|
|
13 ஆகஸ்ட்
2020 |
|
பொதுக்காலம்
19ஆம் வாரம்
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நாடுகடத்தப்படும் ஒருவர் போல் பொருள்களைத் தயார் செய்து
வெளியேறு.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 12: 1-12
ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: "மானிடா! கலகம்
செய்யும் வீட்டாரிடையே நீ வாழ்கின்றாய். காணக் கண்கள் இருந்தும்
அவர்கள் காண்பதில்லை; கேட்கச் செவிகள் இருந்தும் அவர்கள் கேட்பதில்லை;
ஏனெனில் அவர்கள் கலகம் செய்யும் வீட்டார்.
மானிடா! நீயோ நாடுகடத்தப்படும் ஒருவர் போல் பொருள்களைத் தயார்
செய்து கொண்டு, அவர்கள் கண்ணெதிரே பகல் நேரத்தில் புறப்படு. உன்
உறைவிடத்திலிருந்து வேறொர் இடத்திற்கு, அவர்கள் கண்ணெதிரே,
நாடுகடத்தப்படுபவர் போல் வெளியேறு. கலகம் செய்யும் வீட்டாராக
இருப்பினும் ஒருவேளை அவர்கள் அதைக் கண்டுணரலாம். நாடுகடத்தப்படும்
ஒருவர்போல், அவர்கள் கண்ணெதிரே பகல் நேரத்தில் உன் பொருள்களை
எடுத்து வை. மாலை வேளையில், அவர்கள் கண்ணெதிரே நாடுகடத்தப்படுபவர்போல்
புறப்படு.
அவர்கள் கண்முன்னே, சுவரில் துளையிட்டு அதன் வழியாய் அவற்றை
வெளிக்கொணர்வாய். அவர்கள் கண்முன்னே அவற்றைத் தோள்மேல் வைத்து
இருள் சூழ்ந்ததும் வெளியே தூக்கிச் செல். நிலத்தைப் பார்க்காதபடி
உன் முகத்தை மூடிக்கொள். ஏனெனில், இஸ்ரயேல் வீட்டாருக்கு உன்னை
ஓர் அடையாளமாக வைத்திருக்கிறேன்."
எனக்குக் கட்டளையிட்டபடியே நான் செய்தேன். நாடுகடத்தப் படுகையில்
கொண்டு போவதுபோல என் பொருள்களைப் பகல் வேளையில் வெளிக் கொணர்ந்தேன்.
மாலையில் என் கைகளால் சுவரில் துளையிட்டேன். இருள் சூழ்ந்ததும்
அவற்றைத் தோளில் தூக்கிக்கொண்டு அவர்கள் கண்முன்னே
வெளியேறினேன்.
காலையில் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: "மானிடா! கலகம்
செய்யும் வீடாகிய இஸ்ரயேல் வீட்டார் உன்னிடம், "நீ செய்கிறது
என்ன?" என்று கேட்கவில்லையா? நீ அவர்களுக்குச் சொல்: எருசலேமில்
இருக்கும் மக்கள் தலைவனையும் அவனுடனிருக்கும் இஸ்ரயேல்
வீட்டார் அனைவரையும் குறித்துத் தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு
கூறுகிறார்: நீ சொல்: உங்களுக்கு நான் ஓர் அடையாளமாய் இருக்கிறேன்;
நான் செய்ததுபோல் அவர்களுக்கும் செய்யப்படும். அவர்கள் நாடுகடத்தப்
பட்டோராயும் சிறைப்பட்டோராயும் செல்வர். அவர்களின் தலைவன் இருளில்
தோளில் சுமையுடன் மதிலினூடே வெளியேறுவான். அவனை வெளிக் கொணர்வதற்காக
மதிலைக் குடைவார்கள். கண்களால் நாட்டைப் பார்க்காதபடி அவன் தன்
முகத்தை மூடிக்கொள்வான்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 78: 56-57. 58-59. 61-62 . (பல்லவி: 7b)
Mp3
=================================================================================
பல்லவி: இறைவனின் செயல்களை ஒருபோதும் மறவாதிருங்கள்.
