|
|
21
ஆகஸ்ட் 2020 |
|
பொதுக்காலம்
20ஆம் வாரம்
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
உலர்ந்த எலும்புகளே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள். என் மக்களே!
உங்களை உங்கள் கல்லறைகளினின்று மேலே கொண்டு வருவேன்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 37: 1-14
அந்நாள்களில்
ஆண்டவரின் ஆற்றல் என் மீது இறங்கியது. அவர் என்னைத் தம் ஆவியால்
தூக்கிக் கொண்டு போய்ப் பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தினார்.
அங்கே எலும்புகள் மிகுதியாய்க் கிடந்தன. அவர் அவற்றைச் சுற்றி
என்னை நடத்திச் சென்றார். அங்கே பள்ளத்தாக்கின் அடியில் மிகப்
பல எலும்புகள் கிடந்தன. அவை மிகவும் உலர்ந்தவையாய் இருந்தன.
அவர் என்னிடம், "மானிடா! இந்த எலும்புகள் உயிர் பெறமுடியுமா?"
என்று கேட்டார். நான், "தலைவராகிய ஆண்டவரே! உமக்குத் தெரியுமே"
என்று மறுமொழி அளித்தேன்.
அவர் என்னிடம் உரைத்தது: நீ இந்த எலும்புகளுக்கு இறைவாக்கு உரை.
"உலர்ந்த எலும்புகளே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்" என்று
சொல். தலைவராகிய ஆண்டவர் இந்த எலும்புகளுக்கு இவ்வாறு
கூறுகிறார்: நான் உங்களுக்குள் உயிர்மூச்சு புகச் செய்வேன்.
நீங்களும் உயிர் பெறுவீர்கள். நான் உங்களை நரம்புகளால்
தொடுப்பேன்; உங்கள்மேல் சதையைப் பரப்புவேன். உங்களைத் தோலால்
மூடுவேன். பின் உங்களுக்குள் உயிர்மூச்சு புகச் செய்வேன். நீங்களும்
உயிர் பெறுவீர்கள். அப்போது நானே ஆண்டவர் என அறிந்துகொள்வீர்கள்.
எனவே, எனக்குக் கட்டளையிடப்பட்டபடி இறைவாக்கு உரைத்தேன். நான்
இறைவாக்கு உரைக்கையில், உராயும் ஓசை கேட்டது. ஒவ்வொரு எலும்பும்
தனக்குரிய எலும்புடன் சேர்ந்துகொண்டது. நான் பார்க்கையிலேயே
அவற்றில் நரம்புகள் ஏற்பட்டு, சதை தோன்றித் தோல் அவற்றின்மேல்
மூடியது. ஆனால் அவற்றில் உயிர் இன்னும் வரவில்லை.
பின்னர் அவர் என்னிடம், உயிர்மூச்சுக்கு இறைவாக்கு உரை:
மானிடா! இறைவாக்கு உரைத்து, உயிர்மூச்சிடம் சொல். தலைவராகிய ஆண்டவர்
கூறுவது இதுவே: நான்கு காற்றுகளிலிருந்தும் "உயிர்மூச்சே வா,
நீ வந்து கொலையுண்ட இவர்களுக்குள் புகு. அப்பொழுது இவர்கள் உயிர்
பெறுவர்.'
எனவே அவர் எனக்குக் கட்டளையிட்டவாறு இறைவாக்கு உரைத்தேன். உடனே
அவர்களுக்குள் உயிர்மூச்சு புகுந்தது. அவர்கள் உயிர்பெற்று,
காலூன்றி, மாபெரும் படைத்திரள் போல் நின்றனர். அவர் மேலும் என்னிடம்
கூறியது: மானிடா! இந்த எலும்புகள் இஸ்ரயேல் வீட்டார் அனைவரையும்
குறிக்கும். அவர்களோ "எங்கள் எலும்புகள் உலர்ந்து போயின. எங்கள்
நம்பிக்கை அற்றுப் போய்விட்டது. நாங்கள் துண்டிக்கப்பட்டு
விட்டோம்" எனச் சொல்கிறார்கள்.
எனவே, இறைவாக்கு உரைத்து அவர்களிடம் சொல்: தலைவராகிய ஆண்டவர்
கூறுவது இதுவே: என் மக்களே! இதோ நான் உங்கள் கல்லறைகளைத் திறக்கப்
போகிறேன். உங்களை உங்கள் கல்லறைகளினின்று மேலே கொண்டு வருவேன்.
