Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                  19 ஆகஸ்ட் 2020  

பொதுக்காலம் 20ஆம் வாரம்

=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 அவர்கள் வாயினின்று என் மந்தையை மீட்பேன். அவை இனி அவர்களுக்கு உணவாகா.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 34: 1-11

அந்நாள்களில்

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது. மானிடா! இஸ்ரயேலின் ஆயர்களுக்கு எதிராக இறைவாக்கு உரை. அவர்களுக்கு இறைவாக்கு உரைத்துச் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: தாங்களே மேய்ந்துகொள்ளும் இஸ்ரயேலின் ஆயர்களுக்கு ஐயோ கேடு! ஆயர்கள் மந்தையையன்றோ மேய்க்க வேண்டும்! நீங்கள் கொழுப்பானதை உண்டு, ஆட்டு மயிராடையை உடுத்தி, மந்தையில் சிறந்ததை அடிக்கிறீர்கள். மந்தையையோ மேய்ப்பதில்லை. நீங்கள் நலிந்தவற்றைத் திடப்படுத்தவில்லை; பிணியுற்றவற்றிற்குக் குணமளிக்கவில்லை. காயமுற்றவற்றிற்குக் கட்டுப்போடவில்லை; வழி தப்பியவற்றைத் திரும்பக் கூட்டி வரவில்லை. காணாமல் போனவற்றைத் தேடவில்லை. ஆனால், அவற்றைக் கொடுமையுடனும் வன்முறையுடனும் நடத்தினீர்கள். ஆயன் இல்லாமையால் அவை அலைந்து திரிந்தன. அப்போது எல்லாக் காட்டு விலங்குகளுக்கும் அவை இரையாயின. என் ஆடுகள் எல்லா மலைகளிலும் உயர்ந்த குன்றுகளிலும் அலைந்து திரிந்தன. பூவுலகில் எவ்விடத்திலும் என் மந்தை சிதறுண்டு போனது; அதைத் தேடவோ கூட்டிச் சேர்க்கவோ எவரும் இலர்.

எனவே ஆயர்களே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மேல் ஆணை! என் மந்தை கொள்ளையிடப்பட்டது; எல்லாக் காட்டு விலங்குகளுக்கும் இரையானது. ஏனெனில் அதற்கு ஆயன் இல்லை. என் ஆயர்கள் என் மந்தையைத் தேடவில்லை. என் மந்தையை அவர்கள் மேய்க்காமல் தாங்களே மேய்ந்துகொள்கிறார்கள்.

எனவே, ஆயர்களே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்: தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நான் ஆயர்களுக்கு எதிராக இருக்கிறேன். என் மந்தையை அவர்களிடமிருந்து திரும்பப் பெற்றுக்கொள்வேன். மந்தை மேய்ப்பினின்று அவர்களை நீக்கி விடுவேன். எனவே தாங்களே மேய்ந்துகொள்ளும் அவர்கள் இனி என் மந்தையை மேய்க்க மாட்டார்கள். அவர்கள் வாயினின்று என் மந்தையை மீட்பேன். அவை இனி அவர்களுக்கு உணவாகா. எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நானே என் மந்தையைத் தேடிச்சென்று பேணிக் காப்பேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 23: 1-3a. 3b-4. 5. 6 . (பல்லவி: 1)  Mp3
=================================================================================


பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
1
ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
2
பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.
3a
அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். - பல்லவி

3b
தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்;
4
மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். - பல்லவி

5
என்னுடைய எதிரிகளின் கண்முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. - பல்லவி

6
உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். - பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 
எபி 4: 12

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================

நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1-16

அக்காலத்தில்

இயேசு கூறியது: "விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார். அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார்.

ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்றபொழுது சந்தை வெளியில் வேறு சிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார். அவர்களிடம், "நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்" என்றார். அவர்களும் சென்றார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார்.

ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், "நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்றுகொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார். அவர்கள் அவரைப் பார்த்து, "எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை" என்றார்கள். அவர் அவர்களிடம், "நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்" என்றார்.

மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளரிடம், "வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்குரிய கூலி கொடும்" என்றார். எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர். அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம்தான் பெற்றார்கள்.

அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டபோது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து, "கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கிவிட்டீரே" என்றார்கள். அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, "தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக்கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக்கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?" என்றார்.

இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்."

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 
எசேக்கியேல் 34: 1-11

"மந்தையை மேய்க்காமல், அதை மேய்ந்த ஆயர்கள்"


நிகழ்வு

மலையடிவாரத்தில் ஆசிரமம் ஒன்று இருந்தது. அதில் ஒரு துறவி இருந்தார். இவர் ஆசிரமத்தில் உள்ள எல்லா வேலைகளையும் இவரே பார்த்துக்கொள்வார். இப்படிப்பட்ட ஒரு துறவியிடம், பல இடங்களிலிருந்தும் மக்கள் ஆலோசனை கேட்க வந்து போனார்கள். இவரும் அவர்களுக்கு நல்லவிதமாய் ஆலோசனைகளைச் சொல்லி அனுப்பி வைத்தார்.

ஒருநாள் இவரைச் சந்தித்து, இவரிடமிருந்து ஒருசில ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்குப் பக்கத்து ஊரிலிருந்து ஊர்த்தலைவர் வந்தார். அவர் துறவியைச் சந்திக்க வந்த நேரம், துறவி ஆசிரமத்தில் இருந்த ஒருசில ஆடுகளை ஆசிரமத்திற்கு முன்பாக இருந்த புல்வெளியில் மேய்த்துக் கொண்டிருந்தார்.

ஊர்த்தலைவர், ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த துறவியின் அருகில் சென்று, அவரோடு பேசத் தொடங்கியபொழுது, துறவி மேய்த்துக்கொண்டிருந்த ஆடுகளெல்லாம் அங்கிருந்து ஓட்டம் பிடிக்கத்தொடங்கின. இதைப் பார்த்துவிட்டுத் துறவியும் ஊர்த்தலைவரும் ஒன்றும் புரியாமல் விழித்தனர். அப்பொழுது துறவி தன்னிடம் ஆலோசனை கேட்க வந்த அந்த ஊர்த்தலைவரிடம், "நான் கேட்கின்றேன் என்று என்னைத் தவறாக நினைக்கவேண்டாம். என்னைச் சந்திக்க வரும்பொழுது நீங்கள் என்ன சாப்பிட்டு வந்தீர்கள்" என்றார். "சோறும் ஆட்டுக் கறிக் குழம்பும்" என்றார் ஊர்த்தலைவர்.

ஊர்த்தலைவர் இப்படிச் சொல்லி முடித்ததும், துறவி அவரிடம், "இப்பொழுது புரிகின்றது ஆடுகள் ஏன் உங்களைக் கண்டதும் வேகமாக ஓடின என்று. ஆட்டை வெட்டிச் சாப்பிட்டுவிட்டு, ஆடுகள் அருகே வந்தால், அவை எப்படி அப்படியே இருக்கும்; தெறித்து ஓடத்தான் செய்யும்" என்றார்.

இன்றுகூட ஒருசிலர் மக்களின் தலைவர்களாக, ஆயர்களாக இருந்துகொண்டு மக்களை அடித்துச் சாப்பிடுவதைக் காணமுடிகின்றது. இஸ்ரயேல் சமூகத்திலும் மக்களின் தலைவர்களாக, மந்தையின் ஆயர்களாக இருந்தவர்கள், தங்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களைக் கண்ணும் கருத்துமாய்ப் பராமரிக்காமல், அவர்களையே தங்களுடைய நலத்திற்காக அடித்துச் சாப்பிட்ட அவலநிலை தொடர்ந்தது. இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மந்தையைப் பேணிப் பராமரிக்காமல், அவற்றை உண்டு கொழுத்த போலி ஆயர்களுக்கு எதிராகக் கண்டனத்தைப் பதிவுசெய்வதாகவும், ஆண்டவர் ஒரு நல்ல ஆயராக மக்களை எப்படி வழிநடத்தப் போகிறார் என்பதையும் எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. அவற்றைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

