|
|
24
ஆகஸ்ட் 2020 |
|
பொதுக்காலம்
21ஆம் வாரம்
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
பன்னிரண்டு அடிக்கற்களின் மீதும் ஆட்டுக்குட்டியின் பன்னிரண்டு
திருத்தூதர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.
திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம்
21: 9b-14
சகோதரர் சகோதரிகளே,
ஏழு வானதூதர்களுள் ஒருவர் வந்து, "வா, ஆட்டுக்குட்டி மணந்து
கொண்ட மணமகளை உனக்குக் காட்டுவேன்" என்று என்னிடம் கூறினார்.
தூய ஆவி என்னை ஆட்கொள்ளவே, அந்த வானதூதர் ஒரு பெரிய, உயர்ந்த
மலைக்கு என்னைக் கொண்டு சென்றார்; திருநகரான எருசலேம் கடவுளிடமிருந்து
விண்ணகத்தை விட்டு இறங்கி வருவதை எனக்குக் காட்டினார். அதில்
கடவுளின் மாட்சி விளங்கிற்று; விலையுயர்ந்த கல் போன்றும் படிகக்
கல் போன்றும் அதன் ஒளி பளிங்கெனத் துலங்கியது.
அதைச் சுற்றிப் பெரிய, உயர்ந்த மதிலும் அதில் பன்னிரண்டு
வாயில்களும் இருந்தன. வாயில்களுக்குப் பொறுப்பாய்ப் பன்னிரண்டு
வானதூதர்கள் நின்றார்கள். இஸ்ரயேல் மக்களுடைய பன்னிரண்டு குலங்களின்
பெயர்களும் அவ்வாயில்களில் பொறிக்கப்பட்டிருந்தன. கிழக்கே
மூன்றும் வடக்கே மூன்றும் தெற்கே மூன்றும் மேற்கே மூன்றுமாக அவை
அமைந்திருந்தன. நகரின் மதில் பன்னிரண்டு அடிக்கற்களைக்
கொண்டிருந்தது. அவற்றில் ஆட்டுக்குட்டியின் பன்னிரண்டு
திருத்தூதர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 145: 10-11. 12-13ab. 17-18 . (பல்லவி: 12)
Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, உம் அன்பர்கள் உமதரசின் மாட்சியை அறிவிப்பார்கள்.
10
ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய
அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.
11
அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப்
பற்றிப் பேசுவார்கள். - பல்லவி
12
மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய
மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள்.
13ab
உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை
தலைமுறையாக உள்ளது. - பல்லவி
17
ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள்
யாவும் இரக்கச் செயல்களே.
18
தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி
மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 1: 49b
அல்லேலூயா, அல்லேலூயா! ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின்
அரசர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 45-51
அக்காலத்தில்
பிலிப்பு நத்தனியேலைப் போய்ப் பார்த்து, "இறைவாக்கினர்களும்
திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டு
கொண்டோம். நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்"
என்றார்.
அதற்கு நத்தனியேல், "நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர
முடியுமோ?" என்று கேட்டார். பிலிப்பு அவரிடம், "வந்து பாரும்"
என்று கூறினார்.
நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, "இவர் உண்மையான இஸ்ரயேலர்,
கபடற்றவர்" என்று அவரைக் குறித்துக் கூறினார்.
நத்தனியேல், "என்னை உமக்கு எப்படித் தெரியும்?" என்று அவரிடம்
கேட்டார். இயேசு, "பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு
நீர் அத்தி மரத்தின் கீழ் இருந்தபோதே நான் உம்மைக் கண்டேன்" என்று
பதிலளித்தார்.
நத்தனியேல் அவரைப் பார்த்து, "ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல்
மக்களின் அரசர்" என்றார்.
அதற்கு இயேசு, "உம்மை அத்திமரத்தின் கீழ்க் கண்டேன் என்று உம்மிடம்
சொன்னதாலா நம்புகிறீர்? இதை விடப் பெரியவற்றைக் காண்பீர்" என்றார்.
