|
|
21
ஏப்ரல் 2020 |
|
பாஸ்கா 2ஆம் வாரம் - செவ்வாய்
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 32-37
அந்நாள்களில்
நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய்
இருந்தனர். அவர்களுள் எவரும் தமது உடைமைகளைத் தம்முடையதாகக் கருதவில்லை;
எல்லாம் அவர்களுக்குப் பொதுவாய் இருந்தது. திருத்தூதர் அனைவரும்
ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார் என மிகுந்த வல்லமையோடு சான்று
பகர்ந்து வந்தனர். அவர்கள் அனைவரும் மக்களின் நல்லெண்ணத்தை
மிகுதியாகப் பெற்றிருந்தனர்.
தேவையில் உழல்வோர் எவரும் அவர்களுள் காணப்படவில்லை. நிலபுலங்களை
அல்லது வீடுகளை உடையோர் அவற்றை விற்று அந்தத் தொகையைக் கொண்டுவந்து
திருத்தூதருடைய காலடியில் வைப்பர்; அது அவரவர் தேவைக்குத் தக்கவாறு
பகிர்ந்து கொடுக்கப்படும்.
சைப்பிரசு தீவைச் சேர்ந்த யோசேப்பு எனும் லேவியர் ஒருவர் இருந்தார்.
இவருக்குத் திருத்தூதர்கள், "ஊக்குவிக்கும் பண்பு கொண்டவர் என்று
பொருள்படும் பர்னபா என்னும் பெயரைக் கொடுத்திருந்தார்கள். அவர்
தமது நிலத்தை விற்று அந்தப் பணத்தைக் கொண்டுவந்து திருத்தூதர்களது
காலடியில் வைத்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 93: 1ab. 1c-2. 5 (பல்லவி: 1a)
Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவர் ஆட்சிசெய்கின்றார்; மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்.
அல்லது: அல்லேலூயா.
1ab
ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்;
ஆண்டவர் வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளார். - பல்லவி
1c
பூவுலகை அவர் நிலைப்படுத்தினார்; அது அசைவுறாது.
2
உமது அரியணை தொடக்கத்திலிருந்தே நிலைபெற்றுள்ளது; நீர்
தொன்றுதொட்டே நிலைத்துள்ளீர். - பல்லவி
5
உம்முடைய ஒழுங்குமுறைகள் மிகவும் உறுதியானவை; ஆண்டவரே! என்றென்றும்
தூய்மையே உமது இல்லத்தை அழகு செய்யும். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
நற்செய்திக்கு முன் வசனம் (லூக் 8: 15)
சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன
உறுதியுடன் பலன் தருபவர் பேறுபெற்றோர்.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
பதிலுரைப் பாடல்
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி (யோவா 3: 15)
அல்லேலூயா, அல்லேலூயா! மானிடமகனில் நம்பிக்கை கொள்ளும் அனைவரும்
நிலைவாழ்வு பெறும்பொருட்டு அவர் உயர்த்தப்பட வேண்டும். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர, வேறு
எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 7-15
அக்காலத்தில்
இயேசு நிக்கதேமிடம் கூறியது: "நீங்கள் மறுபடியும் பிறக்க
வேண்டும் என்று நான் உமக்குக் கூறியது பற்றி நீர் வியப்படைய
வேண்டாம். காற்று விரும்பிய திசையில் வீசுகிறது. அதன் ஓசை உமக்குக்
கேட்கிறது. ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்றும் எங்குச்
செல்கிறது என்றும் உமக்குத் தெரியாது. தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும்
இது பொருந்தும்" என்றார்.
நிக்கதேம் அவரைப் பார்த்து, "இது எப்படி நிகழ முடியும்?" என்று
கேட்டார். அதற்கு இயேசு கூறியது: "நீர் இஸ்ரயேல் மக்களிடையே போதகராய்
இருந்தும் உமக்கு இது தெரியவில்லையே! எங்களுக்குத் தெரிந்ததைப்பற்றியே
பேசுகிறோம்; நாங்கள் கண்டதைப்பற்றியே சான்று பகர்கிறோம். எனினும்
எங்கள் சான்றை நீங்கள் ஏற்றுக்கொள்வதில்லை என உறுதியாக உமக்குச்
சொல்கிறேன். மண்ணுலகு சார்ந்தவை பற்றி நான் உங்களுக்குச் சொன்னதை
நீங்கள் நம்பவில்லை என்றால் விண்ணுலகு சார்ந்தவை பற்றிச்
சொல்லும்போது எப்படி நம்பப்போகிறீர்கள்?
விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர வேறு
எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை. பாலை நிலத்தில்
மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டதுபோல மானிடமகனும் உயர்த்தப்பட
வேண்டும்."
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
திருத்தூதர் பணிகள் 4: 32-37
"அவர்கள் அனைவரும் மக்களின் நல்லெண்ணத்தை மிகுதியாகப்
பெற்றிருந்தனர்"
நிகழ்வு
சில ஆண்டுகளுக்கு முன்பாக ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோவில் ஒருசில
மறைப்பணியாளர்கள் நற்செய்தி அறிவிக்கச் சென்றார்கள். அவர்கள்
கடவுள், பாவம், விண்ணகம்... என்று பலவற்றைக் குறித்துப்
போதித்தார்கள்; மக்களும் அதை ஆர்வமாய்க் கேட்டார்கள்; ஆனாலும்
யாரும் கிறிஸ்தவர்களாக மாறவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்தோடு
திரும்பி வந்துவிட்டார்கள்.
இதற்குப் பின்பும் ஒருசில மறைப்பணியாளர்கள் அங்கு சென்று நற்செய்தியை
அறிவித்தார்கள். முன்னவர்களை விட இவர்கள் மிகுந்த வல்லமையோடு
போதித்தர்கள். அப்படியிருந்தும் யாரும் கிறிஸ்துவ மதத்திற்கு
வரவில்லை. இதனால் வெறுத்துப்போய் அந்த மறைப்பணியாளர்கள் தங்களுடைய
சொந்த நாட்டிற்குத் திரும்பிச் சென்றார்கள்.
இறுதியாக அந்த இடத்திற்கு இரண்டு அருள்பணியாளர்கள் சென்றார்கள்.
அவர்கள் ஆண்டவருடைய நற்செய்தியை எடுத்துரைத்தார்கள். அதே நேரத்தில்
அவர்கள் தங்களுக்கு ஓய்வுநேரம் கிடைத்தபோதெல்லாம் அப்பகுதியில்
இருந்த நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்தார்கள்; சிறியவர்,
பெரியவர், இளைஞர் என எல்லாரிடமும் அன்பாகப் பழகினார்கள். எல்லாவற்றுக்கும்
மேலாக அவர்களுடைய வாழ்க்கையே எடுத்துக்காட்டாக இருந்தது. இதைப்
பார்த்துவிட்டு, அந்தப் பகுதியில் இருந்த அனைவரும் கிறிஸ்தவ
மதத்திற்கு மாறினார்கள்.
ஆம், அந்த இரண்டு அருள்பணியாளர்களின் போதனை மட்டுமல்ல, அவர்களுடைய
எடுத்துக்காட்டான வாழ்வு பலரையும் கிறிஸ்தவர்களாக மாற்றியது.
இன்றைய முதல் வாசகம் தொடக்கக்காலக் கிறிஸ்தவர்களின் எடுத்துக்காட்டான
வாழ்வைப் பற்றி எடுத்துக்கூறுகின்றது. அவர்களுடைய வாழ்க்கை, மக்கள்
நடுவில் எத்தகைய அதிர்வலையை ஏற்படுத்தியது என்பதைக் குறித்து
இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
தம்முடைய உடைமைகளைத் தம்முடையதாகக் கருதாமை
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம்,
தொடக்கக்காலக் கிறிஸ்தவர்கள் யாவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய்
இருந்தனர் என்று எடுத்துக்கூறுகின்றது. கிறிஸ்தவர்களின் யூதர்கள்
இருந்திருந்திருக்கலாம், பிற இனத்தவர் இருந்திருக்கலாம். ஆனாலும்
அவர்கள் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தார்கள் என்பது, அவர்கள்
கிறிஸ்துவில், அவருடைய விழுமியத்தில் ஒன்றித்திருந்தார்கள் என்பதை
மிகத் தெளிவாகக் காட்டுகின்றது.
