Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   16  ஏப்ரல்  2020  

பாஸ்கா எண்கிழமை - வியாழன்

=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிரோடு எழுப்பினார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 3: 11-26


கால் ஊனமுற்றிருந்தவர் நலமடைந்தபின் பேதுருவையும் யோவானையும் விடாமல் பற்றிக்கொண்டிருக்க, எல்லா மக்களும் திகிலுற்றுச் சாலமோன் மண்டபம் என்னும் இடத்திற்கு ஒருசேர ஓடிவந்தனர். பேதுரு இதைக் கண்டு மக்களைப் பார்த்துக் கூறியது: "எருசலேம் மக்களே, நீங்கள் ஏன் இதைப் பார்த்து வியப்படைகிறீர்கள்? நாங்கள் எங்கள் சொந்த வல்லமையாலோ இறைப்பற்றாலோ இவரை நடக்கச் செய்துவிட்டதுபோல் ஏன் எங்களையே உற்றுப் பார்க்கிறீர்கள்? ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்னும் நம் மூதாதையரின் கடவுள் தம் ஊழியர் இயேசுவைப் பெருமைப்படுத்தினார். ஆனால் நீங்கள் அவரைப் புறக்கணித்துப் பிலாத்திடம் ஒப்புவித்து விட்டீர்கள். அவன் அவருக்கு விடுதலைத் தீர்ப்பு அளிக்க முயன்றபோதும் நீங்கள் அவரை மறுதலித்தீர்கள். நீங்கள் தூய்மையும் நேர்மையுமானவரை மறுதலித்துக் கொலையாளியை விடுதலை செய்யுமாறு வேண்டிக் கொண்டீர்கள். வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிரோடு எழுப்பினார். இதற்கு நாங்கள் சாட்சிகள். இதோ உங்கள் கண்முன் நிற்கிற இவர் உங்களுக்குத் தெரிந்தவர். இயேசுவின் பெயரே இவருக்கு வலுவூட்டியது. அவர் பெயர்மீது கொண்டிருந்த நம்பிக்கையால்தான் இது நடந்தது. இந்த நம்பிக்கையே உங்கள் அனைவர் முன்பாகவும் இவருக்கு முழுமையான உடல் நலனைக் கொடுத்துள்ளது.

அன்பர்களே, நீங்களும் உங்கள் தலைவர்களும் அறியாமையினாலேயே இப்படிச் செய்துவிட்டீர்கள் என எனக்குத் தெரியும். ஆனால் கடவுள், தம் மெசியா துன்புற வேண்டும் என்று இறைவாக்கினர் அனைவர் வாயிலாகவும் முன்னறிவித்ததை இவ்வாறு நிறைவேற்றினார். எனவே உங்கள் பாவங்கள் போக்கப்படும்பொருட்டு மனம்மாறி அவரிடம் திரும்புங்கள். அப்பொழுது ஆண்டவர் புத்துயிர் அளிக்கும் காலத்தை அருளி உங்களுக்காக ஏற்படுத்திய மெசியாவாகிய இயேசுவை அனுப்புவார். விண்ணேற்றமடைந்த இயேசு யாவும் சீர்படுத்தப்படும் காலம்வரை விண்ணுலகில் இருக்கவேண்டும். பழங்காலத் தூய இறைவாக்கினர் வாயிலாகக் கடவுள் இந்தக் காலத்தைக் குறித்துக் கூறியிருந்தார்.

மோசேயும், "உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் சகோதரரிட மிருந்து என்னைப்போல் ஓர் இறைவாக்கினரைத் தோன்றச் செய்வார். அவர் உங்களுக்குக் கூறும் எல்லாவற்றிற்கும் நீங்கள் செவிசாயுங்கள். அந்த இறைவாக்கினருக்குச் செவிசாய்த்துக் கீழ்ப்படியாத எவரும் மக்களினின்று அடியோடு அழிக்கப்படுவர்" என்று கூறியுள்ளார்.

சாமுவேல் தொடங்கி இறைவாக்குரைத்த அனைவரும் இந்தக் காலத்தைப்பற்றி அறிவித்து வந்தனர். அந்த இறைவாக்கினர் உரைத்தவற்றை உரிமையாக்கிக்கொள்பவர்கள் நீங்கள். கடவுள் ஆபிரகாமிடம், "உன் மரபினர் வழியாக மண்ணின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்" என்று கூறி உடன்படிக்கை செய்தார். கடவுள் உங்கள் மூதாதையரோடு செய்த அந்த உடன்படிக்கையையும் உரிமையாக்கிக்கொள்பவர்கள் நீங்களே. ஆகையால், நீங்கள் அனைவரும் உங்கள் தீய செயல்களை விட்டு விலகி ஆசி பெற்றுக்கொள்வதற்காகவே, கடவுள் தம் ஊழியரைத் தோன்றச் செய்து முதன்முதல் உங்களிடம் அனுப்பினார்."

