|
|
15 ஆகஸ்ட் 2020 |
|
பொதுக்காலம்
19ஆம் வாரம்
|
=================================================================================
முதல் வாசகம்
தூய மரியாவின் விண்ணேற்புப் பெருவிழா
=================================================================================
பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்;
நிலா அவருடைய காலடியில் இருந்தது.
திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம்
11: 19a; 12: 1-6, 10ab
விண்ணகத்தில் கடவுளின் கோவில் திறக்கப்பட்டது. அந்தக் கோவிலில்
உடன்படிக்கைப் பேழை காணப்பட்டது. வானில் பெரியதோர் அடையாளம்
தோன்றியது: பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்;
நிலா அவருடைய காலடியில் இருந்தது; அவர் பன்னிரு விண்மீன்களைத்
தலைமீது சூடியிருந்தார். அவர் கருவுற்றிருந்தார்; பேறுகால வேதனைப்பட்டுக்
கடுந்துயருடன் கதறினார்.
வானில் வேறோர் அடையாளமும் தோன்றியது; இதோ நெருப்பு மயமான பெரிய
அரக்கப் பாம்பு ஒன்று காணப்பட்டது. அதற்கு ஏழு தலைகளும் பத்துக்
கொம்புகளும் இருந்தன. அதன் தலைகளில் ஏழு மணி முடிகள் இருந்தன.
அது தன் வாலால் விண்மீன்களின் மூன்றில் ஒரு பகுதியை நிலத்தின்மீது
இழுத்துப்போட்டது. பேறுகால வேதனையிலிருந்த அப்பெண், பிள்ளை
பெற்றவுடன் அதை விழுங்கிவிடுமாறு அரக்கப் பாம்பு அவர்முன்
நின்றுகொண்டிருந்தது.
எல்லா நாடுகளையும் இருப்புக்கோல் கொண்டு நடத்தவிருந்த ஓர் ஆண்
குழந்தையை அவர் பெற்றெடுத்தார். அக்குழந்தையோ கடவுளிடம் அவரது
அரியணை இருந்த இடத்துக்குப் பறித்துச் செல்லப்பெற்றது. அப்பெண்
பாலைநிலத்துக்கு ஓடிப்போனார்; அங்கு ஆயிரத்து இருநூற்று அறுபது
நாள் அவரைப் பேணுமாறு கடவுள் அவருக்கென ஓர் இடத்தை ஏற்பாடு
செய்திருந்தார்.
பின்பு விண்ணகத்தில் ஒலித்த பெரியதொரு குரலைக் கேட்டேன். அது
சொன்னது: "இதோ, மீட்பு, வல்லமை, நம் கடவுளின் ஆட்சி, அவருடைய
மெசியாவின் அதிகாரம் ஆகிய அனைத்தும் வந்துவிட்டன."
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 45: 9. 10-11. 15 . (பல்லவி: 9b)
Mp3
=================================================================================
பல்லவி: ஓபீரின் பொன் அணிந்து வலப்புறம் நிற்கின்றாள் பட்டத்து
அரசி!
9
அருமைமிகு அரசிள மகளிர் உம்மை எதிர்கொள்வர்; ஓபீரின் பொன் அணிந்து
வடிவாக வலப்புறம் நிற்கின்றாள் பட்டத்து அரசி! - பல்லவி
10
கேளாய் மகளே! கருத்தாய்க் காதுகொடுத்துக் கேள்! உன் இனத்தாரை
மறந்துவிடு; பிறந்தகம் மறந்துவிடு.
11
உனது எழிலில் நாட்டங் கொள்வார் மன்னர்; உன் தலைவர் அவரே; அவரைப்
பணிந்திடு! - பல்லவி
15
மன்னவரின் மாளிகைக்குள் நுழையும் போது அவர்கள் மகிழ்ச்சியோடும்
அக்களிப்போடும் அழைத்து வரப்படுவர். - பல்லவி
இரண்டாம் வாசகம்
கிறிஸ்துவே முதலில் உயிர்பெற்றார்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து
வாசகம் 15: 20-26
சகோதரர் சகோதரிகளே,
இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன்
எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை
உறுதிப்படுத்துகிறது. ஒரு மனிதர் வழியாகச் சாவு வந்தது போல ஒரு
மனிதர் வழியாகவே இறந்தோர் உயிர்த்தெழுகின்றனர். ஆதாமை
முன்னிட்டு அனைவரும் சாவுக்குள்ளானது போலக் கிறிஸ்துவை
முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர். ஒவ்வொருவரும் அவரவர் முறை
வரும்போது உயிர் பெறுவர். கிறிஸ்துவே முதலில் உயிர் பெற்றார்.
அடுத்து, கிறிஸ்துவின் வருகையின்போது அவரைச் சார்ந்தோர் உயிர்
பெறுவர். அதன் பின்னர் முடிவு வரும். அப்போது கிறிஸ்து ஆட்சியாளர்,
அதிகாரம் செலுத்துவோர், வலிமையுடையோர் ஆகிய அனைவரையும் அழித்து
விட்டு, தந்தையாகிய கடவுளிடம் ஆட்சியை ஒப்படைப்பார்.
எல்லாப் பகைவரையும் அடிபணிய வைக்கும் வரை அவர் ஆட்சி செய்தாக
வேண்டும். சாவே கடைசிப் பகைவன், அதுவும் அழிக்கப்படும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! மரியா விண்ணகத்திற்கு எடுக்கப்பட்டார்;
வானகத் தூதரணிகள் மகிழ்கின்றன. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-56
அந்நாள்களில்
மரியா புறப்பட்டு யூதேய மலை நாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து
சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை
வாழ்த்தினார்.
மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றில் இருந்த
குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால்
முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது அவர் உரத்த குரலில்,
"பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும்
ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம்
வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை
பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும்
என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்" என்றார்.
அதைக் கேட்ட மரியா பின்வருமாறு கூறினார்:
"ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என்
மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில்
அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத்
தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். ஏனெனில் வல்லவராம்
கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே
அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய்
அவர் இரக்கம் காட்டி வருகிறார்.
அவர் தம் தோள்வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன்
சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று
தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.
பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய்
அனுப்பிவிடுகிறார்.
மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும்
என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய
இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்."
மரியா ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த
பின்பு தம் வீடு திரும்பினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
எசேக்கியேல் 18: 1-10, 13b, 30-32
யார் நீதிமான்? யார் தீயவன்?
நிகழ்வு
காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரை உணவுப் பொருள்கள் ஏற்றத்தாழ்வு
இல்லாமல், ஒரே விலையில் கிடப்பதற்கு ஏற்பாடு செய்த பிரதமர்
யாரென்று உங்களுக்குத் தெரியுமா? தங்கத்தை எளிய மக்களும்
வாங்குகின்ற அளவுக்கு மிகக்குறைந்த விலையில் கிடைக்க ஏற்பாடு
செய்த பிரதமர் யாரென்று உங்களுக்குத் தெரியுமா? அவர்தான் இந்தியாவின்
நான்காவது பிரதமராக இருந்து, 1977 முதல் 1979 வரை இந்தியாவை நல்வழியில்
வழிநடத்திச் சென்ற மொரார்ஜி தேசாய்.
இவர் மகாராஸ்டிரா மாநிலத்தின் முதலமைச்சராக நேரம் அது. இவருடைய
மகள் இந்து மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து வந்தார்.
நன்றாகப் படிக்கக்கூடிய இவர், தான் எழுதிய மருத்துவத் தேர்வில்
தோல்வியடைந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். ஆகவே, இவர் தன்னுடைய
தந்தையிடம், "அப்பா! நான் மருத்துவத் தேர்வினை நன்றாகத்தான் எழுதினேன்.
அப்படியிருந்தும், நான் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்று
தேர்வுமுடிவு வந்திருக்கின்றது. ஒருவேளை மறுகூட்டல் செய்து
பார்த்தால், தேர்வில் நான் நிச்சயம் வெற்றி பெற்றுவிடுவேன்" என்றார்.
இதற்கு மொரார்ஜி தேசாய் "மகளே! நீ மருத்துவத் தேர்வினை நன்றாக
எழுதியிருந்தாலும்கூட இப்பொழுது நாம், நீ எழுதிய தேர்வுத்தாளை
மறுகூட்டல் செய்து, நீ தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டால், மக்கள்
என்ன பேசுவார்கள் என்று தெரியுமா...? "இவளுடைய தந்தை முதலமைச்சராக
இருப்பதால்தான், தேர்வில் தோல்வியுற்ற இவள், மறுகூட்டலின்பொழுது
தேர்ச்சி பெற்றிருக்கின்றாள்" என்று பேசுவார்கள். உன்னுடைய தந்தை
நேர்மை தவறி நடந்துவிட்டார் என்று மக்கள் பேசக்கூடாது அல்லவா!
அதனால் இந்த ஆண்டு நீ தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பதாகவே
இருக்கட்டும். அடுத்த ஆண்டு நீ இன்னும் சிறப்பாகப் படித்து,
மிகுந்த மதிப்பெண் வாங்கு" என்றார்.
தன்னுடைய தந்தையிடமிருந்து இப்படியொரு பதிலை எதிர்பார்த்திராத
அந்த இளம்பெண், தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை
செய்துகொண்டார்.
எந்தச் சூழ்நிலையிலும் நேர்மை தவறி நடக்கக்கூடாது என்பதற்கு இந்தியாவின்
முன்னாள் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டு.
இன்றைய முதல்வாசகம் கடவுளின் நீதி நெறிகளைக் கடைப்பிடித்து, உண்மையாய்
இருப்பவன் நீதிமான் என்றும், அவன் நீண்டநாள்கள் வாழ்வான் என்றும்,
அதே நேரத்தில் கடவுளின் நீதி நெறிகளைக் கடைப்பிடிக்காமல், தன்னுடைய
விருப்பத்தின்படி நடப்பவன் தீயவன் என்றும் அவன் சாவான் என்றும்
எடுத்துக்கூறுகின்றது. நாம் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்து,
நீதிமானாகி, நீண்ட நாள்கள் வாழப் போகிறோமா? அல்லது நம்முடைய
விரும்பத்தின்படி நடந்து, தீயவனாகிச் சாகப்போகிறோமா? என்பன
குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
யார் நீதிமான்?
யூதர்கள் நடுவில், "புளித்த திராட்சைப் பழங்களைப் பெற்றோர்
தின்ன, பிள்ளைகளின் பல் கூசிற்று" என்ற பழமொழி இருந்தது. இதன்
பொருள், மூதாதையர் செய்த தவற்றுக்கான தண்டனையை பிள்ளைகள் அனுபவிக்க
வேண்டும் என்பதாகும். இயேசுவின் சீடர்களிடத்திலும் இப்படியோர்
எண்ணம் இருந்தது (யோவா 9: 1-3) ஆனால், ஆண்டவராகிய கடவுள் மக்களிடம்,
இனிமேல் இப்பழமொழி இஸ்ரயேலில் வழங்கப்படாது. மாறாக, ஒவ்வொருவரையும்
அவருடைய வழிகளைக் கொண்டே தீர்ப்பிடுவேன் என்கின்றார். இத்தகைய
பின்னணியில், ஒருவர் என்னுடைய நீதி நெறிகளைக் கடைப்பிடித்து உண்மையாய்
இருந்தால், அவர் நீதிமான் என்றும், அவர் நீண்ட நாள்கள்
வாழ்வார் என்றும் கூறுகின்றார் ஆண்டவர்.
நீதிமான் எப்படிப்பட்டவர், அவருக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்
என்பன பற்றி அறிந்த நாம், தீயவன் யார்? அவனுக்கு என்ன தண்டனை
கிடைக்கும் என்பன பற்றி அறிந்துகொள்வோம்.
யார் தீயவன்?
தீயவன் யாரென்று குறிப்பிடுகின்றபொழுது, "சிலைகளை நோக்கித் தன்
கண்களை ஏறெடுப்பவன், பிறர் மனையைக் கறைப்படுத்துகின்றவன்,
அடுத்தவரை ஒடுக்கி, கொள்ளையிடுகின்றவன், வட்டிக்குக்
கொடுப்பவன்... என்று சொல்லிக்கொண்டே போகிறார் இறைவாக்கினர்
எசேக்கியேல். இத்தகைய செயல்களையும், இன்னும் இதுபோன்ற
செயல்களையும் செய்பவன் தீயவன்தான். இப்படிப்பட்டவன் சாவது
உறுதி என்று எசேக்கியேல் குறிப்பிடுகின்றார்.
