|
|
07 ஏப்ரல்
2020 |
|
| புனித
வாரம் செவ்வாய்க்கிழமை |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு
ஒளியாக ஏற்படுத்துவேன்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 49: 1-6
தீவு நாட்டினரே, எனக்குச் செவிகொடுங்கள்; தொலைவாழ் மக்களினங்களே,
கவனியுங்கள்; கருப்பையில் இருக்கும்போதே ஆண்டவர் என்னை அழைத்தார்;
என் தாய் வயிற்றில் உருவாகும்போதே என் பெயர் சொல்லிக்
கூப்பிட்டார். என் வாயைக் கூரான வாள்போன்று ஆக்கினார்; தம்
கையின் நிழலால் என்னைப் பாதுகாத்தார்; என்னைப் பளபளக்கும் அம்பு
ஆக்கினார்; தம் அம்பறாத் தூணியில் என்னை மறைத்துக்கொண்டார்.
அவர் என்னிடம், "நீயே என் ஊழியன், இஸ்ரயேலே! உன் வழியாய் நான்
மாட்சியுறுவேன்" என்றார். நானோ, "வீணாக நான் உழைத்தேன்;
வெறுமையாகவும் பயனின்றியும் என் ஆற்றலைச் செலவழித்தேன்; ஆயினும்
எனக்குரிய நீதி ஆண்டவரிடம் உள்ளது; என் பணிக்கான பரிசு என் கடவுளிடம்
இருக்கின்றது" என்றேன். யாக்கோபைத் தம்மிடம் கொண்டுவரவும், சிதறுண்ட
இஸ்ரயேலை ஒன்றுதிரட்டவும் கருப்பையிலிருந்தே ஆண்டவர் என்னைத்
தம் ஊழியனாக உருவாக்கினார்; ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப்
பெற்றவன்; என் கடவுளே என் ஆற்றல் ; அவர் இப்பொழுது உரைக்கிறார்:
அவர் கூறுவது:
யாக்கோபின் குலங்களை நிலைநிறுத்துவதற்கும் இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத்
திருப்பிக் கொணர்வதற்கும் நீ என் ஊழியனாக இருப்பது எளிதன்றோ?
உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு
ஒளியாகவும் ஏற்படுத்துவேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 71: 1-2. 3-4a. 5-6. 15,17 (பல்லவி: திபா 71:15a)
Mp3
=================================================================================
பல்லவி: என் வாய் நாள்தோறும் உமது மீட்பை எடுத்துரைக்கும்.
1
ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; ஒருபோதும்
நான் வெட்கமுற விடாதேயும்.
2
உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்; எனக்கு நீர்
செவிசாய்த்து என்னை மீட்டுக்கொள்ளும். - பல்லவி
3
என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து
என்னை மீட்டருளும்; ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும்
இருக்கின்றீர்.
4
என் கடவுளே, பொல்லார் கையினின்று என்னைக் காத்தருளும்;
நெறிகேடும் கொடுமையும் நிறைந்தோர் பிடியினின்று என்னைக் காத்தருளும்.
- பல்லவி
5
என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமை முதல் நீரே என்
நம்பிக்கை.
6
பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்; தாய் வயிற்றிலிருந்து
நீர் என்னைப் பிரித்தெடுத்தீர்; உம்மையே நான் எப்போதும் புகழ்ந்து
போற்றுவேன். - பல்லவி
15
என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் நீர் அருளும் மீட்பையும்
எடுத்துரைக்கும்; உம் அருட்செயல்களை என்னால் கணிக்க இயலாது.
17
கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்; இனிவரும்
நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
பரம தந்தைக்குக் கீழ்ப்படிகின்ற எங்கள் அரசரே, போற்றப் பெறுக;
அடிக்கக் கொண்டுபோகப்படும் சாந்தமான செம்மறிபோல நீர்
சிலுவையில் அறையப்படக் கொண்டு செல்லப்படுகிறீர்.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உங்களுள் ஒருவன் என்னைக்
காட்டிக்கொடுப்பான்... நீ மும்முறை என்னை மறுதலிக்குமுன் சேவல்
கூவாது.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 21-33, 36-38
அக்காலத்தில்
தம் சீடர்களுடன் பந்தியமர்ந்த இயேசு உள்ளம் கலங்கியவராய்,
"உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச்
சொல்கிறேன்" என்று திட்டவட்டமாகக் கூறினார். யாரைப்பற்றி அவர்
இப்படிக் கூறினார் என்று தெரியாமல் சீடர்கள் குழப்பமுற்று ஒருவரை
ஒருவர் நோக்கினார்கள்.