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 8: 1a,4. 5-6. 7-8 (பல்லவி: 1ab) Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரே! உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது!
1a
ஆண்டவரே! எங்கள் தலைவரே! உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது!
4
மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒரு பொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? - பல்லவி

5
ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்; மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர்.
6
உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படிச் செய்துள்ளீர்; எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். - பல்லவி

7
ஆடுமாடுகள், எல்லா வகையான காட்டு விலங்குகள்,
8
வானத்துப் பறவைகள், கடல் மீன்கள், ஆழ்கடலில் நீந்திச் செல்லும் உயிரினங்கள் அனைத்தையும் அவர்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். - பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
(திபா 118: 24)

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்று எழுதியுள்ளது.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 35-48

அக்காலத்தில்

சீடர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும், இயேசு அப்பத்தை பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கு இருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.

சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில் நின்று, ""உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று அவர்களை வாழ்த்தினார். அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள். அதற்கு அவர், ""நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்கிறீர்கள்? என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானேதான். என்னைத் தொட்டுப் பாருங்கள்; எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே; இவை ஆவிக்குக் கிடையாதே" என்று அவர்களிடம் கூறினார்; இப்படிச் சொல்லித் தம் கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.

அவர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்கு உள்ளாகி இருந்தார்கள். அப்போது அவர் அவர்களிடம், ""உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா?" என்று கேட்டார். அவர்கள் வேகவைத்த மீன் துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள். அதை அவர் எடுத்து அவர்கள்முன் அமர்ந்து உண்டார்.

பின்பு அவர் அவர்களைப் பார்த்து, ""மோசேயின் சட்டத்திலும் இறைவாக்கினர் நூல்களிலும் திருப்பாடல்களிலும் என்னைப்பற்றி எழுதப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று நான் உங்களோடு இருந்தபோதே உங்களுக்குச் சொல்லியிருந்தேனே" என்றார்; அப்போது மறைநூலைப் புரிந்துகொள்ளுமாறு அவர்களுடைய மனக் கண்களைத் திறந்தார். அவர் அவர்களிடம், ""மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும், பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள் என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது. இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்" என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 திருத்தூதர் பணிகள் 3: 11-26

"மனம்மாறி அவரிடம் திரும்புகள்"


நிகழ்வு

ஆங்கிலக் கவிஞரான தாந்தே (Dante) ஒருநாள் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் அவர் விண்ணகத்திற்கு முன்பாக நின்றார். விண்ணகத்தில் மூன்று விதமான பாதைகள் இருந்தன. முதல்பாதை கண்ணாடி போன்று மிகவும் பளபளப்பாகவும் இரண்டாவது பாதை, கரடு முரடாகவும் மூன்றாவது பாதை, இரத்தம் படிந்ததாகவும் இருந்தன.

இவற்றைப் பார்த்துவிட்டு, தாந்தே அங்குநின்றுகொண்டிருந்த பேதுருவிடம், "இவை உணர்த்துவது என்ன?" என்று கேட்டார். உடனே பேதுரு அவரிடம், "முதலில் இருக்கக்கூடிய கண்ணாடி போன்று மிகவும் பளபளப்பான பாதை, செய்த குற்றத்தை உணர்ந்து மனம்வருந்திக் கண்ணீர் சிந்தி, பின் மனம்மாறிவர்கள் விண்ணகத்திற்குள் செல்லக்கூடிய பாதை. இரண்டாவது இருக்கக்கூடிய கரடுமுரடான பாதை, செய்த குற்றத்தை ஒப்புரவு அருளடையாளத்தில் அருள்பணியாளரிடம் அறிக்கையிட்டு, அவர் கொடுத்த பாவப் பொருத்தனைகளைச் செய்து அதன்பின் விண்ணகத்திற்குள் செல்லக்கூடியவர்கள் பாதை. மூன்றாவது இருக்கக்கூடிய இரத்தம் படிந்த பாதை, செய்த பாவத்தை உணர்ந்ததோடு மட்டுமல்லாமல், கிறிஸ்துவின் மேல் கொண்ட அன்பால், அவருக்காக இரத்தம் சிந்தியோர் செல்லக்கூடிய பாதை" என்றார்.

