|
|
17
ஆகஸ்ட் 2020 |
|
பொதுக்காலம்
20ஆம் வாரம்
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
எசேக்கியேல் உங்களுக்கு ஓர் அடையாளமாய் இருப்பான்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 24: 15-24
ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: "மானிடா! உன் கண்களுக்கு
இன்பம் தருவதை உன்னிடமிருந்து ஒரே நொடியில் எடுத்துவிடப்
போகிறேன். ஆனால் நீ புலம்பவோ, அழவோ, கண்ணீர் சிந்தவோ கூடாது.
மெதுவாய்ப் பெருமூச்சு விடு! இறந்தோர்க்காய்ப் புலம்பாதே! உன்
தலைப்பாகையைக் கட்டிக்கொள்! காலில் மிதியடியை அணிந்துகொள்! உன்
வாயை மூடிக்கொள்ளாதே! இழவு கொண்டாடு வோரின் உணவை உண்ணாதே!"
நான் மக்களிடம் காலையில் உரையாடினேன். மாலையில் என் மனைவி இறந்துவிட்டாள்.
மறுநாள் காலையில் ஆண்டவர் கட்டளையிட்டதைச் செய்தேன். அப்போது
மக்கள் என்னிடம், "நீர் செய்வதன் பொருள் என்னவென்று எங்களுக்குச்
சொல்ல மாட்டீரோ?" என்று கேட்டனர்.
எனவே, நான் அவர்களுக்குச் சொன்னது: "ஆண்டவரின் வாக்கு எனக்கு
அருளப்பட்டது: இஸ்ரயேல் வீட்டாருக்குச் சொல்: தலைவராகிய ஆண்டவர்
கூறுவது இதுவே: உங்கள் வலிமையின் பெருமையும், கண்களின் இன்பமும்,
இதயத்தின் விருப்பமுமாகிய என் தூயகத்தை நான் தீட்டுப்படுத்துவேன்;
நீங்கள் விட்டுச் சென்ற ஆண் மக்களும் பெண் மக்களும் வாளால் மடிவர்.
நான் செய்ததுபோல் நீங்களும் செய்வீர்கள்; நீங்களும் உங்கள்
வாயை மூடிக்கொள்ள மாட்டீர்கள்; இழவு கொண்டாடுவோரின் உணவை உண்ணவும்
மாட்டீர்கள். தலைப்பாகையை உங்கள் தலையில் வைத்திருப்பீர்கள்.
கால்களில் மிதியடிகள் இருக்கும். நீங்கள் புலம்பவோ அழவோ
மாட்டீர்கள். ஆனால் உங்கள் குற்றப்பழி குறித்துத் தளர்வுற்று
உங்களிடையே புலம்பிக் கொள்வீர்கள். இவ்வாறு எசேக்கியேல் உங்களுக்கு
ஓர் அடையாளமாய் இருப்பான். அவன் செய்ததுபோல் நீங்களும்
செய்வீர்கள். இவை நடக்கையில் நானே தலைவராகிய ஆண்டவர் என அறிந்துகொள்வீர்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
இச 32: 18-19. 20. 21 . (பல்லவி: 18a)
=================================================================================
பல்லவி: நீ உன்னை ஈன்ற பாறையைப் புறக்கணித்தாய்.
18
உன்னை ஈன்ற பாறையைப் புறக்கணித்தாய்; உன்னை உருவாக்கிய கடவுளை
மறந்துவிட்டாய்.
