Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                  19 ஆகஸ்ட் 2020  

பொதுக்காலம் 20ஆம் வாரம்

=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். என் ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 36: 23-28

இறைவன் கூறுவது:

நீங்கள் வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் மாபெரும் பெயரை நான் புனிதப்படுத்துவேன். அப்போது உங்கள் வழியாய் அவர்கள் கண்முன்னே என் தூய்மையை நிலைநாட்டும்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

நான் உங்களை வேற்றினத்தாரிடமிருந்து அழைத்து, பல நாடுகளிடையே கூட்டிச் சேர்த்து, உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பக் கொணர்வேன். நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன். நீங்கள் உங்கள் எல்லா அழுக்கிலிருந்தும் தூய்மையாவீர்கள்; உங்கள் எல்லாச் சிலை வழிபாட்டுத் தீட்டையும் அகற்றுவேன். நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். உங்கள் உடலிலிருந்து கல்லாலான இதயத்தை எடுத்துவிட்டு, சதையாலான இதயத்தைப் பொருத்துவேன். என் ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். என் நியமங்களைக் கடைப்பிடிக்கவும் என் நீதிநெறிகளைக் கவனமாய்ச் செயல்படுத்தவும் செய்வேன். நான் உங்கள் முன்னோருக்குக் கொடுத்த நாட்டில் நீங்கள் வாழ்வீர்கள். அப்போது என் மக்களாய் இருப்பீர்கள்; நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் -
=================================================================================
திபா 51: 10-11. 12-13. 16-17 . (பல்லவி: எசே 36: 25) Mp3

பல்லவி: தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன். நீங்கள் அனைவரும் தூய்மையாவீர்கள்.
10
கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும்.
11
உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். - பல்லவி

12
உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்.
13
அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர். - பல்லவி

16
ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை.
17
கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை. - பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 
திபா 95: 8b, 7b

அல்லேலூயா, அல்லேலூயா! இன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக, நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 1-14

அக்காலத்தில்

இயேசு மீண்டும் உவமைகள் வாயிலாகப் பேசியது: "விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: அரசர் ஒருவர் தம் மகனுக்குத் அருட்சாதனம் நடத்தினார். திருமணத்திற்கு அழைப்புப் பெற்றவர்களைக் கூட்டிக்கொண்டு வருமாறு அவர் தம் பணியாளர்களை அனுப்பினார். அவர்களோ வர விரும்பவில்லை.

மீண்டும் அவர் வேறு பணியாளர்களிடம், "நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். காளைகளையும் கொழுத்த கன்றுகளையும் அடித்துச் சமையல் எல்லாம் தயாராய் உள்ளது. திருமணத்திற்கு வாருங்கள்" என அழைப்புப் பெற்றவர்களுக்குக் கூறுங்கள் என்று சொல்லி அனுப்பினார். அழைப்புப் பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருவர் தம் வயலுக்குச் சென்றார்; வேறு ஒருவர் தம் கடைக்குச் சென்றார். மற்றவர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து இழிவுபடுத்திக் கொலை செய்தார்கள்.

அப்பொழுது அரசர் சினமுற்றுத் தம் படையை அனுப்பி அக்கொலையாளிகளைக் கொன்றொழித்தார். அவர்களுடைய நகரத்தையும் தீக்கிரையாக்கினார்.

பின்னர் தம் பணியாளர்களிடம், "திருமண விருந்து ஏற்பாடாகி உள்ளது. அழைக்கப் பெற்றவர்களோ தகுதியற்றுப் போனார்கள். எனவே நீங்கள் போய்ச் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்" என்றார். அந்தப் பணியாளர்கள் வெளியே சென்று வழியில் கண்ட நல்லோர், தீயோர் யாவரையும் கூட்டி வந்தனர். திருமண மண்டபம் விருந்தினரால் நிரம்பியது. அரசர் விருந்தினரைப் பார்க்க வந்தபோது அங்கே திருமண ஆடை அணியாத ஒருவனைக் கண்டார்.

