Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                  22 ஆகஸ்ட் 2020  

பொதுக்காலம் 20ஆம் வாரம்

=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 ஆண்டவரின் மாட்சி கோவிலினுள் நுழைந்தது.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 43: 1-7ab

அந்நாள்களில்

மனிதர் ஒருவர் கோவிலின் கிழக்கு நோக்கிய வாயிலுக்கு என்னை அழைத்துச் சென்றார். இதோ "இஸ்ரயேலின் ஆண்டவரது மாட்சி" கிழக்குப் பகுதியிலிருந்து வருவதைக் கண்டேன். அவரது குரல் பெருவெள்ளத்தின் இரைச்சல் போல் இருந்தது. நிலமோ அவரின் மாட்சியால் ஒளி வீசிற்று. நான் கண்ட காட்சி, அவர் நகரை அழிக்க வந்தபோது நான் கண்டது போன்றும், கேபார் ஆற்றோரம் நான் கண்டது போன்றும் இருந்தது. நான் முகங்குப்புற விழுந்தேன்.

ஆண்டவரின் மாட்சி கிழக்கு நோக்கிய வாயில் வழி கோவிலினுள் நுழைந்தது. பின்னர் ஆவி என்னைத் தூக்கி உள்முற்றத்திற்கு அழைத்துச் சென்றது. ஆண்டவரின் மாட்சி கோவிலை நிரப்பிற்று.

அம்மனிதர் என்னருகில் நிற்கையில் கோவிலிலிருந்து வேறொருவர் என்னுடன் பேசுவதைக் கேட்டேன். அவர் உரைத்தது: "மானிடா! இது என் அரியணையின் இடம்; என் கால்மணைக்கான இடம். இங்குதான் நான் இஸ்ரயேலருடன் என்றென்றும் வாழ்வேன்."

ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 85: 8ab-9. 10-11. 12-13 . (பல்லவி: 9b) Mp3
=================================================================================


பல்லவி: நம் நாட்டில் ஆண்டவரது மாட்சி குடிகொள்ளும்.
8ab
ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்;
9
அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். - பல்லவி

10
பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்.
11
மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். - பல்லவி

12
நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம் நாடு நல்கும்.
13
நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். - பல்லவி



=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 
மத் 23: 9b, 10b

அல்லேலூயா, அல்லேலூயா! உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================

மறைநூல் அறிஞரும் பரிசேயரும் சொல்வார்கள்; செயலில் காட்டமாட்டார்கள்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 1-12

அக்காலத்தில்

இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடரையும் பார்த்துக் கூறியது: "மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர். ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்ட மாட்டார்கள். சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக்கூட முன்வர மாட்டார்கள். தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்; தங்கள் மறைநூல் வாசகப் பட்டைகளை அகலமாக்குகிறார்கள்; அங்கியின் குஞ்சங்களைப் பெரிதாக்குகிறார்கள். விருந்துகளில் முதன்மையான இடங்களையும் தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விரும்புகின்றார்கள்; சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் ரபி என அழைப்பதையும் விரும்புகிறார்கள்.

ஆனால் நீங்கள் "ரபி" என அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்குப் போதகர் ஒருவரே. நீங்கள் யாவரும் சகோதரர், சகோதரிகள். இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். நீங்கள் ஆசிரியர் எனவும் அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர்.

உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும். தம்மைத் தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத் தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்."

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 எசேக்கியேல் 43: 1-7a

"ஆண்டவரின் மாட்சி கோயிலை நிரப்பிற்று"


நிகழ்வு

ஓர் அதிகாலை வேளையில் அருள்பணியாளர் ஒருவர் தனிமையில் திருப்பலி நிறைவேற்றிவிட்டுக் கோயிலை விட்டு வெளியே வந்தார். அவரை வியப்போடு பார்த்த கிறிஸ்தவப் பெரியவர் ஒருவர் மிகவும் வருத்தத்தோடு, "என்ன சாமி! நீங்கள் இப்படித் தனிமையில் திருப்பலி நிறைவேற்றிவிட்டு வருகின்றீர்கள்! உங்களுக்குத் திருப்பலியின்பொழுது உதவி செய்வதற்குக் கூடவா யாருமில்லை?" என்றார்.

