|
|
26
ஆகஸ்ட் 2020 |
|
பொதுக்காலம்
21ஆம் வாரம்
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது.
திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய
இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 6-10, 16-18
அன்பர்களே! எங்களிடமிருந்து நீங்கள் பெற்றுக் கொண்ட முறைமையின்படி
ஒழுகாமல் சோம்பித்திரியும் எல்லாச் சகோதரர் சகோதரிகளிடமிருந்தும்
விலகி நில்லுங்கள் என, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால்
நாங்கள் உங்களுக்குக் கட்டளையிடுகிறோம். எங்களைப் போல் ஒழுகுவது
எப்படி என்பது உங்களுக்கே தெரியும். ஏனெனில், உங்களிடையே இருந்தபோது
நாங்கள் சோம்பித் திரியவில்லை. எவரிடமும் இலவசமாக நாங்கள் உணவருந்தவில்லை.
மாறாக, உங்களுள் எவருக்கும் சுமையாய் இராதபடி, இராப் பகலாய்ப்
பாடுபட்டு உழைத்தோம். எங்களுக்கு வேண்டியதைப் பெற உரிமை இல்லை
என்பதால் அல்ல; மாறாக, நீங்களும் எங்களைப்போல நடப்பதற்காக உங்களுக்கு
முன்மாதிரி காட்டவே இவ்வாறு செய்தோம். "உழைக்க மனமில்லாத எவரும்
உண்ணலாகாது" என்று நாங்கள் உங்களிடையே இருந்தபோதே உங்களுக்குக்
கட்டளை கொடுத்திருந்தோம்.
அமைதியை அருளும் ஆண்டவர்தாமே எப்பொழுதும் எல்லா வகையிலும் உங்களுக்கு
அமைதி அளிப்பாராக! ஆண்டவர் உங்கள் அனைவரோடும் இருப்பாராக!
இவ்வாழ்த்தைப் பவுலாகிய நான் என் கைப்பட எழுதுகிறேன். நான் எழுதும்
திருமுகம் ஒவ்வொன்றுக்கும் இதுவே அடையாளம். இதுவே நான் எழுதும்
முறை. நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் உங்கள் அனைவரோடும்
இருப்பதாக!
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 128: 1-2. 4-5 . (பல்லவி: 1) Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழி நடப்போர் பேறுபெற்றோர்!
1
ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்!
2
உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும்
பெறுவீர்! - பல்லவி
4
ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார்.
5
ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம்
வாழ்நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி
செய்வாராக! - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
1 யோவா 2: 5
அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவின் வார்த்தையைக் கடைப்பிடிப்போரிடம்
கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகிறது. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நீங்கள் இறைவாக்கினரைக் கொன்றவர்களின்
வழிமரபினர்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து
வாசகம் 23: 27-32
அக்காலத்தில்
இயேசு கூறியது: "வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ!
உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் வெள்ளையடித்த கல்லறைகளுக்கு
ஒப்பானவர்கள். அவை புறம்பே அழகாகத் தோற்றமளிக்கின்றன; அவற்றின்
உள்ளேயோ இறந்தவர்களின் எலும்புகளும் எல்லா வகையான அழுக்குகளும்
நிறைந்திருக்கின்றன. அவ்வாறே நீங்களும் வெளியே மக்களுக்கு
நேர்மையாளராய்த் தோற்றமளிக்கிறீர்கள். ஆனால் உள்ளேயோ போலித்தனமும்
நெறிகேடும் நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள்.
வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக்
கேடு! ஏனெனில் நீங்கள் இறைவாக்கினர்களின் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்;
நேர்மையாளரின் நினைவுச் சின்னங்களை அழகுபடுத்துகிறீர்கள்;
"எங்கள் மூதாதையர் காலத்தில் நாங்கள் இருந்திருந்தால் இறைவாக்கினர்களின்
கொலைக்கு உடந்தையாக இருந்திருக்க மாட்டோம்" என்கிறீர்கள். இவ்வாறு
நீங்கள் இறைவாக்கினரைக் கொன்றவர்களின் வழிமரபினர் என்பதற்கு
நீங்களே சாட்சிகள். உங்கள் மூதாதையர் செய்த கொடுமையின் அளவுக்கு
நீங்களும் செய்து முடியுங்கள்."
