|
|
13
ஏப்ரல் 2020 |
|
|
பாஸ்கா எண்கிழமை - திங்கள் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
கடவுள் இயேசுவை உயிர்த்தெழச் செய்தார்.
இதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகள்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம்
2: 14, 22-33
பெந்தக்கோஸ்து நாளில் பேதுரு பதினொருவருடன் சேர்ந்து, எழுந்து
நின்று, உரத்த குரலில் அவர்களிடம் பின்வருமாறு கூறினார்:
"யூத மக்களே, எருசலேமில் வாழும் மக்களே, இதைத் தெரிந்து
கொள்ளுங்கள்; எனது சொற்களைக் கவனித்துக் கேளுங்கள்.
இஸ்ரயேல் மக்களே, நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள். கடவுள்
நாசரேத்து இயேசுவின் வழியாக உங்கள் நடுவில் வல்ல செயல்களையும்
அருஞ்செயல்களையும் அடையாளங்களையும் செய்து, அவரை இன்னாரென்று
உறுதியாகக் காண்பித்தார். இது நீங்கள் அறிந்ததே. கடவுள் தாம்
வரையறுத்துள்ள திட்டத்தின்படியும், தம் முன்னறிவின்படியும் இந்த
இயேசுவை உங்கள் கையில் விட்டுவிட்டார். நீங்கள் திருச்சட்டம்
அறியாதார் மூலம் அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றீர்கள். ஆனால்
கடவுள் அவரை மரண வேதனையினின்று விடுவித்து உயிர்த்தெழச்
செய்தார். ஏனென்றால் மரணம் அவரைத் தன் பிடியில் வைத்திருக்க
முடியவில்லை.
தாவீது அவரைக் குறித்துக் கூறியது: "நான் ஆண்டவரை எப்போதும் என்
கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார். எனவே நான்
அசைவுறேன். இதனால் என் இதயம் பேருவகை கொள்கின்றது; என் நா மகிழ்ச்சியால்
நிறைந்துள்ளது. என் உடலும் எதிர்பார்ப்பில் நிலைத்திருக்கும்.
ஏனென்றால் என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர். உம் தூயவனைப்
படுகுழியைக் காணவிடமாட்டீர். வாழ்வின் வழியை நான் அறியச்
செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு."
சகோதரர் சகோதரிகளே, நமது குலமுதல்வராகிய தாவீதைக் குறித்து
நான் சொல்வதை மறுக்க மாட்டீர்கள். அவர் காலமாகி அடக்கம் செய்யப்பட்டார்.
அவர் கல்லறை இந்நாள்வரை நம்மிடையே இருக்கிறது. அவர் இறைவாக்கினர்
என்பதால், தம் வழித்தோன்றல் ஒருவர் அவரது அரியணையில்
வீற்றிருப்பார் என்று கடவுள் உறுதியாக ஆணையிட்டுக் கூறியதை அறிந்திருந்தார்.
அவர் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை முன்னறிந்து, "அவரைப் பாதாளத்திடம்
ஒப்புவிக்கமாட்டீர்; அவரது உடல் படுகுழியைக் காணவிடமாட்டீர்"
என்று கூறியிருக்கிறார். கடவுள் இந்த இயேசுவை உயிர்த்தெழச்
செய்தார். இதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகள். அவர் கடவுளின்
வலப்பக்கத்துக்கு உயர்த்தப்பட்டு, வாக்களிக்கப்பட்ட தூய ஆவியைத்
தம் தந்தையிடமிருந்து பெற்றுப் பொழிந்தருளினார். நீங்கள் காண்பதும்
கேட்பதும் இதுதான்."
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 16: 1-2. 5,7-8. 9-10. 11 (பல்லவி: 1)
Mp3
=================================================================================
பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம்
புகுந்துள்ளேன்.
1
இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம்
புகுந்துள்ளேன்.
2
நான் ஆண்டவரிடம் "நீரே என் தலைவர்" என்று சொன்னேன். - பல்லவி
5
ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய
பங்கைக் காப்பவரும் அவரே;
7
எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட
என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது.
8
ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம்
உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். - பல்லவி
9
என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது;
என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.