56
ஆயினும், உன்னதரான கடவுளை அவர்கள் சோதித்தனர்; அவருக்கு எதிராகக்
கிளர்ந்தெழுந்தனர்; அவர்தம் நியமங்களைக் கடைப்பிடிக்கவில்லை.
57
தங்கள் மூதாதையர்போல் அவர்கள் வழி தவறினர்; நம்பிக்கைத் துரோகம்
செய்தனர்; கோணிய வில்லெனக் குறி மாறினர். - பல்லவி
58
தம் தொழுகை மேடுகளால் அவருக்குச் சினமூட்டினர்; தம் வார்ப்புச்
சிலைகளால் அவருக்கு ஆத்திரமூட்டினர்.
59
கடவுள் இதைக் கண்டு சினம் கொண்டார்; இஸ்ரயேலை அவர் முழுமையாகப்
புறக்கணித்தார். - பல்லவி
61
தம் வலிமையை அடிமைத்தனத்திற்குக் கையளித்தார்; தம் மாட்சியை எதிரியிடம்
ஒப்புவித்தார்;
62
தம் மக்களை வாளுக்குக் கையளித்தார்; தம் உரிமைச் சொத்தின்மீது
கடுஞ்சினங்கொண்டார். அவர்களுடைய இளைஞரை நெருப்பு விழுங்கியது.
- பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
திபா 119: 135
அல்லேலூயா, அல்லேலூயா! உம் ஊழியன் மீது உமது முக ஒளி வீசச்
செய்யும்! உம் விதிமுறைகளை எனக்குக் கற்பித்தருளும். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச்
சொல்கிறேன்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 21- 19: 1
அக்காலத்தில்
பேதுரு இயேசுவை அணுகி, "ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர்
எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க
வேண்டும்? ஏழு முறை மட்டுமா?" எனக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம்
கூறியது: "ஏழு முறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழு முறை என நான்
உனக்குச் சொல்கிறேன்.
விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; ஓர் அரசர் தம்
பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார். அவர் கணக்குப்
பார்க்கத் தொடங்கியபொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்ட
ஒருவனைக் கொண்டு வந்தனர். அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க
இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு
அவனுக்குரிய உடமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி
அடைக்க ஆணையிட்டார். உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து,
"என்னைப் பொறுத்தருள்க; எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்துவிடுகிறேன்"
என்றான். அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து
அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார்.
ஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம்
கடன்பட்டிருந்த உடன்பணியாளர் ஒருவரைக் கண்டு, "நீ பட்ட கடனைத்
திருப்பித் தா" எனக் கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை
நெரித்தான். உடனே அவனுடைய உடன்பணியாளர் காலில் விழுந்து, என்னைப்
பொறுத்தருள்க; நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்" என்று அவனைக்
கெஞ்சிக் கேட்டார். ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத்
திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையிலடைத்தான்.
அவருடைய உடன்பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித்
தலைவரிடம் போய் நடந்தவற்றையெல்லாம் விளக்கிக் கூறினார்கள். அப்போது
தலைவர் அவனை வரவழைத்து, "பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக்கொண்டதால்
அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன். நான் உனக்கு
இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம்
காட்டியிருக்க வேண்டும் அல்லவா? என்று கேட்டார். அத்தலைவர் சினங்கொண்டவராய்,
அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார்.
உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால்
விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க
மாட்டார்."
இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்த பின்பு கலிலேயாவை விட்டு அகன்று
யோர்தானுக்கு அப்பாலுள்ள யூதேயப் பகுதிகளுக்குச் சென்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
எசேக்கியேல் 12: 1-12
தவற்றைத் திருத்தாததால் செதேக்கியாவிற்குக் கிடைத்த தண்டனை
நிகழ்வு
மகாராஸ்டிராவில் தோன்றிய மிகவும் முக்கியமான மகான்களில் ஒருவர்
ஏகநாதர். இவர் ஜனார்த்தன பந்த் என்பவரிடத்தில் சீடராக இருந்தார்.
