Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   08  ஏப்ரல் 2020  
   புனித வாரம் - புதன்
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 50: 4-9a

நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார்; காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார்; கற்போர் கேட்பதுபோல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார். ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார்.

நான் கிளர்ந்தெழவில்லை; விலகிச் செல்லவுமில்லை. அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை. ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்; என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக்கொண்டேன்; இழிநிலையை நான் அடைவதில்லை என்றறிவேன். நான் குற்றமற்றவன் என எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் அருகில் உள்ளார்.

என்னோடு வழக்காடுபவன் எவன்? நாம் இருவரும் எதிர் எதிரே நிற்போம்; என்மீது குற்றஞ்சாட்டுபவன் எவன்? அவன் என்னை நெருங்கட்டும். இதோ, ஆண்டவராகிய என் தலைவர் எனக்குத் துணை நிற்கின்றார்; நான் குற்றவாளி எனத் தீர்ப்பிட யாரால் இயலும்?

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 69: 7-9. 20-21. 30,32-33 (பல்லவி: திபா69:13b) Mp3
=================================================================================
பல்லவி: கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில்மொழி தாரும்.
7
ஏனெனில், உம் பொருட்டே நான் இழிவை ஏற்றேன்; வெட்கக்கேடு என் முகத்தை மூடிவிட்டது.
8
என் சகோதரருக்கு வேற்று மனிதன் ஆனேன்; என் தாயின் பிள்ளைகளுக்கு அயலான் ஆனேன்.
9
உமது இல்லத்தின்மீது எனக்குண்டான ஆர்வம் என்னை எரித்துவிட்டது; உம்மைப் பழித்துப் பேசினவர்களின் பழிச்சொற்கள் என்மீது விழுந்தன. - பல்லவி

20
பழிச்சொல் என் இதயத்தைப் பிளந்துவிட்டது; நான் மிகவும் வருந்துகின்றேன்; ஆறுதல் அளிப்பாருக்காகக் காத்திருந்தேன்; யாரும் வரவில்லை; தேற்றிடுவோருக்காகத் தேடிநின்றேன்; யாரையும் காணவில்லை.
21
அவர்கள் என் உணவில் நஞ்சைக் கலந்து கொடுத்தார்கள்; என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள். - பல்லவி

30
கடவுளின் பெயரை நான் பாடிப் புகழ்வேன்; அவருக்கு நன்றி செலுத்தி, அவரை மாட்சிமைப்படுத்துவேன்.
32
எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்; கடவுளை நாடித் தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக.
33
ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்; சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை. - பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
எங்கள் அரசரே போற்றப் பெறுக; எங்கள் குற்றம் கண்டு இரக்கம் கொண்டவர் நீர் ஒருவரே.
அல்லது

பரம தந்தைக்குக் கீழ்ப்படிகின்ற எங்கள் அரசரே போற்றப்பெறுக; அடிக்கக் கொண்டு போகப்படும் சாந்தமான செம்மறிபோல நீர் சிலுவையில் அறையப்படக் கொண்டு செல்லப்படுகிறீர்.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மானிடமகன், தம்மைப்பற்றி மறைநூலில் எழுதியுள்ளபடியே போகிறார். ஆனால், ஐயோ! அவரைக் காட்டிக்கொடுக்கிறவனுக்குக் கேடு.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 26: 14-25

அக்காலத்தில்

பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவிடம் வந்து, "இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?" என்று கேட்டான். அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள். அதுமுதல் அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.

புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாளில் சீடர்கள் இயேசுவை அணுகி வந்து, ""நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே ஏற்பாடு செய்யவேண்டும் என விரும்புகிறீர்?" என்று கேட்டார்கள். இயேசு அவர்களிடம், ""நீங்கள் புறப்பட்டு நகருக்குள் சென்று இன்னாரிடம் போய், "எனது நேரம் நெருங்கி வந்துவிட்டது; என் சீடர்களோடு உம் வீட்டில் பாஸ்கா கொண்டாடப்போகிறேன்" எனப் போதகர் கூறுகிறார் எனச் சொல்லுங்கள்" என்றார். இயேசு தங்களுக்குப் பணித்தபடியே சீடர்கள் செயல்பட்டுப் பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.