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
2 தெசலோனிக்கர் 3: 6-10, 16-18
"உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது"
நிகழ்வு
பெண்ணொருத்தி இருந்தார். இவருக்கு மூன்று பிள்ளைகள் இருந்தார்கள்.
மிகவும் சாதாரண குடும்பப் பின்னணியைக்கொண்ட இவர், ஒருநாள் தன்னுடைய
வீட்டிற்குப் பின்னால் இருந்த புதரில் ஒரு கோழி முட்டையைக் கண்டார்.
அதைக் கண்டதும், தன்னுடைய கையில் எடுத்துக்கொண்டு, வேகமாகத் தன்னுடைய
வீட்டிற்குள் வந்த இவர், தன் மூன்று பிள்ளைகளையும் அழைத்து, இவ்வாறு
பேசத் தொடங்கினார்:
"பிள்ளைகளே! இதுவரை நாம் நம்முடைய வாழ்வில் அனுபவித்த துன்பமெல்லாம்
இன்றோடு முடிவுக்கு வரப்போகிறது; இனிமேல் நாம் எதைப் பற்றியும்
கவலைப்படத் தேவையில்லை. என்னுடைய கையில் இருக்கின்றதே இந்த
முட்டை! இதை நான் நம்முடைய வீட்டிற்குப் பின்னால் கண்டெடுத்தேன்.
இதை நாம் பக்கத்துக்கு வீட்டில் இருக்கின்ற கோழியிடம் அடைகாக்க
வைத்தால், அது இந்த முட்டையை ஓரிரு நாள்களில் பொரித்துவிடும்.
பின் அதிலிருந்து வரும் கோழிக்குஞ்சை வளர்ப்போம். அது பெரிதாக
வளரும்பொழுது பல முட்டைகள் இடும்; அவற்றிலிருந்து பல கோழிக்
குஞ்சுகள் வரும். அவற்றை நாம் வளர்த்தால், நம்மிடத்தில் கோழிகள்
பெருகும்.
அவற்றை நாம் விற்று ஒரு கன்றுக்குட்டி வாங்கலாம். அதை நன்றாக
வளர்த்தால் ஒரு பெரிய மாடாகும். அது அவ்வப்பொழுது கன்றுக்
குட்டிகளை ஈனும். அவற்றை விற்று ஒரு பண்ணை நிலம் வாங்கலாம். அந்தப்
பண்ணை நிலத்தை நன்றாகப் பராமரித்து பெரிய விலைக்கு விற்கலாம்.
பின்னர் புதிதாக ஒரு பண்ணை நிலத்தை வாங்கலாம். அதையும் நன்றாகப்
பராமரித்துப் பெரிய விலைக்கு விற்கலாம். இப்படியே பண்ணை நிலத்தை
வாங்குவதும், அதை நன்றாகப் பராமரித்துப் பெரிய விலைக்கு விற்பதுமாக
இருந்தால், நம்முடைய வாழ்க்கை எங்கோ போய்விடும்! அதன்பிறகு
நாம் எதைப் பற்றியும் கவலைப்படாமல், நன்றாக உட்கார்ந்து சாப்பிடலாம்."
இப்படி உணர்ச்ச்சிப் பூர்வமாகப் பேசிக்கொண்டிருந்த பெண்மணி, ஏதோவொரு
நியாபகத்தில் தன் கையில் இருந்த முட்டையை நழுவவிட்டார். அது
கீழே விழுந்து உடைந்து போனது. எல்லாவற்றையும் ஆச்சரியமாகக்
கேட்டுக்கொண்டிருந்த அந்தப் பெண்மணியின் மூன்று பிள்ளைகளும்
அவரும் தங்களுடைய கனவு இப்படிப் பாழாகிவிட்டதே என்று
நொந்துகொண்டார்கள் (-Willi Hoffsuemmer)
இந்த நிகழ்வில் வருகின்ற பெண்மணியைப் போன்றுதான், இன்றைக்கு ஒருசிலர்
எந்தவொரு செயலிலும் இறங்காமல், சோம்பேறியாக இருந்துகொண்டு
பேசிப் பேசியே பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்டவர்களுக்குச்
சரியான பாடமாய் இருப்பதுதான் இன்றைய முதல்வாசகம். அதைக்
குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
ஆண்டவரின் நாளைக் குறித்த குழப்பம்
புனித பவுலும், அவருடைய உடன் பணியாளர்களும் தெசலோனிக்காவில் ஆண்டவரின்
நற்செய்தியை அறிவித்துவிட்டுத் திரும்பிய பின், ஒருசில போலி இறைவாக்கினர்கள்
ஆண்டவர் நாள் வந்துவிட்டதென அங்கிருந்த மக்களிடம் சொல்லி வந்தார்கள்.