அதற்கு அந்த அருள்பணியாளர், "நான் தனிமையில் திருப்பலி நிறைவேற்றினாலும், தனியாகத் திருப்பலி நிறைவேற்றவில்லை. எப்பொழுதெல்லாம் நான் திருப்பலி நிறைவேற்றுகின்றேனோ, அப்பொழுதெல்லாம் விண்ணக மாட்சி மேலிலிருந்து கீழே இறங்கி வந்து, கோயிலை நிரப்புகின்றது. வானதூதர்கள், புனிதர்கள், மறைச்சாட்சிகள் என யாவரும் அதில் பங்குபெறுகின்றார்கள். இதைவிடவும் நான் இறையனுபவத்தோடு வெளியே வருகின்றேன்" என்கின்றார்.

அருள்பணியாளர் இப்படியொரு விளக்கத்தைக் கொடுத்ததும், அந்தக் கிறிஸ்துவப் பெரியவர் புன்னகைத்துக் கொண்டே தன் வழியில் சென்றார் (நித்தமும் நிம்மதி அருள்பணியாளர் ச.ஜெகநாதன்).

ஆம், ஒவ்வொருமுறையும் இறையடியார்களான அருள்பணியாளர்கள் கோயிலில் திருப்பலி நிறைவேற்றுகின்றபொழுது, விண்ணக மாட்சி, மேலிருந்து கீழே இறங்கி வந்து, கோயிலை நிரப்புகின்றது. இன்றைய முதல்வாசகத்தில் ஆண்டவரின் மாட்சி கோயிலை நிரப்புவதைக் குறித்து வாசிக்கின்றோம். இறைவாக்கினர் எசேக்கியேல் கண்ட இக்காட்சி நமக்கு என்ன செய்தியை எடுத்துக்கூறுகின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஆண்டவரின் மாட்சி எருசலேம் திருக்கோயிலை விட்டுவிலகுதல்

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவரின் மாட்சி கிழக்குப் பகுதியிலிருந்து திருக்கோயிலுக்கு உள்ளே வருவதைக் குறித்து வாசிக்கின்றோம். ஆண்டவரின் மாட்சி எருசலேம் திருக்கோயிலுக்கு உள்ளே வருகின்றது என்றால், அதற்கு முன்னர், அது எருசலேம் திருக்கோயிலை விட்டு விலகியது என்றுதானே பொருள்!

கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்ரயேல் மக்கள், கடவுளின் கட்டளையின்படி நடக்காமல், வேற்று தெய்வத்தை வழிபட்டார்கள். இதனால் இஸ்ரயேல் நாட்டின்மீது அசீரியர்களும், யூதா நாட்டின்மீது பாபிலோனியர்களும் படையெடுத்து வந்தார்கள். யூதாவின்மீது பாபிலோனியர்கள் படையெடுத்து வந்தபொழுதுதான், ஆண்டவரின் மாட்சி எருசலேம் திருக்கோயிலைவிட்டு விலகியது (எசே 9-10). இவ்வாறு எருசலேம் திருக்கோயிலை விட்டு விலகிய ஆண்டவரின் மாட்சி, எப்படி மீண்டுமாக எருசலேம் திருக்கோயிலுக்குள் வந்தது என்பதைத்தான் இன்றைய முதல் வாசமானது எடுத்துக் கூறுகின்றது.

ஆண்டவரின் மாட்சி எருசலேம் திருக்கோயிலுக்குள் வரல்

இறைவாக்கினர் எசேக்கியேல் காணும் காட்சியில், அவரை ஒருவர் கோயிலின் கிழக்கு நோக்கிய வாயிலுக்கு அழைத்துச் செல்கின்றார். அங்கு அவர் கடவுளின் மாட்சி கிழக்குப் பகுதியிலிருந்து வருவதையும், பின்னர் அது கோயிலை நிரப்புவதையும் காண்கின்றார். பின்னர் வேறொருவர் எசேக்கியேலிடம், "இது என் அரியணையின் இடம்... இங்குதான் நான் இஸ்ரயேலருடன் என்றென்றும் வாழ்வேன்" என்கின்றார்.