19
தம் மைந்தரும் தம் மகளிரும் தமக்குச் சினமூட்டியதை, ஆண்டவர் கண்டு
அவர்களை இகழ்ந்து ஒதுக்கினார். - பல்லவி
20
அவர் உரைத்தார்: எனது முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக்
கொள்வேன்; அவர்களது முடிவு என்னவென்று நான் கவனித்துக்
கொள்வேன்; ஏனெனில், அவர்கள் கேடுகெட்ட தலைமுறையினர்; நேர்மை
அறவே அற்ற பிள்ளைகள். - பல்லவி
21
இல்லாத தெய்வத்தால் எனக்கு எரிச்சலூட்டினர்; அவர்களின் சிலைகளால்
எனக்குச் சினமூட்டினர்; ஒன்றுமில்லாத இனத்தால் அவர்களுக்கு எரிச்சலூட்டுவேன்;
மதிகெட்ட வேற்றினத்தால் அவர்களுக்குச் சினமூட்டுவேன். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
மத் 5: 3
அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில்
விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக்
கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 16-22
அக்காலத்தில்
செல்வரான இளைஞர் ஒருவர் இயேசுவிடம் வந்து, "போதகரே,
நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு நான் என்ன நன்மை செய்ய
வேண்டும்?" என்று கேட்டார். இயேசு அவரிடம், "நன்மையைப் பற்றி
என்னை ஏன் கேட்கிறீர்? நல்லவர் ஒருவரே. நீர் வாழ்வடைய
விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடியும்" என்றார்.
அவர், "எவற்றை?" என்று கேட்டார். இயேசு, "கொலை செய்யாதே; விபசாரம்
செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச் சான்று சொல்லாதே; தாய் தந்தையை
மதித்து நட. மேலும், உன்மீது நீ அன்பு கூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்
மீதும் அன்பு கூர்வாயாக" என்று கூறினார்.
அந்த இளைஞர் அவரிடம், "இவை அனைத்தையும் நான் கடைப்பிடித்து வந்துள்ளேன்.
இன்னும் என்னிடம் குறைபடுவது என்ன?" என்று கேட்டார். அதற்கு இயேசு,
"நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று
ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய்
இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்" என்றார்.
அவர் சொன்னதைக் கேட்ட அந்த இளைஞர் வருத்தத்தோடு
சென்றுவிட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
எசேக்கியேல் 24: 15-24
தவறான பாதையைத் தேர்ந்தெடுத்ததால் இஸ்ரயேல்
மக்களுக்கு நேர்ந்த துன்பம்
நிகழ்வு
ஓர் ஊரில் அறிஞர் ஒருவர் இருந்தார். ஒருநாள் இவருக்கு முன்பாகக்
கடவுள் தோன்றி, "மகனே! உனக்கு அறிவு வேண்டுமா? மகிழ்ச்சி
வேண்டுமா?" என்றார். அறிஞர் ஒரு வினாடி யோசித்தார், "கடவுள்
தரவிருக்கின்ற மகிழ்ச்சியை விடவும், அறிவைக் கேட்டால், நாம் இன்னும்
அறிவில் சிறந்தவராய் விளங்கி, பேரறிஞராக மாறிவிடலாம். அதன்பிறகு
நமக்கு எல்லாமே தானாகக் கிடைத்து விடும்" என்று
நினைத்துக்கொண்டு, "கடவுளே! எனக்கு மகிழ்ச்சி வேண்டாம்; அறிவு
கிடைத்தாலே போதும்" என்றார். கடவுளும், "அப்படியே ஆகட்டும்!"
என்று சொல்லிவிட்டு அங்கிருந்து மறைந்தார்.
அறிஞர், கடவுள் கொடுத்த அறிவைக் கொண்டு இன்னும் அறிவில் சிறந்தவராய்
விளங்கினார். இதனால் அவரை நாடே போற்றியது. அப்பொழுது அவர்,
"இந்த நாட்டில் நம்மைவிட அறிவில் சிறந்தவர் யாரும் கிடையாது"
என்று நினைத்துக் கர்வம் கொண்டார். நாள்கள் மெல்ல உருண்டோடின.
அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்ததால், அவரை விட அறிவில் சிறந்த
இளைஞர்கள் பலர் உருவாகினார்கள். இதனால் அவரை யாருமே கண்டுகொள்ளாத
நிலை ஏற்பட்டது.
