|
|
11 ஆகஸ்ட் 2020 |
|
பொதுக்காலம்
19ஆம் வாரம்
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
"நான் உனக்குத் தருகின்ற இச்சுருளேட்டைத் தின்று உன் வயிற்றை
நிரப்பு'' என்றார். அச்சுருளேடு என் வாயில் தேன்போல் இனித்தது.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 2: 8- 3: 4
ஆண்டவர் கூறுவது: "நீயோ மானிடா! நான் உனக்குச் சொல்வதைக் கேள்.
அந்தக் கலக வீட்டாரைப் போல் நீயும் கலகக்காரனாய் இருந்து
விடாதே. உன் வாயைத் திறந்து நான் உனக்குத் தருவதைத்
தின்றுவிடு" என்றார். அப்போது என்னை நோக்கி ஒரு கை நீள்வதைக்
கண்டேன். அதில் சுருளேடு ஒன்று இருந்தது. அவர் அச்சுருளேட்டை
என் முன் விரித்தார். உள்ளும் புறமும் எழுதப்பட்டிருந்த அதில்
கதறல்களும் புலம்பல்களும் கேடுகளும் எழுதப்பட்டிருந்தன.
அவர் என்னை நோக்கி, "மானிடா! நீ காண்பதைத் தின்றுவிடு. இச்சுருளேட்டைத்
தின்றபின் இஸ்ரயேல் வீட்டாரிடம் போய்ப் பேசு" என்றார். நானும்
என் வாயைத் திறக்க, அவர் அச்சுருளேட்டை எனக்குத் தின்னக்
கொடுத்தார். மேலும் அவர் என்னை நோக்கி, "மானிடா! நான் உனக்குத்
தருகின்ற இச்சுருளேட்டைத் தின்று உன் வயிற்றை நிரப்பு" என்றார்.
நானும் தின்றேன். அது என் வாயில் தேன் போல் இனித்தது. மேலும்
அவர் என்னை நோக்கி, "மானிடா! புறப்படு. இஸ்ரயேல் வீட்டாரிடம்
போய் என் சொற்களை அவர்களுக்கு எடுத்துக் கூறு" என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 119: 14,24. 72,103. 111,131 . (பல்லவி: 103a)
Mp3
=================================================================================
பல்லவி: உம் சொற்கள் என் நாவுக்கு எத்துணை இனிமையானவை!
14
பெருஞ்செல்வத்தில் மகிழ்ச்சி அடைவதுபோல், நான் உம் ஒழுங்குமுறைகளின்படி
நடப்பதில் மகிழ்ச்சியுறுகின்றேன்.
24
ஏனெனில், உம் ஒழுங்குமுறைகள் எனக்கு இன்பம் தருகின்றன; அவையே
எனக்கு அறிவுரையாளர். - பல்லவி
72
நீர் திருவாய் மலர்ந்த சட்டம், ஆயிரக்கணக்கான பொன், வெள்ளிக்
காசுகளைவிட எனக்கு மேலானது.
103
உம் சொற்கள் என் நாவுக்கு எத்துணை இனிமையானவை! என் வாய்க்குத்
தேனினும் இனிமையானவை. - பல்லவி
111
உம் ஒழுங்குமுறைகளை என்றும் என் உரிமைச் சொத்தாய்க்
கொண்டுள்ளேன். ஆகவே, அவை என் இதயத்தை மகிழ்விக்கின்றன.
131
வாயை "ஆ'வெனத் திறக்கின்றேன்; பெருமூச்சு விடுகின்றேன்; ஏனெனில்,
உம் கட்டளைகளுக்காக ஏங்குகின்றேன். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
மத் 11: 29ab
அல்லேலூயா, அல்லேலூயா! என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு
என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்.
என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருதவேண்டாம்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-5, 10-14
அக்காலத்தில்
சீடர்கள் இயேசுவை அணுகி, "விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?" என்று
கேட்டார்கள். அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில்
நிறுத்தி, பின்வருமாறு கூறினார்:
"நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால்
விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச்
சொல்கிறேன். இந்தச் சிறு பிள்ளையைப்போலத் தம்மைத்
தாழ்த்திக்கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர். இத்தகைய சிறு
பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.
இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருதவேண்டாம்; கவனமாயிருங்கள்!
இவர்களுடைய வானதூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும்
இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில்
மானிடமகன் நெறி தவறியோரை மீட்கவே வந்தார்.
இந்த நிகழ்ச்சியைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒருவரிடம்
இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று வழி தவறி அலைந்தால், அவர்
தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைப் பகுதியில் விட்டுவிட்டு, வழிதவறி
அலையும் ஆட்டைத் தேடிச் செல்வார் அல்லவா? அவர் அதைக் கண்டுபிடித்தால்,
வழிதவறி அலையாத தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பற்றி மகிழ்ச்சியடைவதை
விட, வழி தவறிய அந்த ஓர் ஆட்டைப் பற்றியே மிகவும் மகிழ்ச்சியடைவார்
என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். அவ்வாறே இச்சிறியோருள்
ஒருவர்கூட நெறி தவறிப் போகக் கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின்
திருவுளம்."
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
எசேக்கியேல் 2: 8-3: 4
"என் சொற்களை அவர்களுக்கு எடுத்துக்
கூறு"
நிகழ்வு
அது ஒரு பழமையான பங்கு. அந்தப் பங்கில் இருந்த பங்கு மக்களில்
ஒருசிலர் பங்குப் பணியாளர் என்ன சொன்னாலும் அதற்குச்
செவிகொடுக்காதவர்களாக... அவரோடு எதற்கெடுத்தாலும் விதண்டாவாதம்
செய்யக்கூடியவர்களாக... அவர் எப்பொழுது தவறு செய்வார்; அப்பொழுது
அதை எல்லாரிடத்திலும் சொல்லி, அவருக்கு அவப்பெயரை ஏற்படுத்தலாம்
என்றே இருந்தார்கள்.
இப்படி இருக்கும்பொழுது, ஒரு ஞாயிற்றுக்கிழமைத் திருப்பலியில்,
மறையுரையின்பொழுது, அந்தப் பங்குப்பணியாளர் முகச் சவரம் செய்யத்
தேவைப்படும் கருவிகள் இருந்த முகச் சவரப் பெட்டியைத் திறந்து,
அதிலிருந்து தேவையான பொருள்களை எடுத்துத் தன்னுடைய முகத்தைச்
சவரம் செய்யத் தொடங்கினார். இதைப் பார்த்த பங்கு மக்கள்
"பங்குப் பணியாளர் இன்றைக்கு ஏதோவொரு செய்தியை வித்தியாசமாகச்
சொல்லப்போகிறார் போலும்" என்று நினைத்துக்கொண்டிருக்க, அவருக்கு
எதிராகச் செயல்பட்டு வந்த விதண்டாவாதக் குழுவினர், "இவருக்கு
அவப்பெயர் ஏற்படுத்த இந்த ஒரு செயல் போதும்" என்று
நினைத்துக்கொண்டு, "திருப்பீடத்தைத் தீட்டுப்படுத்திய பங்குப்
பணியாளர்" என்ற தலைப்பில், ஒரு பெரிய (மொட்டைக்) கடிதம் எழுதி,
அதை ஆயருக்கும், மறைமாவட்டத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்த
அருள்பணியாளர்களுக்கும், எல்லாப் பங்குகளுக்கும் அனுப்பி
வைத்தார்கள்.
இக்கடிதத்தை வாசித்த மறைமாவட்ட ஆயர், அந்தப் பங்குப்பணியாளரை
அலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அவரும் அதற்கு உரிய விளக்கம்
தர, ஆயர் அவரை எதுவும் சொல்லாமல் விட்டுவிட்டார்.
அடுத்த ஞாயிற்றுக்கிழமை வந்தது. அன்றைய நாள் திருப்பலியின் மறையுரையின்பொழுது,
பங்குப்பணியாளர் பங்கு மக்களைப் பார்த்து, "கடந்த வாரம் நான்
திருப்பீடத்தில் முகச்சவரம் செய்த செய்தியை எல்லாரிடத்திலும்
பரப்பினீர்கள்! மிக்க நன்றி. அதற்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமைத்
திருப்பலியின் மறையுரையில், நான் உயிர்த்த ஆண்டவர் இயேசு
சொன்ன, "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செயதியை அறிவியுங்கள்"
என்பதை சொல்லி, "நீங்களும் நற்செய்தி அறிவியுங்கள்" என்று
சொன்னேனே! அதை நீங்கள் எல்லாரிடத்திலும் சொன்னீர்களா...?" என்றார்.
