Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                  25 ஆகஸ்ட் 2020  

பொதுக்காலம் 21ஆம் வாரம்

=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 எங்கள் வாய்மொழி, திருமுகம் வழியாக அறிவிக்கப்பட்டவற்றில் நிலையாய் இருங்கள்.

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-3a, 14-17

சகோதரர் சகோதரிகளே! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வருகையைப் பற்றியும் அவரோடு நாம் ஒன்று கூடுவதைப் பற்றியும் உங்களுக்கு நாங்கள் கூற விழைவது: ஆண்டவருடைய நாள் வந்துவிட்டது என, இறைவாக்காகவோ அருளுரையாகவோ நாங்கள் எழுதிய திருமுகத்தின் செய்தியாகவோ யாராவது சொன்னால், நீங்கள் உடனே மனங்கலங்கி நிலைகுலைய வேண்டாம்; திகிலுறவும் வேண்டாம். எவரும் உங்களை எவ்வகையிலும் ஏமாற்ற இடம் கொடாதீர்.

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார். ஆகவே அன்பர்களே! எங்கள் வாய்மொழி வழியாகவோ திருமுகம் வழியாகவோ அறிவிக்கப்பட்ட முறைமைகளைப் பற்றிக்கொண்டு அவற்றில் நிலையாயிருங்கள். நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவும், நம்மீது அன்புகூர்ந்து தம் அருளால் நிலையான ஆறுதலையும் எதிர்நோக்கையும் அளித்த நம் தந்தையாம் கடவுளும் உங்கள் உள்ளங்களுக்கு ஊக்கமளித்து, நல்லதையே சொல்லவும் செய்யவும் உங்களை உறுதிப்படுத்துவார்களாக!

ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 96: 10. 11-12a. 12b-13 . (பல்லவி: 13ab)  Mp3
=================================================================================

பல்லவி: மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க ஆண்டவர் வருகின்றார்.
10
வேற்றினத்தாரிடையே கூறுங்கள்: ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசைவுறாது; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். - பல்லவி

11
விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும்.
12a
வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும். - பல்லவி

12b
அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும்.
13
ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். - பல்லவி



=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 
எபி 4: 12

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கண்டிப்பாய்க் கடைப்பிடிக்க வேண்டும்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 23-26

அக்காலத்தில்

இயேசு கூறியது: "வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! நீங்கள் புதினா, சோம்பு, சீரகம் ஆகியவற்றில் பத்தில் ஒரு பங்கைப் படைக்கிறீர்கள். ஆனால் திருச்சட்டத்தின் முக்கிய போதனைகளாகிய நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கடைப் பிடிக்காமல் விட்டுவிடுகிறீர்கள். இவற்றைக் கண்டிப்பாய்க் கடைப் பிடிக்கவேண்டும். அவற்றையும் விட்டுவிடக் கூடாது. குருட்டு வழிகாட்டிகளே! நீங்கள் பருகும்போது கொசுவை வடிகட்டி அகற்றுகிறீர்கள். ஆனால் ஒட்டகத்தையோ விழுங்கிவிடுகிறீர்கள்.

வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் அவற்றின் உட்புறத்தையோ கொள்ளைப் பொருள்களாலும் தன்னல விருப்புகளாலும் நிரப்புகிறீர்கள். குருட்டுப் பரிசேயரே, முதலில் கிண்ணத்தின் உட்புறத்தைத் தூய்மையாக்குங்கள். அப்பொழுது அதன் வெளிப்புறமும் தூய்மையாகும்."

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 2 தெசலோனிக்கர் 2: 1-3a, 14-17

"ஆண்டவரின் நாளைக் குறித்துப் போலி இறைவாக்கினர்கள் சொல்வதைக்கேட்டு நிலைகுலைய வேண்டாம்; திகிலுறவும் வேண்டாம்"

நிகழ்வு

ஒரு சிற்றூரில் சிறுமி ஒருத்தி இருந்தாள். இவளுடைய அண்ணன் இராணுவத்தில் சேர்ந்து, எதிரி நாட்டோடு போர்தொடுப்பதற்காகச் சென்றிருந்தான். அவ்வாறு சென்றவன் மூன்று ஆண்டுகளாகத் திரும்பி வரவே இல்லை. இதற்கு நடுவில் அவனிடமிருந்து "இதோ வந்துவிடுகின்றேன்... அதோ வந்துவிடுகின்றேன்" என்று கடிதம் மட்டும் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. இதனால் அந்தச் சிறுமி, தன் அண்ணன் இராணுவத்திலிருந்து வரும்பொழுது, புத்தாடை உடுத்தியவாறு அவனை வரவேற்கவேண்டும் என்பதற்காக புதிய புதிய ஆடைகளை உடுத்தி, தன்னுடைய அண்ணனுக்காக வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தாள், அப்படியிருந்தும் அவளுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