அந்தே நேரத்தில்தான் அவர், "இறைவனிடம் அறிவிற்குப் பதிலாக மகிழ்ச்சியைக்
கேட்டிருந்தால், அது என்றுமே நிலைத்திருக்குமல்லவா...! இப்படி
நிலையில்லாத அறிவைக் கேட்டு, மிகப்பெரிய தவற்றைச்
செய்துவிட்டேனே!" என்று மிகவும் வருத்தப்பட்டார்.
பலர் இந்த நிகழ்வில் வருகின்ற அறிஞரைப் போன்றுதான் எது உயர்வானதோ,
எது உன்னதமானதோ அதை விட்டுவிட்டுச் சாதாரணமான அல்லது அற்பமான
ஒன்றைத் தேர்ந்தெடுத்துவிட்டு, இறுதியில் தங்களுடைய வாழ்வைத்
தொலைத்து நிற்கின்றார்கள். இஸ்ரயேல் மக்களும் இப்படித்தான்,
அவர்கள் உன்னத இறைவனைத் தேடாமல், அவருடைய வழியில் நடக்காமல்,
பாகால் தெய்வத்தைத் தேடினார்கள். இதனால் அவர்களுக்கு என்ன
நேர்ந்தது என்பதை இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எசேக்கியேல்
அடையாள முறையில் எடுத்துக் கூறுவதை வாசிக்கின்றோம். அது
குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
கண்களுக்கு இன்பமானதை எடுத்துவிடப் போவதாகச் சொல்லும் இறைவன்
ஆண்டவராகிய கடவுள் எசேக்கியேலிடம், உன் கண்களுக்கு இன்பம் தருவதை
உன்னிடமிருந்து நான் ஒரே நொடியில் எடுத்துவிடப் போகிறேன். ஆனால்,
நீ புலம்பவோ, அழவோ, கண்ணீர் சிந்தவோ கூடாது என்கின்றார்.
கடவுள் எசேக்கியேலிடம், அவருடைய கண்களுக்கு இன்பம் தருவதை அவரிடமிருந்து
எடுத்துவிடப் போவதாகச் சொன்னது, அவருடைய மனைவியைத்தான். எசேக்கியேலின்
மனைவி அவரைவிட்டுப் பிரிந்து போனாலும், அவர் புலம்பவோ, அழவோ,
கண்ணீர் சிந்தவோ, வேறு சில செயல்களைச் செய்யவோ கூடாது என்று ஆண்டவர்
சொல்லக் காரணம் அதன்மூலம் ஓர் உண்மையை இஸ்ரயேல் மக்களுக்கு அவர்
உணர்த்தத்தான்.
இஸ்ரயேல் சமூகத்தில் ஒருவர் இறந்துவிட்டால், ஆண்கள் தலையில் உள்ள
தலைப்பாகையைக் கழற்றிவிட்டு, தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக்
கொள்வர்; காலில் செருப்பு அணியமாட்டார்கள். மேலும் இறந்தவர்களின்
வீட்டாருக்குத் தங்களுடைய வருத்தத் தெரிவிக்கும்வகையில், அவர்களுடைய
வீட்டில் உணவு உண்பர். இந்த மூன்று முக்கியமான செயல்களையும் எசேக்கியேல்
தன்னுடைய மனைவி இறக்கும்பொழுது, செய்யக்கூடாது என்று ஆண்டவர்
அவரிடம் கூறுகின்றார். ஆண்டவர் சொன்னது போன்றே எசேக்கியேலும்
செய்கின்றார். இதைப் பார்த்த இஸ்ரயேல் மக்கள், நீர் செய்வதன்
பொருள் என்ன என்று கேட்கின்றார்கள். அப்பொழுதுதான் எசேக்கியேல்
தான் செய்ததன் பொருளை விளக்குகின்றார்.
