Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   18  ஏப்ரல்  2020  

பாஸ்கா காலம் - சனிக்கிழமை

=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமல் இருக்க, எங்களால் முடியாது.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 13-21


அந்நாள்களில்

பேதுருவும் யோவானும் கல்வியறிவு அற்றவர்கள் என்பதைத் தலைமைச் சங்கத்தார் அறிந்திருந்ததால், அவர்களது துணிவைக் கண்டு வியப் படைந்தனர்; அவர்கள் இயேசுவோடு இருந்தவர்கள் என்பதையும் உணர்ந்துகொண்டனர். நலம் பெற்ற மனிதர் அவர்களோடு நிற்பதைக் கண்டதால் அவர்களால் ஒன்றும் மறுத்துப் பேச முடியவில்லை. எனவே அவர்கள் பேதுருவையும் யோவானையும் சங்கத்தை விட்டு வெளியேறும்படி ஆணையிட்டு, பின்பு தங்களுக்குள் இது குறித்துக் கலந்து பேசினார்கள். "நாம் இந்த மனிதர்களை என்ன செய்யலாம்? ஏனென்றால் குறிப்பிடத்தக்க ஓர் அரும் அடையாளத்தை இவர்கள் செய்துள்ளார்கள்; இது எருசலேமில் வாழும் அனைவருக்கும் தெரியும். இதை நாம் மறுக்க முடியாது. ஆகவே இச்செய்தி மேலும் மக்களிடையே பரவாமலிருக்குமாறு இந்த இயேசுவைக் குறித்து யாரிடமும் பேசக்கூடாதென நாம் இவர்களை அச்சுறுத்தி வைப்போம்" என்று கூறினார்கள்.

அதன் பின்பு தலைமைச் சங்கத்தார் அவர்களை அழைத்து, "இயேசுவைப் பற்றி எதுவும் பேசவோ, கற்பிக்கவோ கூடாது" என்று கண்டிப்பாகக் கட்டளையிட்டனர். அதற்குப் பேதுருவும் யோவானும் மறுமொழியாக, "உங்களுக்குச் செவிசாய்ப்பதா? கடவுளுக்குச் செவிசாய்ப்பதா? இதில் கடவுள் பார்வையில் எது முறையானது என நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்; என்ன ஆனாலும் நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது" என்றனர். அவர்களைத் தண்டிப்பதற்கு வேறு வழி கண்டுபிடிக்க முடியாததாலும், மக்களுக்கு அஞ்சியதாலும் தலைமைச் சங்கத்தார் அவர்களை மீண்டும் அச்சுறுத்தி விடுதலை செய்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 118: 1,14-15. 16,18. 19-21 (பல்லவி: 21a) Mp3
=================================================================================

பல்லவி: ஆண்டவரே, என் மன்றாட்டை நீர் கேட்டதால் நான் நன்றி செலுத்துகின்றேன்.
1
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
14
ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்; என் மீட்பும் அவரே.
15
நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக்குரல் ஒலிக்கின்றது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றி உள்ளது. - பல்லவி

16
ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.
18
கண்டித்தார், ஆண்டவர் என்னைக் கண்டித்தார்; ஆனால் சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை. - பல்லவி

19
நீதிமான்கள் செல்லும் வாயில்களை எனக்குத் திறந்துவிடுங்கள்; அவற்றினுள் நுழைந்து நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்.
20
ஆண்டவரது வாயில் இதுவே! இது வழியாய் நீதிமான்களே நுழைவர்.
21
என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால், உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன். - பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
நற்செய்திக்கு முன் வசனம் (லூக் 8: 15)

சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருபவர் பேறுபெற்றோர்.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி (திபா 118: 24)

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
உலகெங்கும் சென்று நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 9-15

வாரத்தின் முதல்நாள் காலையில் இயேசு உயிர்த்தெழுந்த பின்பு அவர் முதலில் மகதலா மரியாவுக்குத் தோன்றினார். அவரிடமிருந்துதான் அவர் ஏழு பேய்களை ஓட்டியிருந்தார். மரியா புறப்பட்டுச் சென்று இயேசுவோடு இருந்தவர்களிடம் இதை அறிவித்தார். அவர்கள் துயருற்று அழுதுகொண்டிருந்தார்கள். அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் மரியா அவரைக் கண்டார் என்றும் கேட்டபோது அவர்கள் நம்பவில்லை.

