|
|
18
ஆகஸ்ட் 2020 |
|
பொதுக்காலம்
20ஆம் வாரம்
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நீ கடவுளைப் போல் அறிவாளியாக இருப்பதாக எண்ணிடினும், நீ கடவுளல்ல;
மனிதனே!
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 28: 1-10
அந்நாள்களில்
ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: மானிடா! தீர் நகரின் மன்னனுக்குச்
சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உன் இதயத்தின்
செருக்கில், "நானே கடவுள்; நான் கடல் நடுவே கடவுளின் அரியணையில்
வீற்றிருக்கிறேன்" என்று சொல்கின்றாய். ஆனால் நீ கடவுளைப் போல்
அறிவாளியாக இருப்பதாக எண்ணிடினும், நீ கடவுளல்ல; மனிதனே!
தானியேலைவிட நீ அறிவாளிதான்! மறைபொருள் எதுவும் உனக்கு மறைவாயில்லை!
உன் ஞானத்தாலும் அறிவாலும் உனக்குச் செல்வம் சேர்த்தாய்; உன்
கருவூலத்தில் பொன்னையும் வெள்ளியையும் குவித்தாய். உன் வாணிபத்
திறமையால் உன் செல்வத்தைப் பெருக்கினாய்; உன் செல்வத்தினாலோ உன்
இதயம் செருக்குற்றது.
ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: கடவுளைப் போல் அறிவாளி
என உன்னைக் கருதிக் கொள்வதால், மக்களினங்களில் மிகவும்
கொடியோரான அன்னியரை உனக்கெதிராய் எழும்பச் செய்வேன்; அவர்கள்
உன் அழகுக்கும் ஞானத்திற்கும் எதிராக உருவிய வாளுடன் வருவர்;
உன் பெருமையைக் குலைப்பர். படுகுழியில் தள்ளுவர் உன்னை; கடல்
நடுவே மூழ்கிச் சாவோரெனச் சாவாய் நீயே! அப்போது உன்னைக்
கொல்வோரின் நடுவில் "நானே கடவுள்" என்று சொல்வாயே? உன்னைக்
குத்திக் கிழிப்போரின் கையில் நீ கடவுளாக அல்ல, மனிதனாகவே இருப்பாய்.
விருத்தசேதனம் செய்யப்படாதவனைப் போல் அன்னியர் கையால் நீ
சாவாய். நானே உரைத்தேன் என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
=================================================================================
பல்லவி: கொல்பவரும் நானே; உயிரளிப்பவரும் நானே!
26
நான் சொன்னேன்: அவர்களை எத்திக்கிலும் சிதறடிப்பேன்; அவர்களது
நினைவு மனிதரிடமிருந்து அற்றுப் போகச் செய்வேன்.
27
ஆயினும், "எங்கள் கைகள் வலிமையானவை! இதையெல்லாம் ஆண்டவர் செய்யவில்லை!"
என்று அவர்களின் பகைவர் திரித்துப் பேசுவர் என்பதாலும் பகைவனின்
பழிச் சொல்லுக்கு அஞ்சியும் வாளாவிருந்தேன். - பல்லவி
28
அவர்கள் புத்தி கெட்ட மக்கள்; அவர்களிடம் விவேகம் சிறிதும் இல்லை.
30
ஒரே ஆள் ஆயிரம் பேரைத் துரத்துவதும் இரண்டு பேர் பதினாயிரம்
பேரை விரட்டுவதும் அவர்களது பாறை அவர்களை விற்றுவிட்டதாலன்றோ?
அவர்களின் கடவுள் அவர்களைக் கைவிட்டதாலன்றோ? - பல்லவி
35cd
அவர்களது அழிவுநாள் அண்மையில் உள்ளது; அவர்களுக்கு வரப்போகும்
கொடுமைகள் தீவிரமாகின்றன.
36ab
அவர்கள் ஆற்றல் இழந்துவிட்டவர்கள் எனவும் அடிமையோ குடிமகனோ எவனுமில்லை
எனவும் காணும்போது ஆண்டவரே அவர் மக்களுக்குத் தீர்ப்பிடுவார்.
- பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
2 கொரி 8: 9
அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செல்வராயிருந்தும்
அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு உங்களுக்காக ஏழையானார்.
அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
இச 32: 26-27. 28,30. 35cd-36ab . (பல்லவி: 39c)
=================================================================================
செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம்
நுழைவது எளிது.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 23-30
அக்காலத்தில்
இயேசு தம் சீடரிடம், "செல்வர் விண்ணரசில் புகுவது கடினம் என
நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன். மீண்டும் உங்களுக்குக்
கூறுகிறேன்: செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதை விட ஊசியின்
காதில் ஒட்டகம் நுழைவது எளிது" என்றார்.
சீடர்கள் இதைக் கேட்டு, "அப்படியானால் யார்தாம் மீட்புப் பெற
முடியும்?" என்று கூறி மிகவும் வியப்படைந்தார்கள். இயேசு அவர்களைக்
கூர்ந்து நோக்கி, "மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளால் எல்லாம்
இயலும்" என்றார்.
அதன் பின்பு பேதுரு இயேசுவைப் பார்த்து, "நாங்கள் எல்லாவற்றையும்
விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே; எங்களுக்கு என்ன
கிடைக்கும்?" என்று கேட்டார்.
அதற்கு இயேசு, "புதுப் படைப்பின் நாளில் மானிட மகன் தமது
மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய
நீங்களும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய்ப்
பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச்
சொல்லுகிறேன். மேலும் என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ,
சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நில புலங்களையோ
விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர். நிலை வாழ்வையும்
உரிமைப் பேறாக அடைவர்.
ஆனால் முதன்மையானோர் பலர் கடைசியாவர். கடைசியானோர் பலர் முதன்மையாவர்"
என்று அவர்களிடம் கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
எசேக்கியேல் 28: 1-10
ஆணவத்தால் நேர்ந்த அழிவு
நிகழ்வு
ஒருமுறை பிரான்சு நாட்டை ஆண்டுவந்த மாவீரன் நெப்போலியன், இரஷ்ய
நாட்டுத் தூதரிடம், "நான் உங்களுடைய நாட்டின்மீது படையெடுத்து
வரப்போகிறேன்" என்று ஆணவத்தில் பேசினான். அதற்கு அவர், "மனிதன்
விரும்புவது ஒன்று; கடவுள் நிறைவேற்றுவதோ வேறொன்று" என்று
சொல்லிவிட்டு அமைதியாக இருந்தார். இது நெப்போலியனுக்குக் கடுஞ்சினத்தை
வரவழைத்தது. உடனே அவன் இரஷ்ய நாட்டுத் தூதரிடம், "நான் எதை
விரும்புகின்றேனோ, அதை நிறைவேற்றித் தீருவேன்" என்று
சூளுரைத்தான்.
இதற்குப் பின் அவன் தன்னுடைய பெரும்படையைத் திரட்டிக் கொண்டு,
இரஷ்யாவின்மீது படை எடுப்பதற்காக விரைந்து சென்றான். இரஷ்ய
நாட்டினர், அவன்மீது எதிர் தாக்குதல் நடத்தவில்லை. மாறாக, மிகவும்
அறிவுத்தெளிவோடு தங்களுடைய நாட்டில் அவனும் அவனுடைய படைவீரர்களும்
சாப்பிடுவதற்கு எதுவுமே கிடைக்காதவாறு செய்தார்கள். இது ஒருபுறமிருக்க,
இரஷ்யாவில் நிலவிய கடுஞ்குளிர் நெப்போலியனின் படைவீரர்களால்
தாங்கிக் கொள்ள முடியாதவாறு இருந்தது.
இதனால் நெப்போலியனின் படைவீரர்கள் இரஷ்யாவில் நிலவிய குளிரைத்
தாங்கிக் கொள்ள முடியாமலும், சாப்பிட உணவு கிடைக்காமலும்
செத்து மடிந்தார்கள். இப்படியெல்லாம் நடக்கும் என்று கனவிலும்
நினைத்திராத, தோல்வியையே சந்தித்திராத, ஆணவத்தோடு இருந்த
நெப்போலியன், இரஷ்யாவிலிருந்து தோல்வி முகத்தோடு திரும்பி வந்தான்
(Begin the School Day Well - Patrick D"Lima, SJ).
யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பார்களே! அது
போன்று ஆணவம் வரும் முன்பே, அழிவுவரும் பின்னே. இச்ச்சொற்றொடருக்கு
சரியான எடுத்துகாட்டாய் இருந்தவன்தான் மாவீரன் நெப்போலியன். ஆம்,
தன்னை வீழ்த்த யாருமே இல்லை என்ற நெப்போலியனின் ஆணவமே அவனுடைய
அழிவுக்குக் காரணமாக இருந்தது. இன்றைய முதல்வாசகத்தில், தன்னைக்
கடவுளாக நினைத்துக்கொண்ட தீர் நகரின் மன்னனுக்கு நேர்ந்த அழிவைப்
பற்றி வாசிக்கின்றோம். அது குறித்து இப்பொழுது நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
தன்னைக் கடவுளாக நினைத்துக்கொண்ட தீர் நகரின் மன்னன்
மத்திய தரைக்கடலை ஒட்டியிருந்த ஒரு கடற்கரை நகர்தான் தீர். தற்பொழுது
இந்த நகர் லெபனானில் உள்ளது. இந்த நகரை ஆண்டுவந்தவன் இத்தோபல்
என்ற மன்னன். இவன் தன்னிடம் ஞானம் இருக்கின்றது, செல்வம் இருக்கின்றது,
அதிகாரம் இருக்கின்றது, அதனால் "நானே கடவுள்; நான் கடல் நடுவே
கடவுளின் அரியணையில் வீற்றிருக்கிறேன்" என்று சொல்லிக்
கொண்டான்.
தீர் நகரை ஆண்டுவந்த மன்னன் ஞானமும் செல்வமும் அதிகாரமும்
கொண்டிருந்தாலும், அவன் கடவுளாக இருக்க முடியாது. ஏனெனில்,
கடவுளுக்கு நிகரானவர் யாரும் கிடையாது. இப்படித்தான்
இலவோதிக்கேயாவில் இருந்த திருஅவை, தன்னிடத்தில் செல்வம் உண்டு,
வளமை உண்டு, ஒரு குறையும் இல்லை என்று ஆணவத்தில்
சொல்லிக்கொண்டது; ஆனால், உண்மையில் அது இழிந்த, இரங்கத்தக்க,
பார்வையற்ற, ஆடையற்ற நிலையில்தான் இருந்தது (திவெ 3: 17). தீர்
நகரை ஆண்டுவந்த மன்னனும் தன்னிடம் எல்லாம் இருக்கின்றது,
அதனால் "நான் கடவுள்" சொல்லிக்கொண்டு இருந்தான். இப்படிப்பட்ட
சூழ்நிலையில்தான் ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் எசேக்கியேல்
வழியாக தீர் நகரை ஆண்டுவந்த மன்னனுக்கு எதிராக இறைவாக்கு
உரைக்கின்றார்.
தீர் நகர் மன்னனுக்கு நேர்ந்த அழிவு
தீர் நகரை ஆண்டுவந்த மன்னன், நானே கடவுள் என்று
சொல்லிக்கொண்டு, தன்னைக் கடவுளுக்கு இணையாக்கிக் கொண்டதால்,
ஆண்டவராகிய கடவுள் அவனிடம், "மக்களினங்களில் மிகவும் கொடியோரான
அன்னியரை உனக்கெதிராய் எழும்பச் செய்வேன்" என்கின்றார்.
ஆண்டவர் இங்கு குறிப்பிடுகின்ற கொடியோரான அன்னியர் வேறு
யாருமல்லர்; பாபிலோனியர்கள்தான். பாபிலோனியர்கள் தீர் நகர்மீது
படையெடுத்து வந்து அந்நகரை ஆண்டு வந்த மன்னனையும், அந்த
நகரையும் ஒன்றுமில்லாமல் செய்தார்கள். இவ்வாறு தீர் நகர்
மன்னன் தன்னுடைய ஆணவத்தால் அழிந்தான்.
நாமும்கூட பல நேரங்களில் கடவுள் நமக்குக் கொடுத்த திறமைகளைக்
கொண்டு, எல்லாம் தெரிந்தவன்... எல்லாம் என்னால்தான்
நடக்கின்றது என்று வானுக்கும் மண்ணுக்கும் குதித்துக்
கொண்டிருக்கின்றோம். உண்மையில் கடவுள்தான் எல்லாம் வல்லவர்;
நாமெல்லாம் அவருடைய கையில் ஒரு சிறு கருவிதான். இந்த உண்மையை
உணர்ந்து, நாம் நம்மிடம் இருக்கும் ஆணவத்தை அகற்றி,
தாழ்ச்சியோடு வாழக் கற்றுக்கொள்வோம்.
