|
|
22
ஏப்ரல் 2020 |
|
பாஸ்கா காலம் 2 ம் வாரம் -
புதன்கிழமை
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நீங்கள் சிறையில் அடைத்து வைத்திருந்த மனிதர்கள், அதோ!
கோவிலில் நின்று மக்களுக்குக் கற்பிக்கின்றனர்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 5: 17-26
அந்நாள்களில்
தலைமைக் குருவும் அவரைச் சேர்ந்த சதுசேயக் கட்சியினர் அனைவரும்
பொறாமையால் நிறைந்து திருத்தூதரைக் கைது செய்து பொதுச்
சிறையில் காவலில் வைத்தனர். ஆனால் இரவில் ஆண்டவரின் தூதர்
சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து அவர்களை வெளியே அழைத்துச்
சென்று, "நீங்கள் போய்க் கோவிலில் நின்று வாழ்வு பற்றிய
வார்த்தைகளை யெல்லாம் மக்களுக்கு எடுத்துக் கூறுங்கள்" என்றார்.
இதைக் கேட்ட அவர்கள் பொழுது விடிந்ததும் கோவிலுக்குச் சென்று
கற்பித்தார்கள்.
தலைமைக் குருவும் அவரைச் சேர்ந்தவர்களும் அனைத்து இஸ்ரயேல் மக்களின்
ஆட்சிப் பேரவையாகிய தலைமைச் சங்கத்தைக் கூட்டித் திருத்தூதர்களைச்
சிறையிலிருந்து கொண்டுவருமாறு ஆள் அனுப்பினார்கள். அந்த ஏவலர்கள்
அங்கு வந்தபோது சிறையில் அவர்களைக் காணவில்லை. எனவே அவர்கள்
திரும்பி வந்து, "நாங்கள் சிறைச்சாலை உறுதியாய்ப் பூட்டப்பட்டிருப்பதையும்,
காவலர் வாயிலருகில் நின்றுகொண்டு இருப்பதையும் கண்டோம். ஆனால்
கதவைத் திறந்தபோது உள்ளே எவரையும் காணவில்லை" என்று அறிவித்தார்கள்.
இவ்வார்த்தைகளைக் கேட்ட கோவில் காவல் தலைவரும், தலைமைக் குருக்களும்
அவர்களுக்கு என்னதான் நேர்ந்திருக்கும் என்று மனங்குழம்பி நின்றனர்.
அப்பொழுது ஒருவர் வந்து, "நீங்கள் சிறையில் அடைத்து
வைத்திருந்த மனிதர்கள், அதோ! கோவிலில் நின்று மக்களுக்குக் கற்பிக்கின்றனர்"
என்று அவர்களிடம் அறிவித்தார். உடனே காவல் தலைவர் ஏவலர்களுடன்
கோவிலுக்குச் சென்று அவர்களை அழைத்துச் சென்றார். மக்கள் கல்லெறிவார்கள்
என்று அவர் அஞ்சியதால் வன்முறை எதுவும் கையாளவில்லை.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8 (பல்லவி: 6a)
Mp3
=================================================================================
பல்லவி: ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச்
செவிசாய்த்தார். அல்லது: அல்லேலூயா.
1
ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும்
என் நாவில் ஒலிக்கும்.
2
நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக்
கேட்டு அக்களிப்பர். - பல்லவி
3
என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க
மேன்மைப்படுத்துவோம்.
4
துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்;
எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். - பல்லவி
5
அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள்
முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.
6
இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்;
அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். -
பல்லவி
7
ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்துநின்று
காத்திடுவர்.
8
ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம்
அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
(யோவா 3: 16)
அல்லேலூயா, அல்லேலூயா! தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும்
எவரும் அழியாமல் நிலைவாழ்வு கொள்ளும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும்
அளவுக்கு கடவுள் உலகின் மேல் அன்புகூர்ந்தார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
தம் மகன் வழியாக உலகை மீட்கவே, கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 16-21
அக்காலத்தில்
இயேசு நிக்கதேமிடம் கூறியது: தம் ஒரே மகன்மீது நம்பிக்கை
கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே
அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார். உலகிற்குத்
தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள்
அவரை உலகிற்கு அனுப்பினார். அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத்
தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே
தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம்
நம்பிக்கை கொள்ளவில்லை.
ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால்
மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு
எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது. தீங்கு செய்யும் அனைவரும்
ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என
அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை. உண்மைக்கேற்ப வாழ்பவர்கள்
ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும்
கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
திருத்தூதர் பணிகள் 5: 17-26
"தம் அடியார்களை ஆபத்திலிருந்து
காக்கும் இறைவன்"
நிகழ்வு
ஒரு சிற்றூரில் ஆலிஸ் என்ற ஏழு வயதுச் சிறுமி ஒருத்தி இருந்தாள்.
அவளுடைய தந்தைக்கு உள்ளூரில் சரியாக வேலை கிடைக்காததால்,
"நகரத்திற்குச் சென்றால், வேலை கிடைக்கும்" என்று யாரோ ஒருவர்
சொல்லக்கேட்டு, ஆலிஸின் குடும்பம் நகரத்திற்குச் சென்று
பிழைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தது.
இதற்குப் பின்பு ஆலிஸ் தன்னுடைய அப்பா, அம்மாவோடு வீட்டில் இருந்த
குதிரை வண்டியில் நகரத்திற்குப் பயணமானார். ஆலிஸின்
வீட்டிலிருந்து, அவருடைய குடும்பம் போகவேண்டிய நகரம் ஐநூறு
மைல்களுக்கும் மேலாக இருந்ததால், வழியில் ஆங்காங்கே தாங்கி ஓய்வெடுத்துவிட்டு,
பயணத்தைத் தொடர்ந்தது.
ஒருநாள் அவர்கள் பயணம் செய்கையில், வழியில் இரண்டு பாதைகள்
வந்தன. அந்த இரண்டு பாதைகளில் எந்தப் பாதையில் செல்வது என்ற
குழப்பம் அவர்களுக்கு ஏற்பட, இறுதியாக ஒரு பாதையைத்
தேர்ந்தெடுத்தனர். அந்தப் பாதையோ ஊருக்குள் செல்லாமல்,
காட்டுக்குள் சென்றது. இதனால் அன்றைய நாள் இரவில்
காட்டுக்குள்ளே தங்கலாம் என்று ஆலிஸின் குடும்பம்
முடிவுசெய்தது. எனவே, அவர்கள் அந்தக் காட்டுக்குள்ளே கூடாரம்
அமைத்து அதிலேயே தங்கத் தொடங்கினர்.
இதற்கிடையில் இரவு உணவை ஆலிஸின் அம்மாவும் அப்பாவும்
தயாரித்துக்கொண்டிருக்க, அவர்களுக்குப் பக்கத்தில் விளையாடிக்
கொண்டிருந்த ஆலிஸ் அப்படியே நகர்ந்து நகர்ந்து நடுக்காட்டுள்
சென்றுவிட்டாள். தற்செயலாக ஆலிஸின் அப்பா அவள் எங்கே
இருக்கின்றாள் என்று தேடியபோதுதான், அவள் அங்கு இல்லை என்பது
தெரியவில்லை. ஆகையால், அவர் ஆலிஸின் அம்மாவை கூடாரத்திற்குள்
இருக்குமாறு சொல்லிவிட்டு, கையில் துப்பாக்கியோடு அவர் ஆலிசைத்
தேடிப் புறப்பட்டார்.
ஆலிஸின் அப்பா ஆலிசைத் தேடி, சற்றுத் தொலைவுதான்
சென்றிருப்பார், அங்கு "டிங்கோ" என்ற காட்டு நாய்கள் ஆலிசைச்
சூழ்ந்து இருப்பதைக் கண்டு, அப்படியே அவர் அதிர்ந்து போனார்;
ஆனால், காட்டு நாய்கள் ஆலிசைத் தாக்காத வண்ணம் ஒருசில பசுக்கள்
அவளுக்குப் பக்கத்தில் இருப்பதையும் அவர் கண்டார்.
இக்காட்சியைக் கண்ட பின்பு அவர் தன்னுடைய கையில் இருந்த
துப்பாக்கியைக் கொண்டு காட்டு நாய்களை நோக்கிச் சுட்டார்.
எல்லாம் நாலாபக்கமும் சிதறி ஓடின.