இதனால் அந்த மக்களில் இருந்த ஒருசிலர், "ஆண்டவரின் நாள்தான்
வரப்போகிறதே...! பிறகு எதற்கு நாம் உழைக்கவேண்டும்!" என்று உழைக்காமல்,
சோம்பேறியாய் இருக்கத் தொடங்கினார்கள். சோம்பேறித்தனம் அடுத்தவரைப்
பற்றிப் புரணி பேச வைக்கும்தானே! தெசலோனிக்கவில் உழைக்காமல்,
சோம்பித்திரிந்தவர்கள் அடுத்தவர்களைப் பற்றிப் புரணி பேசத் தொடங்கினார்கள்.
இதனால்தான் பவுல் அவர்களிடம், "எங்களிடமிருந்து நீங்கள்
பெற்றுக்கொண்ட முறைமைகளின்படி ஒழுகாமல் சோம்பித் திரியும் எல்லாச்
சகோதர சகோதரிகளிடமிருந்தும் விலகி நில்லுங்கள்" என்கின்றார்.
முன்மாதிரி காட்டிய பவுல்
சோம்பித்திரியும் சகோதரர் சகோதரிகளிடமிருந்து மற்றவர்கள் விலகி
இருக்கவேண்டும் என்று பவுல் சொல்வதற்குக் காரணம், அவர்கள் மற்றவர்களுடைய
மனத்தைக் கெடுத்துவிடுவார்கள் என்பதாலேயே! சோம்பித் திரியக்கூடாது
என்று சொல்லும் புனித பவுல், தன்னைப் போன்று அல்லது தன்னோடு இருந்தவர்களைப்
போன்று வாழவேண்டும் என்று அந்த மக்களுக்கு அறிவுறுத்துகின்றார்.
புனித பவுல் தன்னுடைய உடன்பணியாளர்களுடன் தெசலோனிக்காவில் இருந்தபொழுது,
யாருக்கும் சுமையாக இருக்கவில்லை; மாறாக இராப்பகலாகப் பாடுபட்டு
உழைத்தார்; தான் செய்துவந்த கூடாரத் தொழில் மூலம் அவர் தன்னுடைய
வாழ்வாதாரத்தைப் பார்த்துக்கொண்டார். இவ்வாறு அவர் மக்களுக்கு
முன்மாதிரி காட்டினார். எனவே, மக்கள் தன்னுடைய முன்மாதிரிப்
பின்பற்றி உழைக்கவேண்டும் என்றும், உழைக்க மனமில்லாத எவரும் உண்ணக்கூடாது
என்றும் சொல்கின்றார்.
புனித பவுல் சொல்லக்கூடிய இந்த வார்த்தைகள் நம்முடைய ஆழமான
சிந்தனைக்குரியவையாக இருக்கின்றன. நாம் நமக்காகவும் பிறருடைய
நலனுக்காகவும் கடவுளின் மாட்சிக்காகவும் உழைக்கவேண்டும். இல்லையென்றால்
நாமும் சோம்பேறிகள். நாம் சோம்பேறிகளா? இல்லை கடின உழைப்பாளிகளா?
சிந்திப்போம்.
சிந்தனை
"சோம்பேறிகளோ அடிமை வேலை செய்வர்" (நீமொ 12: 24) என்கிறது
நீதிமொழிகள் நூல். எனவே, நாம் சோம்பேறியாய்த் திரியாமல், கடவுள்
நமக்குக் கொடுத்திருக்கின்ற திறமைகளைக் கொண்டு நமக்காகவும் பிறருக்காகவும்
கடவுளின் மாட்சிக்காகவும் உழைப்போம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 23: 27-32
"நீங்கள் வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பானவர்கள்"
நிகழ்வு
இலண்டன் வானூர்தி நிலையத்தில் இளைஞன் ஒருவன் இரண்டு பெட்டிகளை
வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தான். அப்பொழுது அங்கு வந்த
கோடீஸ்வரர் ஒருவர் அந்த இளைஞனிடம், "தம்பி! இப்பொழுது நேரம் என்ன?"
