Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     10 ஆகஸ்ட் 2020  

பொதுக்காலம் 19ஆம் வாரம்

=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 9: 6-10

சகோதரர் சகோதரிகளே, குறைவாக விதைப்பவர் குறைவாக அறுவடை செய்வார். நிறைவாக விதைப்பவர் நிறைவாக அறுவடை செய்வார். இதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் தம்முள் தீர்மானித்தபடியே கொடுக்கட்டும். மனவருத்தத்தோடோ கட்டாயத்தினாலோ கொடுக்க வேண்டாம். முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர். கடவுள் உங்களை எல்லா நலன்களாலும் நிரப்ப வல்லவர். எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் தேவையானதெல்லாம் உங்களுக்குத் தருவார்; அனைத்து நற்செயல்களையும் செய்வதற்குத் தேவையானது எல்லாம் உங்களுக்கு மிகுதியாகவே தருவார். "ஒருவர் ஏழைகளுக்கு வாரி வாரி வழங்கும்போது அவரது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்" என்று மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா! விதைப்பவருக்கு விதையையும், உண்பதற்கு உணவையும் வழங்குபவர், விதைப்பதற்கு வேண்டிய விதைகளை வழங்கி அவை முளைத்து வளரச்செய்து அறச்செயல்களாகிய விளைச்சலை மிகுதியாகத் தருவார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 112: 1-2. 5-6. 7-8. 9 . (பல்லவி: 5a) Mp3
=================================================================================


பல்லவி: மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்.
1
ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர்.
2
அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமைமிக்கதாய் இருக்கும்; நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும். - பல்லவி

5
மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர்.
6
எந்நாளும் அவர்கள் அசைவுறார்; நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர். - பல்லவி

7
தீமையான செய்தி எதுவும் அவர்களை அச்சுறுத்தாது; ஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால் அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும். 8 அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்; அவர்களை அச்சம் மேற்கொள்ளாது; இறுதியில் தம் எதிரிகள் அழிவதை அவர்கள் காண்பது உறுதி. - பல்லவி

9
அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும். - பல்லவி



=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 
யோவா 8: 12bc

அல்லேலூயா, அல்லேலூயா! என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
கோதுமை மணி மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 24-26

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: "கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்.

எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்."

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 மத்தேயு 17: 22-27

யாருக்கும் தடையாய் இல்லாமல், எல்லாருக்கும் எடுத்துக்காட்டாய் இருந்த இயேசு

நிகழ்வு

உரோமை மன்னனாக கி.பி.161 ஆம் ஆண்டு முதல் கி.பி.180 ஆண்டு வரை இருந்தவர் மார்க்ஸ் அரேலியஸ்.

இவர் உரோமையின் மன்னராகப் பதவியேற்றதும், அரண்மனையில் இருந்த தலைமை அதிகாரியிடம் ஒரு வாளைக் கொடுத்து, "இந்த வாளை உன்னிடம் நான் கொடுக்கக் காரணம், உரோமை மன்னனாகிய நான், என்னுடைய கடமையைச் சரியாகச் செய்து, எல்லாருக்கும் எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும் என்பதால்தான். எப்பொழுது நான் நாட்டு மக்களுக்கு எடுத்துக்காட்டாக இல்லாமல், தடையாக இருக்கின்றேனோ, அப்பொழுது நீ என்னை இந்த வாளால் வெட்டிவிடலாம்" என்றார்.

இதற்கு அந்த அதிகாரியும் சரியென்று சொல்லிக்கொண்டு, மார்க்ஸ் அரேலியஸ் கொடுத்த வாளினை வாங்கிக் கொண்டார். ஆச்சரியம் என்னவென்றால், மார்க்ஸ் அரேலியஸ் அந்த அதிகாரியிடம் கொடுத்த வாளினை அவர் பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பம் ஏற்படவே இல்லை. அந்தளவுக்கு மார்க்ஸ் உரோமை மன்னனாக இருந்த காலக்கட்டத்தில் யாருக்கும் தடையாக இல்லாமல், எல்லாருக்கும் எடுத்துக்காட்டான வாழ்க்கை வாழ்ந்தார்.