ஒருநாள் ஜனார்த்தன பந்த், ஏகநாதரிடம் ஒரு பேரேட்டைக் கொடுத்து,
"இதில் உள்ள கணக்கில் ஒரு பைசா குறைகின்றது. ஏன் குறைகின்றது...?
எங்கே குறைகின்றது?" என்று கண்டுபிடித்துத் தா" என்றார். ஏகநாதரும்
தன்னுடைய குருநாதர் தன்னிடத்தில் கொடுத்த அந்தப் பொறுப்பை மிகவும்
கருத்தூன்றிச் செய்யத் தொடங்கினார். நேரம் கடந்தது; ஆனாலும்
அவர் அந்தப் பொறுப்பினை இரவில் கண்விழித்துச் செய்தார்.
முடிவில் தவறு எங்கிருக்கின்றது என்று கண்டுபிடித்தார். அப்பொழுது
அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
மறுநாள் காலையில் அவர், கணக்கில் இருந்த தவற்றைக் கண்டுபிடித்த
மகிழ்ச்சியில் பேரேட்டோடு தன்னுடைய குருநாதரிடம் என்றார். அதை
வாங்கிப் பார்த்த குருநாதர் ஏகநாதரிடம், "இந்தக் கணக்கில் இருந்த
தவற்றைக் கண்டுபிடிக்க எப்படி நீ மனம் ஒன்றித் தேடினாயோ, அப்படி
நீ இறைவனைக் காண மனமொன்றித் தேடினால், அவரை நிச்சயம் கண்டுகொள்ளலாம்.
மேலும், நான் கொடுத்த கணக்கில் இருந்த தவற்றைக் கண்டுபிடித்துத்
திருத்தியதும், நீ எவ்வளவு மகிழ்ச்சியடைந்தாய். அப்படியானால்
உன்னிடம் உள்ள தவற்றைக் கண்டுபிடித்துத் திருத்தினால், இறைவன்
எவ்வளவு மகிழ்ச்சியடைவார். இதை நீ எண்ணிப் பார்த்தாயா...?" என்றார்.
தன்னுடைய குருநாதர் தன்னிடம் இவ்வாறு சொன்னதைக் கேட்டு, அதை
ஆழமாக அசைபோட்ட ஏகநாதர் அதன்படி வாழத் தொடங்கி, மக்களால் வியந்து
போற்றப்படும் மகானானார் (அறிஞர்கள் வாழ்வில் எஸ். சந்திரா)
நாம், நம்மிடம் உள்ள தவற்றைக் கண்டுபிடித்து, அதைத் திருத்தி,
நல்ல வழியில் நடக்கின்றபொழுது, அதைவிட மகிழ்ச்சியான செயல் இறைவனுக்கு
வேறு எதுவும் இருக்க முடியாது. ஆனால், பலர் தங்களுடைய தவற்றை
உணர்வதும் கிடையாது; அதைத் திருத்திக் கொள்வதும் கிடையாது. இன்றைய
முதல் வாசகம் தன்னுடைய தவற்றைத் திருத்திக் கொள்ளாத
செதேக்கியாவைப் பற்றியும், அதனால் அவனுக்குக் கிடைத்த தண்டனையைப்
பற்றியும் எடுத்துக் கூறுகின்றது. நாம் அவற்றைக் குறித்து இப்பொழுது
சிந்தித்துப் பார்ப்போம்.
இறைவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்காத செதேக்கியா
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்
வாசகமானது, பாபிலோனியர்கள் நெபுகத்னேசரின் தலைமையில்
யூதாவின்மீது படையெடுத்து வருகின்றபொழுது, செதேக்கியா அங்கிருந்து
எப்படி தப்பியோடுவான் என்பதை எசேக்கியேல் அடையாள முறையில்
வெளிப்படுத்துவதை எடுத்துக் கூறுகின்றது.