இதற்குப் பங்கு மக்களிடமிருந்து பதிலேதும் வரவில்லை.
அப்பொழுது அவர் பங்கு மக்களுக்கு அதிலும் குறிப்பாக, அவருக்கு
எதிராக விதண்டாவாதம் செய்யும் குழுவினருக்கு உரைக்கும் வண்ணம்,
"துற்செய்தியைப் பரப்புவதில் ஆர்வமாய் இருக்கும் நீங்கள், ஆண்டவரின்
நற்செய்தியைப் பரப்புவதில் ஆர்வமாய் இருங்கள்" என்றார்.
நாம் ஒவ்வொருவரும் துற்செய்தியை அல்ல, ஆண்டவரின் நற்செய்தியை,
அவருடைய வார்த்தையை மக்களுக்கு அறிவிக்கவேண்டும். அதைத்தான் இந்த
நிகழ்வும், இன்றைய முதல் வாசகமும் எடுத்துக்கூறுகின்றன. அதைக்
குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
சுருளேட்டைத் தின்னும் எசேக்கியேல்
பாபிலோனுக்கு மக்களோடு மக்களாக நாடு கடத்தப்பட்ட எசேக்கியேலைத்
தன்னுடைய திருப்பணிக்கு அழைக்கும் இறைவன், ஒரு காட்சியின்
வழியாக அவரிடம், தான் காட்டும் ஒரு சுருலேட்டைத் தின்னச்
சொல்கின்றார். எசேக்கியேலும் அதைத் தின்கின்றார். அதுவோ அவருக்குத்
தேன்போல் இனிக்கின்றது. சுருளேடு தேன்போல் இனித்தது என்று இன்றைய
முதல் வாசகத்தில் இடம்பெறும் வார்த்தைகள், "கடவுளின் வார்த்தைகள்
தேனிலும், தேனடையிலிருந்து சிந்தும் தெளி தேனினும் இனிமையானவை"
(திபா 19:10; 119:103) என்று திருப்பாடல் ஆசிரியர் கூறுகின்ற
வார்த்தைகளை நமக்கு நினைவுபடுத்துவையாக இருக்கின்றன. ஆம், கடவுளின்
வார்த்தைகள் தேனிலும் இனிமையானவை. அப்படிப்பட்ட வார்த்தைகள் இருந்த
சுருளேட்டைத் தான் எசேக்கியேல் தின்கின்றார்.
கடவுளின் வார்த்தையை மக்களுக்கு அறிவிக்க அறிவுறுத்தப்படும் எசேக்கியேல்
தேன்போல் இனித்த சுருளேட்டை எசேக்கியேல் தின்றபின் கடவுள் அவரிடம்,
"புறபட்டு, இஸ்ரயேல் வீட்டாரிடம் போய் என் சொற்களை அவர்களுக்கு
எடுத்துக் கூறு" என்கின்றார். எசேக்கியேலும் கடவுள் தன்னிடம்
சொன்னது போன்று, அவருடைய வார்த்தையை மக்களிடம் அறிவிக்கின்றார்.
கடவுள் எசேக்கியேலிடம் சொன்னது போன்றே, நம்மிடமும், உலகெங்கும்
சென்று நற்செய்தி அறிவிக்கச் சொல்கின்றார். நாம் அவருடைய
வார்த்தையை, அவருடைய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிக்கின்றோமா?
சிந்திப்போம்.