பின்னர் அவர் ஆலிசை அங்கிருந்து தூக்கிக்கொண்டு கூடாரத்திற்கு
வந்தார். வரும்வழியில் அவர் ஆலிசிடம், "நீ ஏன் இங்கு வந்தாய்?"
என்று கேட்டதற்கு, ஆலிஸ், "நீங்களும் அம்மாவும் உணவு
தயாரித்துக் கொண்டிருந்தீர்கள். நானோ விளையாடிக்கொண்டே இங்கு
வந்துவிட்டேன். இங்கு வந்தால், என்னைக் காட்டு நாய்கள்
சூழ்ந்துகொண்டு, கடித்துக் குதறுவதற்காக என்னை நோக்கிப்
பாய்ந்து வந்தன. அப்பொழுதுதான் மறைக்கல்வி வகுப்பில் என்னுடைய
ஆசிரியர் எனக்குக் கற்றுக்கொடுத்த, உங்களுக்கு ஆபத்து
வரும்போது, "என்னுடைய காவல்தூதரே என்னைக் காப்பாற்றும்" என்ற
வார்த்தைளை உரக்கச் சொன்னேன். அப்பொழுது எங்கிருந்தோ வந்த
பசுக்கள். அந்தக் காட்டு நாய்களிடமிருந்து என்னைக்
காப்பாற்றின. அவை மட்டும் வரவில்லையென்றால், நான் காட்டு
நாய்களுக்கு இரையாயிருப்பேன். உண்மையில் கடவுளின் தூதர்தான்
காவல்தூதர்தான் என்னை ஆபத்திலிருந்து காப்பாற்றினார்" என்றார்.
ஆம். கடவுள் தம் அடியார்களை மக்களை, தம் தூதரை அனுப்பிக்
காத்திடுவார். அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டுதான் உள்ள
நிகழ்வு. இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவரின் தூதர்
திருத்தூதர்களைச் சிறையிலிருந்து விடுவிப்பதைக் குறித்து
வாசிக்கின்றோம். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப்
பார்ப்போம்.
ஆண்டவரின் அடியார்களுக்கு உதவிட வரும் அவருடைய தூதர்
முதல் வாசகத்தில், சிறையில் அடைத்து வைக்கப்பட்ட
திருத்தூதர்களை ஆண்டவரின் தூதர் விடுவித்து, அவர்களைத்
திருக்கோயிலில் வாழ்வு பற்றிய வார்த்தைகளை எடுத்துரைக்குமாறு
சொல்வதைக் குறித்து வாசிக்கின்றோம். இந்த நிகழ்வு நமக்கு
இரண்டு உண்மைகளை எடுத்துக்கூறுகின்றது. ஒன்று, ஆண்டவர்
அளிக்கும் பாதுகாப்பு. இரண்டு, ஆண்டவரின் வாழ்வு பற்றிய
நற்செய்தியைத் தொடர்ந்து அறிவிக்கவேண்டும் என்ற அழைப்பு.
திருத்தூதர்களான பேதுருவும் யோவானும் ஆண்டவருடைய பணியைச்
செய்துவந்தார்கள். அதனாலேயே அவர்கள் தலைமைச் சங்கத்தாரால்,
சிறையில் காவலில் வைக்கப்படுகின்றார்கள். இப்படிப்பட்ட சூழலில்
ஆண்டவரின் தூதர் அவர்களைச் சிறையிலிருந்து விடுவிக்கின்றார்.
இவ்வாறு ஆண்டவர் தம் அடியார்களை ஆபத்துகளிலிருந்து
பாதுகாக்கின்றார். அடுத்ததாக, சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட
திருத்தூதர்கள் வாழ்வு பற்றிய வார்த்தைகளை எடுத்துரைக்குமாறு
பணிக்கப்படுகின்றார்கள். ஆண்டவரின் நற்செய்தி தொடர்ந்து
அறிவிக்கப்படவேண்டும். அதுதான் அவருடைய விருப்பமாக
இருக்கின்றது. அதனால்தான் ஆண்டவர் தன் தூதர் வழியாகச் சிறையில்
இருந்தவர்களை விடுவித்து, கோயிலில் நற்செய்தி அறிவிக்குமாறு
செய்கின்றார்.