ஒருநாள் அவளுக்கு அவளுடைய அண்ணனிடமிருந்து இப்படியொரு கடிதம் வந்தது: "என் அன்புத் தங்கையே! இத்தனை நாள்களும் நான் ஊருக்கு வருவதற்காகச் சொல்லிவிட்டு, வராமல் போனதற்காக உன்னிடத்தில் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன். இன்ன தேதியில் மதிய உணவுக்கு நம் வீட்டில் இருப்பேன். இது உறுதி."

இந்தக் கடிதத்தை வாசித்ததும் மிகவும் உற்சாகமடைந்த அந்தச் சிறுமி, தன்னுடைய அண்ணன் வருவதாகச் சொன்ன அந்த நாளுக்காக ஆவலோடு காத்திருந்தாள். அந்த நாள் வந்ததும் புத்தாடை உடுத்தி, அவனை வரவேற்பதற்காக அவள் ஆவலோடு காத்திருந்தாள். மதிய உணவுவேளை வந்தது. அவளுடைய அண்ணன் வரவில்லை. பிற்பகல் இரண்டு மணி, மூன்று மணி என்று நேரம் கடந்துகொண்டே இருந்தது. அப்பொழுதும் சிறுமியின் அண்ணன் வரவில்லை. இதனால் அவளுக்குப் பசியெடுத்தது. அவள் தன் அண்ணன் வருவதற்குள் சாப்பிட்டு முடித்துவிட்டு, அவனை வரவேற்பதற்காகக் காத்திருப்போம் என்ற அவசரத்தில் வேகவேகமாகச் சாப்பிட்டாள்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக பாத்திரத்தில் இருந்த சாம்பார் அவள் அணிந்திருந்த வெள்ளைச் சுடிதாரில் பட்டுவிடவே, அவளுக்கு ஏதோபோல் ஆகிவிட்டது. இந்த நேரத்தில் வீட்டு வாசற்படியில், "தங்கச்சி... தங்கச்சி" என்று அவளுடைய அண்ணனின் குரல் கேட்டது. அதைக்கேட்டுத் திடுக்கிட்டுப் போன அந்தச் சிறுமி, "சாம்பார் படிந்திருக்கும் இந்தச் சுடிதாரோடு அண்ணனை வரவேற்பதா?" என்ற ஒருவிதமான தயக்கத்தில் வீட்டிற்குள்ளே போய் ஒளிந்து கொண்டாள்.

வீட்டுக்குள் வேகமாக வந்த சிறுமியின் அண்ணன், அவள் வீட்டின் ஒரு மூலையில் ஒளிந்துகொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, "என்ன பாப்பா! பல நாள்களுக்குப் பிறகு வீட்டிற்கு வரும் அண்ணனை மகிழ்ச்சியோடு வரவேற்பாய் என்று நான் நினைத்தால், இப்படி வீட்டுக்குள் ஒளிந்துகொண்டிருக்கின்றாயே! ஏன், உனக்கு என்னாயிற்று?" என்றான். அதற்குச் அந்தச் சிறுமி, தன்னுடைய சுடிதாரில் படிந்திருந்த சாம்பாரைக் காட்டி, "அண்ணா! உன்னைப் புத்தாடையுடன் வரவேற்கத்தான் காத்திருந்தேன்; ஆனால், நீ வரக் காலம் தாழ்த்தியதால் சாப்பிட்டுவிடலாம் என்று சாப்பிடும்பொழுது, சாம்பார் கொட்டிவிட்டது. அதனால் இந்த உடையில் எப்படி உன்னை வரவேற்பது என்பதால்தான் இப்படி வீட்டிற்குள் வந்து ஒளிந்துகொண்டேன்" என்று அசடு வழிய சொன்னாள். (The Speaker"s Quote Book Roy B. Zuck).

