|
|
31
ஆகஸ்ட் 2020 |
|
பொதுக்காலம்
22ஆம் வாரம்
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
எல்லா வகையிலும் செல்வர்கள் ஆனீர்கள்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய
முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-9
கொரிந்து நகரிலுள்ள கடவுளின் திருச்சபைக்கு அவர் திருவுளத்தால்
கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனாக அழைக்கப்பட்ட பவுலும் சகோதரராகிய
சொஸ்தேனும் எழுதுவது: இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பெற்றுத்
தூயோராக்கப்பட்டு இறைமக்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ள உங்களுக்கும்,
எல்லா இடங்களிலும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிக்கையிடும்
யாவருக்கும், நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு
கிறிஸ்துவிடமிருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக! இயேசு
கிறிஸ்து நமக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர்.
கிறிஸ்து இயேசுவின் வழியாக நீங்கள் பெற்றுக் கொண்ட இறையருளை
முன்னிட்டு உங்களை நினைத்து என் கடவுளுக்கு என்றும் நன்றி
செலுத்துகிறேன். ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பெற்றுச்
சொல்வன்மையும் நிறையறிவும் பெற்று, எல்லா வகையிலும் செல்வர்கள்
ஆனீர்கள். மேலும் கிறிஸ்துவைப் பற்றிய சான்று உங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்காகக் காத்திருக்கும்
உங்களுக்கு அருட்கொடை எதிலும் குறையே இல்லை. நம் ஆண்டவர் இயேசு
கிறிஸ்து வெளிப்படும் நாளில் நீங்கள் குறைச் சொல்லுக்கு ஆளாகாதிருக்க
அவர் உங்களை இறுதிவரை உறுதிப்படுத்துவார். கடவுள் நம்பிக்கைக்கு
உரியவர்; தம் மகனும் நம் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நட்புறவில்
பங்கு பெற உங்களை அவர் அழைத்துள்ளார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 145: 2-3. 4-5. 6-7 . (பல்லவி: 1) Mp3
=================================================================================
பல்லவி: என் கடவுளே, உமது பெயரை எப்பொழுதும் போற்றுவேன்.
2
நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும்
புகழ்வேன்.
3
ஆண்டவர் மாண்புமிக்கவர்; பெரிதும் போற்றுதலுக்கு உரியவர்; அவரது
மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது. - பல்லவி
4
ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு உம் செயல்களைப் புகழ்ந்துரைக்கும்;
வல்லமைமிகு உம் செயல்களை எடுத்துரைக்கும்.
5
உமது மாண்பின் மேன்மையையும் மாட்சியையும் வியத்தகு உம் செயல்களையும்
நான் சிந்திப்பேன். - பல்லவி
6
அச்சந்தரும் உம் செயல்களின் வல்லமையைப் பற்றி மக்கள் பேசுவார்கள்;
உமது மாண்பினை நான் விரித்துரைப்பேன்.
7
அவர்கள் உமது உயர்ந்த நற்பண்பை நினைந்து கொண்டாடுவார்கள்; உமது
நீதியை எண்ணி ஆர்ப்பரித்துப் பாடுவார்கள். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
மத் 24: 42a, 44
அல்லேலூயா, அல்லேலூயா! விழிப்பாய் இருங்கள்; ஆயத்தமாய் இருங்கள்.
ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
ஆயத்தமாய் இருங்கள். நீங்கள் நினையாத நேரத்தில்
மானிடமகன் வருவார்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து
வாசகம் 24: 42-51
அக்காலத்தில்
இயேசு தம் சீடரிடம் கூறியது: "விழிப்பாய் இருங்கள்; ஏனெனில் உங்கள்
ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது. இரவில்
எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத்
தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார்
என்பதை அறிவீர்கள். எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில்
நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.
தம் வீட்டு வேலையாள்களுக்கு வேளாவேளை உணவு பரிமாறத் தலைவர் அமர்த்திய
நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான பணியாளர் யார்? தலைவர்
வந்து பார்க்கும்போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர்.
அவர் பேறுபெற்றவர். அவரைத் தம் உடைமைகளுக்கெல்லாம் அதிகாரியாக
அவர் அமர்த்துவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
அப்பணியாள் பொல்லாதவனாய் இருந்தால், தன் தலைவர் வரக் காலந்
தாழ்த்துவார் எனத் தம் உள்ளத்தில் சொல்லிக் கொண்டு, தன் உடன்பணியாளரை
அடிக்கவும் குடிகாரருடன் உண்ணவும் குடிக்கவும் தொடங்குவான். அப்பணியாள்
எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வருவார்.
அவர் அவனைக் கண்டந்துண்டமாய் வெட்டி வெளிவேடக்காரருக்கு உரிய
இடத்திற்குத் தள்ளுவார். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்."
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
1 கொரிந்தியர் 1: 1-9
"இயேசு கிறிஸ்து நமக்கு மட்டுமல்ல அல்ல,
அனைவருக்கும் ஆண்டவர்"
நிகழ்வு
மெத்தோடிஸ்ட் திருஅவையை நிறுவியவர் இங்கிலாந்து நாட்டைச்
சார்ந்த ஜான் வெஸ்லி (1703-1791). ஒருநாள் இவர் ஒரு கனவு கண்டார்.
அந்தக் கனவில் இவர் பாதாளத்தின் வாயிலுக்கு முன்பாக, அதாவது
நரகத்தின் வாயிலுக்கு முன்பாக நின்றார்.
பாதாளத்தின் வாயிலுக்கு முன்பாகக் காவலாளி ஒருவர் இருந்தார்.
ஜான் வெஸ்லி அந்தக் காவலாளியிடம், "இங்குக் கத்தோலிக்கர்கள் இருக்கின்றார்களா?"
என்றார். "ஆம். பலர் இருக்கின்றார்கள்" என்றார் அந்தக் காவலாளி.
"ஆங்கிலிக்கன் திருஅவைச் சார்ந்தவர்கள் இங்கு இருக்கின்றார்களா?"
என்று அவர் அடுத்த கேள்வியைக் கேட்டார். "ஆம். பலர் இருக்கின்றார்கள்"
என்றார் காவலாளி. ஜான் வெஸ்லி விடாமல் அவரிடம், "லூத்தரன் திருஅவையைச்
சார்ந்தவர்கள்... பாப்டிஸ்ட் திருஅவையைச் சார்ந்தவர்கள்...ஆர்த்தோடாக்ஸ்
திருஅவையைச் சார்ந்தவர்கள்... ஆகியோரெல்லாம் இங்கு இருக்கின்றார்களா?"
என்றார். "ஆம். நீங்கள் சொன்ன திருஅவையிலிருந்து பலர் இங்கு இருக்கின்றார்கள்"
என்றார் காவலாளி.