நீதிமான், தீயவன் இந்த இருவரில் நாம் யாராக இருக்கப் போகிறோம்
என்று நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். பிறருடைய செயல்கள்
நம்முடைய வாழ்வைத் தீர்மானிக்காது.. நம்முடைய செயல்களே
நம்முடைய வாழ்வைத் தீர்மானிக்கும். எனவே, யாரும் அழியாமல்,
எல்லாரும் வாழ்வுபெற வேண்டும் என்று விரும்பும் கடவுளின்
கட்டளையைக் கடைப்பிடித்து, நீதிமான்கள் ஆவோம்; அதன்மூலம் நீண்ட
நாள்கள் வாழ்வோம்.
சிந்தனை
"என்னைத் (ஆண்டவரைத்) தேடுங்கள்; நீங்கள் வாழ்வீர்கள்" (ஆமோ 5:
4) என்பார் ஆமோஸ் இறைவாக்கினர். ஆதலால், நாம் ஆண்டவரைத் தேடி,
அவருடைய வழிகளில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 19: 13-15
"அவர்களைத் தடுக்காதீர்கள்"
நிகழ்வு
கடைத்தெருவிற்குச் சென்று காய்கறிகளையும் பலசரக்குச்
சாமான்களையும் வாங்கிக்கொண்டு, அவற்றைத் தலையில் வைத்துச்
சுமக்க முடியாமல் சுமந்துகொண்ட வந்த செல்வியிடம், வேகமாக
ஓடிவந்த அவளுடைய மூத்த மகன் அருள், "அம்மா! நீங்கள் கடைக்குப்
போனபிறகு தம்பி என்ன செய்தான் தெரியுமா...? தன்னிடமிருந்த
பென்சிலால் அவன் வீட்டுச்சுவரில் எதை எதையோ கிறுக்கி
வைத்திருக்கின்றான். வந்து பாருங்கள்!" என்றான்.
இதைக் கேட்டு செல்விக்குக் கோபம் கோபமாய் வந்தது. அவள்
தன்னுடைய தலையில் இருந்த சுமையை கீழே இறக்கி வைத்து
வைத்துவிட்டு, "இப்பொழுது அவன் எங்கே இருக்கின்றான்?" என்று
மூத்தவனிடம் கேட்க, அவனோ, "நீங்கள் வருவது தெரிந்ததும்,
வீட்டுக்குப் பின்னால் போய் ஒளிந்துகொண்டான்" என்றான்.
உடனே செல்வி தன்னுடைய கையில் ஒரு கம்பை எடுத்துக்கொண்டு,
"அன்பு... அன்பு..." என்று கத்திக்கொண்டு வீட்டுக்குப்
பின்னால் போனாள். அதற்குள் அன்பு அங்கிருந்து ஓடியே விட்டான்.
"எப்படியும் இவன் வீட்டிற்கு வந்துதானே ஆகவேண்டும்; அப்பொழுது
பார்த்துக்கொள்ளலாம்!" என்று நினைத்துக்கொண்டு,
கடைத்தெருவிலிருந்து வாங்கி வந்த காய்கறிகளையும் மளிகைச்
சாமான்களையும் தூக்கிக்கொண்டு வீட்டுக்குள் வந்தாள் செல்வி.
அப்பொழுது அவள் சுவரில் கண்ட காட்சி அவளுடைய கண்களிலிருந்து
கண்ணீரை வரவழைத்துவிட்டன. ஏனென்றால், சுவரில் ஒரு தாய்
தன்னுடைய தோளில் தன் பிள்ளையைச் சுமப்பது போன்றும், அதற்குக்
கீழ் "அம்மா நான் உங்களை அன்பு செய்கின்றேன்" என்றும்
எழுதப்பட்டிருந்தன. இக்காட்சிதான் செல்வியின் கண்களிலிருந்து
கண்ணீரை வரவழைத்தன. இதற்குப் பின்பு அவள் ஓரிடத்தில்
நிலைகொள்ளவில்லை. "இப்படியொரு திறமையான மகனைப் பெற்றதற்கு நான்
ஏதோ புண்ணியம் செய்திருக்கவேண்டும்!" என்று நினைத்தவளாய், இளைய
மகனின் வருகைக்காக மாலை வரை காத்திருந்தான். அவன் வீட்டிற்கு
வந்ததும், அவனைக் கட்டியணைத்துக் கொண்ட செல்வி, "என் அன்பு
மகனே! உன்னிடத்தில் இப்படியொரு திறமையா...? இது தெரியாமல்
உன்னை அடிக்கத் துணிந்துவிட்டேனே! என்னை மன்னித்துக் கொள்"
என்றாள். இதற்குப் பிறகு அவள், தன்னுடைய மகன் ஓவியம் வரைவதற்கு
என்னென்ன உதவிகளையெல்லாம் செய்ய முடியுமோ, அதையெல்லாம் செய்து
அவனை மிகப்பெரிய ஓவியனாக்கினாள்.
ஆம். சிறு பிள்ளைகள் அல்லது குழந்தைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு
விதத்தில் திறமையானவர். ஆதலால், அவர்களை அவர்களுடைய திறமையில்
நாம் வளர்த்தெடுக்க வேண்டுமே ஒழிய, அவர்களைத் தடுக்கக் கூடாது.