சிந்தனை
"ஆணவம், இவ்வுலகில் நாம் வெறுத்து ஒதுக்க வேண்டியவைகளில்
மிகவும் முக்கியமான ஒன்று" என்பார் ஹஸ்லிட் என்ற அறிஞர். எனவே,
நாம் நம்மிடம் இருக்கின்ற ஆணவத்தை அகற்றி, மிகுந்த
தாழ்ச்சியோடு வாழக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 19: 23-30
"நிலைவாழ்வை உரிமைப் பேறாக அடைவர்"
நிகழ்வு
பிரான்ஸ் நாட்டைச் சார்ந்தவர் புனிதரும் மறைவல்லுநருமான புனித
பெர்னார்டு (1090 -1153). இவர் மிகவும் வசதியான குடும்பத்தில்
பிறந்தவர். இவருக்கு ஐந்து சகோதர்களும் ஒரு சகோதரியும்
இருந்தார்கள்.
ஒருநாள் இவரும் இவரோடு சேர்ந்து முதல் நான்கு சகோதர்களும்
சகோதரியும் கடைசிச் சகோதரரிடம் சென்று, "தம்பி! நாங்கள்
அனைவரும் துறவற வாழ்க்கை மேற்கொள்ளப் போகிறோம். அதனால் இனிமேல்
நீதான் நம்முடைய குடும்பச் சொத்துக்கு அதிபதி" என்றார்கள்.
இதைக்கேட்ட அந்த இளைய சகோதரர், "உங்களுடைய மனத்தில் நீங்கள்
என்ன நினைத்துக்கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் அனைவரும்
நிலைவாழ்வு கிடைக்கும் விண்ணகத்தை அடையவேண்டும்! நான் மட்டும்
இந்த மண்ணக செல்வத்தை வைத்துக் கொண்டு துன்பப்பட வேண்டுமா...?
அதெல்லாம் முடியாது! உங்களோடு சேர்ந்து நானும் நிலைவாழ்வை
அடையவேண்டும். அதற்கு இந்த மண்ணக செல்வம் எனக்குத் தேவையே
இல்லை" என்று சொல்லிவிட்டு, அவர்களோடு சேர்ந்து துறவற
வாழ்க்கையை மேற்கொள்ளத் தொடங்கினார்.
எல்லாவற்றையும் துறந்து, துறவற வாழ்வை மேற்கொண்டால் நிலைவாழ்வு
கிடைக்கும் என்று தன்னுடைய மூத்த சகோதரர்களைப் போன்று துறவற
வாழ்க்கையை மேற்கொண்ட புனித பெர்னார்டின் இளைய சகோதரர்
நம்முடைய கவனத்திற்கு உரியவராக இருக்கின்றார். இன்றைய
நற்செய்தி வாசகத்தில் இயேசு, எல்லாவற்றையும் துறந்து, தன்னைப்
பின்பற்றி வருவோர் எத்தகைய கைம்மாறு பெறுவார் என்பதை
எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. நாம் அதைக் குறித்தும்,
அதற்கு முன்னதாக இயேசு சொன்ன சொற்களைக் குறித்தும் இப்பொழுது
சிந்தித்துப் பார்ப்போம்.
செல்வர் விண்ணரசில் புகுவது கடினம்
இன்றைய நற்செய்தி வாசகம் நேற்றைய நற்செய்தி வாசகத்தின்
தொடர்ச்சியாக இருக்கின்றது. நேற்றைய நற்செய்தியில்
"நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு நான் என்ன நன்மை
செய்யவேண்டும்?" என்று கேட்டுவந்த செல்வரான இளைஞரிடம் இயேசு,
"நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று
ஏழைகளுக்குக் கொடும்" என்பார். இதைக்கேட்டு அந்த இளைஞர்
வருத்தத்தோடு செல்வார். இதற்குப் பின்னர்தான் இயேசு தன்
சீடர்களிடம், "செல்வர் விண்ணரசில் புகுவது கடினம்"
என்கின்றார்.
