|
|
23
ஏப்ரல் 2020 |
|
பாஸ்கா காலம் 2ம் வாரம் வியாழக்கிழமை
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நாங்களும் தூய ஆவியும் சாட்சிகள்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 5: 27-33
அந்நாள்களில்
காவலர்கள் திருத்தூதர்களை அழைத்துக்கொண்டுவந்து யூதத் தலைமைச்
சங்கத்தின்முன் நிறுத்தினார்கள். தலைமைக் குரு அவர்களை நோக்கி,
"நீங்கள் இந்த இயேசு பற்றிக் கற்பிக்கக்கூடாது என்று நாங்கள்
கண்டிப்பாய்க் கட்டளையிடவில்லையா? என்றாலும் எருசலேம் முழுவதும்
நீங்கள் கற்பித்து வருகிறீர்கள். மேலும் இந்த மனிதருடைய இரத்தப்
பழியையும் எங்கள்மீது சுமத்தப்பார்க்கிறீர்களே!" என்றார்.
அதற்குப் பேதுருவும் திருத்தூதரும் மறுமொழியாக,
"மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிடக் கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய
வேண்டும்? நீங்கள் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்ற இயேசுவை நம்
மூதாதையரின் கடவுள் உயிர்த்தெழச் செய்தார். இஸ்ரயேல் மக்களுக்கு
மனமாற்றத்தையும் பாவ மன்னிப்பையும் அளிப்பதற்காகக் கடவுள் அவரைத்
தலைவராகவும் மீட்பராகவும் தமது வலப்பக்கத்துக்கு உயர்த்தினார்.
இவற்றுக்கு நாங்களும் கடவுள் தமக்குக் கீழ்ப்படிவோருக்கு அருளும்
தூய ஆவியும் சாட்சிகள்" என்றனர்.
இவற்றைக் கேட்ட தலைமைச் சங்கத்தார் கொதித்தெழுந்து, திருத் தூதர்களைக்
கொல்லத் திட்டமிட்டனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
=================================================================================
திபா 34: 1,8. 16-17. 18-19 (பல்லவி: 6a)
பல்லவி: ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச்
செவிசாய்த்தார். அல்லது: அல்லேலூயா.
1
ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும்
என் நாவில் ஒலிக்கும்.
8
ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம்
அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். - பல்லவி
16
ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர்,
அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார்.
17
நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை
அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். - பல்லவி
18
உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த
நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார்.
19
நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல; அவை அனைத்தினின்றும்
ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
(யோவா 20: 29)
அல்லேலூயா, அல்லேலூயா! "தோமா, என்னைக் கண்டதால் நம்பினாய்.
காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்." அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
தந்தை மகன்மேல் அன்புகூர்ந்து அனைத்தையும் அவர் கையில் ஒப்படைத்துள்ளார்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 31-36
அக்காலத்தில்
இயேசு நிக்கதேமிடம் கூறியது: மேலிருந்து வருபவர், அனைவரையும்விட
மேலானவர். மண்ணுலகிலிருந்து உண்டானவர் மண்ணுலகைச் சேர்ந்தவர்.
மண்ணுலகு சார்ந்தவை பற்றியே அவர் பேசுகிறார். விண்ணுலகிலிருந்து
வருபவர், அனைவருக்கும் மேலானவர். தாம் கண்டதையும் கேட்டதையும்
பற்றியே அவர் சான்று பகர்கிறார். எனினும் அவர் தரும் சான்றை
எவரும் ஏற்றுக்கொள்வதில்லை. அவர் தரும் சான்றை ஏற்றுக்கொள்பவர்
கடவுள் உண்மையானவர் என்பதை உறுதிப்படுத்துகிறார்.
கடவுளால் அனுப்பப்பெற்றவர் கடவுளின் வார்த்தைகளைப் பேசுகிறார்.
கடவுள் அவருக்குத் தம் ஆவிக்குரிய கொடைகளை அளவின்றிக்
கொடுக்கிறார். தந்தை மகன்மேல் அன்புகூர்ந்து அனைத்தையும் அவர்
கையில் ஒப்படைத்துள்ளார். மகனிடம் நம்பிக்கை கொள்வோர்
நிலைவாழ்வைப் பெறுவர். நம்பிக்கை கொள்ளாதோர் வாழ்வைக் காணமாட்டார்.