இத்தகைய செய்தியைத்தான் இந்த நிகழ்வும் இன்றைய நற்செய்தி
வாசகமும் நமக்கு எடுத்துக்கூறுகின்றன. நாம் அதைக் குறித்து
இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
குழந்தைகளைத் தடுத்த சீடர்கள்
பொதுவாக யூதப் பெற்றோர்கள் யூத இரபிகளிடமிருந்து தங்களுடைய
குழந்தைகளுக்கு ஆசி பெறுவார்கள். இந்த அடிப்படையில், மக்களால்
போதகர், இறைவாக்கினர், என்று அறியப்பட்ட இயேசு தங்களுடைய
குழந்தைகளுக்கு ஆசி வழங்கினால், அது நன்றாக இருக்கும்
என்பதற்காக யூதப் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளைக்
கூட்டிக்கொண்டு இயேசுவிடம் வருகின்றனர். யூதப் பெற்றோர்கள்
தங்களுடைய குழந்தைகளை யூத இரபிகளிடமும் இயேசுவிடமும் கொண்டு
வந்ததற்கு மற்றொரு காரணமும் இருந்தது. அது என்னவெனில்,
குழந்தைகள் இரபிகள் அல்லது இயேசுவின் எடுத்துக்காட்டான
வாழ்க்கையைப் பின்பற்றி நடக்கவேண்டும் என்பதால்தான். இத்தகைய
காரணங்களால் தங்களுடைய குழந்தைகளை இயேசுவிடம் கூட்டிக்கொண்டு
வருகின்ற யூதப் பெற்றோர்களைத் தன்னுடைய சீடர்கள்
தடுத்ததால்தான், இயேசு அவர்களிடம், "சிறு பிள்ளைகளை என்னிடம்
வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்" என்கின்றார்,
ஆம், சிறு பிள்ளைகள் இறையன்பில் (தங்களுடைய திறமையில்)
வளரவேண்டியவர்கள். அவர்களைத் தடுப்பது எந்தவிதத்திலும்
ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுதான் இயேசுவின் போதனையாக
இருக்கின்றது.
குழந்தைகளை வளரவிட்ட இயேசு
தன்னிடம் வந்த குழந்தைகளைத் தடுக்கவேண்டாம் என்று தன்னுடைய
சீடர்களிடம் சொன்ன இயேசு, தொடர்ந்து, "விண்ணரசு இத்தகையோருக்கே
உரியது" என்று அவர்களுக்கு ஆசி வழங்குகின்றார். இயேசு
அவர்களைத் தொட்டு ஆசி வழங்கியதன் மூலம் அவர்கள் இறையன்பில்
(தங்களுடைய திறமையில்) வளரவிடுகின்றார். யூதச் சமூகம் ஆணாதிக்க
சமூகம். அது பெண்களையும் குழந்தைகளையும் வளரவிடாமல் தடுத்தது.
இதற்கு முற்றிலும் மாறாக இயேசு, குழந்தைகளுக்கு ஆசி
வழங்கியதன்மூ லம் அவர்களை வளரவிடுகின்றார்.
இயேசு சிறு பிள்ளைகளை தடுக்காமல், வளரவிட்டதுபோல், நாம்
அவர்கள் வளர்வதற்குக் காரணமாக இருக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
"ஒருவன் எத்தனை துன்பங்களை அனுபவித்தாலும், அவன் அன்பு
செலுத்த ஒரு குழந்தையைப் பெற்றிருந்தால், அவனை விடப்
பேறுபெற்றவன் வேறு யாரும் கிடையாது" என்பார் கதே என்ற அறிஞர்.
ஆகையால், நாம் கடவுள் கொடுத்திருக்கும் மிகப்பெரிய கொடையாகிய
குழந்தைகள் இறையன்பிலும் பிறரன்பிலும் தங்களுடைய திறமையிலும்
வளர்க காரணமாக இருப்போம். அவர்களுக்கு ஒருபோதும் தடையாய்
இல்லாமல் இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை (ஆகஸ்டு 15)
ஒரு தாய் தன்னுடைய ஒருமாதக் குழந்தையுடன் தரையில் பாய்
விரித்துத் தூங்கிக்கொண்டிருந்தாள். அப்போது திடிரென்று கருநாகம்
ஒன்று வாசல் வழியே வந்து அவர்களுக்கு முன்பாக படமெடுத்து நின்றது.
இதைப் பார்த்த அக்கம் பக்கத்து வீட்டார் எல்லாரும் பதைபதைத்துப்
போனார்கள். ஒரு நிமிடம் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து
நின்றார்கள். பின்னர் அவளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டுப்
பார்த்தார்கள். அவளிடமிருந்து ஒரு பதிலும் வராததால் ஒரு நீளமான
தடியை எடுத்து அவளைத் தட்டிப் பார்த்தார்கள். அப்போதும்கூட அவள்
எழுந்திருக்கவில்லை. இறுதியாக ஒரு மல்லிகைப் பூவை எடுத்து குழந்தையின்மீது
எறிந்தார்கள். அடுத்த நிமிடம் தன்னுடைய குழந்தைக்கு ஏதோ ஆயிற்று
என்று தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த அவள், குழந்தையின் மீது
விழுந்திருந்த மல்லிகைப்பூவை எடுத்து தூர எறிந்தாள். அதன்பின்
தன் முன்னால் இருந்த பாம்பிடமிருந்து குழந்தையும், தன்னையும்
எந்த ஒரு பதற்றமுமின்றிக் காப்பாற்றினாள்.
அக்கம் பக்கத்து வீட்டார் தன்னைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டபோதும்,
தடியால் அடித்தபோதும்கூட எழாத தாய், தன்னுடைய குழந்தைக்கு எதோ
ஒன்று நடக்கிறது என்றவுடன் எவ்வளவு பதறிப்போகிறாள்!. ஒவ்வொரு
நொடியும் குழந்தையைப் பற்றியே நினைத்துக்கொண்டிருகிற ஒருதாயால்
தான் இப்படிச் செயல்பட முடியும். இதுதான் தாயின் உண்மையான அன்பு.
இன்றைக்கு நம் மரியன்னைக்கு விழா எடுத்துக் கொண்டாடுகிறோம். ஒரு
சாதாரண தாயைவிட மேலாக, மரியாள் பிள்ளைகளாகிய நம்மீது முழுமையான
அக்கறை கொண்டிருப்பவள். கண்மணிபோல கருத்தாய் காப்பவள். அதனால்
நாம் அவருக்கு விழா எடுத்துக்கொண்டாடுவது மிகவும் பொருத்தமானது
ஆகும்.