இப்படிச் சொல்லிவிட்டு, பேதுரு தாந்தேயிடம், "செய்த குற்றத்தை உணராமலும், அதிலிருந்து விலகி நல்வழியை நாடாமலும் இருக்கின்ற ஒருவரால், நிச்சயம் விண்ணகத்திற்குள் நுழைய முடியாது" என்றார்.

ஆம், செய்த குற்றத்தை உணர்ந்து, மனந்திருந்தி, நல்வழியை நாடாத ஒருவரால் நிச்சயமாக விண்ணகத்திற்குள் நுழைய முடியாது. அதைத்தான் மேலே உள்ள கனவு/ இறை வெளிப்பாடு நமக்கு வெளிப்படுத்துகின்றது. முதல் வாசகத்தில் பேதுரு யூதர்களை மனம்மாற்றத்திற்கு அழைக்கின்றார். அவருடைய அழைப்பை ஏற்று யூதர்கள் மனம்மாறினார்களா? மனம்மாற்றத்தின் தேவையென்ன? என்பன குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

மகிமையும் புகழும் இயேசுவின் திருப்பெயருக்கே

இன்றைய முதல் வாசகம், நேற்றைய முதல் வாசகத்தின் தொடர்ச்சியாக இருக்கின்றது. நேற்றைய முதல் வாசகத்தில், பேதுரு யோவானோடு பிற்பகல் மூன்று மணிக்கு, எருசலேம் திருக்கோயிலுக்கு வேண்டச் செல்லும்பொழுது, அங்கிருந்த கால் ஊனமுற்றவரை இயேசுவின் திருப்பெயரைச் சொல்லி, நலப்படுத்துவார். பேதுரு அந்த மனிதரை நலப்படுத்திய உடன், எருசலேம் திருக்கோயிலில் இருந்த எல்லாரும் பேதுருவுக்கு முன்பாகக் கூடிவிடுவிடுவர். அப்பொழுது பேதுரு அங்கிருந்தவர்களைப் பார்த்து, "இயேசுவின் பெயரே இவருக்கு வலுவூட்டியது" என்பார்.

இங்கு பேதுரு சொல்லக்கூடிய வார்த்தைகள் மிகவும் கவனிக்கப்பட வேண்டியவை. கால் ஊனமுற்ற மனிதர் எழுந்து நடப்பதைப் பார்த்துவிட்டு, தனக்கு முன்பாகக் கூடிய திரளான மக்களைப் பார்த்துவிட்டுப் பேதுரு, தன்னால்தான் இப்படியோர் அருஞ்செயல் நடந்தது என்று சொல்லவில்லை. மாறாக, இயேசுவின் பெயரே இவருக்கு வலுவூட்டியது என்று தனக்கு அல்ல, இயேசுவின் திருப்பெயருக்குப் பெருமை சேர்க்கின்றார். பேதுருவிடம் இருந்த இந்த இறைவனுக்குப் பெருமை சேர்க்கின்ற மனநிலை நம் ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டும். ஏனென்றால், பலருக்கு "எல்லாம் என்னால்தான் ஆனது" என எண்ணம் இருக்கின்றது. இப்படிப்பட்டவர்கள் பேதுருவின் மனநிலையைக் கொண்டு இறைவனுக்குப் பெருமை சேர்ப்பது நல்லது.

மக்களை மனமாற்றத்திற்கு அழைத்த பேதுரு

பேதுரு தனக்கு முன்பாகத் திரண்டிருந்தவர்களைப் பார்த்து, இயேசுவின் திருப்பெயர்தான் கால் ஊனமுற்ற மனிதருக்கு வலுவூட்டியது என்று சொன்னதோடு நின்றுவிடாமல், இதுதான் சரியான நேரம் என்று, யூதர்கள ஆண்டவர் இயேசுவுக்கு எதிராகச் செய்த குற்றத்தை எடுத்துரைக்கின்றார். பிலாத்து இயேசுவை விடுவிக்கலாம் என்றுதான் இருந்தார். ஆனால், யூதர்கள் "எங்களுக்குப் பரபாதான் வேண்டும்; இயேசுவைச் சிலுவையில் அறையும்" என்று கேட்டுக்கொண்டதால், இயேசுவைச் சிலுவையில் அறைய பிலாத்து கையளித்தான். இது யூதர்கள் இயேசுவுக்கு எதிராகச் செய்த மிகப்பெரிய குற்றம்.

