Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   20  ஏப்ரல்  2020  

பாஸ்கா காலம் 2 ம் வாரம் - திங்கட்கிழமை

=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்களாய்க் கடவுளின் வார்த்தைகளைத் துணிவுடன் எடுத்துக் கூறினர்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 23-31

அந்நாள்களில்

விடுதலை பெற்ற சீடர்கள், தங்களைச் சேர்ந்தவர்களிடம் வந்து, தலைமைக் குருக்களும் மூப்பர்களும் தங்களுக்குக் கூறிய யாவற்றையும் அறிவித்தார்கள். இவற்றைக் கேட்ட யாவரும் ஒரே மனத்துடன் தங்கள் குரலைக் கடவுள்பால் எழுப்பி, பின்வருமாறு மன்றாடினர்:

"ஆண்டவரே, "விண்ணுலகையும் மண்ணுலகையும் கடலையும் அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்தவர் நீரே'. எங்கள் தந்தையும் உம் ஊழியருமாகிய தாவீது வாயிலாகத் தூய ஆவி மூலம் "வேற்றினத்தார் சீறி எழுவதேன்? மக்களினங்கள் வீணாகச் சூழ்ச்சி செய்வதேன்? பூவுலகின் அரசர்களும் தலைவர்களும் ஆண்டவருக்கும் அவர்தம் மெசியாவுக்கும் எதிராக அணிவகுத்து நின்றனர்" என்று உரைத்தீர். அதன்படியே இந்நகரில் உம்மால் அருள்பொழிவு பெற்ற உம் தூய ஊழியராகிய இயேசுவுக்கு எதிராக ஏரோதும் பொந்தியு பிலாத்தும் பிற இனத்தவரோடும் இஸ்ரயேல் மக்களோடும் ஒன்றுதிரண்டனர். உமது கைவன்மையும் உமது திட்டமும் முன்குறித்த அனைத்தையும் அவர்கள் செய்து முடித்தனர்.

இப்போது கூட ஆண்டவரே, அவர்கள் அச்சுறுத்துவதைப் பாரும். உம் அடியார் முழுத் துணிவுடன் உமது வார்த்தைகளை எடுத்துக் கூற அருள் தாரும். உமது தூய ஊழியர் இயேசுவின் பெயரால் உமது கையை நீட்டி நோயுற்றோருக்கு நலமளியும்; அடையாளங்களும் அருஞ்செயல்களும் நடைபெறச் செய்யும்."

இவ்வாறு மன்றாடியவுடன் அவர்கள் கூடியிருந்த இடம் அதிர்ந்தது. அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்களாய்க் கடவுளின் வார்த்தைகளைத் துணிவுடன் எடுத்துக் கூறினர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 2: 1-3. 4-6. 7-9 (பல்லவி: 12c) Mp3
=================================================================================

பல்லவி: ஆண்டவரே, உம்மிடம் அடைக்கலம் புகுவோர் அனைவரும் பேறுபெற்றோர். அல்லது: அல்லேலூயா.
1
வேற்றினத்தார் சீறி எழுவதேன்? மக்களினங்கள் வீணாகச் சூழ்ச்சி செய்வதேன்?
2
ஆண்டவர்க்கும் அவர்தம் அருள்பொழிவு பெற்றவர்க்கும் எதிராகப் பூவுலகின் அரசர்கள் அணிவகுத்து நிற்கின்றார்கள்; ஆள்வோர் ஒன்றுகூடிச் சதிசெய்கின்றார்கள்;
3
"அவர்கள் பூட்டிய தளைகளைத் தகர்ப்போம்; அவர்கள் வைத்த கண்ணிகளை நம்மிடமிருந்து அறுத்தெறிவோம்" என்கின்றார்கள். - பல்லவி

4
விண்ணுலகில் வீற்றிருப்பவர் எள்ளி நகைக்கின்றார்; என் தலைவர் அவர்களைப் பார்த்து ஏளனம் செய்கின்றார்.
5
அவர் சினமுற்று அவர்களை மிரட்டுகின்றார்; கடுஞ்சினத்தால் அவர்களைக் கலங்கடிக்கின்றார்;
6
"என் திருமலையாகிய சீயோனில் நானே என் அரசரைத் திருநிலைப்படுத்தினேன். - பல்லவி