இந்த நிகழ்வில் வருகின்ற சிறுமி தன்னுடைய அண்ணனை வரவேற்கின்ற அவசரத்தில், தன்னுடைய உடையில் சாம்பாரைக் கொட்டிக்கொண்டதைப் போன்று, தெசலோனிக்காவில் இருந்த மக்கள், ஆண்டவரின் நாள் வந்துவிட்டதெனப் போலி இறைவாக்கினர்கள் சொன்னதைக் கேட்டு நிலைகுலைந்தார்கள்; திகிலடைந்தார்கள். இவர்களுக்கு ஆண்டவரின் நாளைக் குறித்துப் புனித பவுல் அளிக்கும் விளக்கம்தான் இன்றைய முதல் வாசகமாக இருக்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

அறிவிக்கப்பட்ட முறைமைகளைப் பற்றிக்கொண்டு அவற்றில் நிலைத்திருக்க வேண்டும்

பவுலும் அவருடைய உடன் பணியாளர்களும் தெசலோனிக்காவில் ஆண்டவரின் நற்செய்தியை அறிவித்துவிட்டுப் போனபிறகு அங்குப் புகுந்த கருப்பு ஆடுகள் அல்லது போலி இறைவாக்கினர்கள், ஆண்டவரின் நாள் வந்துவிட்டதென சொல்லி வந்தார்கள். இதனால் அங்கிருந்த மக்கள் மனங்கலங்கி, நிலைகுலைந்தார்கள்; திகிலுறவும் செய்தார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் புனித பவுல், நீங்கள் அவ்வாறு இருக்கவேண்டாம் என்றும், அறிவிக்கப்பட்ட முறைமைகளைப் பற்றிக்கொண்டு, அவற்றில் நிலையாயிருங்கள் என்றும் சொல்கின்றார்.

போலி இறைவாக்கினர்கள் தெசலோனிக்க மக்களிடம் ஆண்டவரின் நாள் வந்துவிட்டது என்று சொல்லி, அவர்களை நிலைகுலையச் செய்தபொழுது, புனித பவுல் அவர்களிடம் ஆண்டவரின் நாள் வருவதற்கு முன்னதாக என்னவெல்லாம் நடக்கும் மூன்று முதன்மையான உண்மைகளைச் சொல்கின்றார். ஒன்று. இறைவனுக்கு எதிரான கிளர்ச்சி முதலில் வரும் (2தெச 2:3). இரண்டு, நெறிகெட்ட மனிதன் வெளிப்படுவான் (2 தெச 2:3). மூன்று, நெறிகேட்டை விளைவிக்கும் ஆற்றல் அகற்றப்படும் (2 தெச 2: 7) இந்த மூன்று செயல்கள் ஆண்டவரின் நாள் வருவதற்கு முன்னால் நடக்கும். ஆதலால், இதை அறிந்துகொண்டு ஆண்டவரின் நாளைக் குறித்து போலி இறைவாக்கினர்களை சொல்வதைக் குறித்து நிலைகுலைய வேண்டாம்; மாறாக, முறைமைகளைப் பற்றிக்கொண்டு அவற்றில் நிலைத்திருங்கள் என்கின்றார் புனித பவுல்.

நாம்கூட பல நேரங்களில் திருஅவையின் போதனை மறந்துவிட்டு, போலி இறைவாக்கினர்கள் சொல்வதைக் கேட்டு நிலைகுலைந்து போய்விடுகின்றோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் போலிகளைக் குறித்து கவனமாக இருந்துகொண்டு, அறிவிக்கப்பட்ட முறைமைகளில் நிலையாயிருப்பது தேவையான ஒன்றாக இருக்கின்றது. ஆகையால், போலிகள் சொல்வதைக் கேட்டு நிலைகுலையாமல், அறிவிக்கப்பட்ட முறைமைகளில் நிலையாய் இருப்போம்.

சிந்தனை

"உங்களை விட்டு நான் சென்ற பிறகு கொடிய ஓநாய்கள் உங்களுக்குள் நுழையும் என்பது எனக்குத் தெரியும்" (திப 20: 29) என்பார் புனித பவுல். ஆகையால், நம்மைத் தாக்கு வதற்காகக் காத்திருக்கும் போலி இறைவாக்கினர்கள் என்ற ஓநாய்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருந்து, அறிவிக்கப்பட்ட முறைமைகளில் நிலைத்திருந்து ஆண்டவருக்குச் சான்று பகர்ந்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மத்தேயு 23: 23-26

திருச்சட்டத்தின் முக்கியப் போதனைகளான நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கண்டிப்பாய்க் கடைப்பிடிக்க வேண்டும்


