Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     27 ஜூலை 2020  

பொதுக்காலம் 17ஆம் வாரம்

=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 என் மாட்சி உன்மேல் பட, உன் அழகு நிறைவுற்று விளங்கிற்று, நீயோ வேசித்தனம் செய்தாய்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 16: 1-15, 60, 63

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

மானிடா! எருசலேமுக்கு அதன் அருவருப்புகளைச் சுட்டிக் காட்டு. நீ சொல்: தலைவராகிய ஆண்டவர் எருசலேமுக்குக் கூறுவது இதுவே: நீ தோன்றியதும் பிறந்ததும் கானான் நாட்டிலே, உன் தந்தை ஓர் எமோரியன். உன் தாய் ஓர் இத்தியள். நீ பிறந்த வரலாறு இதுவே: நீ பிறந்த அன்று உன் கொப்பூழ்க் கொடி அறுக்கப்படவில்லை. நீ நீராட்டப்பட்டுத் தூய்மை ஆக்கப்படவில்லை; உப்பு நீரால் கழுவப்படவில்லை; துணிகளால் சுற்றப்படவும் இல்லை; உன்னை இரக்கத்துடன் கண்ணோக்கி உனக்காக வருந்தி, இவற்றுள் ஒன்றையேனும் உனக்குச் செய்வாரில்லை. ஆனால் நீ திறந்த வெளியில் எறியப்பட்டாய்.

ஏனெனில் நீ பிறந்த நாளிலேயே வெறுத்து ஒதுக்கப்பட்டாய். அவ்வழியாய்க் கடந்துபோன நான் உன்னருகில் வந்து உன் இரத்தத்தில் நீ புரள்வதைக் கண்டு, இரத்தத்தில் கிடந்த உன்னை நோக்கி, "வாழ்ந்திடு" என்றேன். ஆம், இரத்தத்தில் கிடந்த உன்னை நோக்கி, "வாழ்ந்திடு" என்றேன். உன்னை வயல்வெளியில் வளரும் பயிர் போல் உருவாக்கினேன். நீ வளர்ந்து பருவம் எய்தி அழகிய மங்கையானாய். உன் கொங்கைகள் உருப்பெற்றன; உன் கூந்தலும் நீண்டு வளர்ந்தது. ஆயினும் நீ ஆடையின்றித் திறந்த மேனியளாய் நின்றாய்.

அவ்வழியாய்க் கடந்துபோன நான் உன்னை நோக்கினேன். அப்போது நீ காதற் பருவத்தில் இருந்தாய். நான் என் ஆடையை உன்மேல் விரித்து உன் திறந்த மேனியை மூடினேன். உனக்கு உறுதிமொழி தந்து, உன்னோடு உடன்படிக்கை செய்தேன். நீயும் என்னுடையவள் ஆனாய், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். நான் உன்னை நீராட்டி, உன் மேலிருந்த இரத்தத்தைக் கழுவித் துடைத்து, உனக்கு எண்ணெய் பூசினேன். பூப் பின்னல் உடையால் உன்னை உடுத்தி, தோல் காலணிகளை உனக்கு மாட்டி, மெல்லிய துகிலை உனக்கு அணிவித்து, நார்ப் பட்டால் உன்னைப் போர்த்தினேன்.

அணிகலன்களால் உன்னை அழகு செய்தேன்; கைகளுக்குக் காப்புகளும் கழுத்திற்குச் சங்கிலியும் இட்டேன். மூக்குக்கு மூக்குத்தியும், காதுகளுக்குத் தோடுகளும், தலையில் அழகிய மணிமுடியும் அணிவித்தேன். பொன்னாலும், வெள்ளியாலும், நீ அணி செய்யப்பட்டாய். நார்ப் பட்டும் மெல்லிய துகிலும், பூப் பின்னல் ஆடையும் உன் உடைகள் ஆயின. மாவும், தேனும், எண்ணெயும் உன் உணவாயின. நீ மிக மிக அழகு வாய்ந்தவளாகி, அரச தகுதி பெற்றாய். உன் அழகின் காரணமாக உன் புகழ் வேற்றினத்தாரிடையே பரவிற்று. என் மாட்சி உன்மேல்பட உன் அழகு நிறைவுற்று விளங்கிற்று, என்கிறார் தலைவராகிய ஆண்டவர். நீயோ உன் அழகில் நம்பிக்கை வைத்து, உன் புகழைப் பணயமாக வைத்து, விலைமகளாகி, வருவோர் போவோரிடம் எல்லாம் வேசித்தனம் செய்தாய்.