10
ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; உம் அன்பனைப்
படுகுழியைக் காணவிடமாட்டீர். - பல்லவி
11
வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு
நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும்
பேரின்பம் உண்டு. - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
(திபா 118: 24)
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே;
இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
என் சகோதரர்களிடம் சென்று, அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு
சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 28: 8-15
அக்காலத்தில்
கல்லறையில் இயேசுவைக் காணவந்த பெண்கள் கல்லறையை விட்டு
விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் அச்சமுற்றாலும்
அதே வேளையில் பெருமகிழ்ச்சியுற்றவர்களாய், அவருடைய சீடருக்கு
அறிவிக்க ஓடினார்கள்.
திடீரென்று இயேசு அவர்களை எதிர்கொண்டு வந்து வாழ்த்தினார்.
அவர்கள் அவரைஅணுகி, அவர் காலடிகளைப் பற்றிக்கொண்டு, பணிந்து
நின்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், "அஞ்சாதீர்கள்! என்
சகோதரர்களிடம் சென்று, அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு
சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்" என்றார்.
அவர்கள் போய்க்கொண்டிருந்தபோது காவல் வீரருள் சிலர்
நகரத்திற்குள் சென்று, நிகழ்ந்தவை யாவற்றையும் தலைமைக்
குருக்களுக்கு அறிவித்தனர். அவர்கள் மூப்பர்களுடன் கூடிக்
கலந்து ஆலோசித்து, அப்படைவீரருக்கு மிகுதியாகப் பணம் கொடுத்து,
" "நாங்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது இயேசுவின் சீடர் இரவில்
வந்து அவரது உட லைத் திருடிச் சென்றுவிட்டனர்" எனச்
சொல்லுங்கள். ஆளுநர் இதைக் கேள்வியுற்றால் நாங்கள் அவரை நம்பச்
செய்து நீங்கள் தொல்லைக்கு உள்ளாகாதபடி பார்த்துக்கொள்வோம்"
என்று அவர்களிடம் கூறினார்கள். அவர்களும் பணத்தைப்
பெற்றுக்கொண்டு, தங்களுக்கு அவர்கள் சொல்லிக் கொடுத்தவாறே
செய்தார்கள். இந்நாள்வரை இந்த வதந்தி யூதரிடையே
பரவியிருக்கிறது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
திருத்தூதர் பணிகள் 2: 14, 22-33
"மரணம் அவரைத் தம் பிடியில் வைத்திருக்க முடியவில்லை"
நிகழ்வு
அது ஓர் ஆண்கள் அரசு மேனிலைப்பள்ளி. அந்தப் பள்ளியில் பன்னிரண்டாம்
வகுப்புப் படித்து வந்த கிறிஸ்தவ மாணவன் ஒருவன், ஒருநாள் தலைமையாசிரியரிடம்
சென்று, தன்னுடைய பாட்டி இறந்துவிட்டதாகும் அதற்கு அரைநாள்
விடுப்புத் தருமாறும் கேட்டான். அவன் இவ்வாறு கேட்ட மறுவிநாடி,
அவனை விடுப்பு எடுத்துக் கொள்ளுமாறு சொல்லி, அனுப்பி வைத்தார்
தலைமையாசிரியர்.
மறுநாள் பள்ளிக்கூடத்திற்குத் திரும்பிய அந்தக் கிறிஸ்தவ மாணவனைத்
தலைமையாசிரியர் வழியில் சந்தித்தார். அப்பொழுது அவர் அவனிடம்,
"தம்பி! உனக்கு உயிர்ப்பின்மீது நம்பிக்கை இருக்கின்றதா?" என்று
கேட்டார். "ஆமாம்! எனக்கு உயிர்ப்பின் மீது நூறு விழுக்காடு நம்பிக்கை
இருக்கின்றது" என்றான்.
"அப்படியானால் உனக்கொரு மகிழ்ச்சியான செய்தி சொல்லட்டுமா...?"
என்றார் தலைமையாசிரியர். "அப்படியென்ன மகிழ்ச்சியான செய்தி;
சொல்லுங்கக் கேட்கின்றேன்" என்று மாணவன் தலைமையாசிரியரிடம்
கெஞ்சிக் கேட்டதும், அவர் அவனிடம், "வேறொன்றும் இல்லை தம்பி!
நேற்று உன்னுடைய பாட்டி இறந்துவிட்டதாகச் சொன்னாயே! அந்தப்
பாட்டி, நீ வீட்டுக்குப் போன பின்பு, இங்கு உன்னைத் தேடி வந்தார்!