இயேசுவின் சீடருள் ஒருவர் அவர் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச்
சாய்ந்திருந்தார். அவர்மேல் இயேசு அன்புகொண்டிருந்தார். சீமோன்
பேதுரு அவருக்குச் சைகை காட்டி, "யாரைப்பற்றிக் கூறுகிறார் எனக்
கேள்" என்றார். இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச்
சாய்ந்திருந்த அவர், "ஆண்டவரே அவன் யார்?" என்று கேட்டார். இயேசு
மறுமொழியாக, "நான் யாருக்கு அப்பத் துண்டைத் தோய்த்துக்
கொடுக்கிறேனோ அவன்தான்" எனச் சொல்லி, அப்பத் துண்டைத்
தோய்த்துச் சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசுக்குக்
கொடுத்தார். அவன் அப்பத் துண்டைப் பெற்றதும் சாத்தான் அவனுக்குள்
நுழைந்தான்.
இயேசு அவனிடம், "நீ செய்ய இருப்பதை விரைவில் செய்" என்றார். இயேசு
ஏன் அவனிடம் இப்படிக் கூறினார் என்பதைப் பந்தியில் அமர்ந்திருந்தோர்
யாரும் புரிந்துகொள்ளவில்லை. பணப்பை யூதாசிடம் இருந்ததால்,
திருவிழாவுக்குத் தேவையானதை வாங்கவோ ஏழைகளுக்கு ஏதாவது கொடுக்கவோ
இயேசு அவனிடம் கூறியிருக்கலாம் என்று சிலர் நினைத்துக்கொண்டனர்.
யூதாசு அப்பத் துண்டைப் பெற்றுக் கொண்டவுடன் வெளியே போனான். அது
இரவு நேரம்.
அவன் வெளியே போனபின் இயேசு, "இப்போது மானிடமகன் மாட்சி
பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சி பெற்றுள்ளார்.
கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால் கடவுளும் தம் வழியாய்
அவரை மாட்சிப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார். பிள்ளைகளே,
இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். நீங்கள் என்னைத்
தேடுவீர்கள். ஆனால் நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது.
இதையே யூதர்களுக்குச் சொன்னேன்; இப்போது உங்களுக்கும்
சொல்கிறேன்" என்றார்.
சீமோன் பேதுரு இயேசுவிடம், "ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர்?" என்று
கேட்டார். இயேசு மறுமொழியாக, "நான் போகுமிடத்திற்கு என்னைப்
பின்தொடர்ந்து வர இப்போது உன்னால் இயலாது; பின்னரே என்னைப்
பின்தொடர்வாய்" என்றார். பேதுரு அவரிடம், "ஆண்டவரே ஏன் இப்போது
நான் உம்மைப் பின்தொடர இயலாது? உமக்காக என் உயிரையும்
கொடுப்பேன்" என்றார். இயேசு அவரைப் பார்த்து, "எனக்காக உயிரையும்
கொடுப்பாயோ? நீ மும்முறை என்னை மறுதலிக்குமுன் சேவல் கூவாது என
உறுதியாக உனக்குச் சொல்கிறேன்" என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
எசாயா 49: 1-6
உலகம் முழுவதும் மீட்பு
நிகழ்வு
ஒருமுறை மிகப்பெரிய மறைப்போதகரான டி.எல்.மூடி தனக்கு முன்பாகத்
திரண்டிருந்த மக்களைப் பார்த்து, "ஓர் ஊரில் இளம்பெண் ஒருத்தி
இருந்தாள். அவளுக்கு நல்ல ஆடைகளை உடுத்துவதற்குக்கூட போதுமான
வசதி கிடையாது. அப்படிப்பட்டவள் திடீரென்று ஆடம்பரமான ஆடை
ஆபரணங்களையும் விலையுயர்ந்த நகைகளையும் அணியத் தொடங்கினாள். இந்த
இளம்பெண்ணின் வாழ்வில் ஏற்பட்ட இப்படிப்பட்ட திடீர் மாற்றத்திற்குக்
காரணமென்ன?" என்று கேட்டார்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைச் சொன்னார்கள். சிலர், "அந்தப்
பெண் திருடியிருக்கவேண்டும்" என்றார்கள். வேறு சிலர்,
"அவளுக்கு லாட்டரியின் மூலம் பணம் கிடைத்திருக்கும்" என்றார்கள்.