ஆயினும் உன் இளமையின் நாள்களில் உன்னோடு செய்த உடன் படிக்கையை நினைவுகூர்ந்து, என்றுமுள உடன்படிக்கையை உன்னோடு செய்வேன்.

நீ செய்ததை எல்லாம் நான் மறைத்திடும்போது, நீ அவற்றை எல்லாம் நினைத்து வெட்கி, இழிவு மிகுதியினால் உன் வாயை ஒருபோதும் திறக்க மாட்டாய், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
அல்லது குறுகிய வாசகம்

நானே ஆண்டவர் என்பதை நீ அறிந்துகொள்வாய்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 16: 59-63

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: கொடுத்த வாக்கை நீ மீறி, உடன்படிக்கையை முறித்துவிட்டாய். நீ செய்தது போலவே நானும் உனக்குச் செய்வேன். ஆயினும் உன் இளமையின் நாள்களில் உன்னோடு செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்து, என்றுமுள உடன்படிக்கையை உன்னோடு செய்வேன். உன் தமக்கைகளையும் தங்கைகளையும் நான் உனக்குப் புதல்வியராகத் தருவேன்; நான் உன்னுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை முன்னிட்டு அல்லாமலே தந்திடுவேன்.

அவர்களை நீ பெற்றுக் கொள்ளும்பொழுது உன் நடத்தையை நினைத்து வெட்கமுறுவாய். உன்னுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை உறுதிப்படுத்துவேன். அப்போது நானே ஆண்டவர் என்பதை நீ அறிந்துகொள்வாய். நீ செய்ததை எல்லாம் நான் மறைத்திடும்போது, நீ அவற்றை எல்லாம் நினைத்து வெட்கி, இழிவு மிகுதியினால் உன் வாயை ஒருபோதும் திறக்க மாட்டாய், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - எசா 12: 2-3. 4bcd. 5-6 . (பல்லவி: 1c) Mp3
=================================================================================


பல்லவி: ஆண்டவரே, உம் சினம் தணிந்து எனக்கு ஆறுதல் அளித்துள்ளீர்.
2
இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே.
3
மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்துகொள்வீர்கள். - பல்லவி

4bcd
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்; மக்களினங்களிடையே அவர் செயல்களை அறிவியுங்கள்; அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள். - பல்லவி

5
ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்; ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்; அனைத்துலகும் இதை அறிந்துகொள்வதாக.
6
சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள்; இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார். - பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 
1 தெச 2: 13

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளின் வார்த்தையை நீங்கள் எங்களிடமிருந்து கேட்டபோது அதை மனித வார்த்தையாக அல்ல, கடவுளின் வார்த்தையாகவே ஏற்றுக்கொண்டீர்கள். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே உங்கள் மனைவியரை விலக்கிவிட மோசே அனுமதி அளித்தார். ஆனால் தொடக்கமுதல் அவ்வாறு இல்லை

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 3-12

அக்காலத்தில்

பரிசேயர் இயேசுவை அணுகி, அவரைச் சோதிக்கும் நோக்குடன், "ஒருவர் தம் மனைவியை எக்காரணத்தையாவது முன்னிட்டு விலக்கி விடுவது முறையா?" என்று கேட்டனர்.

அவர் மறுமொழியாக, "படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள் "ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்" என்று நீங்கள் மறைநூலில் வாசித்ததில்லையா?" என்று கேட்டார்.

மேலும் அவர், "இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர். இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்" என்றார்.

அவர்கள் அவரைப் பார்த்து, "அப்படியானால் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுத்து மனைவியை விலக்கி விடலாம் என்று மோசே கட்டளையிட்டது ஏன்?" என்றார்கள்.

அதற்கு அவர், "உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே உங்கள் மனைவியரை விலக்கிவிடலாம் என்று மோசே உங்களுக்கு அனுமதி அளித்தார். ஆனால் தொடக்கமுதல் அவ்வாறு இல்லை. பரத்தைமையில் ஈடுபட்டதற்காக அன்றி வேறு எக்காரணத்தையாவது முன்னிட்டுத் தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் விபசாரம் செய்கிறான் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.