சாலமோன் மன்னர் ஆண்டவருக்கென கோயிலைக் கட்டியபொழுது, அவருடைய மாட்சி கோயிலை நிரப்பிற்று (1 அர 8: 11). பின்னர் அம்மாட்சி, மக்கள் செய்த தீச்செயலின் காரணமாக வெளியேறியது. இப்பொழுது மீண்டுமாக அது எருசலேம் திருகோயிலுக்குள் வருகின்றது. ஆண்டவரின் மாட்சி எருசலேம் திருக்கோயிலை நிரப்பியது, நமக்கு ஒரு முக்கியமான செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது என்ன என்று தொடர்ந்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

மக்களை விட்டு நீங்காத இறைவன்

எருசலேம் திருக்கோயிலை விட்டு விலகிய ஆண்டவரின் மாட்சி, மீண்டுமாக எருசலேம் திருக்கோயிலை நிரப்பியது என்றால், ஆண்டவர் தன் மக்களை ஒருபோதும் விட்டு விலகமாட்டார் என்ற செய்தியை மிக ஆணித்தரமாக எடுத்துக்கூறுகின்றது. ஆண்டவர் தன் மக்களை ஒருபோதும் விட்டுவிலக மாட்டார்; அவர் என்றும் தன்னுடைய மக்களோடு உடனிருப்பார் என்பதற்கு மிகப்பெரிய சான்றுகள்தான் "வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்" (யோவா 1: 14) என்ற இறைவார்த்தையும், "இதோ உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கின்றேன்" (மத் 28: 20) என்ற இறைவார்த்தையும். இவ்விரு இறைவார்த்தைகளும் கடவுள் தன் மக்களை விட்டு விலகாமல், அவர்களோடு என்றும் இருப்பார் என்ற உண்மையயை உணர்த்துவதாக இருக்கின்றன.

ஆகையால், நம்மோடு உடனுறைந்திருக்கும் கடவுளைவிட்டு நாம் நீங்காமல், அவருடைய கட்டளைகளைக் கருத்தாய்க் கடைப்பிடித்து, அவரோடு என்றும் ஒன்றித்திருப்போம்.

சிந்தனை

"கடவுள் நம்மோடு இருக்கின்றார்; நாம் கடவுளோடு இருக்கின்றோமா?" என்பார் முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன். ஆகையால், நாம் நம்மோடு இருக்கும் கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவரை விட்டு நீங்காமல் இருப்போம்; அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மத்தேயு 23: 1-12

"தம்மைத் தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்"


நிகழ்வு

"Cure of Ars" என்று அன்போடு அழைக்கப்படுகின்றவர் அருள்பணியாளர்களின் பாதுகாவலரான புனித ஜான் மரிய வியான்னி. இவர் ஆர்ஸ் நகரில் பங்குப் பணியாளராக பணியாற்றிக் கொண்டிருக்கும்பொழுது, இவர் ஒரு வித்தியாசமான பழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தார். அது என்னவெனில், நின்றுகொண்டே உணவு உட்கொள்வது. சில நேரங்களில் இவர் உணவு உட்கொண்டிருக்கும்பொழுது, யாராவது இவரை வெளியே இருந்து அழைத்தால், சாப்பாட்டுத் தட்டைக் கீழே வைக்காமல் அப்படியே அதைத் தூக்கிக்கொண்டு வெளியே வந்துவிடுவார். ஒருவேளை வறியவர், பிச்சைக்காரர் என யாராவது அழைத்தால், அவரிடம் இவர் தன்னுடைய சாப்பாட்டு தட்டிலிருக்கும் உணவைக் கொடுத்துவிட்டு, சிறிதுநேரம் அவர்களோடு பேசிவிட்டு அவர்களை வழியனுப்பி விட்டு உள்ளே வருவார்.