உங்களுக்கு இஸ்ரயேல் நாட்டைத் திரும்பக் கொடுப்பேன். அப்போது,
என் மக்களே! நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை அவற்றிலிருந்து
வெளிக் கொணர்கையில், நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள்.
என் ஆவியை உங்கள் மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள்.
நானும் உங்களை உங்கள் சொந்த நாட்டில் குடியமர்த்துவேன்.
"ஆண்டவராகிய நான் உரைத்தேன்; நானே இதைச் செய்தேன்" என அப்போது
அறிந்து கொள்வீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 107: 2-3. 4-5. 6-7. 8-9 . (பல்லவி: 1)
Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில், அவர் நல்லவர்;
என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
2
ஆண்டவரால் மீட்படைந்தோர், எதிரியின் கையினின்று அவரால் மீட்கப்பட்டோர்,
3
கிழக்கினின்றும், மேற்கினின்றும் வடக்கினின்றும்
தெற்கினின்றும், பல நாடுகளினின்றும் ஒன்று சேர்க்கப்பட்டோர்
சொல்வார்களாக. - பல்லவி
4
பாலைநிலத்தில் பாழ்வெளியில் சிலர் அலைந்து திரிந்தனர்;
குடியிருக்குமாறு ஒரு நகருக்குச் செல்ல அவர்கள் வழி காணவில்லை;
5
பசியுற்றனர்; தாகமுற்றனர்; மனச்சோர்வுற்றுக் களைத்துப் போயினர்.
- பல்லவி
6
தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்; அவர்களுக்குற்ற
துன்பங்களிலிருந்து அவர்களை அவர் விடுவித்தார்.
7
நேரிய பாதையில் அவர்களை வழி நடத்தினார்; குடியிருக்கும் நகரை
அவர்கள் அடையச் செய்தார். - பல்லவி
8
ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு, மானிடர்களுக்காக அவர் செய்த வியத்தகு
செயல்களை முன்னிட்டு, அவர்கள் அவருக்கு நன்றி செலுத்துவார்களாக!
9
ஏனெனில், தாகமுற்றோர்க்கு அவர் நிறைவளித்தார்; பசியுற்றோரை நன்மையால்
நிரப்பினார். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
திபா 25: 4c, 5a
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்;
உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உன் கடவுள் மீது அன்பு செலுத்து. உன்மீது நீ அன்புகூர்வதுபோல
உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 34-40
அக்காலத்தில்
இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார் என்பதைக் கேள்விப்பட்ட பரிசேயர்
ஒன்றுகூடி அவரிடம் வந்தனர். அவர்களிடையே இருந்த திருச்சட்ட அறிஞர்
ஒருவர் அவரைச் சோதிக்கும் நோக்கத்துடன், "போதகரே, திருச்சட்ட
நூலில் தலைசிறந்த கட்டளை எது?" என்று கேட்டார்.
அவர், " "உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும்
உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து." இதுவே தலைசிறந்த முதன்மையான
கட்டளை. "உன்மீது நீ அன்பு கூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும்
அன்பு கூர்வாயாக" என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை.
திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு
கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன" என்று பதிலளித்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
எசேக்கியேல் 37: 1-14
"நீ இந்த எலும்புகளுக்கு இறைவாக்கு உரை"
நிகழ்வு
இந்தோனேசியாவில் உள்ள போர்னியோ (Borneo) என்ற இடத்தில் அருள்பணியாளர்
ஒருவர் நற்செய்திப்பணி ஆற்றி வந்தார். அங்கு யாருடைய
பேச்சையும் கேளாமல், புகைப்பழக்கத்திற்கு அடிமையான லின் கு
(Lin Ku) என்றோர் இளைஞன் இருந்தான். இவனுடைய பெற்றோர் அந்த அருள்பணியாளரிடம்,
"எப்படியாவது என்னுடைய மகனை நல்வழிக்குக் கொண்டு வாருங்கள்" என்று
கெஞ்சிக் கேட்டனர். அருள்பணியாளரும் அவனை நல்வழிக்குக் கொண்டுவருவதற்கு
என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசித்தார்.
