Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                  27 ஆகஸ்ட் 2020  

பொதுக்காலம் 21ஆம் வாரம்

=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 எல்லா வகையிலும் செல்வர்கள் ஆனீர்கள்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-9

கொரிந்து நகரிலுள்ள கடவுளின் திருச்சபைக்கு அவர் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனாக அழைக்கப்பட்ட பவுலும் சகோதரராகிய சொஸ்தேனும் எழுதுவது: இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பெற்றுத் தூயோராக்கப்பட்டு இறைமக்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ள உங்களுக்கும், எல்லா இடங்களிலும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிக்கையிடும் யாவருக்கும், நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக! இயேசு கிறிஸ்து நமக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர்.

கிறிஸ்து இயேசுவின் வழியாக நீங்கள் பெற்றுக் கொண்ட இறையருளை முன்னிட்டு உங்களை நினைத்து என் கடவுளுக்கு என்றும் நன்றி செலுத்துகிறேன். ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பெற்றுச் சொல்வன்மையும் நிறையறிவும் பெற்று, எல்லா வகையிலும் செல்வர்கள் ஆனீர்கள். மேலும் கிறிஸ்துவைப் பற்றிய சான்று உங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்காகக் காத்திருக்கும் உங்களுக்கு அருட்கொடை எதிலும் குறையே இல்லை. நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வெளிப்படும் நாளில் நீங்கள் குறைச் சொல்லுக்கு ஆளாகாதிருக்க அவர் உங்களை இறுதிவரை உறுதிப்படுத்துவார். கடவுள் நம்பிக்கைக்கு உரியவர்; தம் மகனும் நம் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நட்புறவில் பங்கு பெற உங்களை அவர் அழைத்துள்ளார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 145: 2-3. 4-5. 6-7 . (பல்லவி: 1)  Mp3
=================================================================================


பல்லவி: என் கடவுளே, உமது பெயரை எப்பொழுதும் போற்றுவேன்.
2
நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன்.
3
ஆண்டவர் மாண்புமிக்கவர்; பெரிதும் போற்றுதலுக்கு உரியவர்; அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது. - பல்லவி

4
ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு உம் செயல்களைப் புகழ்ந்துரைக்கும்; வல்லமைமிகு உம் செயல்களை எடுத்துரைக்கும்.
5
உமது மாண்பின் மேன்மையையும் மாட்சியையும் வியத்தகு உம் செயல்களையும் நான் சிந்திப்பேன். - பல்லவி

6
அச்சந்தரும் உம் செயல்களின் வல்லமையைப் பற்றி மக்கள் பேசுவார்கள்; உமது மாண்பினை நான் விரித்துரைப்பேன்.
7
அவர்கள் உமது உயர்ந்த நற்பண்பை நினைந்து கொண்டாடுவார்கள்; உமது நீதியை எண்ணி ஆர்ப்பரித்துப் பாடுவார்கள். - பல்லவி



=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 
மத் 24: 42a, 44

அல்லேலூயா, அல்லேலூயா! விழிப்பாய் இருங்கள்; ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
ஆயத்தமாய் இருங்கள். நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 42-51

அக்காலத்தில்

இயேசு தம் சீடரிடம் கூறியது: "விழிப்பாய் இருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது. இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.

தம் வீட்டு வேலையாள்களுக்கு வேளாவேளை உணவு பரிமாறத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான பணியாளர் யார்? தலைவர் வந்து பார்க்கும்போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர். அவரைத் தம் உடைமைகளுக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

அப்பணியாள் பொல்லாதவனாய் இருந்தால், தன் தலைவர் வரக் காலந் தாழ்த்துவார் எனத் தம் உள்ளத்தில் சொல்லிக் கொண்டு, தன் உடன்பணியாளரை அடிக்கவும் குடிகாரருடன் உண்ணவும் குடிக்கவும் தொடங்குவான். அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வருவார். அவர் அவனைக் கண்டந்துண்டமாய் வெட்டி வெளிவேடக்காரருக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்."