மரியன்னையின் விண்ணேற்பு விழா என்பது உலகிலுள்ள அனைத்துக் கத்தோலிக்கக்
கிறிஸ்தவர்களாலும் கொண்டாடப்படக்கூடிய ஒரு விழா. இயேசுக்கிறிஸ்து
தனது தாயாரை நம் அனைவருக்கும் தாயாக இவ்வுலகில் விட்டுச்
சென்றார். "பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்ட தாய்", "அருள்
நிறைந்த பெண்மணி" என்று பெண்குலத்திற்கு மட்டுமல்லாது உலகத்தில்
உள்ள தாய்மார்களின் பொக்கிஷமாக திகழ்பவள்தான் நம் மரியன்னை.
எனவே அப்படிப்பட்ட அன்னையின் விழாவைக் கொண்டாடுகிற இவ்வேளையில்
அவள் நமக்கு என்ன செய்தியைத் தருகிறாள் என்று சிந்தித்துப்
பார்ப்போம்.
மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவது கி.பி.8 ஆம்
நூற்றாண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 15 ம் தேதி
கொண்டாடப்பட்டு வருகிறது. திருத்தந்தை முதலாம் நிக்கோலாஸ்
(கி.பி.858- 867) இவ்விழா வரலாற்றில் என்றும் மறையாத அளவிற்கு
திருவழிபாட்டில் ஊன்றச் செய்தார். திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர்
1954 ஆம் ஆண்டில் அன்னை மரியாள் ஆன்மாவோடும், உடலோடும் விண்ணகத்திற்கு
எடுத்துக் கொள்ளப்பட்டாள் என்றும், திருச்சபையின் போதனையை
விசுவாச சத்தியம் என்றும் பிரகடனப்படுத்தினார். இதற்கு ஓர் இறையியல்
அடிப்படையென்றால், "பாவமறியாத மரியாளை மரணம் எப்படித் தீண்ட
முடியும்?" என்பதுதான். இதன்வழியாக அன்னை மரியாள் மரணத்தின்
பிடியில் சிக்காமல் விண்ணகம் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கவேண்டும்
என்ற நம்பிக்கை வேரூன்ற ஆரம்பித்தது.
திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர், தனது சாசனத்தில், அன்னை
மரியாளின் மரணம் பற்றி திட்டவட்டமாக எதுவும் கூறாமல் தனது
வையக வாழ்வு நிறைவெய்தியவுடன் மரியா விண்ணகத்திற்கு எடுத்துக்
கொள்ளப்பட்டாள் என்று மட்டும் குறிப்பிடுகிறார். மரியாள்
இயேசுவை தமது உள்ளத்தில் ஏற்று, உதரத்தில் தாங்கி, அவருடைய
உணர்வுகளோடு ஒன்றாகி, மீட்புத் திட்டத்தில் முழுமையாகத் துணை
நின்றதால், அவள் இயேசுவின் உயிர்ப்பிலும் முதன்மையாக பங்கு
பெறுவது தகுதியும் நீதியுமாகும். இது நாம் அனைவரும்
பெறப்போகும் விண்ணக மகிமையின் முன்னாக்கமாகவும்,
முன்னடையாளமாகவும் இருக்கும்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில்கூட பவுலடியார், "இறந்த கிறிஸ்து
உயிருடன் எழுப்பட்டது போன்று நாமும் உயிர்த்தெழுவோம்" என்று
உறுதிபடுத்துகிறார். ஆக ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவை போன்று
அன்னை மரியாளைப் போன்று இறைவனின் திருவுளத்தின் படி
நடக்கின்ற நாம் ஒவ்வொருவருமே விண்ணக மகிமையைப் பெறுவோம்
என்பதில் எந்த ஒரு ஐயமுமில்லை.
நற்செய்தி வாசகத்தில் அன்னை மரியாள் தான் இயேசுவைக்
கருவுற்றிருந்த போதிலும், தன்னுடைய உறவினரான எலிசபெத் பேறுகால
வேதனையில் தவிக்கிறார் என்பதை அறிந்து ஓடோடிச் சென்று
உதவுகிறாள். தூய ஜெரோம் அன்னை மரியாளைக் குறித்துச்
சொல்கிறபோது இப்படியாகச் சொல்வார், "அன்னை மரியாள் இந்த
மண்ணுலகில் வாழ்ந்தபோது பிறர் படக்கூடிய துன்பத்தை தன்னுடைய
துன்பமாகப் பார்த்தாள். மேலும் அத்துன்பத்தைக் களைய பெருதும்
பாடுபட்டாள்". ஆம் அன்னை மரியாள் பிறரின் துன்பத்தை தனது
துன்பமாகப் பார்த்தார்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை (ஆகஸ்டு 15)
பிரபல பிரஞ்சு எழுத்தாளரான விக்டர் பூகோ என்பவர் சொல்லும்
நிகழ்ச்சி இது.
1700 களின் தொடக்கத்தில் பிரஞ்சுப் புரட்சி நடைபெற்றுக்
கொண்டிருந்த தருணம். ஒரு தாயானவள் தன்னுடைய இரண்டு மகன்களோடு
வீட்டிலிருந்து வெளியே தப்பித்து ஓடினாள். கலகக்காரர்களிடம்
மாட்டிக்கொள்ளாமல் இருக்க அவள் ஒரு அடர்ந்த காடு வழியாகப்
பயணமானாள். இரண்டு மூன்று நாட்களாக உணவு எதுவுமே சாப்பிடக்
கிடைக்காததால் அவளும், அவளுடைய இரண்டு மகன்களும் உடல் தளர்ந்து
காணப்பட்டார்கள்.
அப்பொழுது அந்த வழியாக வந்த இரண்டு இராணுவ வீரர்கள் அவர்களின்
நிலைகண்டு, அவர்களுக்கு தங்களிடம் இருந்த ஒரு பெரிய துண்டை
எடுத்துக் கொடுத்தனர். உடனே அந்தத் தாயானவள், ரொட்டித் துண்டை
இரண்டாக உடைத்து, அதை தன்னுடைய மகன்களுக்கும் உண்ணக்
கொடுத்தார்.
இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு நின்ற அந்த இரண்டு இராணுவ
வீரர்களில் ஒருவர், "ஏன் இவள் இப்படிச் செய்கிறாள். தனக்குக்
கிடைத்த ரொட்டித் துண்டை, தன்னுடைய பிள்ளைகளுக்குக்
கொடுத்துவிட்டு, இவள் சாப்பிடாமல் இருக்கிறாளே, ஒருவேளை
இவளுக்குப் பசிக்கவில்லையா?" என்று கேட்டார். அதற்கு இன்னொரு
இராணுவ வீரர் அவரிடம், "அவளுக்குப் பசிக்காமல் இருக்காது,
தன்னுடைய பிள்ளைகள் இருவரும் நன்றாகச் சாப்பிட வேண்டும்
என்பதற்காகவே அவள் இப்படிச் செய்கிறாள்" என்றார்.
