|
|
29
ஆகஸ்ட் 2020 |
|
பொதுக்காலம்
21ஆம் வாரம்
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து
வாசகம் 1: 26-31
சகோதரர் சகோதரிகளே,
நீங்கள் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப் பாருங்கள். மனிதக் கணிப்பின்படி
உங்களுள் ஞானிகள் எத்தனை பேர்? வலியோர் எத்தனை பேர்? உயர்குடிமக்கள்
எத்தனை பேர்? ஆனால் கடவுள் ஞானிகளை வெட்கப்படுத்த, மடமை என
உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார். அவ்வாறே, வலியோரை வெட்கப்படுத்த,
வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார். உலகம் ஒரு
பொருட்டாகக் கருதுபவற்றை அழித்துவிட அது தாழ்ந்ததாகக் கருதுபவற்றையும்
இகழ்ந்து தள்ளுபவற்றையும் கடவுள் தேர்ந்தெடுத்தார். எவரும் கடவுள்
முன் பெருமை பாராட்டாதபடி அவர் இப்படிச் செய்தார். அவரால்தான்
நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள்.
கிறிஸ்துவே கடவுளிடமிருந்து நமக்கு வரும் ஞானம். அவரே நம்மை ஏற்புடைவராக்கித்
தூயவராக்கி மீட்கின்றார். எனவே மறைநூலில் எழுதியுள்ளவாறு,
"பெருமை பாராட்ட விரும்புகிறவர் ஆண்டவரைக் குறித்தே பெருமை
பாராட்டட்டும்."
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 33: 12-13. 18-19. 20-21 . (பல்லவி: 12b)
Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள்
பேறுபெற்றோர்.
12
ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச்
சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.
13
வானினின்று ஆண்டவர் பார்க்கின்றார்; மானிடர் அனைவரையும்
காண்கின்றார். - பல்லவி
18
தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக்
காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.
19
அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும்
வாழ்விக்கின்றார். - பல்லவி
20
நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும்
ஆவார்.
21
நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்; ஏனெனில், அவரது
திருப்பெயரில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 13: 34
அல்லேலூயா, அல்லேலூயா! "ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்"
என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான்
உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம்
அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குக்
கொடும்.
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 17-29
+மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 17-29 அக்காலத்தில்
ஏரோது, தன் சகோதரனான பிலிப்பின் மனைவி ஏரோதியாவை மனைவியாக்கிக்
கொண்டிருந்தான்; அவள் பொருட்டு ஆள் அனுப்பி யோவானைப்
பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான். ஏனெனில் யோவான்
ஏரோதிடம், "உம் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது முறை அல்ல"
எனச் சொல்லி வந்தார். அப்போது ஏரோதியா அவர்மீது காழ்ப்புணர்வு
கொண்டு, அவரைக் கொலை செய்ய விரும்பினாள்; ஆனால் அவளால் இயலவில்லை.
ஏனெனில் யோவான் நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை ஏரோது அறிந்து
அஞ்சி அவருக்குப் பாதுகாப்பு அளித்துவந்தான். அவர் சொல்லைக்
கேட்டு மிகக் குழப்பமுற்ற போதிலும், அவருக்கு மனமுவந்து
செவிசாய்த்தான். ஒரு நாள் ஏரோதியாவுக்கு நல்ல வாய்ப்பு ஒன்று
கிடைத்தது. ஏரோது தன் பிறந்த நாளில் அரசவையினருக்கும், ஆயிரத்தவர்
தலைவர்களுக்கும் கலிலேய முதன்மைக் குடிமக்களுக்கும் ஒரு
விருந்து படைத்தான். அப்போது ஏரோதியாவின் மகள் உள்ளே வந்து
நடனமாடி ஏரோதையும் விருந்தினரையும் அகமகிழச் செய்தாள். அரசன்
அச்சிறுமியிடம், "உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்"
என்றான். "நீ என்னிடம் எது கேட்டாலும், ஏன் என் அரசில்
பாதியையே கேட்டாலும் உனக்குத் தருகிறேன்" என்றும் ஆணையிட்டுக்
கூறினான். அவள் வெளியே சென்று, "நான் என்ன கேட்கலாம்?" என்று
தன் தாயை வினவினாள். அவள், "திருமுழுக்கு யோவானின் தலையைக்
கேள்" என்றாள். உடனே சிறுமி அரசனிடம் விரைந்து வந்து,
"திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குக்
கொடும்" என்று கேட்டாள். இதைக் கேட்ட அரசன் மிக வருந்தினான்.