சிந்தனை
"நான் கட்டளையிடம் அனைத்தையும் அவர்களிடம் சொல். அவர்கள் முன்
கலக்கமுறாதே" (எரே 1: 17) என்று ஆண்டவர் இறைவாக்கினர் எரேமியாவிடம்
கூறுவார். அன்று ஆண்டவர் எரேமியாவிடம் கூறியது போன்று, எசேக்கியலிடம்
கூறியது போன்று, இன்று நம்மிடமும் தன்னுடைய வார்த்தையை மக்களுக்கு
அறிவி என்ற கட்டளையைத் தருகின்றார். நாம் அவருடைய கட்டளைக்குக்
கீழ்ப்படிந்து, அவருடைய வார்த்தையை எல்லாருக்கும் அறிவிப்போம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 18: 1-5, 10, 12-14
அடக்கி ஆள்பவர் அல்ல, அன்புப் பணிசெய்வோரே
பெரியவர்
நிகழ்வு
முன்பொரு காலத்தில் ஆறுகளுக்கிடையே, "தங்களுக்குள் யார் பெரியவர்?"
என்ற வாக்குவாதம் ஏற்பட்டது. முதலில் நைல் ஆறு, "உலகில்
நான்தான் மிக நீளமான ஆறு. அதனால் நான்தான் பெரியவன்" என்றது.
இதைத் தொடர்ந்து அமேசான் ஆறு, "நான்தான் உலகில் அகலமான ஆறு.
அதனால் நான்தான் பெரியவன்" என்றது. அடுத்து தனுபே (Danube) ஆறு,
"நான் நீளத்தில் இரண்டாவதாக இருக்கலாம்; ஆனால், நான்தான்
சுறுசுறுப்பாகப் பாய்ந்தோடக்கூடிய ஆறு. என்னில்தான் அதிகமான மக்கள்
பயணிக்கின்றார்கள். அதனால் நான் பெரியவன்" என்றது.
இதற்குப் பின்பும் ஒருசில ஆறுகள் எழுந்து, தங்களுடைய தரப்பு
நியாயங்களைச் சொல்லி, தாங்கள்தான் பெரியவர்கள் என்று சாதித்தன.
எல்லாவற்றையும் மேலே இருந்து அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த
கடவுள், "ஓர் ஆறு நீளமாக இருக்கின்றது என்பதற்காகவோ அல்லது
அகலமாக இருக்கின்றது என்பதற்காகவோ அல்லது சுறுசுறுப்பாக ஓடுகின்றது
என்பதற்காகவோ அந்த ஆறு பெரிய ஆறாகிவிடாது. எந்த ஆறு யாரும் அறியாமல்,
பெயர்கூட இல்லாமல், மலையிலிருந்து இறங்கி வந்து, வறண்ட பகுதிகளை
வளமையக்கி, மக்களின் தாகத்தையும் தணிக்கின்றதோ அந்த ஆறுதான்
பெரிய ஆறு" என்றார்.
இதற்குப் பிறகு ஆறுகள் தங்களுக்குள் யார் பெரிய ஆறு என்ற
வாக்குவாதத்தில் ஈடுபடவிலை.
ஆம், ஒருவர் பணபலம் கொண்டிருக்கின்றார் என்பதாலோ அல்லது ஒருவர்
அதிகாரத்தில் இருக்கின்றார் என்பதாலோ அவர் பெரியவர் கிடையாது.
எவர் ஒருவர் யாருக்கும் தெரியாமல், மிகுந்த தாழ்ச்சியோடு எல்லாருக்கும்
சேவை செய்கின்றாரோ அவரே பெரியவர். அப்படிப்பட்ட செய்தியைத்தான்
மேலே உள்ள நிகழ்வும் அல்லது கதையும் இன்றைய நற்செய்தி வாசகமும்
நமக்கு எடுத்துக்கூறுகின்றன. நாம் அதைக் குறித்து இப்பொழுது
சிந்தித்துப் பார்ப்போம்.
சீடர்கள் இயேசுவிடம், "விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?" எனக்
கேள்வி கேட்டல்
நற்செய்தியில் இயேசுவின் சீடர்கள் அவரிடம், "விண்ணரசில் மிகப்
பெரியவர் யார்?" என்றொரு கேள்வியைக் கேட்கின்றார்கள். சீடர்கள்
இயேசுவிடம் இப்படியொரு கேள்வியைக் கேட்டு, அதற்கான தெளிவினைப்
பெற முயன்றது நல்லதாக நமக்குத் தோன்றினாலும், அவர்களின் நோக்கம்
தவறாகவே இருக்கின்றது. காரணம், இதற்கு முந்தைய பகுதியில் (மத்
17: 1-9) இயேசு தன்னோடு பேதுரு, யோவான், யாக்கோபு ஆகிய மூன்று
சீடர்களை அழைத்துக்கொண்டு மலைக்குச் சென்று, அங்கு தோற்றமாற்றம்
அடைந்திருப்பார். இதனால்தான் சீடர்கள் இயேசுவிடம் இப்படியொரு
கேள்வியைக் கேட்கின்றார்கள்.