7
ஆண்டவர் ஆணையிட்டு உரைத்ததை நான் அறிவிக்கின்றேன்: "நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்.
8
நீர் விரும்புவதை என்னிடம் கேளும்; பிற நாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன்; பூவுலகை அதன் கடையெல்லைவரை உமக்கு உடைமையாக்குவேன்.
9
இருப்புக் கோலால் நீர் அவர்களைத் தாக்குவீர்; குயவன் கலத்தைப்போல அவர்களை நொறுக்குவீர்'. - பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
நற்செய்திக்கு முன் வசனம் (லூக் 8: 15)

சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருபவர் பேறுபெற்றோர்.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================

பதிலுரைப் பாடல்

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி (கொலோ 3: 1)

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
மறுபடியும் பிறந்தாலன்றி, எவரும் இறையாட்சியைக் காண இயலாது.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 1-8


அக்காலத்தில்

பரிசேயர் ஒருவர் இருந்தார்; அவர் பெயர் நிக்கதேம். அவர் யூதத் தலைவர்களுள் ஒருவர். அவர் ஓர் இரவில் இயேசுவிடம் வந்து, "ரபி, நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பதை நாங்கள் அறிவோம். கடவுள் தம்மோடு இருந்தாலன்றி, நீர் செய்யும் இவ்வரும் அடையாளங்களை யாரும் செய்ய இயலாது" என்றார். இயேசு அவரைப் பார்த்து, "மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது என மிக உறுதி யாக உமக்குச் சொல்கிறேன்" என்றார்.

நிக்கதேம் அவரை நோக்கி, "வயதானபின் ஒருவர் எப்படிப் பிறக்க முடியும்? அவர் மீண்டும் தாயின் வயிற்றில் புகுந்து பிறக்க முடியுமா?" என்று கேட்டார். இயேசு அவரைப் பார்த்து, "ஒருவர் தண்ணீராலும் தூய ஆவியாலும் பிறந்தாலன்றி இறையாட்சிக்கு உட்பட இயலாது என்று மிக உறுதியாக உமக்குச் சொல்கிறேன். மனிதரால் பிறப்பவர் மனித இயல்பை உடையவர். தூய ஆவியால் பிறப்பவர் தூய ஆவியின் இயல்பை உடையவர். நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நான் உமக்குக் கூறியது பற்றி நீர் வியப்படைய வேண்டாம். காற்று விரும்பிய திசையில் வீசுகிறது. அதன் ஓசை உமக்குக் கேட்கிறது. ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்றும் எங்குச் செல்கிறது என்றும் உமக்குத் தெரியாது. தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும்" என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 யோவான் 3: 1-8

தூய ஆவியாரால் வரும் மறுவாழ்வு


நிகழ்வு

ஓர் ஊரில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவனுடைய வாழ்க்கை மிகவும் தாறுமாறாகப் போய்க்கொண்டிருந்தது. இதைப் பார்த்து, அவன்மீது தனிப்பட்ட அக்கறை கொண்ட பெரியவர் ஒருவர் அவனை அழைத்து, "தம்பி! நீ பக்கத்து ஊரில், அருங்கொடை இயக்கத்தினர் நடத்துகின்ற நற்செய்திக்கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு வா; அது உன்னுடைய வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும்" என்றார். முதலில் யோசித்த அந்த இளைஞன், பிறகு, "பெரியவர் எதைச் சொன்னாலும் நம்முடைய நல்லதுக்குத்தான் சொல்வார்" என்று, அவர் சொன்னது போன்றே, பக்கத்து ஊரில் அருங்கொடை இயக்கத்தார் நடத்தி வந்த, நற்செய்திக்கூட்டத்தில் கலந்துகொண்டான்.

முதலில் ஓரிரு நாள்கள் கூட்டத்தில் இருப்பது அவனுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. இருந்தாலும், சிரமத்தைப் பார்க்காமல் கூட்டத்தில் கலந்துகொண்டான். கூட்டம் முடியப் போவதற்கு முந்தைய நாள், தூய ஆவியாரின் அருள்பொழிவை வேண்டி எல்லாரும் வேண்டினார்கள். இவனும் அவர்களோடு சேர்ந்து உருக்கமாக வேண்டினான். அப்பொழுது ஏதோவோர் ஆற்றல் அவனுடைய உள்ளத்தைத் தொடுவது போன்று உணர்ந்தான். அப்பொழுது அவன் தன்னுடைய கடந்தகால வாழ்வை எண்ணிப் பார்த்து, அதற்காக மனம்வருந்தி, புதியதொரு வாழ்க்கை வாழவேண்டும் என்று சிந்தனையோடு வீட்டுக்குத் திரும்பி வந்தான்.