திருத்தூதர்கள் வாழ்வு பற்றிய நற்செய்தி மக்களுக்கு
அறிவித்தார்கள் எனில், நாமும் அந்த நற்செய்தியை மக்களுக்கு
அறிவிப்பது நமது கடமையாகும். இதை உணர்ந்து, ஆண்டவரின்
பாதுகாப்பு நமக்கு எப்போதும் உண்டு என்ற நம்பிக்கையில் அவருடைய
நற்செய்தியைத் தொடர்ந்து அறிவிப்போம்.
சிந்தனை
"நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி தம் தூதர்க்கு
அவர் கட்டளையிட்டுள்ளார்" (திபா 91: 11). என்பார் திருப்பாடல்
ஆசிரியர். ஆகையால், நாம் கடவுளின் பராமரிப்பு நமக்கு எப்போதும்
உண்டு என்ற நம்பிக்கையில், அவருடைய நற்செய்தியைத் தொடர்ந்து
அறிவிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
யோவான் 3: 16-21
உலகின்மேல் பேரன்புகூர்ந்த கடவுள்
நிகழ்வு
அது ஒரு கிராமப்புறப் பங்கு. அந்தப் பங்கில் இருந்த
பங்குத்தந்தை, தன்னுடைய பங்கு மக்களிடம், "அடுத்த வாரம்
மாலையில், கடவுளின் அன்பைப் பற்றிப் போதிக்க இருக்கின்றேன்.
அதனால் எல்லாரும் கட்டாயம் கோயிலுக்கு வாருங்கள்" என்றார்.
பங்குத் தந்தையின் அழைப்பை ஏற்று, எல்லாரும் கோயிலுக்கு
வந்தார்கள்.
கோயிலில் கூட்டம் நிரம்பி வழிந்ததும், பங்குத்தந்தை, கோயிலில்
இருந்த விளக்குகளை எல்லாம் அணைத்தார். எல்லாரும், "இவர் என்ன
செய்யப்போகிறார்?" என்று தங்களுக்குள்ளே பேசத் தொடங்கினார்கள்.
அப்பொழுது பங்குத்தந்தை தன்னுடைய கையில் ஒரு மெழுகுதிரியை
ஏந்தி, திருச்சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த முள்முடி தரித்த
இயேசுவின் தலைக்கு அருகில் கொண்டுசென்றார். பின்னர் அப்படியே
மெழுகுதிரியைக் கீழே இறக்கி, ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட
இயேசுவின் விலாவிற்கு அருகில் கொண்டு சென்றார். அதன்பின்
ஆணிகளால் அடிக்கப்பட்டிருந்த இயேசுவின் கைகளுக்கும்
கால்களுக்கும் அருகில் கொண்டு சென்றார்.
இவற்றையெல்லாம் காட்டிய பின்பு, மெழுகுதிரியை அணைத்துவிட்டு,
கோயிலில் இருந்த விளக்குகளை எல்லாம் எரியவிட்டார்
பங்குத்தந்தை. கோயிலில் இருந்த விளக்குகளெல்லாம்
எரியத்தொடங்கியதும், வியப்பு மேலிட தன்னையே
பார்த்துக்கொண்டிருந்த மக்களைப் பார்த்து, பங்குத்தந்தை யோவான்
3:16 ஐ மேற்கோள் காட்டிப் பேசத் தொடங்கினார்: "தன்னுடைய ஒரே
மகனையே சிலுவையில் கையளிக்கக் கடவுள் முன்வந்தார் எனில், அவர்
இந்த உலகின்மீது எந்தளவுக்கு அன்புகூர்ந்திருப்பார்...?"
பங்குத்தந்தை சொன்ன இவ்வார்த்தையின் பொருளை உணர்ந்தவர்களாய்,
மக்கள் கடவுளின் அன்பை எண்ணி வியந்துகொண்டே வீட்டிற்குச்
சென்றார்கள்.
ஆம், கடவுள் இவ்வுலகின்மீது கொண்ட அன்பு மிகப்பெரியது. அதை
விளக்கிச் சொல்வதற்கு வார்த்தைகள் கிடையாது. அதைத்தான் இந்த
நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகம்
கடவுளின் பேரன்பையும் அவர்மகன் இயேசுவின்மீது நம்பிக்கை
கொள்வதனால் கிடைக்கும் நிலைவாழ்வையும் குறித்து எடுத்துச்
சொல்கின்றது. அவற்றைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப்
பார்ப்போம்.