என்றார். உடனே அந்த இளைஞன் தன்னிடம் இருந்த இரண்டு பெட்டிகளையும்
கீழே இறக்கிவைத்து விட்டு, இடக்கையில் மாட்டியிருந்த கைக்கடிகாரத்தைக்
காட்டி, "நேரத்தை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்" என்றான்.
கோடீஸ்வரர் அந்தக் கைக்கடிகாரத்திலிருந்து நேரத்தைத்
தெரிந்துகொள்வதற்காக அதை உற்றுப் பார்த்தார். அதைப் பார்த்த மறுநொடி
அவர் வியப்பில் ஆழ்ந்தார்.
அப்பொழுது அந்த இளைஞன் கோடீஸ்வரரிடம், "இந்தக் கைக்கடிகாரத்தைப்
பார்ப்பதற்கு வியப்பாக இருக்கின்றதா...? இதில் பல சிறப்பம்சங்கள்
இருக்கின்றன. இது பதினொரு நாடுகளின் நேரத்தைத் துல்லியமாக்
காட்டும்; இதன் மூலம் யாரிடம் வேண்டுமானாலும் பேசலாம்; மின்னஞ்சல்
அனுப்பலாம்; புகைப்படம்கூட எடுக்கலாம்" என்று சொல்லிக்கொண்டே
அந்தக் கோடீஸ்வரரைப் புகைப்படம் எடுத்தான்.
இவை எல்லாவற்றையும் வியப்போடு பார்த்துக்கொண்டிருந்த கோடீஸ்வரர்,
இளைஞன் தன் கையில் மாட்டியிருந்த கைக்கடிகாரத்தைத் தனக்குச்
சொந்தமாக்க நினைத்தார். அதனால் அவர் அந்த இளைஞனிடம், "இந்தக்
கைக்கடிகாரம் எனக்கு வேண்டும். இதை நீ எவ்வளவுக்குத் தருவாய்?"
என்று அவனிடம் கேட்டுப் பேரம் பேசத் தொடங்கினார். இளைஞனோ,
கோடீஸ்வரர் எவ்வளவு விலை சொன்னாலும் வாங்கும் நிலையில் இருக்கிறார்
என்பதை அறிந்து அவரிடம், "ஒரு இலட்சம் டாலர்" என்றான். கோடீஸ்வரர்
அதற்கு மறுப்பேதும் சொல்லாமல், ஒரு இலட்சம் டாலர் உடனே எடுத்துக்
கொடுத்து, அந்தக் கைக்கடிகாரத்தை வாங்கிக்கொண்டு வேகமாக நடந்தார்.
"ஐயா! ஒரு வினாடி இங்கு வாங்களேன்" என்று இளைஞன், வேகமாகச்
சென்ற கோடீஸ்வரரை அழைத்தான். அவர் திரும்பிப் பார்த்து, "என்ன
செய்தி?" என்று கேட்க, இளைஞன் அவரிடம், "வேறொன்றுமில்லை. கைக்கடிகாரத்தை
வாங்கிக்கொண்டு, அதற்கான மின்கலத்தை (Battery) வாங்காமல்
போகிறீர்களே! இந்த இரண்டு பெட்டிகளிலும் அந்தக் கைக்கடிகாரத்திற்கான
மின்கலம் இருக்கின்றது; எடுத்துக்கொள்ளுங்கள்" என்றார். இதைக்
கேட்டு அந்தக் கோடீஸ்வரர் அதிர்ச்சியில் உறைந்துபோனார்.
