று பேரும் இயேசுவுக்காகத்
தங்களுடைய உயிரையும் தருகின்றோம் என்ற மகிழ்ச்சியில் மனநிறைவோடு
இறந்தார்கள்.
தாங்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட போதும், அதை மகிழ்ச்சியோடு
ஏற்றுக்கொண்ட அந்தப் பதிமூன்று சீனக் கிறிஸ்தவர்களும், இன்றைய
முதல் வாசகத்தில், தலைமைச் சங்கத்தாரால் நையப்புடைக்கப்பட்டபோதும்,
அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்ட திருத்தூதர்களை நமக்கு நினைவுபடுத்துகின்றார்கள்.
திருத்தூதர்கள் கிறிஸ்துவின் பொருட்டுத் தங்களுக்கு வந்த துன்பத்தை
மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டது, நமக்கு என்ன செய்தி எடுத்துச்
சொல்கிறது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப்
பார்ப்போம்.
கடவுளைச் சார்ந்த பணிகளைச் செய்துவந்த திருத்தூதர்கள்
இன்றைய முதல் வாசகத்தின் முதல் பகுதி, திருச்சட்ட அறிஞரான கமாலியேல்
திருத்தூதர்களை வெளியே அனுப்பிவிட்டு, தலைமைச் சங்கத்தாரிடம்
பேசுவதைப் பற்றி எடுத்துக்கூறுகின்றது. கமாலியேல் தலைமைச் சங்கத்தாரிடம்
ஒரு முக்கியமான செய்தியைக் குறித்து விவாதிக்கின்றார். அது என்னவெனில்,
திருத்தூதர்கள் செய்துவந்தது மனிதரிடமிருந்து வந்தது என்றால்,
விரைவிலேயே அது ஒழிந்துபோய்விடும். ஒருவேளை அது கடவுளைச்
சார்ந்தவை என்றால் ஒழிக்க முடியாது என்பதாகும். இதற்காக அவர்
இரண்டு பேரை எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிடுகின்றார். ஒருவன்
"தெயுதா" மற்றவன், "கலிலேயனான யூதா. இந்த இருவரும் தங்களை
மெசியா என்று சொல்லிக்கொண்டு, மக்களைத் திசை திருப்பினார்கள்.
ஒருகட்டத்தில் இவர்கள் ஏமாற்றுக்காரர்கள் என்று தெரிந்ததும்,
உரோமையர்களால் ஒடுக்கப்பட்டார்கள்.
இவர்களைப் போன்று இயேசு இருந்தால், அவரைச் சார்ந்தவர்கள் ஒன்றுமில்லாமல்
போவார்கள். அதே நேரத்தில், அவர் கடவுளிடமிருந்து வந்தவர் என்றாலும்
திருத்தூதர்கள் செய்துவந்த பணி கடவுளிடமிருந்து வந்தது என்றாலும்,
அவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்று எச்சரிக்கின்றார். இதனால்
தலைமைச் சங்கத்தார் திருத்தூதர்களைக் கொல்லாமல், அவர்களை நையப்புடைத்து,
அனுப்பி வைக்கின்றார்கள்.
துன்பத்தையும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்ட திருத்தூதர்கள்
தலைமைச் சங்கத்தார், திருத்தூதர்களிடம் இயேசுவைப் பற்றி அறிவிக்கக்கூடாது
என்று சொல்லி, அவர்களை நையப்புடைக்கின்றார்கள். அதற்காக அவர்கள்
வருத்தப்படவில்லை. மாறாக, கிறிஸ்துவின் பொருட்டு அவமதிப்புக்கு
உள்ளானதை நினைத்து மகிழ்கின்றார்கள்.
சீடத்துவ வாழ்வில் நமக்குத் தொடர்ந்து துன்பங்கள்
வந்துகொண்டுதான் இருக்கும். அவற்றை நினைத்து நாம்
கவலைப்பட்டுக்கொண்டோ அல்லது வருத்தப்பட்டுக்கொண்டோ
இருக்கக்கூடாது. மாறாக அவற்றை மகிழ்வோடு ஏற்றுக்கொள்ளவேண்டும்.
அப்பொழுதுதான் நாம் இயேசுவின் உண்மையான சீடர்களாக
இருக்கமுடியும். ஏனெனில், இயேசு சொல்வது போல், இறுதிவரை
மனவுறுதியோடு இருப்போரே மீட்கப்படுவர்" (மத் 10: 22). ஆகையால்,
நாம் சீடத்துவ வாழ்வில் வரும் துன்பங்களைக் கண்டு வருந்தாமல்,
அவற்றை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு, இறுதிவரை மன உறுதியோடு
இருப்போம்.