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 1 கொரிந்தியர் 1: 1-9

"இயேசு கிறிஸ்து நமக்கு மட்டுமல்ல அல்ல, அனைவருக்கும் ஆண்டவர்"

நிகழ்வு

மெத்தோடிஸ்ட் திருஅவையை நிறுவியவர் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த ஜான் வெஸ்லி (1703-1791). ஒருநாள் இவர் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் இவர் பாதாளத்தின் வாயிலுக்கு முன்பாக, அதாவது நரகத்தின் வாயிலுக்கு முன்பாக நின்றார்.

பாதாளத்தின் வாயிலுக்கு முன்பாகக் காவலாளி ஒருவர் இருந்தார். ஜான் வெஸ்லி அந்தக் காவலாளியிடம், "இங்குக் கத்தோலிக்கர்கள் இருக்கின்றார்களா?" என்றார். "ஆம். பலர் இருக்கின்றார்கள்" என்றார் அந்தக் காவலாளி. "ஆங்கிலிக்கன் திருஅவைச் சார்ந்தவர்கள் இங்கு இருக்கின்றார்களா?" என்று அவர் அடுத்த கேள்வியைக் கேட்டார். "ஆம். பலர் இருக்கின்றார்கள்" என்றார் காவலாளி. ஜான் வெஸ்லி விடாமல் அவரிடம், "லூத்தரன் திருஅவையைச் சார்ந்தவர்கள்... பாப்டிஸ்ட் திருஅவையைச் சார்ந்தவர்கள்...ஆர்த்தோடாக்ஸ் திருஅவையைச் சார்ந்தவர்கள்... ஆகியோரெல்லாம் இங்கு இருக்கின்றார்களா?" என்றார். "ஆம். நீங்கள் சொன்ன திருஅவையிலிருந்து பலர் இங்கு இருக்கின்றார்கள்" என்றார் காவலாளி.

"சரி, கடைசியாக ஒரு கேள்வி. இந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லிவிட்டால், இனிமேல் கேள்வியே கேட்கமாட்டேன்" என்று சொல்லிவிட்டு ஜான் வெஸ்லி அவரிடம், "இங்கு மெத்தோடிஸ்ட் திருஅவையிலிருந்து யாராவது இருக்கின்றார்களா?" என்றார். அதற்கு அந்தக் காவலாளி, "ஆம். மெத்தோடிஸ்ட் திருஅவையிலிருந்தும் இங்குப் பலர் இருக்கின்றார்கள்" என்றார். இதைக் கேட்ட ஜான் வெஸ்லிக்குத் தூக்கிவாரிப் போட்டது.

பின்னர் அவர் விண்ணகத்தின் வாயிலுக்கு முன்பாக வந்தார். அங்கிருந்த பேதுருவிடம், "இங்குக் கத்தோலிக்கர்கள இருக்கின்றார்களா?" என்றார். "அப்படி யாரும் இங்குக் கிடையாது" என்றார் பேதுரு. "ஆங்கிலிக்கன், லூத்தரன், பாப்டிஸ்ட், ஆர்த்தோடாக்ஸ் ஆகிய திருஅவையைச் சார்ந்தவர்கள் இருக்கின்றார்களா?" என்று ஜான் வெஸ்லி கேட்டதற்கு, "அவர்கள் யாரும் இங்குக் கிடையாது" என்றார் பேதுரு. "சரி, மெத்தோடிஸ்ட் திருஅவையைச் சார்ந்தவர்கள் யாராவது இங்கு இருக்கின்றார்களா?" என்று ஜான் வெஸ்லி கேட்டதற்குப் பேதுரு, "அப்படி யாரும் இங்குக் கிடையாது" என்றார் பேதுரு.