இஸ்ரயேலரின் கண்களுக்கு இனிமையானதாக இருந்த எருசலேம்
திருக்கோயில்
எசேக்கியேலின் கண்களுக்கு இனிமையாய் இருந்தவர் அவருடைய மனைவி.
அதுபோன்று இஸ்ரயேல் மக்களின் கண்களுக்கு இனிமையாகவும் பெருமையாகவும்
இருந்தது எருசலேம் திருக்கோயில். அத்திருக்கோயிலுக்கு அழிவே
கிடையாது என்று அவர்கள் நினைத்தார்கள். அதே நேரத்தில் அவர்கள்
உண்மைக் கடவுளை மறந்து, பாகால் தெய்வத்தை வழிபட்டார்கள். இதனால்
பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரால் அத்திருக்கோயில் தீக்கிரையாக்கப்பட்டது.
அப்பொழுது மக்கள் அழுவதற்கே நேரமில்லாமல் போனது. ஏனெனில், அந்த
நேரத்தில் அவர்கள் பாபிலோனியர்களால் நாடுகடத்தப்பட்டார்கள். இதைத்தான்
எசேக்கியேல் அடையாள முறையில் சொல்கின்றார்.
இஸ்ரயேல் மக்களுக்கு அதிலும் குறிப்பாக யூதாவில் இருந்தவர்களுக்கு
நேர்ந்த இந்த முடிவு, அவர்கள் கடவுளைத் தேடாமல், வேற்று தெய்வத்தைத்
தேடியதால்தான். நாமும்கூட பல நேரங்களில் நல்லதைத் தேடாமல் அல்லதைத்
தேடி அழிந்து கொண்டிருக்கின்றோம். ஆகையால், பாம் நன்மையே உருவான
இறைவனின் வழிகளில் நடந்து, அவருக்கு உகந்த மக்களாவோம்.
சிந்தனை
"உன் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு பாராட்டு. அவரைப் பின்பற்றி,
அவரது வழியில் நட. அப்பொழுது நீ வாழ்வை. பலகுவாய்" (இச 30: 16)
என்பார் ஆண்டவர். ஆகையால், நாம் வாழ்வளிக்கும் இறைவனின் கட்டளைகளைக்
கடைப்பிடித்து அவரது வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 19: 16-22
"அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது"
நிகழ்வு
சபைப் போதகர் ஒருவர் இருந்தார். ஒருநாள் இவருடைய சபையைச்
சார்ந்த பெரிய பணக்காரர் இவரிடம், "ஒருநாள் என்னுடைய
வீட்டிற்கு உணவருந்த வாருங்கள்" என்றார். இவரும் அதற்குச் சரியென்று
சொல்லிவிட்டு, குறிப்பிட்ட ஒரு நாளில் அந்தப் பணக்காரருடைய
வீட்டிற்கு உணவருந்தச் சென்றார். போதகர் அந்தப் பணக்காரருடைய
வீட்டிற்கு உணவருந்தச் சென்ற நேரத்தில், பணக்காரர் தனக்குத்
தெரிந்த ஒருவருக்குக் கொடுப்பதற்காக ஒரு இலட்சத்திற்குக்
காசோலையை எழுதிக்கொண்டிருந்தார். அவர் இவரைப் பார்த்ததும், எழுதி
முடித்த காசோலையைக் சாப்பாட்டு மேசையில் வைத்துவிட்டு, இவரைக்
கவனிக்கத் தொடங்கினார். பணக்காரர் போதகருக்காக விதவிதமான உணவுப்
பதார்த்தங்களைத் தயாரித்திருந்தார். போதகரும் அவற்றை நன்றாகச்
சாப்பிட்டுப் பணக்காரருக்கும், அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கும்
நன்றி சொல்லிவிட்டு, அவர்களிடமிருந்து விடைபெற்றார்.