இப்படியிருக்கையில் ஒருநாள் இவர் வழக்கம்போல் நின்றுகொண்டு உணவை உட்கொள்கையில், யாரோ ஒருவர் இவரை வெளியே இருந்து அழைக்க, இவர் தான் சாப்பிட்டுக்கொண்டிருந்த தட்டோடு வெளியே சென்றார். அங்கொரு பிச்சைக்காரர் இருந்தார். அவரிடம் இவர் தன்னிடம் இருந்த உணவைக் கொடுத்துவிட்டு, அவரோடு பேசிக்கொண்டிருக்கையில் புதியவர் ஒருவர் அங்கு வந்தார். அவர் ஜான் மரிய வியான்னியிடம், "இங்கு ஆர்ஸ் நகர் வியான்னி எங்கிருக்கின்றார்?" என்றார். "நான்தான் அவர்" என்று வியான்னி சொன்னதும், வந்தவர் மிகவும் வியப்புகுள்ளாகி நின்றார்.

பின்னர் வந்தவர் வியான்னியிடம், "நீங்கள்தான் ஆர்ஸ் நகர் வியான்னியா, பல்வேறு இடங்களிலிருந்தும் வரக்கூடிய மக்களுக்கு ஒப்புரவு அருளடையாளத்தை வழங்கக்கூடிய நீங்கள் மிகவும் ஆடம்பரமாக உடையுடுத்திக் காட்சிக்கு இனியவராக இருப்பீர்கள் என்று நினைத்தால், இப்படி மிகவும் சாதாரண உடையில், பிச்சைக்காரர்களிடமெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் ஒரு தாழ்ச்சியுள்ள அருள்பணியாளராக இருக்கின்றீர்களே!" என்று வியப்போடு சொன்னார். இதை வியான்னி பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், வழக்கம் போலவே தாழ்ச்சியோடு இருந்தார் (More Anecdotes of the Great J.Maurus)

ஆம், ஆர்ஸ் நகர்ப் புனித ஜான் மரிய வியான்னியிடம் ஒப்புரவு அருளடையாளம் பெற கர்தினால்கள், ஆயர்கள், அருள்பணியாளர்கள் இறைமக்கள் எனப் பலரும் வந்தார்கள். அப்படியிருந்தும் அவர் தாழ்ச்சியோடு இருந்தார். அதனாலேயே அவரைக் கடவுள் மிகவும் உயர்த்தினார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தின் இறுதியில் ஆண்டவர் இயேசு, "தம்மைத் தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்" என்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இச்சொற்களின் பொருள் என்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

தம்மைத் தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப் பெறுவர்

நற்செய்தியில் இயேசு, பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களைச் சாடுவதைக் குறித்து வாசிக்கின்றோம். பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருந்தார்கள். அதனால் அவர்கள் மக்களிடம் இதையெல்லாம் செய்யவேண்டும்... அதையெல்லாம் செய்யக்கூடாது என்று சொல்லி வந்தார்கள். இதில் வேடிக்கை என்னவெனில், மக்களிடம் அவர்கள் எதையெல்லாம் செய்யவேண்டும் என்று சொல்லி வந்தார்களோ, அவற்றை அவர்கள் சிறிதுகூட கடைப்பிடிக்க என்பதில்லை என்பதுதான். இவ்வாறு அவர்கள் தங்களிடம் இருந்த அதிகாரத்தைக் கொண்டு மக்களை அடக்கியாண்டும், அதன்மூலம் அவர்கள் மக்களிடமிருந்து மரியாதையும் வணக்கமும் பெறமுயன்றார்களே ஒழிய, தாழ்ச்சியோடு நடக்கவில்லை. இதனால் அவர்கள் தங்களுடைய செயலால் மிகவும் தாழ்த்து போனார்கள்.

தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்

ஒரு தலைவருக்கு அழகு தலைக்கனத்தோடு இருப்பது அல்ல, தாழ்ச்சியோடு இருப்பது. ஓர் அதிகாரிக்கு அழகு, அகங்காரத்தோடு இருப்பது அல்ல, அடக்கமாக இருப்பது. ஒரு நல்ல தலைவராக, நல்ல ஆயாராக இருந்த இயேசு மிகுந்த தாழ்ச்சியோடு இருந்தார் என்பதை திருவிவிலியத்தில் வருகின்ற பல பகுதிகள் நமக்கு எடுத்துக்கூறுகின்றன (மத் 20: 28; யோவா 13: 1-15; பிலி 2: 6-11). இயேசு தாழ்ச்சியோடு இருந்தது மட்டுமல்லாமல், தன்னுடைய சீடர்களும் தாழ்ச்சியோடு இருக்கவேண்டும் என்று அறிவுறுத்துகின்றார் (மத் 20: 26). அப்படியானால், இயேசுவின் வழியில் நடக்கின்ற நாமும் தாழ்ச்சியோடு இருக்கவேண்டும் என்பதுதான் அவர் நமக்குச் சொல்லக்கூடிய செய்தியாக இருக்கின்றது.