அவருடைய சீடர்கள் அவரை நோக்கி, "கணவர் மனைவியர் உறவு நிலை இத்தகையது என்றால் அருட்சாதனம் செய்துகொள்ளாதிருப்பதே நல்லது" என்றார்கள். அதற்கு அவர், "அருள்கொடை பெற்றவரன்றி வேறு எவரும் இக்கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. சிலர் பிறவியிலேயே மணஉறவு கொள்ள முடியாதவராய் இருக்கின்றனர். வேறு சிலர் மனிதரால் அந்நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர். மற்றும் சிலர் விண்ணரசின் பொருட்டு அந்நிலைக்குத் தம்மையே ஆளாக்கிக் கொள்கின்றனர். இதை ஏற்றுக்கொள்ளக் கூடியவர் ஏற்றுக்கொள்ளட்டும்" என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 எசேக்கியேல் 16: 59-63

நம்பிக்கைக்குரிய கடவுளுக்கு நம்பிக்கைக்குரியவர்களாக இருப்போம்

நிகழ்வு

அமெரிக்காவை சார்ந்த மிகப்பெரிய கல்வியாளர் மார்க் ஹாட்பீல்ட் (Mark Hatfield). இவர் அமெரிக்க அரசபையின் அங்கத்தினராக (Senator) முப்பது ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவர்.

இப்படிப்பட்டவர் கொல்கொத்தா நகரில் அன்னைத் தெரசா செய்துவந்த பணிகளைக் குறித்துக் கேள்விப்பட்டு, அவரைப் பார்ப்பதற்காக அவருடைய இடத்திற்கு வந்தார். தெரசா அவரை அன்போடு வரவேற்று, தான் தன்னுடைய சகோதரிகளோடு சேர்ந்து என்னென்ன பணிகளையெல்லாம் செய்து வருகின்றேன் என்பதை அவருக்குக் காண்பித்தார்.

எல்லாவற்றையும் மிகவும் வியப்போடு பார்த்துக்கொண்டிருந்த மார்க் ஹாட்பீல்ட் தெரசாவிடம், "அம்மா! யாரும் செய்யத் தயங்குகின்ற, சில சமயங்களில் முகம் சுழிக்க வைக்கிற இந்தப் பணிகளையெல்லாம் உங்களால் எப்படிச் செய்ய முடிகின்றது?" என்றார். இதற்குத் தெரசா அவரிடம், "கடவுள் என்னை வெற்றியாளராக இருக்க அல்ல, நம்பிக்கைக்குரியவராக இருக்க அழைத்திருக்கின்றார். அதனால்தான் நான் இப்படிப்பட்ட பணிகளைச் செய்து வருகின்றேன்" என்றார்.

ஆம், கொல்கொத்தா நகர்ப் புனித தெரசா சொன்னது போன்று, நாம் ஒவ்வொருவரும் கடவுளுக்கு நம்பிக்கைக்குரியவர்களாய் இருக்கவேண்டும். அதுதான் இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்க்கின்ற ஒன்றாக இருக்கின்றது. இன்றைய முதல்வாசகம், கடவுளுக்கு நம்பிக்கைக்குரியவர்களாக இருந்திருக்கவேண்டிய இஸ்ரயேல் மக்கள், அவருக்கு நம்பிக்கைக்குரியவர்களாய் இல்லாமல் இருந்ததையும், கடவுள் இஸ்ரயேல் மக்களோடு செய்துகொண்ட உடன்படிக்கைக்கு நம்பிக்கைக்குரியவராய் இருந்ததையும் எடுத்துக்கூறுகின்றது. அவற்றைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

உடன்படிக்கையை மீறி, நம்பிக்கைக்குரியவர்களாய் இல்லாமல் போன இஸ்ரயேல் மக்கள்

எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரயேல் மக்களை, ஆண்டவராகிய கடவுள் மோசேயின் தலைமையில் மீட்டு, அவர்களைப் பாலும் தேனும் பொழிகின்ற கானான் நாட்டிற்கு அழைத்து வந்தார். இதற்கு நடுவில் அவர் இஸ்ரயேல் மக்களோடு, நான் உங்களுக்குக் கடவுளாக இருப்பேன்; நீங்கள் எனக்கு மக்களாக இருப்பீர்கள் (விப 19-20) என்று உடன்படிக்கை செய்துகொண்டார். இந்த உடன்படிக்கைக்கு ஆண்டவர் உண்மையாக இருந்தார்; இஸ்ரயேல் மக்கள்தான் உண்மையாகவும் இல்லை, நம்பிக்கைக்குரியவர்களாகவும் இல்லை. அவர்கள் கடவுளோடு சீனாய் மலையில் செய்துகொண்ட உடன்படிக்கையை மீறி, பாகால் தெய்வத்தை வழிபாட்டு, சிலைவழிபாடு என்ற விபசாரத்தைச் செய்தார்கள்.

இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருக்கு மக்களாக இருந்தாலும், அவர்கள் மனைவியாக இருந்து, கடவுளுக்கு நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கவே அழைக்கப்பட்டார்கள். இஸ்ரயேல் மக்கள் மனைவியாகவும், கடவுள் கணவராகவும் சுட்டிக்காட்டப்படுவதை இறைவாக்கினர் ஒசேயா நூல் முழுவதும் வாசிக்கலாம். இன்றைய முதல் வாசகத்திலும் அதை நாம் பார்க்கலாம். கடவுள் என்ற கணவருக்கு, மனைவியாக இருந்த இஸ்ரயேல் மக்கள் அவரோடு செய்துகொண்ட உடன்படிக்கைக்கு நம்பிக்கைகுரியவர்களாக இருந்திருக்க வேண்டும்; ஆனால், அவர்கள் கடவுளோடு செய்துகொண்ட உடன்படிக்கையை முறித்துக்கொண்டு, சிலைவழிபாடு என்ற விபசாரத்தைச் செய்தார்கள். இதனால் அவர்கள் பகைவர்களால் நாடுகடத்தப்பட்டார்கள்.

உடன்படிக்கைக்கு நம்பிக்கைக்குரியவராய் இருந்த கடவுள்

இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரோடு செய்துகொண்ட உடன்படிக்கைக்கு நம்பிக்கைக்குரியவர்களாய் இல்லாமல் போனாலும், ஆண்டவர் தான் இஸ்ரயேல் மக்களோடு செய்துகொண்ட உடன்படிக்கைக்கு என்றுமே நம்பிக்கைக்குரியவராய் இருந்தார். இன்றைய முதல்வாசகத்தில் இடம்பெறுகின்ற, "என்றுமுள உடன்படிக்கையை உன்னோடு செய்வேன்", "உன்னுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை உறுதிப்படுத்துவேன்" என்ற சொற்றொடர்கள், ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களோடு செய்துகொண்ட உடன்படிக்கைக்கு என்றும் உண்மையுள்ளவராகவும் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்தார் என்ற செய்தியை நமக்குச் சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது.

இங்கு நமக்குமுன் ஒரு கேள்வி எழலாம். "ஆண்டவர், தான் செய்துகொண்ட உடன்படிக்கைக்கு நம்பிக்கைக்குரியவராய் இருக்கும்பொழுது, இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருக்கு நம்பிக்கைக்குரியவர்களாய் இல்லாமல் இருந்தார்களே! இவர்களுக்கு என்ன தண்டனை கிடைத்தது?" என்பதுதான் அந்தக் கேள்வி. நம்பிக்கைக்குரியவர்களாய் இல்லாமல் இருந்த இஸ்ரயேல் மக்கள் அதற்கான தண்டனையைப் பகைவர்களிடமிருந்து பெற்றார்கள். மட்டுமல்லாமல், தாங்கள் செய்த தவற்றை நினைத்து, இழிவு மிகுதியால் வாயைத் திறக்காமலேயே போனார்கள்.

கடவுளுக்கு நம்பிக்கைக்குரியவர்களாக இருந்து, அவருடைய வார்த்தையின்படி நடக்கவேண்டிய நாமும்கூட, பல நேரங்களில் அவருக்கு நம்பிக்கைக்குரியவர்களாக இல்லாமல் நம்முடைய தனிப்பட்ட விருப்பத்தின்படி நடந்துகொண்டிருக்கின்றோம். இத்தகையதொரு போக்கை நாம் நம்மிடமிருந்து களைந்துவிட்டு, நம்பிக்கைக்குரிய ஆண்டவருக்கு நம்பிக்கைக்குரியவர்களாய் இருப்போம்.