தொடக்கக்காலக் கிறிஸ்தவர்கள் அல்லது இறைநம்பிக்கையாளர்கள் ஒரு
உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தார்கள் என்பதன் வெளிப்பாடாக, அவர்கள்
தங்களுடைய உடைமைகளைத் தங்களுடையதாகக் கருதாமல், எல்லாவற்றையும்
பொதுவாய் வைத்தார்கள். இதனால் தேவையில் இருப்போர் என்று யாரும்
இல்லாத நிலை ஏற்பட்டது. இன்றைய முதல் வாசகம் தன்னுடைய நிலத்தை
விற்று, அதிலிருந்து கிடைத்த பணத்தைத் திருத்தூதர்களின் காலடிகளின்
வைத்த பர்னபா என்பவரைக் குறித்துப் பேசுகின்றது. இவர் ஓர் எடுத்துக்காட்டுதான்.
இப்படிப் பலர் தங்களுடைய உடைமையைத் தங்களுடையதாகக் கருதாமல்,
மற்றவருக்குப் பயன்படும் வகையில் பொதுவில் வைத்ததால், எல்லாருடைய
தேவையும் பூர்த்தி செய்யப்பட்டது. இதனால் தேவையில் உழல்வோர் என்று
யாருமில்லை. மக்களுடைய நன்மதிப்பையும் அவர்கள் பெற்றார்கள்.
தொடக்கக்காலக் கிறிஸ்தவர்களின் இத்தகைய வாழ்வு நம்முடைய
வாழ்வையும் தன்னாய்வுக்கு உட்படுத்திப் பார்க்க, நமக்கு அழைப்பு
விடுக்கின்றது. அவர்கள் தங்களுடயதைத் தங்களுடையதாகக் கருதாமல்,
பிறருக்காகப் பயன்படுத்தியபோல், கடவுள் நமக்குக்
கொடுத்திருக்கின்ற ஆசிகளை பிறர் நலனுக்காகப் பயன் படுத்தவேண்டும்;
நாம் ஒருபோதும் தன்னலத்தோடு இருக்கக்கூடாது.
இயேசுவின் உயிர்ப்பைக் குறித்து வல்லமையோடு திருத்தூதர்கள்
சான்று பகர்தல்
இன்றைய முதல் வாசகம், கிறிஸ்தவ வாழ்வின் இன்னொரு பரிமாணத்தையும்
நமக்கு எடுத்துக்கூறுகின்றது. அது என்னவெனில், இறைவனுடைய
வார்த்தையை எடுத்துரைப்பதாகும். திருத்தூதர் அனைவரும் ஆண்டவர்
இயேசு உயிர்த்தெழுந்தார் என மிகுந்த வல்லமையோடு சான்று பகர்ந்து
வந்தனர் என்று வாசிக்கின்றோம். கிறிஸ்தவத்திற்கு நற்செயல்கள்
அல்லது இரக்கச் செயல்கள் புரிவது ஒரு கண் என்றால்,
கிறிஸ்துவின் வார்த்தையை எடுத்துரைப்பது இன்னொரு கண்ணாக இருக்கின்றது.
திருத்தூதர்கள் ஆண்டவரைப் பற்றிப் பறைசாற்றுவது ஒரு பக்கம் நடந்து
கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நம்பிக்கையாளர்கள் நற்செயல்
புரிகின்ற வாழ்க்கை வாழ்ந்தனால், அவர்கள் மக்களுடைய நன்மதிப்பைப்
பெற்றார்கள். இதனால் பலர் கிறிஸ்தவர்களானார்கள்.
கிறிஸ்தவர்களாகிய நாமும் இறைவார்த்தையை எடுத்துரைப்பதையும் நற்செயல்கள்
புரிவதையும் நம்முடைய இரண்டு கண்களான உணர்ந்து செயல்படவேண்டும்.