ஆம், தாயானவள் எப்போதுமே தன்னுடைய பிள்ளைகள் மீது அதிக
அன்பும், அக்கறையும் கொண்டிருப்பவள். அந்த வகையில்
பார்க்கும்போது, அன்னை மரியாள் பிள்ளைகளாகிய நம்மீது எப்போதும்
அன்பும், கரிசனையும் கொண்டவளாய் விளங்குகிறாள்.
இன்று திருச்சபையானது அன்னை மரியாளின் விண்ணேற்புப்
பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. அன்னை மரியாள் தன்னுடைய
மண்ணக வாழ்வை முடித்துகொண்ட உடன், உடலோடும், ஆன்மாவோடும்
விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்ற உண்மை இவ்விழா
எடுத்துரைக்கிறது.
கி.பி.நான்காம் நூற்றாண்டிலிருந்து கீழைத் திருச்சபையில்
இவ்விழா டார்மிஷன் என்ற பெயரில் அதாவது அன்னை ஆண்டவரில்
துயில் கொள்கிறாள் என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருவதற்கான
வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன. அதன்பிறகு எட்டாம்
நூற்றாண்டைச் சார்ந்த யோவான் டமாசின் என்பவர், "அன்னை மரியாள்
ஆண்டவர் இயேசுவைப் பெற்றெடுப்பதன் பொருட்டு, கருவிலே
பாவக்கறையின்றி உதித்ததால், அவள் உடலோடும் ஆன்மாவோடும்
விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்" என்று கூறுவார்.
1568 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த ஐந்தாம்
பத்திநாதர் என்பவர் மரியாளின் விண்ணேற்புப் பெருவிழாவை உலகம்
முழுவதும் கொண்டாடப் பணித்தார். 1950 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம்
தேதி, மரியாள் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு
எடுத்துக்கொள்ளப்பட்டார் என்ற விசுவாசப் பிரகடனமானது
இயற்றப்பட்டது. பின்னர் இரண்டாம் வத்திக்கான் சங்கமானது,
"மாசற்ற கன்னி மரியாள் மண்ணக வாழ்வை முடித்ததும், உடலோடும்,
ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்று
கட்டியம் கூறியது (திச 59). இவ்வாறுதான் மரியாளின்
விண்ணேற்புப் பெருவிழா உலக முழுவதும் கொண்டாடும் நிலை
உருவானது.
இந்த நல்ல நாளில் இவ்விழா நமக்கு என்ன செய்தியைத் தருகிறது
என்று சிந்தித்துப் பார்க்க அழைக்கப்பட்டிருக்கிறோம். இவ்விழா
தரும் முதலாவது சிந்தனை மரியாள் புதிய உடன்படிக்கையின் பேழை
என்பதாகும்.
திருவெளிப்பாடு நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்
வாசகத்தில் விண்ணகத்தில் கடவுளின் கோவில் திறக்கப்பட்டது.
அந்தக் கோவிலில் உடன்படிக்கைப் பேழை காணப்பட்டது என்று
வாசிக்கின்றோம். இந்த உடன்படிக்கைப் பேழை என்னவாக இருக்கும்
என்று சிந்தித்துப் பார்த்தோமேயானால் அன்னை மரியாள்தான் என்ற
உண்மை நமக்கு விளங்கும்.
மரியாளின் பிராத்தனையில் மரியாளை நாம் உடன்படிக்கையின்
பேழையே என்றுதான் சொல்கிறோம். பழைய ஏற்பாட்டுக் காலத்தில்
குறிப்பிடப்படும் உடன்படிக்கைப் பேழையில் மன்னாவும்,
பத்துக்கட்டளைகள் அடங்கிய இரண்டு கற்பலகைகளும், ஆரோனின் கோலும்
இருந்தன. புதிய உடன்படிக்கைப் பேழையான மரியா, உலகிற்கு
வாழ்வளிக்கும் உணவும், வார்த்தையுமான இயேசுவை தன்னுடைய
உதிரத்தில் தாங்கி இருந்தாள். எப்படி பழைய ஏற்பாட்டுக்
காலத்தில் எங்கெல்லாம் உடன்படிக்கைப் பேழை இருந்ததோ,
அங்கெல்லாம் மகிழ்ச்சியும், கடவுளின் ஆசிர்வாதமும் இருந்தtது.
அதுபோல, புதிய உடன்படிக்கைப் பேழையான மரியாள் இருந்த இடத்தில்
கடவுளின் ஆசிரும், மகிழ்ச்சியும் நிறைவாக இருந்தது. எனவே தான்
மரியாவை புதிய உடன்படிக்கைப் பேழை என்று சொல்வது மிகவும்
பொருத்தமானதாக இருக்கின்றது.
இவ்விழா நமக்குத் தரும் இரண்டாவது சிந்தனை மரியாள் தேவையில்
இருப்போருக்கு உதவுபவளாக விளங்குகின்றாள் என்பதாகும். மரியாள்
தூய ஆவியினால் கருவுற்று ஆண்டவர் இயேசுவை தன்னுடைய உதிரத்தில்
தாங்கி இருக்கிறாள். அப்படிப்பட்ட தருணத்திலும் தன்னுடைய
உறவுக்காரப் பெண்மணி எலிசபெத்து கருவுற்றிருக்கிறாள் என்பதைக்
கேள்விப்பட்டு, அவளுக்கு ஓடோடிச் சென்று உதவுகிறாள்; அவளுக்கு
எல்லாவிதமான உதவிகளையும் செய்து தருகிறாள்.
மரியாள் எப்போதும் தான் ஆண்டவரின் தாய் அதனால் தனக்கு மற்றவர்
உதவி செய்யவேண்டும் என்று நினைக்கவில்லை. அவள் தேவையில்
இருப்பவர் யாராக இருந்தாலும், அவர்களுக்கு ஓடோடிச் சென்று
உதவுவதுதான் இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்தாள். அதனால்தான்
கடவுள் அவருக்கு மேலான கொடைகளை வழங்கினார், அவரை உடலோடும்
ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொண்டார்.