இறைவாக்கினர் எசேக்கியேல் ஆண்டவர் தனக்குச் சொன்னது போன்று,
ஒரு நாடுகடத்தப்பட்டவனைப் போன்று பொருள்களைத் தயார்செய்து,
அவற்றை மக்கள் பார்க்கும் வகையில் பகல் வேளையில்
எடுத்துக்கொண்டு புறப்படுகின்றார். பின்னர் தான் எடுத்துச்
சென்ற பொருள்களை, சுவரில் ஒரு துளை உண்டாக்கி, அதன்வழியாக
அவற்றை எடுத்துச் செல்கின்றார். இறைவாக்கினர் எசேக்கியேல்
அடையாளமாகச் செய்யும் இந்தச் செயல், யூதாவின் கடைசி மன்னனாகிய
செதேக்கியா எப்படி, பாபிலோனியர்களின் படையெடுப்பின்பொழுது
தப்பிச் செல்வான் என்பதை எடுத்துரைப்பதாக இருக்கின்றது.
செதேக்கியாவிற்கு ஏற்பட்ட இந்த இழிநிலை அவன் கடவுளுக்குக்
கீழ்ப்படிந்து நடக்காததாலேயே என்றுதான் சொல்லவேண்டும். ஒருவேளை
அவன் மட்டும் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடந்திருந்தால்,
அவனுக்கும் அவனுடைய மக்களுக்கும் இப்படியோர் அழிவு
ஏற்பட்டிருக்கின்றது.
கீழ்ப்படியாமையாமல் செதேக்கியாவிற்குக் கிடைத்த தண்டனை
செதேக்கியா ஆண்டவருக்குக் கீழ்ப்படியாமல் நடந்ததால்,
பாபிலோனியர்கள் யூதாவின்மீது படையெடுத்து வந்தபொழுது,
இறைவாக்கினர் எசேக்கியேல் அடையாள முறையில் வெளிப்படுத்தியது
போன்று, அவன் நகர் மதிலில் இருந்த ஒரு திறப்பு வழியாக
வெளியேறுகின்றான் (2 அர 25: 4); ஆனால், அவனைப் பின்தொடர்ந்து
செல்லும் பாபிலோனியப் படை, அவனை எரிகோ சமவெளியில் பிடித்து,
இரிபலாவில் இருந்த பாபிலோனிய மன்னனிடம் இழுத்துச் செல்கின்றது.
மன்னனோ செதேக்கியாவின் புதல்வர்களை அவன் கண்முன்னாலேயே கொன்று
போடுகின்றான். பின்னர் அவன் செதேக்கியாவை விலங்கிட்டுப்
பாபிலோனுக்கு இழுத்துச் செல்கின்றான்.
செதேக்கியாவிற்கு ஏற்பட்ட இந்த இழிநிலைக்குக் காரணம், அவன்
கடவுளுக்குக் கீழ்ப்படியாததால்தான். இதைத்தான், இன்றைய முதல்
வாசகத்தின் தொடக்கத்தில் ஆண்டவராகிய கடவுள் எசேக்கியேலிடம்,
"காணக் கண்கள் இருந்தும் அவர்கள் காண்பதில்லை; கேட்கச் செவிகள்
இருந்தும் அவர்கள் கேட்பதில்லை" என்கின்றார்.
ஆகையால், நாம் கடவுளின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து அவருடைய
வழியில் நடக்கவேண்டும். ஒருவேளை நாம் அதன்படி நடக்காமல்,
நம்முடைய சொந்த விருப்பத்தின்படி தீய வழியில் நடந்ததால்,
அதற்கான தண்டனையைச் செதேக்கியாவைப் போன்று பெறுவோம் என்பது
உறுதி. இதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது.
சிந்தனை
"கீழ்ப்படிதல் பலியைவிடச் சிறந்தது (1சாமு 15: 22) என்பார்
சாமுவேல். ஆகையால், நாம் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து, ஒருவேளை
நம்மிடம் தவறு இருந்தால் அதைத் திருத்திக் கொண்டு, அவருடைய
வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 18: 21-19: 1
மற்றவர்களை மன்னிக்காதவர்கள் தங்களோடு
நாற்றத்தைச் சுமந்துகொண்டே செல்கின்றார்கள்!