மாறாகக் கடவுளின் சினம் அவர்கள்மேல் வந்து சேரும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
திருத்தூதர் பணிகள் 5: 27-33
"நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தால்,
அவருக்கு ஏற்புடையவர்கள் ஆவீர்கள்"
நிகழ்வு
அது ஒரு கிறிஸ்தவப் பள்ளிக்கூடம். அந்தப் பள்ளிக்கூடத்திற்குத்
தாளாளராக இருந்த அருள்பணியாளர், அந்தப் பள்ளிக்கூடத்தில் இருந்த
பத்தாம் வகுப்பு மாணவர்களைப் பார்வையிடச் சென்றார்.
அவர்களைப் பார்வையிட்ட பின்பு, அவர் அவர்களிடம், "உங்கள் வகுப்பில்
சிறந்த மாணவர் அல்லது மாணவி என்று யாரைச் சொல்வீர்கள்" என்று
கேட்டார் அப்பொழுது எல்லாரும் ஒருமித்த குரலில், "லூசி" என்றார்கள்.
"ஏன் அந்த மாணவியை சிறந்த மாணவி என்று சொல்கிறீர்கள்?" என்று
அருள்பணியாளர் அவர்களிடம் கேட்டபொழுது, "அவள் மிகவும் நல்லவள்"
என்றாள் ஒரு மாணவி, "அவள் சரியான நேரத்திற்குப் பள்ளிக்கூடத்திற்கு
வருவாள்" என்றாள் மற்றொரு மாணவி. "அவள் எல்லாரிடத்திலும் அன்பாய்ப்
பழகக்கூடியவள்" என்றான் ஒரு மாணவன்.
இப்படி ஒவ்வொருவரும் லூசி என்ற மாணவியைக் குறித்துச்
சொல்லிக்கொண்டிருக்கும்பொழுது, அருள்பணியாளர் அவர்களைக்
குறுக்கிட்டு, "சரி! லூசி என்ற மாணவியைப் பற்றி ஒவ்வொருவரும்
நல்லவிதமாய்ச் சொன்னீர்கள். இப்பொழுது கடைசியாக ஒரே ஒருவர் மட்டும்
லூசியைப் பற்றிச் சொல்லுங்கள். இத்தோடு இதனை
முடித்துக்கொள்வோம்" என்றார்.
அப்பொழுது ஒரு மாணவி எழுந்து பேசத்தொடங்கினாள்; "லூசி என்னுடைய
நெருங்கிய தோழிதான். அதற்கான நான் அவளைப் பற்றி இதைச் சொல்லவில்லை...
சில நாள்களுக்கு முன்பு இவளுடைய வீட்டிற்கு நான் சென்றிருந்தபொழுது,
இவளுடைய அம்மா, இவளைப் பற்றிச் சொல்லும்பொழுது, இவள் கடவுளுக்கும்
பெற்றோருக்கும் கீழ்ப்படிந்து நடக்கக்கூடியவள் என்று
சொன்னார். இதையேதான் நான் இப்பொழுது உங்கள் முன்பாகச் சொல்ல
விரும்புகிறேன்." அந்த மாணவி இவ்வாறு சொல்லி முடித்ததும், அருள்பணியாளர்
அவர்களிடம், "லூசியின் தாய் அவளைக் குறித்து சொன்னபோது, அவள்
கடவுளுக்கும் பெற்றோருக்கும் கீழ்ப்படிந்து நடப்பவள் என்று
சொன்னார்களே! அதையேதான் நான் உங்களுக்கு வலியுறுத்திக் கூற
விழைகின்றேன். எவர் ஒருவர் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கின்றாரோ,
அவரிடம் எல்லா நற்பண்புகளும் குடிகொண்டிருக்கும்; அவர் எல்லாரைவிடம்
விட சிறந்தவராய் விளங்குவார்" என்றார்.