நிகழ்வு

வேலூரில் உள்ள புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரியான சி.எம்.சி (Christian Missionary College) எப்படி உதயமானது என்று உங்களுக்குத் தெரியுமா...? சொல்கின்றேன் கேளுங்கள்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்காவைச் சார்ந்த ஜான் ஸ்கேடர், சோபியா என்ற தம்பதியினர், மருத்துவச் சேவை செய்வதற்காக இந்தியாவிற்கு வந்தனர். மருத்துவர்களான இவர்களுக்கு ஐடா சோபியா ஸ்கேடர் (Ida Sophia Scudder 1870-1960) என்றொரு மகள் இருந்தாள். இந்த ஐடா சோபியா ஸ்கேடர் தன் பெற்றோரோடு இந்தியாவிற்கு வந்தபொழுது, அவளுக்கு வயது பதினாறு. ஜான் ஸ்கேடர் சோபியா தம்பதியினர் தங்களுடைய மகள் ஐடா சோபியா ஸ்கேடரோடு இந்தியாவிற்கு வந்த இரண்டாவது மாதத்தில், பணி நிமித்தமாக சோபியோ அமெரிக்கா செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் ஜான் ஸ்கேடர் தன் மகளோடு இந்தியாவில் இருந்து மருத்துவம் பார்த்து வந்தார்.

இப்படியிருக்கையில் ஒருநாள் இரவு, ஜான் ஸ்கேடர் இருந்த வீட்டின் கதவு தட்டப்பட்டது. "இந்த நேரத்தில் யார் கதவைத் தட்டுவது...?" என்று யோசித்துக்கொண்டு ஜான் ஸ்கேடர் கதவைத் திறந்து பார்த்தபொழுது, அங்கொருவர் மிகவும் கலக்கத்தோடு நின்றுகொண்டிருந்தார். அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர் இந்த சமயத்தைச் சார்ந்தவர் என்பதை ஜான் ஸ்கேடர் தெரிந்துகொண்டார். அந்த மனிதர் இவரிடம், "ஐயா என்னுடைய மனைவி பிரசவ வேதனையில் துடித்துக்கொண்டிருக்கின்றாள். பிரசவம் பார்ப்பதற்கு உங்களுடைய துணைவியாரை அனுப்பி வைத்தால், நன்றாக இருக்கும்" என்றார். அதற்கு ஜான் ஸ்கேடர் அவரிடம், "அவர்கள் பணி நிமித்தமாக அமெரிக்கா சென்றுவிட்டார்கள்... வேண்டுமானால் நான் வரட்டுமா...?" என்று கேட்க, வந்தவர், "ஓர் ஆண், பிரசவம் பார்ப்பதை எங்கள் சமூகத்தில் இருப்பவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்" என்று சொல்லிவிட்டு வருத்தத்தோடு சென்றுவிட்டார்.

மறுநாள் காலையில், பிரவசத்தின்பொழுது இறந்துபோன அந்த இந்து சமயத்தைச் சார்ந்தவருடைய மனைவியை ஒருசிலர் பாடையில் வைத்துத் தூக்கிக்கொண்டு போனார்கள். இக்காட்சியை ஜான் ஸ்கேடரின் மகளான ஐடா சோபியா ஸ்கேடர் வருத்தத்தோடு பார்த்தார். இது நடந்து ஓரிரு நாள்கள் கழித்து, இரவு வேளையில் ஜான் ஸ்கேடருடைய வீட்டுக் கதவு தட்டப்பட்டது. அவர் கதவைத் திறந்து பார்த்தபொழுது, எதிரில் ஓர் இஸ்லாமியர் நின்றுகொண்டிருந்தார். அவர் இரண்டு நாள்களுக்கு முன்பு வந்த அந்த இந்து சமயத்தைச் சார்ந்தவரைப் போன்று, தன்னுடைய மனைவி பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருப்பதாகவும், அவருக்கு மருத்துவம் பார்ப்பதற்கு ஜான் ஸ்கேடரின் துணைவியாரை அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொண்டார். அவரிடத்திலும் ஜான் ஸ்கேடர் முன்பு சொன்னவரிடம் சொன்ன பதிலையே சொன்னார். இதைக் கேட்டு அந்த இஸ்லாமியர், "ஓர் ஆண், பிரசவம் பார்ப்பதை எங்கள் சமயத்தில் உள்ள யாரும் ஏற்றுக்கொள்வதில்லை" என்று சொல்லிவிட்டு வருத்ததோடு சென்றுவிட்டார்.