இதைக்கேட்ட இயேசுவின் சீடர்கள் நிச்சயம் அதிர்ச்சி
அடைந்திருக்கவேண்டும். காரணம், யூதச் சமூகத்தில் செல்வம்,
நீடிய ஆயுள், மக்கட்பேறு, நிறைய ஆநிரைகள் யாவும் கடவுளின்
ஆசிகளாகப் பார்க்கப்பட்டன. இப்படியிருக்கும்பொழுது இயேசு,
"செல்வர் விண்ணரசில் புதுவது கடினம்" சொன்னது சீடர்களின்
அதிர்ச்சிக்குக் காரணமாக இருந்திருக்கும். உண்மையில் இயேசு,
செல்வர் விண்ணரசில் புக முடியாது என்று சொல்லவில்லை; புகுவது
கடினம் என்றுதான் சொல்கின்றார். அப்பொழுதுதான் சீடர்கள்
இயேசுவிடம், "அப்படியானால் யார்தாம் மீட்புப் பெற முடியும்?"
என்றொரு கேள்விக் கேட்கின்றார்கள். இதற்கு இயேசுவின் பதில்
என்னவாக இருக்கின்றது என்பதைக் குறித்து நாம் சிந்தித்துப்
பார்ப்போம்.
மனிதரால் இயலாது; கடவுளால் எல்லாம் இயலும்
எல்லாரும் மீட்புப் பெறுவது கடவுளின் விருப்பமாக இருந்தாலும்
(1திமொ 2: 4). மனிதன் தன்னுடைய சொந்த ஆற்றலால் மீட்புப் பெற
இயலாது; அதற்கு இறையாற்றலும் இறையருளும் தேவையானதாக
இருக்கின்றது. இன்றைக்குப் பலர் தங்களிடம் பணம் இருக்கின்றது;
செல்வாக்கு இருக்கின்றது. அதனால் தங்களால் என்ன வேண்டுமானாலும்
செய்ய இயலும் என்று நினைக்கின்றார்கள். இப்படிப்பட்டவர்கள்
தங்களிடம் இருக்கும் பணம், செல்வாக்கு ஆகியவற்றைக் கொண்டு இந்த
மண்ணகத்தில் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். (அது கூட
ஐயம்தான்); ஆனால், விண்ணகத்தில் ஒன்றும் செய்ய முடியாது;
மீட்பைப் பெற முடியாது. மீட்பை அல்லது நிலைவாழ்வைப் பெறுவதற்கு
ஒருவர் ஒரு முக்கியமான செயலைச் செய்யவேண்டும். அது என்ன என்று
பார்ப்போம்.
காசுக்கு அல்ல; கடவுளுக்கு முக்கியத்துவம் கொடுத்து
வாழவேண்டும்
ஆண்டவர் இயேசு, "மனிதரால் இது இயலாது... கடவுளால் எல்லாம்
இயலும்" என்று சொன்னதும் பேதுரு, "நாங்கள் எல்லாவற்றையும்
விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே; எங்களுக்கு என்ன
கிடைக்கும்?" என்று கேட்கின்றார். அப்பொழுது இயேசு
பேதுருவிடம், "....விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர்.
நிலைவாழ்வையும் உரிமைப் பேறாகப் பெறுவர்" என்கின்றார். ஆம்,
இந்த உலக செல்வத்தின்மீதோ அல்லது காசின்மீதோ அல்ல, கடவுள்மீது
நம்பிக்கை வைத்து, அவரைப் பின்தொடர்கின்ற யாரும் அவர் தருகின்ற
கைம்மாறினைப் பெறுவது உறுதி.
நாம் காசின் மீது நம்பிக்கை வைத்து வாழ்கின்றோமா? அல்லது
கடவுள்மீது நம்பிக்கை வைத்து வாழ்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
"கடவுள் அனுப்பியரை நம்புவதே கடவுளுக்கேற்ற செயல்" (யோவா 6:
29) என்பார் இயேசு. எனவே, நாம் உலக செல்வத்தின்மீது அல்ல,
ஒப்பற்ற செல்வமாகிய இயேசுவின் நம்பிக்கை வைத்து, அவர் காட்டும்
வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|