மக்களைப் பராமரிக்காமல், தங்களைப் பராமரித்துக்கொண்ட போலி ஆயர்கள்

ஆண்டவர் ஆயராகவும் (திபா 23: 1), (இஸ்ரயேல்) மக்கள் அவருடைய ஆடுகளாகவும் இருந்தார்கள் (திபா 100:3) என்று திருவிவிலியத்தின் ஒருசில இடங்களில் நாம் வாசிக்கின்றோம். இது ஒருபுறம் இருந்தாலும், ஆண்டவருடைய இடத்தில் ஓர் ஆயரைப் போன்று, தலைவரைப் போன்று மந்தையை வழிநடத்தக்கூடிய பொறுப்பில் ஒருசிலர் இருந்தார்கள் (2சாமு 7: 7-8; திபா 78: 70-71; எசா 56: 10-11) இவர்களுக்குத் தங்களிடம் ஒப்படைக்க மந்தையைப் பேணிப் பராமரிக்கவேண்டிய கடமை இருந்தது. குறிப்பாக இவர்கள் நலிந்தவற்றைத் திடப்படுத்தி, பிணியுற்றவற்றை நலப்படுத்தி, ஆடுகளை நல்லமுறையில் மேய்க்க வேண்டிய கடமை இருந்தது; ஆனால், இவர்கள் மேற்சொன்ன எதையும் செய்யாமல், மந்தையில் இருந்த கொழுத்ததை உண்டு, ஆடுகளைச் சிதறடித்து, ஓர் ஆயர் எப்படியெல்லாம் இருக்கக்கூடாதோ, அப்படியெல்லாம் இருந்தார்கள். இதனால் ஆண்டவர், "நான் ஆயர்களுக்கு எதிராக இருக்கின்றேன்; என் மந்தையை அவர்களிடமிருந்து திரும்பப் பெற்றுக்கொள்வேன்..." என்கின்றார்.

மந்தையைத் தேடிச்சென்று பேணிக்காக்கும் இறைவன்

மந்தையை மேய்ந்துகொள்ளும் ஆயர்களை, மந்தையை மேய்க்கும் பொறுப்பிலிருந்து நீக்குவதாகச் சொல்லும் கடவுள், நானே என் மந்தையைத் தேடிச் சென்று பேணிக் காப்பேன் என்கின்றார்.

இறைவாக்கினர் எசேக்கியேல் வழியாக ஆண்டவர் உரைக்கின்ற இந்தச் சொற்களை நாம் இரண்டு விதங்களில் புரிந்துகொள்ளலாம். பாபிலோனிலிருந்து சொந்த நாட்டிற்குத் திரும்பி வந்த யூதா நாட்டினரை ஆண்டவரே பேணிக்காப்பார் என்றும் ஒருவிதத்திலும், ஆடுகள் வாழ்வு பெறும் பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டு, இந்த மண்ணுலகிற்கு வந்த இயேசு, இனிமேல் ஆடுகளைத் தேடிச் சென்று, பேணிக்காப்பார் என்று இன்னொரு விதத்திலும் புரிந்துகொள்ளலாம்

ஆதலால், நல்ல ஆயனாம் இயேசு நம்மைத் தேடி வந்து, பேணிப்காக்கத் தயாராக இருக்கும்பொழுது, நாம் அவருடைய குரல்கேட்டு, அவர் வழியில் நடப்பதே சிறந்தது. நாம் நல்ல ஆயன் இயேசுவின் குரல் கேட்டு, அவர் வழியில் நடக்கத் தயாரா? சிந்திப்போம்.