ஆம். நாம் ஒவ்வொருவரும் யாருக்கும் தடையாக இல்லாமல், எல்லாருக்கும் எடுத்துக் காட்டான வாழ்க்கையை வாழவேண்டும் என்ற செய்தியை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக் கூறுகின்றது. இன்றைய நற்செய்தியில், இயேசு கோயில் வரி செலுத்துகின்றார். இறைமகனாகிய அவர் கோயில் வரிசெலுத்தத் தேவையில்லை என்றாலும், அவர் யாருக்கும் தடையாய் இருக்கக்கூடாது; எல்லாருக்கும் எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும் என்பதற்காகக் கோயில் வரி செலுத்துகின்றார். இயேசு செய்த இந்தச் செயல் நமக்கு என்ன செய்தியை எடுத்துச் சொல்கின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இருபது வயதும் அதற்கு மேற்பட்டவர்களுமான ஆண்கள் கோயில் வரி செலுத்தவேண்டும்

இன்றைய நற்செய்தியில், ஆண்டவர் இயேசு கோயில் வரியாக இரண்டு திராக்மா செலுத்துவதைக் குறித்து வாசிக்கின்றோம். மத்தேயு நற்செய்தியில் மட்டுமே இடம்பெறும் இந்த நிகழ்வு, அவர் வரிதண்டுபவர் என்பதால், இயேசுவின் வாழ்வில் நடந்த இந்த நிகழ்வை தனது நற்செய்தி நூலில் இணைத்திருக்கலாம் என உறுதியாக நம்பலாம்.

ஆண்டவர் இயேசு, தன் சீடர்களோடு கப்பர்நாகுமுக்கு வருகின்றபொழுது, கோயில் வரி தண்டுவோர் பேதுருவிடம் "உங்கள் போதகர் இரண்டு திராக்மா வரி செலுத்துவதில்லையா?" என்று கேட்கின்றபொழுது, பேதுரு அவர்களிடம், "ஆம். செலுத்துகின்றார்" என்கின்றார். இதையடுத்து ஆண்டவர் இயேசு பேதுருவிடம் பேசியதைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னர், கோயில் வரியைக் குறித்துப் பழைய ஏற்பாட்டில் என்ன சொல்லப்பட்டிருக்கின்றது என்பதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

விடுதலைப் பயண நூல், 30ஆம் அதிகாரம், 11 முதல் 16 வரை உள்ள இறைவார்த்தைப் பகுதியில், இருபது வயதும் அதற்கு மேற்பட்டவர்களுமான ஆண்கள் கோயில் வரி செலுத்தவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. இதனடிப்படையில், கோயில் வரி வசூலிப்போர், குறிப்பிட்ட வயதை அடைந்தவர்களிடமிருந்து வரிவசூலித்து வந்தார்கள். இவ்வாறு வசூலிக்கப்பட்ட கோயில் வரியானது, மக்கள் சார்பாகச் செலுத்தப்பட்ட பொதுப் பலிக்கும், திருக்கோயிலின் பராமரிப்புக்கும் பயன்படுத்தப்பட்டது. இதற்காகவே கோயில் வரி வசூலிப்போர் திருத்தூதர்களின் தலைவராகிய இருந்த பேதுருவிடம், "உங்கள் போதகர் இரண்டு திராக்மா வரியைச் செலுத்துவதில்லையா?" என்று கேட்கின்றார்கள்.

யாருக்கும் தடையாய் இராத இயேசு

இவ்வுலகின் தலைவர்கள் சுங்க வரியையோ அல்லது தலை வரியையோ மற்ற மக்களிடமிருந்துதான் வசூலிப்பார்கள். சொந்த மக்களிடமிருந்து வசூலிக்க மாட்டார்கள். இந்த அடிப்படையில் கோயில் வரியை வசூலிப்பவர்கள் மற்றவர்களிடமிருந்துதான் வசூலிக்கவேண்டுமே ஒழிய, கோயிலில் உடனுறைந்திருக்கும் ஆண்டவரிடம் அல்ல. அவ்வாறெனில், இயேசு கோயில்வரி செலுத்தவேண்டிய தேவையில்லை. ஆனாலும், அவர் கோயில் வரி செலுத்தினார் எனில், அதற்கு முக்கியமான காரணம், அவர் யாருக்கும் தடையாய் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான்.