அவன் வீட்டுக்கு வந்த பிறகு, அவனுடைய நடவடிக்கையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கண்ட அவனுடைய நெருங்கிய நண்பர்கள், "உனக்குக் என்ன ஆயிற்று?" என்று அவனை விசாரிக்கையில் அவன், "தூய ஆவியாரால் புதியதொரு வாழ்வைப் பெற்றுக்கொண்டேன்" என்றான். அப்பொழுது அவனுடைய நண்பர்களில் ஒருவன் அவனிடம், "அப்படியானால், ஏதாவது காட்சி கண்டாயா?" என்றான். அவன், "இல்லை" என்றான். இன்னொரு நண்பன், "தூய ஆவியார் உன்னிடத்தில் பேசினாரா?" என்று கேட்டபொழுதும், அவன் "இல்லை" என்றே பதில் சொன்னான்.

இதனால் பொறுமையிழந்த அவனுடைய நண்பர்கள், "பின் எப்படித்தான் புதுவாழ்வினைப் பெற்றுக் கொண்டதை உணர்ந்தாய்?" என்று கேட்டார்கள். அதற்கு அந்த இளைஞன், "குளத்தில் மீன்பிடிக்கச் சொல்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் குளத்தில் போட்ட தூண்டிலை, மீனைப் பார்த்தோ அல்லது அதன் குரலைக் கேட்டோ தூண்டிலை வெளியே எடுப்பதில்லை. மாறாக, மீனானது இரையைப் பிடித்து இழுக்கின்றது என்ற உணர்வு உங்களுக்குத் தோன்றும். அப்பொழுது நீங்கள் குளத்திற்குள் போட்ட தூண்டிலை வெளியே எடுப்பீர்கள். அதுபோன்றுதான் எனக்கும். தூய ஆவியார் எனக்குக் காட்சி கொடுக்கவோ, பேசவோ இல்லை. மாறாக, அவர் என்னுடைய உள்ளத்தைத் தொட்டார். அதனால்தான் எனக்குப் புதியதொரு வாழ்வு கிடைத்துவிட்டது என்று சொல்கின்றேன்" என்றான்.

இந்த நிகழ்வில் வருகின்ற இளைஞன் தூய ஆவியாரால் புது வாழ்வினைப் பெற்றுக்கொண்டது மிகவும் மகிழ்ச்சியான ஒரு செய்தியாக இருக்கின்றது. இன்றைய நற்செய்தி வாசகம் தூய ஆவியாரால் கிடைக்கும் புது வாழ்வு அல்லது மறுவாழ்வினைக் குறித்துப் பேசுகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

யார் இந்த நிக்கதேம்?

நற்செய்தியில், ஓர் இரவு வேளையில் இயேசுவைச் சந்திக்க வருகின்றார் நிக்கதேம். இந்த நிக்கதேம் சாதாரண மனிதர் அல்லர்; மாறாக, பரிசேயர். அதுவும் யூதத் தலைவர்களுள் ஒருவர். பரிசேயர் இயேசுவை மெசியா என்று ஏற்றுக்கொண்டதில்லை. இந்த நிக்கதேம் இயேசுவை மெசியா என ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், இயேசுவைக் கடவுளிடமிருந்து வந்த இரபி என்ற அளவிலாவது ஏற்றுக்கொள்கின்றார். அப்படிப்பட்டவர் பகல் வேளையில் இயேசுவிடம் வந்தால், யூதர் ஏதாவது நினைக்கக்கூடும் என்று இரவு வேளையில் வந்து, "கடவுள் தம்மோடு இருந்தாலன்றி, நீர் செய்யும் இவ்வரும் அடையாளங்களை யாரும் செய்ய இயலாது" என்று இயேசுவிடம் உரையாடலைத் தொடங்குகின்றார்..