மேலும், "வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன்
மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச்
சொல்கிறேன்" என்று அவரிடம் கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
2 தெசலோனிக்கர் 1: 1-5, 11b-12
துன்பங்களுக்கிடையே சகிப்புத்தன்மை; இன்னல்களுக்கிடையே
மனவுறுதி
நிகழ்வு
ஒரு பங்கில் இருந்த பக்தர்கள் சிலர் தவக்காலத் திருப்பயணமாக
தொலைதூரத்திலிருந்த ஒரு திருத்தலத்திற்கு நடந்து சென்றார்கள்.
அப்படிச் செல்லும்பொழுது, இயேசுவின் பாடுகளில்
பங்குகொள்ளும்விதமாக ஒவ்வொருவரும் பாரமான சிலுவையைத் தங்களுடைய
தோள்மேல் சுமந்துகொண்டு சென்றார்கள்.
வழியில் அந்தப் பக்தர்கள் கூட்டத்தில் இருந்த ஒருவருக்கு, தான்
சுமந்துகொண்டு வந்த சிலுவையைச் சுமப்பது மிகவும் கடினமாக
இருந்தது. அதனால் அவர் தான் சுமந்துகொண்டு வந்த சிலுவையின்
உயரத்தையும் அகலத்தையும் குறைத்தார். அவரோடு திருப்பயணம்
மேற்கொண்ட மற்றவர்களுக்கும், அவர்கள் சுமந்துகொண்டு சென்ற
சிலுவை கடினமாகத்தான் இருந்தது; ஆனாலும் அவர்கள் இயேசுவின்
பாடுகளில் பங்குபெறுகின்றோம் என்ற உணர்வோடு தாங்கள்
சுமந்துகொண்டு சென்ற சிலுவைகளைப் பொறுமையோடும், அதேநேரத்தில்
மனவுறுதியோடும் சுமந்துகொண்டு சென்றார்கள்.
நாள்கள் மெல்ல நகர்ந்தன. முன்பு சிலுவையின் அகலத்தையும்
உயரத்தையும் குறைத்தவருக்கு மீண்டுமாகத் தான் சுமந்துகொண்டு
வந்த சிலுவையின் பாரத்தைத் தாங்க முடியாமல் போனது. அதனால் அவர்
மீண்டுமாகத் தான் சுமந்துகொண்டு வந்த சிலுவையின் உயரத்தையும்
அகலத்தையும் குறைத்தார். மற்றவர்களுக்குத் தாங்கள்
சுமந்துகொண்டு வந்த சிலுவையைச் சுமப்பது கடினமாக இருந்தாலும்,
அதைப் பொருட்படுத்தாமல் சுமந்துகொண்டு சென்றார்கள்.
வழியில், சாலையில் ஒரு பெரிய பள்ளம் வந்தது. அதை எப்படிக்
கடப்பது என்று யோசித்த அந்தப் பக்தர்கள், தங்களிடம் இருந்த
பாராமான சிலுவையை அந்தப் பள்ளத்தின் குறுக்கே வைத்துக்
கடக்கலாம் என்று முடிவு செய்தார்கள். அதன்படி அவர்கள் தாங்கள்
சுமந்துகொண்டு வந்த பாராமான சிலுவையை அந்தப் பள்ளத்தின்
குறுக்கே வைத்தபொழுது, அது சரியாகப் பொருந்த, அவர்கள் அதன்மேல்
ஏறி, திருத்தலத்தை நோக்கித் தங்களுடைய பயணத்தைத்
தொடர்ந்தார்கள். எல்லாருக்கும் கடைசியாக வந்த, சிலுவையின்
பாரம் தாங்காமல் அதன் உயரத்தையும் அகலத்தையும் குறைத்துவந்த
அந்தப் பக்தர் தன்னிடமிருந்த சிலுவையைப் பள்ளத்தின் குறுக்கே
வைத்துப் பார்த்தார். அது பொருந்துவதாக இல்லை. இதனால் அவரால்
பள்ளத்தைக் கடக்க முடியவில்லை; திருத்தலத்தையும் அடைய
முடியவில்லை.