மற்றும் சிலர், "குறுக்கு வழியில் அவள் பணம் சம்பாதித்திருப்பார்கள்"
என்றார்கள். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைச் சொல்லி
முடித்தபின்பு, டி.எல்.மூடி இவ்வாறு சொன்னார்:
"அந்த இளம்பெண்ணை அந்நாட்டு அரசர் உயிருக்குயிராய்க் காதலித்தார்.
அவர் அந்த இளம்பெண்ணிடம் தன்னுடைய காதலைச் சொல்ல, இவர் ஏற்றுக்கொண்டார்.
இதனால் அந்த இளம்பெண் அந்நாட்டு அரசரின் உடைமைக்கெல்லாம் அதிபதி
ஆனாள். அதனால்தான் அவளால் விலையுயர்ந்த ஆடைகளையும் நகைகளையும்
அணிய முடித்தது. கடவுளும்கூட நம்மீது பேரன்பு கொண்டு நம்மைத்
தேடி வருகின்றார். நாம் அவரை, அவருடைய அன்பை ஏற்றுக்கொண்டோமெனில்,
அவரிடமிருந்து மீட்பையும் எல்லாவிதமான ஆசிகளைப்
பெற்றுக்கொள்வோம்."
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம்,
ஆண்டவராகிய கடவுள், உலகம் முழுவதும் மீட்பை அடைய, தன் ஊழியரைப்
பிற இனத்தாருக்கு ஒளியாக ஏற்படுத்தியதைக் குறித்து எடுத்துச்
சொல்கின்றது. கடவுள் தருகின்ற மீட்பை எப்படி அடைவது என்பதைக்
குறித்தும் இறைஊழியரைக் குறித்தும் இப்பொழுது நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
கருப்பையில் இருக்கும்போதே ஆண்டவர் இறைஊழியரை அழைத்தல்
இன்றைய முதல் வாசகமானது இறைஊழியரைப் பற்றி அல்லது துன்புறும்
ஊழியரைப் பற்றிய, இறைவாக்கினர் எசாயா நூலில் இடம்பெறுகின்ற
நான்கு பாடல்களுள் ஒன்றாக இருக்கின்றது. இந்த ஊழியர் இறைவாக்கினர்
எசாயாவாகவும் இருக்கலாம், மெசியாவாம் இயேசுவுவாகவும் இருக்கலாம்
என்று சொல்லப்படுகின்றது. இது ஒருபக்கம் இருக்க, இந்த இறை ஊழியரைப்
பற்றிச் சொல்லப்படுகின்ற முதன்மையான செய்தி, கருப்பையில் இருக்கும்போதே,
அல்லது தாயின் வயிற்றில் உருவாக்கும்போதே கடவுளை அவரை அழைத்தார்
என்பதாகும். கடவுள் இறைஊழியரைக் கருப்பையில் இருக்கும்போதே அழைத்தார்
எனில், அவர் இறைஊழியராக இருந்தாலும், மனிதராகப் பிறந்தார் என்று
மறைமுகமாகச் சொல்லப்படுகின்றது. இயேசு இறைமகனாக இருந்தாலும்,
ஒரு பெண்ணின் வழியாகப் பிறந்தார் என்பதை இங்கு நாம் இணைத்துப்
பார்த்துக்கொள்ளலாம்.