ஆனாலும் விருந்தினர் முன் தான் ஆணையிட்டதால் அவளுக்கு அதை மறுக்க
விரும்பவில்லை. உடனே அரசன் ஒரு காவலனை அனுப்பி யோவானுடைய தலையைக்
கொண்டு வருமாறு பணித்தான். அவன் சென்று சிறையில் அவருடைய தலையை
வெட்டி, அதை ஒரு தட்டில் கொண்டு வந்து அச்சிறுமியிடம் கொடுக்க,
அவளும் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள். இதைக் கேள்வியுற்ற
யோவானுடைய சீடர்கள் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று ஒரு
கல்லறையில் வைத்தார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
1 கொரிந்தியர் 1: 26-31
வலியோரை வெட்கப்படுத்த, வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத்
தேர்ந்துகொண்ட கடவுள்
நிகழ்வு
இயேசுவின் பிறப்புச் செய்தியை வானதூதர்கள் வழியாகக் கேட்டு,
அவரைப் பார்க்கச் சென்ற இடையர்களை ஒட்டிச் சொல்லப்படுகின்ற நிகழ்வு
இது. இயேசுவைப் பார்க்கச் சென்ற இடையர்கள் கூட்டத்தில் சிறுவன்
ஒருவனும் இருந்தான். அவன் குழந்தை இயேசுவை வணங்கிவிட்டு, அவர்
படுத்திருந்த வைக்கோலிலிருந்து ஒரு வைக்கோலை எடுத்துத் தன்னுடைய
கையில் வைத்துக்கொண்டான். வருகிற வழியில் அவனுடைய தந்தை அவன்
கையை மூடியவாறு வருவதைப் பார்த்துவிட்டு, "உன்னுடைய கையில் என்ன
வைத்திருக்கின்றாய்?" என்றார். சிறுவனோ தன்னுடைய கையை
விரித்து, "இயேசு படுத்திருந்த வைக்கோலிலிருந்து ஒரு வைக்கோலை
எடுத்து வைத்திருக்கின்றேன்" என்றான்.
அன்றைய பொழுது முடிந்து மறுநாள் வந்தது. சிறுவன் அப்பொழுதும்
தன்னிடம் இருந்த வைக்கோலைத் தூக்கி வீசாமல், அப்படியே
வைத்திருந்ததைப் பார்த்துவிட்டு, அவனுடைய தந்தை அவனிடம்,
"தம்பி! நீ இன்னும் அந்த வைக்கோலைத் தூக்கிப் போடவில்லையா?" என்றார்.
"இந்த வைக்கோலைத் தூக்கிப் போடுவதாக இல்லை; இதை நான் எப்பொழுதும்
என்னோடு வைத்திருக்கப் போகிறேன்" என்றான் சிறுவன். இதற்குச்
சிறுவனின் தந்தை அவனிடம், "இயேசுதானே முக்கியம்; அவர் படுத்திருந்த
வைக்கோல் முக்கியமா?" என்று கேட்க, சிறுவன் அவரிடம்,
"இயேசுதான் முக்கியம். அதை மறுக்கவில்லை. ஆனால், இந்த வைக்கோல்
ஒரு முக்கிய செய்தியைச் சொல்கின்றது. அது என்னவெனில், கடவுள்
தன்னுடைய பணிக்கெனப் பெரிய பெரிய மனிதர்களைத் தேர்ந்துகொள்வதில்லை,
மிகவும் சாதாரண மனிதர்களையே தேர்ந்துகொள்கின்றார். நானும் சாதாரணமானவன்
என்பதால், இந்தச் சாதாரணமான வைக்கோலை என்னோடு
வைத்திருக்கின்றேன்" என்றான்.
தன்னுடைய மகனிடமிருந்து இப்படியொரு பதிலை எதிர்பார்த்திராத அந்தச்
சிறுவனின் தந்தை அவனை வியந்து பாராட்டினார்.