மாலை வேளையானதும் அவர் பன்னிருவரோடும் பந்தியில் அமர்ந்தார். அவர்கள் உண்டுகொண்டிருந்தபொழுது அவர், "உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார். அப்பொழுது அவர்கள் மிகவும் வருத்தமுற்றவர்களாய், "ஆண்டவரே, அது நானோ?" என ஒவ்வொருவரும் அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள். அதற்கு அவர், "என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவனே என்னைக் காட்டிக்கொடுப்பான். மானிடமகன், தம்மைப்பற்றி மறைநூலில் எழுதியுள்ளபடியே போகிறார். ஆனால், ஐயோ! அவரைக் காட்டிக்கொடுக்கிறவனுக்குக் கேடு; அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாய் இருந்திருக்கும்" என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் ""ரபி, நானோ?" என அவரிடம் கேட்க, இயேசு, ""நீயே சொல்லிவிட்டாய்" என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 எசாயா 50: 4-9

"கிளர்ந்தெழவில்லை; விலகிச் செல்லவுமில்லை"

நிகழ்வு

இளைஞன் ஒருவன் பல ஆண்டுகள் கழித்து, ஊரில் இருந்த தன்னுடைய தாத்தாவின் வீட்டிற்குச் சென்றிருந்தான். அவன் சிறுவனாக இருக்கும்பொழுது, தாத்தா அவனைப் பார்த்திருந்தார். இப்பொழுது அவன் அடையாளமே தெரியாத அளவுக்கு வளர்ந்திருப்பதைக் கண்டு, அவர் மிகவும் வியப்படைந்தார். தாத்தாவும் பேரனும் வாஞ்சையோடு பேசிக்கொண்டிருக்கையில், பேரன் அதாவது, இளைஞன் அற்புதமான ஒரு பாடல் காற்றில் மிதந்து வருவதைக் கேட்டான். முதலில் யாரோ ஒருவர் பாடுகின்றார் போலும் என்று விட்டுவிட்டான். மீண்டும் மீண்டுமாக அதே குரல் காற்றில் மிதந்து வருவதைக் கேட்ட அவன், அக்குரல் எங்கிருந்து வருகின்றது என்று சுற்றும் முற்றும் பார்த்தான். அப்பொழுதுதான் வீட்டின் மூலையில் இருந்த கிளிக்கூண்டிலிருந்த கிளியிடமிருந்து வருவதை அறிந்தான்.

இந்த உண்மையை அறிந்ததும், அவன் தன்னுடைய தாத்தாவிடம், "தாத்தா! இந்தக் கிளி இப்படி அற்புதமாகப் பாடுகின்றதே...! அது எப்படி...?" என்றான். உடனே தாத்தா அவனிடம், "நான் கொடுத்த பயிற்சியினால்தான் இந்தக் கிளி இப்படி அற்புதமாகப் பாடுகின்றது?" என்றார். "கொஞ்சம் புரியும்படியாகச் சொல்லுங்கள்" என்று பேரன் தாத்தாவிடம் கேட்டபொழுது, அவர் அவனிடம், "இந்தக் கிளியை எனக்குத் தெரிந்தவர் ஒருவர் பரிசளித்தார். இதை நான் வீட்டுக்குக் கொண்டுவந்த சில நாள்களிலேயே, இந்த கிளி நாம் என்னென்ன பேசுகின்றோமோ, அதை அப்படியே பேசக்கூடிய கிளி என்பதை உணர்ந்துகொண்டேன். அதனால் இதற்குப் பாடல்கள் கற்றுக்கொடுத்தால், இன்னும் நன்றாக இருக்கும் என்று முடிவுசெய்தேன். அதன்படி இதற்குப் பாடல்கள் கற்றக் கொடுக்கத் தொடங்கினேன்.