சிந்தனை

"என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன" (யோவா 10: 27) என்பார் இயேசு. எனவே, இயேசுவின் மந்தையாக இருக்கும் நாம், போலிகளைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கும் அதே நேரத்தில், நல்ல ஆயன் இயேசுவின் குரல் கேட்டு, அவர் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மத்தேயு 20: 1-16

"நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை"

நிகழ்வு

அது ஒரு சாதாரண குடும்பம். அந்தக் குடும்பத்தில் அமல், விமல் என்று இரண்டு பையன்கள் இருந்தார்கள். இதில் அமலுக்கு வயது பதினைந்து, விமலுக்கு வயது பதின்மூன்று. அமலுக்கும் விமலுக்கும் அடிக்கடி சண்டை வரும். அந்தச் சண்டையை அவர்களுடைய தாய்தான் தீர்த்து வைப்பார். அமலுக்குத் தன்னுடைய பெற்றோர் தன்னுடைய தம்பிக்குத்தான் எப்பொழுதும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார்கள்; தனக்கு முக்கியத்துவம் கொடுப்பதே இல்லை என்ற வருத்தம் இருந்துகொண்டே இருந்தது.

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில், விமல் தன்னுடைய தாயிடம், வீட்டிலுள்ள மிதிவண்டியை எடுத்துச் சிறிதுநேரம் ஓட்டிக்கொள்ளட்டுமா என்று கேட்டதற்கு உடனே சம்மதித்தார் அவனுடைய தாய். இதற்குப் பிறகு விமல் மிதிவண்டியை எடுத்துக்கொண்டு ஊரை ஒருமுறை சுற்றி வந்து, மிதிவண்டி இருந்த இடத்தில் அப்படியே வைத்துவிட்டு, விளையாடப் போய்விட்டான்.

இதை அமல் பார்த்துக்கொண்டே இருந்தான். மாலைநேரம் வந்தது. அப்பொழுது அமல் தன் தாயிடம், "அம்மா! மிதிவண்டியைச் சிறிதுநேரம் வெளியே ஓட்டிவிட்டு வரட்டுமா?" என்றான். இதற்கு அவனுடைய தாய், "தம்பி! பொழுது சாய்ந்து, நன்றாக இருட்டிவிட்டது. இந்த நேரத்தில் நீ வண்டியை ஓட்டிக்கொண்டு போனால், யார் மீதாவது இடித்து விடுவாய். அதனால் பெரிய பிரச்சனை வரும். நீ நாளைக் காலையில் வண்டியை எடுத்து ஓட்டிக்கொள்; இப்பொழுது வேண்டாம்" என்றார்.

இதைக் கேட்டு அமலுக்குக் தன் தாயின்மீது கோபம் கோபமாய் வந்தது. "நீங்கள் எப்பொழுது பாராபட்சத்தோடுதான் நடந்துகொள்கிறீர்கள். தம்பி எதையாவது கேட்டால், அதை உடனே கொடுத்துவிடுகிறீர்கள். நான் கேட்டால் மட்டும் அதற்கு மறுப்புச் சொல்கின்றீர்கள். எனக்கு உங்களைக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை" என்று கத்திக்கொண்டே வீட்டுக்குள் போய் புரண்டு படுத்துக் கொண்டான். இதனால் அவனைச் சமாதானப்படுத்துவதற்காக அவனுடைய தாய்க்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. பின்னர் அமலின் தாய் அவனுக்குப் பிடித்தமான தின்பண்டம் வாங்கிக்கொடுத்தும் அவன் அமைதியானான்.

இந்த நிகழ்வில் வருகின்ற சிறுவன் அமலைப் போன்றுதான், இன்றைக்குப் பலர் தங்களுடைய குடும்பத்திலும், தாங்கள் பணிபுரியும் இடத்திலும், கடவுளிடமிருந்தும் தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை; அநியாயம் இழைக்கப்பட்டுவிட்டது என்று புலம்புவதைக் காண முடிகின்றது. இன்றைய நற்செய்தியில், இயேசு சொல்லக்கூடிய திராட்சைத் தோட்ட உரிமையாளர் உவமையில் வரும், முதலில் வேலைக்கு வந்தவர்கள் தங்களுக்கு அநியாயம் இழைக்கப்பட்டதாகச் சொல்கின்றபொழுது, திராட்சைத் தோட்ட உரிமையாளர் அவர்களிடம், நான் உங்களுக்கு அநியாயம் செய்யவில்லை... எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக்கூடாதா? என்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இந்த உவமை நமக்கு என்ன செய்தியைச் சொல்கின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இறைநீதியை எடுத்துச் சொல்லும் இயேசுவின் திராட்சைத் தோட்ட உரிமையாளர் உவமை

