Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     12 ஆகஸ்ட் 2020  

பொதுக்காலம் 19ஆம் வாரம்

=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 எருசலேமில் செய்யப்படும் அருவருக்கத்தக்க செயல்களுக்காகப் புலம்பும் மனிதர்களுக்கு நெற்றியில் அடையாளம் இடு.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 9: 1-7; 10: 18-22

ஆண்டவர் என் செவிகளில் உரத்த குரலில், "நகருக்குத் தண்டனை வழங்குவோரே! நீங்கள் ஒவ்வொருவரும் உம் கொலைக் கருவியைக் கையிலேந்தி நெருங்கி வாருங்கள்" என்றார். இதோ ஆறு ஆள்கள் வடக்கு நோக்கி இருக்கும் மேல் வாயிலின் வழியாக வந்தனர். ஒவ்வொருவர் கையிலும் ஒரு கொலைக் கருவி இருந்தது. அவர்களுடன் நார்ப் பட்டு உடுத்தி, எழுதும் மைக்கூட்டை இடையில் வைத்திருந்த ஒருவனும் இருந்தான். ,இவர்கள் உள்ளே வந்து வெண்கலப் பீடத்தின் அருகில் நின்றனர்.

அப்பொழுது இஸ்ரயேலின் கடவுளது மாட்சி அது தங்கியிருந்த கெருபுகளை விட்டு மேலெழுந்து இல்லத்தின் வாயிற்படிக்கு வந்தது. உடனே ஆண்டவர் நார்ப் பட்டு உடுத்தி எழுதும் மைக்கூட்டைத் தம் இடையில் வைத்திருந்த அம்மனிதரை அழைத்தார். பின் ஆண்டவர் அவரை நோக்கி, "நீ எருசலேம் நகரெங்கும் சுற்றி வந்து அதனுள் செய்யப்படும் எல்லா அருவருக்கத்தக்க செயல்களுக்காகவும் பெருமூச்சு விட்டுப் புலம்பும் மனிதர்களுக்கு நெற்றியில் அடையாளம் இடு" என்றார்.

என் செவிகளில் விழுமாறு அவர் மற்றவர்களை நோக்கிக் கூறியது: "நீங்கள் அவர் பின்னால் நகரெங்கும் சுற்றி வந்து தாக்குங்கள். உங்கள் கண்களினின்று யாரையும் தப்பவிட வேண்டாம்; இரக்கம் காட்ட வேண்டாம். முதியோர், இளைஞர், கன்னியர், குழந்தைகள், பெண்கள் அனைவரையும் கொன்றொழியுங்கள். அடையாளம் இடப்பட்ட மனிதர் எவரையும் நெருங்காதீர்கள். என் தூயகத்திலிருந்து தொடங்குங்கள்".

அவர்களும் ஆண்டவரது இல்லத்தின் முன்னிருந்த முதியோரிலிருந்து தொடங்கினர். அவர் அவர்களை நோக்கி, "கோவிலைக் கறைப்படுத்துங்கள்; முற்றங்களைக் கொலையுண்டவர்களால் நிரப்புங்கள்; புறப்படுங்கள்" என்றார். அவர்களும் நகருக்குள் சென்று வெட்டி வீழ்த்தினார்கள்.

ஆண்டவரது மாட்சி கோவிலின் வாயிற்படியை விட்டுக் கெருபுகளின் மேல் வந்து நின்றது. என் கண்ணெதிரே, கெருபுகள் தங்கள் இறக்கைகளை விரித்து நிலத்தினின்று மேலெழுந்தன. அவை சென்றபோது சக்கரங்களும் அவற்றுடன் சென்றன. ஆண்டவரது இல்லத்தின் கிழக்கு நுழைவாயிலில் அவை நின்றன. இஸ்ரயேலின் கடவுளது மாட்சி அவற்றின் மேல் இருந்தது. கெபார் ஆற்றோரம் இஸ்ரயேலின் கடவுளுக்குக் கீழே நான் கண்ட உயிரினங்கள் இவையே. அவை கெருபுகளே என்று நான் தெரிந்து கொண்டேன். அவை ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்களும், நான்கு இறக்கைகளும் இருந்தன. அவற்றின் இறக்கைகளின் கீழ் மனிதக் கைகளின் சாயல் இருந்தது. அவற்றின் முகச் சாயல் கெபார் ஆற்றோரம் நான் கண்ட முகங்களைப் போன்றே தோன்றிற்று. அவை ஒவ்வொன்றும் நேர்முகமாகச் சென்றன.

ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 113: 1-2. 3-4. 5-6 . (பல்லவி: 4b) Mp3
=================================================================================
பல்லவி: வானங்களையும் விட உயர்ந்தது இறைவனின் மாட்சி. அல்லது: அல்லேலூயா.
1
ஆண்டவரின் ஊழியர்களே, அவரைப் புகழுங்கள். அவரது பெயரைப் போற்றுங்கள்.
2
ஆண்டவரது பெயர் வாழ்த்தப் பெறுவதாக! இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்தப்பெறுவதாக! - பல்லவி

3
கீழ்த்திசை முதல் மேற்றிசை வரை ஆண்டவரது பெயர் போற்றப்படுவதாக!
4
மக்களினங்கள் அனைத்திற்கும் ஆண்டவர் மேலானவர்; வானங்களையும் விட உயர்ந்தது அவரது மாட்சி. - பல்லவி

5
நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யார்? அவர் போல வானளாவிய உயரத்தில் வீற்றிருப்பவர் யார்?
6
அவர் வானத்தையும் வையகத்தையும் குனிந்து பார்க்கின்றார். - பல்லவி



=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 
2 கொரி 5: 19

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை அவரே எங்களிடம் ஒப்படைத்தார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 15-20

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களிடம் கூறியது: "உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும். இல்லையென்றால் "இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும்" என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக்கொண்டு போங்கள். அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில் திருச்சபையிடம் கூறுங்கள். திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில் அவர் உங்களுக்கு வேற்று இனத்தவர் போலவும் வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும்.

மண்ணுலகில் நீங்கள் தடை செய்பவை அனைத்தும் விண்ணுலகிலும் தடை செய்யப்படும்; மண்ணுலகில் நீங்கள் அனுமதிப்பவை அனைத்தும் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார். ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்."

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 எசேக்கியேல் 9: 1-7; 10: 18-22

கடவுளின் மாட்சி திருக்கோயிலை விட்டு வெளியேறுதல்

நிகழ்வு

ஓரூரில் கிறிஸ்தவ இளைஞன் ஒருவன் இருந்தான். இவன் கடவுள்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தான். அதனால் இவன் நாள் தவறாமல் கோயிலுக்குச் சென்று, திருப்பலி கண்டு வந்தான். மட்டுமல்லாமல், திருவிவிலியம் வாசிப்பதிலும் இவன் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தான்.

இப்படித் தவறாமல் கோயிலுக்குச் சென்று, திருவிவிலியம் வாசித்து வந்த இந்த இளைஞன் திடீரென்று கோயிலுக்குச் செல்வதை நிறுத்திக்கொண்டான். இதைப் பார்த்த, இவனுடைய வளர்ச்சியில் பெரிதும் அக்கறைகொண்ட பெரியவர் ஒருவர், "இப்பொழுதெல்லாம் நீ ஏன் கோயிலுக்குச் செல்வதில்லை...? ஏதாவது பிரச்சனையா...?" என்றார்.

"அது வேறொன்றுமில்லை. கோயிலுக்கு வரும் பலர் வெளிவேடக்காரர்களாக இருக்கின்றார்கள்... அவர்களிடத்தில் உண்மையில்லை. அதனால்தான் நான் கோயிலை விட்டு வெளியேறிவிட்டேன்" என்றான் அந்த இளைஞன். "மக்கள் வெளிவேடக்காரர்களாக இருக்கின்றார்கள், அதனால்தான் நான் கோயிலைவிட்டு வெளியேறிவிட்டேன் என்று நீ சொன்னால், வெளிவேடக்காரர்கள் கூட்டத்தில் இன்னோர் ஆளும் சேர வாய்ப்பிருக்கின்றது" என்று அந்த இளைஞனுக்குப் புரிகின்ற மாதிரி அமைந்த குரலில் சொல்லி முடித்தார் பெரியவர்.