பகல் நேரங்களில் இதற்கு நான் பாடல்கள் கற்றுத்தரும்பொழுது வெளியே இருந்து கேட்ட சத்தத்தினால், இதனுடைய கவனம் சிதறுவதை உணர்ந்தார், இதனால் நான் இதற்கு இரவுநேரங்களில், அதுவும் குறிப்பாக வீட்டிலிருக்கின்ற எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டுப் பாடல்கள் கற்றுத்தரத் தொடங்கினேன். தொடக்கத்தில் இது இருட்டைக் கண்டதும் பதறியது; மிகவும் சிரமப்பட்டது. நாள்கள் செல்லச் செல்ல இதற்கு இருட்டுக்கு பழகிவிட்டது. மட்டுமல்லாமல், இதனுடைய முழுக்கவனமும் நான் கற்றுத் தருகின்ற பாடலில் குவிந்தது. இதனால் இதனிடமிருண்டு அற்புதமான பாடல்கள் வரத்தொடங்கின. இன்று இந்தக் கிளி இவ்வளவு அற்புதமாகப் பாடுகின்றது என்றால், அதற்கு முக்கியமான காரணம், இது அனுபவித்த சிரமங்களும் துன்பங்களும்தான்" என்றார்.

இந்த நிகழ்வில் வருகின்ற "அற்புதக் கிளி" அற்புதமாகப் பாடல்கள் பாடியது என்றால், அதற்கு முக்கியமான காரணம், அது அனுபவித்த துன்பங்களும் சிரமங்களும்தான். இன்றைய முதல் வாசகத்தில் குறிப்பிடப்படுகின்ற துன்புறும் ஊழியர், பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றார் எனில், அவர் இறைவனால் உன்னத நிலைக்கு உயர்த்தப்படப் போகிறார் என்பதே அர்த்தம். ஆகவே, துன்புறும் ஊழியனைக் குறித்துச் சொல்லும் இன்றைய முதல் வாசகம், நமக்கு என்ன செய்தியைச் சொல்கின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

துன்பங்களை விருப்பத்தோடு ஏற்றுக்கொண்ட ஊழியர்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், துன்புறும் ஊழியனைக் குறித்த மூன்றாவது பாடலைப் பதிவு செய்கின்றது. மற்ற மூன்று பாடல்களும் கீழ்கண்ட பகுதிகளில் உள்ளன: எசா 42: 1-9; 49: 1-6; 52: 13- 53: 12. இன்றைய முதல் வாசகத்தில் இடம்பெறுகின்ற துன்புறும் ஊழியரைக் குறித்த பாடல், தனக்கு வருகின்ற துன்பங்களைத் துன்புறும் ஊழியர் விருப்பத்தோடு ஏற்றுக்கொள்வதைக் குறித்து வாசிக்கின்றோம். குறிப்பாக இவர் அடிப்போர்க்கு முதுகையும் தாடியைப் பிடுங்குவோர்க்குத் தாடையையும் நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் தன்னுடைய முகத்தை மறைக்காதவராக இருக்கின்றார். இவ்வாறு இவர் தனக்கு வருகின்ற துன்பங்களை விருப்பத்தோடும் அதே நேரத்தில் கீழ்ப்படிதலோடும் ஏற்றுக்கொள்கின்றார் (யோவா 5: 19; பிலி 2:8).

துன்புறும் ஊழியரோடு இருக்கும் ஆண்டவர்

துன்புறும் ஊழியர் தனக்கு வந்த துன்பங்களைப் பொறுமையோடும் விருப்பத்தோடும் கீழ்ப்படிதலோடும் தாங்கிக் கொண்ட அதே வேளையில், இறைவன் தன்னோடு இருக்கின்றார் என்பதை உணர்ந்தவராக இருக்கின்றார். ஆம், இறையடியார்களை இறைவன் ஒருபோதும் கைவிடுவதில்லை. அதைத்தான் இன்றைய முதல் வாசகத்தின் இறுதியில் வரக்கூடிய, "என் தலைவர் எனக்குத் துணை நிற்கின்றார்" என்ற வார்த்தைகள் எடுத்துரைப்பனவாக இருக்கின்றன. நற்செய்தியில் இயேசு கூட, "நான் தனியாய் இருப்பதில்லை; தந்தை என்னோடு இருக்கிறார்" (யோவா 16: 32) என்று இதையேதான் கூறுகின்றார். ஆகையால், இறைப்பணியைச் செய்யக்கூடியவர்கள், பணிவாழ்வில் துன்பங்கள் வருகின்றன என எண்ணாமல், இறைவன் துணையாய் இருக்கின்றார் என்ற உணர்வோடு இறைப்பணியைச் செய்வது நல்லது.