சிதறுண்ட மக்களை ஒன்று திரட்ட இறைஊழியர் அழைக்கப்படல்
தாயின் கருப்பையில் இருக்கும்போதே, இறைவன் இறைஊழியரை அழைத்தார்
எனில், அவரை ஒரு சிறப்பான பணிக்காக அழைத்தார் என்றுதான் சொல்லவேண்டும்.
அதுதான் யாக்கோபைத் தம்மிடம் கொண்டு வரவும் சிதறுண்ட மக்களை ஒன்றுதிரட்டுவதுமாகும்.
இவ்வார்த்தைகளை இயேசுவோடு அப்படியே பொருத்திப் பார்த்தால்
பொருள் விளங்கும். இயேசு தன்னுடைய பணிவாழ்வின் மூலம், தன்னுடைய
பாடுகளின்மூலம் இரு இனத்தவரையும் ஓருடலாக்கி கடவுளோடு ஒப்புரவாக்கினார்
(எபே 2: 16). இவ்வாறு இயேசு பல்வேறு காரணங்களால் சிதறுண்ட மக்களை
ஒன்றுதிரட்டி அவர்களை ஓருடலாக்கினார்.
உலகம் முழுவதும் இறைவன் தரும் மீட்பினைக் காண இறைஊழியர் அழைக்கப்படல்
இறைஊழியர் இன்னொரு காரணத்திற்காகவும் இறைவனால் அழைக்கப்பட்டார்
என்று முதல் வாசகம் எடுத்துச் சொல்கிறது. அதுதான் உலகம்
முழுவதும் மீட்பினைக் காணவேண்டும் என்பதாகும்.
யூதர்கள் தாங்கள்தான் மீட்புப் பெறத் தகுதியுடையவர்கள் என்று
நினைத்துக்கொண்டிருந்தார்கள் (லூக் 13: 23). உண்மையில்,
யூதர்கள் மட்டுமல்ல, எல்லாரும் மீட்புப் பெறவேண்டும்
என்பதுதான் இறைவனுடைய திருவுளம். இதற்காக அவர் தன்னுடைய ஊழியரை
பிற இனத்தாருக்கு ஒளியாக ஏற்படுத்தி, யூதர்கள் மட்டுமல்லாது,
எல்லா மக்களும் தான் வழங்கும் மீட்பினை அடைவதற்கு
வழிவகுக்கின்றார். இறை ஊழியரும் இயேசுவும் எல்லா மக்களும்
மீட்பு அடைவதற்கு வழிவகை செய்கின்றார்.
கடவுள் எல்லா மக்களுக்கும் மீட்பினை வழங்கத் தயாராக
இருக்கின்றார் என்றால், நாம் அதைப் பெற்றுக்கொள்வதற்கு அவருடைய
வழியில் நடப்பதே சாலச் சிறந்த ஒன்று. எனவே, நாம் அவர் தருகின்ற
மீட்பினைப் பெற அவருக்கு ஏற்ற வழியில் நடக்க முயற்சி செய்வோம்.
சிந்தனை
"எல்லார் மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை அறிந்துணரவும்
வேண்டுமென அவர் விரும்புகிறார்" (1 திமொ 2: 4) என்பார் புனித
பவுல். ஆகையால், நாம் அனைவரும் மீட்புப் பெற விரும்பும்
இறைவனிடம் நம்முடைய குற்றங்களை உணர்ந்து, திரும்பி வருவோம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
யோவான் 13: 21-33, 36-38
"நீ மும்முறை என்னை மறுதலிப்பாய்"
நிகழ்வு
"இயேசுவின் பின்னால் நானும் செல்வேன். திரும்பிப் பார்க்க
மாட்டேன்" என்ற கிறிஸ்தவப் பக்திப் பாடலுக்குப் பின்னால்
இருக்கக்கூடிய உண்மை நிகழ்வு.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதில் தென்னிந்தியாவில் ஒரு
கிறிஸ்தவக் குடும்பம் இருந்தது. இக்குடும்பத்தில் இருந்த
எல்லாரும் கிறிஸ்துவின்மீது ஆழமான நம்பிக்கை
கொண்டிருந்தார்கள். இது அவ்வூரில் இருந்த யாருக்கும் பிடிக்கவே
இல்லை. இதனால் அவ்வூர்த் தலைவர் கிறிஸ்தவக் குடும்பத்
தலைவரிடம் சென்று, "உங்கள் குடும்பத்தில் இருக்கின்ற எல்லாரும்
கிறிஸ்துவை மறுதலித்துவிட்டு, நாங்கள் வழிபடுகின்ற கடவுளை
வழிபடவேண்டும்; இல்லையென்றால் கொல்லப்ப்படுவீர்கள்" என்று
மிரட்டினார். அதற்கு அந்தக் கிறிஸ்தவர், "எங்களுடைய உயிரே
போனாலும் பரவாயில்லை; நாங்கள் ஒருபோதும் கிறிஸ்துவை
மறுதலிக்கமாட்டோம்" என்றார்.