ஆம், கடவுள் தன்னுடைய பணிக்கென வலியவர்களை அல்ல, எளியவர்களைப்
தேர்ந்தெடுக்கின்றார்; பெரியவர்களை அல்ல, சிறியவர்களைத்
தேர்ந்தெடுக்கின்றார். அதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
கொரிந்தியருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட
இன்றைய முதல் வாசகம், நமக்கு இதே செய்தியைத்தான் எடுத்துக்கூறுகின்றது.
கடவுள் ஏன் வலியவர்களை தவிர்த்துவிட்டு, எளியவர்களையும் சாதாரணமானவர்களையும்
தேர்ந்தெடுக்கின்றார் என்பதைக் குறித்து இப்பொழுது நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
பள்ளத்தை நோக்கி வெள்ளம் பாய்வதுபோல், தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தை
நோக்கி இறையருள் பாயும்
மழைக்காலங்களில் நாம் பார்த்திருக்கலாம், மழைத்தண்ணீர் எப்பொழுதும்
பள்ளத்தை நோக்கிப் பாய்வதை. இறையருளும்கூட அப்படித்தான். அது
தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தை நோக்கிய பாய்கின்றது. திருவிவிலியத்தில்
வருகின்ற பலர் இதற்கு எடுத்துக்காட்டுகளாக இருந்தாலும், புனித
கன்னி மரியா இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. ஏனெனில், முதன்மை
வானதூதர் கபிரியேல், மரியாவிடம் இறைத்திட்டத்தைப் பற்றிச் சொன்னபொழுது,
"நான் ஆண்டவரின் அடிமை, உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்பார்
மரியா (லூக் 1: 38). இதனால் மரியா எல்லாத் தலைமுறையினரும்
பேறுபெற்றவர் என்று சொல்லும் நிலையைப் பெறுவார் (லூக் 1: 48).
இன்றைய முதல்வாசகத்தில் புனித பவுல், கடவுள் ஞானிகளை வெட்கப்படுத்த,
மடமை என்று உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார் என்கின்றார்.
கடவுள் ஏன் ஞானிகளை வெட்கப்படுத்தி, உலகம் மடமை என்று கருதுபவற்றைத்
தேர்ந்தெடுக்கவேண்டும் என்றால், "ஞானிகள்" எப்பொழுது தங்களுக்கு
எல்லாம் தெரியும் என்ற தலைகனத்தில் ஆடுவார்கள். அப்படிப்பட்டவர்கள்
தங்களைத்தான் முன்னிலைப்படுத்துவார்கள். கடவுளை அல்ல; ஆனால்,
மடமை என்று உலகம் கருதுகிற மனிதர்கள் அப்படிக் கிடையாது. அவர்கள்
மிகுந்த தாழ்ச்சியோடு இருப்பார்கள். அதனாலேயே கடவுள் அவர்களைத்
தேர்ந்தெடுக்கின்றார்.
தாழ்ச்சி மிகுந்தவர்கள் ஞானிகளைப் போன்று தங்களைப் பற்றி அல்ல,
கடவுளைப் பற்றியே பெருமை பாராட்டுவார்கள்
கடவுள் ஏன் ஞானிகளைத் தவிர்த்து, உலகம் தாழ்ந்ததாகக் கருதுபவற்றையும்,
இகழ்ந்ததாகக் கருதுபவற்றையும் தேர்ந்துகொண்டார் என்பதற்குப் பவுல்
சொல்லும் இரண்டாவது காரணம், ஞானிகள் தங்களைக் குறித்துப்
பெருமை பாராட்டுவார்கள்; ஆனால் தாழ்ச்சியானர்கள் தங்களைப் பற்றி
அல்ல, கடவுளைப் பற்றியே பெருமை பாராட்டுவார்கள். இன்னும் சொல்லப்
போனால், தாழ்ச்சியானவர்களிடம் பெருமை பாராட்டுவதற்கு எதுவும்
கிடையாது. அதனால் அவர்கள் கடவுளைப் பற்றிப் பெருமை
பாராட்டுகின்றார்கள்.
ஆகவே, இறையருள் நமக்கும் கிடைக்க வேண்டும் என்றால், நாமும் எளியவர்களாக,
தாழ்ச்சி நிறைந்தவர்களாக வாழவேண்டும். இதற்கு நாம் தயாரா?