அவர் இறந்து உயிர்த்துவிட்டார் போலும். அதனால்தான் அவர் இங்கு
வந்தார்" என்றார். மாணவனோ என்ன பதில் சொல்வதென்று தெரியாமல்,
விழிபிதுங்கி நின்றான். ஏனென்றால், அவன் தன்னுடைய பாட்டி இறந்துவிட்டதாகப்
பொய்சொல்லி விடுப்பு எடுத்திருந்தான்.
வேடிக்கையாகச் சொல்லப்பட்ட கதையாக இருந்தாலும், இறந்த ஒருவர்
உயிர்த்தெழுவார் என்ற செய்தியை எடுத்துச் சொல்வதால், இந்தக் கதை
நம்முடைய சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. இன்றைய முதல்வாசகத்தில்
பேதுரு பதினொருவருடன் சேர்ந்து, இயேசு உயிர்த்தெழுந்து
விட்டார் என்று சான்று பகர்வதைக் குறித்து வாசிக்கின்றோம். அதைக்
குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவின் உயிர்த்தெழுதலைக் குறித்துச் சான்று பகரும் பேதுரு
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில்,
பேதுரு பதினொரு சீடர்களோடு சேர்ந்து, ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார்
என்று யூதர்களிடம் சான்று பகர்கின்றார். பேதுரு பதினொருவருடன்
சேர்ந்து யூதர்களிடம் இயேசுவின் உயிர்ப்பைக் குறித்துச் சான்று
பகர்ந்தார் என்பதை, யூதாஸ் இஸ்காரியோத்தின் தற்கொலைக்குப் பின்
ஏற்பட்ட வெற்றிடத்தை, மத்தியாசால் நிரப்பப்பட்டதை (திப 1:
23-24) இங்கு நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.
பேதுரு, யூதர்களிடம் இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார் என்பதை இரண்டு
சான்றுகளால் விளக்குகின்றார். முதல் சான்று, மற்ற சீடர்களோடு
சேர்ந்து தான் அளித்த சான்று. யூதர்களால் கொல்லப்பட்ட இயேசு,
மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த பின்பு தன்னுடைய சீடர்களுக்குத்
தோன்றினார். இதை அடிப்படையாக வைத்துக் கொண்டு, இயேசு உயிர்த்தெழுந்து
விட்டார் என்பதற்கு நாங்கள் சாட்சிகள் என்று பேதுரு
கூறுகின்றார்.
இயேசுவின் உதிர்த்தெழுதலைக் குறித்துத் தாவீது அரசர்
இயேசு உயிர்த்தெழுந்து விட்டார் என்பதற்குச் சான்றாக பேதுரு
யூதர்களிடம் கொடுக்கக்கூடிய இரண்டாவது சான்று, தாவீது அரசரின்
வார்த்தைகளாகும். தாவீது அரசர் திருப்பாடலில், "அவரைப்
பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; அவரது உடல் படுகுழியைக்
காணவிடமாட்டீர்" (திபா 16: 10) என்று கூறியிருப்பார்.
இவ்வார்த்தைகளை அவர் தன்னைக் குறித்து நிச்சயம்
கூறியிருக்கமாட்டார். மாறாக, மெசியாவாம் இயேசுவைக் குறித்தே
கூறியிருப்பார். ஏனென்றால், தாவீது அரசர் இறந்தார்; அவருடைய
கல்லறை அப்படியே இருந்தது. அவர் உயிர்க்கவில்லை; ஆனால்,
ஆண்டவர் இயேசு இறந்தார்; உயிர்த்தார். அதனால்தான் தாவீது அரசர்
தன்னைக் குறித்து அல்ல, மெசியாவைக் குறித்து இவ்வாறு
சொல்லியிருக்கின்றார் என்று பேதுரு, இவ்வார்த்தைகளை மேற்கோள்
காட்டிப் பேசுகின்றார்.
இயேசுவின் உயிர்ப்புக்கு இதைவிடவும் ஒரு முக்கியமான சான்று
இன்றைய முதல் வாசகத்தில் இருக்கின்றது. அதுதான் தூய ஆவியாரின்
வருகை. இயேசு தன்னுடைய சீட்ரகளிடம், "நான் போவாவிட்டால், தூய
ஆவியார் உங்களிடம் வரமாட்டார்" (யோவா 16:7) என்று சொன்னார்.
தூய ஆவியார் சீடர்கள்மீது வந்ததே, இயேசு உயிர்த்தெழுந்து
விட்டார் என்பதற்குச் சான்றாக இருக்கின்றது.