இதனால் பொறுமையிழந்த ஜான் வெஸ்லி, "இங்குக் கத்தோலிக்கர், ஆங்கிலிக்கன் திருஅவையைச் சார்ந்தவர், லூத்தரன் திருஅவையைச் சார்ந்தவர், பாப்டிஸ்ட் திருஅவையைச் சார்ந்தவர்... மெத்தோடிஸ்ட் திருஅவையைச் சார்ந்தவர் என யாருமே இல்லையென்றால், யார்தான் இங்கு இருக்கின்றார்?" என்றார். இதற்குப் பேதுரு மிகவும் பொறுமையாக அவரிடம், "கத்தோலிக்கர், ஆங்கிலிக்கன் திருஅவையைச் சார்ந்தவர், லூத்தரன் திருஅவையைச் சார்ந்தவர், பாப்டிஸ்ட் திருஅவையைச் சார்ந்தவர்... மெத்தோடிஸ்ட் திருஅவையைச் சார்ந்தவர் என்று பிரித்துப் பார்ப்பதற்கு இது ஒன்றும் பாதாளம் கிடையாது; விண்ணகம். விண்ணகத்தில் எந்தவொரு வேறுபாடும் கிடையாது. இங்கு எல்லாருக்கும் இடமுண்டு. இங்கிருக்கின்ற எல்லாரும் கடவுளின் மக்கள். ஏனெனில், கடவுள் எல்லாருக்கும் பொதுமானவர்" என்றார்.

மண்ணகத்திலும் பாதாளத்திலும் வேண்டுமானால் வேறுபாடு இருக்கலாம்; ஆனால், விண்ணகத்தில் எந்தவொரு வேறுபாடும் கிடையாது. ஏனெனில் எல்லாரும் கடவுளின் மக்கள்; கடவுள் எல்லாருக்கும் பொதுவானவர் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு அல்லது கதை நமது சிந்தனைக்குரியது. இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல், கிறிஸ்து நமக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர் என்கின்றார். புனித பவுல் சொல்லக்கூடிய இச்சொற்களின் பொருள் என்ன என்று இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஆண்டவருக்கும் ஆண்டவரான இயேசு

தனது வழக்கமான வாழ்த்துச் செய்திகளோடு திருஅவைகளுக்குக் கடிதம் எழுதும் புனித பவுல், கிரேக்க நாட்டின் தென்பகுதியில் இருந்த, பலதரப்பட்ட மக்களைக் கொண்ட கொரிந்து நகரத் திருஅவைக்கு கடிதம் எழுதுகின்றபொழுதும், "தந்தையாம் கடவுளிடமிருந்தும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக!" என்றே எழுதுகின்றார்.

இந்த வாழ்த்துச் செய்தியை அவர் எழுதிவிட்டு, "இயேசு கிறிஸ்து நமக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர்" என்று எழுதுகின்றார். புனித பவுல் எழுதும் இவ்வார்த்தைகள் நமது ஆழமான சிந்தனைக்குரியவையாக இருக்கின்றன. இயேசு அனைவருக்கும் ஆண்டவர் என்றால், அவர் எல்லாருக்கும் பொதுவானவர் என்றுதானே பொருள். இப்படி அனைவருக்கும் ஆண்டவராக இருக்கும் இயேசு, எல்லாரும் மீட்புப் பெற விரும்புகின்றார் (1திமொ 2:4). அப்படியானால், அனைவருக்கும் ஆண்டவராக இயேசுவின் வழியில் நடக்கும் ஒவ்வொருவரும் தங்களிடம் இருக்கின்ற வேறுபாட்டைக் களைந்து கிறிஸ்துவில் ஓரிடலாக (1 கொரி இணைந்து வாழ்வதுதானே நல்லது. ஆனால், இன்றைக்குப் பலர் கிறிஸ்தவர்களாக இருந்துகொண்டு மக்களை வேறுபடுத்தியதும், மக்களிடம் பிளவை உண்டாக்கியும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார். இப்படிப்பட்டவர்கள் கிறிஸ்துவர்கள் என்று அழைக்கப்படத் தகுதியற்றவர்கள்.

ஆகையால், அனைவருக்கும் ஆண்டவராக இருக்கும் இயேசுவின் வழிநடக்கும் நாம், மக்களிடம் பிளவை ஏற்படுத்தாமல், ஒற்றுமை ஏற்படுத்தி, கிறிஸ்துவில் ஓருடலாக வாழ முயற்சி செய்வோம்.