இதைக்கேட்டு சீற்றம்கொண்ட ஊர்த்தலைவர் தன்னிடம் இருந்த வாளை
எடுத்து, அந்தக் கிறிஸ்தவரின் பிள்ளைகள் இருவரைக்
கொன்றுபோட்டார். கிறிஸ்தவர் இதைக் கண்டு அஞ்சாமல், "இயேசுவின்
பின்னால் நானும் செல்வேன்; திரும்பிப் பார்க்கமாட்டேன்" என்ற
வரிகளைப் பாடலாகப் பாடத் தொடங்கினார். இதைக் கண்டு இன்னும்
சீற்றம் கொண்ட ஊர்த்தலைவர், "உனக்கு இன்னொரு வாய்ப்புத்
தருகின்றேன். இயேசுவை மறுதலித்துவிட்டு, நாங்கள் வழிபடக்கூடிய
கடவுளை வழிபடு. அப்படிச் செய்தால் உன் மனைவியையும் உன்னையும்
உயிரோடு விட்டுவிடுக்றேன்" என்றார். கிறிஸ்துவரோ அதற்கெல்லாம்
அஞ்சாது, தன்னுடைய நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்தார்.
இதனால் ஊர்த்தலைவரோ தன்னிடம் இருந்த வாளை எடுத்து, அந்தக்
கிறிஸ்தவரின் மனைவியை வெட்டிக்கொன்றார்.
அப்பொழுதும்கூட கிறிஸ்தவர் சிறிதும் கலக்கமுறாமல், "இயேசுவின்
பின்னால் நானும் செல்வேன்..." என்ற வரிகளை பாடிக்கொண்டே
இருந்தார். இதைப் பார்த்த ஊர்த்தலைவர், "கடைசியாக உனக்கொரு
வாய்ப்புத் தருகிறேன். நீ கிறிஸ்தவை மறுதலித்துவிட்டால், உன்னை
உயிரோடு விட்டுவிடுகிறேன்" என்றார். அந்நேரத்திலும்கூட,
கிறிஸ்தவர் தன்னுடைய நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்தார்.
இதனால் ஊர்த்தலைவர் தன்னிடம் இருந்த வாளை எடுத்து அவரை
வெட்டிக்கொன்றார்.
இதற்குப் பின்பு கிறிஸ்தவர் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த
காட்சியைக் கண்டபொழுது, ஊர்த்தலைவரின் மனசாட்சி
உலுக்கப்பட்டது. அவர் சிந்திக்கத் தொடங்கினார்: "இந்த மனிதர்
தன்னுடைய பிள்ளைகள், மனைவி தன் கண்முன்னால் கொல்லப்பட்டபோதும்,
கடைசியில் இவருடைய உயிர்போனதும்கூட கிறிஸ்துவை
மறுதலிக்கவில்லையே! அப்படியானால் இவர் நம்புகின்ற கிறிஸ்து
உண்மையான கடவுளாகத்தான் இருக்கமுடியும்!" இதற்குப் பின்பு
ஊர்த்தலைவர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவினார். அவரோடு சேர்ந்து,
அவ்வூரில் இருந்த எல்லாரும் கிறிஸ்துவ மதத்திற்குத்
திரும்பினார்கள்.