நிகழ்வு
துறவி ஒருவர் இருந்தார். ஒருநாள் இவர் தன்னுடைய சீடரை அழைத்து,
அவரிடம் ஒரு சாக்குப் பையையும், கொஞ்சம் உருளைக்கிழங்குகளையும்
கொடுத்து, "உனக்குப் பிடிக்காத ஒருசிலர் இருப்பார்கள்
அல்லவா...! குறிப்பாக உனக்கெதிராகக் குற்றம்செய்து, நீ
மன்னிக்காத மனிதர்கள்! அவர்களுடைய பெயர்களையெல்லாம் இந்த
உருளைக்கிழங்கில் எழுதிவிட்டு, அவற்றை இந்தச் சாக்குப் பையில்
போட்டுக்கொண்டு, நான் சொல்கிற வரைக்கும் இதைச் சுமந்து கொண்டே
இருக்கவேண்டும்" என்றார்.
துறவி இவ்வாறு சொன்னதற்குச் சீடர், "இதில் என்ன சிக்கல்
இருக்கப்போகிறது?" என்று தன் மனத்தில் நினைத்தவராய், துறவி
தன்னிடத்தில் கொடுத்த உருளைக்கிழங்குகளில், தான் வெறுத்து
ஒதுக்கும், அதிலும் குறிப்பாக நான் மன்னிக்காமல் இருக்கும்
மனிதர்களின் பெயர்களை எழுதி, அவற்றைச் சாக்குப் பையில்
போட்டுக்கொண்டு, தான் எங்கெல்லாம் சென்றாரோ, அங்கெல்லாம் அதைச்
சுமந்துகொண்டே சென்றார்.
நாள்கள் மெல்ல நகர்ந்தன. ஓரிரு வாரங்களிலேயே சீடர்
சுமந்துகொண்டு சென்ற சாக்குப் பையிலிருந்து நாற்றம் அடிக்கத்
தொடங்கியது. இதைச் சீடரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
இருந்தாலும் துறவி சொல்லும்வரை அதைச் சுமந்துகொண்டே சென்றார்.
ஒருநாள் துறவி, சீடரைத் தன்னிடம் வரவழைத்தார். அவரும்
துறவியின் முன்பு போய் நின்றார். அப்பொழுது துறவி சீடரிடம்,
"இத்தனை நாள்களும் நான் உன்னை, நீ மன்னிக்க மறுத்த மனிதர்களின்
பெயர்களை உருளைக்கிழங்குகளில் எழுதி, அவற்றைச் சாக்குப் பையில்
போட்டுச் சுமக்கச் சொன்னேனே! அந்த அனுபவம் எப்படி இருந்தது?"
என்றார். அதற்குத் சீடர் துறவியிடம், "நீங்கள் என்னிடம்
கொடுத்த பணி மிக எளிதானது என்றுதான் தொடக்கத்தில் நினைத்தான்;
ஆனால், நாள்கள் ஆக ஆக இதிலிருந்து என்னால் தாங்கிக்கொள்ளவே
முடியாத நாற்றம் ஏற்படத் தொடங்கியது. அதன்பிறகுதான் எனக்குப்
புரிந்தது, தீமை செய்தவர்களை மன்னிக்காமல் இருப்பதும்
நாற்றமடிக்கக்கூடிய செயல்தான் என்று. ஆகையால், நான் எனக்கு
எதிராகத் தீமை செய்தவர்களை கொஞ்சம் கொஞ்சமாக மன்னிக்கத்
தொடங்கிவிட்டேன்" என்றார்.
இதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த துறவி, "உனக்கு
எதிராகத் தீமை செய்தவர்களை நீ மன்னிக்க வேண்டும்
என்பதற்காகத்தான் நான் இப்படியொரு செயலை உன்னிடம் செய்யச்
சொன்னேன். நீ அதுபோன்று செய்துவிட்டாய். வாழ்த்துகள்" என்றார்.