சிந்திப்போம்.
சிந்தனை
"தாழ்ச்சி என்பது உங்களைப் பற்றித் தரக் குறைவாக நினைப்பது அல்ல,
உங்களைப் பற்றிக் குறைவாக நினைப்பது" என்பார் ரிக் வாரன் என்ற
அறிஞர். ஆகையால், நாம் நம்மைப் பற்றி அல்ல, இறைவனைப் பற்றியே
நினைத்து, அவருக்குப் பெருமை சேர்ப்போம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 25: 14-30
"ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்பக்
கைம்மாறு அளிக்கும் ஆண்டவர்"
நிகழ்வு
அமெரிக்காவில் தோன்றிய மிகப்பெரிய பேச்சாளர் ஹென்றி வார்ட் பீசர்
(Hendry Ward Beecher 1813- 1887). பன்முகத்தன்மை கொண்டவரான
இவருக்கு ஓர் இளைஞனிடமிருந்து கடிதம் ஒன்று வந்தது. அந்தக் கடிதத்தில்
இவ்வாறு எழுதப்பட்டிருந்தது: "பெரும் மதிப்பிற்குரிய ஹென்றி
வார்ட் பீசர் அவர்களுக்கு வணக்கம்...! நான் இப்பொழுதுதான் என்னுடைய
கல்லூரிப் படிப்பைப் படித்து முடித்தேன். ஆதலால், உங்களிடத்தில்
அல்லது உங்களுக்குத் தெரிந்த "மிகவும் எளிய வேலை" ஏதாவது இருந்தால்
சொல்லுங்கள். நான் அதைச் செய்து, என்னுடையை வாழ்க்கையை ஓட்டிக்
கொள்கின்றேன்."
இக்கடிதத்தை வாசித்த ஹென்றி வார்ட் பீசருக்குச் சற்று அதிர்ச்சியாக
இருந்தது. "பலர் எப்படியெல்லாமோ உழைத்து முன்னுக்கு வருவது பற்றிச்
சிந்தித்துக் கொண்டிருக்கையில், இந்த இளைஞன் இப்படிச்
சிந்தித்துக் கொண்டிருக்கின்றானே...! இவனுக்கு நல்லதோர் அறிவுரையைச்
சொல்லி வைப்போம்" என்று நினைத்துக் கீழ்கண்டவாறு கடிதம் எழுதி
அதை அவர் அவனிடம் அனுப்பி வைத்தார்:
"அன்புத் தம்பி வணக்கம்! உங்களுடைய கடிதத்தைப்
பெற்றுக்கொண்டேன். உங்களுடைய கடிதத்தில், "மிகவும் எளிய வேலை
ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்" என்று கேட்டிருந்தீர்கள். என்னைப்
பொறுத்தளவில், மிகவும் எளிய வேலை என்று எதுவும் கிடையாது. விவசாயம்
பார்ப்பதிலிருந்து, கட்டட வேலை, மருத்துவம் பார்த்தல், ஆசிரியப்
பணி... இப்படி எதுவுமே எளிதான வேலை கிடையாது. எல்லா வேலைகளும்
கடினமான வேலைகள்தான். நீ "மிகவும் எளிதான வேலை" என்று கேட்டதால்
நான் உனக்கு ஒன்றைச் சொல்கின்றேன். கல்லறையில் படுத்துக்கொள்வதுதான்
மிகவும் எளிதான வேலை. இந்த வேலையைச் செய்ய நீ தயாரா...? இப்படிக்கு
ஹென்றி வார்ட் பீசர்."
ஹென்றி வார்ட் பீசரிடமிருந்து இப்படியொரு கடிதத்தைப்
பெற்றுக்கொண்ட அந்த இளைஞன், "மிகவும் எளிய வேலையைப் பார்த்து,
வாழ்க்கையை ஓட்டிக்கொள்ளலாம்" என்ற தன்னுடைய முடிவை
மாற்றிக்கொண்டு, நல்லதொரு வேலையைத் தேடி, கடினமாக உழைத்து, நல்ல
நிலைக்கு வந்தான்.