இதைப் பேதுரு அவர்களிடம் எடுத்தரைத்தபோது, அவர்கள் தங்களுடைய குற்றத்தை உணர்ந்து, மனம்மாறுகின்றார்கள். அந்த மனமாற்றத்தின் அடையாளமாக ஐயாயிரம் பேர் திருமுழுக்குப் பெறுகின்றார்கள். அன்று பேதுரு யூதர்களுக்கு விடுத்த அழைப்புதான் இன்று நமக்கும் நமக்கும் விடுக்கப்படுகின்றது. நாம் நம்முடைய குற்றத்தை உணர்ந்து, அதற்காக மனம்வருந்தி, ஆண்டவரை ஏற்றுக்கொண்டு அவருடைய வழியில் நடக்கத் தயாரா? சிந்திப்போம்.

சிந்தனை

"நீங்கள் மனம்மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்" (மத் 3: 8) என்பார் புனிதத் திருமுழுக்கு யோவான். ஆகையால், பேதுரு விடுத்த அழைப்பினை ஏற்று யூதர்கள் மனம்மாறி, கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதுபோல, நாமும் நம்முடைய தீச்செயல்களிலிருந்து மனம்மாறி, இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 லூக்கா 24: 35-48

"உங்களுக்கு அமைதி உரித்தாகுக"

நிகழ்வு

அமரிக்காவில் ஹார்மனி (Harmony) என்றொரு நகர் உள்ளது. இந்த நகருக்கு இப்பெயர் எப்படி வந்தது என்பதற்காகச் சொல்லப்படுகின்றன நிகழ்வு இது.

நகரைக் கட்டியெழுப்பிய பின்பு, அந்த நகரில் இருந்த பெரியவர்கள், முக்கியமானவர்கள் எல்லாரும், நகருக்கு என்ன பெயரிடலாம் என்பது பற்றிக் கலந்தாலோசித்தர்கள். வந்திருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயரைச் சொன்னார்கள். ஒருசிலர், "நாங்கள் சொன்ன பெயர்தன நன்றாக இருக்கும்" என்றும் மற்றும் சிலர், "நாங்கள் சொன்ன பெயர்தான் நன்றாக இருக்கும். அதையே வைப்போம்" என்றும் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.

அப்பொழுது அந்தக் கூட்டத்தை வழிநடத்திக்கொண்டிருந்த பெரியவர் வேகமாக எழுந்து, "தயவு செய்து எல்லாரும் நல்லிணக்கமாக/ அமைதியாக இருப்போம்" (Please Let us have harmony) என்று சொல்லிவிட்டு அமர்ந்தார். அவர் சொன்னதில் இருந்த "ஹார்மனி" என்ற என்ற வார்த்தை எல்லாருக்கும் பிடித்துவிட, அப்பெயரையே நகரத்தின் பெயராகச் சூட்டினார்கள்.

இந்த நிகழ்வில் வருகின்ற பெரியவர், நல்லிணக்கமாக, அமைதியாக இருப்போம் என்று சொன்னதுபோன்று, நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக" என்று சொல்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இவ்வார்த்தைகள் நமக்கு என்ன செய்தியைச் சொல்கின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

சீடர்கள் நடுவில் தோன்றிய உயிர்த்த ஆண்டவர் இயேசு

நற்செய்தியில், எம்மாவுவிலிருந்து திரும்பிவரும் இரண்டு சீடர்கள், வழியில் நிகழ்ந்தவற்றையும் அப்பத்தைப் பிட்கையில் இயேசுவைக் கண்டுகொண்டதையும் மற்ற சீடர்களோடு பகிர்ந்துகொண்டிருக்கின்றார்கள். மற்ற சீடர்களும் கூட, குறிப்பாக பேதுருவும் உயிர்த்த ஆண்டவர் இயேசு தனக்குத் தனியாகத் தோன்றியதை (1கொரி 15:5) மற்ற சீடர்களோடு பகிர்ந்துகொண்டிருக்கவேண்டும். இதனால் சீடர்கள், இவர்கள் சொல்வதெல்லாம் உண்மையா? என்று அச்சம் கலந்த மகிழ்ச்சி இருந்திருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் உயிர்த்த ஆண்டவர் இயேசு, அவர்கள் நடுவில் தோன்றுகின்றார்.