சிந்தனை

"நீர் (ஆண்டவர்) பெரிதும் நம்பிக்கைக்குரியவர்" (புல 3: 23) என்கிறது இறைவார்த்தை. ஆகையால், நாம் நம்பிக்கைக்குரிய கடவுளுக்கு, நம்பிக்கைக்குரியவர்களாக இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மத்தேயு 19: 3-12

"தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் விபச்சாரம் செய்கிறான்"

நிகழ்வு

நகரில் இருந்த ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தான் கிறிஸ்டோபர். ஒருநாள் காலையில் இவன் அலுவலகத்திற்குள் நுழைந்த சிறிதுநேரத்தில் இவனுடைய அலைபேசிக்கு ஓர் அழைப்பு வந்தது. "இந்த நேரத்தில் நம்மை யார் அழைக்கிறார்?" என்று இவன் அலைபேசியை எடுத்துப் பார்த்தபொழுது, இவனுடைய மனைவி அழைப்பது தெரிந்தது. "ஒருநாளும் இவள் இந்த நேரத்தில் அழைக்கமாட்டாளே...! என்ன பிரச்சனையோ" என்று சற்றுப் பதற்றத்துடனே அலைபேசியை எடுத்துப் பேசினான் கிறிஸ்டோபர். "ஏங்க! இன்றைக்கு என்ன தேதி...?" என்றாள் இவனுடைய மனைவி. இப்படிக் கேட்டுவிட்டுப் பதிலுக்குக்கூடக் காத்திராமல், அழைப்பைத் துண்டித்தாள் அவள்.

கிறிஸ்டோபருக்கு ஒன்றும் ஓடவில்லை. "ஒருவேளை இன்றைக்கு மனைவியின் பிறந்தநாளாக இருக்குமோ...? இல்லையே! கடந்த மாதம்தானே அவளுடைய பிறந்தநாள் பரிசாக விலையுயர்ந்த தங்கச் சங்கிலியை நான் பரிசளித்தேன்! ஒருவேளை இன்று திருமண நாளாக இருக்குமோ...? அதற்கும் வாய்ப்பில்லையே! ஏனெனில், அதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கின்றனவே! அப்படியானால் மகனுடைய பிறந்த நாளாக இருக்குமோ...? அதற்கும் வாய்ப்பில்லை; ஏனெனில் அவனுடைய பிறந்தநாள்தான் ஜனவரி ஒன்று என்று எனக்கு நன்றாக நினைவு இருக்கிறதே! பிறகு எதற்கு இவள் இந்த நேரத்தில் நம்மை அழைத்தாள்...? மின்கட்டணம் செலுத்த வேண்டியிருக்குமோ...? கடைத்தெருவிலிருந்து பலசரக்குச் சாமான்கள் வாங்கி வருவதற்கு அழைத்திருப்பாளோ...? எதற்காக இவள் இந்த நேரத்தில் அழைத்தாள்...?" ஒன்றும் புரியாமல் குழம்பினான் கிறிஸ்டோபர்.

அன்றைய நாளில் இதை நினைத்தே கிறிஸ்டோபருக்குச் சரியாகவே வேலை ஓடவில்லை. அலுவலகத்தில் வேலையை முடித்துவிட்டு, வீட்டுக்குத் திரும்பி வரும்பொழுது, கிறிஸ்டோபர் ஒருவிதமான பதற்றத்தோடே வந்தான். வீட்டிற்கு முன்பாக மகன் விளையாடிக் கொண்டிருந்தான். கிறிஸ்டோபர் அவனிடம், "வீட்டில் நிலவரம் எப்படி...? அம்மா சாதாரணமாக இருக்கின்றாளா? அல்லது கோபத்தோடு இருக்கின்றாளா?" என்றான்ள். "சாதாரணமாகத்தான் இருக்கிறார்... ஏன் என்னாயிற்று?" என்று ஒருவிதமான பதற்றத்தோடு கேள்வி கேட்ட மகனிடம், "ஒன்றுமில்லை" என்று சொல்லிவிட்டு வேகமாக வீட்டிற்குள் நுழைந்தான் கிறிஸ்டோபர்.