சிந்தனை
"நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள், அப்போது உலகம் மகிழும்.
நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால், உங்கள் துயரம் மகிழ்ச்சியாக
மாறும்" (யோவா 16: 20) என்பார் இயேசு. எனவே, நாம் இயேசுவின்
பொருட்டும் அவருடைய நற்செய்தியின் பொருட்டும் அடைக்கின்ற
துன்பங்களை நினைத்து மனவருத்தம் அடையாமல், அவற்றை மகிழ்ச்சியாக
ஏற்றுக்கொண்டு, அவருடைய பணியைத் தொடர்ந்து செய்வோம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
யோவான் 6: 1-15
உங்களிடம் இருப்பதைக் கடவுளிடம் கொடுங்கள்; கடவுள் அதன்வழியாக
வல்ல செயல் செய்வார்
நிகழ்வு
இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் ஒரு பெண்ணை உயிருக்குயிராய்க்
காதலித்தான்; அவளையே மணம்முடிக்கவும் அவன் முடிவுசெய்தான்.
ஆனால், அதில் ஒரு சிக்கல் இருந்தது. அது என்னவெனில், அந்த
இளைஞன் காதலித்து வந்த பெண்ணின் தந்தை ஒரு குறிப்பிட்ட
தொகையோடு வந்தால்தான், தன்னுடைய மகளை அவனுக்குத் அருட்சாதனம்
செய்து வைப்பேன் என்று சொல்லியிருந்தார். இதனால் அவன்
பணத்திற்கு என்ன செய்வது குழம்பினான்.
அப்பொழுது அவனுக்கு ஓவியம் வரைந்து, நல்ல நிலையில் இருக்கும்
தன்னுடைய நெருங்கிய நண்பனிடம் கேட்டலாம் என்ற எண்ணம் தோன்ற
அவனிடத்தில் சென்றான். அவன் தன்னுடைய நண்பனிடத்தில் சென்ற
நேரம், அவன் ஒரு பிச்சைக்காரனை ஓவியமாக வரைந்துகொண்டிருந்தான்.
இவனைப் பார்த்ததும், அவன் வந்த காரணத்தைக் கேட்டபொழுது, இவன்
எல்லாவற்றையும் அவனிடம் எடுத்துச் சொன்னான். இதற்கு நடுவில்,
ஓவியனை பார்க்க யாரோ ஒருவர் வர, அவன் அவரோடு வெளியே சென்றான்.
இளைஞன் அங்கே நின்றுகொண்டிருந்த பிச்சைக்காரனைப் பார்த்தான்.
அவன் பார்ப்பதற்குப் பரிதாப இருப்பதைக் கண்டு, அவன்மேல்
பரிவுகொண்டு, அவனுக்கு ஏதாவது கொடுத்தால் நன்றாக இருக்கும்
என்று முடிவுசெய்து, தன்னுடைய சட்டைப் பையில் இருந்த பத்து
ரூபாயை எடுத்து அவனுக்குக் கொடுத்தான். பின்னர் அவன், வெளியே
சென்ற தன்னுடைய நண்பன் வரக் காலம் தாழ்த்தவே, தன்னுடைய
வீட்டுக்குத் திரும்பி வந்துவிட்டான்.
மறுநாள் காலையில், இளைஞனைப் பார்க்க ஓர் ஆடம்பரமான நான்கு
சக்கர வண்டியில் பெரியவர் ஒருவர் வந்தார். அவர் இளைஞனிடத்தில்
ஒரு கவரையும் பணமுடிப்பையும் கொடுத்தார். வியப்பு மேலிட,
அந்தப் பெரியவர் கொடுத்த கவரைத் திறந்துபார்த்துப் படிக்கத்
தொடங்கிய இளைஞன், இன்னும் வியந்துபோனான். ஆம், அங்கு
வந்திருந்தது, முந்தைய நாளில் பிச்சைக்காரனைப் போன்று இருந்த
மனிதர்தான். அவர் ஓவியரிடம் தன்னை ஒரு பிச்சைக்காரராக
வரையவேண்டும் என்று கேட்டிருந்தார். உண்மையில் அவர் நகரில்
இருந்த பெரிய பணக்காரர். இப்படிப்பட்ட சூழலில்தான் இளைஞன் அந்த
மனிதரைப் பிச்சைக்காரன் என நினைத்து, அவருக்குப் பத்து ரூபாய்
கொடுத்தான். அதற்குக் கைம்மாறாக அவர் அவனுடைய திருமணத்திற்குப்
பெருந்தொகையைக் கொடுத்தார்.