அதன்பிறகு அவர்களுள் இருவர் வயல்வெளிக்கு நடந்து சென்றபோது இயேசு அவர்களுக்கு வேற்று உருவில் தோன்றினார். அவர்கள் சென்று அதனை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்; அவர்கள் சொன்னதையும் சீடர்கள் நம்பவில்லை. இறுதியாகப் பதினொருவரும் பந்தியில் அமர்ந்திருந்தபொழுது அவர்களுக்கு இயேசு தோன்றினார். உயிருடன் எழுப்பப்பட்ட தம்மைக் கண்டவர்கள் சொன்னதையும் நம்பாமல் அவர்கள் கடின உள்ளத்தோடு இருந்தமையால் அவர் அவர்களுடைய நம்பிக்கையின்மையைக் கண்டித்தார். இயேசு அவர்களை நோக்கி, "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்" என்றுரைத்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 திருத்தூதர் பணிகள் 4: 13-21

"அவர்களது துணிவைக் கண்டு வியப்படைந்தனர்"


நிகழ்வு

முதல் உலகப்போர் மிகத் தீவிரமாக நடந்துகொண்டிருந்த நேரம் அது. எதிரி நாட்டுப் படையினரால், இங்கிலாந்து மிகப்பெரிய சேதத்தைச் சந்தித்திருந்தது. "இதற்குப் பின்னும் நாட்டை எதிரிகளிடமிருந்து காப்பாற்றவில்லை என்றால், நாட்டில் சேதம் இன்னும் மிகுதியாகும். அதேநேரத்தில், எதிரிகள் நம்மைவிடப் பலசாலிகளாக இருக்கின்றார்கள். அவர்களோடு எப்படிப் போர்தொடுப்பது?" என்று தெரியாமல் குழம்பித் தவித்தார் இங்கிலாந்து நாட்டின் இராணுவத் தளபதி.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இராணுவத் தளபதி, ஒரு கோயிலைக் கடந்துபோனார். இவர் அந்தக் கோயிலைக் கடந்து போகும்பொழுது, திருப்பீடத்திற்கு மேல் இருந்த பாடுபட்ட சிரூபத்தைக் கண்டார். அதைக் கண்டதும், இராணுவத் தளபதியின் உள்ளத்தில் துணிவும் நம்பிக்கையும் பிறந்தன. உடனே இவர் தன்னுடைய படைவீரர்களை ஒன்றுதிரட்டி, எதிரிநாட்டின்மீது போர்தொடுத்துப் போரில் வெற்றிகொண்டார்.

இது இந்த இராணுவத் தளபதிக்கு மிகவும் நெருக்கமாக இருந்த ஒருசில இராணுவ அதிகாரிகளுக்கு மிகவும் வியப்பதைத் தந்தது. இது குறித்து அந்த இராணுவ அதிகாரிகள் இவரிடம், "எதிரி நாட்டின்மீது போர்தொடுக்கலாமா, வேண்டாமா என்று குழம்பிக் கொண்டிருந்த உங்களுக்கு எப்படி இவ்வளவு துணிச்சலும் நம்பிக்கையும் வந்தன?" என்று கேட்டார்கள். உடனே இந்த இராணுவத் தளபதி அவர்வளிடம், "ஒரு கோயிலைக் கடந்துபோகும்பொழுது, தற்செயலாக திருப்பீடத்தின் மேலே இருந்த இயேசுவின் பாடுபட்ட சிரூபத்தைக் கண்டேன். அச்சிரூபம் எனக்கோர் உண்மையை உணர்த்தியது. இயேசுவின் வாழ்வு, அவருடைய இறப்போடு முடிந்துவிடவில்லை. மாறாக, அவர் இறந்து மூன்றாம்நாள் உயிர்த்தெழுந்தார். அப்படியானால், எதிரிகளால் மிகப்பெரிய சேதத்தைச் சந்தித்திருக்கும் நம்முடைய நாடும் மீண்டும் எழலாம். இதைத்தான் இயேசுவின் பாடுபட்ட சிரூபம் எனக்கு உணர்த்தியது. எனவேதான் படையைத் திரட்டி, எதிரி நாட்டின்மீது போர்தொடுத்து, எல்லாருடைய கூட்டுமுயற்சியினால் போரில் வெற்றிகண்டேன்" என்றார்.