சிறுபிள்ளையைப் போல் தம்மைத் தாழ்த்துவோர் விண்ணரசில் பெரியவர்
தன்னுடைய சீடர்கள் தன்னிடம் கேட்ட கேள்விக்கு இயேசு இரண்டுவிதமான
பதில்களைச் சொல்கின்றார். முதலாவதாக, ஒருவர் விண்ணரசில் நுழைவதற்கு
அவர் சிறுபிள்ளையைப் போல் தம்மைத் தாழ்த்திக் கொள்ளவேண்டும்.
விண்ணரசில் எல்லாராலும் நுழைந்துவிட முடியாது; கடவுளுக்கு ஏற்புடைய
வாழ்க்கை வாழ்வோரால் மட்டுமே முடியும். அப்படிக் கடவுளுக்கு ஏற்புடைய
வாழ்க்கை வாழ்கின்ற ஒருவர் தாழ்ச்சியோடு வாழ்ந்தார் எனில், அவரால்
விண்ணரசில் மிக எளிதாக நுழைந்துவிட முடியும்; விண்ணரசில் மிகப்பெரியவராகவும்
முடியும்.
அடுத்ததாக, இயேசு தன்னுடைய சீடர்களிடம், "இத்தகைய சிறுபிள்ளை
ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கின்றார்"
என்கின்றார். சிறுபிள்ளை இயேசுவின் காலத்திலும் சரி, இன்றைய காலத்திலும்
சரி இரண்டாம் தரக் குடிமக்களாகவே கருதப்படுகின்றார்கள். இயேசு
அப்பங்களையும் மீன்களையும் பலுகச் செய்த இரண்டு நிகழ்வுகளிலும்,
பெண்கள் மற்றும் குழந்தைகள் நீங்கலாக ஆண்களின் தொகை ஐயாயிரம்,
நான்காயிரம் என்றே வரும். இதிலிருந்தே இயேசுவின் காலத்தில்
சிறு பிள்ளைகள், குழந்தைகள் ஒரு பொருட்டாக மதிக்கப்படவில்லை என்பது
புரிந்துவிடும். இன்றைய காலகட்டத்தில், குழந்தைகளுக்கு எதிராகத்தான்
அதிகமான வன்முறைகள் நடந்துகொண்டிக்கின்றன. இவற்றையெல்லாம்
வைத்துப் பார்க்கும் சிறு பிள்ளைகள், குழந்தைகள் இரண்டாம் தரக்குடிமக்களாக
நடத்தப்படுகின்றார்கள் என்பது புரிந்துவிடும்.
இத்தகைய பின்னணியில் மிகவும் வலுக்குறைந்தவர்களாக, குரலற்றவர்களாக
இருக்கும் சிறுபிள்ளைகளை ஏற்றுக்கொள்கின்ற எவரும் என்னையே ஏற்றுக்கொள்கின்றார்.
அப்படிப்பட்டவர் விண்ணரசில் நுழைந்து பெரியவராக இருப்பார் என்கின்றார்
இயேசு.
ஆகையால், நாம் சிறுபிள்ளைகளைப் போன்று இறைவனை மட்டுமே நம்பி
வாழ்ந்து, தாழ்ச்சியோடு வாழக் கற்றுக்கொள்வோம். அதன்மூலம் விண்ணரசில்
பெரியவர்கள் ஆவோம்.
சிந்தனை
"இவ்வுலகில் எதுவும் நிரந்தரமில்லை, அதனால் தாழ்ச்சியோடு வாழக்
கற்றுக்கொள்ளுங்கள்" என்கிறது ஒரு முதுமொழி. ஆகையால், நாம் நம்மிடமிருந்து,
நான்தான் பெரியவன் என்ற ஆணவத்தை அகற்றிவிட்டுத் தாழ்ச்சியோடு
வாழக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|