தாங்கள் சுமந்துகொண்டு சென்ற சிலுவை பாராமாக இருந்தாலும், அதை
பொறுமையோடும் மனவுறுதியோடும் சுமந்துகொண்டுசென்ற பகதர்களோ
இறுதியில் திருத்தலத்தை அடைந்தார்கள் (-Friedrich Dietz)
இந்த நிகழ்வில் வருகின்ற ஒரு பக்தரைத் தவிர்த்து, மற்ற
பக்தர்கள் அனைவரும் சிலுவை பாராமாக இருந்தாலும், அதைப்
பொறுமையோடும் மனவுறுதியோடும் சுமந்து கொண்டு சென்றார்கள்.
அதனால் அவர்கள் திருத்தலத்தை அடைந்து, ஆண்டவரைத் தரிசித்து
மகிழ்ச்சியடைந்தார்கள். இன்றைய முதல் வாசககத்தில், புனித பவுல்
துன்பங்களுக்கு நடுவில் சகிப்புத் தன்மையோடும், இன்னல்களுக்கு
நடுவில் மனவுறுதியோடும் இருந்த தெசலோனிக்க மக்களை நினைத்துப்
பெருமைப்படுகின்றார். அது குறித்து இப்பொழுது நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
தெசலோனிக்கருக்கு இரண்டாம் மடல் எழுதும் புனித பவுல்
புனித பவுல் தன்னுடைய இரண்டாவது திருத்தூதுப் பயணத்தை
மேற்கொண்டபொழுது தெசலோனிக்காவிற்குச் சென்று, அங்கு
திருஅவையைக் கட்டி எழுப்பினார் (திப 17: 1-10). இந்தத்
தெசலோனிக்க நகரானது மாசிதோனியாவின் தலைநகராகும். இந்நகரில்
வணிகம் தலைத்தோங்கியது. அதனால் செல்வமும் பெருகியது.
இப்படிப்பட்ட நகரில் பவுல் தன்னுடைய உடன் பணியாளர்களுடன்
இரண்டாவது திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்டபொழுது, நற்செய்தி
அறிவித்ததைத் திறந்த மனத்தோடு இந்த நகரில் இருந்தவர்கள்
ஏற்றுக்கொண்டார்கள். மட்டுமல்லாமல், தங்களுடைய நம்பிக்கையில்
மிக உறுதியாக இருந்தார்கள். இதைப் பாராட்டும் வகையிலும்,
மேலும் ஒருசில அறிவுரைகளை அவர்களுக்குச் சொல்லும் வகையிலும்,
புனித பவுல் தெசலோனிக்கருக்கு இரண்டாவது மடலை எழுதுகின்றார்.
தெசலோனிக்கர்களை நினைத்துப் பெருமைப்படும் பவுல்
தெசலோனிக்கருக்கு முதல் மடலை எழுதிய ஓராண்டுக்குப் பிறகு,
புனித பவுல் அவர்களுக்கு இரண்டாவது மடலை எழுதுகின்றார். இந்த
மடலை எழுதும்பொழுது புனித பவுல் கொரிந்து நகரில் இருந்தார்.
புனித பவுல் தெசலோனிக்கருக்கு எழுதும் இந்த இரண்டாவது மடலில்
அவர் அந்த மக்களை நினைத்துப் பெருமைப்படுகின்றார். காரணம்
அவர்கள் துன்பங்களுக்கிடையே சகிப்புத் தன்மையோடும்,
இன்னல்களுக்கிடையே மனவுறுதியோடும் இருந்தார்கள். இன்றைக்குப்
பலர் சாதாரண துன்பங்களுக்கெல்லாம் மனம் உடைந்து
போய்விடுகின்றார்கள்; ஆனால் தெசலோனிக்கர்கள் துன்பங்களைச்
சந்தித்த பொழுதும் மனவுறுதியோடு இருந்தார்கள்.
கிறிஸ்தவர்களாகிய நமக்கு இவ்வுலகில் துன்பங்கள் உண்டு (யோவா
15: 20-21); ஆனாலும் நாம் மனவுறுதியோடு இருக்கவேண்டும்.