"சரி, கடைசியாக ஒரு கேள்வி. இந்தக் கேள்விக்கு நீங்கள் பதில்
சொல்லிவிட்டால், இனிமேல் கேள்வியே கேட்கமாட்டேன்" என்று
சொல்லிவிட்டு ஜான் வெஸ்லி அவரிடம், "இங்கு மெத்தோடிஸ்ட் திருஅவையிலிருந்து
யாராவது இருக்கின்றார்களா?" என்றார். அதற்கு அந்தக் காவலாளி,
"ஆம். மெத்தோடிஸ்ட் திருஅவையிலிருந்தும் இங்குப் பலர் இருக்கின்றார்கள்"
என்றார். இதைக் கேட்ட ஜான் வெஸ்லிக்குத் தூக்கிவாரிப் போட்டது.
பின்னர் அவர் விண்ணகத்தின் வாயிலுக்கு முன்பாக வந்தார். அங்கிருந்த
பேதுருவிடம், "இங்குக் கத்தோலிக்கர்கள இருக்கின்றார்களா?" என்றார்.
"அப்படி யாரும் இங்குக் கிடையாது" என்றார் பேதுரு.
"ஆங்கிலிக்கன், லூத்தரன், பாப்டிஸ்ட், ஆர்த்தோடாக்ஸ் ஆகிய திருஅவையைச்
சார்ந்தவர்கள் இருக்கின்றார்களா?" என்று ஜான் வெஸ்லி கேட்டதற்கு,
"அவர்கள் யாரும் இங்குக் கிடையாது" என்றார் பேதுரு. "சரி,
மெத்தோடிஸ்ட் திருஅவையைச் சார்ந்தவர்கள் யாராவது இங்கு இருக்கின்றார்களா?"
என்று ஜான் வெஸ்லி கேட்டதற்குப் பேதுரு, "அப்படி யாரும் இங்குக்
கிடையாது" என்றார் பேதுரு.
இதனால் பொறுமையிழந்த ஜான் வெஸ்லி, "இங்குக் கத்தோலிக்கர், ஆங்கிலிக்கன்
திருஅவையைச் சார்ந்தவர், லூத்தரன் திருஅவையைச் சார்ந்தவர்,
பாப்டிஸ்ட் திருஅவையைச் சார்ந்தவர்... மெத்தோடிஸ்ட் திருஅவையைச்
சார்ந்தவர் என யாருமே இல்லையென்றால், யார்தான் இங்கு இருக்கின்றார்?"
என்றார். இதற்குப் பேதுரு மிகவும் பொறுமையாக அவரிடம்,
"கத்தோலிக்கர், ஆங்கிலிக்கன் திருஅவையைச் சார்ந்தவர், லூத்தரன்
திருஅவையைச் சார்ந்தவர், பாப்டிஸ்ட் திருஅவையைச் சார்ந்தவர்...
மெத்தோடிஸ்ட் திருஅவையைச் சார்ந்தவர் என்று பிரித்துப் பார்ப்பதற்கு
இது ஒன்றும் பாதாளம் கிடையாது; விண்ணகம். விண்ணகத்தில் எந்தவொரு
வேறுபாடும் கிடையாது. இங்கு எல்லாருக்கும் இடமுண்டு. இங்கிருக்கின்ற
எல்லாரும் கடவுளின் மக்கள். ஏனெனில், கடவுள் எல்லாருக்கும்
பொதுமானவர்" என்றார்.
மண்ணகத்திலும் பாதாளத்திலும் வேண்டுமானால் வேறுபாடு இருக்கலாம்;
ஆனால், விண்ணகத்தில் எந்தவொரு வேறுபாடும் கிடையாது. ஏனெனில் எல்லாரும்
கடவுளின் மக்கள்; கடவுள் எல்லாருக்கும் பொதுவானவர் என்ற உண்மையை
எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு அல்லது கதை நமது சிந்தனைக்குரியது.
இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல், கிறிஸ்து நமக்கு மட்டும்
அல்ல, அனைவருக்கும் ஆண்டவர் என்கின்றார். புனித பவுல் சொல்லக்கூடிய
இச்சொற்களின் பொருள் என்ன என்று இப்பொழுது நாம் சிந்தித்துப்
பார்ப்போம்.
ஆண்டவருக்கும் ஆண்டவரான இயேசு
தனது வழக்கமான வாழ்த்துச் செய்திகளோடு திருஅவைகளுக்குக் கடிதம்
எழுதும் புனித பவுல், கிரேக்க நாட்டின் தென்பகுதியில் இருந்த,
பலதரப்பட்ட மக்களைக் கொண்ட கொரிந்து நகரத் திருஅவைக்கு கடிதம்
எழுதுகின்றபொழுதும், "தந்தையாம் கடவுளிடமிருந்தும், ஆண்டவர் இயேசு
கிறிஸ்துவிடமிருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக!" என்றே
எழுதுகின்றார்.
இந்த வாழ்த்துச் செய்தியை அவர் எழுதிவிட்டு, "இயேசு கிறிஸ்து
நமக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர்" என்று எழுதுகின்றார்.
புனித பவுல் எழுதும் இவ்வார்த்தைகள் நமது ஆழமான சிந்தனைக்குரியவையாக
இருக்கின்றன. இயேசு அனைவருக்கும் ஆண்டவர் என்றால், அவர் எல்லாருக்கும்
பொதுவானவர் என்றுதானே பொருள். இப்படி அனைவருக்கும் ஆண்டவராக இருக்கும்
இயேசு, எல்லாரும் மீட்புப் பெற விரும்புகின்றார் (1திமொ 2:4).
அப்படியானால், அனைவருக்கும் ஆண்டவராக இயேசுவின் வழியில் நடக்கும்
ஒவ்வொருவரும் தங்களிடம் இருக்கின்ற வேறுபாட்டைக் களைந்து
கிறிஸ்துவில் ஓரிடலாக (1 கொரி இணைந்து வாழ்வதுதானே நல்லது. ஆனால்,
இன்றைக்குப் பலர் கிறிஸ்தவர்களாக இருந்துகொண்டு மக்களை வேறுபடுத்தியதும்,
மக்களிடம் பிளவை உண்டாக்கியும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார். இப்படிப்பட்டவர்கள்
கிறிஸ்துவர்கள் என்று அழைக்கப்படத் தகுதியற்றவர்கள்.
ஆகையால், அனைவருக்கும் ஆண்டவராக இருக்கும் இயேசுவின் வழிநடக்கும்
நாம், மக்களிடம் பிளவை ஏற்படுத்தாமல், ஒற்றுமை ஏற்படுத்தி,
கிறிஸ்துவில் ஓருடலாக வாழ முயற்சி செய்வோம்.