போதகர் அவர்களிடமிருந்து விடைபெற்ற பிறகுதான் பணக்காரருக்குத்
தெரிய வந்தது, தான் எழுதிவைத்திருந்த ஒரு இலட்சத்திற்கான
காசோலை அங்கு இல்லை என்பது! பணக்காரருக்குத் தாங்கமுடியாத சினம்
வந்தது. உடனே அவர் தன்னுடைய மனைவியை அழைத்து, "இவர் போதகரா? இல்லை
திருடரா? நாம் கொடுத்த உணவினையும் சாப்பிட்டுவிட்டு, நான் எழுதிக்
கையெழுத்துப் போட்டுவைத்திருந்த காசோலையையும் எடுத்துக்கொண்டு
போய்விட்டாரே! என்ன மாதிரியான மனிதர் இவர்! இனிமேல் நாம் இவரிடம்
பேசவும் கூடாது; இவர் நடத்தக்கூடிய சபைக் கூட்டங்களுக்கும் போகக்கூடாது"
என்றார். இதற்குப் பிறகு அந்தப் பணக்காரரும் அவருடைய குடும்பத்தாரும்
அந்தப் போதகரிடம் பேசவுமில்லை; அவர் நடத்திய கூட்டங்களில் கலந்துகொள்ளவும்
இல்லை.
இப்படி இருக்கையில் ஒருநாள் தற்செயலாக பணக்காரருடைய மனைவி, போதகரைக்
கடைத்தெருவில் கண்டார். அப்பொழுது போதகர் பணக்காரரின் மனைவியிடம்,
"என்ன நீங்கள் இப்பொழுதெல்லாம் என்னிடத்தில் பேசுவதுமில்லை; சபைக்
கூட்டங்களுக்கு வருவதுமில்லை. ஏன், உங்களுக்கு என்ன ஆயிற்று?"
என்று கேட்டார். அதற்குப் பணக்காரரின் மனைவி அவரிடம்,
"வீட்டில் வைத்திருந்த ஒரு இலட்சத்திற்கான காசோலையை எடுத்துக்கொண்டு
போனவரிடம் எப்படிப் பேசுவதாம்?" என்று சீறினார். "நீங்கள் என்ன
பேசுகிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. சற்று விளக்கமாகச்
சொல்லுங்கள்" என்று போதகர் அவரிடம் கேட்டபொழுது, பணக்காரரின்
மனைவி அவரிடம், "ஒரு மாதத்திற்கு முன்பு நீங்கள் எங்களுடைய
வீட்டிற்குச் சாப்பிட வந்தீர்கள் அல்லவா! அப்பொழுது என்னுடைய
கணவர் எழுதிக் கையெழுத்துப் போட்டுவைத்திருந்த ஒரு இலசத்திற்கான
காசோலையை அப்படியே எடுத்துக்கொண்டு வந்துவிட்டீர்கள்! அதனால்தான்
நாங்கள் உங்களிடம் பேசவும் இல்லை, நீங்கள் நடத்தக்கூடிய சபைக்கூட்டத்தில்
கலந்துகொள்ளவுமில்லை" என்றார் பணக்காரரின் மனைவி.
இதைக்கேட்டு அதிர்ந்துபோன சபைப் போதகர், "உண்மையில் நான் அந்தக்
காசோலையை எடுத்துக்கொண்டு வரவில்லை; நீங்கள் எனக்கு உணவு பரிமாறும்பொழுது,
சாம்பாரோ அல்லது மற்ற உணவுப்பொருள்களோ அதில் கொட்டிவிடக்கூடாது
என்பதற்காகத்தான், நான் அது பத்திரமாக இருக்கட்டும் என்று உங்களுடைய
வீட்டில் இருந்த திருவிவிலியத்தில் வைத்தேன். வரும்பொழுது அதைச்
சொல்ல மறந்துவிட்டேன். உங்களுடைய காசோலை நீங்கள்
வைத்திருக்கும் திருவிவிலியத்தில்தான் இருக்கின்றது; போய்ப்
பாருங்கள். அங்குதான் இருக்கும்" என்றார். பின்பு அந்தப் பணக்காரரின்
மனைவி வீட்டிற்குத் திரும்பி வந்து, வீட்டிலிருந்த திருவிவிலியத்தை
எடுத்துப் பார்த்தபொழுது, அதனுள் தன் கணவர் எழுதி வைத்திருந்த
காசோலை இருந்ததைக் கண்டு அதிர்ந்துபோனார்.
