|
|
11
ஏப்ரல் 2020 |
|
|
ஆண்டவருடைய உயிர்ப்பின் பாஸ்கா ஞாயிறு |
=================================================================================
நான்காம் வாசகம்
=================================================================================
என்றுமுள்ள பேரன்பால் உனக்கு இரக்கம்
காட்டுவேன்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 54: 5-14
ஆண்டவர் கூறுவது: உன்னை உருவாக்கியவரே உன் கணவர், `படைகளின் ஆண்டவர்'
என்பது அவர்தம் பெயராம். இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர்; `உலக
முழுமைக்கும் கடவுள்' என அவர் அழைக்கப்படுகின்றார்.
ஏனெனில், கைவிடப்பட்டு மனமுடைந்துபோன துணைவிபோலும், தள்ளப்பட்ட
இளம் மனைவி போலும் இருக்கும் உன்னை ஆண்டவர் அழைத்துள்ளார், என்கிறார்
உன் கடவுள். நொடிப்பொழுதே நான் உன்னைக் கைவிட்டேன்; ஆயினும்
பேரிரக்கத்தால் உன்னை மீண்டும் ஏற்றுக்கொள்வேன். பொங்கியெழும்
சீற்றத்தால் இமைப்பொழுதே என் முகத்தை உனக்கு மறைத்தேன்; ஆயினும்
என்றும் உள்ள பேரன்பால் உனக்கு இரக்கம் காட்டுவேன், என்கிறார்
ஆண்டவர்.
எனக்கு இது நோவாவின் நாள்களில் நடந்ததுபோல் உள்ளது; நோவாவின்
காலத்துப் பெருவெள்ளம் இனி மண்ணுலகின்மேல் பாய்ந்து வராது என்று
நான் ஆணையிட்டேன்; அவ்வாறே உன்மீதும் சீற்றம் அடையமாட்டேன் என்றும்,
உன்னைக் கண்டிக்கமாட்டேன் என்றும் ஆணையிட்டுக் கூறியுள்ளேன்.
மலைகள் நிலை சாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது நான்
கொண்ட பேரன்போ நிலை சாயாது; என் சமாதான உடன்படிக்கையோ அசைவுறாது,
என்கிறார் உனக்கு இரக்கம் காட்டும் ஆண்டவர். துயருற்றவளே,
சூறைக்காற்றால் அலைக்கழிக்கப்பட்டவளே, ஆறுதல் பெறாது தவிப்பவளே,
இதோ, மாணிக்கக் கற்களால் உன் அடித்தளத்தை அமைப்பேன், நீலக் கற்களால்
உன் நிலைக்களத்தை நிறுவுவேன். உன் கால்மாடங்களைச் சிவப்புக் கற்களாலும்,
உன் வாயில்களைப் பளிங்குக் கற்களாலும் உன் மதில்கள் அனைத்தையும்
விலையுயர்ந்த கற்களாலும் கட்டுவேன். உன் குழந்தைகள் அனைவருக்கும்
ஆண்டவர்தாமே கற்றுத்தருவார்; உன் பிள்ளைகள் நிறைவாழ்வு
பெற்றுச் சிறப்புறுவர். நேர்மையில் நீ நீலைநாட்டப்படுவாய்; ஒடுக்கப்பட்ட
நிலை உன்னைவிட்டு அகன்றுபோம்; நீ அஞ்சாதே! திகில் உன்னை அணுகாது.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 30: 1,3. 4-5. 10,11a,12b (பல்லவி: 1a) Mp3
பல்லவி: ஆண்டவரே, உம்மைப் புகழ்வேன்; ஏனெனில் என்னைக்
கைதூக்கிவிட்டீர்.
1 ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக்
கைதூக்கிவிட்டீர்; என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை.
3 ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்;
சாவுக்குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். பல்லவி
4 இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; தூயவராம் அவரை
நினைந்து நன்றி கூறுங்கள். 5 அவரது சினம் ஒரு நொடிப்
பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும்
நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு. பல்லவி
10 ஆண்டவரே, எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்; ஆண்டவரே,
எனக்குத் துணையாய் இரும். 11a நீர் என் புலம்பலைக் களிநடனமாக
மாற்றிவிட்டீர்; 12b என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும்
நன்றி செலுத்துவேன். பல்லவி
|
|