இதற்குப் பின் ஒருநாள் அருள்பணியாளர் அந்த இளைஞனிடம் புதிய ஏற்பாட்டைக்
கொடுத்து, "தம்பி! இந்நூலை வாசி! நிச்சயம் இந்நூல் உனக்குப்
பயனுள்ளதாக இருக்கும்; உன் வாழ்வில் திருப்புமுனையாகவும் இருக்கும்"
என்றார். அந்த இளைஞனோ, "என்னைப் பற்றி உங்களுக்கு நன்றாகவே
தெரியும். நான் புகைப்பழக்கத்திற்கு அடிமையானவன். எப்படியும்
நீங்கள் தரும் இந்த நூலை சிகரெட்டைப் போன்று சுருட்டி, அதில்
போதைப்பொருளை வைத்துப் புகைக்கத்தான் போகிறேன். நீங்கள்
பொறுத்திருந்து பாருங்கள்" என்றான். அந்த இளைஞன் இப்படிச் சொன்னதற்கு
அருள்பணியாளர் அவனிடம், "எனக்கு நம்பிக்கை இருக்கின்றது... எப்படியும்
இந்த நூல் உன்னுடைய வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று" என்று
சொல்லிவிட்டு, அவனிடமிருந்து விடைபெற்றார்.
இளைஞன் அருள்பணியாளர் கொடுத்த அந்தப் புதிய ஏற்பாட்டு நூலில்
இருந்த ஒவ்வொரு காகிதமாகக் கிழித்து, அதில் போதைப்பொருளை
வைத்துப் புகைக்கத் தொடங்கினான். இப்படியே அவன், மத்தேயு,
மாற்கு, லூக்கா நற்செய்தி நூல்களைப் புகைத்தான். யோவான் நற்செய்தியின்
தொடக்கத்தில் இருந்த, "தொடக்கத்தில் வாக்கு இருந்தது" (யோவா
1:1) என்ற சொற்களைப் படித்துப் பார்த்தான். அவனுக்கு ஒன்றும்
புரியவில்லை. அதனால் அவன் அந்தக் காகிதத்தைக் கிழித்துப்
புகைக்கத் தொடங்கினான்.
இப்படி அவன் புகைத்துக்கொண்டு வரும்பொழுது யோவான் நற்செய்தி 3:
16 இல் இடம்பெறும், "...கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்"
என்ற சொற்களைத் தற்செயலாக வாசித்துப் பார்த்தான். உடனே அவன்,
"என்ன! உலகின்மேல் அன்புகொள்ளும் கடவுளா...! இத்தனை நாள்களும்
நான் கடவுளை பலிவாங்குபவராகத்தானே கேள்விப்பட்டிருக்கின்றேன்!
இப்பொழுது நான், அவர் தன் ஒரே மகனை அளிக்கும் அளவுக்கு உலகின்மேல்
அன்புகூர்ந்தவராக அறிகின்றேனே! இது உண்மையா?" என்று
நினைத்துக்கொண்டு, அது குறித்த தெளிவினைப் பெற, தன்னிடம் புதிய
ஏற்பாட்டைக் கொடுத்த அருள்பணியாளரிடம் ஓடினான். அருள்பணியாளர்
அவனுக்குச் சரியான விளக்கம் கொடுத்ததும், அவன், "இத்தனை நாள்களும்
நான் எப்படியெல்லாமோ வாழ்ந்துவிட்டேன்; ஆனால், இப்பொழுது
சொல்கிறேன், என்னிடம் இருக்கின்ற புகைப்பழக்கம் உட்பட எல்லாத்
தீய பழக்க வழக்கங்களையும் விட்டுவிடுவேன்" என்றான்.
இதன்பிறகு அந்த இளைஞன் அருள்பணியாளரிடம் சொன்னதுபோன்றே, தன்னிடமிருந்த
எல்லாத் தீய பழக்கவழக்கங்களையும் விட்டுவிட்டுப் புதிய மனிதனாக
வாழத் தொடங்கினான்.
ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற அருள்பணியாளர் போதித்த அல்லது தந்த
இறைவார்த்தையினால் தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமையாய் இருந்த
இளைஞன் புதிய மனிதனாக மாறத் தொடங்கினான். முதல் வாசகத்தில் இறைவாக்கினர்
எசேக்கியேல், உலர்ந்த எலும்புகளுக்கு இறைவார்த்தையை உரைக்கத்
தொடங்கியதும், அவை உயிர்பெறுகின்றன. இந்த காட்சி நமக்கு என்ன
செய்தியைச் சொல்கின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
இறைவாக்கை உரைத்தததால் உயிர்பெற்ற எலும்புகள்
முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசேக்கியேல்மீது ஆண்டவரின் ஆற்றல்
இறங்குகின்றது. அதன்பிறகு அவர் தூய ஆவியாரால், ஒரு பள்ளத்தாக்கில்
நிறுத்தப்படுகின்றார். அங்கு உலர்ந்த எலும்புகள் மிகுதியாய்க்
கிடக்கின்றது. அப்பொழுது அவர் ஆண்டவர் தன்னிடம் சொன்னது போன்றே
அவற்றுக்கு இறைவாக்கு உரைக்கின்றார். அதனால் உலர்ந்து கிடைந்த
எலும்புகள் உயிர்பெற்று, மாபெரும் படைத்திரள் போன்று நிற்கின்றன.