பணத்தை மட்டுமே முதன்மையாகக் கருதி, திருவிவிலியத்தை ஒரு மாதத்திற்குத்
திறந்து பார்க்காமல் இருந்த இந்தப் பணக்காரருடைய குடும்பம் எப்படி
இருந்திருக்கும் என்பதை நாமே கற்பனை செய்து பார்த்துக்கொள்ளலாம்!
இன்றைக்குப் பல கிறிஸ்தவக் குடும்பங்கள் இப்படித்தான் இருக்கின்றன
என்பது வேதனை கலந்த உண்மையாக இருக்கின்றது. இன்றைய நற்செய்தி
வாசகத்தில் வருகின்ற செல்வரான இளைஞரும் இப்படித்தான் இருக்கின்றார்.
இயேசு இந்த இளைஞருக்குச் சொல்லும் செய்தியின் வழியாக நாம் என்ன
கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்ப்போம்.
பணத்தை முதன்மைப்படுத்திக் கடவுளைப் பின்னுக்குத் தள்ளி வாழும்
மனிதர்கள்
நற்செய்தியில், "நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு நான் என்ன
நன்மை செய்யவேண்டும்?" என்ற கேள்வியோடு இயேசுவிடம் வருகின்ற
செல்வரான இளைஞரிடம், இயேசு, "நிறைவுள்ளவராக விரும்பினால் நீர்
போய் உம் உடைமைகளை விற்று, ஏழைகளுக்குக் கொடும்" என்கின்றார்.
இயேசுவிடம் வந்த செல்வரான இளைஞர் அவரிடம், எல்லாக் கட்டளையும்
கடைப்பிடித்து வந்துள்ளேன் என்று சொல்கின்றார். உண்மையில்
அவர், "நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; என்னைத் தவிர வேறு
தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது" (விப 20: 1-3) என்ற
கட்டளையைக் கடைப்பிடிக்கவில்லை. ஒருவேளை அவர் பத்துக்
கட்டளைகளில் உள்ள இந்த முதல் கட்டளையைக்
கடைப்பிடித்திருந்தால், பணம் என்ற தெய்வத்தைப்
பற்றிக்கொண்டிருந்திருந்த மாட்டார். மாறாக அவர் கடவுளின்
சாயலாகப் படைக்கப்பட்ட மக்களுக்குத் தன்னிடம் இருந்ததை வாரி
வழங்கி இருப்பார். அப்படிச் செய்யாததால்தான் இயேசு அவரிடம்
உனக்கு ஒரு குறைப்பாடு உள்ளது எனச் சொல்கின்றார்.
நற்செய்தியில் வரும் இந்த செல்வரான இளைஞரைப் போன்றுதான் நாமும்
கடவுளை முழுமையாக அன்பு செய்யாமல், பணம் என்ற தெய்வத்தைப்
பற்றிப் பிடித்துக்கொண்டு நிலைவாழ்வு பெறமுடியாமல்
இருக்கின்றோம். ஆகவே, நாம் ஆண்டவரை முழுமையாக அன்பு செய்து,
அவருடைய மக்களையும் முழுமையாக அன்புசெய்து, அவரது அன்பு
மக்களாவோம்.
சிந்தனை
"என்னைத் தேடுங்கள்; நீங்கள் வாழ்வீர்கள்" (ஆமோ 5: 4) என்பார்
ஆண்டவர். ஆகையால், நாம் ஆண்டவருக்கு நம்முடைய வாழ்வில்
முதன்மையான இடம் கொடுத்து, அவர் வழியில் நடப்போம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|