அரசர் அவனைப் பார்த்து, "தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்?" என்று கேட்டார். அவனோ வாயடைத்து நின்றான். அப்போது அரசர் தம் பணியாளர்களிடம், "அவனுடைய காலையும் கையையும் கட்டிப் புறம்பே உள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்" என்றார்.

இவ்வாறு அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 எசேக்கியேல் 36: 23-28

கல்லாலான இதயத்தை எடுத்துவிட்டு, சதையாலனான இதயத்தைப் பொருத்தும் ஆண்டவர்

நிகழ்வு

கேரளா மாநிலம், கொல்லம் மறைமாவட்டத்தில் பென்சிகர் என்றோர் ஆயர் இருந்தார். இவர் ஆன்மாக்களை மீட்பதில் மிகுந்த ஈடுபாடுகொண்டு, அதற்காகக் கடுமையாக உழைத்து வந்தார். இவருடைய மறைமாவட்டத்தில் கல்நெஞ்சக்காரர்கள் ஒருசிலர் இருந்தனர். இவர்களை எப்படி மீட்டு, ஆண்டவரிடம் கொண்டு சேர்ப்பது என்று இவர் மிகத் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர் தன்னுடைய மறைமாவட்டத்தின் எல்கைக்குள் இருந்த ஒரு சிறைச்சாலையைப் பார்வையிடச் சென்றார். இவர் அங்குச் சென்றிருந்த நேரம், கைதிகள் யாவரும் சிறைச்சாலைக்குள் இருந்த ஒரு பெரிய பாறாங்கல்லை உடைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்ததும், இவர் அவர்கள் அருகில் சென்று, "இந்தக் கல்லை நீங்கள் உடைப்பது போன்று, நான் என்னுடைய மக்களில் ஒருசிலருடைய கல்லான இதயத்தை உடைத்து, அவர்களைக் கனிவுள்ள நெஞ்சத்தினராக மாற்றுவதற்கு வழி தெரிந்தால் எத்துணை நலமாக இருக்கும்! என்றார்.

இதைக் கேட்டுவிட்டு, அங்குக் கல்லை உடைத்துக்கொண்டிருந்த கைதிகளில் ஒருவர், "இந்தக் கல்லை உடைப்பதற்கு நாங்கள் எப்படி எங்களுடைய தலையைதாழ்த்தியை உழைக்கின்றோமோ? அப்படி நீங்கள் உங்களுடைய தலையைத் தாழ்ச்சி, முழந்தாள்படியிட்டு இறைவனிடம் வேண்டினால், கல்லாலான இதயங்கள் எல்லாம் கனிவுள்ள இதயங்களாக மாறும் என்றார். அந்தக் கைதி சொன்ன சொற்கள் ஆயரின் உள்ளத்தில் ஆழமாகப் பதிய, அன்றிலிருந்து அவர் ஒவ்வொருநாளும், கல்லாலான இதயம் கொண்ட பாவிகளின் மீட்புக்காக, தலைதாழ்த்தி, முழந்தாள்படியிட்டுத் தொடர்ந்து மன்றாடிவந்தார்.

ஆயரின் இந்த மன்றாட்டு வீண் போகவில்லை. ஒரு சில மாதங்களிலேயே, பல ஆண்டுகளாகக் கல்லான நெஞ்சத்தோடு இருந்தவர்கள், தங்களுடைய தவற்றை உணர்ந்து, கனிவுள்ள நெஞ்சத்தினராக மாறினார்கள் (மறைக்கல்விக் கதைகள் அருள்பணியாளர் S. ஆர்தர் ஜேம்ஸ்)