ஆம், இன்றைக்குப் பலர் இந்த நிகழ்வில் வருகின்ற இளைஞனைப் போன்று, "பங்குப் பணியாளர் சரியில்லை..." "கோயிலில் நிர்வாகம் சரியில்லை..." கோயிலுக்கு வருகின்ற மக்கள் சரியில்லை..." என்று ஏதாவதொரு காரணம் சொல்லி, கோயிலை விட்டு வெளியேறுவதை அல்லது கோயிலுக்கு வராமல் இருப்பதை நாம் காணமுடியும்; ஆனால், இன்றைய முதல் ஆண்டவரின் மாட்சியே எருசலேம் திருக்கோயிலை விட்டு வெளியேறுவதைக் குறித்து வாசிக்கின்றோம். ஆண்டவரின் மாட்சி எருசலேம் திருக்கோயிலை விட்டு வெளியேறக் காரணமென்ன...? அதற்கு முன்பு என்ன நடந்தது...? என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

நகருக்குத் தண்டனை வழங்கப்படல்

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் எசேக்கியேலுக்கு கேட்கின்ற வகையில், "நகருக்குத் தண்டனை வழங்குவோரே! நீங்கள் ஒவ்வொருவரும் உம் கொலைக் கருவியைக் கையிலேந்தி நெருங்கி வாருங்கள்" என்கின்றார். ஆண்டவராகிய கடவுள் எருசலேம் நகருக்குத் தண்டனை வழங்க போவதாகக் குறிப்பிடும் ஆறு பேர், அவர்களோடு சேர்த்து இன்னொருவர் என பேர் ஏழு பேர், ஏழு வானதூதர்களைக் குறிக்கின்றார்கள் (திவெ 8: 2,6). இவர்கள் ஆண்டவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து கையில் கொலைக் கருவிகளை ஏந்தி, எருசலேம் நகருக்குத் தண்டனை வழங்குகின்றார்கள். உண்மையில் பாபிலோனியர்களால் எருசலேமுக்கு நிகழவிருந்த அழிவினைத்தான் இந்தக் காட்சி உணர்த்துவதாக இருக்கின்றது.

இஸ்ரயேல் மக்கள், அதிலும் குறிப்பாக யூதாவில் இருந்தவர்கள் ஆண்டவர் கொடுத்த கட்டளையை (விப 20: 1-3) மீறினார்கள். அதனாலேயே அவர்களுக்குப் பாபிலோனியர்கள் வழியாகத் தண்டனை கிடைத்தது. நாமும்கூட கடவுள் நமக்குக் கொடுத்த கட்டளையை மீறிச் செயல்பட்டுக்கொண்டே இருக்கின்றோம். இதற்கான வெகுமதியை நாம் நிச்சயம் பெறுவோம் என்பதை மறந்துவிடக் கூடாது.

ஆண்டவரின் மாட்சி எருசலேம் திருக்கோயிலைவிட்டு வெளியேறுதல்

எருசலேம் நகரில் இருந்த எல்லாருக்கும் தண்டனை நிறைவேற்றப்பட்ட பின், ஆண்டவருடைய மாட்சி எருசலேம் திருக்கோயிலை விட்டு வெளியேறுகின்றது.

ஆண்டவருக்கென தாவீது மன்னர் கோயில் கட்ட நினைத்து, அது முடியாமல் போகவே, அவருடைய மகனான சாலமோன் மன்னர் ஆண்டவருக்கென கோயில் கட்டுகின்றார்; ஆண்டவருடைய மாட்சியும் அதில் குடிகொள்கின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆண்டவரின் மக்களாக இருந்த இஸ்ரயேல் மக்கள் அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாமல், வேற்று தெய்வத்தை வழிபட்டார்கள். இதனால் பாபிலோனியர்கள் அவர்கள்மீது படையெடுத்து வந்து, எருசலேம் நகரையும், திருக்கோயிலையும் தீக்கிரையாக்கினார்கள். இதன்பின் கடவுளின் மாட்சி எருசலேம் திருக்கோயிலை விட்டு வெளியேறுகின்றது. அப்படியென்றால், மக்கள் கடவுளுக்கு எதிராகச் செய்த தவறே, கடவுளின் மாட்சி எருசலேம் திருக்கோயிலை விட்டு வெளியேறுவதற்குக் காரணம் என்று சொல்லலாம்.

இன்றும்கூட நாம் செய்யும் பாவத்தால், கடவுள் நம்மை விட்டு அகலக் காரணமாக இருக்கின்றோம். ஆகையால், நாம் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்து, அவர் நம்முள் குடியிருக்கச் செய்வோம் (யோவா 14: 23).