இக்காட்சியில் இடம்பெறும் உலர்ந்த எலும்புகள் ஒட்டுமொத்த இஸ்ரயேல்
சமூகத்தைக் குறிக்கின்றன. எசேக்கியேல் அவற்றுக்கு இறைவாக்கு உரைத்ததும்,
அவை உயிர்பெற்று எழுந்தது, ஆண்டவர் இயேசு வருகின்றபொழுது அவர்கள்
உயிர்பெறுவர்கள் என்ற உண்மையையும், இறைவார்த்தை வாழ்வளிக்கக்கூடியதாக
இருக்கின்றது (யோவா 6: 63; 1 பேது 1: 2-3) என்ற உண்மையையும் எடுத்துக்கூறுவதாக
இருக்கின்றது.
ஆகையால், நாம் எசேக்கியேலைப் போன்று, உயிரற்றுக் கிடக்கும் கிடக்கும்
இந்த மானுட சமூகத்திற்கு இறைவார்த்தையை எடுத்துரைத்து, அதை உயிருள்ளதாக
மாற்ற முயற்சி எடுப்போம்.
சிந்தனை
"இறைவார்த்தையை அறிவி. வாய்ப்புக் கிடைத்தாலும்
கிடைக்காவிட்டாலும் இதைச் செய்வதில் நீ கருத்தாய் இரு" (2திமொ
4:2) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் நமக்கு வாய்ப்புக்
கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இறைவார்த்தையைத் தொடர்ந்து அறிவித்து,
உயிரற்றுக் கிடக்கும் இந்த மானுடத்திற்கு உயிர்கொடுப்போம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 22: 34-40
"...இதற்கு இணையான இரண்டாவது கட்டளை"
நிகழ்வு
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டுவந்தபொழுது, அவர்களிடமிருந்து
நாட்டிற்கு விடுதலையைப் பெற்றுத் தர அகிம்சை வழியைத்
தேர்ந்தெடுத்து, அந்த வழியில் நடந்தவர் காந்தியடிகள். அதற்காக
அவர் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார். ஒருமுறை அவர் சிறையில்
அடைக்கப்பட்டபொழுது, ஓர் ஆப்பிரிக்கா நாட்டவர் அங்கு சிறை அதிகாரியாக
இருந்தார். அவர் காந்தியடிகளிடம் கொஞ்சம்கூட ஈவு இரக்கமில்லாமல்,
மிகக் கடுமையாக நடந்துகொண்டார். இதற்காகக் காந்தியடிகள் வருத்தப்படவில்லை;
மாறாக, அவர் அந்தச் சிறைக் காவலரிடம் அன்போடு நடந்துகொண்டார்.
ஒருநாள் இரவில், சிறைச்சாலையில் யாரோ ஒருவர் கடுமையாக அலறுகின்ற
சத்தம் கேட்டுக் காந்தியடிகள் திடுக்கிட்டார். "யாராக இருக்கும்...?"
என்று காந்தியடிகள் சத்தம் கேட்ட திசையை நோக்கி ஓடிவந்து
பார்த்தபொழுது, அங்கு அவரை ஈவு இரக்கமின்றி நடத்தி வந்த சிறை
அதிகாரி வலியால் துடித்துக்கொண்டிருப்பதைக் கண்டார். காந்தியடிகள்
அவரிடம், "என்ன ஆயிற்று?" என்று காரணத்தைக் கேட்டபொழுது, அவர்,
"என்னைத் தேள் கொட்டிவிட்டது" என்று சொல்ல, காந்தியடிகள் அந்தக்
சிறை அதிகாரியின் உடலில், தேள் கொட்டிய இடத்தில் பல்லால் கீறி,
தேளின் நஞ்சு முழுவதையும் உறிஞ்சி வெளியே எடுத்தார். இதனால் அந்தச்
சிறை அதிகாரி இயல்பு நிலைக்குத் திரும்பினார். இதற்குப் பிறந்த
அவர் காந்தியடிகளிடம் மிகுந்த அன்போடும் மதிப்போடும் நடந்துகொண்டார்.