நாம் அவ்வாறு செயல்படத் தயாரா? சிந்திப்போம்.
சிந்தனை
"நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து, நீங்கள்
என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வர் (யோவா 13: 35)
என்பார் இயேசு. ஆம், நாம் நம்முடைய அன்பான, எடுத்துக்காட்டான
வாழ்வால், நாம் இயேசுவின் சீடர்கள் என்பதை உலகிற்கு எடுத்துரைத்து,
மற்றவர்களையும் இயேசுவின் பக்கம் கொண்டுவருவோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
யோவான் 3: 7-15
விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இயேசு
நிகழ்வு
ஓர் ஊரில் ஒரு பாட்டியும் தாத்தாவும் வாழ்ந்து வந்தார்கள. அவர்களோடு
அவர்களுடைய பேத்தியும் வாழ்ந்து வந்தாள்.
ஒரு முழுநிலவு இரவில் (பெளர்ணமி இரவில்) தாத்தாவும் அவருடைய
பேத்தியும் வீட்டுக்கு வெளியே நடந்துகொண்டே
பேசிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது பேத்தி வானத்தில் பூத்துக்
கிடந்த விண்மீன்களைப் பார்த்து மிகவும் பரவசமடைந்தாள். உடனே
தாத்தா பேத்தியிடம், ஒவ்வொரு விண்மீனாகச் சுட்டிக்காட்டி, இந்த
விண்மீனுக்குப் பெயர் இன்னது; அந்த விண்மீனுக்கு பெயர் அது என்று
சொல்லிக்கொண்டே வந்தார்.
எல்லாவற்றையும் மிகக் கவனமாகக் கொண்டுக்கொண்டே வந்த பேத்தி
தாத்தாவைப் பார்த்து, "தாத்தா! விண்ணகத்தின் அடிப்பகுதியே
இவ்வளவு அழகாக இருக்கின்ற இருக்கின்றபொழுது, விண்ணகத்தின்
மேற்பகுதி எவ்வளவு அழகாக இருக்கும்?" என்று வியப்போடு
சொன்னாள். தாத்தா பேத்தி மறுமொழி கூற முடியாமல், அவளை
ஆச்சரியத்தோடு பார்த்தார்.
விண்ணகம் மிக அழகானது. அதை நாம் வார்த்தைகளால் சொல்வதை
விடவும், அங்கிருந்து மண்ணகத்திற்கு வந்த இயேசு சொன்னால்
இன்னும் சிறப்பாக இருக்கும். நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர்
இயேசு, "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத்
தவிர, வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் செல்வதில்லை" என்று
கூறுகின்றார். இயேசு சொல்லக்கூடிய இவ்வார்த்தைளின் பொருள் என்ன
என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
மறுபடியும் பிறப்பது குறித்த ஒருசில தெளிவுகள்
இன்றைய நற்செய்தி வாசகம், நேற்றைய நற்செய்தி வாசகத்தின்
தொடர்ச்சியாக வருகின்றது. நேற்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு
தன்னிடம் வந்த நிக்கதேமிடம் தூய ஆவியாரால் வரும் மறுபிறப்பைக்
குறித்துப் பேசுவார். அவரோ அதைப் புரிந்துகொள்ளாமலேயே
இருக்கின்றார். அப்பொழுதுதான் இயேசு அவரைப் பார்த்து, "நீர்
இஸ்ரயேல் மக்களிடையே போதகராய் இருந்தும் உமக்கு இது
தெரியவில்லையே!" என்று சொல்லி வியப்படைகின்றார்.
இயேசு, நிக்கதேமைக் குறித்து இவ்வாறு வியப்படைவதற்குக் காரணம்
இருக்கின்றது. ஏனென்றால், தூய ஆவியாரால் வரும் மறுபிறப்பு
பற்றி பழைய ஏற்பாட்டில் நிறையக் குறிப்புகள் இருக்கின்றன (1
சாமு 10:6; எசா 32:15; எரே 31: 33; எசே 36: 25-27, 37, யோவே 2:
28-29). அப்படியிருந்தும் இயேசு தூய ஆவியாரால் வரும் பிறப்பைக்
குறித்துப் பேசுவதைக் கண்டு நிக்கதேம் வியப்படைவதை முன்னிட்டு
இயேசு ஆச்சரியப்படுகின்றார். இயேசு நிக்கதேமுடனான உரையாடலில்
மீண்டும் மீண்டுமாக வலியுறுத்திக்கூறிய உண்மை ஒன்றே ஒன்றுதான்.