ஆம், கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கின்ற ஒருவரிடம் எல்லாவிதமான
நற்பண்புகளும் குடிகொண்டிருக்கும். அப்படிப்பட்டவர் எல்லாரிலும்
சிறந்தவராய் விளங்குவார். முதல் வாசகத்தில் மனிதர்களுக்கு அல்ல,
கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடந்த திருத்தூதர்களைக் குறித்து
வாசிக்கின்றோம். திருத்தூத்ரகள் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து
நடந்தது, நமக்கு என்ன செய்தியைச் சொல்கின்றது என்பதைக்
குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
தலைமைச் சங்கத்தாரின் கட்டளைகளை மீறிப் போதித்த திருத்தூதர்கள்
தலைமைச் சங்கத்தினர், திருத்தூதர்களிடம் இயேசுவைப் பற்றிப் பேசவோ,
அறிவிக்கவோ கூடாது என்று எச்சரித்திருந்தார்கள். அப்படியிருந்தும்
திருத்தூதர்கள் இயேசுவைப் பற்றித் தொடர்ந்து பேசியும் அறிவித்து
வந்தார்கள். இதனால் தலைமைச் சங்கத்தினர் திருத்தூதர்களைப்
பிடித்து, மீண்டுமாக விசாரணை நடத்தத் தொடங்குகின்றார்கள். தலைமைச்
சங்கத்தினர், திருத்தூதர்களிடம் ஏன் இயேசுவைப் பற்றிப் பேசவும்
அறிவிக்கவும் கூடாது என்று சொல்லிவந்தார்கள் என்பதைப் பற்றித்
தெரிந்து கொள்வது நல்லது.
தலைமைச் சங்கத்தில் இருந்த பெரும்பாலோர் சதுசேயர்களாக இருந்தார்கள்.
இவர்களுக்கு உயிர்த்தெழுதல்மீது நம்பிக்கை கிடையாது. மட்டுமல்லாமல்,
திருத்தூதர்கள் இயேசுவின் இரத்தப் பழியை இவர்கள்மீது சுமத்தினார்கள்.
இதனால் இவர்கள் திருத்தூதர்களிடம் இயேசுவைக் குறித்துப் பேசவும்
அறிவிக்கக்கூடாது என்றும் எச்சரிக்கின்றார்கள்.
கடவுளுக்கு மட்டுமே கீழ்ப்படிந்த திருத்தூதர்கள்
தலைமைச் சங்கத்தார் திருத்தூதர்களிடம், இயேசுவைப் பற்றிப் பேசவும்
அறிவிக்கவும் கூடாது என்று சொன்னபிறகு, திருத்தூதர்கள் அவர்களிடம்,
"மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படியவேண்டும்"
என்கிறார்கள். திருத்தூதர்கள் இவ்வாறு சொன்னதை, அப்படியே கடைப்பிடித்து
வாழ்ந்துவந்தார்கள். இதனால் தலைமைச் சங்கத்தாரிடமிருந்து எதிர்ப்புகளுக்கு
மேல் எதிர்ப்புகள் வந்தபோதும், ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியைத்
தொடர்ந்து அறிவித்து வந்தார்கள்.
ஆண்டவர் இயேசு விண்ணேற்றம் அடைவதற்கு முன்பாகத் தன் சீடர்களிடம்,
"நீங்கள் உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப்
பறைசாற்றுங்கள்" (மாற் 16: 15) என்று சொன்னார். இக்கட்டளைக்குத்
திருத்தூதர்கள் அப்படியே கீழ்ப்படிந்து, இயேசுவைப் பற்றிய நற்செய்தியை
அறிவித்து, சான்று பகர்ந்தார்கள். நாமும் இயேசுவின் இக்கட்டளைக்குக்
கீழ்ப்படிந்து நடக்கும்பொழுது, அவருடைய அன்புக்குரிய சீடர்களாக
மாறுவோம் என்பது உறுதி.
சிந்தனை
நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தால் அவருக்கு ஏற்புடையவர்கள்
ஆவீர்கள் என்பார் புனித பவுல். ஆகையால், நாம் வாழ்வின் ஊற்றாகவும்
எல்லாவற்றிற்கும் அதிபதியாகவும் இருக்கின்ற, கடவுளுக்குக்
கீழ்ப்படிந்து நடப்போம்; அவருடைய நற்செய்தியை எத்தகைய இடர்வரினும்
தொடர்ந்து அறிவிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
யோவான் 3: 31-36
இயேசுவின்மீது கொள்ளும் நம்பிக்கைக்குப்
பரிசு, நிலைவாழ்வு
நிகழ்வு
சீனாவிற்கு ஆண்டவருடைய நற்செய்தியைக் கொண்டுசென்றவர்களில்
முன்னோடியாகக் கருதப்படுகின்றவர் ஹட்சன் டெய்லர் (Hutson
Taylor 1832- 1905).