இயேசு தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் மக்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வந்தார். அவர் பரிசேயர்களைப் போன்று போதித்தது ஒன்றும், வாழ்ந்தது ஒன்றுமாக இருக்கவில்லை. மாறாக, தன் வாழ்வாலும் வார்த்தையாலும் எடுத்துக்காட்டாக இருந்தார். கோயில் வரி செலுத்துகின்ற இந்த நிகழ்வில்கூட, அவர் யாருக்கும் தடையாய் இருக்கக்கூடாது என்பதற்காக கோயில் வரி செலுத்துகின்றார். ஆகவே, நாம் இயேசுவின் எடுத்துக்காட்டான வாழ்வைப் பின்பற்றி, யாருக்கும் தடையாய் இல்லாமல் வாழ முயற்சி செய்வோம்.

சிந்தனை

"இயேசு கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார்" (லூக் 24: 19) என்பார்கள் எம்மாவு நோக்கிப் பயணம் செய்த சீடர்கள். ஆகையால், நாம் இயேசுவின் எடுத்துக்காட்டான வாழ்வைப் பின்பற்றி அவருடைய வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 
எசேக்கியேல் 1: 2-5, 24-28

வேற்று நிலத்தில் கடவுள் அருளிய காட்சியைக் கண்ட எசேக்கியேல்

நிகழ்வு

கடவுள்மீது மிகுந்த நம்பிக்கைகொண்டிருந்த மனிதர் ஒருவர் இருந்தார். இவருக்கு மூன்று மகன்கள் இருந்தார்கள். இவர்கள் மூவருக்கும் அவர், கடவுள் எல்லா இடத்திலும் இருக்கின்றார் என்ற உண்மையை உணர்த்த நினைத்தார். அதனால் அவர் தன்னுடைய மூன்று மகன்களையும் அழைத்து, ஆளுக்கோர் ஆப்பிள் பழத்தைக் கொடுத்து, "நீங்கள் இந்த ஆப்பிள் பழத்தை கடவுள் இல்லாத இடத்தில் சாப்பிடவேண்டும்" என்றார். தங்களுடைய தந்தை தங்களிடம் சொன்னதைக் கேட்டு மூன்று மகன்களும் கையில் ஆளுக்கோர் ஆப்பிளை வைத்துக்கொண்டு, ஒவ்வொரு திசையாகப் பிரிந்துசென்றார்கள்.

அவ்வாறு பிரிந்துசென்ற மூன்று மகன்களில் இளைய மகன் முதலில் வந்து, "அப்பா! நான் கடவுள் இல்லாத இடம் எதுவெனத் தேடியலைந்தபொழுது, கதவுக்குப் பின்னால்தான் கடவுள் இல்லை என்பதை அறிந்தேன். அதனால் நான் அங்கு நீங்கள் கொடுத்த ஆப்பிளைத் தின்றுமுடித்தேன்" என்றான். அவன் சொன்னதைக் கேட்ட தந்தை அவனிடம், "நல்லது, மற்றவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்று பார்ப்போம். அதுவரை பொறுத்திரு" என்றார்.

இதற்குப் பின்பு நடுவில் உள்ள மகன் வந்தான். அவன் தன் தந்தையிடம், "அப்பா! கடவுள் இல்லாத இடம் எது என்று நீண்டநேரம் தேடியலைந்தேன். அதன்பிறகு நம்முடைய வீட்டு அலமாரிக்குள் கடவுள் இருப்பதில்லை என்பதை உணர்ந்தேன். அதனால் நான் அலமாரிக்குள் சென்று நீங்கள் கொடுத்த ஆப்பிளைச் சாப்பிட்டு முடித்தேன்" என்றான். அவன் இவ்வாறு சொன்னதைக் கேட்ட தந்தை, இளைய மகனிடம் சொன்னதையே சொல்லி, அவனைக் காத்திருக்கச் சொன்னார்.