இந்த நிகழ்வில் வருகின்ற ஆயர், கல்லாலான நெஞ்சம் கொண்டவர்களை, கனிவுள்ள நெஞ்சம் கொண்டவர்களாக மாற்றுவதற்கு, அல்லது அவர்களுடைய ஆன்மாவை மீட்பதற்கு மேற்கொண்ட முயற்சிகள் மிகவும் பாராட்டுக்குரியவை. இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களிடம், உங்களுடைய உடலிலிருந்து கல்லாலான இதயத்தை எடுத்துவிட்டுச் சதையாலான இதயத்தைப் பொருத்துவேன் என்கின்றார். ஆண்டவர் சொல்லக்கூடிய இச்சொற்களின் பொருள் என்ன...? கல்லாலான இதயத்தை அகற்றிவிட்டுச் சதையாலான இதயத்தைப் பொருத்துவதற்கு முன்பாக அவர் என்ன செய்வார் என்பன குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

தூய நீரைத் தெளிக்கும் ஆண்டவர்

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் தன் மக்களிடம், உங்களை வேற்று நாட்டிலிருந்தும், பல்வேறு இடங்களிலிருந்தும் அழைத்துச் சொந்த நாட்டிற்குக் கூட்டிக் கொண்டு வருவேன்; தூய நீரை உங்கள்மேல் தெளித்து, எல்லா அழுக்குகளிலிருந்தும் உங்களைத் தூய்மையாக்குவேன் என்கின்றார்.

யூத சமூகத்தில், பல்வேறு காரணங்களால் தூய்மையில்லாமல் போகும் ஒருவரைத் தூய்மைப்படுத்த நீரைத் தெளிப்பர் (லேவி 14: 1-9). யூதாவில் இருந்தவர்களோ சிலைவழிபாடு என்ற பரத்தமையில் ஈடுபட்டு, தங்களையே தீட்டுப்படுத்திக் கொண்டார்கள். இதனால் அவர்களைத் தூய்மைப்படுத்த, தூய நீரை அவர்கள்மீது தெளிப்பதாக ஆண்டவர் சொல்கின்றார் .ஆண்டவராகிய கடவுள் யூதா நாட்டினைத் தூய நீரால் தூய்மைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இன்னொரு முக்கியான செயலையும் செய்கின்றார். அதுதான் புதிய இதயத்தை அருளியது. அது குறித்துத் தொடர்ந்து நாம் சிந்தித்துப் பாப்போம்.

சதையாலான இதயத்தைப் பொருத்தும் ஆண்டவர்

தூய நீரால் மக்களைப் புனிதப்படுத்துவதாகச் சொல்லும் ஆண்டவர், புதிய இதயத்தை அருளி, புதிய ஆவியை உங்களுக்குப் புகுத்துவேன் என்றும் சொல்கின்றார். இவ்வாறு அவர் கல்லாலான இதயத்தை எடுத்துவிட்டு, சதையாலான இதயத்தைப் பொருத்துவேன் என்கின்றார்.

பாகால் தெய்வ வழிபாட்டின் மூலமும், நாட்டில் இருந்த ஏழைகளையும் வறியவர்களையும் கைம்பெண்களையும் ஒடுக்கியதன் மூலமாகவும் தங்களுடைய இதயத்தைக் கல்லாக்கிக் கொண்ட யூதா மக்களுக்கு, ஆண்டவர் புதிய இதயத்தைத் தந்து, அவர்களைத் தன்னுடைய மக்களாக்கிக் கொள்கின்றார்.

இன்று, திருமுழுக்கின் வழியாக நம்மீது தூய ஆவியாரைப் பொழிந்து, நமக்குப் புதிய இதயத்தை அருளி, நம்மைத் தன்னுடைய சொந்த மக்களாக்கிக் கொள்ளும் இறைவன், நாம் அவருடைய மக்கள் என்ற உண்மையை உணர்ந்து, கனிவுள்ள இதயத்தினராக வாழ விரும்புகின்றார். எனவே, நாம் நம்மிடம் இருக்கும் கல்லாலான இதயத்தை அப்புறப்படுத்திவிட்டுக் கனிவுள்ள நெஞ்சத்தினராக வாழ முயற்சி செய்வோம்.