தூய ஆவியாரால் வரும் மறுவாழ்வு

தம்மிடம் வந்த நிக்கதேம் உரையாடலைத் தொடங்கியதும், இயேசு, "மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காணமுடியாது" என்று சொல்கின்றார். இயேசு இவ்வாறு சொன்னதை நிக்கதேம், மீண்டுமாகத் தாயின் வயிற்றுக்குள் புகுந்து பிறப்பதா என்று நினைத்துக்கொண்டிருக்கையில், இயேசுவோ அவரிடம் தூய ஆவியாரால் பிறக்கவேண்டும் என்றும் அப்படிப் பிறப்பவர் மட்டுமே இறையாட்சியைக் காணமுடியும் என்று உறுதியாகச் சொல்கின்றார்.

திருமுழுக்கின்பொழுது தூய ஆவியார் நம்மீது பொழியப்படுகின்றார். அத்தகைய தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்ப நாம் வாழ்கின்றபொழுது, நாம் மறுபடியும் பிறப்பவர்கள் ஆவோம்; இறையாட்சியைக் காண்பவர்களாகவும் ஆவோம். நாம் தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழத் தயாரா? சிந்திப்போம்.

சிந்தனை

"தூய ஆவியாரின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள்" (கலா 5: 16) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழ்ந்து, மறுபிறப்படைவோம்; அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 திருத்தூதர் பணிகள் 4: 23-41

"மன்றாடுங்கள் மகிழ்ச்சி பிறக்கும்"

நிகழ்வு

உலகின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மறைப்பணியைச் செய்யும் குருக்களை உருவாக்கித் தந்த குருமடம் அது. நன்றாக இயங்கிக்கொண்டிருந்த அந்தக் குருமடம் நிதிப் பற்றாக்குறையைச் சந்திக்கத் தொடங்கியது. இதனால் குருமட நிர்வாகம் குருமாணவர்களை அவர்களுடைய இல்லங்களுக்கு அனுப்பி விடலாம் என முடிவுசெய்தது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் குருமடத்தில் முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்த மூன்று குருக்கள் ஒன்றுகூடிப் பேசத் தொடங்கினார்கள். "குருமாணவர்கள் படிப்பிற்கு யாருமே உதவி செய்ய முன்வரவில்லையா?" என்றார் ஒருவர். "ஆமாம், யாருமே முன்வரவில்லை" என்றார் மற்றொருவர். இப்படி இருவர் பேசிக்கொண்டிருக்கையில் ஒருவர் மட்டும் அமைதியாக இருந்தார். அவருக்குக் கடவுள்மீது மிகுந்த நம்பிக்கை உண்டு. அவர் அவர்களிடத்தில், "குருமாணவர்கள் படிப்பிற்கு யாரும் உதவ முன்வரவில்லை என்று சொல்லி வருத்தப்பட்டுக்கொண்டிருந்தால், கடைசி வரைக்கும் யாரும் உதவ முன்வரமாட்டார்கள். மாறாக, முழந்தாள்படி இட்டு, இறைவனிடம் உருக்கமாக மன்றாடுவோம். நிச்சயம் இறைவன் இதற்கு ஒரு நல்ல வழியைக் காட்டுவார்" என்றார். அவர் சொன்னது, மற்ற இருவருக்கும் சரியெனப் படவே, மூவரும் முழந்தாள் படியிட்டு, இறைவனிடம் வேண்டத் தொடங்கினர்.

இது நடந்து ஓரிரு நாள்கள் கழித்து, குருமட அதிபரைச் சந்திக்க செல்வந்தர் ஒருவர் வந்தார். அவர் குருமட அதிபரிடம், "பல ஆண்டுகளாகக் குழந்தையே இல்லாத எங்களுக்கு ஒரு குழந்தை பிறந்திருக்கின்றது. அதற்கு நன்றிக்கடனாக இந்தப் பணத்தை வைத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டு, குருமாணவர்களின் படிப்பிற்காக ஒரு பெரும்தொகையைக் கொடுத்துவிட்டுப் போனார். உடனே குருமட அதிபர் பொறுப்பில் இருந்த மற்ற இரண்டு குருக்களையும் அழைத்து, நடந்ததைச் சொல்ல, அவர்கள் இறைவனுக்கு நன்றி செலுத்தத் தொடங்கினார்கள். இதன்பிறகு உலகமெங்கிலும் மறைப்பணி செய்வதற்கான குருக்களை உருவாக்கு பணி இன்னும் சிறப்பாக நடைப்பெற்றது.