சிந்தனை
"இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும்
உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை; ஆண் என்றும் பெண் என்றும்
வேறுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும்
ஒன்றாய் இருக்கிறீர்கள"(கலா 3: 28) என்பார் புனித பவுல். ஆகையால்,
நாம் இயேசு அனைவருக்கும் ஆண்டவர் என்ற உண்மையை உணர்ந்தவர்களாய்,
நம்மிடம் இருக்கின்ற வேறுபாடுகளைக் களைந்துவிட்டு,
கிறிஸ்துவில் ஒன்றாய் இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 24: 42-51
"விழிப்பாய் இருங்கள்"
நிகழ்வு
முன்பொரு காலத்தில் ஜாஸ்பர் என்றொரு வணிகர் இருந்தார். இவர் பட்டு,
நறுமணப் பொருள்கள், வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றைக் குறைந்த
விலைக்கு வாங்கி அவற்றை பெரிய விலைக்கு விற்று, அதன்மூலம்
மிகுந்த இலாபம் அடைந்து வந்தார். இதனால் இவர் பல நாடுகளையும்
சுற்றி வந்தார்கள்; பல மனிதர்களும் இவருக்கு அறிமுகமானார்கள்.
ஒருநாள் இவர் ஒரு நகருக்குச் சென்றிருந்தபொழுது, அங்கிருந்தவர்கள்
இவரிடம், "இங்கொரு பெரியவர் இருக்கின்றார். அவரிடம் நீங்கள் என்ன
கேள்வி கேட்டாலும், அதற்கான பதிலை அவர் சொல்வார். அவரிடம் நீங்கள்
உங்கள் தொழில் நிமித்தமாக ஏதாவது கேட்டுப் பாருங்கள். நிச்சயம்
பயனுள்ள தகவல்களை அவர் தருவார்" என்றார். ஜாஸ்பரும் அதற்குச்
சரியென்று என்று சொல்லிவிட்டு, அந்தப் பெரியவரைப் போய்ப்
பார்த்து, தான் யார் என்பதையும், தான் செய்யும் தொழில் என்ன என்பதையும்,
தான் அவரிடம் வந்த நோக்கம் என்ன என்பதையும் எடுத்துச்
சொன்னார்.
அப்பொழுது பெரியவர் அவரிடம், "நீ இமயமலைச் சரிவில் உள்ள ஓர்
இடத்திற்குப் போ. அங்கு சென்றால், நீ எதிர்பார்ப்பதை விடவும்
விலையுயர்ந்த பொருள்கள் கிடைக்கும்" என்றார். உடனே ஜாஸ்பர் அந்தப்
பெரியவருக்கு நன்றி சொல்லிவிட்டு, அவர் குறிப்பிட்ட இடத்திற்குச்
சென்று, விலையுயர்ந்த பொருள்களைத் தேடித் பார்த்தார். நேரம்
கடந்தது. ஒருநாள், இரண்டு நாள், மூன்று நாள் என்று நாள்கள் கடந்தனவே
ஒழிய, ஜாஸ்பரால், பெரியவர் சொன்ன விலையுயர்ந்த பொருள்களைக் கண்டுபிடிக்க
முடியவில்லை. "ஒருவேளை பெரியவர் நம்மை ஏமாற்றிவிட்டாரோ?"என்று
நினைத்த ஜாஸ்பர், வருத்தத்தோடு பெரியவரிடம் திரும்பிவந்து, நடந்த
அனைத்தையும் அவரிடம் எடுத்துச் சொன்னார்.
எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த பெரியவர் அவரிடம்,
"நான் சுட்டிக்காட்டிய இடத்தில் இருந்த கற்கள் எல்லாம் சாதாரண
கற்கள் என்று நினைத்தாயா...? அவை முழுவதும் வைரக்கற்கள். நீ
சென்று வந்த அந்த இடத்திற்குப் பெயர் வைரப் பள்ளத்தாக்கு. இன்னொரு
முறை நீ அங்கு சென்றால், வைரங்கள் அங்கு இருக்காது" என்றார்.
"என்ன! நான் சென்றுவந்த இடம் வைரப் பள்ளத்தாக்கா...? சூரிய ஒளியில்
பட்டு ஒருசில கற்கள் மின்னின. அவற்றை அவன் சாதாரண கற்கள் என
நினைத்துக்கொண்டு திரும்பி வந்துவிட்டேனே!" என்று சொல்லி தன்னயே
நொந்துகொண்டார் ஜாஸ்பர்.
இந்த நிகழ்வில் வருகின்ற ஜாஸ்பர் என்ற வணிகர் எப்படி விழிப்புணர்வுடன்
செயல்படாமல், விலையுயர்ந்த வைரக்கற்களைக் கோட்டைவிட்டாரோ, அப்படி
நாமும் பல நேரங்களில் விழிப்புணர்வுடன் செயல்படாமல், ஏனோதானோ
என்று செயல்பட்டு, பலவற்றைக் கோட்டைவிட்டுக்
கொண்டிருக்கின்றோம். இத்தகைய சூழ்நிலையில் இன்றைய நற்செய்தி வாசகம்,
நாம் விழிப்பாக இருக்கவேண்டும்... நமக்குக் கொடுக்கப்பட்ட
பொறுப்புகளில் நம்பிக்குரியவர்களாக இருக்கவேண்டும் என்ற அழைப்பினைத்
தருகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப்
பார்ப்போம்.
ஆண்டவர் எந்த நேரத்தில் வருவார் என்பது தெரியாததால்,
விழிப்பாய் இருக்கவேண்டும்
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, மானிடமகனுடைய இரண்டாவது வருகையைக்
குறித்துப் பேசுகின்றார். மானிடமகன் வரும் நாளும் வேளையும் தந்தை
ஒருவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது (மத் 24: 36) என்று
சொல்லும் இயேசு, அவருடைய வருகை ஒரு திருடனின் வருகையைப் போன்று
இருக்கும் என்று குறிப்பிடுகின்றார். திருடன் ஒருவீட்டில் வருகின்றான்
என்றால், யாரிடமும் சொல்லிக்கொண்டு வருவதில்லை. மாறாக, யாரும்
நினையாத நேரத்தில்தான் வருவான். அதுபோன்றுதான் மானிட மகனும்
யாரும் நினையாத நேரத்தில் வருவர். அதனால் அவருடைய வருகையை எதிர்கொள்ள
ஒவ்வொருவரும் விழிப்பாய் இருக்கவேண்டும் என்கின்றார். இயேசு.
தலைவர் வரும்நேரம் தெரியாததால், நம்பிக்கைக்குரியவர்களாய் இருக்கவேண்டும்
மானிடமகனின் வருகை ஒரு திருடனின் வருகையைப் போன்று இருக்கும்...
அதனால் ஒவ்வொருவரும் விழிப்பாய் இருக்கவேண்டும் என்று சொன்ன இயேசு,
எப்படி விழிப்பாய் இருக்கவேண்டும் என்பதை தலைவர் பணியாளர்
உவமை வழியாக விளக்குகின்றார். முன்பெல்லாம் போக்குவரத்து வசதிகளோ,
தொலைத்தொடர்பு வசதிகளோ கிடையாது. அதனால் தலைவர் இந்த நேரத்தில்
வருவார் என்று பணியாளருக்குத் தெரிவதற்கு வாய்ப்பில்லை அதனால்
அவர் எப்பொழுதும் தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய்,
உண்மையுள்ளவராய் இருந்து விழிப்பாய் இருக்கவேண்டும். ஆண்டவர்
இயேசு இந்த நடைமுறை உண்மையை எடுத்துக்கொண்டு, மானிடமகன் எப்பொழுது
வருவார் என்று தெரியாததால், ஒவ்வொருவரும் அவரவருக்குக் கொடுக்கப்பட்ட
பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய், உண்மையுள்ளவராய் இருந்து,
அதன்மூலம் விழிப்பாய் இருக்க வேண்டும் என்கின்றார் இயேசு.