உலகின்மீது பேரன்பு கொண்ட கடவுள்
இன்றைய நற்செய்தியில், யூதத் தலைவர்களுள் ஒருவராகிய
நிக்கதேமுடனான இயேசுவின் உரையாடல் தொடர்கின்றது. தூய ஆவியாரால்
வரும் மறுவாழ்வைக் குறித்து அவரோடு பேசிய இயேசு, அடுத்ததாகக்
கடவுளின் பேரன்பைக் குறித்துப் பேசுகின்றார்.
ஒருவருக்கு இன்னொருவர்மீது அன்பிருந்தால், அவருக்காக எதையாவது
செய்யவேண்டும் அல்லது கொடுக்கவேண்டும். கொடுக்காமல் அல்லது
எதுவும் செய்யாமல், ஒருவர்மீது இருக்கும் அன்பை வெளிப்படுத்த
முடியாது; சாத்தியமும் கிடையாது. கடவுள் இந்த உலகின்மீது
சாதாரண அன்பு கொள்ளவில்லை; பேரன்பு கொண்டிருந்தார். அந்தப்
பேரன்பினை வெளிப்படுத்தும் விதமாகத் தன்னுடைய ஒரே மகனையே
சிலுவையில் கையளித்தார். இவ்வாறு கடவுள் இவ்வுலகின்மீது கொண்ட
அன்பை வெளிப்படுத்தினார்.
இச்செய்தியை நிக்கதேமிடம் எடுத்துச் சொல்லும் இயேசு, இதையொட்டி
இன்னொரு முக்கியமான செய்தியையும் சொல்கின்றார். அது குறித்துத்
தொடர்ந்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
மகன்மீது நம்பிக்கை கொள்வோருக்கு நிலைவாழ்வு அளிக்கும் கடவுள்
ஆண்டவராகிய கடவுள் இவ்வுலகின்மீது பேரன்பு கொண்டார் என்றால்,
மக்கள் தன் மகன்மீது நம்பிக்கை கொள்ளவேண்டும் என்றும் அந்த
நம்பிக்கையின்மூலம் அவர்கள் நிலைவாழ்வு பெற வேண்டும் என்றும்
அவர் விரும்பினார்; ஆனால், மக்களோ அவர்மீது நம்பிக்கை
கொள்ளவில்லை. காரணம், கடவுளின் திருமகனாகிய இயேசு இவ்வுலகிற்கு
ஒளியாக வந்தார் (யோவா 1: 10). இருளை விரும்பியவர் அல்லது
இருளில் இருந்தவர்கள் ஒளியாம் இயேசுவிடம் வரவும் அவர்மீது
நம்பிக்கை கொள்ளவுமில்லை.
ஒளியாம் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு என்ன
நேரும் என்பதையும் இயேசு நிக்கதேமிடம் தெளிவுபடுத்துகின்றார்.
ஒளியாம் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளாதவர்கள் தண்டனைத்
தீர்ப்புக்கு உள்ளானார்கள் (யோவா 16:9). ஏனென்றால், இவ்வுலககம்
தீர்ப்புக்குள்ளாகி இருக்கின்றது. மட்டுமல்லாமல், அவர்கள்
கடவுள் அளிக்கும் நிலைவாழ்வினையும் இழப்பார்கள். காரணம்,
கடவுளின் திருமகன்மீது நம்பிக்கை கொள்வோருக்கே நிலைவாழ்வு
உண்டு என்பதை இயேசு மிக அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றார்.
அப்படியானால், நம்மீது பேரன்புகொண்ட கடவுள், நமக்கு
நிலைவாழ்வினை அளிக்க விரும்புகின்றார் எனில், அதற்கு நாம்
அவருடைய திருமகனாம் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளவேண்டும்.
மெசியாவாம் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளத் தயாரா?
சிந்திப்போம்.
சிந்தனை
"இயேசுவின்மீது நம்பிக்கை கொள்வோர் அனைவரையுமே கடவுள்
ஏற்புடையவராக்குகிறார்" (உரோ 3:22) என்பார் புனித பவுல்.
ஆகையால், நாம் கடவுளின் திருமகனாம் இயேசுவின்மீது நம்பிக்கை
கொண்டு, அந்த நம்பிக்கைக்கு ஏற்ப வாழ்வோம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|