மூத்த மகன் வருவதற்கு நேரம் ஆனது. ஆனாலும் அவர்கள் அவனுக்காகக் காத்திருந்தார்கள். ஒருவழியாக அவன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். பின்னர் அவன் தன் தந்தையிடம், "கடவுள் இல்லாத இடம் எது என காடு, மலை, கடல் என்று எல்லா இடத்திலும் தேடித் பார்த்துவிட்டேன்; ஓரிடம்கூடக் கடவுள் இல்லாத இடம் இல்லை" என்றான். மூத்த மகன் இவ்வாறு சொன்னதைக் கேட்ட தந்தை, அவனிடம் "நீ சொல்வதுதான் சரி. கடவுள் எல்லா இடத்திலும் இருக்கின்றார். அவர் இங்கு இருப்பது போலவே, எங்கும் நிறைந்து இருக்கின்றார்" என்றார்.

ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற மூத்த மகன் உணர்ந்துகொண்டது போலவே, கடவுள் எல்லா இடத்திலும் இருக்கின்றார்; அவர் இல்லாத இடமென்று எதுமுமில்லை! இன்றைய முதல் வாசமும் கடவுள் இஸ்ரயேலில் மட்டுமல்ல, வேற்று நிலத்திலும் இருக்கின்றார்; அங்கேயும் இருந்துகொண்டு மக்களோடு பேசுகின்றார் என்ற செய்தியை எடுத்துக் கூறுகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்

பாபிலோனில் எசேக்கியலோடு பேசிய கடவுள்

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய வாசகத்தில், கி.மு. 597 ஆம் ஆண்டு, பாபிலோனியர்களால் முதற்கட்டமாக நாடு நடத்தப்பட்ட யூதாவில் இருந்தவர்களுள் ஒருவரும், பூசி என்ற குருவின் மகனுமான எசேக்கியல் கடவுள் அருளிய காட்சியைக் காண்பதைக் குறித்து வாசிக்கின்றோம் (எசே 1: 1).

இக்காட்சி நமக்கு ஒரு முக்கியமான செய்தியை எடுத்துக் கூறுகின்றது. அது என்னவெனில், கடவுள் இஸ்ரயேலில் மட்டுமல்ல, பிற இனத்து மக்கள் வாழ்ந்த பாபிலோனிலும் இருக்கின்றார் என்பதாகும். பாபிலோனியர்களால் நாடு கடத்தப்பட்ட யூதர்கள், கடவுள் தங்களைக் கைநெகிழ்ந்து விட்டார்... அவர் தங்களோடு இல்லை என நினைத்து வருந்தினார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஆண்டவராகிய கடவுள் எசேக்கியேலுக்குப் பாபிலோனில் அருளிய காட்சியின் மூலம், அவர் பாபிலோனிலும் இருக்கின்றார் (எங்கும் இருக்கின்றார்) என்ற செய்தியை உணர்த்துவதாக இருக்கின்றது.

கடவுள், பிற இனத்து மக்கள் வாழ்ந்து வந்த பாபிலோனில் இருந்தார் எனில், அவர் நாம் வாழும் இடத்திலும், நம் நடுவிலும் இருக்கின்றார் என்பதுதானே பொருள். எனவே, நாம் நம்மோடு இருக்கின்ற கடவுளின் வார்த்தையை, இறைவாக்கினர் எசேக்கியேலைப் போன்று கேட்டு, அவர் வழியில் நடக்க முயற்சி செய்வோம்.

சிந்தனை

"ஆண்டவரே, உமது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது" (திபா 119: 64) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, தன்னுடைய பேரன்பால் எங்கும் (நிறைந்து) இருக்கின்ற ஆண்டவரின் வார்த்தைகளைக் கடைப்பிடித்து, அவர் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
திருத்தொண்டர் தூய லாரன்ஸ் விழா

இன்று திருச்சபையானது தூய லாரன்ஸின் விழாவைக் கொண்டாடுகின்றது. தொடக்கத் திருச்சபையில் மிகவும் பேரும், புகழும் கொண்டு இருந்த புனிதர்களில் தூய லாரன்சும் ஒருவர் என்பதை இங்கே நாம் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.