நாம் நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளில் உண்மையாகவும் நம்பிக்கைக்குரியவராகவும்
இருந்து, விழிப்பாய் இருக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
"விழிப்பாய் இருப்போர் பேறுபெற்றோர்"(திவெ 16: 15) என்கின்றது
திருவெளிப்பாட்டு நூல். ஆகையால், நாம் மானிடமகனின் வருகைக்காக
விழிப்பாய் இருந்து, அவரை எதிர்கொள்ளத் தயாராவோம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
புனித மோனிக்கா திருநாள்
புனித அகுஸ்தினாரின் தாயாகிய புனித மோனிக்காவின் திருநாளைக்
கொண்டாடுகிறோம். இவர் தன் மகன் அகுஸ்தினாரின் மகனுக்காகக் கண்ணீர்
சிந்தினார் என்று மட்டுமே பல நேரங்களில் நாம் கேள்விப்பட்டுள்ளோம்.
இறைவன் முன்னும், தன் சமகாலத்து மக்கள் முன்னும் தன் உள்ளக்கிடக்கைகளை,
'ஒப்புகைகள்' என்னும் நூலில் அறிக்கையிடும் புனித அகுஸ்தினார்,
தன்னையும் தன் தாயையும் இணைக்கும் பகுதிகளில் எல்லாம் பின்வரும்
இறைவார்த்தையைப் பயன்படுத்துகின்றார்: 'ஆண்டவரே! நான் உண்மையாகவே
உம் ஊழியன். நான் உம் பணியாள். உம் அடியாளின் மகன். என் கட்டுகளை
நீர் அவிழ்த்துவிட்டீர்' (காண். திபா 116:16).
தன் தாயை, 'இறைவனின் அடியவள்' என்றே அகுஸ்தினார் அறிமுகம்
செய்கின்றார்.
'ஒப்புகைகள்' நூலில் அகுஸ்தினார் தனது தாயைப் பற்றி எழுதும்
சில குறிப்புகளிலிருந்து மோனிக்கா என்னும் ஆளுமை எப்படிப்பட்டவர்
என்று இன்று நாம் அறிந்துகொள்வோம்:
1. நம்பிக்கையாளர் மோனிக்கா
'ஆக, என் தாய் மற்றும் என் இல்லத்தார் அனைவரைப் போல என் தந்தையைத்
தவிர நானும் ஒரு நம்பிக்கையாளராகவே இருந்தேன். என் தந்தை நம்பிக்கையைத்
தழுவவில்லை என்றாலும் நான் என் தாயின் பக்திமுயற்சிகளைப் பின்பற்றுவதற்கோ,
இவ்வாறாகக் கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்வதற்கோ அவர் குறுக்கே
நிற்கவில்லை... அவரைவிட இவள் நல்லவளாக இருந்தாலும் அவருக்கே
இவள் அடிபணிந்து இருந்தாள் ... எந்நேரமும் அவள் உம் கட்டளைக்குக்
கீழ்ப்படிவதில் கருத்தாயிருந்தாள்.' (புத்தகம் 1, பிரிவு 11)
2. மகனின் இலக்குத் தேர்வில் உடன் நின்ற மோனிக்கா
'என் தாய் நான் எல்லாரையும் போல இலக்கியக் கல்வி பயின்றால் அது
எனக்கு எத்தீங்கும் இழைக்காது என்றும், உம்மை நோக்கிய பாதையில்
அது என்னை நிலைநிறுத்தும் என்றும் நினைத்தாள். என் பெற்றோர்களின்
குணம் பற்றி நினைத்துப் பார்க்கும்போது என்னில் எழும் ஊகம் இது.'
(புத்தகம் 2, பிரிவு 3)
3. கண்ணீர்த் துளி மோனிக்கா
'நீர் மேலிருந்து உம் கைகளை நீட்டி ஆழத்தின் இருளிலிருந்து 'என்
ஆன்மாவை மீட்டீர்' (காண். திபா 144:7). ஏனெனில், என் தாய், உம்
பிரமாணிக்கமுள்ள அடியவள், எனக்காக உம் திருமுன் அழுதாள். தங்களின்
இறந்த குழந்தைகளுக்காக அழும் தாய்மார்களைவிட அதிகம் அழுதாள்.
உம்மிடமிருந்து பெற்ற 'நம்பிக்கை மற்றும் ஆன்மீகத் தெரிவினால்'
(காண். கலா 5:5), என்னைப் பற்றியிருந்த இறப்பை அவள் கண்டுணர்ந்திருந்தாள்.
நீரும் அவளுக்குச் செவிகொடுத்தீர், ஆண்டவரே! நீர் அவளுக்குச்
செவிகொடுத்தீர்! அவள் செபித்த இடங்களில் எல்லாம் வடித்த கண்ணீர்த்
துளிகளை நீர் இகழ்ச்சியுடன் நோக்கவில்லை. நீர் அவளின் மன்றாட்டுக்குச்
செவிசாய்த்தீர். இதனால், என்னை அவளோடு தங்க வைத்துக்கொள்ளவும்,
அவளோடு அமர்ந்து ஒரே மேசையில் உணவு அருந்தவும் என்னை அனுமதிக்குமாறு
அவளுக்குக் கனவில் தூண்டுதல் தந்தீர். என் பிழையால் நான் செய்த
தெய்வ நிந்தனைக்காக அவள் என்னை வெறுத்ததால், முதலில் அவள் என்னை
ஏற்றுக்கொள்ளவில்லை. அவள் தான் ஒரு மரத்தாலான வரைகோலில்
சாய்ந்திருப்பதாகக் காட்சி கண்டாள். அக்கனவில் இளைஞன் ஒருவன்
வந்தான். அவன் மிகவும் அழகாகவும் புன்னகைபூத்த முகத்தோடும்
நின்று துன்பத்தால் உடைந்து போயிருந்த (காண். புல 1:13) அவளின்
சோகமான முகத்தைப் பார்த்தான். 'நீ ஏன் வாடியிருக்கிறாய்? கண்ணீர்
வெள்ளத்தில் தத்தளிக்க காரணம் என்ன?' என்று அவன் அவளைக்
கேட்டான். காட்சிகளில் வரும் இக்கேள்விகள் விடைகளைத் தெரிந்து
கொள்வதற்காக அல்ல, விடைகளைத் தருவதற்காகவே கேட்கப்படுகின்றன.