சிந்தனை

"இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை; ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள" (கலா 3: 28) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் இயேசு அனைவருக்கும் ஆண்டவர் என்ற உண்மையை உணர்ந்தவர்களாய், நம்மிடம் இருக்கின்ற வேறுபாடுகளைக் களைந்துவிட்டு, கிறிஸ்துவில் ஒன்றாய் இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மத்தேயு 24: 42-51

"விழிப்பாய் இருங்கள்"

நிகழ்வு

முன்பொரு காலத்தில் ஜாஸ்பர் என்றொரு வணிகர் இருந்தார். இவர் பட்டு, நறுமணப் பொருள்கள், வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றைக் குறைந்த விலைக்கு வாங்கி அவற்றை பெரிய விலைக்கு விற்று, அதன்மூலம் மிகுந்த இலாபம் அடைந்து வந்தார். இதனால் இவர் பல நாடுகளையும் சுற்றி வந்தார்கள்; பல மனிதர்களும் இவருக்கு அறிமுகமானார்கள்.

ஒருநாள் இவர் ஒரு நகருக்குச் சென்றிருந்தபொழுது, அங்கிருந்தவர்கள் இவரிடம், "இங்கொரு பெரியவர் இருக்கின்றார். அவரிடம் நீங்கள் என்ன கேள்வி கேட்டாலும், அதற்கான பதிலை அவர் சொல்வார். அவரிடம் நீங்கள் உங்கள் தொழில் நிமித்தமாக ஏதாவது கேட்டுப் பாருங்கள். நிச்சயம் பயனுள்ள தகவல்களை அவர் தருவார்" என்றார். ஜாஸ்பரும் அதற்குச் சரியென்று என்று சொல்லிவிட்டு, அந்தப் பெரியவரைப் போய்ப் பார்த்து, தான் யார் என்பதையும், தான் செய்யும் தொழில் என்ன என்பதையும், தான் அவரிடம் வந்த நோக்கம் என்ன என்பதையும் எடுத்துச் சொன்னார்.

அப்பொழுது பெரியவர் அவரிடம், "நீ இமயமலைச் சரிவில் உள்ள ஓர் இடத்திற்குப் போ. அங்கு சென்றால், நீ எதிர்பார்ப்பதை விடவும் விலையுயர்ந்த பொருள்கள் கிடைக்கும்" என்றார். உடனே ஜாஸ்பர் அந்தப் பெரியவருக்கு நன்றி சொல்லிவிட்டு, அவர் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று, விலையுயர்ந்த பொருள்களைத் தேடித் பார்த்தார். நேரம் கடந்தது. ஒருநாள், இரண்டு நாள், மூன்று நாள் என்று நாள்கள் கடந்தனவே ஒழிய, ஜாஸ்பரால், பெரியவர் சொன்ன விலையுயர்ந்த பொருள்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. "ஒருவேளை பெரியவர் நம்மை ஏமாற்றிவிட்டாரோ?" என்று நினைத்த ஜாஸ்பர், வருத்தத்தோடு பெரியவரிடம் திரும்பிவந்து, நடந்த அனைத்தையும் அவரிடம் எடுத்துச் சொன்னார்.

எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த பெரியவர் அவரிடம், "நான் சுட்டிக்காட்டிய இடத்தில் இருந்த கற்கள் எல்லாம் சாதாரண கற்கள் என்று நினைத்தாயா...? அவை முழுவதும் வைரக்கற்கள். நீ சென்று வந்த அந்த இடத்திற்குப் பெயர் வைரப் பள்ளத்தாக்கு. இன்னொரு முறை நீ அங்கு சென்றால், வைரங்கள் அங்கு இருக்காது" என்றார். "என்ன! நான் சென்றுவந்த இடம் வைரப் பள்ளத்தாக்கா...? சூரிய ஒளியில் பட்டு ஒருசில கற்கள் மின்னின. அவற்றை அவன் சாதாரண கற்கள் என நினைத்துக்கொண்டு திரும்பி வந்துவிட்டேனே!" என்று சொல்லி தன்னயே நொந்துகொண்டார் ஜாஸ்பர்.