இது நடந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு அவ்வூருக்கு வந்த ஒரு
மறைப்பணியாளர் ஊர் முழுவதும் கிறிஸ்தவர்களாக இருப்பதை கண்டு
மிகவும் வியந்துபோய், ஊரில் இருந்த ஒருவரிடம் காரணத்தைக்
கேட்க, அவர் நடந்த அனைத்தையும் சொல்ல, மறைப்பணியாளர்,
"இயேசுவின் பின்னால் நானும் செல்வேன்..." என்ற பாடலைப்
பதிவுசெய்துகொண்டு, 1959 ஆண்டு, "Assembly Songbook" என்பதில்
இணைத்தார். அப்பாடல் பின்னாளில் மிகவும் பலமானது. (ஆதாரம்
Christian family in India killed while singing "I have
decided to follow Jesus Libby Giesbrecht, 2019)
கிறிஸ்துவை மறுதலிக்கவில்லை என்றால், குடும்பத்தில் இருக்கின்ற
எல்லாரோடும் சேர்த்து, தானும் கொல்லப்படுவோம் என்று
தெரிந்தும்கூட, கிறிஸ்துவின்மீது ஆழமான நம்பிக்கைக்
கொண்டிருந்த அந்தக் கிறிஸ்தவரின் செயல் உண்மையில்
பாராட்டுக்குரியது. நற்செய்தியில் பேதுரு தன்னை மும்முறை
மறுதலிக்கப் போவதாக இயேசு முன்னறிவிக்கின்றார். அது குறித்து
நாம் சிந்தித்து, நம்முடைய நம்பிக்கை எப்படி இருக்கவேண்டும்
எனபதையும் சிந்திப்போம்.
பேதுரு மும்முறை மறுதலிக்கப் போவதாக அறிவித்த இயேசு
இன்றைய நற்செய்தியின் இரண்டாவது பகுதியில், "நான்
போகுமிடத்திற்கு என்னைப் பின்தொடர்ந்து வர இப்போது உன்னால்
முடியாது" என்று இயேசு பேதுருவிடம் சொல்கின்றபொழுது, அவர்,
"உமக்காக என் உயிரையும் கொடுப்பேன்" என்பார். அப்பொழுது இயேசு
அவரிடம், "எனக்காக உயிரையும் கொடுப்பாயா? நீ மும்முறை என்னை
மறுதலிக்குமுன் சேவல் கூவாது" என்பார்.
இயேசு சொன்னதுபோன்று, பேதுரு இயேசுவை மும்முறை மறுதலித்தார்
(மத் 26: 69-75; மாற் 14: 66-72; லூக் 22: 54-62). பேதுரு
இயேசுவை மறுதலிக்க முக்கியமான காரணம், உயிர் பயம். "இயேசுவைத்
தனக்குத் தெரியும் என்று தன்னிடம் கேள்வி கேட்டவர்களிடம்
சொன்னால், எங்கே தன்னுடைய உயிர் போய்விடுவோ" என்று பேதுரு
அஞ்சினார். அதனால்தான் அவர் இயேசுவை மறுதலித்தார். பின்னாளில்
அவர் தன் பாவங்களுக்காக மனம்வருந்தி, கண்ணீர் சிந்தி,
இயேசுவுக்காக உயிரையும் தந்தது, அது ஒருபுறம் இருந்தாலும்,
உயிருக்கு அஞ்சி இயேசுவை மறுதலித்தது, நம்முடைய வாழ்வை
தன்னாய்வுக்கு உட்படுத்திப் பார்க்க அழைக்கின்றது. இன்றைக்குப்
பலர் உயிருக்குப் பயந்து இயேசுவை மறுதலிப்பதைக் காண
முடிகின்றது. இப்படிப்பட்ட சூழலில் நாம் உயிருக்குப் பயந்து
இயேசுவை மறுதலிக்கின்றோமா? அல்லது இயேசுவின்மீது கொண்ட
நம்பிக்கைக்காக, அவருக்காக உயிரையும் தர முன்வருகின்றோமா?
சிந்திப்போம்.
சிந்தனை
"இறுதிவரை மனஉறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர்" (மத் 24:
13) என்பார் இயேசு. ஆகையால், நாம் எத்தகைய சவால் வரினும்,
இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கையிலிருந்து பிறழாமல், அவர்மீது
உறுதியான நம்பிக்கையோடு இருப்ப்போம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|