இந்த நிகழ்வில் வருகின்ற இராணுவத் தளபதிக்கு இயேசுவின் பாடுபட்ட சிரூபம் எப்படி நம்பிக்கையையும் துணிவையும் கொடுத்தனவோ, அப்படி பேதுருவும் யோவானும் ஆண்டவர் இயேசுவின்மீது கொண்ட நம்பிக்கை, அவர்களுக்குத் தலைமைச் சங்கத்தாரிடம் துணிவோடு பேசுவதற்கான வல்லமையைத் தந்தது. பேதுருவிடமும் யோவானிடம் எத்தகைய துணிவு இருந்தது. அந்தத் துணிவினைக் கொண்டு அவர்கள் எப்படி இயேசுவுக்குச் சான்று பகர்ந்து வாழ்ந்தார்கள் என்பன குறித்து நாம் சிந்திப்போம்.

இயேசுவைப் பற்றிக் கற்பிக்கக்கூடாது என்ற எச்சரிக்கையை மீறிக் கற்பித்தல்

பேதுருவும் யோவானும் எருசலேம் திருக்கோயிலுக்கு வேண்டுவதற்குச் செல்கின்றபொழுது, அங்கு அழகு வாயிலில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த கால் ஊனமுற்ற மனிதரை இயேசுவின் திருப்பெயரால் அவர்கள் எழுந்து நடக்க வைத்ததைத் தொடர்ந்து, பலர் அவர்களிடம் வருகின்றார்கள்; ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுகின்றார்கள். இதைக் குறித்துக் கேள்விப்படும் தலைமைச் சங்கத்தினர், பேதுருவையும் யோவானையும் கூப்பிட்டு, இயேசுவைக் குறித்து மக்களுக்குக் கற்பிக்கவோ, அறிவிக்கவோ கூடாது என்று எச்சரிக்கின்றார்கள்; ஆனால், பேதுருவும் யோவானும், "நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எங்களால் அறிவிக்காமல் இருக்கமுடியாது" என்று மிகத் தெளிவாகச் சொல்கின்றார்கள்.

பேதுருவும் யோவானும் கல்வியறிவு அற்றவர்களாக இருந்தபொழுதும், இவ்வளவு துணிவோடு பேசுவதைக் கண்டு தலைமைச் சங்கத்தினர் அப்படியே வியந்துபோகிறார்கள்.

மனிதர்களுக்கு அல்ல, ஆண்டவருக்குக் கீழ்ப்படிந்து வாழ்வோம்

தலைமைச் சங்கத்தார் பேதுருவிடமும் யோவானிடமும், "இயேசுவைப் பற்றி எதுவும் பேசவோ, கற்பிக்கவோ கூடாது" என்று சொன்னபொழுது, இருவரும், "உங்களுக்குச் செவி சாய்ப்பதா? கடவுளுக்குச் செவி சாய்ப்பதா?" என்று கேட்டுவிட்டு, தலைமைச் சங்கத்தாருக்கு அல்ல, கடவுளுக்குச் செவி சாய்ப்பதைக் குறித்து வாசிக்கின்றோம்.