இதற்கடுத்து வந்த நாளில் அந்த இஸ்லாமியரின் மனைவி இறந்துபோனார். இதை அறிந்த ஜான் ஸ்கேடரின் மகள் ஐடா சோபியா ஸ்கேடர் மிகவும் வருந்தினார். "என்ன மாதிரியான சமூகம் இது...! பெண் குழந்தைகளைப் படிக்க வைக்கமாட்டார்களாம்...! ஆனால், பெண்கள்தான் பிரசவம் பார்க்கவேண்டுமாம்...! இந்த நிலையை மாற்றவேண்டும்...!" என்று முடிவெடுத்த அவர் அமெரிக்காவிற்குச் சென்று மருத்துவம் படித்து, இந்தியாவிற்குத் திரும்பி வந்தார்; மட்டுமல்லாமல், பெண்கள் கல்வி கற்க அவர் பெரிதும் பெரிதும் பாடுபட்டார். இப்படியிருக்கையில்தான் "பெண் குழந்தைகள் கல்வியும் மருத்துவமும் கற்க ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்கினால் என்ன? என்றோர் எண்ணம் ஐடா சோபியா ஸ்கேடருக்கு ஏற்பட்டது. அப்படித் தொடங்கப்பட்டதுதான் வேலூரில் உள்ள சி.எம்.சி. இன்றைக்கு இந்த மருத்துவக் கல்லூரியால் பயன்பெறுவோர் பலர்.

திருச்சட்டத்தின் முக்கியப் போதனையே இரக்கம் அல்லது அன்புதான். இப்போதனையைக் கடைப்பிடித்து, திருச்சட்டத்தை நிறைவேற்றுபவர் ஆனார் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்து, மருத்துவச் சேவைசெய்த ஐடா சோபியா ஸ்கேடர். இன்றைய நற்செய்தி வாசகம், திருச்சட்டத்தின் முக்கியப் போதனைகளாகிய நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கண்டிப்பாய்க் கடைப்பிடிக்க வேண்டும் என்றோர் செய்தியைத் தருகின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவை திருச்சட்டத்தின் முக்கியப் போதனைகள்

நற்செய்தியில் இயேசு, மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும், புதினா, சோம்பு சீரகம், ஆகியவற்றில் பத்தில் ஒரு பங்கைப் படைப்பதாகவும், திருச்சட்டத்தின் முக்கியப் போதனைகளாகிய நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கடைப்பிடிக்காமல் விட்டுவிடுவதாகவும் கடுமையாகச் சாடுகின்றார்.

மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் சிறு சிறு கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாய் இருந்தார்கள். இதை நாம் இயேசு சொல்லக்கூடிய "பரிசேயர் வரிதண்டுபவர்" உவமையில் வரக்கூடிய பரிசேயர் சொல்லக்கூடிய வார்த்தைகளிலிருந்தே (லூக் 18: 12) கண்டுகொள்ளலாம். சிறு சிறு கட்டளைகளைக் கடைப்பிடிப்பது முக்கியம்தான்; ஆனால், அதை விட முக்கியம், திருச்சட்டத்தின் முக்கியப் போதனைகளாகிய நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கடைப்பிடிப்பது. நற்செய்தியில் இயேசு, "உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல் நீங்களும் இரக்கமுள்ளவர்களாய் இருங்கள்" (லூக் 6: 36) என்று சொல்கின்றார் அல்லவா, அவர் சொல்வதற்கேற்ப நாம் தந்தையைப் போன்று இரக்கமுள்ளவர்களாய் இருந்து திருச்சட்டத்தை நிறைவேற்றவேண்டும். அதுதான் நாம் செய்யவேண்டிய தலையாய செயலலாக இருக்கின்றது.

நாம் விண்ணகத் தந்தையைப் போன்று இரக்கமுள்ளவர்களாக இருந்து திருச்சட்டத்தைக் கருத்தாய்க் கடைப்பிடிக்கின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனை

"இரக்கம் கொள்வது நம்மை வானதூதர்களுக்கு நிகராகச் செய்யும்" என்பார் சேப்பின் என்ற சிந்தனையாளர். ஆகையால் நாம் நம்முடைய வாழ்வில் இரக்கத்தையும் அத்தோடு நீதி, நம்பிக்கை ஆகியவற்றையும் கருத்தாய்க் கடைப்பிடித்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!