சிந்தனை

"உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவியார் தங்கும் கோயில் என்று தெரியாதா?" (1கொரி 6: 19) என்பார் புனித பவுல். எனவே, நாம் தூய ஆவியார் தங்கும் கோயிலான நம் உடலை அவர் தங்கும்படி செய்வோம். கடவுள் உறைந்திருக்கும் திருக்கோயிலின் புனிதத்தைக் காப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மத்தேயு 18: 15-20

இருவர், மூவர் இயேசுவின் பெயரின் பொருட்டு ஒன்றாகக்கூடியிருக்கும் இடத்தில் அவர் இருக்கிறார்


நிகழ்வு

ஆப்பிரிக்காக் கண்டத்தில் உள்ளது கென்யா என்ற நாடு. இந்த நாட்டில் மாசை (Masai) என்றோர் இனக்குழு உண்டு. இந்த இனக்குழுவினர் ஆடு மாடு மேய்க்கக்கூடியவர்கள். அதனால் இவர்கள் மேய்ச்சல் நிலங்களில் முகாமிட்டு அங்கு தங்கி இருப்பார்கள்.

இப்படிப்பட்ட மக்களுக்கு நடுவில் திருப்பலி மற்றும் அருளடையாளக் கொண்டாட்டங்களை நிறைவேற்றி வந்த அருள்பணியாளர் ஒருவர் வித்தியாசமானதொரு செயலைச் செய்துவந்தார். அது என்னவெனில், மாசை இனக்குழுவினருக்குத் திருப்பலி நிறைவேற்ற வருகின்றபொழுது, ஓரிரு மைல்களுக்கு முன்னால் முகாமிட்டுவிட்டு, பின்னர் ஒரு கூடை நிறையப் புற்களைச் சேகரித்துக்கொண்டு, அதை அந்த இனக்குழுவின் தலைவரிடம் கொடுப்பார். இனக்குழுவினர் தலைவரோ, அந்தக் கூடையைத் தனக்கு அடுத்திருக்கும் வீட்டிற்குக் கடத்தவேண்டும். அடுத்த வீட்டினர் தங்களுக்கு அடுத்திருக்கும் வீட்டில் உள்ளவர்களுக்குக் கடத்தவேண்டும். இப்படியே எல்லாக் குடும்பத்திற்கும் சென்று, கூடை அருள்பணியாளரைச் சேரும். அதன்பிறகு அவர் அந்த மக்கள் நடுவில் திருப்பலி நிறைவேற்றுவார்.

இதில் கவனிக்கவேண்டிய செய்தி என்னவெனில், அடுத்த குடும்பத்தோடு நல்லுறவோடு இல்லாத குடும்பம் அந்தக் குடும்பத்திற்குப் புற்கள் நிறைந்த கூடையைக் கடத்தக் கூடாது. காரண,ம் அடுத்த குடும்பத்தோடு நல்லுறவோடு இருக்கின்ற குடும்பம் மட்டுமே, புற்கள் நிறைந்த கூடையை அடுத்த குடும்பத்திற்குக் கடத்தவேண்டும் என்றொரு எழுதப்படாத சட்டம் இருந்தது. இதனால் அடுத்த குடும்பத்தோடு நல்லுறவோடு இல்லாத குடும்பம் தங்களிடம் வந்த கூடையைக் கடத்த முடியாத நிலை ஏற்பட்டுக் கால தாமதமாகும். இதை அறிய வரும் அருள்பணியாளர், இந்த மக்கள் தங்களுக்கிடையே நல்லுறவோடு இல்லை; அதனால்தான் கூடை திரும்பி வருவதற்கு இவ்வளவு கால தாமதம் ஆகின்றது என்று நினைத்துக்கொண்டு, வேறோர் இனக்குழுவினர்க்குத் திருப்பலி நிறைவேற்றப் போய்விடுவார்.