பேதுருவும் யோவானும் தலைமைச் சங்கத்தாரிடம் இவ்வாறு சொன்னால், தங்களுக்கு ஆபத்து வரும் என்று நன்றாக தெரிந்திருக்கும். அப்படியிருந்தபோதும், அவர்கள் மனிதர்களுக்குச் செவிசாய்க்காமல், ஆண்டவருக்குச் செவிசாய்த்து, அவரைப் பற்றித் தொடர்ந்து பேசியும் கற்பித்தும் வந்தது நம்முடைய கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது. நாமும் கூட பிரச்சனைகளைக் கண்டு, சவால்களைக் கண்டு அஞ்சிடாமல், பேதுருவைப் போன்று, யோவானைப் போன்று ஆண்டவர் இயேசுவைப் பற்றி மக்களுக்கு அறிவிக்கவேண்டும். அதுதான் நாம் செய்யவேண்டிய தலையாய செயலாக இருக்கின்றது. இதற்கு நிறையத் துணிச்சல் வேண்டும். அதை ஆண்டவரால் மட்டுமே தரமுடியும். எனவே, இறைவனுடைய வார்த்தையை வல்லமையோடும் துணிவோடும் எடுத்துரைப்பதற்கான ஆற்றலை இறைவனிடம் கேட்போம்.

சிந்தனை

"வலிமை பெறு; துணிவு கொள்...ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு முன் செல்பவர்" (இச 31:6) என்கிறது இறைவார்த்தை. எனவே, நாம் இறைவன் நம்மோடு இருக்கின்றார் என்ற நம்பிக்கையோடு, துணிவோடு அவருடைய வார்த்தையை எடுத்துரைப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மாற்கு 16: 9-15

அறிவோம்; அறிவிப்போம்

நிகழ்வு

மிகப்பெரிய அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இவர் ஸ்வார்த்மோர் என்ற கல்லூரில் (Swarthmore College) பேசுவதற்காகச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். இவரும் அவர்களுடைய அழைப்பினை ஏற்று அந்தக் கல்லூரில் பேசுவதற்குச் சென்றிருந்தார்.

கல்லூரி அரங்கில் இருந்த எல்லாரும் இவர் என்ன பேசப்போகிறார் என்று ஆவலாய் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது இவர், மேடையில் ஏறி, "பேசுவதற்கு ஒன்றுமில்லை" என்று சொல்லிவிட்டு கீழே இறங்கிவிட்டார். எல்லாரும் ஒருவினாடி அதிர்ந்துபோனார்கள். "என்ன இவர்! மிகப்பெரிய அறிவியல் மேதை என்றுதானே இவரைப் பேச அழைத்திருக்கின்றார்கள். "பேசுவதற்கு ஒன்றுமில்லை" என்று சொல்லிவிட்டுக் கீழே இறங்கிவிட்டாரே!" என்று முணுமுணுக்கத் தொடங்கினார்கள்.

சிறிதுநேர இடைவெளிக்குப் பிறகு, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மீண்டுமாக மேடை ஏறினார். அரங்கில் இறந்தவர்கள் இப்பொழுது என்ன பேசப் போகிறார் என்று ஆர்வமாய் அவரைப் பார்த்தார்கள். இவரோ, "பேசுவதற்கு ஏதாவது இருந்தால், அப்பொழுது வந்து பேசுகிறேன்" என்று சொல்லிவிட்டுக் கீழே இறங்கிவிட்டார். அரங்கில் இருந்தவர்களுக்கோ ஒரே ஏமாற்றமாகிப் போய்விட்டது. அவர்கள் மிகுந்த வருத்தத்தோடு அங்கிருந்து நகர்ந்துசென்றார்கள்.

இது நடந்து ஆறு மாதங்கள் கழித்து, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஸ்வார்த்மோர் கல்லூரின் முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதினர். அந்தக் கடிதத்தில், "இப்பொழுது என்னிடம் உங்களிடம் பேசுவதற்கு நிறைய இருக்கின்றது" என்றார். உடனே கல்லூரி முதல்வர், மாணவர்களுக்கு ஒரு சுற்றறிக்கை விட்டு, எல்லாரையும் அரங்கத்திற்கு வரவழைத்தார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும் அங்கு சென்று பேசினார். அவருடைய பேச்சைக் கேட்டு எல்லாரும் வியந்துபோனார்கள்.