ஆகையால், நாம் இயேசு உயிர்த்துவிட்டார் என்பதை உள்ளூர நம்பி,
சீடர்களைப் போன்று அவருடைய உயிர்ப்புக்குச் சாட்சிகளாகத்
திகழ்வோம்.
சிந்தனை
"கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால், நீங்கள்
கொண்டிருக்கும் நம்பிக்கை பயனற்றதே" (1கொரி 15: 17) என்பார்
புனித பவுல். ஆகையால், நாம் நம்முடைய கிறிஸ்தவ நம்பிக்கைக்கு
ஆதாரமாக இருக்கின்ற இயேசுவின் உயிர்ப்பில் நம்பிக்கை கொண்டு,
அவருடைய உயிர்ப்புக்குச் சாட்சிகளாகத் திகழ்வோம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 28: 8-15
"செல்லுங்கள்; சொல்லுங்கள்"
நிகழ்வு
ஆப்பிரிக்கா மக்களிடம் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியைக் கொண்டு
சென்ற மிகவும் முக்கியமான ஒரு மறைப்பணியாளர் ஸ்டீபன் ஆல்போர்ட்
(Stephen Olford 1918- 2004). இவர் இளைஞனாக இருந்தபொழுது,
இவருடைய பெற்றோர் இவரிடம் மறைப்பணியாளராக மாறவேண்டும் என்று
திரும்பத் திரும்பச் சொன்னார்கள். இவருக்கோ அதில் சிறிதளவுகூட
நாட்டமில்லை. மாறாக, கார் ரேசில் பெரிய ஆளாக வரவேண்டும் என்ற
விருப்பம் இவருக்கு இருந்தது. அதற்காகவே இவர் கடுமையாக
உழைத்தார்.
ஒருநாள் இவர் ஒரு கார் பந்தயத்தில் கலந்துகொண்டு, வண்டியை
வேகமாக ஓட்டிக்கொண்டு போகும்பொழுது, இவர் ஓட்டிச் சென்ற வண்டி,
இன்னொரு வண்டியின்மீது மோதி, சுக்குநூறாக உடைந்தது; இவரோ
வண்டியிலிருந்து தூக்கி வீசப்பட்டார். மருத்துவமனைக்குக்
கொண்டுசெல்லப்பட்ட இவரைச் சோதித்துப் பார்த்த மருத்துவர்கள்,
"இவருக்கு இரண்டு வாரங்கள் கால அவகாசம் தருகின்றோம். இதில்
நாங்கள் எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்கின்றோம். இவர்
உயிர்பிழைத்தால் நல்லது; இல்லையென்றால் எங்களை ஒன்றும்
சொல்லாதீர்கள்" என்று நிபந்தனை விதித்துவிட்டு, சிகிச்சை
அளிக்கத் தொடங்கினர்.
இரண்டு வாரங்களுக்குள்ளாகவே ஸ்டீபன் ஆல்போர்டின் உடலில் நல்ல
முன்னேற்றம் ஏற்பட்டு, உயிர்பிழைத்துக் கொண்டார். அப்பொழுது
இவருடைய தந்தை இவரிடம், "கடவுள் உனக்கு ஒரு வாழ்க்கையைத்தான்
கொடுத்திருக்கின்றார். அந்த வாழ்க்கையை நீ கடவுளுக்குக்
அர்ப்பணித்து வாழ்வதுதான் சிறந்தது" என்றார். இவ்வார்த்தைகளால்
தொடப்பட்ட ஸ்டீபன் ஆல்போர்ட் தன்னுடைய வாழ்க்கையை
இறைப்பணிக்காக அர்ப்பணித்து, ஆப்பிரிக்கக் காண்டத்திற்குச்
சென்று, அங்கிருந்த மக்களுக்கு ஆண்டவருடைய நற்செய்தியை
அறிவித்துப் பலரையும் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளச் செய்தார்.
இந்த நிகழ்வில் வருகின்ற ஸ்டீபன் ஆல்போர்டிற்கு, எப்படி
இவருடைய பெற்றோரால் ஆண்டவருடைய நற்செய்தியை மக்களுக்கு
அறிவிக்கவேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டதோ, அப்படி,
இன்றைய நற்செய்தி வாசகத்தில் உயிர்த்த ஆண்டவர் இயேசு தன்
சீடர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்ற கட்டளையைப்
பிறப்பிக்கின்றார். இந்தக் கட்டளையை நாம் எப்படி நம்முடைய
வாழ்வில் கடைப்பிடிக்கப் போகிறோம் என்பதைக் குறித்து இப்பொழுது
சிந்திப்போம்.