ஆம், ஒருவருடைய உயர்வும் தாழ்வும் அவருடைய உழைப்பினாலேயே என்ற
செய்தியை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய நற்செய்தி
வாசகமும் நமக்கு இதே செய்தியைத்தான் எடுத்துக்கூறுகின்றது.
நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
கொடுக்கப்பட்ட தாலந்தை நல்லமுறையில் பயன்படுத்துவோருக்குப்
பெரிய பொறுப்பு
நற்செய்தியில், ஆண்டவர் இயேசு விண்ணரசைத் தாலந்துக்கு ஒப்பிடுகின்றார்
.மானிட மகன் மாட்சியோடு வருகின்றபொழுது, ஒவ்வொருவருக்கும்
அவரவர் செயலுக்கேற்பக் கைம்மாறு அளிப்பார் (மத் 16: 27) என்ற
உண்மையை எடுத்துக்கூற, இயேசு இந்த உவமையைச் சொல்கின்றார்.
இந்த உவமையில் வருகின்ற மூன்று பணியாளர்களுக்கும் தாலந்து
கொடுக்கப்படுகின்றது. தாலந்தின் எண்ணிக்கையில் வேறுபாடு இருந்தாலும்,
மூன்று பேர்களுக்கும் தாலந்து கொடுக்கப்பட்டிருக்கின்றதே அதை
நாம் கருத்தில் கொள்ளவேண்டும். இதன்மூலம் கடவுள் யாரையும் திறமையில்லாமல்
படைக்கவில்லை; எல்லாரையும் திறமையோடுதான் படைத்திருக்கின்றார்
என்பதை உணர்ந்துகொள்ளலாம். மேலும் இந்த உவமையில் வருகின்ற முதல்
இரண்டு பணியாளர்கள், தங்களுடைய தலைவர் தங்களிடம் கொடுத்த தாலந்துகளை
நல்லமுறையில் பயன்படுத்துகின்றார்கள். இதனால் அவர்கள் பெரிய
பொறுப்புகளில் அமர்த்தப்படுகின்றார்கள். ஆம், எவர் ஒருவர் கடவுள்
தன்னிடம் கொடுத்த தாலந்தை நல்ல முறையில் பயன்படுத்துகின்றாரோ,
அவர் நிச்சயம் நல்ல நிலைக்கு வருவார்; அவர் இறைவனிடமிருந்து தக்க
கைம்மாறும் பெறுவார்.
கொடுக்கப்பட்ட தாலந்தை நல்லமுறையில் பயன்படுத்தாதோருக்குத் தண்டனை
முதல் இரண்டு பணியாளர்களும் தலைவர் கொடுத்த தாலந்துகளை நல்லமுறை
பயன்படுத்தியபொழுது, கடைசியில் வரும் பணியாளர் தலைவர் தனக்குக்
கொடுத்த தாலந்தைச் சரியாகப் பயன்படுத்தாமல், மண்ணுக்குள்
புதைத்து வைக்கின்றார். அவர் தாலந்தை மண்ணுக்குள் வைத்ததுகூட
பெரிதில்லை; ஆனால், அவர் தலைவரிடம், "நீர் கடின உள்ளத்தினர்...
நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்..." என்று பேசக்கூடிய
வார்த்தைகள்தான் கவனிக்கத் தக்கவையாக இருக்கின்றன. உண்மையில்
எந்தவொரு வேலையும் செய்யாமல், சோம்பேறியாய் இருக்கின்ற ஒருவரால்
மட்டுமே இப்படியெல்லாம் பேச முடியும். கடைசியில் வரும் பணியாளர்
இப்படிப்பேசியதால், தலைவர் அவரிடம், "சோம்பேறியே! பொல்லாத பணியாளனே!"
என்று சொல்லி அவரைக் கடுமையாகத் தண்டிக்கின்றார்.
கடவுள் தனக்குக் கொடுத்த தாலந்தைச் சரியாகப் பயன்படுத்தாதோருக்கும்
சோம்பேறியாய் இருந்துகொண்டு வீண்பேச்சுப் பேசுவோருக்கும் இத்தகைய
தண்டனைதான் கிடைக்கும். இதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும்
கிடையாது. ஆகையால், நமது செயல்களுக்கு ஏற்பக் கைம்மாறு தரும்
இறைவனிடமிருந்து நல்லதொரு கைம்மாறு பெற, நாம் அவர் நமக்குக்
கொடுத்திருக்கும் தாலந்துகளை நல்லமுறையில் பயன்படுத்தி, அவருக்குச்
சான்று பகர்வோம்.