நரகம் போன்ற என் வாழ்க்கையை நினைத்து துயரப்பட்டு அங்கலாய்ப்பதாக
அவள் சொன்னாள். 'இனி கவலை கொள்ள வேண்டாம்! கலக்கம் அடையவும்
வேண்டாம்!' என்று அவளிடம் சொன்னவன், தொடர்ந்து அவள் எங்கே இருக்கிறாளோ
அங்கேயே நானும் இருப்பதாகச் சொல்லி அதைக் கண்டுணருமாறு அவளுக்கு
அறிவுறுத்தினான். அவள் பார்த்தபோது, அவளின் அருகில் அதே வரைகோலில்
சாய்ந்தவாறு நான் நிற்பதைக் கண்டாள். உம் காதுகள் அவளின் இதயத்தின்
அருகில் இருந்தாலொழிய இக்காட்சி அவளுக்கு எப்படி வரும்? நீர்
நல்லவர். எல்லாம் வல்லவர். அனைவர்மேலும் அக்கறை காட்டுபவர். ஒவ்வொருவர்மீதும்
தனித்தனியாக அக்கறை காட்டி அன்பு செய்பவர்.
... ஆண்டவரே! என் தாய்க்குக் கிடைத்த காட்சியையோ கனவையோ விட,
விழிப்பான என் தாய் வழியாக நீர் எனக்குத் தந்த பதிலால் நான் வியந்து
நிலைகுலைந்து போனேன் ... அதற்குப் பின் வந்த ஒன்பது ஆண்டுகள்
நான் ஆழமான குழியின் சகதியிலும், பொய்யின் இருட்டிலும் புரண்டு
கிடந்தேன். சில நேரங்களில் அதிலிருந்து எழ முயற்சி செய்தேன்.
ஆனால், எந்த அளவுக்கு எழ முயற்சி செய்தேனோ அந்த அளவுக்கு இன்னும்
ஆழமாய் அமிழ்ந்து போனேன். புனிதமான, பக்தி நிறைந்த, சாந்தமான
கைம்பெண்ணான அவள் - உம்மால் அன்பு செய்யப்படும் அவள் - எதிர்நோக்கால்
உள்ளத்தில் அமைதி பெற்றாள். ஆனாலும், எனக்காகக் கண்ணீர் வடிப்பதிலும்
இரங்கி அழுவதிலும் அவள் சோர்ந்து போகவில்லை. அவள் அழுவதை
நிறுத்தவில்லை. அவளின் எல்லா இறைவேண்டல்களிலும் உம்முன் எனக்காக
மாரடித்துப் புலம்பினாள். அவளின் விண்ணப்பங்கள் கேட்கப்பட்டன.
இருந்தாலும் அந்த இருளில் நான் புரண்டுகொண்டிருக்கவும், அந்த
இருளால் நான் விழுங்கப்படவும் என்னைத் தனியே விட்டுவிட்டீர்.'
(புத்தகம் 3, பிரிவு 11)
4. பரிதவித்த தாய் மோனிக்கா
'கடவுளே, நான் ஏன் கார்த்தேஜைவிட்டு உரோமை சென்றேன் என்பதை
நீர் அறிந்திருந்தீர். ஆனால், அதைப் பற்றி நீர் என்னிடமோ என்
தாயிடமோ வெளிப்படுத்தவே இல்லை. என் பயணம் பற்றி வருத்தப்பட்ட
என் தாய், கடல் வரை வந்து என்னை வழியனுப்பினாள். ஆனால், நான்
திரும்பி வருமாறும், தானும் என்னுடன் வருவதாகவும் திரும்பத்
திரும்பச் சொல்லிக்கொண்டிருந்ததாலும் நான் அவளை ஏமாற்றினேன்.
என் நண்பன் ஒருவன் இருக்கிறான் என்றும், பயணத்திற்குக் காற்று
ஏற்றதாக மாறும் வரை நான் கடற்பயணம் செய்ய மாட்டேன் என்றும்
சொல்லி நடித்தேன். என்னை மிகவும் அன்பு செய்த என் தாயிடம் நான்
பொய் சொன்னேன். அவளைவிட்டு நான் வழுக்கி ஓடினேன். இதையும் நீர்
மன்னித்தருளினீர். வெறுக்கத்தக்க அழுக்காய் இருந்த என்னைத்
திருமுழுக்கில் உம் அருளின் தண்ணீரால் கழுவும் வண்ணம் என்னைக்
கடலின் தண்ணீரிலிருந்து காப்பாற்றிக் கரை சேர்த்தீர்.
திருமுழுக்குத் தண்ணீரே என்னைத் தூய்மையாக்குவதாகவும், என்
தாயின் கண்களிலிருந்து வழிந்த ஆறுகளை வற்றச் செய்வதாகவும் இருந்தது.
இக்கண்ணீரே அவளின் முகத்தின்முன் இருந்த மண்ணில் பாய்ந்தோடியது.
இருந்தாலும், நான் இல்லாமல் வீடு திரும்ப அவள் மறுத்ததால், அவளை
மிகவும் கஷ்டப்பட்டு எங்கள் கப்பலுக்கு அருகில் இருந்த
சிப்ரியானின் நினைவு ஆலயத்தில் தங்க வைத்தேன். ஆனால், அந்த இரவு
மறைவாக நான் புறப்பட்டேன். அவள் வரவில்லை. அழுதுகொண்டும்
செபித்துக்கொண்டும் ஆலயத்திலேயே தங்கிவிட்டாள். தனது கண்ணீர்
வெள்ளத்தால் உம்மிடம் அவள் இரந்து வேண்டியதென்ன, என் கடவுளே?
என் பயணத்தை நீர் தடுக்கும் அளவுக்கு அவள் உம்மிடம் என்ன
கேட்டாள்? இருந்தாலும், உமது விமரிசையால் அவளது ஏக்கத்தின் சாரத்தை
நீர் கண்ணுற்றீர் - அவள் விரும்பியது போல நீர் என்னை மாற்ற
வேண்டும் என்று அவள் கேட்டதை நீர் உடனடியாகத் தரவில்லை என்றாலும்!
காற்று அடித்து எங்களது கப்பலை நகர்த்தியது. கரை மெதுவாகக் கண்களிலிருந்து
மறையத் தொடங்கியது. அதோ, விடிந்தபோது, அவள் துக்கத்தால் பைத்தியம்
பிடித்தவள்போல் உம் காதுகளைத் தன் பேரழுகையால் நிரப்பினாள். ஆனால்,
அவளின் கூக்குரலுக்கு நீர் செவிகொடுக்கவில்லை. எனது பேரார்வங்களுக்கு
முற்றுப்புள்ளி வைக்க எனது பேரார்வங்களையே பயன்படுத்தினீர்.