ஆகவே, மரியாளின் விண்ணேற்புப் பெருவிழாவைக் கொண்டாடும் நாமும்
அன்னை மரியாவைப் உடன்படிக்கைப் பேழையாக/கடவுளின் பிரசன்னை
மற்றவருக்கு தரும் கருவியாக வாழ்வோம். அதோடு மட்டுமல்லாமல்
தேவையில் இருப்பவருக்கு ஓடோடிச் சென்று உதவும். அப்போது நாம்
அன்னையின் அன்புப் பிள்ளைகளாக மாறுவோம்.
அன்னை தெரசா தன்னுடைய வாழ்வில் நடந்ததாகப் குறிப்பிடும்
நிகழ்ச்சி இது.
ஒருமுறை அன்னைத் தெரசா கல்கத்தா வீதிகளில் வலம்வந்தபோது
சிறுவன் ஒருவன் கிழிந்த ஆடையோடும், வற்றிய தேகத்தோடும் தரையில்
சுருண்டு கிடந்தான். இதைப் பார்த்த அன்னை அவனை தோள்மேல்
தூக்கிப் போட்டுக்கொண்டு, தன்னுடைய இல்லத்திற்கு கொண்டு
சென்றான். அங்கே அவனுக்கு நல்ல உணவு கொடுத்து, உடையும்
கொடுத்து, அங்கேயே தங்கச் சொன்னாள். ஆனால் அவனோ அங்கிருந்து
தப்பித்து வெளியே ஓடிப்போனான்.
இரண்டு மூன்று நாட்கள் கழித்து அதே சிறுவன் அன்னைத் தெரசா
வீதியில் வலம்வந்தபோது தரையில் சுருண்டு படுத்துக்கிடந்தான்.
உடனே அன்னையானவள் அவனை மீண்டுமாக இல்லத்திற்கு தூக்கிச் வந்து,
பராமரித்து வந்தாள். இந்த முறை தன்னுடைய அருட்சகோதரிகளிடம்,
"ஒருவேளை அவன் எங்காவது ஓடிச்சென்றால், அவன் எங்கே செல்கிறான்
என்று பின்தொடர்ந்து பாருங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.
இரண்டு நாட்கள் கழித்து, அவன் வெளியே ஓடத் தொடங்கினான்.
ஏற்கனவே அன்னை சொன்னதுபோன்று, அருட்சகோதரிகள் அவனைப்
பின்தொடர்ந்து சென்றார்கள். அப்போது சிறுவன் ஒரு
மரத்தடிக்குக்கீழ் போய் நின்றான். அந்த மரத்தடியில் அழுக்கு
உடையில், உடலெல்லாம் புண்ணாக இருந்த ஒரு பெண்மணி
படுத்துக்கிடந்தாள். அவள் அவனுடைய தாய் போன்று இருந்தாள்.
இந்த வேளையில் சிறுவனைப் பின்தொடர்ந்து வந்த அருட்சகோதரிகள்
அவனிடம், "எதற்காக வீட்டை விட்டு, இப்படி அடிக்கடி ஓடிவந்து
விடுகிறாய், உனக்கு என்ன ஆயிற்று" என்று கேட்டார்கள். அதற்கு
அவன், "எது என்னுடைய வீடு? அதுவா?. நிச்சயமாக அதுவல்ல,
என்னுடைய தாய் இருக்கும் இந்த இடம்தான் என்னுடைய வீடு,
மகிழ்ச்சி எல்லாம்" என்றான்.
ஆம், மரியா என்னும் விண்ணகத் தாயிருக்கும் இடம்தான் நமது
மகிழ்ச்சி, நிம்மதி எல்லாம். ஆகவே, மரியாளின் விண்ணேற்புப்
பெருவிழாவில் நாம் தாயோடு இருப்போம், தாயின் வழியில் நடப்போம்.
அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
தூய மரியாவின் விண்ணேற்புப் பெருவிழா -
திருப்பலி முன்னுரை
பார் போற்றும் பரமனை பாவக்கறையில்லாமல் ஈந்த மரியன்னையின்
விண்ணேற்புப் பெருநாளில், பாரதம் சுதந்திரம் பெற்ற நாளை
நினைந்து, நன்றி கூற வந்துள்ள உங்கள் அனைவரையும்
இத்திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு அன்போடு வாழ்த்தி
வரவேற்கின்றோம்.
நாட்டுப்பற்றினால் நாட்டின் விடுதலைக்காக, தங்கள் இன்னுயிரை
ஈந்த தியாகச் செம்மல்களுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்தி,
நாட்டின் மீது பற்றுக் கொள்ளாமல், நல்லதொரு குடிமக்களாக
வாழாமல் இருந்த தருணங்களுக்காக மனம் வருந்தி, இறைவனிடத்தில்
மன்னிப்பு வேண்டுவோம்.
இன்றைய வாசகங்கள் அனைத்தும் நம் அனைவருக்கும் அன்னையான தூய
கன்னிமரியைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளன.
அன்னை ஓர் ஆலயம் என்று சொல்கிறோம். நமது திருவிவிலிய மரபுப்படி
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய திருமுகம் 6:19 இல்
"உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி
தங்கும் கோவில்.." என்று கூறியுள்ளபடி நாம் அனைவருமே தூய ஆவி
தங்கும் ஆலயமாக இருக்கின்றோம். அன்னை மரியாள் தனது உடலை தூய
ஆவி தங்கும் கோவிலாக மாற்றியதாலே கன்னிமை குன்றாமல் இறைமகனை
ஈன்றெடுத்தாள். நாம் நமது உடலை எந்த விதத்தில் இறைவன் தங்கி
வாழும் ஆலயமாக மாற்றியுள்ளோம். சிந்திப்போம் இன்றையத்
திருப்பலியில்.