சிந்தனை
"மானிடமகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வானதூதருடன் வரப்போகிறார்,
அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்பக் கைம்மாறு அளிப்பார்"
(மத் 16: 27) என்பார் இயேசு. ஆகையால், நாம் இயேசுவிடமிருந்து
நல்ல கைம்மாறு பெற, நமக்குக் கொடுக்கப்பட்ட தாலந்துகளை நல்லமுறையில்
பயன்படுத்திக் கடவுளுக்குப் பெருமை சேர்ப்போம். சோம்பேறித் தனத்தை
விட்டொழிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
யோபு 3: 1-3, 11-17, 20-23
"ஆண்டவரைச் சபிக்காமல், அவரில் நிலைத்திருந்த யோபு"
நிகழ்வு
விறகுவெட்டி ஒருவர் இருந்தார். இவர் ஊருக்கு வெளியே இருந்த ஒரு
காட்டுப் பகுதியில் குடிசையமைத்து, அதில் தன் மனைவி, மக்களோடு
மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். ஒவ்வொருநாளும் இவர்
காட்டுக்குள் சென்று, விறகு வெட்டி, அதைச் சந்தையில் விற்று,
அதன்மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு மனநிறைவோடு வாழ்ந்து
வந்தார். மட்டுமல்லாமல், மாலை வேளையில் இவர் தன் மனைவி,
பிள்ளைகளோடு இறைவனைப் பாடிப் போற்றி நிம்மதியாக இருந்தார்.
ஒருநாள் இந்த விறகுவெட்டியின் குடிசையை அந்நாட்டு மன்னன்
கடக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அவன், தன் வறியநிலையிலும்
விறகுவெட்டி குடும்பத்தோடு மனநிறைவோடு இருப்பதைக் கண்டு
ஆச்சரியப்பட்டான். "எப்படி இந்த விறகுவெட்டியால் இவ்வளவு
மனநிறைவோடு இருக்க முடிகின்றது...? இவனுடைய மகிழ்ச்சியைக்
கெடுக்க நாம் ஏதாவது செய்யவேண்டும்" என்று தீர யோசித்துவிட்டு,
தன் படைவீரரை விறகுவெட்டியிடம் அனுப்பி, "நாளை காலையில் ஐம்பது
சாக்கு மூட்டைகள் நிறைய மரத்துகள்கள் வேண்டும். இல்லையென்றால்
குடும்பத்தோடு கொல்லப்படுவாய். இது மன்னருடைய உத்தரவு" என்று
சொல்லச் சொன்னான்.
படைவீரன் இச்செய்தியை விறகுவெட்டியிடம் சொன்னபொழுது மிகவும்
அதிர்ந்து போனார். "ஒருநாள் இரவுக்குள் எப்படி ஐம்பது சாக்கு
மூட்டைகள் நிறைய மரத்துகள்களை வெட்டுவது...? இது யாராலும்
முடியாத செயல்! மன்னன் என்னைக் குடும்பத்தோடு கொல்வதற்குத்தான்
இப்படி நயவஞ்சகமாகச் செயல்படுகின்றான்" என்று நினைத்து
நினைத்து வருந்தினார் விறகுவெட்டி. இதை இவர் தன் மனைவியிடம்
சொன்னபொழுது, "இத்தனை நாள்களும் நாம் இறைவனைப் பாடிப்
போற்றிவிட்டுத்தானே தூங்கச் செல்வோம். அதுபோல் இன்றைக்கும்
நாம் மகிழ்ச்சியாக இறைவனைப் பாடிப் போற்றிவிட்டுத் தூங்கச்
செல்வோம். நடப்பது நடக்கட்டும்" என்று சொல்லி விறகுவெட்டியைத்
தேற்றினார் அவருடைய மனைவி. இதற்குப் பிறகு விறகுவெட்டி, தன்
மனைவி, மக்களோடு சேர்ந்து இறைவனை பாடிப் போற்றிவிட்டு, இரவு
உணவு முடித்துக்கொண்டு நிம்மதியாகத் தூங்கச் சென்றார்.