அதுதான், தூய ஆவியார் வழங்கும் மறுவாழ்வு அல்லது நிலைவாழ்வு,
யூதர்களுக்கு மட்டும் இன்றி, எல்லாருக்கும் உண்டு (யோவா 3:
16), அத்தகைய மறுவாழ்வினை விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த
மானிட மகன்மீது நம்பிக்கை கொள்வதால் மட்டுமே பெறமுடியும்
என்பதாகும். இது குறித்து நாம் இன்னும் தொடர்ந்து சிந்தித்துப்
பார்ப்போம்.
விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இயேசு
நிக்கதேம், தூய ஆவியாரால் மறுபிறப்பு எப்படி நிகழும் என்று
கேட்கின்றபொழுது, இயேசு தன்னை விண்ணகத்திலிருந்து இறங்கி
வந்தவர் என்று சுட்டிக்காட்டி விட்டு, அந்த விண்ணகத்திற்கு
நாம் செல்வதற்கான அல்லது மறுபிறப்பு அடைவதற்கான வழியினைச்
சுட்டிக்காட்டுகின்றார்.
ஆம், இயேசு மண்ணகத்திலிருந்து வரவில்லை. அவர்
விண்ணகத்திலிருந்து வந்தார். இதை அவர் மீண்டும் மீண்டுமாக
வலியுறுத்திக் கூறுவார் (யோவா 6:51). தான் விண்ணகத்திலிருந்து
வந்ததாகச் சொல்லும் இயேசு, நாம் விண்ணகம் செல்வதற்கான ஒரு
வழியினையும் சொல்கின்றார். அதற்காக அவர் மேற்கோள் காட்டும்
நிகழ்வுதான், பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது.
எண்ணிக்கை நூலில் வரும் இந்த நிகழ்வில் (எண் 21: 6-9),
இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருக்கு எதிராகவும் அவருடைய அடியார்
மோசேக்குக் எதிராகவும் கிளர்ந்தெழுந்ததால், கடவுள் அவர்களிடம்
கொள்ளிவாய்ப் பாம்புகளை அனுப்பித் தண்டிப்பார். பின்னர் மோசே
கடவுளிடம் பரிந்துபேசியதால், கடவுள் அவரிடம் வெண்கலப் பாம்பைச்
செய்யச் சொல்லி, அதை மக்கள் நடுவில் வை என்றும் அதைப்
பார்ப்பவர் யாவரும் பிழைத்துக் கொள்வர் என்றும் கூறுவார்.
மோசேயும் அவ்வாறு செய்து வைக்க, அதைப் பார்த்த மக்கள்
பிழைத்துக் கொள்வார்கள்.
இந்த நிகழ்வைச் சுட்டிக்காட்டும் இயேசு, சிலுவையில்
உயர்த்தப்பட இருக்கும் தன்னிடம் நம்பிக்கை கொள்பவரும்
மறுவாழ்வை, நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வர் என்று கூறுகின்றார்.
ஆம், நமக்கு நிலைவாழ்வினை இயேசுவால் மட்டுமே தரமுடியும்.
அப்படிப் பட்டவரிடம் நாம் நம்பிக்கை வைத்து வாழ்கின்றோமா?
சிந்திப்போம்.
சிந்தனை
"இயேசுவிடம் நம்பிக்கை கொள்வோருக்கு நிலைவாழ்வு உண்டு என்
நீங்கள அறிந்துகொள்ளுமாறு உங்களுக்கு இவற்றை எழுதுகிறேன்
(1யோவா 5: 13) என்பார் புனித யோவான். ஆகையால், நாம்
விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இயேசுவின்மீது நம்பிக்கை
கொண்டு, அவர் தருகின்ற நிலைவாழ்வைக் கொடையாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|