வீட்டிற்குள் இவனுடைய மனைவி சாதாரணமாக வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். "காலையில், என்னை அழைத்திருந்தாயே! என்ன செய்தி?" என்று மெல்லப் பேச்சை எடுத்தான் கிறிஸ்டோபர். "அதுவா! பல நாள்களாக வீட்டிலிருந்த நாள்காட்டியில் தேதி கிழிக்கப்படாமல் இருந்தது! அதனால்தான் இன்றைக்கு என்ன தேதி என்று தெரிந்துகொள்வதற்காக உங்களை அழைத்தேன். அதற்குள் என்னுடைய அலைபேசியிலேயே சரியான தேதியைப் பார்த்ததால், அழைப்பைத் துண்டித்தேன்" என்று சாதாரணச் சொல்லிவிட்டு வீட்டுவேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்டாள் அவள். அப்பொழுதுதான் கிறிஸ்டோபருக்குப் போன உயிர் திரும்ப வந்தது. "இந்த ஒரு சாதாரண செய்திக்குத்தான் இப்படியெல்லாம் நாம் குழம்பினோமா...?" என்று தன்னையே நொந்துகொண்டான் கிறிஸ்டோபர்.

இந்த நிகழ்வில் வருகின்ற கிறிஸ்டோபருக்கு ஒரு சாதாரண செயலுக்காக ஏற்பட்ட குழப்பத்திற்குக் காரணம், தன்னுடைய மனைவியுடன் நல்ல புரிதல் இல்லாததால்தான். இன்று பல குடும்பங்களில் கணவனுக்கும் மனைவிக்கும் நல்ல புரிதல் இல்லை. அதனாலேயே நிறைய மணமுறிவுகள் நடக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில் இன்றைய நற்செய்தி, மணமுறிவு செய்தல் குற்றம்; ஒன்றித்திருத்தல்தான் கடவுளின் விருப்பம் என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

இருவரும் ஒரே உடலாய் இருப்பதே கடவுளின் விருப்பம்

நற்செய்தியில், இயேசு கலிலேயாப் பகுதியிலிருந்து யூதேயாவிற்குள் வருகின்றார். அப்பொழுது அவரைச் சோதிக்கும் நோக்குடன் அவரிடம் வருகின்ற பரிசேயர், "ஒருவர் தன் மனைவியை எக்காரணத்தையாவது முன்னிட்டு விலக்கிவிடுவது முறையா?" என்றொரு கேள்வியைக் கேட்கின்றனர். பரிசேயர் இயேசுவிடம் கேட்கின்ற கேள்வி, இணைச்சட்ட நூல் 24: 1-4 வரையுள்ள இறைவார்த்தைப் பகுதியை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கின்றது. யூதர்கள் பெண்களை ஒரு பொருட்டாக மதிக்காமல், அவர்களைக் காரணமே இல்லாமல், விவாகரத்து செய்தார்கள். இதனால்தான் இயேசு, பரத்தமையில் ஈடுபட்டதற்காக அன்றி வேறு எக்காரணத்தையாவது முன்னிட்டுத் தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் விபசாரம் செய்கின்றான்" என்கின்றார்.

கடவுளின் விருப்பம், கணவனும் மனைவியும் ஓருடலாக இருக்கவேண்டும் என்பதே ஆகும். அதனால்தான் இயேசு தொடக்க நூலில் இடம்பெறும் வார்த்தைகளை (தொநூ 1: 27; 2: 24) மேற்கோள்காட்டிப் பேசுகின்றார். கடவுளின் விருப்பம் கணவனும் மனைவியும் ஓருடலாக இருக்கவேண்டும் என்று இருக்கின்றபொழுது, அவர்களைப் பிரிக்க நினைப்பதோ அல்லது அவர்கள் திருமண உடன்படிக்கைக்கு எதிராகச் செயல்படுவதோ குற்றமே. இந்த உண்மையை உணர்ந்தவர்களாய் நாம் திருமணத்தின் புனிதத்தைப் பாதுகாத்து நடப்போம்.

சிந்தனை

"நல்ல பெண்ணை மணந்திருப்பது வாழ்க்கைப் புயலில் ஒரு துறைமுகமாகும்" என்பார் ஜே.பி. சென் என்ற சிந்தனையாளர். நல்ல பெண்ணை மட்டுமல்ல, நல்ல ஆணை மணந்திருப்பதும் ஒரு பெண்ணுக்கு வாழ்க்கைப் புயலில் ஒரு துறைமுகம்தான். ஆதலால், ஒவ்வொரு கணவனும் மனைவியும் தன்னுடைய வாழ்க்கைத் துணைக்கு நல்லவராக இருந்து, அவர்களுடைய இல்லறம் செழிக்க அவர்களுக்காக நாம் இறைவனிடம் வேண்டிக்கொள்வோம். நாமும் நல்லவர்களாக இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!