அப்பொழுது பவுல் எப்படி தெசலோனிக்க மக்களைக் குறித்துப்
பெருமையடைந்தாரோ, அப்படிக் கடவுளும் நம்மைக் குறித்துப்
பெருமையடைவார்
சிந்தனை
"இறுதி வரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர் (மத் 24:
13) என்பார் இயேசு. ஆகையால், நாம் துன்பங்களுக்கு நடுவிலும்,
இன்னல்களுக்கு நடுவிலும் மனவுறுதியோடு இருந்து, இயேசுவுக்குச்
சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 23: 13-22
"நீங்கள் நுழைவதில்லை, நுழைவோரையும் விடுவதில்லை"
நிகழ்வு
கலீல் ஜிப்ரான் எழுதிய பித்தன் என்ற புத்தகத்தில் இடம்பெறும்
கதை இது.
முன்பொரு காலத்தில் விரானி என்ற நகரில் மன்னன் ஒருவன்
இருந்தான். இவன் மிகவும் பலசாலியாகவும் அறிவில் சிறந்தவனாகவும்
இருந்தான். இதனால் இவனை வெல்வதற்கு ஆளே இல்லாமல் இருந்தது. இது
அந்த நகரில் இருந்த ஒரு சூனியக்காரக் கிழவிக்குக் கொஞ்சம்கூடப்
பிடிக்கவே இல்லை. இவள் தீமையின் மொத்த உருவமாக இருந்தாள்.
இவளுக்கு யாரும் நன்றாக இருந்துவிட்டால் பிடிக்காது.
இப்படிப்பட்டவள் மன்னனை எப்படியாவது தன்னுடைய தந்திரத்தால்
வீழ்த்த நினைத்தாள். இதற்காக அவள் சரியான நேரத்திற்காகக்
காத்திருந்தாள்.
விரானி நகரில் குடிநீர்க் குளம் ஒன்று இருந்தது.
இதிலிருந்துதான் மன்னன் உட்பட மக்கள் அனைவரும் நீர் அருந்தி,
தங்களுடைய தாகத்தைத் தணித்து வந்தார்கள். இந்தக் குடிநீர்க்
குளத்தின் நீர் கண்ணாடி போன்று அவ்வளவு தெளிவாக இருந்தது; இதன்
சுவையோ தேன் போன்று அவ்வளவு இனிமையாக இருந்தது. ஒருநாள் இரவு
இந்தக் குடிநீர்க் குளத்திற்கு வந்த சூனியக்காரக் கிழவி
தன்னிடத்தில் இருந்த ஒரு திரவப் புட்டியைத் திறந்து,
அதிலிருந்த திரவத்தை குடிநீர்க் குளத்திற்குள் ஊற்றிவிட்டு
வேகமாக மறைந்துவிட்டாள்.
மறுநாள் காலையில் இந்தக் குடிநீர்க் குளத்திற்கு வந்து,
இதிலிருந்த நீரை அள்ளிப் பருகிய யாவரும் புத்தி பேதலித்துப்
போனார்கள். இதனால் அவர்கள், "நாங்கள்தான் அறிவாளிகள்கள்;
மன்னன் ஒன்றும் அறிவாளி கிடையாது" என்று பிதற்றத்
தொடங்கினார்கள். இச்செய்தி மன்னனுக்குத் தெரிய வந்ததும், அவன்
மிகவும் அதிர்ச்சியடைந்தான். "என்ன! மக்கள் என்னைவிட
அறிவாளிகளாகிவிட்டார்களா...? இப்பொழுதே நான் அந்தக் குடிநீர்க்
குளத்திலிருந்து நீர் அருந்தி, அவர்களைவிட நான் அறிவாளி என்பதை
நிரூபித்துக் காட்டுகின்றேன்" என்று சொல்லி, அந்தக்
குளத்திலிருந்து நீர் அருந்தி, அவர்களைப் போன்று புத்தி
பேதலித்துப் போனான்.
இதற்காகவே காத்திருந்த சூனியக்காரக் கிழவி, மிகவும்
மகிழ்ந்துபோய், நடந்தது அனைத்தையும் பக்கத்துக்கு நாட்டு
மன்னனிடம் சொல்ல, அவன் விரானி நகர்மீது படையெடுத்து வந்து,
மன்னனையும் மக்களையும் சிறைப்பிடித்துச் சென்று நகரைத்
தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.