ஆம், சிறையில் இருந்த அதிகாரி காந்தியடிகளின்மீது வெறுப்பை உமிழ்ந்து,
அவரை ஈவு இரக்கமின்றி நடத்தியபொழுது, காந்தியடிகளோ அவர்மீது அன்பைப்
பொழிந்து, அவரைத் தன்னைப் போல அன்புசெய்தார். இதனால் அந்தச்
சிறை அதிகாரி காந்தியடிகளை அன்போடும் மதிப்போடும் நடத்தும்
நிலை ஏற்பட்டது. இன்றைய நற்செய்தி வாசககத்தில் இயேசு, இறையன்புக்கு
இணையான கட்டளை, பிறரன்பு என்று எடுத்துச் சொல்கின்றார். இயேசு
சொல்லக்கூடிய இந்த இறையன்பு, பிறரன்புக் கட்டளைகளை நம்முடைய
வாழ்வில் நாம் எப்படிக் கடைப்பிடித்து வாழ்வது என்பதைக்
குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவைச் சோதிக்க வந்த பரிசேயர்
ஆண்டவர் இயேசு, உயிர்த்தெழுதல் தொடர்பாக சதுசேயர்களுக்குச் சரியான
முறையில் பதிலளித்ததைத் தொடர்ந்து, பரிசேயர் அவரைச் சோதிக்க
அவரிடம் வருகின்றனர். அதை முன்னிட்டுப் பரிசேயரில் இருந்த
திருச்சட்ட அறிஞர் ஒருவர் இயேசுவிடம், "திருச்சட்ட நூலில் தலைசிறந்த
கட்டளை எது?" என்று கேட்கின்றார். பரிசேயர் இயேசுவைச்
சோதிக்கும் நோக்குடன் அவரிடம் வந்தாலும், அவர்கள் நடுவில், தங்களிடம்
உள்ள அறநூறு கட்டளைகளில், "எது தலைசிறந்த கட்டளை...?" "எது
சிறிய கட்டளை...?" என்ற வாக்குவாதம் நடந்துகொண்டே இருந்தது.
இதனால் அவர்கள், மக்களால், "போதகர்" என்றும், "இறைவாக்கினர்"
என்றும் அழைக்கப்பட்ட இயேசு இதற்கு என்ன பதில் சொல்கின்றார் என்பதைத்
தெரிந்துகொள்வதற்காக அவரிடம் வருகின்றார்கள். திருச்சட்ட
நூலில் தலைசிறந்த கட்டளை எது என்பதற்கு இயேசு சொல்லக்கூடிய பதில்
நமது கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது. அது குறித்துத் தொடர்ந்து
நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இறையன்பும் பிறரன்புமே எல்லாவற்றுக்கும் அடிப்படையாக அமைகின்றன
திருச்சட்ட அறிஞர் இயேசுவிடம் கேட்ட கேள்விக்கு, இயேசு இணைச்சட்ட
நூல் 6: 5, லேவியர் 19: 18 ஆகிய இரண்டு இறைவார்த்தைப் பகுதிகளை
ஒன்றாக இணைத்துப் பதில் தருகின்றார். ஆம் இறையன்பு முதன்மையான
கட்டளை, இதற்கு இணையான கட்டளை பிறரன்பு என்று சொல்லிவிட்டு,
திருச்சட்ட நூல் முழுமைக்கும், இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு
கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன என்கின்றார்.
இறையன்பு முதன்மையான கட்டளை. அதற்கு இணையான கட்டளை பிறரன்பு
என்றால், நாம் இறைவனை எந்தளவுக்கு முழுமையாக அன்பு
செய்கின்றோமா அந்தளவுக்கு நமக்கு அடுத்திருப்பவரையும் அன்பு
செய்யவேண்டும். இன்றைக்கு இருக்கின்ற ஒருசிலரைப் போன்று,
அன்றைக்கு இருந்த யூதர்கள் இறைவனை அன்புசெய்த அளவுக்குத்
தங்களுக்கு அடுத்திருப்பவரை அன்பு செய்யவில்லை இப்படிப்பட்ட
சூழ்நிலையில் இயேசு, தலைசிறந்த கட்டளை எது என்பதற்குக் கொடுத்த
விளக்கம் பரிசேயர்களைச் சிந்திக்க வந்திருக்கும் என்பதில்
எள்ளளவும் ஐயமில்லை.
நாம் இறைவனை அன்புசெய்யும் அளவுக்கு நமக்கு அடுத்திருப்பவரை
அன்பு செய்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
"அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாய் அமைவதாக!"
(எபே 3: 17) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் நம்முடைய
வாழ்வில் இறையன்பையும் பிறரன்பையும் ஆணிவேரும் அடித்தளமுமாய்க்
கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|