இந்த நிகழ்வில் வருகின்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு வேண்டுமானால், சில நேரங்களில் பேசுவதற்கும் அறிவிப்பதற்கும் பறைசாற்றுவதற்கும் எதுவும் இல்லாமல் போகலாம்; ஆனால், ஆண்டவர் இயேசுவின் சீடர்களாக நமக்கு பேசுவதற்கும் அறிவிப்பதற்கும் பறை சாற்றுவதற்கும் அவருடைய நற்செய்தி இருக்கின்றது. அந்த நற்செய்தியை நாம் படைப்பிற்கெல்லாம் அறிவிக்கவேண்டும். அதுதான் இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு சீடர்களுக்கும் நமக்கும் கொடுக்கக்கூடிய கட்டளையாக இருக்கின்றது. அது குறித்து இப்போப்ழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

நம்பிக்கையின்றி இருந்த இயேசுவின் சீடர்கள்

புனித மாற்கு எழுதிய நற்செய்தி நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்தில், உயிர்த்த ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்கள் பலருக்குத் தோன்றுவதையும் இறுதியாக அவர் அவர்களுக்குக் கொடுக்கின்ற "நற்செய்தி அறிவிக்கவேண்டும்" என்ற கட்டளையையும் எடுத்துச் சொல்கின்றது. மாற்கு நற்செய்தியில் இடம்பெறுகின்ற இப்பகுதி (மாற் 16: 9-20) இரண்டாம் நூற்றாண்டிலோ அல்லது அதற்குப் பின்னாலோ சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று திருவிவிலிய அறிஞர்கள் சொல்வார்கள் (Life Application New Testament Commentary Bruce Barton, D.Min. Pg. 228). இது ஒரு பக்கம் இருந்தாலும், இப்பகுதி வழியாக இறைவன் நமக்குச் சொல்லக்கூடிய செய்தியை கருத்தில் கொள்வது நல்லது.

உயிர்த்த ஆண்டவர் இயேசு, தன்னுடைய சீடர்களுக்குத் தோன்றுகின்றபொழுது, அவரிடத்தில், தன்னுடைய உயிர்ப்பின்மீது நம்பிக்கை இல்லாததை அவர் காண்கின்றார். குறிப்பாக உயிர்த்த ஆண்டவரை முதலில் காண்கின்ற மகதலா மரியா, அவரைப் பற்றிச் சீடர்களிடம் சொல்கின்றபொழுது, அவர்கள் நம்ப மறுக்கின்றார்கள். அதனால்தான் எம்மாவு நோக்கி இரண்டு சீடர்கள் செல்கின்றார்கள். மற்ற சீடர்கள்கூட இயேசு உயிர்த்தெழுந்ததை நம்பாமல், கடின உள்ளத்தோடு இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான் உயிர்த்த ஆண்டவர் இயேசு அவர்களுக்குத் தோன்றி அவர்களைக் கடிந்துகொள்கின்றார்; அவர்களுக்கு நம்பிக்கையூட்டுகின்றார். அது மட்டுமல்லாமல், அவர்களுக்கு ஒரு கட்டளையைத் தருகின்றார்.. அந்தக் கட்டளை என்ன என்று நாம் சிந்திப்போம்.

படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்

நம்பிக்கையின்றி இருந்த சீடர்களுக்கு நம்பிக்கையை ஊட்டிய இயேசு அவர்களிடம், "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்" என்று கூறுகின்றார். இயேசுவின் சீடர்கள் அவரைப் பற்றி, படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவிப்பதற்கு முன் அவரோடு இருந்தார்கள்; அறிந்தார்கள் (மாற்கு 3: 14). அதனால் அவர்கள் மிகச் சிறப்பாக இயேசுவைப் பற்றி நற்செய்தியை அறிவித்தார்கள். நாமும் இயேசுவைப் பற்றி அறிவிக்கவேண்டும். அதற்கு நாம் அவரை அறிந்துகொள்வது மிகவும் இன்றியமையாததாக இருக்கின்றது.

ஆகையால், நாம் இயேசுவைப் பற்றி படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவிக்க, அவரை ஆழமாய் அறிவோம். அறிந்த அவரை அடுத்தவருக்கும் அறிவிப்போம்.

சிந்தனை

"நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு" (1கொரி 9: 16) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் நற்செய்தி அறிவிப்பதை நம்முடைய கடமை என உணர்ந்து, நற்செய்தியை அறிவிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!