இன்று பலர் "அதிகாரம்" என்பதைத் தவறாகப் புரிந்துகொண்டு மற்றவர்களை அடக்கியாண்டுகொண்டு இருக்கின்றார்கள். அதிகாரம் என்பது அடக்கியாள அல்ல, அடக்கத்தோடு அன்புப் பணி செய்ய. இந்த உண்மையை உணர்ந்தவர்களாய் நாம் தாழ்ச்சியோடு இயேசுவின் பணியைச் செய்வோம்.

சிந்தனை

"ஒருவர் ஒழுக்கமானவர் என்பதை அவரிடம் உள்ள தாழ்ச்சியை வைத்துக் கண்டு கொள்ளலாம்" என்பார் அக்குயினோ நகர்ப் புனித தாமஸ். ஆகையால், நமது வாழ்விற்கு அழகு சேர்க்கும் தாழ்ச்சி என்ற புண்ணியத்தோடு வாழக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
அரசியான தூய கன்னி மரியா

நாளை அன்னை மரியாளை அரசி அல்லது அமைதியின் அரசி எனக் கொண்டாடுகிறோம்.

"அமைதியின் அரசி" சுரூபம் உரோமையின் மேரி மேஜர் பேராலாயத்தில் ஒய்யாரமாக உள்ளது. ஒரு கையில் குழந்தை இயேசுவை ஏந்தி கம்பீரமாக அமர்ந்து கொண்டு மறு கையினால், "நிறுத்து" என்று சொல்வது போல இருப்பார்.

அமைதி என்பது ஒரு கொடை.

பல நேரங்களில் நாம் அதை வெளியே தேடுகிறோம். ஆனால் அது நம்மில் இயல்பாகவே இருக்கிறது. நாம்தான் அதன்மேல் கல் எறிந்து குலைத்துக்கொள்கிறோம்.

எபிரேயத்தில் அமைதி என்ற வார்த்தையை "ஷலோம்" என அழைக்கின்றனர்.

"ஷலோம்" என்றால் முழுமை.

அதாவது, ஓட்டை இல்லாத நிலை.

ஒரு மண்பானை இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அதனுள் தண்ணீர் ஊற்றி வைக்கிறோம். வைக்கின்ற தண்ணீர் அப்படியே இருந்தால்தான் அது நல்ல பானை. தண்ணீர் வெளியேறினால் அது கீறிய அல்லது உடைந்த பானை என்கிறோம்.

சின்னஞ்சிறு கீறலும் கூட பானையின் தண்ணீரை கலங்கடித்து வெளியேற்றிவிடுகின்றது.

மரியாள் தொடக்கமுதல் இறுதிவரை தன் பானையை கீறல் இல்லாமல் பார்த்துக்கொண்டார். அவரின் எல்லா செயல்பாடுகளும் எந்தவொரு முன்பின் முரண் இன்றி ஒருங்கியக்கம் பெற்றிருந்தன.

மரியாள் நம் அமைதியைக் காத்துக்கொள்ள நல்ல முன்மாதிரி.

- Rev. Fr. Yesu Karunanidhi



அடிமை ஆன அரசி



அன்னை மரியாளின் விண்ணேற்பு பெருவிழாவின் எட்டாம் நாள் அவரை "விண்ணரசி" எனக் கொண்டாடுகின்றோம்.