தனது இரத்தமும் சதையுமான எனக்காக அவள் ஏங்கிய ஏக்கத்தை துன்பம்
என்னும் சாட்டையால் அடித்துச் சரி செய்தீர். எல்லாத் தாய்மார்களையும்
போல - எல்லாத் தாய்மார்களையும்விட - என்னைத் தன்னருகே
வைத்துக்கொள்ளவே அவள் விரும்பினாள். ஆனால், அவளிடமிருந்து நீர்
என்னைப் பிரிப்பது அவளுக்கு மகிழ்வைக் கொண்டுவரும் மகனாக என்னை
மாற்றுவதற்காகத்தான் என்பதை அவள் புரிந்து கொள்ளவில்லை. அவள்
அதை அறியவும் இல்லை. ஆகையால், அவள் அழுது புலம்பினாள். அவளின்
இந்தத் துன்பங்களில், 'வேதனையில் பெற்றெடுத்த தன் குழந்தையை'
(காண். தொநூ 3:16) தேடிய ஏவாளின் நிழல் இருந்தது. 'நான் அவளை
ஏமாற்றிவிட்டேன்,' 'நான் கல்மனம் படைத்த கொடூரன்' என்று என்னைப்
பற்றி உம்முன் குற்றம் சுமத்திவிட்டு, உம்மிடம் திரும்பி எனக்காகச்
செபித்தாள். தன் வீடு திரும்பினாள். அதே நேரம், நான் உரோமையை
வந்தடைந்தேன்.' (புத்தகம் 5, பிரிவு 8)
5. மகளும், மனைவியும், மருமகளுமான மோனிக்கா
'ஆனால், உமது அடியாளைப் பற்றி எனது ஆன்மா அறிக்கையிடும் எதையும்
நான் கடந்துபோக மாட்டேன். காலத்தின் வெளிச்சத்திற்குள் தன் உடல்
வழியாக என்னைப் பிறக்க வைத்தவளும், தன் இதயத்தின் வழியாக நிரந்தரத்தின்
வெளிச்சத்திற்குள் என்னைப் பிறக்க வைத்தவளும் அவளே. அவள் எனக்கு
வழங்கிய கொடைகளைப் பற்றி அல்ல, நீர் அவளுக்கு வழங்கிய கொடைகளைப்
பற்றியே பேசுகிறேன். அவள் தன்னையே உருவாக்கிக் கொள்ளவோ, வளர்த்தெடுக்கவோ
இல்லை. நீர் அவளை உருவாக்கினீர். அவளது குணநலன் எப்படி இருக்கும்
என்பதை அவளது தந்தையும் தாயும் அறிந்திலர். உமது அச்சத்தில்
அவள் நெறிப்படுத்தப்பட்டாள். உமது கிறிஸ்துவால் அவள் உருவாக்கப்பட்டாள்.
உமது திருஅவையின் நேரிய உறுப்பினர் ஒருவரால் நம்பிக்கை தவழும்
நல்வீட்டில் நன்மங்கையாய் வளர்ந்தாள் அவள். அவள் தனது தாயின்
அக்கறையைப் பற்றி அல்ல, மாறாக, தன் வீட்டில் இருந்த முதிய தாதி
ஒருத்தியைப் பற்றி அவள் என் தாத்தாவையே தூக்கி வளர்த்தவள் -
அவளது அக்கறை, கரிசனை, உடனிருப்பு, அவள் தனது முதுகில் தமக்கையைப்
போலத் தன்னை ஏந்தி நடந்த பக்குவம் ஆகியவற்றைப் பற்றியே அதிகம்
பேசியிருக்கிறாள். அவளது இந்த நீண்ட பணிக்காகவும், அவளது
முதுமைக்காகவும், கிறிஸ்தவ இல்லம் ஒன்றில் வாழ்ந்த அவளது உயர்ந்த
அறநெறி வாழ்வுக்காவும் அவளது தலைவர்களால் அவள் மிகவும் மதிக்கப்பெற்றாள்.
ஆகவே, தலைவர்களின் தவப் புதல்வியரை வளர்க்கும் பொறுப்பு அவளிடமே
ஒப்படைக்கப்பட்டது. அப்பொறுப்பை மிகுந்த அக்கறையுடன்
நிறைவேற்றினாள். தேவைப்படின் மிகவும் கண்டிப்பாகவும் இருந்தாள்.
அவர்களை வளர்க்கும் விதத்தில் அவள் மிகவும் விவேகத்துடன் நடந்து
கொண்டாள். அவர்களது பெற்றோர்களோடு அமர்ந்து அவர்கள் உணவு உண்ணும்
நேரம் தவிர, மற்ற நேரங்களில் அவர்கள் தாகத்தால் பற்றி எரிந்தாலும்,
தண்ணீர் குடிக்கக் கூட அவர்களை அனுமதிக்கவில்லை. ஏனெனில், அது
தவறான பழக்கமாக மாறிவிடும் என்று சொல்லித் தடுத்தாள். அவள் ஞானத்தோடு
இந்த வார்த்தைகளை அவர்களுக்குச் சொன்னாள்: 'திராட்சை மது
கைக்கெட்டும் தூரத்தில் இன்று உங்களுக்கு இல்லை என்பதற்காக
நீங்கள் தண்ணீரைத் தேடித் தேடிக் குடிக்கிறீர்கள். ஆனால், நாளை
அருட்சாதனம்
முடிந்து, திராட்சை மதுச் சேமிப்பறையின் சாவி உங்கள்
கைக்கு வரும்போது தண்ணீர் வெறுப்பாகத் தெரியும், மதுப்பழக்கம்
தவிர்க்க முடியாததாகி விடும்!' இப்படிப்பட்ட விதிமுறைகள் வழியாகவும்,
கட்டளைகள் வழியாகவும் பிள்ளைகளின் இளவயதுப் பேராசையைக் கட்டுக்குள்
கொண்டுவந்து அவர்களை நெறிப்படுத்தினாள். குழந்தைகளின் தாகத்தை
நிதானத்திற்குள் கொண்டுவந்து அவர்கள் பிற்காலத்தில் தொடக்கூடாதவற்றின்
மேல் ஆசைப்படாதபடி அவர்களைப் பயிற்றுவித்தாள்.
இருந்தாலும், உமது அடியாள் தன் மகனிடம் சொன்னது போல, திராட்சை
மதுவின் மேல் உள்ள பலவீனம் அவளைப் பலமாகப் பற்றிக் கொள்ள ஆரம்பித்தது.
அவள் சிறுமியாய் இருந்தபோது, திராட்சை மது வைக்கப்பட்டிருக்கும்
அறையிலிருந்து மதுவை எடுத்து வருமாறு அவளது பெற்றோர் அவளை அனுப்புவது
வழக்கம். பீப்பாயின் மேல் உள்ள திறப்பு வழியாக ஒரு கோப்பையை உள்ளே
செலுத்தி மதுவை எடுத்துப் பாட்டிலில் ஊற்ற வேண்டும். அவள்
பாட்டிலில் ஊற்றுவதற்கு முன் தனது உதட்டின் நுனியில் கோப்பையை
வைத்துக் கொஞ்சமாக உறிஞ்சுவாள். அதன் சுவை பிடிக்காததால் அவள்
அதைவிட அதிகம் எடுப்பதில்லை. அவளை இப்படி உறிஞ்ச வைத்தது மதுவின்மேல்
உள்ள ஆர்வம் அல்ல. மாறாக, இளவல்களிடம் இருக்கும் உபரியான உயிராற்றல்.