திருத்தொண்டர் லாரன்ஸ் மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புனிதர். இவர் திருத்தந்தை இரண்டாம் சிக்துஸ் என்பவரிடத்தில் திருத்தொண்டராகப் பணிபுரிந்தார். அந்நாட்களில் (கி.பி. 254) உரோமையை வலேரியான் என்பவன் ஆண்டு வந்தான். அவன் தொடக்கத்தில் கிறிஸ்தவர்கள் மீது மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தான். ஆனால் அது நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. அவனுடைய நண்பன் மக்ரியன் அரசனுடைய மனதை மாற்றி கிறிஸ்தவ குருக்களை சிலைகளுக்கு பலி செலுத்த வேண்டும் என்றும், அவர்களைத் துன்புறுத்தத் என்றும் கட்டாயப் படுத்தினான். அதன்படி அரசன் வலேரியான் கிறிஸ்தவர்களை துன்புறுத்தத் தொடங்கினான்.

256 ஆம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் சிக்துஸ் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த அரசன், திருத்தந்தையையும், அங்கே இருந்த மற்ற ஆறு திருத்தொண்டர்களையும் வெட்டி வீழ்த்தினான். இதைப் பார்த்த திருத்தொண்டர் லாரன்ஸ், "திருத்தந்தை அவர்களே, உம்மைப் போன்று நான் எப்போது மறைசாட்சியாக உயிர்துறப்பது?" என்று கேட்டபோது, அவர், "இன்னும் மூன்று நாட்களுக்குப் பின் என்னைப் போன்று நீ மறைசாட்சியாக் உயிர்துறப்பாய்" என்றார். இது நடந்தது ஆகஸ்டு 06 ஆம் தேதி.

அதன்பிறகு மூன்று நாட்கள் கழித்து (ஆகஸ்டு 10) அரசன் வலேரியான் திருத்தொண்டர் லாரன்சிடம், "திருச்சபையின் சொத்துகளையெல்லாம் என்னிடத்தில் ஒப்படை" என்று ஆணையிட்டார். அதற்கு திருத்தொண்டர் திருச்சபையின் சொத்துகளை எல்லாம் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, அந்த ஏழைகளை எல்லாம் அரசருக்கு முன்பாக வந்து நிறுத்தி, "இவர்களே திருச்சபையின் சொத்துகள்" என்றான்.

இதைக் கேட்ட அரசன் கொதித்தெழுந்தான். திருத்தொண்டர் தன்னை இழிவுபடுத்திவிட்டார் என்று சொல்லி அவரை ஒரு இரும்புக் கட்டிலில் படுக்க வைத்து, அதற்கு கீழே நெருப்பை மூட்டினான். திருத்தொண்டர் லாரன்ஸோ எதைப் பற்றியும் கவலைப்படாது, துன்பத்தை மகிழ்வோடு ஏற்றுக்கொண்டார். சிறுது நேரம் கழித்து, அவர் அங்கே இருந்த படைவீரர்களிடம், "என்னுடைய உடம்பில் ஒரு பக்கம் நன்றாக எரிந்துவிட்டது, இன்னொரு பக்கமும் வேகும்படியாக என்னுடைய உடலைத் திருப்பிப் போடுங்கள்" என்றார். அதன்படியே அவர்கள் அவரது உடலைத் திருப்பிப்போட்டார்கள். திருத்தொண்டர் லாரன்ஸ் அந்த கட்டிலிலே எரிந்து இறந்து போனார்.

இப்படியாக திருத்தொண்டர் லாரன்ஸ் கிறிஸ்துவின் விழுமியங்களின் படி வாழ்ந்து, கிறிஸ்துவுக்காக தன்னுடைய உயிரையும் துறந்தார். இவருடைய கல்லறையின் மீது பெரிய கொன்ஸ்தாந்தி நோபுள் என்ற மன்னன் ஒரு சிறிய ஆலயம் எழுப்பினான். அதன்பிறகு வந்தவர்கள் அந்த ஆலயத்தை மிகவும் அழகுற கட்டியெழுப்பினார்கள்.