மறுநாள் காலையில் விறகுவெட்டி இருந்த குடிசையின் கதவு பலமாகத்
தட்டப்பட்டது. "நாம் சாவது உறுதி" என்று பதறியவாறு விறகுவெட்டி
கதவைத் திறக்கச் சென்றபொழுது, அவருடைய மனைவி, "நடப்பது
நடக்கட்டும்... பதறாமல் செல்லுங்கள்" என்று அவரைத் தேற்றி
அனுப்பி வைத்தார். பின் விறகுவெட்டி மெதுவாகக் கதவைத் திறந்து
பார்த்தார். இவருக்கு முன் முந்தைய நாளில் வந்த அதே படைவீரன்
நின்றுகொண்டிருந்தான். "இவன் என்ன சொல்லக்
காத்திருக்கின்றானோ...?" என்று விறகுவெட்டி சிறிது பதற்றத்தோடு
இருந்தபொழுது, படைவீரன் இவரிடம், "நேற்று இரவு மன்னர்
மாரடைப்பால் இறந்துபோய்விட்டார்; அவர் அடக்க செய்வதற்காக நல்ல
கட்டைளாகப் பன்னிரண்டு கட்டைகள் வைத்து, சவப்பெட்டி செய்து தா"
என்றான். இப்படியெல்லாம் நடக்கும் என்பதைக் கனவிலும்
நினைத்துப் பார்த்திராத விறகுவெட்டி நிம்மதிப் பெருமூச்சு
விட்டார் .
ஆம், இறைவன் தன் அடியார்களை ஒருபொழுதும் கைவிடுவதுவதில்லை.
இறைவன்மீது மிகுந்த பற்றுகொண்டிருந்த இந்த நிகழ்வில் வருகின்ற
விறகுவெட்டி மன்னனிடமிருந்து உத்தரவு வந்ததும், தான்
நம்பிருந்த இறைவனைச் சபிக்கவில்லை. மாறாக, அவரில் இன்னும்
உறுதியாக இருந்தார். அதனால் இறைவன் அவரைப் பாதுகாத்தார்.
இன்றைய முதல் வாசகம், தனக்குப் பல துன்பங்கள் வந்தபொழுதும்
ஆண்டவரைப் பழித்துரைக்காமல், அவரில் நிலைத்திருந்த யோபுவைப்
பற்றி எடுத்துக்கூறுகின்றது. யோபு பல்வேறு துன்பங்கள்,
இழப்புகளுக்கு நடுவில் ஆண்டவரில் எப்படி உறுதியாக இருந்தார்
என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
ஆண்டவரில் உறுதியாக இருந்த யோபு
இறைவனுக்கு அஞ்சி வாழ்ந்த யோபுக்கு இழப்புக்கு மேல் இழப்பு
ஏற்படுகின்றது. அவரது உடைமைகள் அவரை விட்டுப் போகின்றன;
அவருடைய பிள்ளைகள் இறந்து போகிறார்கள். இப்படிப்பட்ட
சூழ்நிலையில் யோபுவின் மனைவி அவரிடம் கடவுளைப் பழித்துரைக்கச்
சொல்கின்றார். யோபுவோ ஆண்டவரைப் பழித்துரைக்கவில்லை. மாறாக,
தன் பிறந்த நாளைப் பழித்துரைக்கின்றார். இதை வேறு
வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், எத்தகைய துன்பங்கள்
வந்தபொழுதும் யோபு ஆண்டவரைப் பழித்துரைக்காமல், அவரில்
உறுதியாக இருந்தார்.
யோபுவைப் போன்று நாம் பல்வேறு துன்பங்கள், இழப்புகள்
வந்தாலும், ஆண்டவரில் உறுதியாக இருக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
"என்ன நேர்ந்தாலும் ஏற்றுக்கொள்; இழிவுவரும்பொது பொறுமையாய்
இரு" (சீரா 2:4) என்கிறது சீராக்கின் ஞானநூல். ஆகையால், நாம்
நம்முடைய வாழ்வில் எந்த நேர்ந்தாலும் ஏற்றுக்கொண்டு, யோபுவைப்
போன்று பொறுமையாகவும், ஆண்டவரில் உறுதியாகவும் இருப்போம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். |
|