இவர் சீனாவிற்குச் செல்லும்பொழுது, காற்றுவீசும் திசைநோக்கிச்
செல்லும் பாய்மரக் கப்பலில் பயணம் செய்தார். கப்பல் தெற்கு மலாய்த்
தீபகற்பத்திற்கும் சுமத்ராத் தீவுகளுக்கும் இடையில்
சென்றுகொண்டிருக்கும்பொழுது, காற்று வீசுவது நின்றுபோனது. இதனால்
கப்பலை ஓட்டிச் சென்ற மாலுமிகள் செய்வதறியாது திகைத்தார்கள்.
ஏனென்றால், சுமத்ரா தீவுகளில் மனிதர்களைப் பிடித்துச் சாப்பிடுபவர்
பலர் இருந்தனர். இதனால்தான் கப்பலை ஓட்டிச் சென்ற மாலுமிகள் அஞ்சினார்கள்.
செய்தி கப்பலில் இருந்த தளபதிக்குத் தெரியவந்ததும், அவர் இன்னும்
அஞ்சினார். அப்பொழுது யாரோ ஒருவர் அவரிடம், கப்பலில் மறைப்பணியாளர்
ஒருவர் இருக்கின்ற செய்தியையும் அவர் கடவுளிடம் மிகுந்த பக்தி
கொண்டவர் என்ற செய்தியையும் அவரிடம் கேட்டால், அவர் இறைவனிடத்தில்
நம்பிக்கையோடு வேண்டி, காற்று வீசுவதற்கு ஏதாவது வழிசெய்வார்
என்ற செய்தியையும் சொன்னார்.
உடனே கப்பல் தளபதி ஹட்சன் டெய்லர் இருந்த அறைக் கதவைத் தட்டி,
நிலைமையை எடுத்துச் சொல்லி, "நீங்கள் கடவுள்மீது ஆழமான நம்பிக்கை
கொண்டவர் என்பதைக் கேள்விப்பட்டேன். நாம் இருப்பதோ ஆபத்தான பகுதி,
இங்கிருந்து நாம் தப்பிச் செல்லவேண்டும் என்றால், காற்றுவீசவேண்டும்
என்று கடவுளிடம் வேண்டவேண்டும். நீங்கள் காற்றுவீசவேண்டும் என்று
கடவுளிடம் வேண்டினீர்கள் என்றால், நிச்சயம் கடவுள் காற்றுவீசச்
செய்வார். அந்த நம்பிக்கை எனக்கிருக்கின்றது" என்றார். அதற்கு
ஹட்சன் டெய்லர், "காற்று வீசுவதற்குக் கடவுளிடம் நான்
வேண்டுகின்றேன். ஆனால், நீங்கள் மாலுமிகளிடம் கப்பலைத் தொடர்ந்து
இயக்கச் சொல்லவேண்டும்" என்றார். "காற்று இல்லாத நேரத்தில் கப்பலை
இயக்கச் சொன்னால், அவர்கள் என்னை முட்டாள் என்று சொல்வார்களே"
என்று தளபதி சொன்னதற்கு, ஹட்சன் டெய்லர் அவரிடம், "நான் சொல்வதற்கு
போல் செய்யுங்கள்" என்று சொல்லி, தன்னுடைய அறையைத்
தாழிட்டுவிட்டு, முழந்தாள்படியிட்டு, இறைவனிடம் வேண்டத் தொடங்கினார்.
நாற்பத்து ஐந்து வினாடிகளுக்குப் பிறகு ஹட்சன் டெய்லர் இருந்த
அறையின் கதவு தட்டப்பட்டது. அவர் எழுந்துசென்று கதவைத் திறந்து
பார்த்தபொழுது கப்பல் தளபதி நின்றுகொண்டிருந்தார். அவர் ஹட்சன்
டெய்லரிடம், "ஐயா! உங்களுடைய வேண்டுதலை இறைவன் கேட்டுவிட்டார்;
கடலில் காற்று வீசத் தொடங்கி, கப்பல் மீண்டும் இயங்கத் தொடங்கிவிட்டது.