கன்னிமையில் தூய ஆவியால் இறைமகனைக் கருத்தாங்கினாள் அன்னை
மரியா. ஈன்றெடுத்த மகனை உலக மக்களின் பாவங்களுக்காகத் தகனப்
பலியாக்கி, இறைத் திட்டத்திற்குப் பணிந்து வாழ்ந்தார். உலகினர்
அனைவருக்கும் அன்னையாக மாறினார். முதிர்வயதில் கருவுற்றிருந்த
உறவினளைத் தேடிச் சென்று உதவினார். விருந்து உண்ண மண விழா
சென்றவர் வீட்டாரின் தேவை அறிந்து மகனிடம் எடுத்துக் கூறி, அதை
நிறைவேற்றி விழாநாயகியாக மாறினார். அன்று மட்டுமல்ல இன்றைய
விழாநாயகியும் நம் அன்னை தான். இன்றும் தன் மகனிடத்தில் நம்
ஒவ்வொருவருக்காகப் பரிந்து பேசுகின்றார்.
இன்றைய நாளில் நம் நாட்டின் விடுதலைக்காகத் தங்கள் உயிர் ஈந்த
தியாக உள்ளங்களை நினைத்துப் பார்ப்போம். இறைவனுக்கு நன்றி
சொல்லுவோம்.
பெற்றுக் கொடுத்த சுதந்திரத்தை நாம் எந்த விதத்தில் பேணிக்
காக்கின்றோம்? சுயநலமில்லாமல் பெற்றுக் கொடுத்த சுதந்திரத்தை
நமது சுயநலத்திற்காக மட்டும் தான் பயன்படுத்துகின்றோமா?
நாட்டினை ஆளும் ஆட்சியாளர்களை குறை கூறுவதில் எப்பயனும்
இல்லையே. நம் நாட்டிற்கு நாம் என்ன செய்தோம் என்றே
சிந்திப்போம்.
உறவினள் எலிசபெத்துக்கு ஓடிச் சென்று உதவிய மரியைப் போன்று,
நம்மிடையே வாழும் ஏழை எளியவர்களை நேசிப்போம்; அவர்களின்
வாழ்வாதாரத்திற்கு வழிவகுப்போம். நம் வழியைச்
செம்மைப்படுத்துவோம்; நல்லதொரு குடிமக்களாக, நம் நாட்டை காக்க
நாம் முயற்சி எடுப்போம்; நாட்டினை முன்னேற்றப் பாதையில் கொண்டு
செல்வோம்.
மன்றாட்டுக்கள்:
1.இறை உன் குரல் கேட்க இறைவாக்கினர்களைத் தேர்ந்தெடுத்தவரே எம்
இறைவா!
உம் இறைப்பணி ஆற்ற, நீர் தேர்ந்தெடுத்து திருப்பொழிவு செய்த
திரு அவைப் பணியாளர்களை ஆசீர்வதியும். இவர்கள் தாங்கள்
அழைக்கப்பட்டதன் மேன்மையை உணர்ந்து, தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட
மக்களை இறைப் பாதையில் வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகின்றோம்.
2. உம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களை ஆள அரசர்களைத்
தேர்ந்தெடுத்தவரே எம் இறைவா!
எம் தாய்த் திருநாட்டை ஆளும் ஆட்சியாளர்களை ஆசீர்வதியும்.
நாட்டின் வளங்களைப் பேணிக் காக்கவும், நாட்டின் செல்வங்களான
மக்களை நீதி நெறியில் வழி நடத்தவும், நாட்டு மக்களின் தேவை
அறிந்து திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தவும் வேண்டுமென்று
இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. தோழனாய் இருந்து தோள் கொடுக்கும் எம் இறைவா!
எம் நாட்டில் உள்ள அனைத்து இளைய தலைமுறையினரையும்
ஆசீர்வதியும். மறைந்து போகும் இளமைப் பருவத்தில் படைத்த உம்மை
மறவாமல், ஈன்றெடுத்த பெற்றோரின் உழைப்பினை மனதில் கொண்டு
தங்கள் கடமைகளைச் செவ்வனே செய்யவும், நாட்டின் நலனுக்காகத்
தங்களையே ஈடுபடுத்தும் தியாக உள்ளத்தைத் தந்தருள வேண்டுமென்று
இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. ஏழைகளின் நாயகனே எம் இறைவா!
துன்புறும் ஏழை எளியோரைக் கடைக்கண்ணோக்கியருளும். அடிப்படை
வாழ்வாதாரம் கூட இன்றி அல்லலுறும் இவர்களின் துயர் நீக்கவும்,
நாட்டின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் இந்தியாவை இன்னும் ஏழை
நாடாகவே மாற்றும் உயர் குடிமக்களின் மனத்தை மாற்றியருள
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
நன்றி மன்றாட்டுக்கள்:
1. இன்றைய நாளில் புதியவிடியலைக் காணச் செய்ததற்காக இறைவா
உமக்கு நன்றி.
2.உமது அன்னையை உலகினருக்கெல்லாம் அன்னையாகக் கொடுத்ததற்காக
இறைவா உமக்கு நன்றி.
3. உதவியின்றித் தவித்த நேரங்களில் உற்ற துணையாக வந்ததற்காக
இறைவா உமக்கு நன்றி.
4. வழிகாட்டுதல் இல்லாமல் தவித்த நேரங்களில் நல்லதொரு வழியைக்
காண்பித்ததற்காக இறைவா உமக்கு நன்றி.
5. அளவில்லாமல் அன்பினை அள்ளிக் கொடுப்பதற்காக இறைவா உமக்கு
நன்றி.
6. வளமிக்க பாரதத்தில் எம்மை நிறைவோடு வாழச் செய்வதற்காக இறைவா
உமக்கு நன்றி.
7. அன்னையின் வழியாக நாங்கள் எழுப்பும் வேண்டுதல்களை
நிறைவேற்றியதற்காக இறைவா உமக்கு நன்றி.
8. தோல்வியில் தோள் கொடுத்துக் காப்பதற்காக இறைவா உமக்கு
நன்றி.
9. உமது இறைவார்த்தையை நாளும் கேட்டு திருப்பலியிலும்,
திருவருட்சாதனங்களிலும் பங்கு பெறச் செய்ததற்காக இறைவா உமக்கு
நன்றி.
10. நாளெல்லாம் கண்ணின் மணி போலக் காத்து வரும் உமது மேலான
அருளுக்காக இறைவா உமக்கு நன்றி.
|
|