இது விளையாட்டுத்தனமான உணர்ச்சி வேகமாக அடிக்கடி மேலெழும்பி வருவதால்
பெரியவர்கள் குழந்தைகளில் இதைப் பொதுவாக அடக்கிவைப்பர். துளித்
துளியாக உறிஞ்ச ஆரம்பித்தவள் கொஞ்ச நாள்களில் கோப்பை கோப்பையாக
மண்டத் தொடங்கினாள் - ஏனெனில், 'சிறியவற்றைப் புறக்கணிப்போர்
சிறிது சிறிதாய் வீழ்ச்சியடைவர்' (காண். சீஞா 19:1). அவளது
விவேகமிக்க தாதி என்ன ஆனாள்? அவள் விதித்த தடை எங்கே போனது? இந்த
மறைவான நோயிலிருந்து அவள் விடுபடத் அவளது வலிமை அவளுக்குப் போதவில்லை.
என் தலைவரே! உமது நலம்தரும் அக்கறை எங்கள்மேல் நிழலாடி எங்களைத்
தாங்கியது. தந்தையும், தாயும், தாதியும் இல்லாத இடத்தில் நீர்
இருக்கிறீர். நீர் எங்களைப் படைத்தீர், நீர் எங்களை அழைக்கிறீர்,
மனித அதிகாரங்களைப் பயன்படுத்தி எங்களின் ஆன்ம நலம் காக்க அவர்களை
அனுப்புகிறீர். நீர் அவளைக் குணமாக்கியது எப்படி? நீர் அவளது
உடல்நலத்தை மீட்டெடுத்தது எப்படி? அவளைக் கண்டிக்கவும் கட்டுப்படுத்தவும்
இன்னொரு இனியவளை அழைத்து வந்தீர். கடுமையாகவும், கூர்மையாகவும்
உள்ள மருத்துவனின் கத்தி போல வந்த அவள் வழியாக ஒரே நறுக்கலில்
அவளின் அழுகலை அகற்றீனர். வீட்டில் தனித்திருந்த ஒருநாள், அவள்
தன் பணிப் பெண்ணோடு மதுச் சேமிப்பறைக்குச் செல்லும் வழியில்
அவர்கள் இருவருக்கும் இடையில் மழலைச் சண்டை வந்தது. சண்டை
சொற்போராக வலுக்க, பணிப்பெண் இவளைப் பார்த்து, 'போடி!
குடிகாரி!' என்று சொல்லிவிட்டாள். அந்த இகழ்ச்சி அவளைக் காயப்படுத்தியது.
உடனடியாக அவள் தனது இழிவான மதுப்பழக்கம் என்னும் அடிமைத்தனத்தை
எண்ணி வெட்கப்பட்டுத் தன்னையே கடிந்து கொண்டாள். மதுப்பழக்கத்தை
உடனடியாக நிறுத்தினாள். முகப்புகழ்ச்சி செய்யும் நண்பர்கள் நம்மைக்
கெடுப்பது போல, சண்டையிடும் எதிரிகள் பல நேரங்களில் நம்மைத்
திருத்துகிறார்கள். ஒவ்வொருவருக்கும் அவரவர் நோக்கத்தின்படி
நீர் கைம்மாறு செய்கிறீர். பணிப்பெண் தனது கோபத்தில் தனது
சிறிய எஜமானியைக் காயப்படுத்த விரும்பினாளே தவிர, குணப்படுத்த
விரும்பவில்லை. ஆகையால்தான் அவர்கள் தனித்திருக்கும்போது அவள்
அந்த வார்த்தையைச் சொன்னாள் - ஒன்று, அந்த நேரத்தில், இடத்தில்
யாரும் இல்லாததால் அவர்கள் தனித்திருந்திருக்கலாம். அல்லது அவள்
பயந்துபோய் இவ்வளவு நாள்கள் சொல்லாமல் இருந்திருக்கலாம்.
ஆனால், நீரோ, என் தலைவரே! விண்ணையும் மண்ணையும் ஆள்பவரே! ஆழத்தின்
ஓட்டங்களை உமக்கு ஏற்றாற்போல மடைதிருப்பி விடுகின்றீர். ஆண்டுகளின்
ஓட்டத்தை அணியம் செய்கின்றீர். ஓர் ஆன்மாவின் கோபத்திலிருந்து
கூட இன்னோர் ஆன்மாவுக்கு நலத்தைக் கொண்டு வர உம்மால் முடியும்.
தவறு செய்கின்றவர் ஒருவரைத் திருத்தும் எவரும் திருந்தியவருடைய
மாற்றம் அவரைத் திருத்தியவரின் ஆற்றலால் வந்தது என்று சொல்ல
முடியாதவாறு நீர் இப்படிச் செய்கிறீர்.' (புத்தகம் 9, பிரிவு
8)
'இப்படியாக நாணத்திலும் நிதானத்திலும் அவள் வளர்க்கப்பட்டாள்.
அவளது பெற்றோர் அவளை உமக்குக் கீழ்ப்படியச் செய்ததை விட, நீர்
அவளை அவளது பெற்றோர்களுக்குக் கீழ்ப்படியச் செய்தீர். திருமண
வயது வந்தபோது அவள் ஒருவனுக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட, அவள்
அவனைத் தலைவனாக ஏற்று அவனுக்குப் பணிபுரிந்தாள். அவள் அவனை உமக்காக
வெற்றி கொள்ள முயன்றாள். அவளது மதிப்பீடுகளாலும் விழுமியங்களாலும்
- அவற்றினால் நீர் அவளை அணிசெய்திருந்தீர் உம்மைப் பற்றி அவனிடம்
பேசினாள். இப்படியாக அவளது கணவன் அவளை அன்பு செய்யவும், மதிக்கவும்,
பாராட்டி வியக்கவும் விரும்பினாள். அவனது பிரமாணிக்கமின்மையை
அவள் பொறுத்துக் கொண்டாள். அதுபற்றி அவள் அவனிடம் சண்டையிட்டதில்லை.
உமது இரக்கம் அவன்மேல் வரும் என்றும், அவன் உம்மேல் நம்பிக்கை
கொண்டால் கற்பில் நிலைத்திருப்பான் எனவும் அவள் எதிர்நோக்கினாள்.
மேலும், அவன் எந்த அளவுக்குக் கருணை உள்ளவனோ அந்த அளவுக்கு
முன்கோபியாகவும் இருந்தான். கோபப்படுகின்ற கணவனைத் தன்
சொல்லாலும் செயலாலும் எதிர்க்கக் கூடாது என்பதை அவள் அறிந்திருந்தாள்.