"அரசன்" என்றவுடன் நமக்குச் சில நேரங்களில் வரும் கோபம், எரிச்சல், எதிர்ப்பு, "அரசி" என்றவுடன் வருவதில்லை. "அரசி" ஆக்ச்சுவலா ஒரு நல்ல நிலை. "அரசனுக்கு" கடமைகளும் உண்டு, உரிமைகளும் உண்டு. ஆனால், "அரசிகளுக்கு" உரிமைகள் மட்டும்தான். கடமைகள் கிடையாது. போரில் ஒரு நாடு தோற்றால் அது அரசனின் பொறுப்பே தவிர, அது அரசியின் பொறுப்பு அல்ல. அரசன் போர்க்களத்தில் இருக்க, அரசி ப்யூட்டி பார்லரில் இருந்த நிகழ்வுகள் வரலாற்றில் இருக்கின்றன.

"அன்னை மரியாளை" "அரசி" என நாம் அழைப்பதன் பொருள் என்ன?

நாளைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 1:26-38) மரியா, "நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" என வானதூதரிடம் சொல்கிறார். இவர் "அடிமை" என்று சொன்னதால்தான், இவர் "அரசி" ஆனார் என்று சொல்வதைவிட, இவர் "அரசி"யாக இருந்ததால்தான், தன்னை "அடிமை" என்று சொன்னார் என்றே நான் புரிந்துகொள்கிறேன்.

அதாவது, கபிரியேலிடம் தான் "அடிமை" என்று சொன்னதால், மரியாளின் வேலை அடிமைக்குரிய வேலை அல்ல. மாறாக, "கன்னியாக" இருந்தவள் "தாய்" ஆகிறாள். இதுதான் முதல் அரசி நிலை. "கலக்கம்" மறைந்து வாழ்வில் "தெளிவு" பெறுகிறார். இது இரண்டாம் அரசி நிலை. கடவுளால் இயலாதது எதுவும் இல்லை என்றால், கடவுளின் மகனால் இயலாததும் எதுவும் இல்லை. அந்த மகனையே இவர் தன் உதரத்தில் ஏற்கிறார். ஆக, இவரால் ஆகாததும் ஒன்றும் இல்லை. இது மூன்றாவது அரசி நிலை.

ஆக, தனக்குக் கீழ் அனைத்தையும் பெற்றுக்கொண்ட மரியா தன்னை அதற்குக் கீழ் வைக்கிறார். அதுதான் அவரது அரசி நிலையின் அழகு. ஆக, மேலினும் மேல் பார்க்கும் உலகில், கீழினும் கீழ் பார் என்று மாற்றுப்பார்வைக்கு வித்திடுகிறார் இந்த மாதரசி, மங்கையர்க்கரசி, இளவலரசி.

நாளைய முதல் வாசகத்தில் (காண். எசாயா 9:2-4,6-7) மகிழ்ச்சி என்ற வார்த்தை அடிக்கடி வருகிறது. வழக்கமாக, "அரசனைப் போல மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்" என்று நாம் சொல்வோம். மகிழ்ச்சி என்பது நிறைவின் வெளிப்பாடு. நிறைவு என்பது அரசனுக்கு மட்டுமே சாத்தியம் என்பதே இப்புரிதலின் பின்புலம்.

"அறுவடை நாள் மகிழ்ச்சி," "கொள்ளைப் பொருளைப் பங்கிடும்போது" மகிழ்ச்சி என இரண்டு உருவகங்களைப் பார்க்கிறோம். இந்த இரண்டு உருவகங்களிலும் சொல்லப்படுவது என்னவென்றால், "துன்பத்துக்குப் பின் மகிழ்ச்சி"தான். ஆக, துன்பம் அல்லது வலி என்பது மகிழ்ச்சியின் தேவையை இன்னும் அதிகம் உணரச் செய்கிறது.

மரியாள் தன்னை அடிமை என்று ஆக்கியபோது, அவரிடம் வருத்தமோ, பயமோ இல்லை. மாறாக, தான் தன் கையில் இருக்கும் சூழலின் அரசி என தன் வாழ்க்கையைத் தன்னில் எடுக்கிறார். இன்னும் அதிக பொறுப்புணர்வுடன் செயலாற்றுகிறார்.

பொறுப்புகள் கூடக்கூட தலைமைத்துவம், மேன்மை கூடும்.

நாம் கொண்டாடும் விண்ணரசி மரியா நம் வாழ்வை நாம் அரசாள நமக்குக் கற்றுத்தருவாராக!

- Rev. Fr. Yesu Karunanidhi

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!