இந்த நிகழ்வில் வருகின்ற ஜாஸ்பர் என்ற வணிகர் எப்படி விழிப்புணர்வுடன் செயல்படாமல், விலையுயர்ந்த வைரக்கற்களைக் கோட்டைவிட்டாரோ, அப்படி நாமும் பல நேரங்களில் விழிப்புணர்வுடன் செயல்படாமல், ஏனோதானோ என்று செயல்பட்டு, பலவற்றைக் கோட்டைவிட்டுக் கொண்டிருக்கின்றோம். இத்தகைய சூழ்நிலையில் இன்றைய நற்செய்தி வாசகம், நாம் விழிப்பாக இருக்கவேண்டும்... நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளில் நம்பிக்குரியவர்களாக இருக்கவேண்டும் என்ற அழைப்பினைத் தருகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஆண்டவர் எந்த நேரத்தில் வருவார் என்பது தெரியாததால், விழிப்பாய் இருக்கவேண்டும்

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, மானிடமகனுடைய இரண்டாவது வருகையைக் குறித்துப் பேசுகின்றார். மானிடமகன் வரும் நாளும் வேளையும் தந்தை ஒருவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது (மத் 24: 36) என்று சொல்லும் இயேசு, அவருடைய வருகை ஒரு திருடனின் வருகையைப் போன்று இருக்கும் என்று குறிப்பிடுகின்றார். திருடன் ஒருவீட்டில் வருகின்றான் என்றால், யாரிடமும் சொல்லிக்கொண்டு வருவதில்லை. மாறாக, யாரும் நினையாத நேரத்தில்தான் வருவான். அதுபோன்றுதான் மானிட மகனும் யாரும் நினையாத நேரத்தில் வருவர். அதனால் அவருடைய வருகையை எதிர்கொள்ள ஒவ்வொருவரும் விழிப்பாய் இருக்கவேண்டும் என்கின்றார். இயேசு.

தலைவர் வரும்நேரம் தெரியாததால், நம்பிக்கைக்குரியவர்களாய் இருக்கவேண்டும்

மானிடமகனின் வருகை ஒரு திருடனின் வருகையைப் போன்று இருக்கும்... அதனால் ஒவ்வொருவரும் விழிப்பாய் இருக்கவேண்டும் என்று சொன்ன இயேசு, எப்படி விழிப்பாய் இருக்கவேண்டும் என்பதை தலைவர் பணியாளர் உவமை வழியாக விளக்குகின்றார். முன்பெல்லாம் போக்குவரத்து வசதிகளோ, தொலைத்தொடர்பு வசதிகளோ கிடையாது. அதனால் தலைவர் இந்த நேரத்தில் வருவார் என்று பணியாளருக்குத் தெரிவதற்கு வாய்ப்பில்லை அதனால் அவர் எப்பொழுதும் தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய், உண்மையுள்ளவராய் இருந்து விழிப்பாய் இருக்கவேண்டும். ஆண்டவர் இயேசு இந்த நடைமுறை உண்மையை எடுத்துக்கொண்டு, மானிடமகன் எப்பொழுது வருவார் என்று தெரியாததால், ஒவ்வொருவரும் அவரவருக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய், உண்மையுள்ளவராய் இருந்து, அதன்மூலம் விழிப்பாய் இருக்க வேண்டும் என்கின்றார் இயேசு.

நாம் நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளில் உண்மையாகவும் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்து, விழிப்பாய் இருக்கின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனை

"விழிப்பாய் இருப்போர் பேறுபெற்றோர்" (திவெ 16: 15) என்கின்றது திருவெளிப்பாட்டு நூல். ஆகையால், நாம் மானிடமகனின் வருகைக்காக விழிப்பாய் இருந்து, அவரை எதிர்கொள்ளத் தயாராவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!