ஆனால், மாசை இனக்குழுவில் இப்படியெல்லாம் நடப்பது அரிதிலும் அரிதுதான். அருள்பணியாளர் தங்களிடம் திருப்பலி நிறைவேற்ற வருகின்ற நேரத்தில், கொடுத்து அனுப்பும் புற்கள் நிறைந்த கூடையை, அடுத்த குடும்பத்தோடு நல்லுறவு இல்லாத குடும்பம், உடனே உறவைச் சரிசெய்து, கூடையை அடுத்த குடும்பத்திற்கு அனுப்பி வைக்கும். இவ்வாறு அருள்பணியாளரால் அனுப்பி வைக்கப்பட்ட கூடை அவரை விரைவாகப் போய்ச் சேரும். இதன்பிறகு அவர் மிகவும் மகிழ்ச்சியோடு அவர்கள் நடுவில் திருப்பலி நிறைவேற்றிவிட்டுச் செல்வார் (-Willi Hoffsuemmer).

உறவோடு வாழும் மனிதர்கள் நடுவில்தான் கடவுள் இருப்பார். அப்படிப்பட்ட இடமே திருப்பலி நிறைவேற்றுவதற்குச் சரியான இடம் என்பதை மாசை இனக்குழுவினர் நடுவில், மறைப்பணியைச் செய்துவந்த அந்த அருள்பணியாளர் அடையாள முறையில் உணர்த்துவது நமது கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது. நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, "இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கின்றேன்" என்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இச்சொற்களின் பொருள் என்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

உறவை விரும்பும்... உறவில் மகிழும் கடவுள்

ஆண்டவராகிய இயேசு, கடவுள், நாம் எப்பொழுதும் நல்லுறவோடு, ஒன்றாக இருக்கவேண்டும் என்றே விரும்புகின்றார். இதை நாம் இயேசு சொல்லக்கூடிய, "எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக!" (யோவா 17: 21) என்ற இறைவார்த்தையிலும், "நீங்கள் உங்கள் காணிக்கையைச் செலுத்த வரும்பொழுது... நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பிறகு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள் (மத் 5: 23-24) என்ற இறைவார்த்தையிலும் நாம் காணலாம். இன்றைய நற்செய்தியிலும் நாம் அதைத்தான் "இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ, அங்கே அவர்களிடையே நான் இருக்கின்றேன்" என்று இயேசு சொல்லும் சொற்களிலும் காணலாம். இதன்மூலம் கடவுள் உறவை விரும்புகின்றவராக, உறவில் மகிழ்பவராக இருக்கின்றார் என்பதை அறிந்துகொள்ளலாம்.

நல்லுறவோடு வாழ என்ன செய்வது?

கடவுள் நல்லுறவில் மகிழ்கின்றவராக இருக்கின்றார் என்று சிந்தித்துப் பார்த்தோம். நாம் அடுத்தவரோடு நல்லுறவோடு இருக்க, தவறு செய்கின்ற ஒருவரைச் சுட்டிக்காட்டுவது நமது கடமையாகும். இதற்கு ஆண்டவர் இயேசு மூன்று வழிமுறைகளைச் சொல்கின்றார். ஒன்று, தவறு செய்த மனிதரை நாம் தனியாகச் சென்று, அவருடைய தவற்றைச் சுட்டிக்காட்டித் திருத்துதல். இரண்டு, ஓரிரு மனிதர்களைக் கூட்டிக்கொண்டு சென்று, தவறு செய்த மனிதரின் தவற்றைச் சுட்டிக்காட்டுதல். மூன்று, திருஅவையாரோடு சென்று தவறு செய்தவரின் தவற்றைச் சுட்டிக்காட்டி, அவரை நல்வழிக்குக் கொண்டு வருவது; அவரோடு நல்லுறவோடு இருப்பது. இந்த மூன்று வழிமுறைகளுக்கும் ஒருவர் ஒத்து வராவிட்டால், அவர் வேற்று இனத்தார் போல் இருக்கட்டும் என்கின்றார் இயேசு.

ஆம், நாம் மற்றவோடு நல்லுறவோடு வாழவேண்டும். அதுதான் இயேசுவின் விருப்பம். அதற்காகவே அவர் இந்த மூன்று வழிமுறைகளைச் சொல்கின்றார். ஆகையால், நாம் அடுத்தவரோடு நல்லுறவோடு வாழ்ந்து, கடவுளின் அன்பில் நிலைத்திருப்போம்.

சிந்தனை

"உறவோடு வாழும் உள்ளங்கள் நடுவில் இறைவன் (தெய்வம்) தரிசனம்" என்கிறது ஒரு பழைய திருவழிபாட்டுப் பாடல். எனவே, நாம் நல்லுறவோடு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!