ஆம், சில பொருள்களும் சரி, மனிதர்களும் வெளிப்பார்வைக்கு அழகாக,
காட்சிக்கு இனியவர்களாக இருப்பார்கள்; ஆனால், உட்புறத்திலோ
நாம் கற்பனை செய்து பார்த்திராத அளவுக்கு அவ்வளவு கொடுமையானவர்களாக
இருப்பார்கள். இந்த நிகழ்வில் வருகின்ற இளைஞன் மாட்டியிருந்த
கைக்கடிகாரம் பார்வைக்கு இனிதாக இருந்தது; ஆனால், மின்கலமோ
கோடீஸ்வரர் கனவிலும் நினைத்துப் பார்த்திராத அளவுக்கு மிகவும்
பெரிதாக இருந்தது. அது போன்றுதான் இயேசுவின் காலத்தில் வாழ்ந்த
மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மக்கள் பார்வைக்கு நல்லவர்களாக இருந்தார்கள்.
உட்புறத்திலோ எல்லாவிதமான அழுக்கையும் சுமந்துகொண்டு திரிந்தவர்களாக
இருந்தார்கள். இதற்காகத்தான் இயேசு அவர்களைக் கடுமையாகச்
சாடுகின்றார். இது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்தப்
பார்ப்போம்.
வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளாக இருந்த மறைநூல் அறிஞர் மற்றும்
பரிசேயர்
யூதர்கள் ஆண்டுதோறும் கொண்டாடக்கூடிய பாஸ்கா விழாவிற்குப் பல்வேறு
இடங்களிலும் வாழ்ந்து வந்த யூதர்கள் எருசலேம் நகருக்கு வந்தார்கள்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், வரும் வழியில் இருக்கின்ற கல்லறைகள்,
காண்போரை முகம் சுழிக்க வைக்கக்கூடாது என்பதற்காக அவற்றை
வெள்ளையடித்து வைத்தார்கள். ஆண்டவர் இயேசு இந்த வழக்கத்தை எடுத்துக்கொண்டு,
அதனை மறைநூல் அறிஞர்களுக்கும் பரிசேயர்களும் எதிரான தனது கண்டனக்
குரலாகப் பதிவு செய்கின்றார். வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் எப்படி
வெளிப்பார்வைக்கு அழகாகவும், உள்புறத்தில் அழுக்கையும்
கொண்டிருந்தனவோ, அப்படி மதக் காவலர்கள் என்று தங்களை அழைத்துக்கொண்ட
மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் வெளிப்பார்வைக்கு நல்லவர்களாகவும்
உட்புறத்தில் அழுக்கையும் சுமந்து கொண்டு அலைந்தார்கள். அதனாலேயே
இயேசு அவர்களைச் சாடுகின்றார்.
உட்புறத்தைத் தூய்மையாக்கினால், வெளிப்புறமும் தூய்மையாகும்
இன்றைய நற்செய்தி வாசகத்திற்கு முந்திய பகுதியில் (மத் 23: 26)
ஆண்டவர் இயேசு, "...உட்புறத்தைத் தூய்மையாக்குங்கள். அப்பொழுது
அதன் வெளிப்புறமும் தூய்மையாகும்" என்பார் இயேசு, இவ்வார்த்தைகள்
மறைநூல் அறிஞர்களுக்கும் பரிசேயர்களுக்கும் எதிராகச் சொன்ன
வார்த்தைகளாக இருந்தாலும், நமக்கும் பொருந்துபவையாக இருக்கின்றன.
பல நேரங்களில் நாம் வெளிப்புறத்தைத் தூய்மை வைத்து கொள்ளக்
கொடுக்கும் முக்கியத்துவத்தை, உட்புறத்தைத் தூய்மையாக
வைத்துக்கொள்ளக் கொடுப்பதில்லை. எப்பொழுது நாம் உட்புறத்தைத்
தூய்மையாக வைத்திருக்கின்றோமோ அப்பொழுது நமது வெளிப்புறமும்
தூய்மையாகும் என்பது உறுதி.
நாம் நமது வெளிப்புறத்தை மட்டுமல்ல, நமது உட்புறமான இதயத்தைத்
தூய்மையாக வைத்துக் கொள்ளத் தயாரா? சிந்திப்போம்.
சிந்தனை
"நீங்கள் கடவுளுடைய கோயிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில்
குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா?" (1 கொரி 3:
19) என்பார் புனித பவுல். ஆகையால், கடவுளின் கோயிலாக இருக்கும்
நாம், நம்முடைய உள்ளத்தை அவர் தங்கும் இல்லிடமாக மாற்றி, அவருக்கு
ஏற்ற வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|