சிந்தனை

"உன் வழிமரபினர்மீது என் ஆவியைப் பொழிவேன்; உன் வழித்தோன்றல்களுக்கு நான் ஆசி வழங்குவேன்" (எசா 44: 3) என்பார் ஆண்டவர். எனவே, நம்மீது தன் ஆவியைப் பொழிந்து, நமக்குப் புதிய இதயத்தைத் தரும் ஆண்டவரின் வழியில் நாம் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மத்தேயு 22: 1-14

"விண்ணரசின் மதிப்பை நாம் உணர்ந்திருக்கின்றோமா?

நிகழ்வு

துறவி ஒருவர் இருந்தார். இவருக்கு ஒரு பெரிய பணக்காரர் விலைமதிக்கப் பெறாத ஒரு வைர மோதிரத்தை அன்பளிப்பாக அளித்திருந்தார். இவரோ அதை அணிந்துகொள்ளாமல், பத்திரமாக வைத்திருந்தார்.

ஒருநாள் துறவி, சீடர் ஒருவரை அழைத்து, தன்னிடமிருந்த வைர மோதிரத்தை அவரிடம் கொடுத்து, "இதைக் கொண்டுபோய் கடைத்தெருவில் ஒரு தங்க நாணயத்திற்கு விற்றுவா என்றார். சீடரும் துறவி தன்னிடத்தில் கொடுத்த வைர மோதிரத்தைக் கடைத் தெருவுக்கு எடுத்துக்கொண்டு சென்று, அங்கு, "இது விலையுயர்ந்த வைரமோதிரம்; இதனுடைய விலை ஒரு தங்க நாணயம் என்று கூவிக் கூவி விற்றார்.

மக்களோ, "விலையுயர்ந்த வைர மோதிரத்தை யாராவது ஒரு தங்க நாணயத்திற்கு விற்பார்களா...? இது போலியாக இருக்கும்! அதனால்தான் இவர் இதை ஒரு தங்க நாணயத்திற்கு விற்கின்றார்" என்று சொல்லிக் கடந்து போனார்கள். இன்னும் ஒருசிலர்,, "ஒரு வெள்ளி நாணயம் வேண்டுமானால் தருகின்றோம்... உங்களிடம் இருக்கின்ற இந்த வைர மோதிரத்தைத் தாருங்கள்" என்றார்கள். "ஒரு வெள்ளி நாணயத்திற்கெல்லாம் இந்த வைர மோதிரத்தைத் தர முடியாது என்று சொல்லிச் சீடர் மறுத்துவிட்டார். இப்படியே நேரம் போனதே ஒழிய, யாரும் அந்த வைர மோதிரத்தை ஒரு தங்க நாணயம் கொடுத்து வாங்கவில்லை. இதனால் சீடர் துறவியிடம் திரும்பிச் சென்று நடந்தது அனைத்தையும் எடுத்துக் கூறினார்.

அப்பொழுது துறவி அவரிடம், "பரவாயில்லை. நாளைய நாளில், நீ இந்த வைர மோதிரத்தை எடுத்துக் கொண்டு போய், நகரில் இருக்கும் வைர வியாபாரியிடம், "இதன் மதிப்பு எவ்வளவு?" என்று கேட்டு வா என்றார். சீடரும் துறவி தன்னிடத்தில் சொன்னதுபோன்றே, அந்த வரை மோதிரத்தை எடுத்துக்கொண்டு போய், நகரில் இருந்த வைர வியாபாரியிடம் காட்டி, "இதன் மதிப்பு எவ்வளவு? என்றார். வைர வியாபாரியோ, சீடரிடம் கையில் இருந்த வைர மோதிரத்தைப் பார்த்து வியந்துபோய், "இது எப்படியும் ஆயிரம் தங்க நாணயங்கள் பெறும் என்றார். இதைக் கேட்டு மிகவும் வியந்துபோன சீடர் வேகமாக வந்து, துறவியிடம் நடந்து அனைத்தையும் எடுத்துச் சொன்னார்.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட துறவி சீடரிடம், "இதன் மூலம் நான் உனக்கு ஒரு செய்தியைச் சொல்லிக் கொள்ள விழைகின்றேன். இந்த வைரத்தின் மதிப்பை உணர்ந்துகொள்ளாத மக்களைப் போன்றுதான் பலர் தங்களுடைய வாழ்க்கையின் மதிப்பை உணர்ந்துகொள்ளாமல் இருக்கின்றார். இவர்கள் வைரத்தின் மதிப்பை உணர்ந்துகொண்ட வைர வியாபாரியைப் போன்று, தங்களுடைய வாழ்க்கையின் மதிப்பை உணர்ந்துகொண்டால் நன்றாக இருக்கும் என்றார்.