சிந்தனை

அழியக்கூடிய பொன் நெருப்பினால் புடமிடப்படுகிறது. அதைவிட விலையுயர்ந்த உங்கள் நம்பிக்கையும் மெய்ப்பிக்கப்படவே துயருறுகிறீர்கள்" (1 பேது 1:7) என்பார் புனித பேதுரு. ஆகையால், நாம் நம்முடைய நம்பிக்கையின் பொருட்டு வருகின்ற துன்பங்களைப் பொறுமையோடும் விருப்பத்தோடும் தாங்கிக்கொண்டு இறைவனுக்கு உகந்த வழியில் தொடர்ந்து நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மத்தேயு 26: 14-25

யூதாசின் துரோகம்

நிகழ்வு

ஓரூரில் ஷீலா, கலா என்று இரண்டு நெருகிய தோழிகள் இருந்தனர். இருவரும் ஒரே இடத்தில் வேலை பார்த்து வந்தார்கள்.

இருவருடைய வாழ்க்கையும் மிகவும் மகிழ்ச்சியாகப் போய்க்கொண்டிருந்த நேரத்தில், திடீரென்று ஒரு நாள் ஷீலாவின் தாயாருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதாகவும் அவருக்கு உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்யாவிட்டால் பிழைப்பது மிகவும் கடினம் என்று செய்தி வந்தது. இச்செய்தியை அறிந்து ஷீலா மிகவும் உடைந்துபோனாள்.

இப்படிப்பட்ட சூழலில், ஷீலாவின் நெருங்கிய தோழியான கலாதான் அவளைத் தேற்றி, ஆறுதல்சொல்லி, "பணத்தை நான் ஏற்பாடு செய்து தருகின்றேன்; நீ கவலைப்படாமல், உன்னுடைய தாயாருக்கு அறுவைச் சிகிச்சை நடக்க ஏற்பாடு செய்" என்றார். இப்படிச் சொல்லிவிட்டு, கலா தனக்குத் தெரிந்த நண்பர்கள், நலம்விரும்பிகள்... யாவரிடமும் உண்மையைச் சொல்லி, ஒரு பெரிய தொகையை சேகரித்து, அதை ஷீலாவிடம் கொடுத்தார். இதனால் ஷீலாவின் தாயாருக்கு நடந்த அறுவைச் சிகிச்சை நல்லமுறையில் நடந்தது.

இது நடந்து சில நாள்கள் கழித்து, ஷீலா கலாவிடம் சரியாகப் பேசாமல் இருந்தார். "என்ன காரணம்?" என்று கலாவிற்குப் புரியாமல் இருந்தது. அப்பொழுது கலாவிற்குத் தெரிந்த ஒருவர் அவளிடம், "நீ ஷீலாவின் தாயாருடைய பெயரைச் சொல்லி, பலரிடமும் பணம் வாங்கி, அதை அவளிடம் தராமல் மோசடி செய்துவிட்டதாக அவள் எல்லாரிடமும் உன்னைப் பற்றி அவதூறு பரப்பிக்கொண்டு திரிகின்றாள்" என்றார். இதைக் கேட்டு கலா மிகவும் அதிர்ந்து போனாள்.