நன்றி" என்று சொல்லிவிட்டு அவரிடமிருந்து விடைபெற்றார்.
ஹட்சன் டெய்லர் கடவுளிடம் நம்பிக்கையோடு வேண்டியதால், அவர்
பயணம் செய்த கப்பலில் இருந்த எல்லாரும் மிகப்பெரிய ஆபத்திலிருந்து
காப்பாற்றப்பட்டனர். நாமும் இறைவனிடம் நம்பிக்கையோடு
வேண்டினால், இறைவன்மீது நம்பிக்கை வைத்து வாழ்ந்தால், இறைவனிடமிருந்து
ஆசியைப் பெற்றுக்கொள்வது உறுதி. இன்றைய நற்செய்தி வாசகம், இயேசுவிடம்
நம்பிக்கை கொண்டு வாழ்வோர் நிலைவாழ்வைப் பெறுவர் என்ற செய்தியை
எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து நாம் சிந்தித்துப்
பார்ப்போம்.
விண்ணிலிருந்து வந்த இயேசு
நிக்கதேமிடம் தொடர்ந்து பேசுகின்ற இயேசு, மேலும் ஒருசில உண்மைகளை
பேசுகின்றார். அவற்றில் இரண்டு உண்மைகளை நம்முடைய சிந்தனைக்கு
எடுத்துக்கொள்வோம்.
இயேசு நிக்கதேமிடம் மானிடமகன் மேலிருந்து வந்தவர் என்று
கூறுகின்றார். அப்படிப்பட்டவருக்கு கடவுள் தூய ஆவியாரின் கொடைகளை
அளவின்றிக் கொடுத்திருக்கின்றார் என்றும் அனைத்தையும் அவர்
கையில் ஒப்படைத்திருக்கின்றார் என்றும் கூறுகின்றார். தூய ஆவியாரின்
அருள்பொழிவைப் பெற்ற இயேசு, எங்கும் நன்மை செய்து (திப 10: 38)
தந்தை தன்னிடம் ஒப்படைத்த பணிகளை நிறைவேற்றினார் (யோவா 17:
1-44); ஆனால், மக்கள்தான் அவர்மீது நம்பிக்கை கொள்ளவிலை. தன்மீது
நம்பிக்கை கொள்வோர் பெறுகின்ற ஆசியையும் நம்பிக்கை கொள்ளாதவர்
பெறுகின்ற தண்டனையையும் இயேசு அடுத்ததாகச் சொல்கின்றார். அதைக்
குறித்துத் தொடர்ந்து சிந்திப்போம்.
நம்பிக்கை கொள்வோருக்கு நிலைவாழ்வு
தந்தைக் கடவுள் தன்னிடம் அனைத்தையும் ஒப்படைத்ததாகச் சொல்லும்
இயேசு, தன்னிடம் நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வைப் பெறுவர் என்று
சொல்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இவ்வார்த்தை இணைச்சட்ட நூல்
30: 15-20 இல் வருகின்ற வார்த்தைகளை நமக்கு நினைவுபடுத்துகின்றன.
இப்பகுதியில் நமக்கு முன்பாக நன்மை, தீமை என்ற இரண்டு வாய்ப்புகள்
இருக்கின்றன. இதில் நாம் எதைத் தேர்ந்தேடுக்கின்றோமோ, அதற்கேற்றாற்போல்
நம்முடைய வாழ்க்கை இருக்கும் என்று சொல்லப்படுகின்றது.
ஆம், இயேசுவிடம் நம்பிக்கை கொண்டால் நிலைவாழ்வு, அவர்மீது நம்பிக்கை
கொள்ளவில்லை என்றால் தண்டனை. இதில் நாம் எதைத் தேர்ந்தெடுக்கப்
போகிறோம். சிந்திப்போம்.
சிந்தனை
அவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது
(யோவா 1: 4) என்பார் புனித யோவான். ஆகையால், நமக்கு
நிலைவாழ்வைத் தரும் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|