இந்தக் கதையில் வரும், தீமையின் மொத்த உருவமான சூனியக்காரக்
கிழவி எப்படித் தான் பாழாய்ப்போனது மட்டுமல்லாமல், விரானி
நகரில் இருந்த எல்லாரையும் பாழாக்கினாளோ, அப்படி இயேசுவின்
காலத்தில் இருந்த மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் தாங்கள்
பாழாய்ப்போனது மட்டுமல்லாது, மக்களையும் பாழாக்கினார்கள்.
இதனாலேயே இயேசு அவர்களைக் கடுமையாகச் சாடுகின்றார். உண்மையில்
மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் செய்த தவறு என்ன...?
அதற்காக இயேசு அவர்களை எப்படிச் சாடுகின்றார்...? என்பன
குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
யூத மதக் காவலர்களாக வலம்வந்த மறைநூல் அறிஞர்களும்
பரிசேயர்களும்
கடவுள், கோயில், வழிபாடு... இவற்றைச் சுற்றியே இருந்த யூத
சமூகத்தில் மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் அதிகாரம்
கொண்டவர்களாகவும், செல்வாக்கு மிகுந்தவர்களாகவும்
இருந்தார்கள். இவர்கள் தங்களிடம் மோசேயின் அதிகாரம்
இருக்கின்றது (மத் 23: 2) என்று நினைத்துக்கொண்டு மக்களிடம்
அதைச் செய்யவேண்டும்.... இதைச் செய்யக்கூடாது... என்று கட்டளை
பிறப்பித்து வந்தார்கள். இவர்கள் பிற இனத்தவரைத் தங்களுடைய
மதத்தில் சேர்ப்பதற்கும் அரும்பாடு பட்டார்கள். இப்படி
மக்களிடம் கட்டளைகளைப் பிறப்பித்தவர்கள்... பிற இனத்தவரைத்
தங்களுடைய மதத்தில் சேர்க்க அரும்பாடுபட்ட இந்த மறைநூல்
அறிஞர்களும் பரிசேயர்களும் அவர்கள் விண்ணகம் செல்வதற்குக்
காரணமாக இருந்தார்களா? இது குறித்துத் தொடர்ந்து சிந்திப்போம்.
மக்கள் விண்ணகத்திற்குள் நுழையவிடாமல் தடுத்த மறைநூல்
அறிஞர்களும் பரிசேயர்களும்
மக்களிடம் கட்டளைகளுக்கு மேல் கட்டளைகளைப் பிறபித்த இவர்கள்,
பிற இனத்தவரையும் தங்களுடைய மதத்தில் சேர்க்க அரும்பாடு பட்ட
இந்த மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்கள், மக்கள்
விண்ணகத்திற்குள் நுழைய விடாமல் செய்தார்கள். எப்படியென்றால்,
இவர்கள் மக்களுக்குப் போதித்தது எல்லாம் திருச்சட்டம் அல்ல,
தங்களுடைய பரிசேயச் சட்டத்தைத் தான். பரிசேயச் சட்டங்களைக்
கடைப்பிடிக்கும் மக்கள் எப்படி விண்ணகத்திற்குள் நுழைய
முடியும்...? முடியாதல்லவா! அவ்வாறுதான் இவர்கள் மக்களை
விண்ணகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்தார்கள்.
நாமும்கூட பல நேரங்களில் மக்களுடைய வளர்ச்சிக்குக் காரணமாக
இல்லாமல், அவர்கள் இடறி விழக் காரணமாக இருக்கின்றோம். ஆகையால்,
நாம் மற்றவர் இடறிவிழக் காரணமாக இல்லாமல், வளர்ச்சிக்குக்
காரணமாக இருக்க முயற்சி செய்வோம்.
சிந்தனை
"ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுங்கள்; ஒருவரை ஒருவர்
வளர்ச்சியடையச் செய்யுங்கள்" (1 தெச 5: 11) என்பார் புனித
பவுல். ஆகையால், நாம் புனித பவுல் சொல்வது போன்று
ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டி, ஒருவரை ஒருவர் வளர்ச்சியடையச்
செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|