உடனே கலா ஷீலாவிடம் சென்று, "உன்னுடைய தாயாருக்கு ஓர் ஆபத்து என்று வந்தபொழுது, அதற்கு உதவிசெய்ய நான் பட்டபாடு எனக்குத் தெரியும். அதைக்கூட விட்டுவிடலாம். உன்னுடைய தாயாரின் பெயரைச் சொல்லி, நான் மோசடி செய்ததாக எல்லாரிடமும் என்னைப் பற்றி அவதூறாகப் பேசுகின்றாயே! இதெல்லாம் மிகப்பெரிய துரோகம்! எனக்குப் பணத்தை மோசடி செய்யவேண்டும் என்ற தேவையுமில்லை; யாருடைய பணத்திற்கும் ஆசைபடுகின்றவள் நான் இல்லை" என்று அவளுடைய முகத்தில் அறைந்தாற்போல் சொல்லிவிட்டு, அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.

இந்த நிகழ்வில் வருகின்ற ஷீலா, தனக்கு நல்லது செய்த கலாவைப் பற்றி அவதூறைப் பரப்பி, அவருக்கு எதிராகத் துரோகம் செய்தது போன்று, நற்செய்தியில் இயேசுவோடு இருந்து, அவருக்குத் துரோகம் செய்த, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் இஸ்காரியோத்தைக் குறித்து வாசிக்கின்றோம். யூதாசின் தீச்செயலை நமக்கு என்ன செய்தியைச் சொல்கின்றது என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவை காட்டிக்கொடுப்பதற்கு விலை பேசிய யூதாசு

இன்றைய நற்செய்தியில் யூதாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவிடம் சென்று, இயேசுவைக் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன கிடைக்கும் என்று கேட்கின்றார். இயேசுவோடு மூன்று ஆண்டுகள் கூடவே இருந்து, அவரோடு பணிசெய்த யூதாசுக்கு இயேசுவைக் காட்டிக் கொடுக்க என்ன நோக்கம் இருந்தது என்று திருவிவிலியம் நமக்குச் சொல்லவில்லை; ஆனால், அவர் முப்பது வெள்ளிக்காசுகளுக்காக இயேசுவைக் காட்டிக்கொடுக்க முன் வந்ததை வைத்துப் பார்க்கும், அவர் பணத்தாசை பிடித்தவராக இருந்திருப்பார், அதற்காகத்தான் அவர் இயேசுவைக் காட்டிக்கொடுத்திருப்பார் என்று உறுதியாகச் சொல்லலாம்.

முப்பது வெள்ளிக்காசுகள் என்பது ஓர் அடிமையின் விலை (விப 21:32) இந்தப் பணத்திற்காக யூதாசு இயேசுவைக் காட்டிக்கொடுத்து, மிகப்பெரிய குற்றம் புரிகின்றார்.

தனக்குத் தீமை செய்த யூதாசுக்கும் நன்மை செய்த இயேசு

யூதாசு தன்னைக் காட்டிக்கொடுக்கப்போகிறார் என்று தெரிந்த பின்பும், இயேசு அவரை அன்பு செய்கின்றார். அந்த அன்பின் அடையாளமாகத்தான் பாத்திரத்தில் தொட்டு உன்ன அனுமதிக்கின்றார். பாத்திரத்தில் தொட்டு உண்ணுதல் நட்பின் அடையாளம். ஆம், யூதாசு இயேசுவுக்குத் துரோகம் செய்தார்; இயேசுவோ பதிலுக்கு அவர் மீது அன்பைப் பொழிந்தார்.

நாம் யூதாசைப் போன்று பணத்திற்கு அடிமையாகி, உடன் இருப்பவர்களுக்குத் துரோகம் செய்யாமல், இயேசுவைப் போன்று தீமை செய்பவர்களுக்கும் நன்மை செய்வோம். பகைவரையும் அன்பு செய்வோம். அதன்மூலம் இயேசுவின் உண்மையான சீடர்களாவோம்.

சிந்தனை

"உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்" (மத் 5: 44) என்பார் இயேசு. ஆகையால், இயேசு எப்படி தன் பகைவரையும் தன்னைத் துன்புறுத்தியவரையும் தனக்குத் துரோகம் செய்தவரையும் மன்னித்து, அன்பு செய்தாரோ, அதுபோன்று நாம் நமக்கு எதிராகச் செயல்படுவரை மன்னித்து, அன்பு செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!