சீடர்களுக்குத் தோன்றிய உயிர்த்த ஆண்டவர் இயேசு
நற்செய்தியில், இறந்த இயேசுவின் உடலுக்கு நறுமணத் தைலம்
பூசுவதற்காக வரும் மகதலா மரியாவும் யாக்கோபின் தாய் மரியாவும்
சலோமியும் (மாற் 16: 1) கல்லறையில் இயேசுவின் உடல் இல்லாததைக்
கண்டு, அச்சத்தோடும் பெருமகிழ்ச்சியோடும் திரும்பிச்
செல்கின்றார்கள். இப்படிப்பட்ட சூழலில் உயிர்த்த ஆண்டவர் இயேசு
அவர்கள் முன் தோன்றி, வாழ்த்திவிட்டு, "அஞ்சாதீர்கள்"
என்கின்றார்.
இயேசு அந்தப் பெண்சீடர்களிடம், "அஞ்சாதீர்கள்" என்று சொன்னது,
நமது சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. ஏனென்றால், கல்லறையில்
இயேசுவின் உடலைக் காணாது, "இயேசுவின் உடலை யாரோ
எடுத்துவிட்டார்கள் போலும்" என்ற அச்சத்தோடுதான் இவர்கள்
இருந்தார்கள்; இவர்கள் இயேசு, தான் சொன்னது போன்று
உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கை இல்லாமல்
இருந்திருக்கக்கூடும். இப்படிப்பட்ட சூழலில்தான் இயேசு
அவர்களைப் பார்த்து "அஞ்சாதீர்கள்" என்று சொல்கின்றார்.
பெண்சீடர்கள் அச்சத்தோடு இருந்தபொழுது, அவர்களைப் பார்த்து
இயேசு எப்படி "அஞ்சாதீர்கள்" என்று சொன்னாரோ, அப்படி, பல்வேறு
காரணங்களால் அஞ்சி வாழ்ந்துகொண்டிருக்கின்ற நம்மையையும்
பார்த்து அவர் "அஞ்சாதீர்கள்" என்று சொல்கின்றார். ஆகையால்,
நாம் இயேசு சொல்லக்கூடிய இவ்வாறுதல் அளிக்கின்ற வார்த்தைகளை
உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு, மனஉறுதியோடு வாழ்வது நல்லது.
செல்லவும் சொல்லவும் பணித்த உயிர்த்த ஆண்டவர் இயேசு
அச்சத்தோடு இருந்த பெண் சீடர்களிடம், "அஞ்சாதீர்கள்" என்று
சொல்லி திடப்படுத்திய இயேசு, அவர்களுக்கு முக்கியமான ஒரு
கட்டளையைத் தருகின்றார். அதுதான், "என் சகோதரர்களிடம் சென்று
அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள்..."
என்பதாகும். இயேசு சொல்லக்கூடிய இக்கட்டளையை வேறு
வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், செல்லவும் சொல்லவும்
என்று சொல்லலாம்.
ஆம், இயேசு தன் சீடர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு
சொல்லியிருந்தார் (மத் 26: 32); அவர்களோ யூதர்களுக்கு அஞ்சி
எருசலேமில் இருந்தார்கள் (லூக் 24: 36). இதனால்தான் இயேசு பெண்
சீடர்களிடம் அவ்வாறு சொல்கின்றார். பெண் சீடர்களும் இயேசு
தங்களுக்குப் பணித்தவாறு, மற்ற சீடர்களிடம் சென்று, இயேசுவைக்
கண்டதையும் அவர் சொன்னதையும் சொல்கின்றார்கள்.
அன்று இயேசு தன் சீடர்களுக்கு கொடுத்த அழைப்பினைப் போன்றுதான்,
இன்று நமக்கும் தருகின்றார். நாம் மக்களிடம் சென்று, இயேசுவைப்
பற்றி சொல்வோம். அவரது உண்மையான சீடர்களாவோம்.
சிந்தனை
"உலகெங்கும் சென்று, படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப்
பறைசாற்றுங்கள்" (மாற் 16: 15) என்பார் இயேசு. நாம் இயேசுவின்
நற்செய்தியைப் படைப்பிற்கெல்லாம் அறிவிப்போம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|