ஆம், நாம் நமக்கெதிராகத் தீமைச் செய்தவர்களை மன்னிக்காமல்
இருக்கின்றபொழுது, நாம் நம்மோடு நாற்றத்தைத்தான் சுமந்துகொண்டு
செல்கின்றோம். இந்த உண்மையை எடுத்துரைக்கும் இந்த நிகழ்வு நமது
சிந்தனைக்குரியது. இன்றைய நற்செய்தி வாசகம், இறைவனிடமிருந்து
மன்னிப்புப் பெற, நாம் நமக்கு எதிராகத் தீமை செய்தவர்களை
மன்னிக்கவேண்டும் என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது
குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
ஏழுமுறை மன்னித்தால் போதுமா?
நற்செய்தியில், இயேசுவிடம் வருகின்ற பேதுரு, "என் சகோதர்
சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்தால், நான்
எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?" என்று
கேட்கின்றார். பேதுரு இயேசுவிடம் இவ்வாறு கேட்பதன் மூலம்,
மன்னிப்பதில் தான் தாராளமானவன் என்பதைக் காட்டிக்கொள்ள
விரும்புகின்றார். எவ்வாறெனில், யூத இரபிகள், ஒருவர் தவறு
செய்தால், அவரை மூன்றுமுறை மன்னிக்கலாம் என்று சொல்லி
வந்தார்கள்; ஆனால், பேதுரு மூன்றோடு மூன்றைக் கூட்டை, அத்தோடு
ஒன்றைக் கூட்டி, ஏழுமுறை மட்டுமா? என்று இயேசுவிடம்
கேட்கின்றார். ஏழு என்பது திருவிவிலியத்தில் முழுமையைக்
குறிக்கும் ஓர் எண். அதனால் பேதுரு தவறு செய்யும் தன் சகோதரர்,
சகோதரியை முழுமையாக மன்னிப்பதாகச் சொல்லும் தன்னை இயேசு
பாராட்டுவார் என்று நினைத்து இவ்வாறு சொல்கின்றார்.
நிபந்தனையின்றி மன்னிக்கச் சொல்லும் இயேசு
மன்னிப்பதில் தான் தாராளமாக இருக்கின்றேன் என்பதை
உணர்த்துவதற்காக, "ஏழுமுறை மட்டுமா?" என்று இயேசுவிடம் கேட்ட
பேதுருவை இயேசு பாராட்டவில்லை. மாறாக, அவர் பேதுருவிடம்,
நிபந்தனையின்றி மன்னிக்க வேண்டும் என்று சொல்கின்றார். அதற்காக
அவர் சொல்லக்கூடிய உவமைதான் மன்னிக்க மறுத்த பணியாளர் உவமை.
இந்த உவமையில் வரும் மன்னர், கடவுளைப் போன்று தாராளமாக
மன்னிக்கின்றார்; ஆனால், மன்னிப்புப் பெற்ற பணியாளரோ தன்னிடம்
குறைந்த அளவே கடன்பெற்ற வேறொரு பணியாளரை மன்னிக்காமல்
விடுகின்றார். இதனால் அவர் மன்னரிடமிருந்து கடுமையான
தண்டனையைப் பெறுகின்றார். ஆம். நாம் மற்றவரை நிபந்தனையின்றி
மன்னித்தால், மன்னிப்புப் பெறுவோம். மன்னிக்காமல் இருந்தால்,
மன்னிப்புப் பெற மாட்டோம்.
ஆகவே, நாம் பிறர்செய்த குற்றங்களை நிபந்தனையின்றி மன்னிப்போம்.
அதன்மூலம் இறைவனிடமிருந்து நிபந்தனையின்றி மன்னிப்பு பெறுவோம்.
சிந்தனை
"மன்னிப்பே மகிழ்ச்சி என்ற பேரின்ப வீட்டிற்கான சாவி" என்கிறது
ஒரு முதுமொழி. ஆகையால், நாம் பிறர்செய்த குற்றங்களை மன்னிக்கக்
கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|