ஆம், இறைவனிடம் நாம் நம்பிக்கையோடு மன்றாடகின்றபோது, நம்முடைய மன்றாட்டுக் கேட்கப்படும். அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுதான் இந்த நிகழ்வு. இன்றைய முதல் வாசகத்தில், இறைநம்பிக்கையாளர்கள் திருத்தூதர்களுக்காக மன்றாடுகின்றபொழுது, தூய ஆவியார் அவர்கள்மீது பொழியப்படுகின்றார். இதற்குப் பின்பு அவர்கள் துணிவோடு நற்செய்தி அறிவிப்பதைக் குறித்து வாசிக்கின்றோம். அது குறித்து இப்பொழுது நாம் சிந்திப்போம்.

இயேசுவைக் குறித்து பேசக்கூடாது என திருத்தூதர்கள் எச்சரிக்கப்படல்

பேதுருவும் யோவானும், தலைமைச் சங்கத்தாரால், இயேசுவைப் பற்றிப் பேசவோ, அறிவிக்கவோ கூடாது என்று எச்சரிக்கப்பட்டு, அதன்பின் விடுதலை செய்யப்படுகின்றார்கள். விடுதலையான பின் நம்பிக்கையாளர்களிடம் வருகின்ற இருவரும், நடந்தவற்றை எல்லாம் அவர்களிடம் எடுத்துச் சொல்கின்றார்கள். அதுதான் இன்றைய முதல் வாசகமாக இருக்கின்றது.

தலைமைச் சங்கத்தார் பேதுருவை யோவானையும் எச்சரித்த பின், அவர்கள் இயேசுவைப் பற்றிப் பேசாமலும் அறிவிக்காமலும் இருந்துவிடவில்லை. தொடர்ந்து அவர்கள் இயேசுவைப் பற்றிப் பேசியும் அறிவித்து வந்தார்கள். இன்றைய முதல் வாசகத்தில் இருவரும் தலைமைச் சங்கத்தார் தங்களிடம் சொன்னதை, ஏனைய நம்பிக்கையாளர்களிடம் சொன்னபொழுது, அவர்கள் ஒரு முக்கியமான செயலைச் செய்கின்றார். அது என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவைக் குறித்துத் துணிவோடு அறிவிக்கத் திருத்தூதர்கள் வல்லமை பெறல்

பேதுருவும் யோவானும், தலைமைச் சங்கத்தார் தங்களிடம் சொன்னதை, ஏனைய நம்பிக்கையாளர்களிடம் எடுத்துச் சொன்னபோது, அவர்கள் பேதுருவும் யோவானும் இறைவார்த்தையை வல்லமையோடும் துணிவோடும் எடுத்துரைப்பதற்கான ஆற்றலை வேண்டி மன்றாடுகின்றார்கள். நம்பிக்கையாளர்கள் இறைவனை நோக்கி மன்றாடுவது, திருப்பாடல் இரண்டையை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கின்றது. அவர்கள் இத்திருப்பாடலைச் சொல்லி மன்றாடியவுடன், தூய ஆவியார் அவர்கள்மீது பொழியப்படுகின்றார். இதைத் தொடர்ந்து, அவர்கள் இறைவார்த்தையைத் துணிவோடு எடுத்துரைக்கின்றார்கள்.

சில சமயங்களில் இறைவார்த்தையை நாம் எடுத்துரைக்கின்றபொழுது, பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகளும் பிரச்சனைகளும் வரலாம். இத்தகைய வேளைகளில், நாம் இறைவனுடைய அருளையும் இரக்கத்தையும் வேண்டி நின்றால் அவர் தன்னுடைய அருளையும் இரக்கத்தையும் தருவார். அவற்றின்மூலம் நாம் இறைவார்த்தையைத் துணிவோடு அறிவிக்கலாம் என்பது உறுதி. ஆகையால், நாம் இறைவார்த்தையைத் துணிவோடு அறிவிப்பதற்கான ஆற்றலை வேண்டி இறைவனிடம் மன்றாடுவோம்.

சிந்தனை

"இந்த ஏழைக் கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்" (திபா 34:6) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நாம் இறைவனிடம் நம்பிக்கையோடு மன்றாடுவோம். அதிலும் குறிப்பாக இறைவார்த்தையைத் துணிவோடு எடுத்துரைப்பதற்கான ஆற்றலை வேண்டி மன்றாடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!