நம்பிக்கையூட்டிய இயேசு

இயேசு, சீடர்கள் நடுவில் தோன்றியதும் உதிர்க்கக் கூடிய முதல் வாழ்த்து, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக" என்பதுதான். இயேசு இத்தகைய வாழ்த்தைச் சீடர்களிடத்தில் சொன்னதற்கு முக்கியமான காரணம், அவர்கள் அச்சம் நிறைந்தவர்களாக, நம்பிக்கையற்றவர்களாக இருந்தார்கள் என்பதால்தான். இதனை இயேசு "உங்களுக்கு அமைதி உரித்தாகுக" என்று சொன்னதும், சீடர்களிடமிருந்து வெளிப்படுகின்றன திகில் மற்றும் அச்ச உணர்வுகளிளிருந்தே நாம் கண்டுகொள்ளலாம்.

இயேசு இத்தகைய வாழ்த்தைச் சொன்னபிறகும்கூட, சீடர்கள் திகில் நிறைந்தவர்களாய், அச்சம் நிறைந்தவர்களாய் இருக்கின்றார்கள். இதனால் இயேசு அவர்களுடைய நம்பிக்கையை இன்னும் மிகுதிப்படுத்த, தன்னுடைய கைகளையும் கால்களையும் அவர்களிடம் காண்பிக்கின்றார். மட்டுமல்லாமல், அவர்கள் கொடுத்த வேகவைத்த மீனை வாங்கி உண்டு, அவர்களுடைய அச்சத்தையும் நம்பிக்கையின்மையையும் போக்குகின்றார்.

இயேசு உயிர்த்த பின்பு, தன்னைச் சிலுவையில் அறைந்து கொன்ற யூதர்களுக்கு முன்போ அல்லது ஆட்சியாளர்களுக்கு முன்போ தோன்றி, நான் உயிர்த்தெழுந்துவிட்டேன்; பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை. மாறாக, தன்னுடைய சீடர்களிடம் தோன்றி, அவர்களுக்கு நம்பிக்கையும், உற்சாகத்தையும் ஊட்டுகின்றார்.

சாட்சிகளாக வாழவேண்டும்

இயேசு தன்னுடைய சீடர்களிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, இறுதியாக அவர்களிடம், "இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்" என்கின்றார். இவ்வார்த்தைகள் நம்முடைய ஆழமான சிந்தனைக்குரியவை.

இயேசு மக்கள் நடுவில் பணிசெய்ததையும் பாடுகள் பட்டதையும் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டதையும் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததையும், அவருடைய சீடர்கள் கண்கூடாகக் கண்டார்கள். அதனால் தான் இயேசு அவர்களைப் பார்த்து, "இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்" என்று கூறுகின்றார். இயேசு சொல்லக்கூடிய இவ்வார்த்தைகளில் இரண்டு விதமான உண்மைகள் இருக்கின்றன. ஒன்று, சீடர்கள் இயேசுவோடு இருந்து, அவர் செய்த அனைத்தையும் கண்ணால் கண்டதால் அவருக்குச் சாட்சிகளாக இருக்கின்றார்கள் என்பதாகும். இது ஒருவகையில் சாட்சியாக இருப்பது. இரண்டு, இயேசுவின் விழுமியங்களையும் அவருடைய மதிப்பீடுகளையும் வாழ்ந்து காட்டுவதன் மூலம் அவருடைய உயிர்ப்புக்குச் சாட்சிகளாக இருத்தல். இந்த வகையான சாட்சிதான், இயேசு நம்மிடத்தில் எதிர்பார்ப்பதாகும்.

ஆம், நாம் இயேசுவைக் கண்ணால் கண்டு, அவருக்குச் சாட்சியாக இருக்க முடியாவிட்டாலும், அவருடைய நற்செய்தி மதிப்பீடுகளின்படி வாழ்ந்து, அவருடைய உயிர்ப்புச் சாட்சியாகத் திகழலாம். நாம் இயேசுவின் உயிர்ப்புகுச் சாட்சிகளாகத் திகழ்கின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனை

"நீங்கள் ஒருவர் மற்றவரிடம் காட்டும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்" (யோவா 13:35) என்பார் இயேசு. ஆகையால், நாம் இயேசுவின் நற்செய்தியின் விழுமியங்களின்படி வாழ்ந்து, அவருடைய உயிர்ப்புக்குச் சாட்சிகளாகத் திகழ்வோம். அதன்வழியாக இறையமைதியையும் இறையருளையும் நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!