அவன் சாந்தமாகவும் அமைதியாகவும் ஆனபின், வாய்ப்பு சரியாக அமையும்போது,
தன் செயலுக்கான காரணத்தை அவனிடம் விளக்குவாள். சாந்தமான கணவர்களுக்குத்
திருமணமான பல பெண்கள் அவர்களால் துன்புறுத்தப்பட்டுத் தங்களது
முகத்திலும் உடலிலும் காயம் பட்ட தழும்புகளைத் தாங்கித் தங்களது
வாழ்வை நகர்த்துகிறார்கள். தங்களுக்கிடையேயான உரையாடலில் இவர்கள்
அவளிடம் தங்களது கணவனின் இச்செயல்களை முறையிடுவார்கள். அவள்
அவர்களோடு சிரிப்பது போலச் சிரித்துக் கொண்டு அவர்களுக்குச்
சீரிய ஆலோசனை வழங்குவாள். அவர்களின் வாய்தான் அவர்களின் பிரச்சினைகளுக்குக்
காரணம் என்பாள். திருமண வாக்குறுதிப் பத்திரம் வாசிக்கப்பட்டபோது
நமக்கான அடிமைச் சாசனம் வாசிக்கப்பட்டது என்று நினைத்துக்
கொள்ள வேண்டும் என்பாள். ஏனெனில், அன்று முதல் மனைவியர் கணவர்களுக்கு
அடிமைகள் ஆகின்றனர். இந்த நிலையை அவர்கள் அறிந்து அதற்கேற்றாற்போல
வாழ வேண்டுமே தவிர தங்களது தலைவர்களுக்கு எதிராக நிமிர்ந்து
நிற்கக் கூடாது என நினைத்தாள். இவள் பொறுத்துக் கொள்ளும் இவளுடைய
கணவனின் முரட்டுக் குணத்தைக் கேள்வியுற்ற மனைவியர் இவளுடைய
வார்த்தைகளைக் கேட்டுத் திகைத்தனர். ஆனால், பேட்ரிக் அவளை அடித்ததாகவோ,
அவளது முகத்தில் தழும்பை ஏற்படுத்தியதாகவோ, அவளோடு ஒருநாள்கூட
சண்டையிட்டதாகவோ இல்லை. இதற்கான காரணம் என்று பெண்கள் அவளிடம்
ஆத்மார்த்த உரையாடலில் கேட்கும்போது, நான் மேற்சொன்ன வார்த்தைகளையே
அவள் அவர்களுக்குச் சொல்வாள். அவளது அறிவுரையைக் கேட்டவர்கள்
தங்கள் வாழ்வில் நலம் கண்டு அவளுக்கு நன்றிக்கடன் பட்டார்கள்.
அவளது அறிவுரையைக் கேளாதவர்கள் தங்கள் கணவர்களிடம் நன்றாக அடிபட்டார்கள்.'
(புத்தகம் 9, பிரிவு 9)
அவளுடைய மாமியார்தான் அவளுக்கு முதல் எதிரி. பணிப்பெண்களின்
கிசுகிசுப்பைக் கேட்ட அவள் தனது மருமகள்மேல் பகைமையையும்
வெறுப்பையும் வளர்த்துக் கொண்டாள். ஆனால், தனது மதிப்புமிகு
நடத்தையாலும், விடாமுயற்சியுள்ள பொறுமை மற்றும் கனிவாலும்
மாமியாரையும் வென்றாள் அவள். விளைவு, அவளது மாமியார் வம்பளக்கின்ற
பணிப்பெண்களைப் பற்றித் தனது மகனிடம் முறையிட்டாள். அவர்களைத்
தண்டிக்கும்படி அவனிடம் சொன்னாள். ஏனெனில், அப்பெண்களாலேயே
குடும்பத்தில் அமைதி சீர்குலைந்தது. அவனும் தனது தாயின்
கோரிக்கைக்குச் செவிமடுத்தான். தன் குடும்பத்தின்மேல் தான்
கொள்ள வேண்டிய அக்கறை பற்றித் தெளிவுற்ற அவன், குடும்ப அமைதியை
நிலைநிறுத்தும் பொருட்டு, அப்பணிப்பெண்களைச் சாட்டையால் அடிக்குமாறு
செய்தான். தனது மருமகளைப் பற்றி யாராவது அவதூறு பேசினால் இதே
நிலைதான் என அவள் மற்றப் பெண்களை எச்சரித்தாள். அன்றிலிருந்து
யாரும் மற்றவருக்கு எதிராக எந்த வார்த்தையும் பேசவில்லை. ஒருவர்
மற்றவரின் நன்மையை நாடும் நிலையே குடும்பத்தில் இருந்தது.
'உமது அடியாளை நீர் மற்றுமொரு கொடையால் அணிசெய்தீர். என் கடவுளே!
என் இரக்கமே! அவளது வயிற்றில் நீர் என்னை உருவாக்கினீர்! அந்தக்
கொடை என்னவெனில், எப்போதெல்லாம் அவளால் முடியுமோ அப்போதெல்லாம்
அவள் கருத்து முரண்பாடு கொண்ட அல்லது சண்டையிடுகின்ற மனிதர்களை
இணைத்து வைத்து ஒப்புரவாக்கினாள்.' (புத்தகம் 9, பிரிவு 9)
6. இறைமடியில் மோனிக்கா
'... மேலும், ஜன்னலுக்கு அருகில் நடந்த எங்கள் உரையாடலின்போது,
'நான் இங்கே செய்ய என்ன இருக்கிறது?' எனக் கேட்டபோது, அவள் தனது
வீட்டில் இறக்க விரும்பவில்லை என்பது தெளிவாகிவிட்டது. மேலும்,
நான் பின்னர் கேள்வியுற்றேன், நாங்கள் ஓஸ்தியாவில் இருந்தபோது,
எனது நண்பர்கள் சிலரிடம், தாய்க்குரிய இரகசியத்தோடு, தனக்கு இந்த
உலக வாழ்வின் மேல் உள்ள வெறுப்பையும், இறப்பின் நன்மையையும் பற்றிப்
பேசியிருக்கிறாள். நான் அப்போது அங்கு இல்லை. அவளது துணிச்சலைக்
கண்ட என் நண்பர்கள் - இத்துணிச்சலை நீரே அவளுக்கு அளித்தீர் அவளது
சொந்த ஊரிலிருந்து தூரமாக உடலை விட்டுச் செல்வது பயமாக இல்லையா
என்று அவளைக் கேட்க, அவள் உடனே பதில் தந்தாள்: 'கடவுளிடமிருந்து
எதுவும் தூரமில்லை. உலகம் முடியும் போது எந்த இடத்திலிருந்து
என்னை உயிர்ப்பிக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியாமல்
போகுமோ என்று பயப்படத் தேவையில்லை!' நோயுற்ற ஒன்பதாம் நாள்,
தனது ஐம்பத்து ஆறாவது வயதில், எனக்கு முப்பத்து மூன்று வயதானபோது,
பக்தியும் அர்ப்பணமும் கொண்ட இந்த ஆன்மா உடலிலிருந்து விடுதலை
பெற்றது.நான் அவளது கண்களை மூடினேன்.' (புத்தகம் 9, பிரிவு 11)
நாம் மோனிக்காவிடம் கற்றுக்கொள்வது என்ன?
பொறுமை. ஏனெனில் நம் கடவுள், 'நம்முள் வல்லமையோடு செயல்படுபவரும்
நாம் வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் மேலாக அனைத்தையும் செய்ய
வல்லவருமாக' (காண். எபே 3:20) இருக்கிறார்.
Rev. Fr. Yesu Karunanidhi |
|