ஆண்டவராகிய கடவுள் எல்லார்மீதும் இரக்கமும் அன்பும் கொண்டிருந்தாலும், சமூகத்தில் உள்ள ஒடுக்கப்பட்டவர்கள், திக்கற்றவர்கள், கைம்பெண்கள் ஆகியோர்மீது அவர் இன்னும் மிகுதியாக அன்பும் இரக்கமும் கொண்டிருக்கின்றார் என்பதை நாம் மறுக்க முடியாது. இதற்குத் திருவிவிலியத்தில் உள்ள ஒருசில பகுதிகள் சான்றாக இருக்கின்றன (எசா 1: 17). இன்றைய நற்செய்தியில் இடம்பெறும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் உவமைகூட, கடவுள் எளியவர்மீதும் வறியவர்மீதும் மிகுந்த அன்பும் இரக்கமும் பரிவும் கொண்டிருக்கின்றார் என்பதற்குச் சான்றாக இருக்கின்றது.

இந்த உவமையில் வருகின்ற, காலையில் வந்தவர் முதல் மாலையில் வந்தவர் வரை என எல்லாப் பணியாளர்களுக்கும் ஒரு தெனாரியம் கூலியாகக் கொடுக்கப்படுகின்றது. இது முதல் பார்வைக்கு அநியாயமாகத் தோன்றலாம். ஆனால், கடைசி வந்தவர்களுக்கும் குடும்பம் இருக்கும் என்பதாலேயே திராட்சைத் தோட்ட உரிமையாளர் அவர்களுக்கு ஒரு தெனாரியம் கூலியைக் கொடுத்து, அவர்கள்மீதான, அதாவது வறியவர்கள் மீதான தன்னுடைய தனிப்பட்ட அன்பையும் இரக்கத்தையும் காட்டுகின்றார்.

இறைவனின் நீதி அநீதி கிடையாது

திராட்சைத் தோட்ட உரிமையாளர் கடைசியில் வந்தவர்களுக்கு ஒரு தெனாரியம் கூலியைக் கொடுத்ததைப் பார்த்த முதலில் வந்த பணியாளர்கள் அவரிடம், "கடைசியில் வந்தவர்களோடு எங்களை இணையாக்கிவிட்டீரே!" என்கின்றார்கள். அப்பொழுதுதான் திராட்சைத் தோட்ட உரிமையாளர் அவர்களிடம், நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை; எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா?" என்கின்றார். ஆம், முதலில் வந்தவர்களிடம் ஒரு தெனாரியம் என்று திராட்சைத் தோட்ட உரிமையாளர் பேசியிருந்தார். அவர் பேசியதுபோன்று ஒரு தெனாரியம் கொடுத்தார். அதனால் அவர் அவர்களுக்கு அநீதி இழைக்கவில்லை. மாறாக, வறியவர்கள் பசியாய் இருக்கக்கூடாது என்பதற்காக திராட்சைத் தோட்ட உரிமையாளர், அவர்களுக்குத் தன்னுடைய விருப்பப்படி கொடுத்து, வறியவர்கள்மீது இருக்கும் தன் அன்பை வெளிப்படுத்துகின்றார் (லேவி 19: 13; இச 24: 14-15)

ஆகையால், இந்த உவமையில் வருகின்ற திராட்சை உரிமையாளரைப் போன்று அல்லது கடவுளைப் போன்று வறியவர்கள்மீது நாம் அன்பும் இரக்கமும் கொண்டு வாழ்வோம்.

சிந்தனை

"எளியோர்க்கும் திக்கற்றவர்க்கும் நீதி வழங்குங்கள்" (திபா 82: 3) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நம் ஆண்டவரைப் போன்று ஏழைகளுக்கும் எளியோருக்கும் நீதி வழங்கி, அவர்கள்மீது தனிப்பட்ட அன்பு கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!