ஒருவினாடி நடப்பது கனவா? நனவா? என்று சிந்தித்துக் கொண்டிருந்த
இளைஞனைப் பார்த்து, "நீ என்மீது பரிவுகொண்டு, உன்னிடத்தில்
இருந்ததை எனக்குக் கொடுத்தாய். அதனால்தான் நான் உன்மீது
பரிவுகொண்டு என்னிடத்தில் கொடுத்தேன்" என்று சொல்லிவிட்டு,
அவனிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்.
ஆம், நாம் நம்மிடம் இருப்பதை பிறரிடமும் கடவுளிடமும்
கொடுக்கையில், கடவுள் அதைகொண்டு அதிசயத்தை நிகழ்த்தி
காட்டுவார். நற்செய்தியில் சிறுவன் ஒருவன் தன்னிடம் இருந்த
ஐந்து வாற்கோதுமை அப்பங்களையும் இரண்டு மீன்களையும் ஆண்டவர்
இயேசுவிடம் கொடுக்க, ஆண்டவர் இயேசு அவற்றைக் கொண்டு ஐயாயிரம்
பேருக்கு உணவளிக்கின்றார். இயேசு இந்த அருஞ்செயல் நமக்கு
உணர்த்தும் செய்தி என்ன என்பதைக் குறித்து நாம் சிந்தித்துப்
பார்ப்போம்.
நம்மிடம் இருப்பதைக் கொடுக்க முன்வருவோம்
நற்செய்தியில், இயேசு தன்னுடைய போதனையைக் கேட்கவும்
தன்னிடமிருந்து நலம்பெறவும் வந்த மக்கள்மீது பரிவுகொண்டு,
அவர்களுக்கு உணவளிக்க முடிவுசெய்கின்றார். அதனால், அவர்
பிலிப்பிடம், "இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம்
வாங்கலாம்?" என்றொரு கேள்வியைக் கேட்கின்றார். இப்படியொரு
கேள்வியை பிலிப்பிடம் கேட்கும் இயேசு, தாம் செய்யப்போவதை
அறிந்திருந்தும் அவரைச் சோதித்துப் பார்க்கவே பார்க்கின்றார்.
எப்படி ஆபிரகாமின் நம்பிக்கையை ஆண்டவர் சோதித்துப் பார்க்க,
அவருடைய மகன் ஈசாக்கைப் பலிகொடுக்கச் சொன்னாரோ, அப்படி இயேசு
தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும், பிளிப்பைச் சோதித்துப்
பார்க்க இக்கேள்வியைப் கேட்கின்றார். இதற்குப் பிலிப்பு சரியான
பதிலைச் சொல்லாதபொழுது, எப்பொழுதும் மற்றவர்களை இயேசுவிடம்
அறிமுகப்படுத்தும் அந்திரேயா, சிறுவன் ஒருவனிடம் ஐந்து
அப்பங்களும் இரண்டு மீன்களும் இருப்பதைச் சொல்லி, அவற்றைச்
சிறுவனிடமிருந்து வாங்கி இயேசுவிடம் கொடுக்கின்றார்.
குறைந்தவற்றைக் கொண்டு பலுகச் செய்யும் இயேசு
இயேசு தன்னிடம் கொடுக்கப்பட்ட ஐந்து அப்பங்களையும் இரண்டு
மீன்களையும் எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, அவற்றை
மக்களுக்குக் கொடுக்கின்றார். இதனால் பெண்கள் மற்றும்
குழந்தைகள் நீங்கலாக ஐயாயிரம் பேர் உண்கின்றார்கள். ஆம்,
ஒன்றுமில்லாமையிலிருந்தே உலகைப் படைத்த கடவுள், நாம் அவரிடம்
கொடுப்பது மிகச் சிறிதாக இருந்தாலும், அதைக் கொண்டு, அவர்
பலுகிப் பெருகச் செய்வார். அப்படியானால், நாம் நம்மிடம்
இருப்பதை, நற்செய்தியில் வருகின்ற சிறுவன் கொடுக்க
முன்வந்ததைப் போன்று கொடுக்க முன்வரவேண்டும். அப்பொழுது
இயேசுவின் அருஞ்செயல் அங்கு நடைபெறும் .
நாம் நம்மிடம் இருப்பதை பிறருக்கும் கடவுளுக்கும் கொடுக்க
முன்வருகின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
"கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்" (லூக் 6: 38)
என்பார் இயேசு. ஆகையால், நாம் நம்மிடம் இருப்பதைக் கொடுக்க
முன்வருவோம். அதன்வழியாக இறைவன் நம் வழியாக அற்புதங்களைச்
செய்ய அனுமதிப்போம்; இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|