இந்த நிகழ்வில் வருகின்ற மக்கள், வைர வியாபாரி ஆகிய இருவரும் இன்றைய நற்செய்தியில் வருகின்ற விருந்துக்குச் செல்லாதவர்கள், விருந்துக்குச் சென்றவர்கள் ஆகிய இரு பிரிவினரை நமக்கு எடுத்துச் சொல்கின்றார்கள். இயேசு சொல்லக்கூடிய இந்த விண்ணரசு பற்றிய திருமண விருந்து நமக்கு என்ன செய்தியை எடுத்துச் சொல்கின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

விண்ணரசின் மதிப்பை உணராத யூதர்கள்

நற்செய்தியில் இயேசு விண்ணரசைத் திருமண விருந்திற்கு ஒப்பிடுகின்றார். மன்னர் தான் ஏற்பாடு செய்திருக்கும் திருமண விருந்திற்கு, தன் பணியாளர்கள் மூலமாக ஏற்கெனவே அழைப்புப் பெற்றிருந்தவர்களை அழைத்து வரச் சொல்கின்றார். அவர்கள் ஒவ்வொரு காரணத்தைச் சொல்லி திருமண விருந்திற்கு வராமல் இருக்கின்றார்கள். மன்னர் ஏற்பாடு செய்திருந்த திருமண விருந்திற்கு வராமல் இருந்தவர்கள் யூதர்கள் என்று சொல்லலாம். இவர்கள் விண்ணரசின் மகத்துவத்தை உணராமல், அனுப்பப்பட்டவர்களைக் கொன்றுபோட்டு, அதற்குத் தகுதியில்லாமல் போனார்கள்.

விண்ணரசின் மதிப்பை உணர்ந்த பிற இனத்து மக்கள்

விண்ணரசு என்ற திருமண விருந்தில் கலந்துகொள்வதற்கு அழைக்கப்பட்ட யூதர்கள், தாங்கள் பெற்ற அழைப்பைப் புறக்கணித்ததும், அந்த அழைப்பு வழியில் இருந்தவர்களான பிற இனத்து மக்களுக்குக் கொடுக்கப்படுகின்றது. அவர்களோ அதைத் திறந்த மனத்தோடு ஏற்றுக்கொண்டு, திருமண விருந்தில் கலந்துகொள்கின்றார்கள். உண்மையில் யூதர்களை விடவும் பிற இனத்து மக்கள் விண்ணரசின் மதிப்பை நன்றாக உணர்ந்திருந்தார்கள். அதனாலேயே அவர்கள் அழைப்பு கிடைத்ததும், திருமண விருந்தில் கலந்து கொள்கின்றார்கள். ஆகையால், கடவுள் யூதருக்கு மட்டுமல்லாமல், எல்லாருக்கும் தரும் அழைப்பினை அறிந்து, விண்ணரசின் மதிப்பினை உணர்ந்து, அதில் பங்கு பெறுவதற்கு நாம் தகுதியுள்ளவர்கள் ஆவோம்.

சிந்தனை

"என்னைப் புறக்கணித்து, நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளாதவருக்குத் தீர்ப்பளிக்கும் ஒன்று உண்டு. என் வார்த்தையே அது" (யோவா 12: 48) என்பார் இயேசு. ஆகையால், நாம் இயேசுவையும் அவருடைய வார்த்தையும், விண்ணரசையும் புறக்கணிக்காமல், அவருடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டு, விண்ணரசின் மதிப்பை உணர்ந்தவர்களாய் வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!