திருத்தொண்டர் தூய லாரன்ஸின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் இவரது விழா நமக்கு என்ன செய்தியை தருகிறது என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம். முதலாவதாக தூய லாரன்ஸ் ஆண்டவர் இயேசுவுக்காக தன்னுடைய இன்னுயிரையும் துறந்தார். நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். மடிந்தால்தான் அது மிகுந்த விளைச்சலை அளிக்கும்" என்பார். தூய லாரன்சை இயேசு சொன்னதற்கு ஏற்ப தன்னுடைய உயிரை தியாகமாகத் தந்தார். அதனால்தான் அவர் இன்றைக்கும் நமக்கு விசுவாசத்தின் சிறந்த முன்மாதிரியாக இருக்கின்றார். இயேசுவின் வழியில் நடக்கும் நாம் ஒவ்வொருவரும் அவரைப் போன்று இயேசுவுக்காக நம்முடைய உயிரையும் துறக்க முன்வரவேண்டும்.

இரண்டாவதாக தூய லாரன்ஸ் கொடுத்து வாழ்வதற்கு மிகச் சிறந்த முன்மாதிரியாக விளங்குகின்றார். திருச்சபையின் சொத்துகளை ஏழை, எளியவருக்கு வாரி வழங்கினார். அவர்களையே திருச்சபையின் மிகப்பெரிய சொத்து என்று அழைத்தார். அவரது விழாவைக் கொண்டாடும் நம்மிடத்தில் கொடுக்கும் மனநிலை இருக்கிறதா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம், "மன வருத்தத்தோடோ, கட்டாயத்தினாலோ கொடுக்க வேண்டாம். முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர். கடவுள் அவர்களை எல்லா நலன்களாலும் நிரப்புவார்" என்று. ஆகவே, நாம் நம்மிடம் இருப்பதை பிறருக்குக் கொடுப்பதில் சிறந்தவர்களாக விளங்குவோம்.

நம்முடைய இந்தியத் திருநாட்டில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்ட ஆங்கிலேய அதிகாரிகளில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் ஆங்கிலப் பொறியாளரான பென்னி குயிக் என்பவர்.

இவர் மதுரை, இராமநாதபுரம் போன்ற ஐந்து மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்படுவதையும், முல்லைப் பெரியாறு ஆற்று நீர் வீணாகக் கடலில் கலப்பதையும் கண்டார். உடனே அவர் இந்த நீரை சேமித்தால் வறட்சியால் பாதிக்கப்படும் இந்த ஐந்து மாவட்டங்களும் வளர்ச்சியடையுமே என்ற நல்ல எண்ணத்தில் முல்லை பெரியாறு ஆற்றின் குறுக்கே அணை கட்ட முடிவு செய்தார். அதற்காக ராணி விக்டோரியாவிடமிருந்து நிதியுதவியும் பெற்று பணியைத் தொடங்கினார்.

ஒருகட்டத்தில் இங்கிலாந்து அரசாங்கம் பணமில்லை என்று சொல்லி மறுத்துவிடவே, பென்னி குயிக் தன்னுடைய நாட்டிற்க்கு திரும்பிச் சென்று, தன்னிடம் இருந்த பணம், தன்னுடைய மனைவியின் நகைகள் எல்லாவற்றையும் வைத்து, முல்லை பெரியாறு அணையைக் கட்டி முடித்தார். அதன் நினைவாக உத்தம பாளையத்திலும், மதுரையில் உள்ள தல்லார்குளத்திலும் இவருக்கு சிலைகள் நிறுவப்பட்டிருக்கிறது.

பென்னி குயிக் தன்னுடைய சொத்துகளையே மக்களின் நலனுக்காக கொடுக்க முன்வந்தார் எப்படி திருத்தொண்டர் லாரன்ஸ் திருச்சபையின் சொத்துகளை ஏழை மக்களுக்காக கொடுக்க முன்வந்தாரோ அது போன்று.

ஆகவே, தூய லாரன்சின் விழாவைக் கொண்டாடும் நாமும், கிறிஸ்துவின் மீது கொண்ட விசுவாசத்தின் வெளிப்பாடாக நமது உயிரை இயேசுவுக்காக தர முன்வருவோம், நம்மிடம் இருப்பதை ஏழைகளுக்குத் தருவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!